Thursday, May 09, 2013

அப்புக்குட்டனின் முதலாம் நாவல்


1.அப்புக்குட்டனின் முதலாம் நாவல்
மெல்லிரவை வெதுவெதுக்கும் 
அணைப்பொன்றில் கழித்துவிட தீர்மானிக்கிறான்
அப்புக்குட்டன்.
குடுகுடுவென்று விரைந்து அருகிலிருக்கும்
கோவில் வாசலில் ஆறு முழம் மல்லிகைப்பூக்கள்
வாங்கி தன் படுக்கையெங்கும் உதிர்க்கிறான்.
ஜவ்வாது வாசத்தை ஒத்திருக்கும் பெளடரை
உடலெங்கும் சரித்துக்கொண்டு
ஒருவித மினுமினுப்புடன் படுக்கை அறைக்குள்
நுழைகிறான்.
வெண்பனியினால் மூடப்பட்டிருக்கும்
செவ்வந்திப் பூக்களை கடந்து அவள்
நடந்துவரும் பேரழகை
கதவில் சாய்ந்துகொண்டே
மூன்று புகைப்படங்களில் இலகுவாக
காட்சிப்படுத்துகிறான்.
மார்க்கரெட் தன் அறைக்குள் எவ்வித
தயக்கமுமின்றி நுழைவதை புருவம் உயர
வியக்கிறான்.
கனத்த அமைதியுடன் படுக்கையில்
படுத்திருப்பவளிடம் ஏதேதோ பேசுகிறான்.
மறுமொழியாத மார்க்கரெட்டின் முதுகை
தடவிக்கொண்டே அவளது காதுகளில் மெல்ல
"ப்ரிய நாய்க்குட்டியே, உன் எஜமானி எப்பொழுது
வருவாள்? என்று வினவுகிறான்.
ஒரு முறை வாலாட்டிவிட்டு படுக்கையில்
உறங்க துவங்குகிறது மார்க்கரெட்.
"நாயுடன் ஓர் இரவு" என்றொரு நாவல்
எழுதிவிடலாம் எனும் பேருன்னத முடிவை
அன்றுதான் அப்பாவி அப்புக்குட்டன் எடுத்ததாக
நாவலின் கடைசி வரியில் தடித்த எழுத்துக்களில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.


2.

ஓர் அழைப்பை நீங்கள் நிராகரிக்கும்போது
போலியாய் சிரித்து தேநீர் அருந்துகிறீர்கள்.
புணர்வின் உச்சம் முடித்து சுழலும் மின்விசிறியை
ரதித்தபடி மூச்சுவாங்குகிறீர்கள்.
கால்மேல் கால்போட்டபடி தொலைகாட்சியில்
விளம்பரம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
முகநூலில் காலை உண்ட இட்லியின் மெதுமெதுப்பை
சிலாகித்து நாற்பது வரிகள் எழுதுகிறீர்கள்.
இல்லாத வெய்யிலின் வெம்மையை
குளிர்ந்த அறைக்குள்ளிருந்து உணர்ந்து சிலிர்க்கிறீர்கள்.
அறைக்குள்ளிருக்கும்
சிறு செடியின் நுனி இலையை கிள்ளி எறிகிறீர்கள்.
எவருக்கும் புரியாத மொழியின் பாடலொன்றை
சப்தமாக முணுமுணுக்கிறீர்கள்.
உலகின் கவலைகளுக்கெல்லாம் நீங்களே
முகவரி என்பதுபோல் முகத்தை தொங்கவிடுகிறீர்கள்.
யாரும் அறிந்துவிடாமல்
ஒரு நடிகனின் சட்டையில்லா மார்பை
வெறிக்கிறீர்கள்.
உங்களுக்கான உலகில் நிர்வாணியாய் அல்லது
உங்களது நான்காவது காதலுடன் சயனிக்கிறீர்கள்.
அனைத்திற்கும் நேரம் ஒதுக்கும் நீங்கள்
ஓர் ஆத்ம நேசிப்பின் அழைப்பை
வெகு இலகுவாக நிராகரித்து மற்றொருவரின்
அழைப்புக்காக காத்திருக்க துவங்குகிறீர்கள்.
மதுக்குவளையின் அழைப்பை ஏற்றுக்கொள்ள
நடுநடுங்கியபடி நீள்கின்றன நிராகரிப்பின்
வலியுணர்ந்த விரல்கள்.

-நிலாரசிகன்.

0 comments: