புனைவின் நிசியில் மிதக்குமொரு அறை
- தமிழச்சி தங்கப்பாண்டியன்.
"கவிஞன் ஒரு குட்டிக் கடவுள் அல்லர் - சாதாரண மக்களின் ஒரு பகுதியாகக் கவிஞன் இருப்பதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு சகாப்தத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த தன்மகோன்னத நிலையை மீண்டும் கவிதைக்குத் தர இயலும்.
சமகாலத்தில் தன்னுடன் வாழும் மக்களின் மிகவும் மறக்கப்பட்ட, மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்குத் தன்னைப் புரிய வைப்பதற்கு இயலவில்லை என்றால், அந்த இயலாமையே ஒருகவிஞனின் எதிரி. இது எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்"
- பாப்லோ நெரூடா.
கருத்தாக்கங்களை முன்வைத்துக் கவிதைகளைப் படைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானது கருத்தாக்கங்களை முன்வைத்து ஒரு கவிதைப் பிரதியைஅணுகக் கூடாது என்பதுவும். விருப்பு, வெறுப்பு, பாரபட்சமற்று ஒரு கவிதைப் பிரதியை அணுகுதல் பெருஞ் சுகம். தன் இருப்பை மொழிவழி உயிர்ப்பித்துக் கொள்ளும் ஒரு கவி மனதைக்கல்மிஷங்கள், முன்முடிவுகள், எடைக்கற்கள், தராசு முட்களற்று அணுகுதலே ஒரு கவிதைப் பிரதிக்கு அளிக்கப்படுகின்ற குறைந்தபட்ச நேர்மையான அரவணைப்பும், அதிகபட்ச மா¢யாதையும்.அதன் பின் அவரவர் வானமும், உள்ளங்கையும், அவரவர்க்கு!
"தப்பிப் பிழைத்திருப்பவனான நான்" எனும் கவிதையில் ப்ரக்ட்,
வெறுக்கின்ற 'தகுதியிலிருந்து' தப்பித்து இருத்தலே ஒரு கவிதைத் தொகுப்பிற்கான சரியான தகுதியென நான் நம்புகிறேன். அவ்வகையில் நிலாரசிகனின், மீன்கள் துள்ளும் நிசி எனக்குசமுத்திரத்தின் உப்பையும், ஈரத்தையும், வியப்பையும் காட்டிய மீன்; நிசப்தமும், காதலும், காமமும், துரோகமும், பசியும், கயமையும் கலந்த நிசியைக் காட்டிய நட்சத்திரம்; மெளனத்தின்நாவுகளையும், கொண்டாட்டத்தின் நடனத்தையும் உணர்த்திய உயிர் ததும்புமொரு இசைக்கருவி.
சிறுமி, நாய்க்குட்டி, வண்ணத்துப் பூச்சி, மீன்கள், கடல், நதி, தவளை, காற்று, இறகு, பூனை, மான்குட்டி, சர்ப்பக்குட்டிகள், முத்தம், பொம்மை, தட்டான், பறவைக் கூட்டங்கள், அணில்குட்டிஇவர்களோடு ஜூலியுமிருக்கின்ற நிலாரசிகனின் உலகத்திற்குள் நானும் பிரவேசிக்கின்றேன் - நகுலனின்,
"பூப்பிலிருந்து
பென்ஸிலின் பிறந்தது
பிரகிருதி வலை பின்னுகின்றது"
எனும் வா¢கள் பின் தொடர !
ஒரு கவிமனதைத் தொடர்கின்ற, உணர்கின்ற, உறைகின்ற, உயிர்க்கின்ற, பகிர்கின்ற கோழியிறகாய் மெல்லப் புரண்டு,இதில் சமயத்தில் களிக்கிறேன் - சமயங்களில் அழுகிறேன்.உலகத்திற்கும் எனக்குமுள்ள தொடர்பின் ஒரு சிறு நாணைச் சுண்டுகிற ஒரு வரிபோதும் எனக்கு - மேதமை அவசியமில்லை. இருந்தாலும் புதுமைப்பித்தன், "கவிதையின் மேதமையை அறிய ஒருவரி போதும். ஒழுக்கமோ, தர்மமோ அல்லது மோட்சமோ இவற்றிற்காக எழுதப்படும் கவிதை, கவிதையாகாது" என்பது போல,
இத்தொகுப்பில் எனக்குப் பல தெறிப்புக்கள் - ஆன்மாவின் நாணைச் சுண்டியிழுத்தன.
"ஒவ்வொரு சித்திரங்களின் வழியே
தன் அழகின்மையைக் கடந்து செல்கிறாள்"
"சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்"
"ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை"
"அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்"
"கவிதையின் ஒவ்வொரு சொல்லின்
அடியிலும் மீன்கள் மறைந்திருந்தன
ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்கும்
இடையே கடல் அலையின்றிக் கிடந்தது"
"முதுமைக்கும் பால்யத்திற்குமிடையே
கதையாய் வி¡¢ந்திருக்கிறது
இந்த இரவு"
"கடலுக்கு மரணிக்காத மீனொன்று
காகமொன்றின் அலகில் துடிதுடித்தது"
"பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடி நின்றனர் கடவுள்கள்"
....
அப்போது தான் கவனித்தேன்
வெயிலின் பின்புறத்தை
நிழலின் முன்புறத்திலிருந்து
மேற்சொன்னவை சில சோறு பதம். ஆயின், இவை மட்டுமே ஒரு அனுபவத்தின் கிளர்வை, பொதுத்துவமானதொரு உணர்வு கடத்தலை மொழியின் வழி நிகழ்த்திவிட முடியுமா? வெறும்தெறிப்புக்களின் பாய்மரத்தில் படகோட்டுபவன் கவிஞன் அல்லவே - அவன் ஆழ முக்குளிப்பவன் - தான் தேர்ந்தவற்றை வாசகனுக்கும், சக மனிதனுக்கும் கைநிறைய அள்ளித் தருவதில்வாழ்பவனும், மரணிப்பவனும் அல்லவா?
மேலும், ஒரு கவிமனதின் வெளிப்பாடு என்பது - மொழியின் மூலம் - அதன் நேர்த்தியான அழகியல், நடை, உத்திகள் - இவற்றையெல்லாம் மீறி பிரச்சாரமின்றி வெளிப்படுத்துகின்றஅரசியல், சகமனிதனுக்கான குரல், சகபாலினத்தின் மீதான நேர்மையான பார்வை, கரிசனம், தன் வேரும், மண்ணும் உலகமயமாதல், வாழ்தலும் பிழைத்தலுமான இருமைகள், சுயமறிதல்,ஒப்புக்கொடுத்தல், எனப் பல்வேறு அடுக்குகள் கொண்டதல்லவா? அவ்வகையில், "தமிழ்க் கவிதையென்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியதரவர்க்கப் புத்திஜீவிகளின் மெளனவாசிப்பிற்கான அநுபூதியாக மட்டுமே, சூக்குமத்தின் சூட்சுமமாக மட்டுமே சுருங்கிக் கிடப்பதில் எமக்குச் சம்மதமில்லை" எனும் வே.மு. பொதியவெற்பனின் குரல் எனக்கு மிக முக்கியமானது.அதனை அடியொற்றிப் பார்க்கையில், நிலாரசிகனின் கவி உலகும், அது முன்வைக்கின்ற அனுபவங்களும் மிக முக்கியமானவை, நேர்மையானவை.
பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றதொரு பயணத்தைச் சென்ற நூற்றாண்டின் நிழற் பார்வையுடனும், இந்த நூற்றாண்டின் நம்பகமில்லாத்தன்மையுடனும் பார்த்துக் கொண்டே, அடுத்தநூற்றாண்டிற்குள் அவனது அனுமதியின்றி தள்ளப்படுகின்ற ஒரு எளிய மனிதனின் குரல் தான் இத் தொகுப்பின் தொனி. தன் புலன் உணர்வுகள் உணர்ந்தும், உய்த்தும், சேர்த்தவற்றை சொல்லும்,அகம் அரற்றுமொரு கூர்மையான கேவலும், நடைமுறை நிசர்சனத்தை ஒரு சிறிய அவதானிப்புடன் கையறு நிலையில் கடந்து செல்லும் அவலமும் தான் இக்கவிதைகளின் அடையாளம். சகபாலினமான பெண்ணைக் காதலுடனும், பு¡¢தலுடனும், காத்திருப்புடனும், பார்க்கின்ற பார்வையும், வனத்தை, பொம்மைகளை, கடவுள்களைத் தொலைத்த, பிளாஸ்டிக் பைகளில் கட்டிகுப்பைகளில் அன்பைக் கொட்டும் நகரத்தைச் சுட்டும் வலியே இவற்றின் மெளனக் குறிப்புக்கள்.
நிலாரசிகனது மொழி, உரை நடைக்கும், வசனத்திற்குமான இடைப்பட்ட ஒன்று. கொஞ்சம் தட்டையானது தான் - ஆனால் இக்குறையைத் தட்டிச் சீர்படுத்தி விடுகின்ற ஒரு சித்திரவிவரித்தலுக்கரியது அவரது லாவகம். கவிதைக்கு அழகியலை விட உயிர்த் தன்மையே முக்கியமென்கின்ற நவீன மனதின் கருதுகோளின் படி நிலாரசிகனது பல கவிதைகள் என்னை முற்றாகக்கவர்ந்தவை என்றாலும் கீழ்க் குறிப்பிட்ட 'முதல்துளி' எனக்குத் தந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த தரிசனம் - a vision indeed. இதுவே நிலாரசிகனை இன்றைய நவீனக் கவிதைப் பரப்பில் மிகமுக்கியமானதொரு ஆளுமையாக நிலை நிறுத்துகின்றது.
முதல் துளி
சைக்களின் முன் இருக்கையிலிருந்து
கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
வருகிறாள் சிறுமி.
மரங்களின் மொழியை அவளுடன்
பயணிக்கும் தட்டான்களுக்குக் கற்றுத் தருகின்றாள்.
அவளிடம் கற்ற மொழியுடன்
மரத்தின் இலையில் அமர்கின்ற
தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
நகரும் வெயில் மரமொழியை
கற்றுக் கொண்டு மறைந்து போகிறது.
கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
முளைக்கும் மரக்கன்று
சிறுமியின் மொழியில் தலையசைத்து
தலையசைத்துப் பேசத் துவங்குகிறது
பாலையின் முதல் துளியிடம்.
அற்புதமானதொரு அனுபவத்தையும் அதன் தொடர்பான விழிப்புணர்வு, மிகிழ்வு, நம்பிக்கை - முதலியவற்றையும் எனக்களித்த கவிதை இது. மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ளஉறவை, அதன் பிரபஞ்சப் பிணைப்பை, தன் நிலத்தில் காலூன்றி நின்று உலகம் முழுமைக்குமான உண்மை ஒன்றைக் கடத்தும் கண்ணியான கவிதையாய் மிகச் சிறந்த பதிவு இது!
"கவிதையின் தன்மை என்ன என்பதையும், கவிதையின் செயற்பங்கு என்ன என்பதையும், பிரஸ்தாபிக்காமல், கவிதையின் அழகியல் குறித்த 'எந்த விவாதமும்' கடந்து செல்ல முடியாது"என்கின்ற பிரம்மராஜன், "கவிதை பு¡¢யப்படும் விதம், கவிதையின் மொழி, கவிதை வாசக மனதிற்குள் இயங்கும் விதம், அர்த்தச் சாத்யப்பாடுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டால்தான்அக்கருத்துத் தொகுதிகள் நவீன கவிதையின் அழகியலாக ஆகும் தகுதி வாய்ந்தவையாவது சாத்யம்" என்றும் சுட்டுகின்றார்.
மேற்சொன்ன நான்கு "touchstone method" (to borrow from T.S. Eliot) இன் படி, நிலாரசிகனின் கவிதைகளை வரையறுக்கையில், ஒரு வாசகனை அவரது தட்டையான வாக்கிய அமைப்புக்களின்முற்றுகள் அயர்ச்சியுறச் செய்தாலும்,
உதாரணம் :
[இருக்கிறாள் / செல்கிறாள் / பார்க்கிறாள்
நீந்துகிறோம் / கையசைக்கின்றன / செல்கிறார்கள்
தொடர்கிறோம் / பார்க்கின்றன
ஏற்படுத்தியிருந்தது / பொறிக்கப்பட்டிருந்தது
தயார்படுத்துகிறேன் / ஓடுகிறேன்]
அவன் அதனுள் நுழையத் தடையற்று அவனை ஈர்ப்பது கவிஞனின் “என்ன சகா!” எனும் சமநிலைப்படுத்துதலும், தோழமையும்தான்.
உள்ளூறப் பிணைக்கின்ற அனுபவமெனும் சூட்சுமத்தின் கயிற்றை இந்த கவிக்காரகன் சமத்காரமாக அறிந்திருக்கிறான். தானறியாததொரு கழைக் கூத்தாடியின் கலை நேர்த்தியோடு, மனச்சித்திரங்களாக அவை வரையப்படுவதே இவனது கவிதைகள் புரியப்படும் விதம். உருவகங்களும், குறிப்பான்களும், படிமங்களும் ஊடுபாவும் புனைவின் திரிசங்கு நிலமே இவனது மொழி.
மெதுவாக அருகமர்ந்து தோள் தொடுகிறதே என்று திரும்பினால் திடீரென்று அந்தரத்திலும், குபீரென்று அடி ஆழத்திலும் தள்ளுகின்ற உணர்வு நிலையைக் கிளறுவதே இக்கவிதைகள்இயங்குகின்ற விதம். சிந்தனையும், உணர்வும் சரிசமமான நேர்த்தியுடன் புணர்கின்ற இவரது கவிதைகளின் அர்த்தச் சாத்தியப்பாடுகள் அவரவர் மனவெளி, புரிதல் பாற்பட்டது என்றாலும், எனக்குஇவை - தத்துவங்களின் அதிகாரமற்று, அடிப்படையானதொரு நேயத்தை, புகார்களற்று வாழ்தலுக்கான தேடலை, குறைந்தபட்ச இருத்தலுக்கானதொரு கைப்பிடிப்பைக் கோருகின்ற சாத்தியங்கள்உடையவை. ஆகவே வாசகனுக்கு மிக முக்கியமானவை - எனக்கு நெருக்கமானவை.
"நெருடாவின் சமயமாகத் தெருக்களே திகழ்ந்ததென்று" அவர் குறித்த நினைவஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. மக்களின் கவிஞனான நெரூடா, "புத்தகங்களுக்கு அந்தந்த சிந்தனைப்போக்குகள் என அடையாள முத்திரைகள் இடப்படுவதை நான் ரசிப்பதில்லை. எந்தச் சிந்தனைப் போக்குகளையும் வகைப்பாடுகளையும் சாராத புத்தகங்கள் வாழ்க்கையைப் போலவே எனக்குவேண்டும்" என்பார். நிலாரசிகனது கவிதைகளும் எந்தவித அடையாள முத்திரைகளுககுள்ளும் சிக்காதவை. வாழ்க்கையைப் புனைவின் தூ¡¢கை கொண்டு வரைந்தாலும், இரத்தத்தின் வண்ணமும்,நிணத்தின் மணமும் கொண்டவை. கொஞ்சம் குறியீடுகள், உருவகங்களின் மேலேறும் 'பாண்டி விளையாட்டை' நாம் அறிந்து கொண்டோம் என்றால், அவற்றின் ஆகாய நீலமும், அடர் வனத்தின்பச்சயமும், பள்ளத்தாக்கின் மெளனமும், பெருங்கடலின் வசீகரமும் நமக்கு வசப்படலாம்.
கவிஞனது சமூகச் சுயமும், தன் சுயமும் இடைவெளியின்றி ஒன்றிப் போகின்ற கவி ஆளுமை சாத்தியப் படுமா என்கிற கேள்வி எப்போதும் என்னை ஈர்க்கின்றதொரு மாயக்கண்ணாடி.சமகாலத்தில் நவீனக் கலை பரப்பில் பயணிக்கின்ற பெரும்பான்மையினர் எத்தகைய நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்பதனை 'கலை ஓர் அனுபவம்' என்ற நூலில் ஜான் டியூவி,
"தொழில் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கலைஞன் இயந்திரத்தன்மையுடன் பெருவா¡¢ உற்பத்தி செய்யும் வேலையைச் செய்ய முடியாது... தங்கள் படைப்பைத், தங்களைத்தனித்துவப்படுத்திக் காட்டும் 'சுய வெளிப்பாடாகக்' கையாளுவதைத் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடமையாகக் கலைஞர்கள் காண்கிறார்கள் / கொண்டுள்ளனர். பொருளாதாரச் சக்திகளின்போக்கிற்கேற்ப வளைந்து கொடுக்காமல் இருப்பதற்காகக் கோட்டித்தனம் செய்தாவது தங்கள் தனித்தன்மையை மிகைப்படுத்திக்காட்டும் எண்ணம் அவர்களுக்குக் கட்டாயமாக ஏற்படுகின்றது"என்கிறார்.
கவிதை வெளிக்கும் இது பொருந்தும் - தனித்தன்மையை நிரூபிக்கின்ற கோட்டித்தனம், அஷ்டாவாதானம், சிரசாசனம், கோட்பாடு, பிராணாயாமம் இவை எதுவுமின்றி இயல்பாகக் கால்நீட்டி, கொஞ்சம் வெள்ளந்தியான புனைவின் அணைப்பில் வாசகனோடு உறவு கொள்கின்றன நிலாரசிகனது கவிதைகள். தன்னைக் கொஞ்சம் பிட்டுக் கொடுத்துப், பகிர்ந்து கொண்டு,வாசகனிடமிருந்து பகிர்தலைத் தவிர வேறெதனையும் கோராத பொக்கை வாய்ச் சிரிப்புடன் நம்மை எதிர் கொள்கின்ற இந்த மீன்கள் துள்ளும் நிசி - தூண்டில்கள் வேண்டாததது! உள்ளங்கையளவுஉப்பு நீர் கேட்கும் அதற்கு நம் ஒரு சொட்டுக் கண்ணீரோ அல்லது சிட்டிகை புன்னகையோ போதும்!
"கவிதை என்பது வார்த்தைகளிலான அமைப்பா என்ன?" -
"இல்லை" என்பதை எனக்கு மீண்டுமொரு முறை உணர்த்திய நிலாரசிகனது இந்தப் படைப்பு பகிரப் பட வேண்டியது - பேசப்படவேண்டியது! வாழ்தலின் வெளிப்பாடுகளான இவை சின்னஞ்சிறு அகல்போல் ஒளிர்பவை - தீப்பிழம்புகளிலிருந்து தனித்துத் தொ¢பவை.
ஆம் -
"சாம்ராஜ்யங்களிலிருந்து வெகு தொலைவாய்
எத்தனை ஸ்திரமாக நிற்கிறது அறை!”
நிலாரசிகனது மீன்களுடனும், நமது கடலுடனும்
புனைவின் நிசியில்,
எத்தனை ஸ்திரமாக நிற்கிறது இந்த அறை!
நன்றி: உயிர் எழுத்து - மே'13
0 comments:
Post a Comment