Monday, September 28, 2009

சொல்லடியில் மரணித்தவனின் குறிப்புகள்




ஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது. மனதின் விளிம்புச்சுவரில் அமர்ந்திருக்கும் சொற்கள் ஒவ்வொன்றாய் நமக்குள் குதித்தோடுகின்றன.எங்கிருந்து முளைத்தன இச்சொற்கள்? எதன் பரிணாமம் சொற்களாயின?
விடைகளற்ற இக்கேள்விகளுக்குள்ளும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தவொரு சொல்லும் நினைவில் மலராமல் ஒரு பொழுதேனும் வசிக்க முடிவதில்லை.

சொற்கள் அழகானவை. சொற்கள் ஆனந்தம் தருபவை. சொற்கள் அழவைப்பவை. நேற்றைய சொல் இன்று புதிதாகி வேறோர் அர்த்தம் தருகிறது.இன்றைய சொல் நேற்றைய நீட்சியாக முகிழ்கிறது. சொல்லப்படாத சொற்களும்,பழுதான சொற்களும்,உடைந்த சொற்களும் காற்றில் மிதந்தபடியே இருக்கின்றன. நமக்கு தேவையான கணத்தில் அவை
நம்மில் வந்து விழுகின்றன.சொற்களுக்கு முகமூடிகள் உண்டு.சொற்களுக்கு சுயமுண்டு. ஒரு சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அதன் உயிர்ப்பு நிலைபெறுகிறது.எழுதப்பட்டவுடன் சொற்கள் சரித்திரங்களாக மாறிவிடுகின்றன.


இலையில் ஊர்ந்து செல்லும் எறும்பின் படிமத்தை சொற்களே தீர்மானிக்கின்றன. சொற்களும் மரணமடைவதுண்டு.சொற்களுக்கும் உயிர்த்தெழுதல் சாத்தியப்படும்.கடவுளின் செவிக்குள் எண்ணற்ற சொற்கள் அனுப்பப்படுகின்றன.
அவை காற்றுப்படகில் கடவுள் நோக்கி விரைகின்றன.வெற்றுச்சொற்களால் சில நேரங்களில் புதிய கடவுளை மனிதனே படைத்தும்விடுகிறான்.

சொல்லின் பரிணாமம் எண்ணங்களாய் உருப்பெருகின்றன.பட்டாம்பூச்சி எனும் சொல் பிறந்தவுடன் மனத்திரையில் படபடக்கிறது உயிருள்ள பட்டாம்பூச்சி.

எதனால் இன்று என்னுள் ஊசலாடுகிறது ஒராயிரம் சொற்கள்?

சொன்னவள் நீ என்பதாலா?

மரணத்தை தொட்டுத்திரும்பியதே என்னுயிர் அந்த ஒருசொல் கேட்டு.
நிலவுக்கும் குளிரும் இவ்விரவில் உன்னை விட்டு நெடுந்தொலைவில் தனியனாய் சாலையில் நடந்துபோகிறேன். இத்தனை கனமா உன் மீதான
என் நேசம்? பெரும்சுமை கொண்ட கைவண்டியை தள்ளாடியபடி இழுத்துச் செல்லும் கிழவனின் தளர்ந்த நடையை ஒத்திருக்கிறது என் நடை.
என் ஹார்மோன் நதியில் நீந்தும் ஒற்றை மீன் உன் நினைவுகளின் கனம் தாளாமல் நடைபாதையோர மரமொன்றின் கீழ் அமர்கிறேன்.

உதிர்ந்துகிடக்கும் சருகுகளின் நடுவே மெளனித்திருக்கிறது ஓர் இலை. பச்சை நிறம் பழுப்பு நிறங்களின் நடுவே வீழ்ந்து கிடக்கிறது கவனிப்பாரற்று.
வீழ்ந்த அந்த ஓர் இலைக்காக வருந்துமா இம்மரம்? இலையும் என் நிலையில்தான் இருக்கிறதா? கனவொன்று மெல்ல என்முன் நிழலாடுகிறது.

கனவுவெளியில் கைகோர்த்து சிறுமி ஒருத்தியுடன் திரிகிறேன். அவளின் பாதங்கள் என் நெஞ்சில் தடம்பதித்தபோது சிறகு முளைத்த அவள் என்னை விட்டு தொலைதூரம் பறந்து செல்கிறாள். அவள் பிரிந்த நொடியில் என் கனவு தேசம் இருளடைந்து சூனியவெளியாக மாறி உடைந்த கண்ணாடி சில்லுகளாய் உதிர்ந்துவிடுகிறது.

உன்னிதழ் சிந்திய சொல் பேருருவம் பெற்று வளர்ந்துகொண்டே விண்ணோக்கி செல்கிறது.
பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறும் அச்சொல் மழைத்துளிகளாய் உருப்பெற்று என் தேகம் துளைக்கிறது. நான் வீழ்கிறேன்.
ஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.....

இவை எதுவும் அறியப்பெறாமல் அருந்ததி பார்க்க தயாராகிக்கொண்டிருக்கிறாய் நீ.

8 comments:

said...

சொற்கள் குறித்த உங்கள் சொற்களாலான வர்ணனைகள் சொக்கவைத்தன. குறிப்பாக "சொற்களும் மரணமடைவதுண்டு.சொற்களுக்கும் உயிர்த்தெழுதல் சாத்தியப்படும்". சிந்திக்க வைக்கின்றது.

said...

niraya idangal... arumaiyaa irukku!!

yaaraalum solla mudiyaatha sol ithu!!

yaarum ithuvarai sollaatha sol ithu!!

solla mudiyaathathaik kooda sollividum sol...nilavinudaiyathu:)

vazhthukal nila!!

said...

//இவை எதுவும் அறியப்பெறாமல் அருந்ததி பார்க்க தயாராகிக்கொண்டிருக்கிறாய் நீ.//

yeppadi ippadi azhaga mudicheenga:)

kalyaanamngirathai pakkaavaa solleetteenga!!!

sabaash nila!!

Kalaivani said...

மிகவும் அற்புதமான பதிவு நிலாரசிகன்....
சொற்களை சொற்களால் வர்ணித்துவிட்டீர்கள்... மிக அருமை...
சிந்திக்க தூண்டும் பதிவு.....

என்னோட சொல் கூட இப்போ ஊசல் ஆடிட்டுதான் இருக்கு....
உங்களை பாராட்டும் வழி தெரியாம....
எப்டிங்க உங்களால இவ்ளோ அழகா எழுத முடியுது....
simply u r great....

//எதனால் இன்று என்னுள் ஊசலாடுகிறது ஒராயிரம் சொற்கள்?

சொன்னவள் நீ என்பதாலா?//

//சொற்கள் அழகானவை. சொற்கள் ஆனந்தம் தருபவை. சொற்கள் அழவைப்பவை. நேற்றைய சொல் இன்று புதிதாகி வேறோர் அர்த்தம் தருகிறது.இன்றைய சொல் நேற்றைய நீட்சியாக முகிழ்கிறது. சொல்லப்படாத சொற்களும்,பழுதான சொற்களும்,உடைந்த சொற்களும் காற்றில் மிதந்தபடியே இருக்கின்றன. நமக்கு தேவையான கணத்தில் அவை
நம்மில் வந்து விழுகின்றன.சொற்களுக்கு முகமூடிகள் உண்டு.சொற்களுக்கு சுயமுண்டு. ஒரு சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அதன் உயிர்ப்பு நிலைபெறுகிறது.எழுதப்பட்டவுடன் சொற்கள் சரித்திரங்களாக மாறிவிடுகின்றன.//

உங்களது இந்த சொற்களும் சரித்திரங்கள்தான் நிலாரசிகன்..

said...

நன்றி ஜனா,

நன்றி இரசிகை,

நன்றி கலைவாணி.

said...

ENNAKU ROMBA PIDICHADU....எதனால் இன்று என்னுள் ஊசலாடுகிறது ஒராயிரம் சொற்கள்?சொன்னவள் நீ என்பதாலா? SUPERB........

said...

அருமையான பதிவு நிலா...உதிர்ந்துவிட்ட நட்சத்திரமானது ஒரு சொல். உதிரம் வேண்டி நிற்கிறது மற்றொரு சொல்! வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் மற்றொரு சொல்! ஆயிரமாயிரம் சொற்களை உச்சரிக்கும் உதடுகளுக்குத் தான் தெரியும் சொல்லின் ஆழங்கள்!!!மயில் இறகாய் மனதை சமன்படுத்தும் சொல் இருந்தால் சொல்லுங்கள்....

said...

மனதை உருக்கிய மகத்தான பதிவு. காதலால் அடையும்
ஏமாற்றம் போல் எந்தவொரு ஏமாற்றமும் இந்த கனம் கனப்பதில்லை.