1. இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய
நீர்சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே
ஒலித்த ஓலம்.
2. எதிர்படும் நபர்களிடம்
பூ விற்க முயன்றுகொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி.
சூரியக்கதிர்கள் மங்கிப்போன
கருக்கலில் வாடியவளாய்
கடற்கரை மணலில் கால்நீட்டி
அமர்ந்து கடல் பார்த்தாள்.
முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.
3. நாய்களின் குரைப்புச்சத்தம்
இரவின் மெளனத்தை
குலைத்துக்கொண்டிருந்த தருணத்தில்
உடலை மறைக்கவியலா
உடைகளணிந்த கன்னியொருத்தி
குப்பைத்தொட்டில் எதையோ
தேடிக்கொண்டிருந்தாள்.
இருளை சுமந்துகொண்டு
அவளை நெருங்கின
இரு நாய்கள்.
4. தனித்துவிடப்பட்ட இரவில்
நெருப்பை உமிழ்ந்து
கொண்டிருந்தது தனிமையின்
நாவுகள்.
நடுச்சாமத்தில் தட்டப்பட்டது
அறைக்கதவு.
விடியத்தொடங்கிய அதிகாலை,
தனிமையின் மீது
உமிழ்ந்துவிட்டு புரண்டு படுத்தேன்.
அக்டோபர் 2008 "வார்த்தை" இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்
Monday, October 06, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.
//
சூப்பர்...
"இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்"
இந்த துவக்கம், ஒரு நாவல் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நேரம் கிடைக்கும் போது குறுநாவல் எழுதிப்பாரேன்.
அட.. அருமையா இருக்கு நிலா ரசிகன்.. ஒவ்வொன்னும்..
//இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின்//
chattunu enga veedu ngaabakam vanthathu:)
//முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.//
ithu nalla karpanai....
//தனிமையின் மீது
உமிழ்ந்துவிட்டு//
ithu nallaayirukku!!
Post a Comment