Wednesday, August 24, 2011

கவிதைகள் இரண்டு

1.இறகின் கதை
மலைச்சரிவில் பூத்திருக்கும்
பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது
ஓர் இறகு.
வெளிமான்கள் மேயும் அம்மலையில்
மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி
மலையேறுகிறாள்.
பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை
பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள்.
தன் தளிர் விரல்களால் இறகை
வருடிக்கொடுக்கிறாள்.
சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக
உருப்பெறுகிறது.
யுவதியும் இறகும் வெகு தூரம்
பயணித்து
சிற்றோடைகள் நிறைந்த வனத்தில்
இறங்கி நடக்கிறார்கள்.
ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான்
வனத்தின் இளவரசன்.
தன் செல்லப்பறவையின் இறகை
திரும்பக்கேட்கிறான்.
இறகை கொடுத்தவுடன் தன்னுடலில்
சிறகுகள் வளர்வதை உணர்கிறாள்.
வனத்தின் இளவரசனை தன்
விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள்.
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள்
ஓர் இறகின் வடிவில்.

2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்


மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் நீந்துகின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.
-நிலாரசிகன்.

3 comments:

said...

vaanga nila...:)

vazhthukalum!

said...

kavithaiyil...

utporul puralai,aanaalum,
muthal kavithai pidichuruku..

said...

கவிதை அருமையாக இருந்தது.இணைய இதழ்(நவீன விருட்சம்,திண்ணை,கீற்று,பதிவுகள்,வார்ப்பு,வடக்குவாசல்) மற்றும் இலக்கிய சிற்றிதழ்களில் எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.உடுமலை.காம்ல் வாங்கலாம்.முகவரி udumalai.com/?prd=sathurangam&page=products&id=10029