1.யாருமற்ற வீட்டினுள்ளிருந்து ஒலிக்கும் குரல்
எதைச் சொன்னாலும் செய்கின்ற
அடிமை ஒன்றை நான் வளர்க்கிறேன்.
வன்மம் கொந்தளிக்கும் நாளில்
அடிமையின் கன்னங்கள் இரண்டிலும்
அடித்து துன்புறுத்துகிறேன்.
வழிகின்ற கண்ணீரை துடைத்துக்கொண்டு
மீண்டும் அடிவாங்க தயாராகிறது அடிமை.
துவண்டு வீடுவரும் நாளில்
கால்கள் பிடித்துவிட்டு அருகில் அமர்ந்திருக்கும்.
இதயத்தின் நான்கு அறைகளிலும் முட்கள்
சுமந்து திரும்பும் நாளில்
தன் மடியில் கிடத்தி தலைகோதிவிடும்.
சில நேரம் சயனிக்கவும்
எப்போதும் உடனிருக்கவும் அதற்கு
விதிக்கப்பட்டிருக்கிறது.
நாய்க்கு கொடுக்கப்படும் ரொட்டித்துண்டை
பெரும் ஆவலுடன் அது பார்த்துக்கொண்டிருப்பதை
கவனித்த நாட்கள் அதிகம்.
கட்டிலுக்கு அடியில் நைய்ந்த பாயில்
உறங்கும் அதன் முகம் எப்போதும்
தகதகவென்றிருக்கும்.
எதைச் சொன்னாலும் செய்கின்ற
அடிமை ஒன்றை நான் வளர்க்கிறேன்.
கண்ணாடியில் மட்டுமே தெரியும்
அந்த அடிமைக்கு பெயர்கூட இல்லை.
2.நதிவதை படலம்
நெழிந்தோடும் நதியொன்றின்
வாலைப்பிடித்திழுத்துக்கொண்டு அந்தத் தீவுக்குள்
நுழைந்தேன்.
எறும்புகள் இரண்டு துளைக்குள்ளிருந்து
வெளியே எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும்
உள்ளே புகுந்துகொண்டன.
நதி என் கைகளிலிருந்து விடுபட முடியாமல்
துடிதுடித்துக்கொண்டிருந்தது.
பச்சைக்கடல் செய்வதறியாது கைகட்டி
தலைகவிழ்ந்து நின்றுகொண்டிருந்தது.
நீண்டு வளர்ந்த ராட்சத மரத்தில் நதியை
கட்டிப்போட்டுவிட்டு கரும்பானத்தை
குடித்து தீர்த்தேன்.
கண்களில் துவங்கிய கருஞ்சிவப்பு உடலெங்கும்
பரவி, துவண்டிருந்த மிருகத்தை எழுப்பிவிட்டது.
கண்களில் வழிகின்ற பயத்துடன் மரத்தின் பின்
ஒண்டியிருந்த நதியை இழுத்துவந்து
கடற்கரையில் தள்ளியது மிருகம்.
துவண்டிருந்த நதி மெல்ல மிருகத்தின்
கால்கள் பற்றி எழ முயன்று விழுந்தது.
கணங்கள் சில கடந்தபின்..................... .
அழுத விழிகளுடன்
தீராவாதையுடன்
கடலின் மடுவில் பாலருந்திக்கொண்டிருந்தது
நதி.
மிருக உருவிலிருந்து இவ்வுலகிற்குள்
நுழைகையில் உடம்பை இறுக்கிச் சுற்றிக்கொண்டிருந்தன
சிறு சிறு முள்ளுடல் நதிக்குட்டிகள்.
3. ஜூலி, மற்றும் சில கனவுகள்
மிகச்சிறிய கூடை அது.
அதற்குள்
ஐந்து கனவுகள்
தரையில் விழுந்த மீனைப்போல்
துள்ளிக்கொண்டிருந்தன.
வெற்றிக்கனவின் கை கால்களை வெட்டி
எடுத்தவள்
லட்சியக்கனவின் தலை கொய்து
மகிழ்ச்சிக்கனவின் நாசியை அறுத்தெடுத்து
வாழ்க்கைக்கனவின் மேல் உமிழ்ந்தாள்.
காமக்கனவை கூடையில் சுமந்துகொண்டு
தன் அறைக்கதவை படாரென்று மூடிக்கொண்டாள்.
முப்பது நிமிடங்களை காலம் விழுங்கிய பின்
கதவு திறந்தவள்
தன் வீட்டின் எதிரே ஓடுகின்ற
சாக்கடையில் காமக்கனவை எறிந்துவிட்டு
அலைபேசியில் தன் இரண்டாம் காதலுடன்
உரையாட துவங்கினாள்.
நீச்சல் அறியாத காமக்கனவையும் அங்கம் இழந்த
பிற கனவுகளையும் கடலில் கொண்டு
சேர்த்ததது.
கனவுகளால் நிரம்பித் தளும்பும்
கடலின் அலைகளை சர்ப்பக் கால்களால்
மிதித்துக்கொண்டே அலை பேசுகிறாள் ஜூலி.
மிகச்சிறிய கடல் அது.
-நிலாரசிகன்.
3 comments:
அனைத்தும் அருமை... முக்கியமாக முதல் கவிதை மிகவும்...
nallaayirukku
vaazhthukal nila.
Arumaiyana pathivugal
Post a Comment