Sunday, April 14, 2013

மீன்கள் துள்ளும் நிசி - ராணிதிலக் விமர்சனம்


யதார்த்தம் என்கிற புனைகதை கவிதைகள்

ராணிதிலக்


2000க்குப்பிறகான தமிழ்க்கவிதை, முன்பு இருந்த நான் என்கிற, சாதி என்கிற, அடையாளம் என்கிற தன்மையிலிருந்து கொஞ்சம் விலகி இச்சமூகத்தின் மீதான எள்ளலையும், அகத்தின் அசிங்கத்தையும், புனைவையும் முன்வைக்கின்றன.  பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற சொற்கள் இப்போதைய நவீன கவிஞர்களிடம் இல்லாதது சந்தோஷமளிக்கும் ஒன்று. 

கவிதையின் வழியாக அபூர்வ மனச் சலனங்களை உருவாக்குவதும், கவித்வம் மற்றும் அழகியலுக்கு மாற்றாகப் புனைவையும் எதிர் அழகியலை உருவாக்குவதும் இன்றைய தலைமுறையிடம் இருக்கும் வெற்றி.  இன்றைய காலகட்டத்தில், நவீன மரபைக் கேள்விக்குறியாக்கும் கவிதைகளை நாம் இசை, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சபரிநாதன், ஸ்ரீசங்கர் மற்றும் பலரிடம் காண்கிறோம்.

இன்றைய நவீன கவிஞர்கள் வளர்த்திருக்கும் நவீன கவிதை மரபை ஒட்டியும் வேறுபட்டும் தற்பொழுது குறைந்தபட்சம் 20 கவிதைத்தொகுதிகளாவது, இந்த வருடம் வந்திருக்கலாம் என்பது என் அனுமானம். இதில் குறைந்தபட்சம் பெரும்பான்மை கவிதைகளை நான் வாசித்துவிட்டேன் என்பதைவிட, மற்றதை எப்போது வாசிக்கப்போகிறேன் என்பது கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வெவ்வேறு உலகத்தைச் சொல்பதாக இருப்பதால்தான்.

வெவ்வேறு விதமாகச் சொல்வது என்பதைவிட, வெவ்வேறு வித உலகத்தை மொழிந்து, வெவ்வேறு விதமான வகைமைகளை உருவாக்கிவிடுகின்றன இத்தொகுதிகள்.  இந்த வகைமையில் புதிய தொகுப்புகளில், தீம் பொயம்ஸ் என்கிற அடிப்படையில் வா.மணிகண்டன் மற்றும் நிலாரசிகன் தொகுப்புகள் வேறுபட்டு அமைந்திருக்கின்றன.  இந்த இரண்டு தொகுப்பும் ஓரே தன்மையில் உருவாகியன என்பதை வாசிப்பின் பிறகு அறிந்துகொண்டேன். இவற்றில் மீன்கள் துள்ளும் நிசி  எனும் நிலாரசிகன் தொகுப்பைப் பற்றி இப்போது பேசலாம்.

கனவு, கற்பனை, புனைவு என்கிற தளத்தில் இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.  வெறுமையாகக் கனவும் கற்பனையும் புனைவும் அமையாமல், அவை உருவாகும் பின்னணி சொல்லப்பட்டிருக்கிறது. மழைவழிப்பயணம், இலை, திமிர்நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், கடலாடும் தாழி, ஒளிவடிவ துயரம், நகரம் ஆகிய கவிதைகளை வாசித்தவர்கள் இதை உணர்ந்துவிடலாம்.  அன்பும், துயரமும், வாலிபமும், கொல்லுதலும் முத்த உறவும் இக்கவிதை கற்பனைத் தளத்திலிருந்து உரையாடும் தளத்திற்கு அழைத்துவிடுகின்றன. இத்தொகுதியின் பெரும்பான்மை கவிதைகள் கற்பனை என்னும் கோட்டையால், அதன் பின்னணியில் உருவானவை.  அதில் சில கோட்டைகள்  நன்றாக எழுந்தும், சிலது சிதிலமாகவும், சிலது எழாமலும் அமைந்திடுவது இயல்பான ஒன்றே. 

      அங்குமிங்கும் அலைவுறும்
      இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித் தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையைத் தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள். 
அசைவற்று நின்றது இலை.     (இலை, ப.2)

என்ற  இக்கவிதையில், அசைவற்று நின்றது இலை என்கிற கற்பனை, ருதுவாகும் போது அவள் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து விடுபடுவதால், இலை அவளிடம் இருந்து விடுபடுகிறது நிற்கிறது என்பதும், இன்னொரு பார்வையில் இலையானது ருதுவானவளிடம் விளையாட முடியாது என்பதும் இக்கவிதையில் தெரிகிறது. ஏற்கெனவே நான் சொன்ன கவிதைகளும் இந்த உலகத்தில் அமையும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு கற்பனை என்பதை வெறும் கற்பனையாக அமையாமல், ஒன்றிலிருந்து விடுபட்டு மற்றொன்றில் மாறி அமரும் ஆசுவாசமாகப்படுகிறது.  இல்லையேல் தனியாக இல்லாமல் ஒவ்வொன்றும் தானாக மாறும் மனோநிலையும் இருப்பில் வாழ்கிறது. இத்தகைய மனோநிலையை உடைய கவிதையை வாசிப்போம்.

      தென்னை  மரத்தடியில் இதுவரை
நான்கு நாய்க்குட்டிகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.
அவை எதனால் இறந்தன
என்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்
பின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.
நோய்மை முற்றிய நிலையிலும்,
சர்ப்பம் தீண்டியும்,
வாகனமொன்றின் அடியில்
தலை நசுங்கியும் 
இறந்துபோயின முதல் மூன்றும். 
துடிக்க துடிக்க  வளர்ப்பு அணிலை
கொன்றதால் நான்காவது
நாய்க்குட்டியை கொன்று வீசியது
இயற்கை. 
நான் அணில்.
நான் நாய்க்குட்டி.
நான் இயற்கை.
                              (திமிர் நாய்க்குட்டிகள், ப.4)
இந்த கவிதையில் கொல்வது சாத்வீகமானது அல்ல என்றானபோது, கொல்லப்படுவதும் கொல்வதும் ஒரே மனமாக, மாறும் மனமாக மாறிவிடுவதை நாம் உணர்கிறோம்.  இதுபோன்று ஒன்றிலிருந்து ஒன்று பிரியும் (மழையில் நனையும் வயலின், இசைதல்) கவிதைகளும், ஒன்றிலிருந்து ஒன்று பிரியாமல் அமையும் (அசைவு, தருணம், வதை, சொற்பறவை, நட்சத்திராவின் வானம்) கவிதைகளும் இவற்றிடைக்கிடையே வாழ்கின்றன.

இத்தன்மையான கவிதைகளைத் தவிர்த்து ஜூலி பற்றிய கவிதைகளும், நட்சத்திரா பற்றிய கவிதைகளும் ஒரு தனி அனுபவச் சித்திரமாக உருவாகியுள்ளன. கலாப்ரியாவின் சசி, கண்டராதித்தனின் நித்யா, வா.மணிகண்டனின் ப்ரணிதா என்பதுபோல, அவர் ஜூலியையும் நட்சத்திராவையும் உருவாக்கியிருக்கலாம். ஜூலி காமத்தையும் காதலையும் பொழிபவளாகவும், நட்சத்திரா தனக்குள் வானத்தைப் பெற்றவளாகவும் விளங்குகிறார்கள்.  ஜூலியின் உடலும் முத்தமும் பல்வேறு கவிதைகளில் தொடர்ந்து பேசுகின்றன. 

மரவண்டுகளிட்ட துளைக்குள்   
தன் மார்புகளை பொருத்திக் கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத் துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுகப் பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச் சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.   (ஜூலி என்ற முடிவிலி, ப.52)

முத்தங்கள் பற்றிய கவிதைகளில் முத்தமானது உப்புக் கடலாகவும், சிறுபருவத்தை எய்த உதவும் காரணியாகவும், உடலைப் புசித்துப் பசியாறும் தேளாகவும், பேரன்புடையதாகவும், முத்தமாக மாறிவிடுவதும், சர்ப்ப குட்டிகளாகவும், முடிவிலியாகவும், குருதி சுவைப்பதாகவும் வாழ்கின்றது. இம்முத்தங்கள் ஒரே குரலில் அமையாமல், காமமாகவும், பரிதவிப்பாகவும், ஏமாற்றமாகவும் உணர்வுநிலையில் பேசப்படுகின்றன.  முத்தக் கவிதைகளில் கடலாடும் தாழி என்னும் கவிதை மிக முக்கியமானது. 

முத்தம் என்கிற பொதுவகைப்பாடில் கடந்து  மனித வாழ்வைக்குறித்த கவிதைகளும் இதில் உண்டு. நகரம் என்ற கவிதையும், அசைவு என்ற கவிதையும் இருப்பு குறித்த வெவ்வேறு பார்வை கொண்டவை. நகரத்தில் வாழ்பவன் இறந்த பூனையை வாசனைத்திரவியம் தடவி, அதைக் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டியில் போடுவது என்பதும், மிதக்கும் மேகங்களையும் நீரில் நடனமிடும் இலைகளையும், புழுவை உண்டு துடிக்கும் மீன்களையும் ஒரு சேர பார்க்கும் துறவிகள் வெவ்வேறு திசையை நோக்கி அசைவும் அசைவின்மையுடனும் செல்வது என்பதும் வெவ்வேறு பார்வைதானே. மற்றும்,


நிலாரசிகனின் கவிதைசொல்முறைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துவிடுகின்றன. மிகத் தெளிவான, விளக்கமான உரையாடலை நிகழ்த்துகிறார். மொழி என்னும்பட்சத்தில், ஒரு கவிதையை எடுத்துரைப்பதற்குத் தேவையான சொற்களை அவர் எழுதியிருக்கிறார்.அபூர்வமான மொழியோ (ஞாளி என்ற சொல் மட்டும் விதிவிலக்கு), சிக்கலான படிமங்களோ இத்தொகுதியில் இல்லை என்பது வெளிப்படை.  ஒரு கவிதை வாசகனைச் சென்று அடைவதற்கான வழியை அவர் தெளிவாக உருவாக்கியுள்ளார் என்பதை நாம் மறுக்கமுடியாது.

என்றாலும், எல்லா கவிஞர்களுக்கும் தெரியாமல் அமையும் நடை இதில் உள்ளது. அதாவது, அவர் கவிதைகயில் இடையே என்னும் சொல் அதிகமாகப் பயில்வது என்பது  கவனமாக ஒரு பிரதியை உருவாக்குதல் என்கிற உத்தியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.  அல்லது இந்தப் போலச் செய்தல் என்கிற செயல் அதில் தெரிந்த அடையாளமாகிறது.  யுவதியிலிருந்து பேரிளம்பெண்ணுக்கும் இடையே, ஒருசொல்லுக்கும் மறு சொல்லுக்கும் இடையே, நம் உறவின் நடுவே, முதுமைக்கும் பால்யத்திற்கும் இடையே, சொர்க்கம் நரகம் இரண்டிற்கும் இடையே, இறந்தகாலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே, அழகின்மையும் அழகிற்கும் நடுவே, அசைவுக்கும் அசைவின்மைக்கும் இடையே என்று பல கவிதைகளில் சொல்முறையாக வருவது தவிர்க்கமுடியாது என்றாலும், தவிர்ப்பது நலம்.

இந்தத் தொகுதி கீழ்க்கண்ட விடயங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவை-

1.       கவிதை என்பது தனிமனிதனின் அகத்தையோ, அவனின் சுயபுலம்பல்களையோ, இழந்தவற்றையோ சொல்லத் தேவையில்லை.

2.       பழைய மற்றும் புதிய தத்துவத்தை உருவாக்கவேண்டிய அவசியம் அதில் இல்லை.

3.       கவிதை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் அதிகாரத்தைக் கேள்விக்கேட்பதற்காகவும் இல்லை.

4.       தன்னை சாதி, இன, மத, நாடு என்கிற அடையாளப்படுத்தவும் அமையாது.

5.       எழுதுதல் என்ற செயல்பாட்டில், அதாவது தூரிகை தானாகவே வரைகிறது என்பதுபோல், ஒரு கற்பனை அல்லது கனவைக் கொண்டு கவிதையை வரைந்துவிடலாம்.

இந்த விடயங்களைக் கடந்து,  அவர் கவிதைகள் எதை முன்னிறுத்துகின்றன என்று கேட்கலாம்.  அவர் கவிதைகள் கற்பனை அனுபவத்தின் வழியாக அந்தரங்களைக் கூறுகிறது.  கற்பனை வழியாக இன்னொரு உலகத்தை கற்பனை செய்து மகிழ்கிறது.  யதார்த்தம் என்ற பதத்தில் உள்ள கற்பனை என்கிற மாபெரும் வித்தையை வரவேற்கிறது. இத்தொகுதியின் ஓரே எண்ணம் கற்பனை..கனவு...கற்பனை..கனவு என்பதுதான். அதன் உரையாடல் என்பதும் கற்பனைக்குள்,  கனவுக்குள் வாழும் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள நகரம் என்கிற கவிதை நமக்குப் போதுமானது. 

ஒருவித கற்பனைக் குரலில் மட்டும் கவிதைகளை அமைத்து எழுதுவது (அதாவது புனைவு) என்பது, இன்னொரு தளத்திற்குக் கவிதை செல்லமுடியாத நிலை ஏற்படும் என்பதை  நிலாரசிகன் புரிந்துகொள்ளவேண்டும். இந்த தன்மை தீம் பொயம்களுக்கு அமைந்துவிடுகிறது என்பதால் அவ்வளவு நல்லதல்ல.

நிலாரசிகன் கவிதைகளை வாசிப்பவர்கள் ஒரு கட்டத்தில் அதில் துய்த்தாலும், (அவர் கனவும் கற்பனையும் அபாரமானது என்பது வேறு), அக்கவிதைகளில் எவ்வளவு காலத்திற்குச் சலனங்களைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதைச் சொல்லமுடியுமா? என்றால் சொல்லமுடியாது. கற்பனைவாத, கனவுவாத இயக்கமும் எழுத்தும் கலையும் காலமாகி நூற்றாண்டு ஆகிவிட்டதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். திரும்பத திரும்ப கூறுதல் என்கிற தொனி கவிதையின் நவீனத்தைக் குறைத்துவிடும் என்பது என் நம்பிக்கை.

இத்தொகுதியில் உள்ள இலை, திமிர் நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், தருணம், நகரம், அழகன் கழுதை சரித்திரம், இசைதல், நடசத்திராவின் வானம், மழையில் நனையும் வயலின், அனைத்தும் நின்றுவிட்ட நாளில் ஆகிய கவிதைகளைப்போன்று, அவரால் மிகச் சிறந்த கவிதைகளை எதிர்காலத்தில் எழுதிவிடமுடியும். 
இனிமேல் அவர் பயணப்படவேண்டிய திசை என்பது, தீம் பொயம்களில் இருந்து விலகி, வாழ்வின் சாரம்சத்தை நோக்குவதுதான்.  புனைவுதான் கவிதை, வாழ்வின் சாராம்சமும் அனுபவமும் கவிதையாகாது என்று சொன்னால், நகரம் என்ற  கவிதையை ஏன் எழுதினார்? என்பதை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும்.  நகரம் என்கிற கவிதையைத் தயவுசெய்து வாசித்துப்பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளில் சுற்றுவதற்கு
முன் பழைய தினசரிகளில்
ஒரு சுற்று சுற்றிடவேண்டும்.
பிறகு பிளாஸ்டிக்.
அதன் பிறகு உபயோகப்படுத்தாத
அல்லது மிச்சமிருக்கும்
சில துளி வாசனைத் திரவியத்தை
தெளிக்கலாம்.
வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து
குடியிருப்புவாசிகள் அறிந்திடாமல்
தெருவில் இறங்கி நடக்கவேண்டும். 
பச்சை நிறத்தில் வாய்பிளந்து நிற்கும்
குப்பைத் தொட்டியில் ஒன்றும்
நடந்துவிடாத பாவனையில் எறிந்துவிட்டு
நகர்ந்துவிட வேண்டும்.
செல்லப் பூனை என்றாலும். (நகரம், ப.17)

கற்பனைதான் கவிதை என்று இந்தக் கவிதையை நம்மால் நீக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த அனுபவம் நம்மில் இருப்பது. இந்த வாழ்வு நம்மில் இருப்பது. இந்த யதார்த்தம் நம்மால் ஆனது.  நீக்கமுடியுமா? சொல்லுங்கள்.

யதார்த்தத்தை பெரும்பான்மையாக மறுத்து கற்பனையையும் கனவையும் ஆதாரமாகக் கொண்ட இத்தொகுதி, முழுக்க முழுக்க ஒரு சுகத்தைத் தருவதை என்னால் மறுக்க இயலாது. இது ஒரு வாசிப்பு அல்லது ஆழ்ந்த கற்பனை அனுபவம். இவ்வனுபவத்தை இத்தொகுதியில் மட்டுமே பெறமுடியும் என்பதும் நிஜம். அது கற்பனையல்ல. 


(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து – மு.ப.2012 - ரூ.60)

1 comments:

said...

ungalin kavithaikalai vaasikka katru kodukirathu intha vimarsanam

vaazhthukal...