Showing posts with label உலகசினிமா. Show all posts
Showing posts with label உலகசினிமா. Show all posts

Monday, October 06, 2014

மெட்ராஸ் என்றொரு திரைக்காவியம்:


தமிழ் சினிமா பார்ப்பதில்லை உலக சினிமா மட்டுமே விருப்பம் என்று சொல்லித்திரிந்தவர்கள் அனைவரின் முகத்திலும் கடநத இரண்டு மூன்று வருடங்களாக வெளிவரும் பல தமிழ் திரைபடங்கள் கரியை பூசி வருகின்றன. பல திரைப்படங்களை இது அந்த கொரிய திரைப்படத்தின் நகல், அது ஜப்பானிய திரைப்படத்தின் நகல் என்றெல்லாம் பல செய்திகள் வந்தாலும் மிகச்சிறப்பான Genuine தமிழ் திரைப்படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. ஒரு கதாநாயகன் அவனை சுற்றும் நாயகி,ஆறு பாடல்கள், எட்டு சண்டைகள், பன்ச் டயலாக் என்கிற மசாலா எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. மிக நுட்பமான திரைக்கதைகள்,வித்தியாசமான கதைக்களம்,ஆழமான திரையாக்கம் என்று தமிழ் திரையுலகம் வெகு வேகமாக தன் வேர்களையும் கிளகளையும் பரவலாக பரப்பியபடி முன்னகர்கிறது. உதாரணமாக பல திரைப்படங்களை சொல்லமுடியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,வழக்கு எண்,தெகிடி,ஜிகர்தண்டா,பொறியாளன்,ஜீவா,மெட்ராஸ் என்று நீளும் பட்டியல்(பட்டியல் மிகப்பெரியது என்பதால், நினைவிலிருந்து சில மட்டும் இங்கே) சொல்லி முடியாதது. இது ஆரண்ய காண்டம் என்னும் மிக அற்புதமான திரைப்படத்தின் தொடக்கமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நேற்று மெட்ராஸ் திரைப்படத்தை பார்த்தேன். கதை என்ன என்று யாரேனும் கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். சுவர். அவ்வளவுதான். ஆனால் அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்,அரசியல்,நட்பு,காதல்,துரோகம்,பாசமென அனைத்தையும் திரைக்கதையாக்கிய விதத்திற்காகவே இப்படம் அதிகம் என்னை கவர்ந்தது. சென்னையில் வாழ்கின்ற பலருக்குமே சென்னையின் வடபகுதியை பற்றி அதிகம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வடசென்னையின் நுட்பமான பல விஷயங்களை மிகச் சிறப்பாக திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களது மொழியை அனைத்து நடிகர்களும் அவ்வளவு இயல்பாக பேச வைத்திருப்பதிலிருந்தே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்.
கார்த்திக்கு பருத்திவீரனுக்கு பிறகு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள படம் இது. காளியாகவே மாறியிருக்கிறார். வியாசர்பாடியின் காலனி ஒன்றில் நடக்கும் கதை. படம் பார்க்கும் அனைவரையும் வியாசர்பாடியின் அந்த காலனிக்குள் ஒருவராக மாற்றி விடுகிறார் இயக்குனர்.

ஒரு சுவருக்காக மோதிக்கொள்ளும் இரண்டு கோஷ்டிகள். அதனைச் சுற்றி சுழல்கின்ற கதை. அன்பாக நடித்திருக்கும் கலையரசனுக்கு இது மிகப்பெரிய மைல்கல். அன்பு  போலொரு நண்பன் நமக்கு கிடைக்கமாட்டானா என்கிற ஏக்கம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும். காதலுடன் தன் மனைவியிடம் உருகுவதாகட்டும், நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளிடம் பேசுவதாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். இடைவேளை நெருங்கும் நேரம் அன்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பதைபதைக்க துவங்கிவிடுகிறது மனம்.  அன்பும் மேரியும் தோன்றும் சில நிமிட காட்சிகளில் அவர்கள் இடையேயான இணக்கத்தை ஒரு நிஜ தம்பதி போல உணர்த்திவிடுகிறார்கள்.மேரியாக நடித்திருக்கும் நடிகையின் கண்களில் காதல்,சோகம்,கோபம் என்று அனைத்தையும் காண முடிகிறது. எப்படி இவ்வளவு சிறப்பான கதைநாயகர்களை இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்பதே மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.

வடசென்னையின் தமிழில் கார்த்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். நண்பனுக்காக மோதுவதிலும்,காதலிக்காக உருகுவதிலும் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகி ஒரு வடசென்னை காலனி பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். உள்ளுக்குள் காதலித்துக்கொண்டு வெளிக்காண்பிக்காமல் காளியை கிண்டலடிப்பதும் பின் காளின் சோகம் தீர்க்க அவனுடனிருப்பதிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால்தான் தெரியும்.

படத்தில் படீரென்று சிரிக்க வைக்க ஜானி என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. இவ்வளவு 'அசால்டாக' ஒரு கனமான ரோலை செய்திருக்கிறார் ஜானியாக நடித்தவர். ஆங்கிலத்தில் பேசுவதாகட்டும் சரியான சமயத்தில் கூர்மையான வசனங்களை உதிர்பதாகட்டும் சபாஷ் ஜானி.  

மேலும் குறிப்பிடத்தகுந்தவை, காளியின் அம்மா,எப்போதும் சோபாவில் உட்கார்ந்திருக்கும் அப்பா, அந்த பாட்டி,மாரி,அவ்வப்போது நடனமிட்டுச்செல்லும் நடன கோஷ்டி, வடசென்னையின் தமிழை அனைவருமே சிறப்பாக பேசியிருப்பது,கானா பாலாவின் நெஞ்சைத்தொடும் பாடல்,சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, முரளியின் ஒளிப்பதிவு, வடசென்னையின் காலனியை நேரில் கொண்டுவந்த செட்கள், எடிட்டிங் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அட்டைக்கத்தி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடித்திருக்கும் சிக்ஸர் மெட்ராஸ். ஒடுக்கப்பட்ட குரலின் ஒலியை சுவரொன்றின் மூலமாக திரைச்சித்திரமாக்கியதற்கு அழுத்தமான கைகுலுக்கல். இரண்டாவது படத்திலும் ஜெயித்து தமிழின் மிக முக்கியமான இயக்குனராக மிளிர்கிறார், வாழ்த்துகள்.

குறைகள் என்று ஏதுமில்லையா எனில், இரண்டாம்பாதியில் திரைக்கதையில் சில இடங்களில் காணப்படும் தொய்வு. சுவர் பற்றிய படம்தான் எனினும் முப்பது நாப்பது தடவைக்கு மேல் சுவரைக்காட்டுவது சலிப்பை தரத்தான் செய்கிறது.
மற்றபடி மெட்ராஸ் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வில் இடம்பிடித்திருக்கும் படங்களில் மிக முக்கியமானது.

-நிலாரசிகன்.

Sunday, February 06, 2011

மிஷ்கின் என்றொரு கலைஞன்[யுத்தம் செய் - விமர்சனம்]




The color of paradise  படத்தை நினைத்தவுடன் ஞாபகத்திற்கு வருவது கண்பார்வையற்ற அந்தச் சிறுவனா அல்லது படம் நெடுக ஒலிக்கும் அந்த மரங்கொத்தியின் சன்னமான சப்தமா? மரங்கொத்தி எனில் யுத்தம் செய் திரைப்படம் உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமரும். ஏனெனில் மேலோட்டமாக சில திரைப்படங்களை நாம் அணுக முடியாது. மேலும்,திரைப்படம் என்பதே பொழுதுபோக்குவதற்குத்தான் என்கிற நம் பொதுப்புத்தியை கழற்றி எறிந்துவிட்டு வேறோர் அனுபவத்தை வேறோர் உலகை நமக்குணர்த்தும் திரைப்படங்களை தேட வேண்டும்.
அவ்வகையில் நாம் கண்டிராத களங்களை கொண்ட படங்கள் ஏராளம். பொதுவாக அதனை உலகத்திரைப்படம் என்கிறோம்.

மிஷ்கின். சந்தேகமின்றி தமிழுக்கு கிடைத்த  அற்புதமான கலைஞன். சித்திரம் பேசுதடியில் ஒரு சிறிய சித்திரத்தை தீட்டதுவங்கி நந்தலாலா வரை நீண்டதொரு சித்திரப்பயணத்தில் வெற்றிகரமாக தமிழ்சினிமாவிற்கு புது வர்ணம் பூசியவர். ஒரு காட்சியெங்கும் விரவிக்கிடங்கும் உரையாடல்களை
கச்சிதமான காட்சிப்படுத்துதல் வழியே படம் பார்ப்பவர்களை இணைத்துவிடும் ஆற்றல் கொண்டவர். விதவிதமான கேமிரா கோணங்களில் வெகு சாதாரண காட்சிகளை உலகத்தரமிக்க காட்சிகளாக்கும் வல்லமை படைத்தவர். இதைத்தான் நாங்கள் அந்த உலகசினிமாவில் பார்த்தோமே இந்தக்காட்சியைத்தான் நாற்பது வருடங்களுக்கு முன்பே ஜப்பானியத்திரைப்படமொன்றில் எடுத்திருக்கிறார்களே என்று ஒவ்வொரு காட்சியையும் ஏளனம் செய்யும் அதிமேதாவி உலகசினிமா ரசிகர்களை பற்றி இவர் கவலைப்படவில்லை என்பதை நந்தலாலா சொல்லிற்று. தமிழனுக்கு இது புதுசு. நான் கற்றதை,என்னைக் கவர்ந்ததை தமிழில் தமிழ் ரசிகனுக்கு தருகிறேன் என்றவர்.

யுத்தம் செய். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை பார்க்கும் எவராலும் யூகிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. வெட்டப்பட்ட கைகள் அட்டைப்பெட்டியில் பொது இடங்களில் காணப்படுகின்றன. சென்னை நகரை உலுக்கும் இந்த கேஸ், தங்கையை தொலைத்த சிபிசிஐடி அதிகாரி சேரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. எந்தவொரு தடயமுமின்றி எதற்கிந்த கைகள் வெட்டப்பட்டு பொதுவெளியில் வைக்கப்படுகின்றன என்ற புதிரை மெல்ல மெல்ல சேரன் அவிழ்க்க முயல்கிறார். இவ்வளவுதான் கதை. ஆனால் இதனை சொன்ன விதத்தில்தான் தனித்து நிற்கிறார் இயக்குனர். படத்தில் அதிகம் கவர்ந்த காட்சிகளை முதலில் பகிர்ந்துகொள்கிறேன்.

கவர்ந்த காட்சிகள்/நுணுக்கங்கள்:
  1. ஒரு பிணவறையில் வெகு இயல்பாய் கோர்ட்டால் தலையை போர்த்திக்கொண்டு உறங்கும் டாக்டர்
  2. முதல் காட்சி. சேரனின் தங்கை ஆட்டோவிற்கு ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்டு அலைபேசியில் தகவல் தெரிவிக்க நகர்கையில் பின்னால் செல்லும் ஆட்டோ ட்ரைவர் மீண்டும் ஆட்டோவுக்குள் திரும்பாதது. Frameல் ஆட்டோவை மட்டும் சில நொடிகள் காண்பிப்பது.
  3. சுரங்கப்பாதை. தூரத்தில் ஒரு பெண் பெருக்கிக்கொண்டிருக்கிறாள். ஏதோவொன்று அவள் பார்வையில் பட மெல்ல நகர்ந்து முன்னால் வருகிறாள். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் நோக்கி நகர்கிறது கேமிரா. அங்கே கனமான மெளனத்துடன் கிடக்கிறது அட்டைப்பெட்டி. அதிலிருந்து ஆரம்பிக்கும் பின்னணி இசை.
  4. ஒல்லிப்பிச்சானின் முகமூடி.
  5. அசோக் நகர் போலீஸ் ஸ்டேசன் அதிகாரியின் சில்லறைத்தனம்.
  6. சிகரெட்/தேநீர் கேட்கும் அதிகாரியின் கோபமும் இயலாமையும்
  7. இடைவேளையில் வரும் மிக அற்புதமான சண்டைக்காட்சி. (தியேட்டரில் விசில் பறந்தது)
  8. பிணவறை டாக்டரின் மிகச்சிறந்த நடிப்பு
  9. கறுப்புக்கண்ணாடி தாத்தா
  10. வயிற்றில் குத்திய கத்தியை பிடுங்கி எறிந்துவிட்டு தீர்க்கமான பார்வையுடனும் வெறியுடனும் கொலைகாரனை நோக்கி நகரும் பெண்
  11. தன் மகனின் கைகளை பார்த்து கதறி அழுகின்ற குண்டுப்பெண்.
  12. தூக்கு போட்டு இறந்த பெண்ணை தலைசாய்த்து பார்க்கும் தாயின் பார்வையை காட்சியாக்கியிருப்பது
  13. பிணத்தை பார்த்துவிட்டு விரைத்து அமர்ந்திருக்கும் சிறுவன்.
  14. சேரன்,ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை,அசோக்நகர் காவல் அதிகாரி,பிணவறை டாக்டர்,மாணிக்கவிநாயகம் - நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
  15. ஒளிப்பதிவு,இசை,திரைக்கதை - அற்புதம்
  16. உணர மட்டுமே முடிந்த இன்னும் நூறு காட்சிகள் :)
படத்தின் குறைகள்:
  1. துணை கமிஷ்னர் சுடப்பட்டு வீழ்கிறார். அவரது பெண்ணிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வருகிறது "Daddy calling".!!!
  2. சேரனிடம் கொடுக்கப்படும் உதவி அதிகாரிகளின் Profileஐ குப்பையில் வீசுவது. எந்த அதிகாரி இப்படி வீசுவார்?
  3. அஞ்சாதே படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிகள். குறிப்பாக அந்த முழுக்கை கறுப்பு பனியன் அணிந்த ஒல்லிப்பிச்சான்.
  4. ஒய்.ஜி.மகேந்திரன் ஏ.சி வழியே தப்பிக்க அவரே தச்சு வேலை செய்கிறார். மருத்துவருக்கு எப்படி தெரிந்தது இத்தொழில்?
  5. குடும்பம் புள்ளைகுட்டி சகிதமாக இத்திரைப்படத்தை பார்க்க முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ரத்தம்,வன்புணர்ச்சி,பிணம்,டார்ச்சர் வகையறாக்கள்.
  6. படத்திற்கு ஒட்டாத குத்துப்பாடல்.பாடலுக்குள் ஒட்டாத சாரு :)
படத்தின் "தைரியங்கள்":
  1. BDSM  வகை செக்ஸ் டார்ச்சரை காண்பித்திருக்கும்  முதல்  தமிழ்ப்படம் இதுவாகத்தானிருக்கும்.
  2. பிணவறை காட்சிகள்
  3. நகவெட்டியிலிருக்கும் கத்தி. அதன் மூலம் ரவுடியின் நெஞ்சில் எவ்வித முகபாவங்களுமின்றி சேரன் குத்திக்கொண்டே நடக்கும் காட்சி. சபாஷ்!
  4. சடாரென்று உள்ளிருந்து வெளிவரும் குவாலிஸ் சேரனின் காருடன் மோதும் காட்சி. அதுவரை அமைதியாக சுற்றிக்கொண்டிருக்கவைத்து,காக்கவைத்து சரட்டென்று வெளிக்கொண்டுவந்திருக்கும் இயக்கம்.

ஒரு நாவலாசிரியன் தன் பாத்திரப்படைப்பை உருவாக்கும் அக்கறையுடனும்,நேர்த்தியுடனும்,நுணுக்கமுடனும் மிஷ்கின் யுத்தம் செய் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

யுத்தம் செய்:
குழந்தைகளை தவிர்த்துவிட்டு அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். வாழ்த்துகள் மிஷ்கின்.

-நிலாரசிகன்.

Tuesday, December 21, 2010

Welcome to Dongmakgol - திரைவிமர்சனம்




கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள்.

இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியபடி நிற்கிறார்கள். எதற்காக இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்பதை உணர முடியாத கிராம மக்கள் தங்கள் சோள தோட்டத்தை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மழை பொழியத்துவங்குகிறது அப்போதும் அசையாமல் குறிபார்த்தபடி நிற்கிறார்கள் வீரர்கள். இவர்களது கையிலிருக்கும் எறிகுண்டை உருளைக்கிழங்காக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்கள் அப்பாவி கிராம மக்கள். அப்போது வீரனொருவனின் கையிலிருந்து தவறி விழும் குண்டு அவர்களது தானியக்கிடங்கை அழிக்கிறது. செய்வதறியாது நிற்கும் அவர்களுக்காக தங்களது ஆயுதங்களை துறந்து சோளம் பயிரிடுவதிலும் தானியக்கிடங்கை நிரப்புவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க விமானியை தேடி வருகின்ற அமெரிக்க வீரர்கள் கிராமத்தினரிடம் முறைகேடாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள். அந்த அப்பாவி மனநலம் குன்றிய இளம்பெண் கொல்லப்படுகிறாள். வெகுண்டெழும் கொரிய வீரர்கள் அமெரிக்க வீரர்களை கொன்றுவிடுகிறார்கள். அதில் ஒருவன் இன்னும் சில மணித்துளிகளில் இந்த இடத்தை அமெரிக்க ராணுவம் அழித்துவிடு இருப்பதாக கூறுகிறான். வெளியுலக வாசம்கூட அறியாத கிராமத்தை அமெரிக்க போர்விமானங்களில் குண்டுமழையிலிருந்து ஐந்து வட/தென்கொரிய வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை திரையில் பாருங்கள்.

ஒரு மிகச்சிறந்த படத்தை பார்த்த நிறைவை இப்படம் நமக்குத் தருகிறது. மனதை அள்ளிக்கொண்டு போகும் மலையும் மலைசார்ந்த கிராமமும் அங்கே சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகளும்,பெண்ணுருவில் மனநலம் குன்றியதை கூட அறியாத பட்டாம்பூச்சியொன்றும்,துறுதுறு விழிகளுடன் வலம் வரும் சிறுவனும்,கூன்விழுந்த மூதாட்டியும்,வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வாழ்வுமுறையும் இத்திரைப்படத்தோடு நம்மை ஒன்றிவிட செய்கிறது.

மனம் கவர்ந்த காட்சிகள் சில:

1. கொட்டும் மழையில் வான் பார்த்து மழைத்துளிகளை பருகும் இளம்பெண்.
2. தனித்துவிடப்பட்ட அப்பெண்ணிற்கு தன்னிடமிருக்கும் சாக்லெட்டை தந்துவிட்டு கண்ணிரூடன் திரும்பும் ராணுவ வீரன்.
3. பரம எதிரியாக இருந்த தென்/வட கொரிய வீரர்கள் நண்பர்களாக மாறும் காட்சி.
4.தென்கொரிய வீரர்களில் ஒருவன் வடகொரிய வீரனிடம் உன்னை அண்ணன் என்று அழைக்கலாமா என்று கேட்பது.
5.பன்றிக்கறியை தென்/வட/அமெரிக்க விமானி ஒன்றாக உண்ணும் இரவு
6.வழுக்கும் மலைச்சரிவில் சிறுவர்களைப்போல் அனைவரும் சறுக்கி விளையாடும் காட்சி.
7.பட்டாம்பூச்சிகள் மொத்தமாக விண்ணோக்கி எழும்பி பறக்கும் இரவு
8.குண்டுமழை பொழியும் விமானங்களை வலிநிரம்பிய புன்னகையுடன் எதிர்கொள்ளும் வீரர்கள்
9.அமெரிக்க விமானியை பிரிய முடியாமல் அழுகின்ற அந்த குண்டு சிறுவனின் கண்ணீர்
10.தானியக்கிடங்கில் விழுந்து வெடித்த குண்டால் வானமெங்கும் சிதறிய சோளம் பாப்க்கார்னாக மலர்ந்து விழுவதும் அதனை ரசித்து இளம்பெண் குதிப்பதும்
11.தென்கொரிய வீரர்களின் தலைவன் தன் தலைமையை வடகொரிய வீரனிடம் விட்டுக்கொடுக்கும் இடம்.
12.குபீர் சிரிப்பை வரவழைக்கும் கிராம மக்களின் வெகுளித்தனம்.
13.மனம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கும் அந்த இளம்பெண்ணின் நடிப்பு.
14. படத்தின் இசை

சொல்லிக்கொண்டே போகலாம். யார் பெரியவன் என்கிற திமிர்த்தனத்தின் மீது  மிகக்கடுமையான விமர்சனங்களை வெகு இயல்பாய் தெளித்துச்செல்கிறது இப்படம். யாருமற்ற இரவொன்றின் தனிமையில் சன்னல் வழியே கசிகின்ற மென்குளிரில் கொஞ்சம் தேநீருடன் ரசிக்கவேண்டிய படம். அவசியம் பாருங்கள்.

வெளியான வருடம்: 2005
படத்தின் நீளம்: 133 நிமிடங்கள்
இயக்குனர்: பார்க் வாங் ஹியுன்
இணையத்தில் பார்க்க: http://www.youtube.com/watch?v=EyPCMajTnJQ&feature=related
- நிலாரசிகன்.

Tuesday, February 16, 2010

Outsourced - திரைவிமர்சனம்



வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கென தரப்படும் பயிற்சியில் மிக முக்கியமானது Cross Culture Program என்றழைக்கப்படும் எதிர்கலாச்சாரத்தை பற்றிய பயிற்சி. குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்நத நாடுகளுக்கு செல்லும் இந்திய பணியாளன் கவனத்தில் கொள்ளவேண்டிய பலவிஷயங்கள் இந்தப் பயிற்சியில் கற்றுத்தரப்படும். இந்த பயிற்சியில் ஈடுபடாமல் அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நான் சியாட்டலில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. அமெரிக்காவில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் கழித்து என் டீமிற்கு புதியதாக ஒருவனை இந்தியாவிலிருந்து அனுப்பியது என் நிறுவனம். CC Program ல் கலந்துகொள்ளாமல் அவசரமாக அமெரிக்கா வந்துவிட்டான். ஒரு நாள்  அவனுடன் நண்பர்கள் சிலர் STAPLES கடைக்கு சென்றோம். பேனாக்களும் பென்சிலும் வாங்கிவிட்டு நேராக கல்லாவிலிருந்த வெள்ளைக்காரியிடம் "ரப்பர் எங்கே இருக்கிறது" என்று கேட்க அவள் இங்கே நாங்கள் ரப்பர் விற்பதில்லை என்று சொல்லியிருக்கிறாள். பென்சில்,ஸ்கேல் எல்லாம் விற்கிறீர்கள் ஏன் ரப்பர் விற்பதில்லை என்று இவன் அப்பாவித்தனமாய் கேட்க "பென்சிலுக்கும் ரப்பருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டுச் சிரித்திருக்கிறாள். குழம்பியவன் என்னிடம் வந்தபோது நானும் நண்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். ரப்பர் என்றால் அமெரிக்காவில் ஆணுறை என்று பொருள். இன்றும் அவனுடைய செல்லப்பெயர் ரப்பர்தான்.

இந்தத் திரைப்படமும் எதிர்கலாச்சாரத்தை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டதுதான். அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் ஒரு அமெரிக்க பணியாளன் சந்திக்கும் இடர்கள்,சவால்கள்,மனிதர்கள் பற்றியது. டாட் என்கிற அமெரிக்க பணியாளனை அவனது நிறுவனம் இந்தியாவிலிருக்கும் கிளைக்கு அனுப்புகிறது.
இந்தியாவில் இருப்பது அவர்களுடைய கால்சென் டர். இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க உச்சரிப்பை பற்றியும் கஸ்டமர்களிடம் பேசும் முறை பற்றியும் விவரிப்பது டாட்டின் வேலை.

Toddஐ Toad என்று உச்சரிப்பதில் ஆரம்பிக்கும் நகைச்சுவை பல இடங்களில் வாய்விட்டு நம்மை சிரிக்க வைக்கிறது. டாக்ஸி என்று நினைத்து ஒரு ஆட்டோக்காரனிடம் ஏமாறுவதும்,ஓடுகின்ற ரயிலில் டாட் ஏறுவதும் சிறுவனொருவன் ரயிலில் உட்கார இடம் தந்துவிட்டு டோடின் மடியிலேயே உட்கார்ந்துகொள்வதும் வெடிச்சிரிப்பை வர வைக்கும் காட்சிகள். காராபுரி என்கிற சிற்றூரில் இருக்கும் கால்சென்டருக்கு டோட் பயிற்சியாளராக வருகிறார். அங்கே வேலை செய்யும் ஆஷா என்ற பெண்ணுடன் இணக்கம் ஏற்பட்டு உறவில் முடிகிறது. அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை திரையில் காண்க.

படத்தின் + :

டோடாக நடித்திருக்கும் நடிகரின் முக பாவங்கள் பெரிதும் கவர்கின்ற்ன. கலாச்சார வேற்றுமையின்போது எதிர்கொள்ளும் சமாளிப்புகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய டாய்லெட்டில் பேப்பர் இல்லாமல் இடதுகையை பார்க்கும் போதும் டோடின் நடிப்பு அற்புதம். இந்திய கால்சென்டரின் மேலாளராக வருபவரின் நடிப்பு.ஒளிப்பதிவில் ஒரு சேரியை கண்முன் கொண்டுவந்திருக்கும் விதம் மிக அருமை.

படத்தில் தென்பட்ட குப்பைகள்:

1.கதாநாயகி தேர்வு
2.இசை (இம்சை)
3.இந்தியாவில் எந்த கால்சென்டரில் மாடு கட்டியிருக்கிறார்கள்?
4.தனி அறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் நம் இந்திய கதாநாயகி காமலீலைகளில் விளையாடுகிறார். காமசூத்திரம் நூலை படித்துவிட்டு இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்கிறார். எல்லாம் முடிந்தவுடன் இதை நாங்கள் "ஹாலிடே இன் கோவா" என்போம் என்கிறார். இத்திரைப்படம் பார்க்கும் மேலைநாட்டவர்கள் இந்தியபெண்கள் அனைவரும் இப்படித்தான் என்கிற முடிவுக்கு வரும் அபாயம் இருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்கருவை சொதப்பலான திரைக்கதையால் வீணடித்திருக்கிறார்கள். கதாநாயகனின் அப்பாவித்தனமான நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்.

வெளியான ஆண்டு: 2006
மொழி: ஆங்கிலம்
நீளம்: 103 நிமிடங்கள்

-நிலாரசிகன்.

Friday, September 25, 2009

கிகுஜிரோ - திரைவிமர்சனம்



----------------------------
இயக்குனர்: டகேசி கிட்டானோ
வெளியான ஆண்டு: 1999
நாடு : ஜப்பான்
----------------------------

யாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில
மணித்துளிகளேனும் கழிக்க வேண்டுமா? கிகுஜிரோ திரைப்படம் பாருங்கள்.

பாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்
வீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.

பாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.
உன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.

அண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்கி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.
கிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.
அதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்
மாசோ திரும்பி நின்று அழுகிறான்.

அவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து "நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.

இருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்
அனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.

பெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.
அதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

எதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். சிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்லிய சோகமாய் மனதில் நிலைக்கிறது.
பெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)

படம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!

-நிலாரசிகன்.

Monday, May 18, 2009

இட்சி த கில்லர்



வன்மமும் குரூரமும் நிறைந்தது மனித மனம். பிற உயிர்களை வதைத்து மகிழ்கின்ற மனமில்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை.தட்டானின் சிறகுகளை பிய்த்து ஆனந்தப்படாத பால்யத்தை நாம் கண்டதில்லையா? டிரெயின் பூச்சிகளை தேடித்தேடி மண்ணோடு மண்ணாக மிதித்து கொன்றதில்லையா? ஓணானை பார்த்த‌வுட‌ன் க‌ல்லெறிய‌த்தானே தோன்றுகிற‌து இன்ன‌மும்? பிற‌ உயிர்க‌ளை வ‌தைப்ப‌தை பாவ‌ம் என்று உண‌ரும் முன்ன‌ரே நாம் வ‌தைப‌டுதலின் ஆன‌ந்த‌த்தை அனுப‌வித்திருக்கிறோம். ஓராயிரம் ஹிட்ல‌ர்களும்,இடி அமீன்களும் திரிந்துகொண்டிருக்கும் இட‌ம் ந‌ம் ம‌ன‌ம். காலத்தின் மாற்றத்திலும்,படித்து தெளிந்த பண்பாலும் நமக்குள்ளிருக்கும் மிருகபுத்தி உறங்கிவிடுகிறது. சிலருக்கு அது உறங்கமறுப்பதில்லை.ராவணன் வாழ்ந்த பூமியில் இப்போது ஒருவனுக்கு அந்த மிருகபுத்தி தாண்டவமாடிக்கொண்டிருப்பதை போல்.

இட்சி த கில்லர் எனும் இந்த ஜப்பானிய திரைப்படத்தை பற்றி இருவரிகள் மட்டும் சொல்லத்தோன்றுகிறது.

1.குரூர மனதின் வெளிப்பாடு
2.வன்மத்தின் உச்சம்

உறைய வைத்த காட்சி:

ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தி புணர்ச்சியில் ஈடுபடுகிறான் ஒருவன். முகமெல்லாம் வீங்கி இரத்தம் வழிய‌
மற்றொருவனிடம் புலம்புகிறாள் அவள். கவலைப்படாதே அவனை நான் கொல்கிறேன் என்கிறான் இவன்(இட்சி). சொன்னதைப்போலவே அவனைக் கொன்றும் விடுகிறான். நன்றியோடு பார்க்கிறாள் அவள். "இனி உன்னை நான் அடிக்கலாம்" என்கிறான் இட்சி. மனதெங்கும் நிறைந்திருக்கும் குரூரத்திற்கு இந்த ஒரு காட்சி போதும்.


இளகிய மனம் கொண்டவர்கள் இந்தப்படத்தை தவிர்த்தல் நலம். "என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோம்" எனும் தைரியசாலிகள் பார்த்துவிடல் நலம். :)


சுட்டி:

http://www.youtube.com/watch?feature=related&v=wgrvIVSHhI8