Monday, September 22, 2008

குழந்தைக் கவிதைகள்


1.குழந்தையின் பசுமாடு

இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.


2. கடவுளுக்கும் அப்பால்

இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

3.தனிமொழி

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

9 comments:

said...

So simple but very powerful.. Nice thought..

Keep going..

Satheesh.J

said...

ரெண்டாவது ரொம்ப நல்லா இருக்கு...

said...

அட. அழகான கவிதைகள்..
:)

said...

//குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதென அவளுக்குச் சொல்ல
எழுந்தேன் பிரகாரத்தைவிட்டு.//

நச்சுன்னு இருக்கு..

said...

//வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்//

இவ்வரிகள் மிக அருமை.. வெகு அருமை..

said...

Koonalai irundhalum alagai thanirukiradhu Ooviya Pasu.... Romba pidichiruku indha varigal...

said...

வாழ்த்துக்கு நன்றி அன்பர்களே.

Anonymous said...

Really wounderful words and powerful Kavithai....

said...

unkal kavithaiyum kuzhanthaikal polave ........

azhaga irukku!!!

kavikkovin pommai kavithai ninaivukku varukirathu:)