Monday, June 30, 2008
பைத்தியக்காரி
இறங்கி கோதுமை நிற பாதங்களால்
வீதியெங்கும் ஓடி ஆடும் தேவதையாக..
கருமை நிற
இருளை முத்தமிடும் மின்மினிகளின்
பின்னால் ஓடுகின்ற சிறுமியாக..
ஊரறிய சரடுகட்டிய துணைவன்
பரிசளித்த முத்தங்களின்
ஈரத்தை வருடுகின்ற மனைவியாக...
கிழிந்து தொங்கும்
ஆடைகள் பற்றிய கவனிப்புகளின்றி
ஒவ்வொரு பேருந்தின்
சன்னலுக்கும் தட்டை உயர்த்திப் பிடிக்கும்
அவளின்
உறக்கத்தில் இவர்களையொத்த
ஆயிரம் கனவுகள் குறும்புன்னகையாய்
மலர்கிறது
Thursday, June 12, 2008
கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்
தோழன்மீர்,
வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.
கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்
இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.
உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.
மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் : 30/06/2008
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மென்தமிழ் வெளிவரும்.
வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென் தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.
வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.
- மென் தமிழ் ஆசிரியர் குழு
இதைப்பற்றிய தொடுப்புகள்:
http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html
http://vizhiyan.wordpress.com/2008/06/11/mentamil-magazine/
http://srishiv.blogspot.com/
Wednesday, June 11, 2008
சிலந்திகள்..
பொழுதில் புலப்பட்டன
சில சிலந்திகள்...
வலையில் சிக்கிய
பூச்சியொன்றை தின்றபடி
சகிக்க இயலாத
சிரிப்பொலிகளை ஏற்படுத்தி
நடனமாடி மறைந்தன..
இரவில் தொலைத்ததை
பகலில் மீட்டெடுக்காமல்
அமிலம் வீசுகின்ற
இவர்களைவிட
சிலந்திகளின் பற்கள்
கூர்மையானவை அல்ல.
Tuesday, June 10, 2008
நேயாவில் என் சிறுகதை
நேயா பெண்கள் மாத இதழின் ஜூன் மாத பதிப்பில்
என்னுடைய சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
Monday, June 02, 2008
நீ, நான், காதல்...(குறுந்தொடர்)
3.ஊடல்காலம்:
அவன்:
வண்ணம்கொண்ட மேகமே!
நீ கோபம் கொண்ட
காரணத்தால்,
வானவில்கூட
கறுப்புவெள்ளையாகிப் போனதடி!
அவள்:
சில்லென்ற மழையால்
என்னுள்ளம் நனைத்தவன்
சொல்லொன்று தவறியதால்
சில்லுச் சில்லாய்போனதடா என்
இதயம்.
அவன்:
பார்த்தும் பார்க்காமல்
விறுவிறுவென்று என்னைக்
கடந்து போய்விட்டாய்..
தவிப்பைக் கற்றுத்தந்த
காதல் இன்று
தவிர்த்தலையும்
கற்றுத் தந்ததடி!
அவள்:
உன்னைப் பார்த்துவிட்டு
பார்க்காததுபோல்
கடந்து வந்துவிட்டேன்.
உன்னைக் கடந்தபோது
ஜெயித்த என் பிடிவாதம்,
கடந்துவிட்டபின் தோற்றுப்
போய் யாருமறியாமல்
விசும்ப ஆரம்பிக்கிறது.
அவன்:
கோபத்தில் சொல்லக்கூடாத
வார்த்தையொன்றை
சொன்னதற்காக என்
கன்னத்தில் நீ அடித்திருக்கலாம்.
காயத்துடன் முடிந்திருக்கும்.
இதயத்தில் அடிக்கிறாய்,
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.
அவள்:
சீதாயணம் பாடிய
இதழ்களால்
ஏன்
சீதையை துளைத்தன
ராமனின் சொல்லம்புகள்?
அவன்:
மரணதண்டனையை
விட கொடியது
காதலி
உன் மெளனதண்டனை.
அவள்:
அழுகின்ற கண்களிடம்
சொல்லிவிட்டேன்
அவனுக்காக அழவேண்டாமென்று.
கண்களின் அழுகை நின்றபின்பும்
கேட்கிறது இதயத்தின்
விசும்பல்சப்தம்...
அவன்:
மன்னித்துவிட்டு மலரென
மலர்ந்துவிடுவாய் என்றெண்ணியே
மலர்கின்றன என் காலைப்பொழுதுகள்.
சுடுகின்ற நிலவின்பார்வையில்
சருகாகி வீழ்கின்றன என்
மாலைப்பொழுதுகள்.
அவள்:
நிலவும் சுடுமென்று
நீயும் உணரவேண்டும்;
சித்திரப்பாவை என்
சுயமும் நீ உணரவேண்டும்;
மன்னித்துவிட்டேன் உன்னை,
மலராகி உன் மடியில்
விழுகிறேன் ஓடோடிவா!
4.பிரிவுக்காலம்
(தொடரும்)