(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)
பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்
நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...
எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!
எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!
எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!
கல்லூரித்தாயே!
உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.
உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..
கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....
இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!
அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!
என் ஜன்னல்த்தோழனே!
நலமா நீ?
எங்கே என் மரத்தோழன்?
கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?
தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?
நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.
இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...
இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!
பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.
இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.
உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.
இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.
இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!
இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?
பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.
-தொடரும்....
Monday, September 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தங்களது இந்த வார்த்தைகள் என்னை என் கல்லூரிப் பருவத்திற்கு அழைத்து சென்று விட்டது.
"இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்." இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். என் பட்டாம்பூச்சிக் காலத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
கவிதைகளுடன்,
நிலா.
உங்களுடன் எங்களையும் அந்த மனநிலைக்கு அழைத்துச்சென்று விட்டீர்கள் :))
உங்கள் எழுத்திற்கு வலிமை அதிகம்.. அதன் வசியத்தில் கட்டுப்பட்டவர்களுள் நானும் உண்டு. உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள் :D
கவிதையாய் வாழ்ந்த நாட்கள்...
மறுபடியும் அந்த மழையில்
மனசு நனைய செய்தது
உங்கள் கவிதை.
நன்றி :)
எழுத்துகளில் கண்ணீர் வரும் என்பதற்கு உங்கள் கவிதை சாட்சி
- அன்புடன் அமைதிப்ரியன்
" meendum yennudaiya kalluri natkal thirumba kidaikatha ? yena aenga vaithu vitteergal nilaraseegan"
Snegamudan,
Nirandhari
Coimbatore
Post a Comment