Saturday, March 05, 2011

உயிர் எழுத்து கவிதைகள்

1.மீன்கள் துள்ளும் நிசி




கடலென விரிந்திருக்கும் அறைக்குள்

நுழைந்துவிட்டது மீனொன்று.

செந்நிற உடலைக் கொண்டிருக்கும்

அதன் பின்னால் மீனுடல் கொண்ட சொற்கள்

நீந்தியபடி வருகின்றன.

இக்காட்சியை நானொரு கவிதைக்குள்

கண்டெடுத்தேன்.

கவிதையின் ஒவ்வொரு சொல்லின்

அடியிலும் மீன்கள் மறைந்திருந்தன.

ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்கும்

இடையே கடல் அலையின்றி

கிடந்தது.

கவிதையின் கடைசி வரியை

படித்து முடித்தபோது

என் உடலிலிருந்து துள்ள

ஆரம்பித்தன 247 மீன்கள்.





2. திமிர் நாய்க்குட்டிகள்



தென்னை மரத்தடியில் இதுவரை

நான்கு நாய்க்குட்டிகள் புதைக்கபட்டிருக்கின்றன.

அவை எதனால் இறந்தன

என்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்

பின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.

நோய்மை முற்றிய நிலையிலும்,

சர்ப்பம் தீண்டியும்,

வாகனமொன்றின் அடியில்

தலை நசுங்கியும் இறந்து போயின

முதல் மூன்றும்.

துடிக்க துடிக்க வளர்ப்பு அணிலை

கொன்றதால் நான்காவது

நாய்க்குட்டியை கொன்று வீசியது

இயற்கை.

நான் அணில்.

நான் நாய்க்குட்டி.

நானே இயற்கை.

-நிலாரசிகன்.

[ இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்.]

5 comments:

said...

//என் உடலிலிருந்து துள்ள

ஆரம்பித்தன 247 மீன்கள்.//

துள்ளாவிட்டால் கிடைக்குமா எங்களுக்கு அருமையான படைப்புகள்:)?

said...

இரண்டு கவிதைகளும் மிக மிக அருமை.... :)

said...

இரண்டு கவிதைகளும் மிக மிக அருமை.... :)

நாய்க்குட்டியை கொன்று வீசியது
இயற்கை.

நானே இயற்கை.

மிக அருமை.... :)

said...

அருமை நிலா..

முதல் கவிதை ஆழ்ந்து வாசிக்கத் தான் புரியுமென நினைக்கிறேன்.. (நான் தமிழில் இன்னும் பயணப்பட வேண்டிய தூரம் அதிகமிருக்குமோ??!! ஹூம்...)

இரண்டாவது கவிதையின் கடைசி வரிகள் சூப்பர். :)

பாராட்டுகள் நிலா. :)

said...

நன்றி நண்பர்களே :)