[மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள் – 1]
முதல் பதினைந்து ஓவரில் ரன்களை குவிக்கும் முறையை 96ம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கையின் ஜெயசூர்யா வெளிப்படுத்தியபோது கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தியது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா அடித்த அடியில் அப்போதைய இங்கிலாந்தின் கேப்டன் ஆர்தட்டன் இப்படி ஆடலாமா என்று நடுவரிடமே முறையிட்டார். ஆனால் அதற்கு முன்பிருந்தே கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு ஜெயசூர்யாவின் ஆட்டம் இருவரை ஞாபகப்படுத்தியிருக்கும். ஒன்று நம் ஸ்ரீகாந்த். இரண்டாவது ஸ்ரீகாந்த்தின் மனம் கவர்ந்த அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்ஸ். ரிச்சர்ட்ஸ் ஜெயசூர்யா,ஸ்ரீகாந்த் போல துவக்க ஆட்டகாரர் இல்லை. நான்காவதாக இறங்குபவர்தான். ஆனால் பந்து என்பது அடிப்பதற்குத்தான் என்பதை உலகிற்கு தன் மட்டையால் தெரிவித்தவர் ரிச்சர்ட்ஸ்.
74ம் வருடம்தான் ரிச்சர்ட்ஸ் முதன் முதலாக களமிறங்கினார். அடுத்த வருடம் நடந்த முதலாவது ஒருநாள் உலகக்கோப்பை போட்டி பைனலில் ரிச்சர்ட்ஸ் தன் அபார பீல்டிங்கினால் மூன்று முக்கிய விக்கெட்டுகளை ரன் அவுட் ஆக்கினார். அதன்பிறகு 79ம் வருடம் நடந்த இரண்டாவது உலகக்கோப்பை போட்டி பைனலில் ஒருபக்கம் விக்கட் விழுந்தபோதும் அசராமல் நின்று 138 ரன்களை குவித்து தன் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார் ரிச்சர்ட்ஸ். ஒரு உலகக்கோப்பை பைனலில் அதிகபட்ச ரன்களாக 2003 வரை நீடித்தது ரிச்சர்ட்ஸின் இந்த அற்புதமான 138 ரன்கள்.
தன்னுடைய இளமைக்காலங்களில் அதிகமாக புட்பால் விளையாடியவர் ரிச்சர்ட்ஸ்.அதனால் இயல்பாகவே உடல்வலிமை பெற்றவர். மிட்விக்கட் திசையில் இவர் அடிக்கும் சிக்சர்களும் பவுண்டரிகளும் கண் இமைக்கும் நேரத்தில் எல்லைக்கோட்டை கடந்திருக்கும். பேட்ஸ்மேனின் தலையை நோக்கி வரும் பந்துகளை “ஹூக் ஷாட்” என்கிற முறையில் அற்புதமாக பவுண்டரிக்கு விரட்டுவதில் கைதேர்ந்தவர்.மிக உபயோகமான ஸ்பின்னர்.மிகச்சிறந்த பீல்டர்.இவரது தலைமையில் மே.இ.தீவுகள் அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேல் எதிரணியினர் சீண்டினால் சிறுத்தையாக மாறிவிடும் குணமுடையவர்.
உதாரணமாக, இங்கிலாந்தில் ஒரு கவுண்டி போட்டி. க்ரெக் தாமஸ் என்கிற பவுலர் பந்துவீசுகிறார். ரிச்சர்ட்ஸ் மட்டையை சுழற்ற பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுகிறது. தாமஸ் ரிச்சர்ட்ஸ் அருகில் வந்து “அது சிகப்பாக,உருண்டையாக ஐந்து அவுன்ஸ் கனமுடையது” என்று கடந்து சென்ற பந்தை பற்றி நக்கலாக சொல்கிறார். அடுத்த பந்தை வழக்கம்போல் மைதானத்திற்கு வெளியே அடிக்கிறார் ரிச்சர்ட்ஸ். பந்து காணாமல் போகிறது. தாமஸிடம் வந்தவர் “ க்ரெக்,உனக்குத்தெரியும் அது எப்படி இருக்குமென்று இப்போது போய் தேடு” என்கிறார். அதுதான் ரிச்சர்ட்ஸ்.
ஒரு நாள் போட்டியில் இருமுறை 180க்கும் மேல் குவித்தவர். அவர் ஓய்வு பெறும்போது அவரது ஒருநாள் போட்டிகளின் சராசரி 47. ஸ்ட்ரைக் ரேட் 90. இது இன்றைய சூப்பர்ஸ்டார்களிடம் கூட காணமுடியாதது. கிரிக்கெட்டின் பைபிள் என்று கருதப்படும் விஸ்டன் இவரை ஒருநாள் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக தேர்ந்தெடுத்து கவுரவித்தது. இங்கிலாந்து இவருக்கு Sir பட்டம் வழங்கியது. ஒரு நாள் போட்டிகள் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்தியவர். இங்கிலாந்துக்கு எதிராக 56 பந்துகளில் சதமடித்தது இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் “கிங்” என்று செல்லமாக அழைக்கப்படும் ரிச்சர்ட்ஸ் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். பவுன்சர்களாக டென்னிஸ் லில்லியும்,இம்ரான் கானும் வீசிய கடுமையான போட்டிகளிலும் கூட பிடிவாதமாக ஹெல்மட் அணியாமல் தன் மட்டையை மட்டுமே நம்பி விளையாடிய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் ரிச்சர்ட்ஸ்.
-நிலாரசிகன்.
10 comments:
நல்ல வருணனை. நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.. என்னைப் போன்ற கிரிக்கெட்டின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஒரு நல்ல feed. :)
ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் உலகின் நட்சத்திரம். நமது முந்தைய தலைமுறை சாதனையாளர் பற்றிய ஒரு செய்தி இந்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது வரவேற்கத்தக்கது.
எனது பாராட்டுக்கள்..
வேர்ல்ட் கப்பில் ஸ்ரீலங்காவுடன் ரிச்சர்ட்ஸ் ஆடிய ஆட்டத்தை மறக்க வே முடியாது நிலா..
நன்றி நா.போ.
நன்றி கேபிள்ஜி.ஆம் அந்த ஆட்டத்தில்தான் ஒருநாள் போட்டிகளிகளின் மிக அதிக ரன்களை வெ.இ. பெற்றது.
இந்த கிரிகெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு தெய்வ குழந்தை தோன்றி நம் அனைவரையும் சுண்டி இழுத்தது என்றால், அந்த குழந்தையின் சூறாவெளி தாத்தா சத்தியமாக நம் முடி சூடா மன்னன் "சர் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ்" என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஒரு முறை அவர் "ஜெப் தாம்சனின்" பௌன்செர் ஒன்றை, ஆப் சைடு சென்று, டீப் தர்ட்மென் நோக்கி அறைந்த அந்த சிக்ஸ், இந்த கிரிகெட் உலகம் இன்னும் மறக்கவில்லை. மிக மிக அற்புதமான வர்ணனை. எங்களை ரிச்சர்ட்ஸ் எனும் மாவீரன் வாழ்ந்த அந்த காலத்திற்கு கொண்டு சென்றதற்கு நன்றி நிலா.
நன்றி சதீஷ்
Talkin abt Richards i think abt something i read once...
"Once a english pace bowler bowled to Richards in a test match. Richards got beaten by the bowler twice and the bowler walked upto him and said "the cherry is 5.5oz in weight, spherical in shape and red in color" (referring to the ball). Next ball Richards promptly hit it outside the stadium, and said to the bowler...you know it better how it looks like go fetch it" - Watta man !!
இந்த கட்டுரையில் ரிச்சர்ட்ஸ் கதாநாயகன் என்பதால் 1983 உலக கோப்பையில் இந்தியாவை அலட்சியமாக கருதியது இடம் பெறவில்லை என நினைக்கிறேன்.
அப்புறம், நீனா குப்தா.... ரிச்சர்ட்ஸின் நெருடலான பக்கங்கள் ஏன் தவிர்க்கப் பட்டிருக்கிறது ? நிலாவின் ஒரு பக்கத்தை நாம் அறியமுடியாதாம். நிலா ரசிகன் அதை ரிச்சர்ட்ஸுக்கும் பொருத்தியிருக்கிறார்.
மெலட்டூரான்
மெலட்டூர் ஐயா,
83ல் இந்தியா 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தவுடன் இனி எப்படியும் வெற்றிதான் என அலட்சியமாக புதியதொரு
பி.எம்.டபிள்யூ காருக்கு ஆர்டர் கொடுத்தவர் மால்கம் மார்ஷல்.
மற்றபடி ரிச்சர்ட்ஸ் வழமைபோலவே விளையாடினார். கபில்தேவ் பிடித்த அதி அற்புத கேட்சால்தான் ஆட்டம் இழந்தார்.
நீனா குப்தா ரிச்சர்ட்ஸின் பெர்சனல். அதுக்கும் கிரிக்கெட் பற்றிய கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்பதால் தவிர்த்தேன்.
பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா :)
-நிலாரசிகன்.
oho...
ithu ellaame puthu news enakku...
Recalling the older moments will always enjoyable/...thanks for that ....
Post a Comment