1.சாவுக்குருவி
இரவைக் கிழித்து பாடிக்கொண்டிருக்கும்
பறவை என் தோள் மீது அமர்ந்திருக்கிறது.
அதன் நீண்ட பாடலை உனக்கு எப்படி
புரியவைப்பது என்பதை பற்றி நான் அறியவில்லை.
வட்ட வடிவ சிறு உலகை ஒத்த அதன் கண்கள்
மென்மையானவை.
இரவைக் கிழிக்கும் அதன் குரலின் பேரானந்தம்
உன்னால் உணர முடியாதது.
கருநீல நிறத்தில் தலை துவட்டும் உயர்ந்த
தென்னை மரத்தில் நாங்கள் இப்போதிருக்கிறோம்.
காற்றில் அசையும் மரத்தில்
இடமும் வலமுமாக அசைந்து அசைந்து
இசையாகி வீழ்கிறோம்.
அதிகாலை எனைத் தேடி வந்த நீ
ஆந்தை அடித்து இறந்தவன் என்கிறாய்
என் இசையுடல் மீதேறி.
2. தீரா பசி
உக்கிரமானதொரு யுத்தத்தை
முதல் முறையாக நிகழ்த்தினான்.
கிழிந்த மேகங்களாய் சிதறிக்கிடக்கும் குருதியின்மேல்
நடனமிடும் துறவிகளை பழித்து திரும்பிக்கொண்டான்.
இரவுமழையின் ஊடாக செவிக்குள் இறங்கும்
முனகல் சப்தத்தில் விழித்தவன்
மாலை புதைத்த பெண்ணுடல் அருகே செல்கையில்
உக்கிரமானதொரு யுத்தத்தை
இரண்டாம் முறையாக பார்க்கிறான்.
குருதி படர்ந்த துறவிகளின் ஆடையை
எரித்துவிட்டு தன் யுத்ததை மீண்டும்
துவங்குகிறான்.
மார்பில் அடித்துக்கொண்டு
அழுதுகொண்டிருந்தாள் அவ்வனத்தின்
உமை.
3. உடலின் மொழி
யாரும் அறியா மூன்றாம் சாமத்தில்
என் பதினேழாவது வயதிற்கு
திரும்பினேன்.
நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும்
அவளது வீட்டிற்குள் நுழைந்தேன்.
உடல் பேசும் மொழியை அவள்
ஒருவனுக்கு கற்றுக்கொடுக்க
முயல்வதை கண்டேன்.
சிவந்த விழிகளுடன் அருகில் சென்று
எட்டி உதைத்தேன்.
வீறிட்டு விழுந்தவளை புறக்கணித்து
அவன் அருகே சென்றேன்.
அப்போது எனக்கு பதினேழாவது
வயது நடந்துகொண்டிருந்தது.
4.நட்சத்திரா என்றொரு சிறுமி இருந்தாள்
விழுந்து பெருகும் துளிகளின் வழியே
வந்து விழுந்தவள் நட்சத்திரா.
அப்போது அவள் ஒரு வெண்ணிற ஆடை
அணிந்திருந்தாள்.
அணில்கள் விளையாடும் செம்பருத்திக்காட்டில்
தன் வெண்ணிற உடையை சிறகாக்கி
விளையாடும் அவளது வயது ஒன்பதை கடந்திருந்தது.
அவள் ஆடையிலாடும் சிறு நூலின் நுனியில்
அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தேன்.
நகராத நாளொன்றில் தன் விளையாட்டை
நிறுத்திவிட்டு வேறோர் ஆடை அணிந்துகொண்டாள்.
இப்போது அவளது வயது இருபத்தி ஐந்தை
தாண்டியிருந்தது.
அவள் அணிந்த ஆடையின் பெயர்
மெளனம் என்பதும் அதன்
கா
ரணம்
என்னவென்பதை பற்றியும் நாங்கள் மட்டுமே
அறிவோம்.
5.கல்வெளியில் உலவும் கனவு
அதிகாலைக்கல் என்றொரு கல்லை
பரிசளித்தான் நண்பன்.
அதிகாலையில் உள்ளங்கையில் மறைத்துக்கொண்டு
வேண்டியதைக் கேள் கிடைக்கும் என்றான்.
பத்து வயதில் மரித்துப்போன நாய்க்குட்டியை
கேட்டேன்.
மறுகணம்,
வாலாட்டிக்கொண்டு காலை சுற்றியது.
பதின்வயதில் ஒன்றாய் திரிந்த தோழியை
கேட்டேன்.
அதே குறுநகையுடன் சன்னலோரம் நிற்கிறாள்.
அதீத நம்பிக்கையில்
கடைசியாக
இரு நாட்களுக்கு முன்பு மரித்த
என்னைக்கேட்டேன்.
- நிலாரசிகன்.
[இம்மாதம் வெளியான புதுஎழுத்து சிற்றிதழில் வெளியானவை]
2 comments:
சாவுக்குருவியில் \\அதன் நீண்ட பாடலை உனக்கு எப்படி புரியவைப்பது என்பதை பற்றி நான் அறியவில்லை.//
கல்வெளியில் உலவும் கனவில் - \\அதீத நம்பிக்கையில்
கடைசியாக
இரு நாட்களுக்கு முன்பு மரித்த
என்னைக்கேட்டேன். \\
இரு கவிதைகளும் மிக அருமை.
சாவுக்குருவியில் \\அதன் நீண்ட பாடலை உனக்கு எப்படி புரியவைப்பது என்பதை பற்றி நான் அறியவில்லை.//
கல்வெளியில் உலவும் கனவில் - \\அதீத நம்பிக்கையில்
கடைசியாக
இரு நாட்களுக்கு முன்பு மரித்த
என்னைக்கேட்டேன். \\
இரு கவிதைகளும் மிக அருமை.
Post a Comment