வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நிற்கிறது என் மனசு. திசைகள் மறந்துவிட்ட கால்கள்
எங்கு செல்வதென்று புரியாமல் தவிக்கின்றன. முட்கள் நிறைந்த பாதையில் பூவொன்று என்னை வழிமறித்து
என்னை எடுத்துக்கொள் என்றது. இரண்டு கரங்களிலும் அப்பூவை ஏந்தி பாதங்களில் உதிரம் சிந்த வெகுதூரம்
கடந்து வந்தேன். முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.
இலைகளை உதிர்த்து நிற்கிறது ஒரு தனிமரம். நிழல்தேடி வந்த பாதங்கள் ஏமாந்து திரும்புகின்றன.
இரவின் கூரிய பற்களில் வடிகிறது என் தனிமையின் ரத்தம். கறுப்பு வெள்ளை பட்டாம்பூச்சியொன்றின் உதிர்ந்த
சிறகுகள் காற்றில் மிதக்கும் பின்னிரவில் எங்கோ ஒருத்தியின் சன்னமான அழுகுரலை காற்று இழுத்துச்செல்கிறது.
அவளும் அவனும் பரிமாறிக்கொண்ட நேசம் உருப்பெற்று ஓலமிட்டு வீதியில் அலைகிறது. நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை. எதிலும் லயிக்காத மனம் கட்டுகளை உடைத்து வேகமாய் ஓடத்துவங்குகிறது. கூகையின்
பார்வையில் பயந்து வீடு திரும்புகிறது மனம். எனக்குள் உருவாகிறது வெப்பநீருற்று. என்னை முழுவதுமாய் இழந்து
உடலிலிருந்து பிய்த்தெடுத்து வெளிக்குதிக்கிறேன். என்னுடலை நோக்கி ஒளிர்கிறதென் கண்கள்.
ஜீவனற்ற உடல் மண்ணில் வீழ்வதை வேடிக்கை பார்க்கிறேன். உடலற்ற உயிருடன் கைவீசி நடக்கிறேன் மனம்போன
போக்கில். காவிகள் வியப்புடன் என்னை பார்க்கின்றன. தாடிக்குள் புதைந்த முகத்துடன் உற்று நோக்குகின்றன சில கண்கள்.
வேகமாய் ஓடுகின்ற நதிக்குள் மெல்ல இறங்குகிறது என் உயிர். கடும்குளிர் நீரில் அமிழ்கிறது உயிரின் கடைசி மூச்சு.
யாருமற்ற இருண்ட வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நின்றுகொண்டிருக்கிறேன் உருவமற்று.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.
அருமையான வரிகள்.
வார்த்தைகளை உங்களால் எப்படி வரிகளாக மாற்றமுடிகிறது.
//புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.
//
அருமை தோழா...எங்கள் இதயமும் கனத்தது.
//நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை//அருமையான வரிகள்..நிலா சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் எல்லாம் பேருக்குத்தான், so dont be emotional...இன்னொரு உயிருக்கு ஏங்காமல் தன்னளவில் இருந்து கொள்ளுங்கள்...எல்லாம் சுலமாக இருக்கும்...
Excellent Nila...
Excellent one Nila...
Post a Comment