Wednesday, January 01, 2014

கவிதைகள் பத்து

1.
தனியே ஆடிக்கொண்டிருக்கிறது
ஓர் ஊஞ்சல்.
பின் நின்றது சிறிது நேரம்.
தலைகவிழ்ந்து அழுதுமிருக்கலாம் அல்லது
இளைப்பாறியுமிருக்கலாம்.
தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றன
ஒரு ஜோடி கால்கள்.

2.
அறைநீங்கும் பொழுதில்
கதவை சாத்திவிட்டு செல்.
திறந்திருக்கும் கதவின் வழியே
நேற்றொரு ஓநாய் நுழைந்தது.
இன்று
மறியொன்று ஊளையிட்டபடியே
வெளியே ஒடுகிறது.

3.
நீங்கள் ஏன் பூனைக்குட்டிகளை
ரசிப்பதேயில்லை.
சப்தமிட்டுக்கொண்டிருக்கிறது என்று
நேற்று அதனை வெளியே வீசினீர்கள்.
இன்று
உங்களது இரைச்சலில் அழுகிறது
வாலொன்றை ஆட்டுகின்ற சிறுமிருகம்.

4.
எப்பொழுதும் முத்தமிட்டுக்கொண்டிருத்தல்
சாத்தியமே இல்லை.
முத்தமென்பது முத்தமாக மட்டுமே
நின் மனதுள் வியாபித்திருந்தால்.
5.
ஒரு மரம்.
அதன் கிளைகளெங்கும்
கிளிகள்.
ஒரு கிளி
அதன் கால்களின் கீழெங்கும்
மரங்கள்.
6.
கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் சிறகின் மேற்புறம்
அமர்ந்து இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.
7.
அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதன் கிளைகளிலிருந்து கூடொன்று
விழுந்து சிதறியது.
ஒற்றைக்கால் ஒடிந்த பறவைக்குஞ்சு
தத்தி தத்தி புதருக்குள் ஓடுகிறது.
புதருக்கு வெளியே வருகையில்
காகமொன்றின் அலகில்
அது சிக்கியிருக்கிறது.
இனி,
மரக்கன்றுகள் ஆயிரம் நடும்
விழாவில் மலம் கழித்துச் சிரிக்கும்
அக்காகம்.
8.
இரவில் ஒளிரும் கண்களை
மிருகத்திடம் கடன் வாங்கியவன்
அன்றிரவு மாபெரும் மிருகமாகினான்.
அதிகாலைப் படுக்கையில்
களைத்துக்கிடந்தன
மலைபாம்பும் அதனருகே
குருட்டுப்பூனையும்.

9.
அன்றுதான் தனக்கு கால்கள்
இல்லையே என்று வருந்தியது
குளம்.
குளத்திலிருந்து எழுந்து வீடு
நோக்கி நடப்பவர்களின்
நீர்ச்சுவடுகளை பார்த்தபடி.
10.
வார்த்தைகள் தீர்ந்த குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்.
அதன் மெளனத்தோடு
என் மெளனம் எக்காலத்திலும்
உரையாடும்.
- -நிலாரசிகன்.

Happy 2014 friends.

2 comments:

said...

கவிதைகள் அருமை...

said...

ellaame nallyirukku.
ivvlo late ah vaasikirennu varuthamavum irukku.
:)
vaazhthukal nila