Wednesday, September 19, 2012

ஜூலி

1.ஆற்றின் கரையில் உலரும் ஜூலியின் உடல்

ஜூலி தன் மூன்றாவது உடலை
மலர்த்தியபடி கிடக்கிறாள்.
அவளுடலை அப்பியிருக்கின்றன
ஆற்றுமணலின் துகள்கள்.
காமத்தையும் துரோகத்தையும்
தன் இரண்டாவது உடலோடு
கரைத்துவிட்ட பெருநிம்மதி அவள்
முகத்தில் வழிந்துகொண்டிருக்கிறது.
விழுகின்ற மழையின்
முதல் துளியை துறவி வேடமிட்ட
நண்டுகள் பிடித்துக்கொண்டு அவளிடம்
வருகின்றன.
தீரா தாகத்துடன் அத்துளியை பருகி
மூன்றாம் உடலை களிக்கிறாள்.
சிலந்திகள் நடமாடும்
ஓர் இருண்ட அறையில்
அழுகிய முத்தமொன்றினால் அவனது உடலை
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
ஜூலியின் முதலாம் உடல்.


2.காட்டின் கதவுகளை ஜூலி திறந்தபோது


யாருமின்றி
அவளது
உமிழ் நீரில் வசிக்கும் பாக்டீரியாக்களை
முகம் திருப்பியபடி பெற்றுக்கொண்டிருந்தது
அறைக்காற்று.
சற்று நேரத்தில் ஒலித்த அழைப்புமணியின்
ஒலியில் முத்தம் நிறுத்தியவள்
கதவருகே ஓடுகிறாள்.
கதவின் மறுபக்கம் வெளிமானின்
சாயலை ஒத்தவன் நின்றுகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் ஓசையை
அறைக்காற்று முகம் உயர்த்தி
பார்த்த கணம்
புலி உருவ முத்தமொன்று
குருதி சுவைத்துக்கொண்டிருந்தது.
அவள் வீட்டின் வரவேற்பறையில்
இதழ்களை சுழற்றி சுழற்றி
முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் ஜூலி



3.ஜூலி என்றொரு முடிவிலி

மரவண்டுகளிட்ட துளைக்குள்
தன் மார்புகளை பொருத்திக்கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத்துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுக பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச்சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.


4.ஜூலி எனும் முதிர்ந்த ஆமை


முப்பது கோடைகளை
விழுங்கி மெதுவாய்
அறைக்குள் அங்குமிங்கும்
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஜூலி ஆமை.
அதன் கன்னக்கதுப்புகளில்
சில குறுமலைகளும்
சில மரணித்த பட்டாம்பூச்சிகளின்
வண்ணச் சிதறலும் தென்படுகின்றன.
படுக்கை விரிப்பில்
புரளுகையில் அது தன்
முப்பதாவது கோடைக்குள்
நுழைகிறது.
ஒரே முத்தத்தில் தன்னிடம்
வீழ்ந்தவனை சந்திக்கிறது.
உள்ளங்கைகளுக்குள் மிக பத்திரமாய்
வைத்திருக்கிறான்
ஜூலியின் முத்தத்தை.
கைபிரித்து தளர்ந்த கண்களுடன்
அம்முத்தத்தை பார்க்கிறது.
ஏதேன் சர்ப்பத்தின் குட்டியாய்
நெளியும் முத்தத்தை அவனிடமிருந்து
பறித்துக்கொண்டு
தன் அறைக்கு திரும்புகிறது
ஓட்டமும் நடையுமாய்.

[நன்றி: "சிலேட்"]

-நிலாரசிகன்.

3 comments:

said...

marupadiyum vaasikkanum...

said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html) சென்று பார்க்கவும்...

said...

வாழ்த்துக்கள் சகோ இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .மனம் மகிழ்கின்றேன்
தங்கள் கவிதைகள் மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன் .