Thursday, April 11, 2013

குடுவையிலிருந்து வெளி கிளம்பி நிசி முழுக்க துள்ளி நிறையும் மீன்கள்


Thanks :  http://thenpakirvukal.blogspot.in/2013/04/blog-post.html

நவீனம், புதுமை இந்த இரண்டு வார்த்தைக்கும் ஏறக்குறைய வித்தியாசம் அதிகம் இல்லையென்றாலும் உபயோகப்படுத்தும் இடம் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கிறது இன்றளவும். புதுமை என்பது ஒரு சாத்தியமாதலுக்கான உருவமாகவும், நவீனம் என்பது ஒரு நிகழ்ச்சி சாத்தியமாதல் சாத்தியமா என்றதான ஒரு விளிம்பில் நிற்கும் உருவமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீன்கள் துள்ளும் நிசி முழுதும் இவ்விரண்டு வகையின் உருவத்திற்கான விதைகள் கவிதைகள் வழி நிறைய தூவப்பட்டிருக்கின்றன.


எப்பொழுதானாலும் நம்மில் இரண்டில் ஒருவருக்கு கனவுருப்புனைவு எனும் ஒற்றை சொல்லை ஒவ்வொரு உருவத்திலும் தேடும் நிலை நிரந்தரமாக மனதில் உச்சியேறி அமர்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையில்லை. அத்தகையான தனி உலகங்களுக்கு கனவுருப்புனைவு மூலம் நம்மை விரல் பிடித்து அழைத்துச் சென்று நம்மையே வாழ் வைத்து ரசிக்க விடுகிறார் நிலாரசிகன். புதுமை, நவீனம் என்னும் இவ்விரு சொற்களின் கொக்கியை மிக நீண்ட வளையமாக நமக்கு வளைத்துத் தரும், நாம் காணும் நவீன கவிஞர்களுள் சமீப காலமாக நிலாரசிகன் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறார். இந்த 'மீன்கள் துள்ளும் நிசி' தொகுப்பு அவரின் நவீன கவிதை வரிசையில் 'வெயில் தின்ற மழை' தொகுப்புக்கு அடுத்தபடி வெளிவந்துள்ள இரண்டாமது தொகுப்பு.

சமீபமாக நவீன கவிதைகள் வரிசையில், கவிதை புத்தகங்களின் எண்ணிக்கை சற்று கூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக மனதில் படிந்து விட்டது. ஒவ்வொரு கவிதை நூலும் ஒவ்வொரு விதமான உலகை நமக்கு அறிமுகம் செய்து விடுகிறது. இந்த தொகுப்பிலும் அப்படியான ஒரு உலகின் கூறுகளையும், உலகின் மையத்தில் புனைபாத்திரங்களையும் உலவ விட்டு உலகின் விளிம்பில் நம் ரசனையை சிறகடித்து பறக்க விடுகிறார் நிலாரசிகன். காலங்களை நிற்க செய்வதும், காலங்களூடே பின்னோக்கி பயணிப்பதும், காலத்தையே கொஞ்சம் முன்னோக்கி உருள விடுவதும் மிக இலகுவாக வாய்த்து விடுகிறது இவருக்கு. உதாரணமாக, இத்தொகுதியின் முதற்கவிதையே சற்று நம்மைக் காலத்தோடு விளையாட வைக்கிறது.

மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.

ஒரு நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு நூற்றாண்டிற்கு மழையின் வழி ஒரு சிறுமி, ஒரு நாய்க்குட்டி, ஒரு குடுவை மீன் பயணித்து வருவதாய் சொல்லி, அதுவும் அவர்கள் அழுக்கற்ற அன்பைத் தேடி பயணிப்பதாயும் சொல்லி இறுதியில் நம்மையும் நம் ஒரு வகையில் தவற விட வைத்து விடுகிறது காலம். காலங்கள் மட்டுமா விளையாட அழைக்கிறது!! நிலமும் பருவமும் கூட நம்மை விளையாட அழைக்கத்தான் செய்கின்றன. ஒரு பாலை நிலத்தில் உருவாகும் மழைக்குப் பின்னுள்ள ஒரு சிறிய கதை புனைந்த ஆளுமையைக் காண பிரமிப்பாக உள்ளது.

முதல் துளி

சைக்கிளின் முன் இருக்கையிலிருந்து
கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
வருகிறாள் சிறுமி.
மரங்களின் மொழியை அவளுடன்
பயணிக்கும் தட்டான்களுக்கு கற்றுத்தருகிறாள்.
அவளிடம் கற்ற மொழியுடன்
மரத்தின் இலையில் அமர்கின்ற
தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
நகரும் வெயில் மரமொழியை
கற்றுக்கொண்டு மறைந்து போகிறது.
கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
முளைக்கும் மரக்கன்று
சிறுமியின் மொழியில் தலையசைத்து
தலையசைத்து பேசத் துவங்குகிறது
பாலையின் முதல் துளியிடம்.

சிறுமி - மரங்கள் - தட்டான் - வெயில் - பாலை - துளி, இச்சொற்களுக்குள் பயணிக்கும் பொழுது யதார்த்தமான ஒரு நிகழ்கால தேவை புரிகிறது. நிச்சயமாக நிதர்சனமான உண்மைதான். ஆனால் அதை புனைந்த விதம் சிறுமியின் மொழி கொண்டு அதைக் கோர்த்த புதுமைதான் அக்கவிதையின் சாராம்சத்தை வெகு நேரமாய் நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு உட்படுத்துகிறது. இந்த கவிதையில் தெள்ளத்தெளிவாகத் தெரியும், இத்தொகுதிக் கவிதைகளின் புனைவுகளின் மறைவில் கொஞ்சம் யதார்த்தமான சுற்றுப் புரிதலும் இருக்குமென்பது. அதற்கு இன்னுமொரு உதாரணம் - நகரம் என்னும் பதினேழாவது கவிதை, அக்கவிதையைப் பற்றி ஏதும் கூறாது அவரவர் மனதிற்குள் அதைச் செலுத்திப் பார்த்தல் நல்லதென்பதாக உணர்கிறேன் நான்.

இன்னுமொரு கோணத்திற்குச் செல்வோம், கீழே குறிக்க பெற்றிருக்கும் கவிதையில், இப்படியொரு புனைவை இத்தகையானதொரு தருணத்திற்கு ஈடாகச் சொல்ல முடியுமாவென மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து முடியும் நொடிகளில், அந்த பெண் என்ன அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை மிக ஆழமாக நம்மால் உணர முடிந்தால் இக்கவிதை அதன் பாதையில் தெளிவாக முன்னேறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்

உடலுக்குள் பயணிக்கும் கப்பல்

மடித்துக்கட்டியிருக்கும் காவி நிற
உடையில் வியர்வை பூக்க ஆரம்பித்தபோது
கைகளில் வைத்திருந்த கிளி பொம்மையை
இறுக பற்றிக்கொள்கிறாள்.
இறுக்கம் தாளாத கிளி
தன் தலையை விடுவிக்க முயன்று
அங்குமிங்கும் அசைக்கிறது.
கிளியின் கழுத்திலாடும் சிறுமணியில்
ஒன்று சப்தமின்றி விழுந்து சிதறிய
கணம்
அவளுடலை திறந்து உள்நுழைகிறது
கருமை நிற கடல்.
அங்கே,
நீரைக் கிழித்து பயணிக்கும் கப்பலின்
நிழலில் மிதந்துகொண்டிருக்கிறது
கிளியின் சடலம்.

முக்கியமாக ஜூலி கவிதைகளைப் பற்றி நினைப்பதானால், கொஞ்சம் ஆழ்ந்த மனமும் ஆரத்தழுவும் விழிகளும் நிச்சயம் தேவையாகின்றன. ஒவ்வொரு ஜூலி கவிதையும் நம்மை ஒவ்வொரு உலகுக்கு ஒசை படாமல் துரத்தி மெல்ல தனிமையில் விட்டு சிரிக்கிறது பின்புறம் நின்று. ஓர் ஆழ்ந்த தருணத்தில் சொற்கள் மிகுந்திருக்கும் நாளில் மெலிதாய் விரல்களோடலாம் ஜூலி கவிதைகளில். நட்சத்திரா வண்ணவண்ணமாய் மனம் முழுக்க நிறைந்து விடுகிறாள், ஜுலியுடன் கைகோர்க்கும் நம் விரல் பிடித்து அவளுன் நடக்கத் துவங்கி விடுகிறாள், அவள் கடந்து வந்த பாதையை மிக மெலிதான குரலில் நம் காதுகளில் வெகு இயல்பாக பாட ஆரம்பித்து விடுகிறாள்.

நட்சத்திராவின் வானம்

கைகள் நிறைய பூக்களுடன் நின்றிருந்தாள்
நட்சத்திரா.
கதவு திறந்து உள் அழைத்தேன்.
சிறு சிறு பூக்களால் அறை நிரப்பினாள்.
பின்,
விரல்கோர்த்துக்கொண்டு
மடியிலமர்ந்து கதைகள் ரசித்தாள்.
அனைத்து கதைகளிலும் பறவைகளே
அவளை அதிகம் கவர்ந்தன.
விடைபெறும் தருணம்
அவளிடம் வானமும்
என்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன.

பொம்மையாதல் கவிதையை விட தெளிவாக ஒரு குழந்தையின் வனப்பு மிகுந்த வாழ்வை எப்படி சொல்லி விட முடியும்? அச்சு அசல் நம் கண் முன் வந்து போகின்றனர் தெய்வங்கள் சில நொடிகள், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை அப்படியே நிலைத்து விடுகிறது நம் கண்களில். இன்னும் பல கவிதைகள் - மார்புக்காலம், கதை சொல்லி, முத்தவடிவினள், சாவுக்குருவி, நதிக்கரையில் நீந்தும் சிறுமீன், அழகன் கழுதை சரித்திரம் என பல கவிதைகள், மனம் முழுக்க நம் எண்ணச்சிறகுகளை வெகு உயரத்தில் படபடக்க வைக்கின்றன.

புத்தகத்தில் சில தவறுகளையும் காண நேர்ந்தது, ஒன்று நடுநிலைத்திணை என்னும் கவிதை இரு முறை ஆறாவதாக ஒரு முறையும் இருபத்தி ஐந்தாக ஒரு முறையும் பதிவாகி இருக்கிறது. அடுத்து இருபத்தி ஆறாம் கவிதைக்கும் இருபத்தி ஏழாம் கவிதைக்கும் தொடர்ச்சி விடும்படியாக அமைந்துள்ளது. இது எனக்கு மட்டும் வந்த ஒரு புத்தகத்திலா? இல்லை முதல் பதிப்பு அனைத்து புத்தகங்களும் இப்படியா என நான் அறியேன்.

படித்து முடித்த தருணத்தில் யதார்த்தத்தை மீறிய ஒரு சுகம் முழுக்க முழுக்க நனைத்திருப்பதை உணராமல் இருக்க முடிவதில்லை. மிக அருமையான தொகுதியை படித்த ஒரு திருப்தியுடன் மூடி வைக்கலாம் புத்தகத்தை. இலகுவாய் பிரிந்து விட இயலாது புனையப்பட்ட உலகங்கள். மெல்ல மெல்ல அந்த உலகங்களுக்குள் சிறிது காலம் இருக்க வேண்டி வரும், இருப்பின் சுகம் உணர அவ்வுலகங்களில் படபடக்கத் துவங்கி விடும் கற்பனை சிறகுகள்.

(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து பதிப்பகம் – முதல் பதிப்பு டிசம்பர் 2012 - ரூ.60)

[தேனு [ thenuthen@gmail.com]]

0 comments: