Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, December 03, 2014

இணையத்தில் என் நூல்கள் வாங்க:





யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்- சிறுகதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=29&cat=Books
வெயில் தின்ற மழை - கவிதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=28&cat=Recently%20Sold
கடலில் வசிக்கும் பறவை - கவிதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=11&cat=Other%20books%20of%20the%20author

Monday, October 06, 2014

மெட்ராஸ் என்றொரு திரைக்காவியம்:


தமிழ் சினிமா பார்ப்பதில்லை உலக சினிமா மட்டுமே விருப்பம் என்று சொல்லித்திரிந்தவர்கள் அனைவரின் முகத்திலும் கடநத இரண்டு மூன்று வருடங்களாக வெளிவரும் பல தமிழ் திரைபடங்கள் கரியை பூசி வருகின்றன. பல திரைப்படங்களை இது அந்த கொரிய திரைப்படத்தின் நகல், அது ஜப்பானிய திரைப்படத்தின் நகல் என்றெல்லாம் பல செய்திகள் வந்தாலும் மிகச்சிறப்பான Genuine தமிழ் திரைப்படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. ஒரு கதாநாயகன் அவனை சுற்றும் நாயகி,ஆறு பாடல்கள், எட்டு சண்டைகள், பன்ச் டயலாக் என்கிற மசாலா எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. மிக நுட்பமான திரைக்கதைகள்,வித்தியாசமான கதைக்களம்,ஆழமான திரையாக்கம் என்று தமிழ் திரையுலகம் வெகு வேகமாக தன் வேர்களையும் கிளகளையும் பரவலாக பரப்பியபடி முன்னகர்கிறது. உதாரணமாக பல திரைப்படங்களை சொல்லமுடியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,வழக்கு எண்,தெகிடி,ஜிகர்தண்டா,பொறியாளன்,ஜீவா,மெட்ராஸ் என்று நீளும் பட்டியல்(பட்டியல் மிகப்பெரியது என்பதால், நினைவிலிருந்து சில மட்டும் இங்கே) சொல்லி முடியாதது. இது ஆரண்ய காண்டம் என்னும் மிக அற்புதமான திரைப்படத்தின் தொடக்கமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நேற்று மெட்ராஸ் திரைப்படத்தை பார்த்தேன். கதை என்ன என்று யாரேனும் கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். சுவர். அவ்வளவுதான். ஆனால் அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்,அரசியல்,நட்பு,காதல்,துரோகம்,பாசமென அனைத்தையும் திரைக்கதையாக்கிய விதத்திற்காகவே இப்படம் அதிகம் என்னை கவர்ந்தது. சென்னையில் வாழ்கின்ற பலருக்குமே சென்னையின் வடபகுதியை பற்றி அதிகம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வடசென்னையின் நுட்பமான பல விஷயங்களை மிகச் சிறப்பாக திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களது மொழியை அனைத்து நடிகர்களும் அவ்வளவு இயல்பாக பேச வைத்திருப்பதிலிருந்தே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்.
கார்த்திக்கு பருத்திவீரனுக்கு பிறகு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள படம் இது. காளியாகவே மாறியிருக்கிறார். வியாசர்பாடியின் காலனி ஒன்றில் நடக்கும் கதை. படம் பார்க்கும் அனைவரையும் வியாசர்பாடியின் அந்த காலனிக்குள் ஒருவராக மாற்றி விடுகிறார் இயக்குனர்.

ஒரு சுவருக்காக மோதிக்கொள்ளும் இரண்டு கோஷ்டிகள். அதனைச் சுற்றி சுழல்கின்ற கதை. அன்பாக நடித்திருக்கும் கலையரசனுக்கு இது மிகப்பெரிய மைல்கல். அன்பு  போலொரு நண்பன் நமக்கு கிடைக்கமாட்டானா என்கிற ஏக்கம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும். காதலுடன் தன் மனைவியிடம் உருகுவதாகட்டும், நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளிடம் பேசுவதாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். இடைவேளை நெருங்கும் நேரம் அன்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பதைபதைக்க துவங்கிவிடுகிறது மனம்.  அன்பும் மேரியும் தோன்றும் சில நிமிட காட்சிகளில் அவர்கள் இடையேயான இணக்கத்தை ஒரு நிஜ தம்பதி போல உணர்த்திவிடுகிறார்கள்.மேரியாக நடித்திருக்கும் நடிகையின் கண்களில் காதல்,சோகம்,கோபம் என்று அனைத்தையும் காண முடிகிறது. எப்படி இவ்வளவு சிறப்பான கதைநாயகர்களை இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்பதே மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.

வடசென்னையின் தமிழில் கார்த்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். நண்பனுக்காக மோதுவதிலும்,காதலிக்காக உருகுவதிலும் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகி ஒரு வடசென்னை காலனி பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். உள்ளுக்குள் காதலித்துக்கொண்டு வெளிக்காண்பிக்காமல் காளியை கிண்டலடிப்பதும் பின் காளின் சோகம் தீர்க்க அவனுடனிருப்பதிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால்தான் தெரியும்.

படத்தில் படீரென்று சிரிக்க வைக்க ஜானி என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. இவ்வளவு 'அசால்டாக' ஒரு கனமான ரோலை செய்திருக்கிறார் ஜானியாக நடித்தவர். ஆங்கிலத்தில் பேசுவதாகட்டும் சரியான சமயத்தில் கூர்மையான வசனங்களை உதிர்பதாகட்டும் சபாஷ் ஜானி.  

மேலும் குறிப்பிடத்தகுந்தவை, காளியின் அம்மா,எப்போதும் சோபாவில் உட்கார்ந்திருக்கும் அப்பா, அந்த பாட்டி,மாரி,அவ்வப்போது நடனமிட்டுச்செல்லும் நடன கோஷ்டி, வடசென்னையின் தமிழை அனைவருமே சிறப்பாக பேசியிருப்பது,கானா பாலாவின் நெஞ்சைத்தொடும் பாடல்,சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, முரளியின் ஒளிப்பதிவு, வடசென்னையின் காலனியை நேரில் கொண்டுவந்த செட்கள், எடிட்டிங் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அட்டைக்கத்தி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடித்திருக்கும் சிக்ஸர் மெட்ராஸ். ஒடுக்கப்பட்ட குரலின் ஒலியை சுவரொன்றின் மூலமாக திரைச்சித்திரமாக்கியதற்கு அழுத்தமான கைகுலுக்கல். இரண்டாவது படத்திலும் ஜெயித்து தமிழின் மிக முக்கியமான இயக்குனராக மிளிர்கிறார், வாழ்த்துகள்.

குறைகள் என்று ஏதுமில்லையா எனில், இரண்டாம்பாதியில் திரைக்கதையில் சில இடங்களில் காணப்படும் தொய்வு. சுவர் பற்றிய படம்தான் எனினும் முப்பது நாப்பது தடவைக்கு மேல் சுவரைக்காட்டுவது சலிப்பை தரத்தான் செய்கிறது.
மற்றபடி மெட்ராஸ் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வில் இடம்பிடித்திருக்கும் படங்களில் மிக முக்கியமானது.

-நிலாரசிகன்.

Sunday, April 14, 2013

மீன்கள் துள்ளும் நிசி - ராணிதிலக் விமர்சனம்


யதார்த்தம் என்கிற புனைகதை கவிதைகள்

ராணிதிலக்


2000க்குப்பிறகான தமிழ்க்கவிதை, முன்பு இருந்த நான் என்கிற, சாதி என்கிற, அடையாளம் என்கிற தன்மையிலிருந்து கொஞ்சம் விலகி இச்சமூகத்தின் மீதான எள்ளலையும், அகத்தின் அசிங்கத்தையும், புனைவையும் முன்வைக்கின்றன.  பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற சொற்கள் இப்போதைய நவீன கவிஞர்களிடம் இல்லாதது சந்தோஷமளிக்கும் ஒன்று. 

கவிதையின் வழியாக அபூர்வ மனச் சலனங்களை உருவாக்குவதும், கவித்வம் மற்றும் அழகியலுக்கு மாற்றாகப் புனைவையும் எதிர் அழகியலை உருவாக்குவதும் இன்றைய தலைமுறையிடம் இருக்கும் வெற்றி.  இன்றைய காலகட்டத்தில், நவீன மரபைக் கேள்விக்குறியாக்கும் கவிதைகளை நாம் இசை, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சபரிநாதன், ஸ்ரீசங்கர் மற்றும் பலரிடம் காண்கிறோம்.

இன்றைய நவீன கவிஞர்கள் வளர்த்திருக்கும் நவீன கவிதை மரபை ஒட்டியும் வேறுபட்டும் தற்பொழுது குறைந்தபட்சம் 20 கவிதைத்தொகுதிகளாவது, இந்த வருடம் வந்திருக்கலாம் என்பது என் அனுமானம். இதில் குறைந்தபட்சம் பெரும்பான்மை கவிதைகளை நான் வாசித்துவிட்டேன் என்பதைவிட, மற்றதை எப்போது வாசிக்கப்போகிறேன் என்பது கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வெவ்வேறு உலகத்தைச் சொல்பதாக இருப்பதால்தான்.

வெவ்வேறு விதமாகச் சொல்வது என்பதைவிட, வெவ்வேறு வித உலகத்தை மொழிந்து, வெவ்வேறு விதமான வகைமைகளை உருவாக்கிவிடுகின்றன இத்தொகுதிகள்.  இந்த வகைமையில் புதிய தொகுப்புகளில், தீம் பொயம்ஸ் என்கிற அடிப்படையில் வா.மணிகண்டன் மற்றும் நிலாரசிகன் தொகுப்புகள் வேறுபட்டு அமைந்திருக்கின்றன.  இந்த இரண்டு தொகுப்பும் ஓரே தன்மையில் உருவாகியன என்பதை வாசிப்பின் பிறகு அறிந்துகொண்டேன். இவற்றில் மீன்கள் துள்ளும் நிசி  எனும் நிலாரசிகன் தொகுப்பைப் பற்றி இப்போது பேசலாம்.

கனவு, கற்பனை, புனைவு என்கிற தளத்தில் இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.  வெறுமையாகக் கனவும் கற்பனையும் புனைவும் அமையாமல், அவை உருவாகும் பின்னணி சொல்லப்பட்டிருக்கிறது. மழைவழிப்பயணம், இலை, திமிர்நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், கடலாடும் தாழி, ஒளிவடிவ துயரம், நகரம் ஆகிய கவிதைகளை வாசித்தவர்கள் இதை உணர்ந்துவிடலாம்.  அன்பும், துயரமும், வாலிபமும், கொல்லுதலும் முத்த உறவும் இக்கவிதை கற்பனைத் தளத்திலிருந்து உரையாடும் தளத்திற்கு அழைத்துவிடுகின்றன. இத்தொகுதியின் பெரும்பான்மை கவிதைகள் கற்பனை என்னும் கோட்டையால், அதன் பின்னணியில் உருவானவை.  அதில் சில கோட்டைகள்  நன்றாக எழுந்தும், சிலது சிதிலமாகவும், சிலது எழாமலும் அமைந்திடுவது இயல்பான ஒன்றே. 

      அங்குமிங்கும் அலைவுறும்
      இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித் தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையைத் தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள். 
அசைவற்று நின்றது இலை.     (இலை, ப.2)

என்ற  இக்கவிதையில், அசைவற்று நின்றது இலை என்கிற கற்பனை, ருதுவாகும் போது அவள் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து விடுபடுவதால், இலை அவளிடம் இருந்து விடுபடுகிறது நிற்கிறது என்பதும், இன்னொரு பார்வையில் இலையானது ருதுவானவளிடம் விளையாட முடியாது என்பதும் இக்கவிதையில் தெரிகிறது. ஏற்கெனவே நான் சொன்ன கவிதைகளும் இந்த உலகத்தில் அமையும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு கற்பனை என்பதை வெறும் கற்பனையாக அமையாமல், ஒன்றிலிருந்து விடுபட்டு மற்றொன்றில் மாறி அமரும் ஆசுவாசமாகப்படுகிறது.  இல்லையேல் தனியாக இல்லாமல் ஒவ்வொன்றும் தானாக மாறும் மனோநிலையும் இருப்பில் வாழ்கிறது. இத்தகைய மனோநிலையை உடைய கவிதையை வாசிப்போம்.

      தென்னை  மரத்தடியில் இதுவரை
நான்கு நாய்க்குட்டிகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.
அவை எதனால் இறந்தன
என்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்
பின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.
நோய்மை முற்றிய நிலையிலும்,
சர்ப்பம் தீண்டியும்,
வாகனமொன்றின் அடியில்
தலை நசுங்கியும் 
இறந்துபோயின முதல் மூன்றும். 
துடிக்க துடிக்க  வளர்ப்பு அணிலை
கொன்றதால் நான்காவது
நாய்க்குட்டியை கொன்று வீசியது
இயற்கை. 
நான் அணில்.
நான் நாய்க்குட்டி.
நான் இயற்கை.
                              (திமிர் நாய்க்குட்டிகள், ப.4)
இந்த கவிதையில் கொல்வது சாத்வீகமானது அல்ல என்றானபோது, கொல்லப்படுவதும் கொல்வதும் ஒரே மனமாக, மாறும் மனமாக மாறிவிடுவதை நாம் உணர்கிறோம்.  இதுபோன்று ஒன்றிலிருந்து ஒன்று பிரியும் (மழையில் நனையும் வயலின், இசைதல்) கவிதைகளும், ஒன்றிலிருந்து ஒன்று பிரியாமல் அமையும் (அசைவு, தருணம், வதை, சொற்பறவை, நட்சத்திராவின் வானம்) கவிதைகளும் இவற்றிடைக்கிடையே வாழ்கின்றன.

இத்தன்மையான கவிதைகளைத் தவிர்த்து ஜூலி பற்றிய கவிதைகளும், நட்சத்திரா பற்றிய கவிதைகளும் ஒரு தனி அனுபவச் சித்திரமாக உருவாகியுள்ளன. கலாப்ரியாவின் சசி, கண்டராதித்தனின் நித்யா, வா.மணிகண்டனின் ப்ரணிதா என்பதுபோல, அவர் ஜூலியையும் நட்சத்திராவையும் உருவாக்கியிருக்கலாம். ஜூலி காமத்தையும் காதலையும் பொழிபவளாகவும், நட்சத்திரா தனக்குள் வானத்தைப் பெற்றவளாகவும் விளங்குகிறார்கள்.  ஜூலியின் உடலும் முத்தமும் பல்வேறு கவிதைகளில் தொடர்ந்து பேசுகின்றன. 

மரவண்டுகளிட்ட துளைக்குள்   
தன் மார்புகளை பொருத்திக் கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத் துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுகப் பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச் சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.   (ஜூலி என்ற முடிவிலி, ப.52)

முத்தங்கள் பற்றிய கவிதைகளில் முத்தமானது உப்புக் கடலாகவும், சிறுபருவத்தை எய்த உதவும் காரணியாகவும், உடலைப் புசித்துப் பசியாறும் தேளாகவும், பேரன்புடையதாகவும், முத்தமாக மாறிவிடுவதும், சர்ப்ப குட்டிகளாகவும், முடிவிலியாகவும், குருதி சுவைப்பதாகவும் வாழ்கின்றது. இம்முத்தங்கள் ஒரே குரலில் அமையாமல், காமமாகவும், பரிதவிப்பாகவும், ஏமாற்றமாகவும் உணர்வுநிலையில் பேசப்படுகின்றன.  முத்தக் கவிதைகளில் கடலாடும் தாழி என்னும் கவிதை மிக முக்கியமானது. 

முத்தம் என்கிற பொதுவகைப்பாடில் கடந்து  மனித வாழ்வைக்குறித்த கவிதைகளும் இதில் உண்டு. நகரம் என்ற கவிதையும், அசைவு என்ற கவிதையும் இருப்பு குறித்த வெவ்வேறு பார்வை கொண்டவை. நகரத்தில் வாழ்பவன் இறந்த பூனையை வாசனைத்திரவியம் தடவி, அதைக் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டியில் போடுவது என்பதும், மிதக்கும் மேகங்களையும் நீரில் நடனமிடும் இலைகளையும், புழுவை உண்டு துடிக்கும் மீன்களையும் ஒரு சேர பார்க்கும் துறவிகள் வெவ்வேறு திசையை நோக்கி அசைவும் அசைவின்மையுடனும் செல்வது என்பதும் வெவ்வேறு பார்வைதானே. மற்றும்,


நிலாரசிகனின் கவிதைசொல்முறைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துவிடுகின்றன. மிகத் தெளிவான, விளக்கமான உரையாடலை நிகழ்த்துகிறார். மொழி என்னும்பட்சத்தில், ஒரு கவிதையை எடுத்துரைப்பதற்குத் தேவையான சொற்களை அவர் எழுதியிருக்கிறார்.அபூர்வமான மொழியோ (ஞாளி என்ற சொல் மட்டும் விதிவிலக்கு), சிக்கலான படிமங்களோ இத்தொகுதியில் இல்லை என்பது வெளிப்படை.  ஒரு கவிதை வாசகனைச் சென்று அடைவதற்கான வழியை அவர் தெளிவாக உருவாக்கியுள்ளார் என்பதை நாம் மறுக்கமுடியாது.

என்றாலும், எல்லா கவிஞர்களுக்கும் தெரியாமல் அமையும் நடை இதில் உள்ளது. அதாவது, அவர் கவிதைகயில் இடையே என்னும் சொல் அதிகமாகப் பயில்வது என்பது  கவனமாக ஒரு பிரதியை உருவாக்குதல் என்கிற உத்தியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.  அல்லது இந்தப் போலச் செய்தல் என்கிற செயல் அதில் தெரிந்த அடையாளமாகிறது.  யுவதியிலிருந்து பேரிளம்பெண்ணுக்கும் இடையே, ஒருசொல்லுக்கும் மறு சொல்லுக்கும் இடையே, நம் உறவின் நடுவே, முதுமைக்கும் பால்யத்திற்கும் இடையே, சொர்க்கம் நரகம் இரண்டிற்கும் இடையே, இறந்தகாலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே, அழகின்மையும் அழகிற்கும் நடுவே, அசைவுக்கும் அசைவின்மைக்கும் இடையே என்று பல கவிதைகளில் சொல்முறையாக வருவது தவிர்க்கமுடியாது என்றாலும், தவிர்ப்பது நலம்.

இந்தத் தொகுதி கீழ்க்கண்ட விடயங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவை-

1.       கவிதை என்பது தனிமனிதனின் அகத்தையோ, அவனின் சுயபுலம்பல்களையோ, இழந்தவற்றையோ சொல்லத் தேவையில்லை.

2.       பழைய மற்றும் புதிய தத்துவத்தை உருவாக்கவேண்டிய அவசியம் அதில் இல்லை.

3.       கவிதை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் அதிகாரத்தைக் கேள்விக்கேட்பதற்காகவும் இல்லை.

4.       தன்னை சாதி, இன, மத, நாடு என்கிற அடையாளப்படுத்தவும் அமையாது.

5.       எழுதுதல் என்ற செயல்பாட்டில், அதாவது தூரிகை தானாகவே வரைகிறது என்பதுபோல், ஒரு கற்பனை அல்லது கனவைக் கொண்டு கவிதையை வரைந்துவிடலாம்.

இந்த விடயங்களைக் கடந்து,  அவர் கவிதைகள் எதை முன்னிறுத்துகின்றன என்று கேட்கலாம்.  அவர் கவிதைகள் கற்பனை அனுபவத்தின் வழியாக அந்தரங்களைக் கூறுகிறது.  கற்பனை வழியாக இன்னொரு உலகத்தை கற்பனை செய்து மகிழ்கிறது.  யதார்த்தம் என்ற பதத்தில் உள்ள கற்பனை என்கிற மாபெரும் வித்தையை வரவேற்கிறது. இத்தொகுதியின் ஓரே எண்ணம் கற்பனை..கனவு...கற்பனை..கனவு என்பதுதான். அதன் உரையாடல் என்பதும் கற்பனைக்குள்,  கனவுக்குள் வாழும் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள நகரம் என்கிற கவிதை நமக்குப் போதுமானது. 

ஒருவித கற்பனைக் குரலில் மட்டும் கவிதைகளை அமைத்து எழுதுவது (அதாவது புனைவு) என்பது, இன்னொரு தளத்திற்குக் கவிதை செல்லமுடியாத நிலை ஏற்படும் என்பதை  நிலாரசிகன் புரிந்துகொள்ளவேண்டும். இந்த தன்மை தீம் பொயம்களுக்கு அமைந்துவிடுகிறது என்பதால் அவ்வளவு நல்லதல்ல.

நிலாரசிகன் கவிதைகளை வாசிப்பவர்கள் ஒரு கட்டத்தில் அதில் துய்த்தாலும், (அவர் கனவும் கற்பனையும் அபாரமானது என்பது வேறு), அக்கவிதைகளில் எவ்வளவு காலத்திற்குச் சலனங்களைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதைச் சொல்லமுடியுமா? என்றால் சொல்லமுடியாது. கற்பனைவாத, கனவுவாத இயக்கமும் எழுத்தும் கலையும் காலமாகி நூற்றாண்டு ஆகிவிட்டதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். திரும்பத திரும்ப கூறுதல் என்கிற தொனி கவிதையின் நவீனத்தைக் குறைத்துவிடும் என்பது என் நம்பிக்கை.

இத்தொகுதியில் உள்ள இலை, திமிர் நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், தருணம், நகரம், அழகன் கழுதை சரித்திரம், இசைதல், நடசத்திராவின் வானம், மழையில் நனையும் வயலின், அனைத்தும் நின்றுவிட்ட நாளில் ஆகிய கவிதைகளைப்போன்று, அவரால் மிகச் சிறந்த கவிதைகளை எதிர்காலத்தில் எழுதிவிடமுடியும். 
இனிமேல் அவர் பயணப்படவேண்டிய திசை என்பது, தீம் பொயம்களில் இருந்து விலகி, வாழ்வின் சாரம்சத்தை நோக்குவதுதான்.  புனைவுதான் கவிதை, வாழ்வின் சாராம்சமும் அனுபவமும் கவிதையாகாது என்று சொன்னால், நகரம் என்ற  கவிதையை ஏன் எழுதினார்? என்பதை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும்.  நகரம் என்கிற கவிதையைத் தயவுசெய்து வாசித்துப்பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளில் சுற்றுவதற்கு
முன் பழைய தினசரிகளில்
ஒரு சுற்று சுற்றிடவேண்டும்.
பிறகு பிளாஸ்டிக்.
அதன் பிறகு உபயோகப்படுத்தாத
அல்லது மிச்சமிருக்கும்
சில துளி வாசனைத் திரவியத்தை
தெளிக்கலாம்.
வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து
குடியிருப்புவாசிகள் அறிந்திடாமல்
தெருவில் இறங்கி நடக்கவேண்டும். 
பச்சை நிறத்தில் வாய்பிளந்து நிற்கும்
குப்பைத் தொட்டியில் ஒன்றும்
நடந்துவிடாத பாவனையில் எறிந்துவிட்டு
நகர்ந்துவிட வேண்டும்.
செல்லப் பூனை என்றாலும். (நகரம், ப.17)

கற்பனைதான் கவிதை என்று இந்தக் கவிதையை நம்மால் நீக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த அனுபவம் நம்மில் இருப்பது. இந்த வாழ்வு நம்மில் இருப்பது. இந்த யதார்த்தம் நம்மால் ஆனது.  நீக்கமுடியுமா? சொல்லுங்கள்.

யதார்த்தத்தை பெரும்பான்மையாக மறுத்து கற்பனையையும் கனவையும் ஆதாரமாகக் கொண்ட இத்தொகுதி, முழுக்க முழுக்க ஒரு சுகத்தைத் தருவதை என்னால் மறுக்க இயலாது. இது ஒரு வாசிப்பு அல்லது ஆழ்ந்த கற்பனை அனுபவம். இவ்வனுபவத்தை இத்தொகுதியில் மட்டுமே பெறமுடியும் என்பதும் நிஜம். அது கற்பனையல்ல. 


(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து – மு.ப.2012 - ரூ.60)

Sunday, February 24, 2013

கற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’ பாவண்ணன்



புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த‘வெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு ‘மீன்கள் துள்ளும் நிசி’.
காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான், ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.
ஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோ, உரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை.  அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும்  குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகு, அவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள், கூடவே அசைந்து அசைந்து,  தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.  ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணர, தரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.
நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பது, நிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாக, அக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.
ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போல, தவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.
ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.
சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காக, யுகக்கணக்காக, அந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில், காலம்காலமாக, எங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.
இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மை, அவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மா, அந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்து,ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பா, அப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனை, உயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.
61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.
(மீன்கள் துள்ளும் நிசி. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. காவேரிப்பட்டினம்)

Saturday, May 14, 2011

சொர்ணபூமி

தாய்லாந்து பயணக் கட்டுரை:

சென்னை விமான நிலையத்தில் சோதனைக்காக பக்கவாட்டில் கைகள் இரண்டையும் நீட்டிக்கொண்டு நின்றபோது காவலர் ஹிந்தியில் வருத்தமுடன் சொன்னார். "கம்பீர் அவுட். ஜெயிச்சிடுவாங்கல்ல?". இந்திய இலங்கை உலகக்கோப்பை இறுதி போட்டி அதகளத்துடன் அரங்கேறிய நாளில்தான் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல விமான நிலையம் சென்றோம். எங்கள் விமானம் புறப்பட இரண்டு மணிநேரம் இருந்ததால் இறுதிப்போட்டியை எவ்வித பதற்றமும் இன்றி சந்தோஷ கூச்சலுடன் விமான நிலையத்திலிருந்த தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அப்போது சிங்கப்பூர் கிளம்பவேண்டிய விமானம் ஒரு பயணிக்காக காத்திருந்தது. அந்த ஒரு பயணியை தேடிய பணிப்பெண் தொலைக்காட்சி முன்பு கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தவரிடம் சென்று விமானம் காத்திருப்பதாக சொன்னார். "இந்தியா ஜெயிப்பதை பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன். இன்னும் ஐந்து நிமிடம் பொறுக்க முடியாதா" என்று ஆதங்கப்படும் தருணம் தோனி அடித்த சூப்பர் சிக்ஸரில் இந்தியா வென்றது. 28 வருட கனவு நிறைவேறிய மகிழ்வில் விமானம் ஏறினோம்.

பாங்காக் நகரம் சென்று இறங்கியவுடன் எங்கள் குழுவுக்கான பேருந்தில் பட்டாயா என்னும் சிறுநகரம் நோக்கி பயணப்பட்டோம்.தாய்லாந்தின் சாலைகள் அமெரிக்க நாட்டின் சாலைகளை நினைவூட்டின.வழியெங்கும் வாழைத்தோட்டங்களும் வயல்வெளிகளும் தென்பட்டன.உலகிலேயே அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக தாய்லாந்து விளங்குகிறது. பட்டாயா நகருக்குள் நுழையும்போதே பல வெளிநாட்டவர் தென்பட்டனர். பல நூற்றாண்டுகளாக ஒரு சிறு மீன்பிடி கிராமமாக விளங்கிய பட்டாயா 1961ம் வருடத்திற்கு பிறகு ஒரு நகரத்தின் அந்தஸ்த்தை பெற்றதன் காரணம் சுவாரஸ்யமானது. அவ்வருடம் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் போர் விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்க ஓர் இடம் தேடினர்.அப்போது அவர்கள் வந்து ஓய்வெடுத்த இடம்தான் இந்த பட்டாயா. அதன் பின்னர் பல தங்கும் விடுதிகள்,கடைகள் முளைத்து இன்று தாய்லாந்தின் தவிர்க்க முடியாத சுற்றுலா நகரமாக வளர்ந்து வருடத்திற்கு 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும்
இடமாக மாறியிருக்கிறது. நாங்கள் தங்கிய விடுதி கடற்கரையின் ஓரத்தில் இருந்தது. வெண்ணிற கடற்கரை மணலில் கால்கள் பதிய சிறிது தூரம் நடந்து அங்கே காத்துக்கொண்டிருந்த படகில் ஏறினோம். கோரல் என்னும் சிறு தீவு நோக்கி விரைந்தது விசைப்படகு. தீவுக்கு சற்றே முன்பாக நடுக்கடலில் மிகப்பெரிய படகொன்று நின்றிருந்தது. அதில் பேராசைலிங்(Parasailing) எனப்படும் பாராசூட்டில் பறக்கும் வீரவிளையாட்டில் பங்கெடுத்தோம்.அதன் பின்னர் கோரல் தீவை நோக்கி பயணப்பட்டோம். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தென்பட்டனர். தவளை,ஆமை,கடல்சிப்பி இவையனைத்தும் அத்தீவில் உலவுகின்றன என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இவைகளை நன்றாக வறுத்து உணவாக்கி வைத்திருந்தார்கள் அங்குள்ள சிறிய கடைகளில்! தாய்லாந்து மக்களின் உணவில் தவளை,வண்டு,வெட்டுக்கிளி எல்லாம் சகஜம் என்றார் எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி.

மாலை வரை அற்புதமாய் கழிந்தது பொழுது. தீவை விட்டு மீண்டும் தங்கிருந்த விடுதிக்கு திரும்பினோம். தாய்லாந்தில் வாழ்க்கை இரவுதான் ஆரம்பிக்கிறது. அல்காசர் எனப்படும் புகழ்பெற்ற ஷோவிற்கு சென்றோம். தாய்லாந்தின் கலாச்சார நடனத்தில் ஆரம்பித்து பிற நாடுகளின் கலாச்சார நடனங்களையும்,நாடகங்களை நிகழ்த்தினார்கள் பால்நிற கன்னிகள். பின்புதான் தெரிந்தது அவர்கள் திருநங்கைகள் என்று. அவர்களை Ladyboys என்று தாய்லாந்து மக்கள் அழைக்கிறார்கள்.பட்டாயா நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மதுவிடுதிகளும்,நடன விடுதிகளும்,மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன.பின்னிரவில் பெண்களால் நிரம்பி வழிகின்றன பல தெருக்கள். வெகு இயல்பாக நடக்கிறது உலகின் புராதான தொழில். இங்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் 10 சதவிகித பணம் விலைமாதுக்களிடம் செலவிடப்படுகிறதாக தகவல்.

இரண்டு நாட்கள் பட்டாயாவில் தங்கியிருந்தோம். மூன்றாம் நாள் பாங்காக் கிளம்பினோம். பாங்காக்கில் முதலில் சென்ற இடம் உலகின் மிகப்பெரிய தங்கசிலை கொண்ட புத்தர் கோவில். ஐந்தரை டன் 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை ஜொலித்துக்கொண்டிருந்தது.அதன் வாசலில் தாய்லாந்தின் 84 வயது மன்னரின் மிகப்பெரிய புகைப்படம் கண்டோம். தாய்லாந்து மக்களின் நேசத்துக்குரிய தேசப்பிதா மன்னர் ஒன்பதாவது ராமா என்று அழைக்கப்படுகிறார்.அவர் தங்கியிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை ஒரு நதிக்கரையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

பாங்காக்கில் சிறுவர்கள் காணவேண்டிய இடங்கள் பல உண்டு. மிருகக்காட்சிசாலைகள்,பூங்காக்
கள் என்று நிறைய. அனைத்து இடங்களிலும் யானைகளை அதிகம் பார்க்க முடிகிறது. Elephant show மிகப்பிரபலமானது. சிறுவர்களை கவரும் வண்ணம் யானைகள் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. அதேபோல் Sealion show,birdshow,dolphin show என்று நிறைய ஷோக்களில் கல்லா கட்டுகிறார்கள்.

பாங்காக்கின் இரவு வாழ்க்கையும் பட்டாயா போன்றே காட்சியளிக்கிறது.நடைபாதைக்கடைகள் இரவு பதினோரு மணிவரை திறந்திருக்கின்றன.முக்கியமாக துணிக்கடைகளும்,எலக்ட்ரானிக் கடைகளும் அதிகம்.பேரம் பேசி வாங்க முடிகிறது. ஐந்து நாட்கள் பயணம் முடிந்து சொர்ணபூமி சென்றோம். அதுதான் தாய்லாந்தின் விமானநிலையத்தின் பெயர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்ற காரணத்தை வினவியபோது கிடைத்தபதில் சோழர்கள் தாய்லாந்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே பல சிவன் கோவில்கள் தாய்லாந்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்றும் திருப்பாவையும்,தேவாரமும் தாய்லாந்திலுள்ள சிவன் கோவில்களில் பாடப்படுகின்றன. சோழர்கள் ஆண்ட நாட்டை தரிசித்துவிட்டு திரும்பிய மகிழ்ச்சியில் சென்னை வந்தடைந்தோம்.

-நிலாரசிகன்.
 
[இன்றைய கல்கி இதழில் வெளியான கட்டுரை]

Saturday, October 30, 2010

தனலட்சுமி டாக்கீஸ்



உலகின் எந்த புலத்தில் என் பாதங்கள் படும்பொழுதும் ஏற்படாத அற்புத உணர்வை நான் பெறுவது ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான்.
அது என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த என் கிராமம்.  வெள்ளந்தி மனிதர்களாலும் எண்ணிலடங்கா விளையாட்டினாலும் நிறைந்தது என் பால்யம்.

பள்ளி மைதானத்தில் "ரவுண்ட் ரேஸ்" அல்லது "சில்லாங்குச்சி" விளையாடி கொண்டிருக்கும்போது நேரம் என்ன என்பதை எங்களுக்கு உணர்த்துவது எங்களூர் தனலட்சுமி டாக்கீஸ். தினம் இரண்டு காட்சிகள் மட்டுமே கொண்ட சிறிய தியேட்டர். மாலை ஐந்து மணிக்கும் இரவு எட்டு மணிக்கும் காட்சிகள் ஆரம்பமாகும். நான்கு நாற்பத்தைந்துக்கு சத்தமாக ஒலிக்க ஆரம்பிக்கும் பழைய பாடல்களை கேட்டவுடன் மணி ஐந்தாக போகிறது என்பதை அறிந்துகொள்வோம்.

"நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்","குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா" என தினம் ஒலிக்கும் பாடல்கள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்டவை. தரை டிக்கெட்,பெஞ்சு டிக்கெட்,சேர் டிக்கெட்,சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தியிருப்பார்கள். பெண்கள் பக்கத்திற்கும் ஆண்கள் பக்கத்திற்குமிடையே குட்டிச்சுவரொன்று நிற்கும். அலைபேசிகளும் இணையமும் வருவதற்கு முந்தைய காலகட்டமது. காதலர்கள் தாங்கள் நேசிப்பவரை சந்திக்கும் இடமாக விளங்கியது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். உழைத்து ஓய்ந்த ஜீவன்களின் மாலைப்பொழுதை ரம்மியமாக்குவதும்,வெளியூர் கண்டிராத கண்களுக்கு புற உலகையும் திரைப்படங்களின் வழியே காண்பிப்பதும் எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். இடைவேளையின் போது கிடைக்கும் முறுக்கும்,வடையும் வேறெங்கும் கிடைக்காத சுவை கொண்டவை.

கேபிள் டீவியின் வருகையினாலும்,சிடி,டிவிடி என்று பெருகிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் வருமானமின்றி கடுமையான பாதிப்புக்குள்ளானது எங்களூர் தியேட்டர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ்.

கால்சட்டை நிறைய கோலிக்காய்களுடன் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு தனலட்சுமி டாக்கீஸில் படம் பார்க்கும்போது கிடைத்த பரவசம் சென்னையின் மல்டிப்ளெக்ஸில் பார்க்கும்போது கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

[இவ்வார கல்கியில் "ஊர்பாசம்" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை] 
இந்த தியேட்டரை மையமாகக்கொண்டு நானெழுதிய சிறுகதை இங்கே வாசிக்கலாம்.
-நிலாரசிகன். 

Tuesday, October 05, 2010

லஷ்மண் - ஆஸ்திரேலியர்களின் கொடுங்கனவு




எப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களது முதல் கவலை லஷ்மணை எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான். உலக அணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்கள் கூட பேட்டிங் செய்வது லஷ்மண் எனில் சற்றே தயங்குவார்கள். காரணம்,2001ல் ஆஸியின் தலையெழுத்தையே  மாற்றி அமைத்த லஷ்மணின் 281 ரன்கள். நிச்சயக்கப்பட்ட தோல்வியிலிருந்த அப்போட்டியில் லஷ்மண் விஸ்வரூபமெடுத்து அற்புதமாக ஆடியதில் வெற்றியை தட்டிப்பறித்தது இந்தியா.
 
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான ஸ்டீவ் வா(க்)கிற்கு கூட லஷ்மண் ஆட வந்துவிட்டால் தலைசுற்றும். மற்ற அணியியுடனான போட்டிகளில் சாதுவாக விளையாடும் லஷ்மண் ஆஸியுடனான போட்டிகளில் தன்னுடைய 200% ஆட்டத்தை வெளிப்படுத்துவார். மறுபக்கம் வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் நங்கூரமாக நிற்பார்.

இன்று மொகாலியில் இந்தியா பெற்றிருக்கும் வெற்றிக்கு சச்சின் அடித்த 98 ரன்களும்,இசாந்த்சர்மாவின் மிக முக்கிய 31 ரன்களும் 3 விக்கெட்டுகளும்,ஜாகீர் கானின் 8 விக்கெட்டுகளும் முக்கிய காரணியாக இருப்பினும் தாளாத முதுகு வலியுடன் வலிநிவாரண மருந்தை உட்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி லஷ்மண் அடித்த 73 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் சென்னையில் அடித்த 136 அதிஅற்புத ரன்களுடன் இந்த 73 ரன்களை ஒப்பிட்டு சொல்லமுடியும்.

இந்திய அணியின் ஜென்டில்மேன்களாக கும்ளே,டிராவிட்,சச்சின் போன்றவர்களை குறிப்பிடலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தலைகாட்டும் லஷ்மணும் ஒரு ஜென் டில்மேன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மைதானத்திற்குள் வரும் முன் இசை கேட்டபடி அமர்ந்திருப்பார் லஷ்மண். மிக அமைதியான லஷ்மணை அணியில் எல்லோருக்கும் பிடிக்கும். இன்றைய போட்டியில் ஒரு ரன் எடுக்க வேண்டிய தருணமொன்றில் ஓஜா ரன் ஏதும் எடுக்க வில்லை என்பதற்காக அவரை சத்தமிட்டு திட்டினார் லஷ்மண். காரணம் இந்த போட்டியை சொற்ப ரன்களில் இழக்க அவர் தயாரில்லை. திட்டியபோதும் சில நிமிடத்தில் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தோள்களில் தட்டிக்கொடுத்தார். அதுதான் லஷ்மண்.

Wrist shot,pull shot போன்றவற்றை எப்படி விளையாட வேண்டும் என்பதை லஷ்மணின் ஆட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் தெரிந்துகொள்ளலாம். சேவாக் சச்சின் போன்று லஷ்மண் அதிரடியான ஆட்டக்காரர் இல்லை.ஆனால் அவர்கள் இருவரிடமும் இல்லாத "ஸ்டைல்" லஷ்மணின் ஆட்டத்தில் காண முடியும். தலைசிறந்த இசைக்கலைஞனொருவன் இரவின் ஏகாந்தத்தில் வயலின் வாசிப்பதற்கு ஒப்பானது லஷ்மணின் ஆட்டத்தின் அழகு.

லஷ்மணின் 16 சதங்களில் ஆறு சதம் ஆஸிக்கு எதிரானது. அவர் பார்மில் இல்லாத போதுகூட ஆஸியுடன் டெஸ்ட் தொடர் இருக்குமெனில் உடனே தேர்வாளர்கள் லஷ்மணை தேடி ஓடுவார்கள். அவர்களுக்கு தெரியும் லஷ்மண் அணியில் இருந்தாலே போதும் ஆஸ்திரேலிய அணியினரின் மன உறுதியை கலைத்துவிடலாமென்று. உலகமெங்கும் வெற்றிகளை குவித்த ஆஸி கேப்டன் ரிக்கிபாண்டிங் இதுவரை இந்திய மண்ணில் ஒரு வெற்றியை கூட ருசித்ததில்லை. இன்று நடைபெற்ற போட்டியிலாவது வென்றுவிடலாமென்று கனவில் மூழ்கியிருந்திருப்பார். அவரது கனவின் குறுக்கே வழமைபோலவே பேருருவம் கொண்டு நின்றவர் லஷ்மண். சில வீரர்கள் ஓய்வு பெறும்பொழுது சில அணிகள் பெருமூச்செறியும். சனத் ஜெயசூர்யா ஓய்வை அறிவித்தபோது இந்திய அணியினர் நிம்மதி பெருமூச்சுடன் உறங்கியிருப்பார்கள். வார்னே ஓய்வு பெற்றபோது இங்கிலாந்து அணியினர் நிம்மதி அடைந்திருப்பார்கள். அதுபோல், லஷ்மண் என்கிற ரன் எந்திரன் ஓய்வு பெறும்போதுதான் ஆஸ்திரேலிய அணியினரும்,ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள். கிரிக்கெட் சரித்திரத்தில் லஷ்மண் என்கிற நட்சத்திரத்தின் கொல்கத்தா ஆட்டமும் மொகாலி ஆட்டமும் எப்போதும் மினுமினுத்துக்கொண்டே இருக்கும்.

லஷ்மண் பற்றி ப்ரெட் லீயிடம் ஸ்டீவ் வா சொன்னதாக உலவும் ஒரு வாசகத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்:

"If you get Dravid,Great.If you get Sachin,Brilliant.But if you get Laxman,its a miracle"

-நிலாரசிகன்.

Sunday, March 07, 2010

கல்கி

அன்புள்ள நண்பர்கள்/சக இணைய எழுத்தாளர்களுக்கு..

என்னுடைய கட்டுரையொன்று இன்றைய கல்கி இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாசித்து கருத்துப்பகிர வேண்டுகிறேன்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, November 10, 2009

சச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1







ஆஸ்திரேலியா = சச்சின்


ஒருநாள் கிரிக்கெட்உலககோப்பை தொடங்கப்பட்ட எழுபத்தி ஐந்தாம் ஆண்டிலிருந்து 90ம் ஆண்டு வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் கொடி
கட்டி பறந்த அணி மேற்கு இந்திய தீவுகள் அணி. விவ் ரிச்சர்ட்ஸ்,க்ளவ் லாயிட்,"பிக்பேர்ட்"கார்னர்,மால்கம் மார்ஷல்,மைக்கேல் ஹோல்டிங்
டெஸ்மான் ஹெயின்ஸ்,கிரினிட்ஜ் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி எதிரணியை அடித்து துவைத்து காயபோட்டுவிடும் சூரர்கள்
நிறைந்த மிக பலம் வாய்ந்த அணியாக மே.இ.தீவுகள் விளங்கியது.இரண்டு உலககோப்பை வெற்றி,மூன்றாவது உலககோப்பை பைனல் என்று அவர்களின் கை ஓங்கியே இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வீரராக ஓய்வு பெற்றதாலும் பணம் கொழிக்கும் கூடைபந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பலர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியதாலும் மே.இ.தீவுகளின் வீழ்ச்சி துவங்கியது. லாரா,ஹீப்பர்,சந்தர்பால் என்று ஒன்றிரண்டு சிறந்தவீரர்கள் "சோதா" டீமை வைத்துக்கொண்டு சில காலம் போராடி பார்த்தபோதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்தாளர் இல்லாத காரணத்தால் மே.இ.தீவுகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து ஜிப்பாப்வே,கென்யா போன்ற நாடுகளை மட்டும் அவ்வப்போது வெல்லும் சுண்டெலி அணியாக மாறிப்போனது.

இதற்கிடையே 87ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான உலககோப்பை இறுதிபோட்டியில் மைக் கேட்டிங் செய்த தவறால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா தன் வெற்றிப்பயணத்தை துவங்கியது. ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்த உலககோப்பையில்(92ல்) தோல்வியை தழுவியது. ஆனால் தொண்ணுறுகளில் துவக்கத்தில் பல மிகச்சிறந்த வீரர்களை ஆஸி உருவாக்கியது மார்க்வா,மெக்ரா,ஷேன் வார்ன் அதன்பிறகு பாண்டிங்,மைக்கேல் பெவன்,ப்ர்ட் லீ.

இதற்கு காரணம் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்தவரும் பதினோராயிரம் ரன்களை தாண்டியவருமான ஆலன் பார்டர்.மற்றும் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியே ஆஸி அணியை பலவெற்றிகளை பின்னாட்களில் குவிக்க காரணமாக இருந்த ஸ்டீவ் வாக்.

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை பார்த்து எந்தவொரு இளம் வீரனும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டீவ் வாக் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.சுயீங்கம் மென்று கொண்டே விளையாடுவார். ஆனால் ஆட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பிட்ச்சில் அவரது கால் ஒட்டிக்கொண்டதோ என எண்ணும் அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.(99ம் ஆண்டு உலககோப்பை - தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி சிறந்த உதாரணம்)


96ம் ஆண்டு இறுதிபோட்டியில் இலங்கையிடம் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ஆஸி அணியினர். பல வெற்றிகளும் சில தோல்விகளுமாக திரிந்த ஆஸி அணி 99ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்
வீழ்த்த முடியாத வலுவான அணியாக உருப்பெற்றது. பந்தைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கில்கிறிஸ்ட்,ஆஸி அணியில் இடம்பிடிக்க போராடி பல தடைகளை தாண்டி தானொரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்த ஹெய்டன்,கல்கத்தாவில் ஒர் இரவு விடுதி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக முன்பு குற்றம்சாட்டபட்டு விளையாட்டு பையனாக திரிந்து பின் விஸ்வரூபமெடுத்த பாண்டிங்,மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் மார்க்வா,ஒன் டே ஸ்பெசல் மைக்கேல் பெவன்,சுழல் சூறாவளி வார்னே,துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மூர்ச்சையாக்கும் மெக்ரா,கில்லெஸ்பி இவர்களை அனைவரையும் சத்தமின்றி வழிநடத்தும் ஸ்டீவ் வாக். இத்தனை சிறந்த வீரர்களை கொண்டு சென்ற இடமெல்லாம் பெரும் வெற்றிகள்(5 போட்டிகளில் எனில் 5-0 என்று எதிரணியை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்) குவித்து வீறு நடை போட துவங்கியது ஆஸ்திரேலிய அணி.

அதன்பிறகு தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி,2003,2007 உலககோப்பை வெற்றிகள் என ஆஸியின் பலம் ஓங்கியபடியே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தேர்வும் கிரிக்கெட்டில் Professional Approach ம் எனலாம். சிக்ஸ்ர்களாக தூள் பரத்தும் சிமெண்ட்ஸ் கூட அணியின் கட்டுப்பாட்டை மீறியதால் அணியிலிருந்தே தூக்கப்பட்டார். வி.பி தொடரில் பைனலுக்கு செல்ல முடியாமல் ஆஸி தோற்றதால் அணியின் கேப்டன் பதவியும் அணியில் இடமும் பறிபோனது ஸ்டீவ் வாக்கிற்கு.ஒரு போட்டியில் சரியாக விளையாடாவிட்டாலும் அணியில் நீடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியையும் தங்களது கடைசி போட்டியாக எண்ணி முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள் ஆஸி அணியினர். அதனால் எந்த கட்டத்திலும் போராடும் குணம் அவர்களுக்கு உண்டு. பிட்புல் நாய் போல் சாகும் வரை வெறியும் கோபமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் வெற்றி ஆஸிக்கே என்னும் நிலை. தங்களது சொந்த மண்ணில் கேட்கவும் வேண்டுமா? இருவருடங்களுக்கு ஒருமுறை ஆஸிக்கு சென்று நாயடி பேயடி வாங்கி திரும்புவார்கள் இங்கிலாந்து அணியினர். ஆஸ்திரேலிய பிட்ச் வேகபந்து வீச்சுக்கு சாதகமானது. அங்கே சதமடித்தால் இந்தியாவில் 300 அடிப்பதற்கு சமம்.




இப்பேர்பட்ட ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை அடித்த சதங்களில் டாப் டென் என்று வரிசை படுத்தினால்
அதில் பந்தொன்பது வயது அமுல்பேபி ஒருவரின் சதமும் அடங்கும். அவர் நம் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய வீரர்கள் கவாஸ்கர் உட்பட ஆஸி மண்ணில் திணறியதாக சரித்திரம் சொல்கிறது. எண்பதுகளின் துவக்கத்தில் சந்தீப் பட்டேல் அடித்த 174 ரன்களுக்கு பின் Spectacular Innings என்று எதுவுமில்லை. உடம்பில் அடிவாங்கி தட்டுத்தடுமாறி நூறு ரன்கள் எடுப்பதற்கு பதில் கிரிக்கெட்டை விட்டே ஓடிவிடலாம் என்று நினைக்க தோன்றும்.காரணம் மெக்டமர்ட் போன்ற மிக வேக பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள்.

உலகின் வேகமான பிட்ச் என்றழைக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆஸியின் வேக பந்துவீச்சாளர்களை தடுத்து,அடித்து ஆடிய சச்சின் எடுத்த சதம் கண்டபின் உலகமே "Boy Wonder" என்று சச்சினை புகழ ஆரம்பித்தது.

ஆறு ரன்களும் நான்கு ரன்களும் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை எப்படி அடிப்பது என்பதில்தான் சச்சின் தனித்து நிற்கிறார்.ஆங்கில அகராதி தொலைந்துவிட்டால் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை கொண்டே மீண்டும் உருவாக்கிவிடலாம் என்பார்கள். அதுபோல் கிரிக்கெட் பற்றிய விளக்க நூல் தொலைந்துவிட்டால் சச்சினின் ஆட்டத்தை கொண்டே மீண்டும் உருவாக்க முடியும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். ஸ்கொயர் கட் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்,கவர் ட்ரைவ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை போன்று ஒவ்வொரு ஷாட்டிலும் Sachin is a perfectionist!

அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் சதம் அடித்திருக்கிறார்.
குறிப்பாக சிட்னி மைதானம் பலமுறை சச்சினின் சதத்தை கண்டது. 2004ல் ஆஸி சுற்றுப்பயணத்தின்போது தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுவனிடம் பெயர் கேட்கிறார் சச்சின். அதற்கு அவன் தன் பெயரும் சச்சின் என்கிறான். சச்சின் என்பது இந்திய பெயராயிற்றே இது எப்படி ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை இன சிறுவனுக்கு சூட்டப்பட்டது? ஆர்வத்தோடு அவனது அப்பாவை கேட்கிறார். 92ல் சச்சின் சிட்னில் அடித்த 145 ரன்களை கண்ட பரவசத்தில் தனக்கு பிறந்த மகனுக்கு சச்சினென்று பெயரிட்டிருக்கிறார் அவர்!

சச்சின் சுள்ளான் அணிகளிடம் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் தட்டையான பிட்ச்சில்தான் சதமடிப்பார் என்று பரவலான கருத்தை சிலர் கொண்டிருக்கலாம். அது தவறு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள்,ஒன்பது சதம் எண்ணற்ற அரை சதம். இதைவிட வேறென்ன வேண்டும்? சச்சினால் இந்தியா ஜெயித்ததா என்கிற கேள்வி எழலாம்.

டைகர் உட்ஸ் கோல்பில் சிங்கம். ஸூமேக்கர் கார் ரேஸில் சிங்கம்.ரோஜர் பெடரர் டென்னிஸில் சிங்கம். காரணம்? இவை அனைத்தும் தனிநபர் விளையாட்டு. ஒருவேளை கிரிக்கெட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் சச்சினை சிங்கம் என்று வர்ணித்திருக்கலாம். பத்து சுண்டெலிகள் அதில் சில குள்ளநரிகள்(அசாரூதீன்,ஜடேஜா,மனோஜ் பிரபாகர்) இவர்களோடு போருக்கு ஒரு சிங்கமும் சென்றால் வெற்றி எப்படி கிடைக்கும்?

எப்போதும் 100% தருபவர் சச்சின்.அதனால்தான் ஆஸியோடு சச்சினை ஒப்பிட முடிகிறது.
கடைசி வரை போராடும் குணம்,எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வெற்றியை உடனே மறந்துவிட்டு அடுத்த போட்டியில் மீண்டும் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம்,தொடர்ந்து கிரிக்கெட் மீதான தீராக்காதல் இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் சச்சினுக்குமான மிக முக்கிய ஒற்றுமை. இந்த வெறி,இந்த ஈடுபாடு தொடர்ந்து இருப்பதால்தான் இருபது வருடங்களாக சிம்மசொப்பனமாக சச்சின் விளங்குகிறார்.

சச்சினுக்கும் அவரது பள்ளித்தோழர் காம்ளிக்கும் குரு ஒருவர்தான்.அவர் சமீபத்தில் மறைந்த அச்ரேக்கர். அவரிடம் இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேள்வி எழுப்பியபோது சச்சின் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவன் காம்ளி என்றார். அப்பேற்பட்ட காம்ளி காணாமல் போனது எதனால்? அவர் மைதானத்தை விட தன்னிடம் சிறப்பாக விளையாடுவார் என்றார் ஒரு மாடல் நடிகை. அதுமட்டுமின்றி ஹோட்டலில் அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில் சத்தமாக ஸ்பீக்கர் அலற ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பார் காம்ளி.அதனால் கிரிக்கெட் மீதான கவனம் குலைந்து காம்ளியின் ஆட்டம் மோசமடைந்தது. தொடர்ந்த ஈடுபாட்டினாலும் ஒழுக்கத்தினாலும் சச்சின் சிறந்த வீரர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக நம் முன் திகழ்கிறார்.கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் டான் பிராட்மேன் தனது கனவு அணியை வெளியிட்டபோது உலகமே வியந்துபோனது.காரணம் அந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர் மட்டுமே இருந்தது. அது சச்சின்.


மீண்டுமொரு சச்சின் வாசகத்தோடு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:

Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives.

- BBC Sports, on Sachin Tendulkar

-நிலாரசிகன்

Wednesday, September 09, 2009

சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு:



குறும்படம்:

நானும் என் விக்கியும்:-

சுட்டி
: http://www.cultureunplugged.com/play/1127/Naanum-En-Vickyum---/TUE9PStP

நம் அனைவருக்கும் பால்யகால நண்பர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சைக்கிளாகத்தான் இருக்கும். புது சைக்கிள் வாங்கிய புதிதில் நாற்பது முறை விழுந்திருக்கிறேன்.கையிலும் முட்டியிலும் அடிபடாத நாட்களே கிடையாது. ஆனாலும் சைக்கிள் மீதான என் காதல் என்றும் குறைந்ததே இல்லை.பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தபோது மோட்டார் சைக்கிளுக்கு மனம் தாவியபோதும் என் பழைய சைக்கிளை பத்திரமாகவே வெகுகாலம் வைத்திருந்தேன்.

நானும் என் விக்கியும் ஒரு சைக்கிளின் பார்வையில் எடுக்கப்பட்ட குறும்படம்.இதற்கு விமர்சனம் எழுதும் மனநிலை இப்போதில்லை.காரணம் என் சைக்கிளின் ஞாபகங்களோடு மனம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.இப்படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

*********************************************************************************


புத்தகம்:

காவலன் காவான் எனின்:நாஞ்சில் நாடன்
(கட்டுரை தொகுப்பு/தமிழினி வெளியீடு/விலை ரூ.90)


கட்டுரை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா? அடடே நீங்களும் கட்டுரையாளர்தான்!!:)

நாஞ்சில் நாடன் சமீபத்தில் எழுதிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.
இருபத்தி இரண்டு முத்துகள் எனலாம்.அதில் இரண்டை வைரம் என்றும் விளிக்கலாம்.
(குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்/கற்பனெப் படுவது)
நாஞ்சில் நாடனுக்கே உரித்தான எள்ளலும், ஆழ்ந்த இலக்கியச்செறிவும்,கற்றுத்தேர்ந்த மரபும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.

என் புத்தக சேமிப்பில் யாருக்கும் தர விரும்பாத/பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய நூல்களில் இதுவுமொன்று :)

*********************************************************************************

புத்தகம்:
மரம் பூக்கும் ஒளி
(நவீன கவிதைகள்/கோகுலக்கண்ணன்/காலச்சுவடு பதிப்பகம்/விலை:ரூ.75)


புத்தக கடையினுள் ஒவ்வொரு புத்தகமாக கடந்து வந்துகொண்டே இருந்தபோது எதுவுமே "என்னை வாங்கிக்கொள்,உன்னோடு வாழவிரும்புகிறேன்" என்றுரைக்கவில்லை. எந்த புத்தகத்திற்கும் என்னை பிடிக்கவில்லையா அல்லது எனக்கு எந்த புத்தகத்தையும் பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்தோடு புத்தகமுகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கண்ணில் பட்டது "மரம் பூக்கும் ஒளி" தலைப்பின் வசீகரத்தில் கையிலெடுத்து
ஏதோவொரு பக்கத்தை பிரித்தேன்.கீழுள்ள கவிதை இருந்தது

"ஒரு அணில்
உடைந்த முட்டை ஓட்டுக்குள்
முகத்தைப் புதைத்து அழுகிறது"


சட்டென்று ஓர் உலகம் என் முன் தோன்றி அதில் அழகிய தோட்டமொன்று உருவாகி அங்கே தேன் சிந்தும் பூக்களும்,இசைபாடும் குயில்களும் நிறைந்திருக்க,சாய்வான நாற்காலியில் வானம் பார்த்து நான் கிடக்க,அங்கே வந்த ஒரு அணில் தன்னை யாரும் கவனிக்க வில்லையே என்கிற ஏக்கத்தில் அருகிலிருந்த உடைந்த முட்டை ஓட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுவதாக கற்பனை விரிந்தது.

உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மற்ற கவிதைகளும் மிக அற்புதமாகவே இருக்கிறது.
நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும்.

*********************************************************************************

விளையாட்டு:

இலங்கை Vs நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெகுகாலம் கழித்து
ஷேன் பாண்ட் விளையாடினார்.முன்புபோல் வேகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் துல்லியமான பந்துவீச்சால் சில விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நியுசிலாந்து வெற்றி பெறும் என்கிற எண்ணத்தை மலிங்காவும்,துஷாராவும் மாற்றினர்.இந்தியா இந்த கோப்பையை வென்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம். மலிங்காவிடம் வீழ்வார்கள் என்றே எண்ணுகிறேன்.(அதெப்படி மலிங்கா மட்டும் "மாங்கா" எறிவதுபோல் பவுலிங் செய்கிறார்??)

"தல" சச்சின் விளையாட்டை காணும் ஆவலில் காத்திருக்கும் ரசிககோடிகளில்
நானுமொருவன் :)

-நிலாரசிகன்