Thursday, June 12, 2008

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்



தோழன்மீர்,

வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.



கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்


இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.

பெயர் : மென்தமிழ்


உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.

மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கணிப்பொறி சம்பந்தமான படைப்புகள் மட்டுமல்ல. எந்த படைப்புகளையும் அனுப்பலாம் . கணிப்பொறி உபயோகிக்கும் அல்லது இணையத்தில் உலாவரும் அனைவருமே இதில் அடக்கம்.


படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :
mentamil@gmail.com


படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் :
30/06/2008

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மென்தமிழ் வெளிவரும்.



வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென் தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.

வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.

நம்பிக்கையுடன்,


- மென் தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

இதைப்பற்றிய தொடுப்புகள்:

http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html

http://vizhiyan.wordpress.com/2008/06/11/mentamil-magazine/

http://srishiv.blogspot.com/


Wednesday, June 11, 2008

சிலந்திகள்..

எப்பொழுதும் இல்லாத
பொழுதில் புலப்பட்டன
சில சிலந்திகள்...

வலையில் சிக்கிய
பூச்சியொன்றை தின்றபடி
சகிக்க இயலாத
சிரிப்பொலிகளை ஏற்படுத்தி
நடனமாடி மறைந்தன..

இரவில் தொலைத்ததை
பகலில் மீட்டெடுக்காமல்
அமிலம் வீசுகின்ற
இவர்களைவிட
சிலந்திகளின் பற்கள்
கூர்மையானவை அல்ல.

Tuesday, June 10, 2008

நேயாவில் என் சிறுகதை

நண்பர்களே,
நேயா பெண்கள் மாத இதழின் ஜூன் மாத பதிப்பில்
என்னுடைய சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Monday, June 02, 2008

நீ, நான், காதல்...(குறுந்தொடர்)



3.ஊடல்காலம்:

அவன்:


வண்ணம்கொண்ட மேகமே!
நீ கோபம் கொண்ட
காரணத்தால்,
வானவில்கூட
கறுப்புவெள்ளையாகிப் போனதடி!

அவள்:

சில்லென்ற மழையால்
என்னுள்ளம் நனைத்தவன்
சொல்லொன்று தவறியதால்
சில்லுச் சில்லாய்போனதடா என்
இதயம்.

அவன்:

பார்த்தும் பார்க்காமல்
விறுவிறுவென்று என்னைக்
கடந்து போய்விட்டாய்..
தவிப்பைக் கற்றுத்தந்த
காதல் இன்று
தவிர்த்தலையும்
கற்றுத் தந்ததடி!

அவள்:

உன்னைப் பார்த்துவிட்டு
பார்க்காததுபோல்
கடந்து வந்துவிட்டேன்.
உன்னைக் கடந்தபோது
ஜெயித்த என் பிடிவாதம்,
கடந்துவிட்டபின் தோற்றுப்
போய் யாருமறியாமல்
விசும்ப ஆரம்பிக்கிறது.

அவன்:

கோபத்தில் சொல்லக்கூடாத
வார்த்தையொன்றை
சொன்னதற்காக என்
கன்னத்தில் நீ அடித்திருக்கலாம்.
காயத்துடன் முடிந்திருக்கும்.
இதயத்தில் அடிக்கிறாய்,
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.

அவள்:

சீதாயணம் பாடிய
இதழ்களால்
ஏன்
சீதையை துளைத்தன
ராமனின் சொல்லம்புகள்?

அவன்:


மரணதண்டனையை
விட கொடியது
காதலி
உன் மெளனதண்டனை.

அவள்:

அழுகின்ற கண்களிடம்
சொல்லிவிட்டேன்
அவனுக்காக அழவேண்டாமென்று.
கண்களின் அழுகை நின்றபின்பும்
கேட்கிறது இதயத்தின்
விசும்பல்சப்தம்...

அவன்:

மன்னித்துவிட்டு மலரென
மலர்ந்துவிடுவாய் என்றெண்ணியே
மலர்கின்றன என் காலைப்பொழுதுகள்.
சுடுகின்ற நிலவின்பார்வையில்
சருகாகி வீழ்கின்றன என்
மாலைப்பொழுதுகள்.

அவள்:

நிலவும் சுடுமென்று
நீயும் உணரவேண்டும்;
சித்திரப்பாவை என்
சுயமும் நீ உணரவேண்டும்;
மன்னித்துவிட்டேன் உன்னை,
மலராகி உன் மடியில்
விழுகிறேன் ஓடோடிவா!

4.பிரிவுக்காலம்

(தொடரும்)

Friday, May 30, 2008

ஐ.பி.எல் கிரிக்கெட் - அரையிறுதி போட்டிகள் ஒரு அலசல்


சென்னை சூப்பர் கிங்ஸ்:

தட்டுத்தடுமாறி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கும் அணி. இவர்களுக்கு பதில் மும்பை வந்திருக்கலாமே என்று அனைவரையும் வெறுப்புடன் முணுமுணுக்க வைத்தனர் சென்னை வீரர்கள். பெங்களூரிடம் பெற்ற மோசமான தோல்வி,ராஜஸ்தானிடம் போராடி தோல்வி என தொடர்ச்சியான தோல்விகளில் துவண்டிருந்த
அணி,டெக்கான் சார்ஜர்ஸை வென்ற ஒரே நம்பிக்கையுடன் அரையிறுதிக்குள் காலடி எடுத்துவைக்கிறது.

அரையிறுதியில் பலம்வாய்ந்த பஞ்சாப் அணியுடன் மோதவேண்டும். லீக் ஆட்டங்களில் இருமுறை சென்னையிடம் தோற்றதால் இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது யுவராஜ் அணி.

பலம்:

வெற்றியோ தோல்வியோ எதற்கும் கவலையில்லை என்கிற கேப்டன் கூல் தோனி.
பந்துவீச்சு,பேட்டிங் இரண்டிலும் கலக்கும் மார்கல்.
பீல்டிங்,பேட்டிங் இரண்டிலும் அசத்தும் ரெய்னா.

பலவீனம்:

நிட்னி,பாலாஜி என இருவீரர்கள் "ஹாட்ரிக்" சாதனை செய்தும் அணியின் பந்துவீச்சு சரியில்லை.
கோனியை தவிர மற்றவர்களின் பந்துவீச்சு சிறப்பாக எடுபடவில்லை.
பிளம்மிங்,பட்டீல் சிறந்த தொடக்கம் தருவதில்லை.(ஒரு சில போட்டிகளை தவிர்த்து)

வெற்றி வாய்ப்பு: 50%.

தில்லி டேர்டெவில்ஸ்:

குறைவான புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தாலும் பலம் வாய்ந்த அணிகளில் இதுவும் ஒன்று.
லீக் போட்டிகளில் ராஜஸ்தானிடம் ஒருவெற்றி ஒரு தோல்வி.
ராஜஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.சோஹித் தன்வீர்,ஷான் வார்னே ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை குவித்தால் இறுதிபோட்டிக்குள் நுழையலாம்.

பலம்:

அதிரடி சேவாக்,ரன்மெஷின் காம்பீர்,சிறந்த பந்துவீச்சாளர் மெக்ராத் மற்றும் இளம்வீரர் தவானின் பேட்டிங் & பீல்டிங்.

பலவீனம்:


டீவில்லியர்ஸ்,மாலிக்கின் சொதப்பலான பேட்டிங்கால் முதல் மூன்று வீரர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.

வெற்றி வாய்ப்பு: 40%

கிங்ஸ் XI பஞ்சாப்:

கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை ஓட ஓட விரட்டி அடித்து கம்பீரமாக வலம் வரும் அணி.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற துடிக்கும் இளம் அணி. சென்னையை பழிதீர்க்க பசியுடன் காத்திருக்கிறார் யுவராஜ். ஆரஞ்சு தொப்பியை காம்பீரிடமிருந்து தட்டிப்பறித்த மார்ஷ் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக சதமடித்த திருப்தியில் அரையிறுதிக்குள் நுழைகிறார்.

பலம்:

மார்ஷ்,ஹோப்ஸ்,யுவராஜ்,சங்காக்கரா,ஜெயவர்தனே என்று பலம்பொருந்திய பேட்டிங் ஆர்டர்.
ஸ்ரீசாந்த்,பதான்,சாவ்லா என்று பலம்பொருந்திய பவுலிங்.

பலவீனம்:

Over confidence & வி.ஆர்.வி சிங்

வெற்றி வாய்ப்பு: 90%

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இந்த ஐ.பி.எல் போட்டிகளின் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அணி.முதல் லீக் போட்டியில் தோற்றபோது யாரும் நினைக்கவில்லை இந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறுமென்று. வார்னேயின் சிறப்பான கேப்டன்சியில் வீறு நடை போடுகிறது. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல வார்னே செய்கின்ற புதுப்புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைத்திருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை நெருங்குகிறார்கள் ராயல்ஸ் அணியினர்.

பலம்:

வார்னே,யூசூப் பதான்,ஸ்மித்,தன்வீர்,வாட்சன் (கிட்டதட்ட மொத்த அணியும்:)

பலவீனம்:

சிறப்பான தொடக்கத்தை ஸ்மித் தர தவறினால் நிறைய ரன்களை குவிக்குமா என்பது சந்தேகமே.

வெற்றி வாய்ப்பு: 95%


சென்னை அணி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் :)

Friday, May 23, 2008

குறுங்கவிதைகள் - பாகம் -5



1.குழாயடி சண்டை
தாகத்தில் தவித்தன
வரிசைக் குடங்கள்.

2.கிராமத்து வீட்டின்
நீரில்லா கிணற்றுக்குள்
தளும்புகிறது
பால்யத்தில் தொலைத்த
பந்துகளின் நினைவுகள்.

3.கல்நெஞ்சு மாமியார்
கண்ணீர் வடிக்கிறாள்
நெடுந்தொடருக்கு நன்றி.

4.தூண்டில்புழுவுக்காக அழுதது
மனம்
மீனைச் சுவைத்தபடி.

5.கொளுத்தும் வெயிலில்
விளையாடுகிறது நிலா
குழந்தையுருவில்.

6.உதிர்கின்ற பூக்களை
நிழல்கொண்டு தாங்குகிறது
மரம்.

7.இலவச தண்ணீர்பந்தலில்
விற்றுக்கொண்டிருந்தார்கள்
கட்சியை.

Tuesday, May 20, 2008

உயிரின் விசும்பல்...




விரல்பற்றிய இதயபகிர்வுகள்
ஏதுமற்ற என்னுலகை
பொய்மை நிறைந்த
உன் சொற்களால் நிரப்புகிறாய்.

விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய்.

என் கண்ணீர்த்துளி
பெருகி காலநதி
பெருவெள்ளமென ஓடுகிறது

தூரத்தில் எங்கோ
ஒரு மலர் உதிரும்
சப்தம் சன்னமாக கேட்க
துவங்குகையில் இருள்கிறது
என் வானம்.

Monday, May 19, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் -4




1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு.

2. திருமணவீட்டில்
சரசரக்கும் பட்டுப்புடவைகளால்
பேசுகிறார்கள் பெண்கள்.

3.தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.

Friday, May 16, 2008

கல்லூரித்தோழி..


கல்லூரிக்காலத்தில்
எப்போதும் என்னுடனிருந்தாய்..

தேர்வுகளில் நான் தேர்ச்சிபெற
கோயில்களில் தவமிருந்தாய்...

தோற்றபோதெல்லாம் தோள்தந்து
உற்சாகமூட்டும் தென்றலாயிருந்தாய்...

கல்லூரியின் கடைசிநாளில்
உணவருந்தாமல் கண்ணீர்சிந்தும்
சிலையாகியிருந்தாய்...

வருடங்கள் பல கடந்துவிட்டபின்
ஒரு ரயில்நிலையத்தில்
உன்னைச்சந்திக்கிறேன்...

என் நலம் விசாரித்து,
கைக் குழந்தையுடன்
கணவன் பின் செல்கிறாய்.

நகர்கின்ற ரயிலை
நோக்கி விரைந்தோடுகிறேன்
என் கல்லூரித்தோழியை
உன்னில் காணாத
கண்ணீருடன்.

Thursday, May 15, 2008

Aphorism - ஒரு முயற்சி

ஆங்கிலத்தில் Aphorism என்று இதனை சொல்வார்கள். கவிதையென இவற்றைக் கொள்ள இயலாது. என் கன்னி முயற்சி இது பிழை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

  • படிக்கட்டில் உருண்டு இறந்த குழந்தையை நினைவூட்டுகிறது இலையில் இறங்கும் பனித்துளி..
  • மலையுச்சியில் நின்று இவ்வுலகமே என் காலடியில் என்றேன்.சிரித்துக்கொண்டே நகர்ந்தன மேகங்கள்.
  • தவறவிட்ட கண்ணாடியின் சில்லுகளை பொறுக்கினேன். முகம் காண்பித்தன சில. ரத்தம் கேட்டன சில.
  • அம்மாவின் கண்ணீர்த்துளிக்குள் ஒளிந்திருக்கிறது அப்பாவின் முரட்டுத்தனமும் பிள்ளைகளின் இயலாமையும்.
  • முட்டிக்காயத்தில் துடிக்கும் பிள்ளைக்கு மருந்திட ஓடும் தாயின் காதுகளுக்கு கேட்பதில்லை பசித்தழும் குழந்தையின் அழுகை சத்தம்.

Wednesday, May 14, 2008

ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.



இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.

காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)

தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்
கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மொத்தம் எட்டு அணிகள். 59 போட்டிகள். 44 நாட்கள்.

ஒவ்வொரு அணிகளை பற்றிய எனது பார்வையே இப்பதிவு.

ராயல் சேலன் ஜர்ஸ்:

ஏர்லைன்ஸ்/பீர் புகழ் விஜய் மல்லையாவின் அணி. $111 மில்லியன் செலவிட்டு இந்த அணியை வாங்கியதற்கு
இன்னும் சில விமானங்களை வாங்கியிருக்கலாம்.

இருபது ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிரடி வீரர்களை வாங்கியவர்கள் மத்தியில் "டெஸ்ட்" வீரர்களை
வாங்கி அடிவாங்கிகொண்ட அணி இது.

டிராவிட்,ஜாபர்,காலிஸ் போன்ற டெஸ்ட் வீரர்களை வைத்துக்கொண்டு இந்தப்போட்டியில் ஜெயிக்க நினைத்தது தவறு என்று மல்லையாவிற்கு தாமதமாக புரிந்திருக்கிறது.

இதன் CEO சாரு சர்மாவை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்கு பதில் மெகாதொடரில் சிறிது நேரம் அழலாம்.

சிறந்த வீரர்: மார்க் பவுச்சர்
சிறந்த சொதப்பல்: காலிஸ்/திராவிட்
சிறந்த புதுமுக வீரர் :Virat Kohli.


டெக்கான் சார்ஜர்ஸ:

மிகவும் பலமான அணி;பல அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட அணி, என்றெல்லாம்
வர்ணிக்கப்பட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி "டக் அவுட்" ஆன அணி இந்த டெக்கான் சார்ஜர்ஸ்.

"கில்லி" கில்கிறிஸ்ட், "Bang Bang" அப்ரிதி,"சிக்ஸர்" சைமண்ட்ஸ்,"மொட்டைபாஸ்" கிப்ஸ், "Very Very Special/Stylish" இலச்சுமணன், "இளம்புயல்" ரோஹித் சர்மா, நியுசிலாந்தின் "ஸ்டைரிஸ்", ஆர்.பி.சிங்,சமிந்தா வாஸ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தும் டெக்கான் தோல்விகளை அதிகம் கண்டுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றின் மிக வேகமாக சதமடித்த கில்லியாலும்(42 பந்தில்) இந்த அணியை கரைசேர்க்க இயலவில்லை. காரணம் என்னவென்று யோசித்துபார்த்தால் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறந்த வீரர்களாக இருந்தும் ஒரு குழுவாக சேர்ந்து ஜெயிக்க இவர்களால் முடியவில்லை.

அரை இறுதி போட்டிக்கு தேர்வாகும் கனவு கனவாகவே போய்விட்டது.

சிறந்த வீரர் : ரோகித் சர்மா.
சிறந்த சொதப்பல்: அப்ரிதி.
சிறந்தா புதுமுக வீரர் :ஓஜ்ஹா(Ojha)


மும்பை இந்தியன்ஸ்:

"தல"சச்சின் இல்லாமல் விளையாடி வருகின்ற அணி.முதல் ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடி வருகிறது.

சச்சின் இல்லாதது பெரும் இழப்பு.

ஜெயசூர்யா,போலாக்,உத்தப்பா இவர்களை நம்பியே களம் இறங்கும் அணி.

ஹர்பஜன்சிங்கின் வெளியேற்றம் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

அரை இறுதிக்கு முன்னேற ஏதேனும் அற்புதம் நிகழ வேண்டும்.

சிறந்த வீரர்: போலாக்
சிறந்த சொதப்பல் :ஜெயசூர்யா(ஒரு போட்டியை தவிர்த்து)
சிறந்த புதுமுக வீரர் : அபிசேக் நாயர்

தில்லி டேர்டெவில்ஸ்:

சேவாக்கின் அதிரடி,காம்பீரின் ரன்குவிப்பு,மெக்ராத்தின் மேஜிக் பெளலிங்,தவானின் திறமை,
திவாரியின் பீல்டிங் என்று கலக்கினாலும் ஆடிய ஒன்பது போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

சேவாக் அடித்தால் வெற்றி. சேவாக் அவுட்டானால் தோல்வி என்கிற நிலை இருப்பதால் இந்த
அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகமே.

குழுவாக செயல்பட்டால் மற்ற அணிகளை தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் இந்த "டெவில்ஸ்" என்பதில் சந்தேகமில்லை.

சிறந்த வீரர்: காம்பீர்
சிறந்த சொதப்பல்: தினேஷ் கார்த்திக்
சிறந்த புதுமுக வீரர் :தவான்/திவாரி.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணி. ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து உற்சாகப்படுத்தும் ஷாருக்கின் செயல் அணிக்கு மிகப்பெரிய "பூஸ்ட்".

பிரண்டன் மெக்கலம் முதல் போட்டியில் 73 பந்துகளில் அடித்த 158* ரன்கள் இருபதுஒவர் போட்டிகளில் ஒரு மிகச்சிறந்த சாதனை. (13 இமாலய சிக்ஸரும் இதிலடங்கும்)

கேப்டன் "தாதா" கங்குலி,ரிக்கி பாண்டிங்,உயர்ந்த மனிதன் இசாந்த் சர்மா,டேவிட் ஹஸ்ஸி,தாமதமாக அணியில் சேர்ந்து தான் விளையாடிய முதல்போட்டியிலேயே கலக்கிய "ராவல்பிண்டி எக்ஸ்பரஸ்" அக்தர் என்று நட்சத்திர வீரர்களின் பட்டியல் நீள்கிறது.

இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

சிறந்த வீரர்:டேவிட் ஹஸ்ஸி
சிறந்த சொதப்பல்:முரளி கார்த்திக்
சிறந்த புதுமுகவீரர் :சாஹா/திண்டா.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

6 கோடி தோனி, "Hulk" ஹெயிடன்,மிஸ்டர் கிரிக்கெட் ஹஸ்ஸி,இளம்புயல் ரெய்னா,"இறுதி ஓவர் ஸ்பெசலிஸ்ட்" ஜோகிந்தர் சர்மா, சென்னைசிங்கம் பத்ரிநாத்,கோனி,"ஹாட்ரிக்" பாலாஜி என்று நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி இருக்கும் அணி.

ஆடிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி.
அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று தோல்வி.
பின் சுதாரித்து தொடர்ந்து இரண்டு வெற்றி என்று யூகிக்க முடியாத அதேசமயம் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றாக பவனி வருகிறது சென்னை அணி.

டிரம்ஸ் சிவமணி ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து டிரம்ஸ் அடித்து தூள் கிளப்புக்கிறார்.

விஜய்,நயன் தாரா என சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள்.

கேப்டன் கூல் தோனியின் சிறப்பான வழிநடத்துதலால் இந்த அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனலாம்.

சிறந்த வீரர்: தோனி/பாலாஜி
சிறந்த சொதப்பல்:பிளம்மிங்
சிறந்த புதுமுக வீரர்: கோனி.

கிங்ஸ் XI பஞ்சாப்:

ஆறுபந்தில் ஆறு சிக்ஸர் அடித்து தூள்பறத்திய யுவராஜ் சிங் கேப்டனாக உள்ள அணி.
துல்லியமான ஸ்விங் பத்துவீச்சால் எதிரணி வீரர்களில் ஸ்டம்புகளை பறக்க செய்யும் பதான் அணிக்கு மிகப்பெரிய பலம்.
"அழுமூஞ்சி" என்றாலும் பந்துவீச்சில் சிடுமூஞ்சியாக வலம்வரும் ஸ்ரீசாந்,
ரன் மெஷின் குமார சங்காக்கரா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மார்ஷின் மகன் ஷான் மார்ஷின் அதிரடி
ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தாவின் கன்னக்குழி புன்னகை
என பஞ்சாப் அணி எதிரணிகளை பஞ்சாக ஊதித்தள்ளுகிறது.

வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் பஞ்சாப் முக்கியமான அணி.

சிறந்த வீரர்: ஷான் மார்ஷ்
சிறந்த சொதப்பல்: ஜெயவர்த்தனே
சிறந்த புதுமுக வீரர் :பியூஷ் சாவ்லா.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இந்த அணி ஒரு மிகச்சிறந்த உதாரணம். Underdogs ஆக
அறியப்பட்ட அணி இன்று ஏழு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

காரணம் - ஷான் வார்னே.

இளம் வீரர்களின் திறமை அறிந்து,அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி வெற்றிக்கனிகளை சுவைக்க மிக முக்கிய காரணம் வார்னேயின் கேப்டன்ஸி.

முதல் போட்டியில் தோற்று பின் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற
காரணமாக இருந்தவரும் வார்னேதான்.

யூசுப் பதானின் அதிரடி,கைப்பின் அசத்தல் பீல்டிங்,வார்னேவின் துல்லிய பந்துவீச்சு,வாட்சனின் ஆல்ரவுண்ட் திறமை,ஸ்மித்தின் அடித்தளம் அமைக்கும் பேட்டிங் போன்றவற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகச்சிறந்த
அணியாக விளங்குகிறது.

சிறந்த வீரர்: வார்னே/பதான்
சிறந்த சொதப்பல்: கம்ரான் அக்மல்
சிறந்த புதுமுக வீரர் :ஜடேஜா.

அடுத்த பதிவு அரையிறுதி போட்டிகளுக்கு முன் எழுதுகிறேன்

-நிலாரசிகன்.

Tuesday, May 13, 2008

கவிதை நூல் வெளியீடு (ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)


நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய மூன்றாவது கவிதை நூல் "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்"
கடந்த ஞாயிறன்று வெளியானது.
விஸ்டம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.

இணையம் மூலமாக பெற இங்கே சொடுக்குங்கள்

சென்னையில் இப்புத்தகம் கிடைக்குமிடங்கள்:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006

2.Hikkin Bothams

3.AnyIndian Book shop,T.nagar

4.New Century book shop

5.Wisdom Educational Service
10/8, Dr.Nammalvar Street,
Triplicane,
Chennai-600005
Phone:044-28447476
Mobile:9382181319,9841162927
Email:wisdomedu2003@yahoo.co.in

LIST OF NEW CENTURY BOOK HOUSE (P) LTD., BRANCHES:


  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.156/786, ANNA SALAI,

CHENNAI – 600 002.

PHONE: 044 – 2852 8351.

CONTACT PERSON: MR.A.AVUDAIAPPAN

MANAGER / 94449 08351.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.25-26, MARUDEESWARAR TEMPLE COMPLEX,

THIRUVANMIYUR, CHENNAI – 600 041.

PHONE: 044 – 2440 4873.

CONTACT PERSON: MR.N.GOPINATHAN

SR.MANAGER / 94440 14162.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

79-80, WEST TOWER STREET,

MADURAI – 625 001.

PHONES: 0452 – 2344 106 / 2350 271.

CONTACT PERSON: MR.A.KRISHNAMURTHY

ZONAL MANGER / 94430 44106.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.4, PERIYAR BUS STAND,

BHARATHI STATUE (SOUTH SIDE),

TIRUNELVELI – 627 003.

PHONE: 0462 – 2323 990.

CONTACT PERSON: MR.A.MURUGESAN

MANGER / 94434 96955

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.35, MAIN ROAD,

DINDIGUL – 624 001.

PHONE: 0451 – 2432 172.

CONTACT PERSON: MR.KRISHNAKUMAR

MANGER / 94427 63247

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NOS.3 & 4, NEHRU STADIUM, V.O.C.PARK,

COMBATORE – 641 018.

PHONE: 0422 – 2380 554.

CONTACT PERSON: MR.N.A.AZEES

MANGER / 94423 44708

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.165/A, CHERRY ROAD,

SALEM – 636 001.

PHONE: 0427 – 2450 817.

CONTACT PERSON: MR.A.GANESAN

MANAGER / 94433 24508.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

OLD BUS STAND (NEAR SELECT HOTEL),

HOSUR – 635 109.

PHONE: 04344 – 245726.

CONTACT PERSON: MR.KUMAR / INCHARGE.

  1. NEW CENTURY BOOK HOUE (P) LTD.,

CHERRING ROAD,

OOTY – 643 001.

PHONE: 0423 – 2441 743.

CONTACT PERSON: MR.N.A.AZEES / MANAGER.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.42/7, SINGARATHOPPU,

TRICHY – 620 008.

PHONE: 0431 – 2700 885.

CONTACT PERSON: MR.S.SARAVANAN

ZONAL MANGER / 94433 31371.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.66, CUDDALORE ROAD,

C.P.I.SHOPPING COMPLEX,

MUDALIYARPET,

PONDICHERRY – 605 004.

PHONE: 0413-2357 403.

CONTACT PERSON: MR.P.V.SUNDAR

MANAGER / 94433 22387.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

SHOP NOS.1 & 43, MUNICIPAL NEW SHOPPING COMPLEX,

VELLORE – 632 004.

PHONE: 0416 – 2234 495.

CONTACT PERSON: MR.ESURAJ / 94433 54495.


LANDMARK LIMITED BRANCHES IN CHENNAI :

1. LANDMARK LIMITED

APEX PLAZA,

NO.3, NUNGAMBAKKAM HIGH ROAD,

CHENNAI – 600 034.

2. LANDMARK LIMITED,

SPENCER PLAZA,

MOUNT ROAD,

CHENNAI – 600 002.

3. LANDMARK LIMITED,

CHENNAI CITI CENTRE,

NO.3 & 4, DR.RADHAKRISHNAN SALAI,

MYLAPORE, CHENNAI – 600 004.


தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிக்கிங் பாதம்ஸ் மற்றும் நியூ சென்சுரி புக் ஹவுஸிலும் கிடைக்கும்.

உங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.


Monday, May 12, 2008

ஒற்றைச் சிறகு..



வளர்த்துவந்த பிரியங்களை
வீதியில் வீசிவிட்டு
முகமில்லாமல்
திரும்பிச் செல்கிறாய்...
புள்ளியென மறைந்துவிட்ட
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.
பிரிந்திருந்த பொழுதுகளைவிட
பிரிகின்ற பொழுதின்
கனம் அதிகமானதாகவே இருக்கிறது
எப்போதும்.

பொட்டிழந்த உன் நெற்றிக்கென
நான் கொணர்ந்த குங்குமம்
அந்தி மழையில் கரைய,
வீடு நோக்கி நடக்கின்றன
உணர்வற்ற என் கால்கள்.

Wednesday, May 07, 2008

நேயா பெண்கள் மாத இதழில் என் கவிதைகள்.


நண்பர்களுக்கு,
நேயா பெண்கள் மாத இதழில்(மே 08 இதழ்) என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகியுள்ளன.

இத்துடன் வெளியான இரண்டு கவிதைகளை இணைத்துள்ளேன்.


நட்புடன்,

நிலாரசிகன்.

Tuesday, May 06, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 3



1. அம்மாவின் புகைப்படத்திற்கு
மாலையிடும் அப்பாவின்
சட்டையில் குங்குமம்.

2. பேனா முனை உடைத்தவுடன்
எழுதப்படுகின்றன எனக்கான
தீர்ப்புகள்.

3.கரையவில்லை மஞ்சள்;
குளக்கரை படிக்கட்டில்
கால்வழுக்கிய தடம்.

4.முல்லை மலர்ந்தும்
வரவில்லை மல்லிகை
வாடியது மலர்.

Friday, May 02, 2008

மொழியில்லாத் தருணங்கள்...



தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..

வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..

தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...

தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...

புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...


மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..

Tuesday, April 22, 2008

கல்லெறியப்பட்ட கனவுகள்...


கதவிடுக்கில் சிக்கிய விரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதலில் வழிகிறது ஞாபகரத்தம்..


உனக்குத் தந்த முத்தங்களை மறக்கடித்துவிட்டது காலம். காதோரம் முணுமுணுக்கிறது முத்தமிட்டபோது காற்றில் கலந்த சிணுங்கல்சப்தம்.


கடல்போன்றது நம் காதல் என்று நீ சொன்னபோது புரியவில்லை,நீந்தத்தெரியாதவன் நானென்று.


இந்த பின்னிரவில் ஜன்னலோர தென்னைமர கீற்றில் விழுந்துதெரிக்கும் மழைத்துளிகளின் சப்தங்கள் வருடம் பல கடந்துவிட்ட காதலை நினைவூட்டுகிறது.


ஒரு ஆத்ம நேசிப்புக்காக ஏங்கித் தவித்த பொழுதில் தலைகோதும் மென்விரல் தந்து நெஞ்சோடுஅணைத்து காதல்தீபம் ஏற்றினாய்.

நீ ஏற்றிய தீபத்தில் சாம்பலானது மட்டும் என் கனவுகள்...


நெடுஞ்சாலையில் வேகமாய் பயணிக்கும் உனக்கு, சாலையோரம் வீழ்ந்த பூக்களின் நலம்விசாரிக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.


கண்ணாடித்தொட்டிக்குள் நீந்துகின்ற தங்கமீனுக்கும் எனக்கும் அதிகம் வித்தியாசமில்லை.


எப்பொழுதும் என் நினைவுகளில் நீ இல்லை என்பது நிஜம். எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.


இலையுதிர்காலத்திலும் செழித்து பூக்கள் சொரிந்த மரமாக நின்றிருந்தேன் அருகில் நீ இருந்தபோது.

இன்று வசந்தகாலத்திலும் பட்டமரமாய் வேர்களின்றி விழுந்து புலம்புகிறேன்.


நினைக்க மறக்காதே,மறக்க நினைக்காதே என்று நீ எழுதிய கடிதங்களை நினைத்து அவ்வப்போது சிரிக்கவும் செய்கிறேன்.உனக்கென் நன்றிகள்.


சாதியும்,மதமும் எதிரியாக வந்திருந்தால்கூட வென்றிருப்பேன். உன்னை தோற்கடித்து காதலில் ஜெயிக்க சொன்னாய் நீ.


யுத்தமிட்டு ஜெயிக்க இது தேசமல்ல. நேசம் என்று சொல்லிவிட்டு திரும்பிவந்தேன்.வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன காயப்பட்ட என் கனவுகளின் மிச்சங்கள்...

Thursday, April 17, 2008

பேச்சிலர் கவிதைகள்...




1.கொடுக்கல் வாங்கலின்
திருப்தியின்மையை
மெளனத்தால் பேசுகிறான்
அறைத்தோழன்.

2.கலைத்துப்போட்ட அறையிலும்
கலையாமலிருப்பது நிறைய
கனவுகளும் ஒருத்தியின்
நினைவுகளும்.

3.சலவைக்கு போய்வந்த
சட்டைக்குள் ஒளிந்திருக்கும்
மறந்த ரூபாய் நோட்டில்
வெண்மையாகிறது ஒரு
கறுப்பு விடியல்.

4.நேர்முகத்தேர்வில்
தோற்று திரும்பும்பொழுதெல்லாம்
மனசுக்குள் சத்தமிடுகிறது
அம்மாவின் பிராத்தனையும்
அப்பாவின் மெளனக்கண்ணீரும்.

Monday, April 14, 2008

பட்டம்

பக்கத்து தெரு
கோவிலுக்கு போனதில்லை
பாட்டி.

அடுத்த ஊர்
மாதச்சந்தையை கனவில்
மட்டுமே கண்டுமகிழ்ந்தாள்
அம்மா.

சினிமாவில் மட்டுமே
சென்னை ரசித்தாள்
அக்கா.

குடும்பத்தில் முதன்முதலாய்
படித்தவன் என்கிற
பட்டத்துடன்,
கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்
பெண்ணடிமை விலங்குகளை
உடைக்க முயற்சிக்காத
ஆணாக.

Thursday, April 10, 2008

புலம்பெயர்ந்தவனின் விதி!




காற்றில் அடித்த
சன்னல்க்கதவுகளின் பேரோசையில்
திடுக்கிட்டு விழித்தழுகிறது
தொட்டில்குழந்தை...

அடைமழை நாட்களில்
தூரத்து இடியோசைகேட்டு
நாற்காலியின் அடியில்
ஓடி ஒளிகின்றாள்
நான்குவயது மகள்...

கதவு தட்டப்படும்
போதெல்லாம்
நடுங்க ஆரம்பிக்கிறது
பாட்டியின் தேகம்..

ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் புலம்பெயர்ந்த
பின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஈழத்தின் அதிர்வலைகள்.

Wednesday, April 09, 2008

உன் திருமண அழைப்பிதழ்

ஒரு சிற்றெறும்பென‌
உன் ஞாபகங்களை
சேமித்துவைத்திருந்தேன்.
மழையாய் வந்து
நீ அழித்துச்செல்லும்வரை!

Sunday, April 06, 2008

சலசலப்பற்ற நதியை
உணர்வுகளின்றி நகரும்
உச்சிவெயில்பொழுதுகள்
நினைவூட்டுகின்றன...

இரவின் நீட்சியை
காற்றில் கையசைத்து
குறைத்திட முயன்று
தோற்கிறது தென்னைமரக்கீற்று..

குழந்தைமை மாறா சிரிப்புக்குள்
மறைந்துகொள்கிறது
மூளைவளர்ச்சியற்ற கன்னியொருத்தியின்
ஆடைவிலகிய அங்கங்கள்...

எழுத்தில் வடிக்காவிட்டாலும்
எங்காவது எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன கவிதைகள்...

Wednesday, April 02, 2008

மனித உருவில் ஒரு மிருகம்!

ஆண் என்கிற ஒரே காரணத்திற்காக தன் மனைவியை,தன் உயிரின் மறுபாதியை தன் இஷ்டப்படி 25 ஆண்டுகளாய் கொடுமைப்படுத்திய ஒரு கொடூரனைப் பற்றிய கட்டுரை இன்று படிக்க நேர்ந்தது.

இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது!!! இறைவனின் படைப்புப்பிழை இந்த மனித மிருகங்கள்...

கட்டுரை:
(நன்றி : ஜீனியர் விகடன்)




''ரத்தம் கொட்டினாலும் அவரோட 'பசி'யை தீர்த்தாகணும்...'' ''தலைக்காயத்துக்கு சர்க்கரையும் டீத்தூளும்...''
இந்திராணியின் இல்லற வாக்குமூலம்

'பின்னால இருந்து தலையில மல்லிகைப் பூ வச்சிவிட்டு தாடை யில விரல்பதிச்சு செல்லமாய் முகத்தைத் திருப்பி புருஷன் புன்னகை பூப்பான். அப்ப வெக்கத்துல, 'நான் மொதல்ல சிவக்குறேனா... நீ முதல்ல செவக்குறியா'னு ரெண்டு கன்னத்துக்கும் போட்டியே நடக்கும்!''- சக பெண்களுக்கு கிடைக்கும் இந்த சுகம் தனக்கும் கிடைக்கும் என்று நம்பித்தான் கும்பகோணத்தில் வாக்கப்பட்டாள் இந்தி ராணி. அந்த பதினேழு வயசில் அவளுக்குள் பதினேழாயிரம் ஆசைகள்.

முதல் ராத்திரியில்...

பால் சொம்புடன் மல்லிகை மணம் கமழ இந்திராணி கணவன் காலில் விழப் போகிறாள்... அவளைப் பார்த்து கணவன்,

'என்னடீ... பெரிய இவளாட்டம் பாலைத் தூக்கிட்டு வந்துட்டே? எங்கடீ கல்யாணத்துல வசூலான மொய்ப் பணம்? உன்னோட குடும்பத்துக்காரனுகளே

தூக்கிட்டுப் போயிட்டானுங்களா? சொல்றீ... சொல்லித்தொலை...' - திட்டிக்கொண்டே இந்திராணியின் தலையைப் பிடித்து சுவரில் அவன் இழுத்துமோத... புருஷன் தன்னை இப்படித்தான் மயக்கப் போகிறான் எனத் தெரியாமல் தலையில் ரத்தம் வடிய பொத்தென விழுந்து மயங்கினாள் இந்திராணி.

இப்படித் துவங்கிய முதலிரவுக்குப் பின் இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது இந்திராணி மொட்டை போட்டிருக்கிறார். தலை முழுக்க, 'கஜினி' படத்தில் சூர்யாவின் தலையில் கிடக்குமே ஒரு தழும்பு, அதுபோல் பதினாறுக்கும் அதிகமான தழும்புகள். எல்லாமே கணவன் என்ற மிருகத்தின் காணிக்கை. கால் நூற்றாண்டுகால மணவாழ்க்கையில் தலையில் எத்தனை தழும்புகளைத்தான் தாங்குவது? வெடித்துவிடும் அளவுக்குத் தலை வலித்ததால் சாமியிடம் வேண்டிக்கொண்டு மொட்டை அடித்துக்கொண்டார் இந்திராணி.

இந்திராணியின் மொட்டைத் தலையைப் பார்த்து அதிர்ந்து போனார் அவருடைய தோழியும் கன்னியாஸ்திரியுமான லீமாரோஸ். 'என்னம்மா இது?' என கேட்க, அப்போதுதான் கணவனின் கொடுமைகளை இறக்கி வைத்திருக்கிறார் இந்திரா. லீமாரோஸ் மூலம் நம் கவனத்துக்கு வந்தவர் தன் துயரக் கதையை நேரடியாக நம்மிடம் சொன்னார்.

''முதல் ராத்திரிலருந்தே கொடுமைதாங்க. இவ்வளவுக்கும் இடையில மூணு பொண்ணு, மூணு பையன் மொத்தம் ஆறு பிள்ளைங்க. சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனதால எந்த நல்லது கெட்டதும் தெரியலை. கட்டின புருஷனை எதுத்து ஏதும் செய்யக் கூடாதுங்கிறதால கம்முன்னு இருந்திட்டேன். இதை அவரு பயன்படுத்திக்கிட்டு தன் இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டிப் படைச்சாரு. காட்டுமிராண்டி மாதிரி அடிப்பாரு. ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டினாலும் அதை சட்டையே பண்ணாம அவரோட 'பசி'யை தீர்த்துக்குவாரு. அவரு உக்காரச் சொன்னா உக்காரணும். படுக்கச் சொன்னா படுக்கணும். அவர் தூங்குற வரைக்கும் சத்தம் போட்டுக்கூட அழக் கூடாது. அவர் அடிச்சு தலையில காயம் வர்றப்ப எல்லாம் டீத்தூளையும் சர்க்கரையையும் கலந்து மருந்தா போட்டுக்குவேன்'' என இந்திராணி சொல்லச் சொல்ல அதிர்ந்து போனோம்.

''தலையில அடிச்சாதான் நல்லா உறைக்கும்னு சொல்லிச் சொல்லி தலையிலேயே அடிச்சதால தலை முழுக்க தழும்பாப் போச்சு. சமயத்துல காயம் ஆறாம சீழ் வச்சிடுச்சு. என்னோட பெரிய பையன் கூலி வேலைப் பார்த்து எனக்கு வைத்தியம் பார்ப்பான்.

என் பிள்ளைகளுக்கு அப்பான்னு இவர் வேணும். புருஷன் இல்லாம வாழ்றது ஊரு உலகத்துக்கு சரியா வராதேனு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு பையனை அங்க இங்க கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிட்டேன். மத்த இரண்டு பசங்களும் கூலி வேலைக்குப் போறாங்க. பொண்ணுங்க படிக்கிறாங்க. பெரிய பையன் 'இனிமேயும் இந்த அப்பா நமக்கு வேணாம்மா! நீ மட்டும் நல்லாயிருந்தா போதும். அவருக்கு சோறு போட்டு கவனிக்காதே. எங்களோட தனியா வந்துடு'ன்னு திட்டுறான். என் மனசுதான் கேட்க மாட்டேங்குது.

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவரு குடிச்சு குடிச்சே குடலு வெந்து கிடந்தப்ப, அவன்தான் காசு செலவு பண்ணி தன் ரத்தத்தையும் கொடுத்துக் காப்பாத்தினான். கொஞ்சம் குணமானதும் மறுபடியும் குடிக்கிறதும் என்னையும் பிள்ளைகளையும் போட்டு அடிக்கிறதுன்னு பழைய வேலையை ஆரம்பிச்சுட்டாரு. இப்போ எனக்கு அடிக்கடி தலைவலி வருது. கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே தலை சுத்துது. தலைவலி தீரணும்னுதான் கோயில்ல வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக்கிட்டேன். மிச்சமிருக்கிற காலத்துக்கு தலையில பெரிசா ஏதும் பாதிப்பு வந்திருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நான் வேறென்ன பண்ண முடியும்?'' - வெடித்துக் கிளம்பிய அழுகையோடு சொல்லி முடித்தார் இந்திராணி.

கன்னிகாஸ்திரி லீமாரோஸ் நம்மிடம், ''ஒவ்வொரு தழும்பும் 3 இன்ச்-சிலிருந்து 4 இன்ச் நீளத்துக்கு இருக்கு. எப்படித்தான் இந்திராணி இந்த சித்ரவதையை தாங்கிக்கிட்டு இவ்வளவு நாள் இருந்தாங்களோ தெரியலை. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாத்தான் தலையில என்னென்ன பாதிப்பு இருக்குன்னு தெளிவா சொல்ல முடியும். இந்திராணிக்கு மேலும் கொடுமை நடக்காதபடி நாங்க பார்த்துக்கிறோம். இவரை மாதிரிதான் அநேகம் கிராமத்துப் பொண்ணுங்க அறியாமையாலும், அடிமைத்தனத்தாலும் பல கொடுமைகளுக்கு ஆளாகுறாங்க. சமூக நலத்துறையும் பொதுநல அமைப்புகளும் கைகோத்து செயல்பட்டால்தான் இந்தக் கொடுமைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்றார்.

'உங்க கொடுமைக்கார கணவர் ஊர் - பேரைச் சொல்லவே இல்லியே... அவர் இப்போ எங்க இருக்காரு?'- இந்திராவிடம் கேட்டோம்.

'வீட்டுக்காரர் பேரை சொல்றதா...? எங்காச்சும் விழுந்து கெடப்பாரு. அவர் பேரு... வேணாமே! ' யோசித்து யோசித்து கடைசியில் சொன்னார் இந்திராணி - ''கிருஷ்ணமூர்த்திங்க...''

அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி எங்கிருப்பார் என்று இந்திராணி யூகித்துச் சொன்ன சில இடங்களிலும் கிருஷ்ணமூர்த்தியைத் தேடினோம். கிடைக்கவில்லை. ஒருவேளை, கட்டுரை வெளியான பிறகு கிருஷ்ணமூர்த்தி தன் தரப்பாக எதையும் சொல்ல விரும்பி தெரிவித்தால் அதனையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனையெத்தனை இந்திராணிகள் இப்படி துன்பக் கேணியில் உழன்று கொண்டிருக்கிறார்களோ?
-சி. சுரேஷ்
படங்கள்: எ.பிரேம்குமார்

Tuesday, April 01, 2008

குறைப்பிறவி


உயிர்த்தெழுதல் சாத்தியமற்று
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது
அரங்கேறா கவிதைகள் சில..

கவிதைகளின் மெல்லிய
விசும்பல்சப்தம்
செவிக்கருகில் ஒலித்து
ஓய்கிறது தினமும்...

ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.

Monday, March 31, 2008

சொற்கள் தீர்ந்த பொழுதில்...




பின்னிரவின் நீளம்
குறைத்திட முயன்று
தோற்றுக்கொண்டிருந்தேன்..

இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...

ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.

Thursday, March 27, 2008

எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்

என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" கவிதை நூலிற்கு எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்.

இங்கே கேட்கலாம் : http://tamil.sify.com/audio/shylaja/fullstory.php?id=14629661

Wednesday, March 26, 2008

பள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை

நண்பர்களே,

சென்னையில் உள்ள சைவேட் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

http://www.helptolive.org/projects_detail.asp?id=64

உங்களது நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கலாம். நாளைய நம்பிக்கை விதைகளுக்கு நீருற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்.

நன்றி.

Tuesday, March 25, 2008

அம்மா


காய்ச்சலில் நெற்றி
தொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.
(இந்தக் கவிதை ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதியது)

Monday, March 24, 2008

கறை

வேட்டியின் கிழிசலால்
விழுந்தது அடி.

வலியை மறைத்துக்கொண்டு
தைத்துக்கொடுத்தாள்.

கட்சிக்கூட்டம் நோக்கி
மெல்ல நகர்ந்தது
கறைபடிந்த ஆண்மை.

இழந்த சுயத்தால்
இருளில் கரையத்தொடங்கியது
பெண்மை.

Wednesday, March 19, 2008

வினை எச்சம்


படுக்கை நனைத்த‌
மகனை அடித்துவிட்டு
வாசல் வந்தேன்.
உச்சந்தலையில் எச்சமிட்டு
பறந்தது காகம்.

Monday, March 17, 2008

கவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1





1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...


2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.

3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.


4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.


5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு



15-03-2008 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொன்நாள்.

எவருடைய எழுத்து தமிழின் கடைசி மூச்சு வரை இருக்குமோ,

எவருடைய எழுத்தினால் இருண்ட உள்ளங்களில் ஒளி பிறந்தனவோ

எவருடைய எழுத்தினால் முற்போக்கு எண்ணங்கள் தலை தூக்கினவோ

அந்த எழுத்தாளைரை சந்தித்த சிறப்பான நாள்.

அவர் ஜெயகாந்தன்.

நான் எழுத்தில் மட்டுமே தரிசித்த ஒரு மாபெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்து

உரையாடிய அரைமணி நேரத்தின் தொகுப்பு இக்கட்டுரை.

காலை ஏழு மணியிலிருந்தே உள்ளுக்குள் பரபரப்பு. இதயத்தின் துடிப்புச் சத்தம்

என் செவிகளில் கேட்டது.

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? தடுமாற்றத்தின் உச்சத்தில் கரையத்தொடங்கின மணித்துளிகள்.

தனது படைப்பை போலவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படைப்பாளரை

அவரது இல்லத்தில் சந்திக்கப்போவதை நினைத்தாலே லட்சம் பூக்கள் மொத்தமாக மனசெல்லாம் பூக்க ஆரம்பித்தன.

முத்தமிழ் இணைய குழுமத்தின் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா அவர்கள் எழுதிய "ஜெயகாந்தனுடன் சில நிமிடங்கள்" தொடரை

நகலெடுத்து அவரிடம் சமர்பிக்க் வேண்டிய முக்கியமான பணி எனக்குத் தரப்பட்டிருந்ததாலும் அந்தப் பணியை சிறப்பாக செய்துமுடிக்க வேண்டியதாலும் என் பதட்டம் அதிகமாகிக்கொண்டே போனது.

மாலை 4.45க்கு நானும் கவிஞர்.லாவண்யாவும் அவரது வீட்டிற்கு சென்றோம்.

அவரது வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த முதல்நொடி எத்தனை வருடமானாலும் வாடாத மலராய் என் உயிருக்குள் மலர்ந்து நிற்கும்.

அது ஒரு அழகிய வீடு. தமிழின் புதல்வரின் பாதங்களை சுமக்கும் வீட்டுச்சுவரை விமானத்தை தொட்டுப்பார்த்து வியக்கும் ஒரு கிராமத்துச்சிறுவனாக தொட்டுப் பார்த்து நெகிழ்ந்தேன்.

அவரது வீட்டு மொட்டைமாடியில் தென்னங்கீற்றில் வேயப்பட்ட கொட்டகையில்

அவர் இருப்பதாக அறிந்து,மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன்.

அந்தக் கீற்றுக்கொட்டகையினுள் வீற்றிருந்தது இலக்கியச்சிம்மம்.

அவரைப் பார்த்தவுடன் சிலிர்த்துவிட்டது என் இதயம்.

மலர்ந்த புன்னகையுடன் வரவேற்று தன் அருகில் அமரச்சொன்னார் அந்த எழுத்துச் சக்கரவர்த்தி.

இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளரின் அருகில்

மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தேன்.

சீதாம்மா எழுதிய தொடரை அவரிடம் கொடுத்தேன். வாங்கி படிக்க ஆரம்பித்தார்.

நான் அவரை படிக்க ஆரம்பித்தேன்.

அவர் உடல் தளர்ந்திருந்தது. அது முதுமையின் அடையாளம்.

ஆனால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தளராமல் நிமிர்ந்து நிற்கும் அவரது எழுத்துக்கள். இது அவரது இலக்கிய ஆளுமையின் அடையாளம்.

ஒவ்வொரு பக்கமாக நிதானமாக படிக்கத்தொடங்கினார். ஒரு ஆழ்ந்த மெளனம் அங்கே நிலவியது.

பின்னர் என்னுடைய “மயிலிறகாய் ஒரு காதல்” கவிதை நூலை அவருக்கு கொடுத்தேன்.

ஆர்வமுடன் வாங்கி சில கவிதைகள் படித்தார்.

பின் மெதுவாக பேச்சைத் தொடங்கினோம்.

கேட்கின்ற கேள்விக்கெல்லாம் உடனே வந்து விழுந்தது பதில்.

ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு வெண்முத்துக்கள்.

அரைமணிநேர அற்புத நிமிடங்களுக்கு பிறகு அந்த மாமேதையிடம் விடைபெற்று வீடு திரும்பினோம்.

வீடு திரும்பும் வழியில் அவரது நாவல் ஒன்று நினைவில் பூத்தது.

“ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம்” நாவலில் கதையின் நாயகன் ஒரு லாரியில் சென்றுகொண்டிருப்பான். வழியில் சாலையோரக் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணண அவன் பார்ப்பான்.

அருகில் இருப்பவர்கள் இந்த செயல் தவறானது என்று கூறும்போது, இதற்கு முன்னால் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்தேனே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பான்.

இந்தக் கேள்வியின் பாதிப்பு பலநாட்களாய் என்னை பாதித்த கேள்வி. இப்படியும் எழுத இயலுமா என்று எண்ணவைத்த கேள்வி.

அந்தக் கேள்விக்கு சொந்தக்கார எழுத்தாளரை,

எழுபத்தி நான்கு வயது குழந்தை மன கலைஞரை சந்தித்த அதிஅற்புத நிமிடங்களை கடைசிமூச்சு உள்ளவரை அசைபோடும் என் உயிர்.

நெகிழ்வுடன்,

நிலாரசிகன்.

Wednesday, March 05, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 3




1.எதிர்பாரா தருணங்களில்
கிடைக்கின்ற முத்தம்
மின்னலடிக்கும் வெட்கம்.

2.இரவு நதியில் மிதக்கின்ற
என் பிம்பத்தில் ஒளியெறிந்து
விளையாடுகிறது நிலா

3.எவ்வளவு முயன்றும்
எழுத இயவில்லை
என்னால்.
எதுவுமே செய்யாமல்
எழுதிச் செல்கிறாய்
நீ.

4. பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறேன் அம்மாவின்
கதைகளை,நினைவுகளில்.

Thursday, February 28, 2008

பொம்மையாதல்...




உன் ஆதிக்கத்தை
முழுமையாக
தாங்கிக்கொண்டு
நிழலாக தொடர்கிறது
என் நிஜங்கள்...

மிகச்சிறந்த ஓவியத்தை
தனதாக்கிவிட்ட பெருமையில்
வலம் வரும் உன் காலடியில்
சிதைந்த ஓவியமாய்
நசுங்குகிறது
என் விருப்பங்கள்..

என் பதில் எதிர்பாராத
கேள்விகளுடன் துளைத்தெடுக்கும்
உன் முன்னால் ஒரு
பொம்மையாக தினம்தினம்
உணர்வற்றுப்போகிறது
என் பெண்மை.

-நிலாரசிகன்.

Monday, February 25, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 2


1.பறந்து கொண்டே புணர்கின்ற
வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு
வெட்கி சிவக்கிறது கிழக்கு.

2.கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள்
அறிவதில்லை காயத்தின்
ஆழங்களை.

3.அறியாத காரணத்துடன்
சத்தமிட்டு அழுகிறது குழந்தை
இழவு வீட்டில்.

4.குளத்தில் தவறி விழுந்தது
தூண்டில்.
சிரித்துக்கொண்டன மீன்கள்.

5.அடைமழையிலும் அழியவில்லை
குறவன் கல்லறை மேல்
காக்கை எச்சம்.

6.கையசைக்கும் கற்பூரம்
ஆராதனை தட்டில்
வேசியின் சில்லரை

7.சட்டையெல்லாம் சேறு
அழுக்கு அப்பா என்று
சிரிக்கிறது குழந்தை.

8.கவிதையற்ற இரவெல்லாம்
சத்தமிட்டு அழுகிறது
மெளன நிலா.

படம் உதவி : இலக்குவண்

Friday, February 22, 2008

குட்டிக் கவிதைகள்


1.நகம் பெயர்த்த கல்லில்
விட்டுவந்தேன் என்
ரத்தத்தின் சுவடுகளை.

2.கால்நடைகளின் தடங்களில்
தேங்கி இருந்தது மழைநீர்
வறண்ட ஆற்றின் நடுவில்.

3.செம்மறி ஆடுகளின்
பின்னால் செல்கிறான்
பள்ளிகண்டிராத சிறுவன்.

4. வேர்நனைக்கும் நதிக்கு
பூமுத்தங்களை பரிசளிக்கிறது
நதியோர வேப்பமரம்.

5.அறிமுகமாகாத மனிதர்களுக்கும்
கையசைத்து மகிழ்கின்றனர்
ரயில்நிலைய பைத்தியங்கள்.

6.புழுதிபடர்ந்த பூக்களிலும்
தேனெடுக்க வந்தமர்கின்றன
பட்டாம்பூச்சிகள்.

7.கடற்கரையில் பறக்கின்ற
பட்டங்களுடன் போட்டிபோடுகின்றன
சுண்டல் விற்ற தாள்கள்.

8.அடித்து துவைக்கிறாள்
கைநீட்டிய கணவனின்
சட்டையை.

Thursday, February 14, 2008

கவிதைக்கு சொந்தக்காரி - சில குறிப்புகள்...




மார்கழி மாதமொன்றின் அதிகாலையில தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்.

தேவதைகளின் நிறம் கறுப்பென்று வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்.

அனிச்சமலர் மனசுக்குள் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்.

மின்னஞ்சல் பெட்டியை முத்தங்களால் நிரப்பி சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்.

கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றுதின்ற பிஞ்சுமன வஞ்சியவள்.

பூங்குயில் குரலால் இறைபாடல் பாடுகின்ற குழந்தைமன பெண்ணவள்.

என் இதயசிம்மாசனத்தில் நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும் சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்.

இதயத்தில் துவங்கிய காதல் கண்களின் சந்திப்பைக்காண ஏழுமாதம் தவமிருந்தவள்.

முதல் சந்திப்பில் மொழி மறந்து பேச தவித்த பொழுதில் கண்சிமிட்டாமல் சிலையானவள்.

கனவுகளுடன் திரிந்தபோது என் கனவுகளை தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்.

சொல்லித் தெரிவதில்லை காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்.

அவளை அறிமுகப்படுத்திய நண்பனே எட்டப்பனாக மாறியதில் துடிதுடித்தவள்.

கவர்ந்து சென்று வாழ பொருள்தேடி தலைநகரம்
நான் பயணித்த காலத்தில் கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்.

என் கையெழுத்தும் கவிதை என்று கடிதமெழுதிய அவள் பேனாவின் மைத்துளிக்குள் தன் காதலைச் சுமந்தவள்.

வேலைகிடைத்த செய்தியை சொல்வதற்கு தொலைபேசியில் அழைத்தபோது அழுதுகொண்டே வாழ்த்தியவள்.

அழுகையின் காரணமறியாமல் ஆனந்த கண்ணீரென்று நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில் தொலைபேசியில் அழைத்தவள்.

நீண்ட மெளனம் உடைத்து திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை செவிக்குள் சொல்லியழுதவள்.

தவித்து,துடித்து,துவண்டு,அழுது,அடங்கி,வதங்கிய பூவாக மணமேடை ஏறியவள்.

சிறகுகளை இழந்துவிட்டு சிலுவைகளை சுமந்துகொண்டு மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்.

வானத்தை இழந்துவிட்ட நிலவு இன்று எங்கோ ஒரு கானத்தில் காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது.

பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி தொலைந்த காதல் இன்று சட்டைப்பையிலிருந்து வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்
அவள் நினைவுகளின் கனத்தை தள்ளாடியபடி சுமந்து பயணிக்கிறது.

Wednesday, February 13, 2008

அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்....



1.வேலை முடிந்து வந்தபின்
என் கேள்விகளுக்கு
பதில்பேசாத அம்மாவையும்
அப்பாவையும் போலவே
அமைதியாய் இருக்கின்றன
இந்தக் கம்பிகள்.

2.அம்மா,அப்பாவின்
கைகளை நினைத்துக்கொண்டு
இறுகப்பற்றுகிறேன்
ஜன்னல் கம்பிகளை.

3. வண்ண வண்ண
உடைகளை வாங்கித் தர
உழைக்கிறோம் என்றனர்
அம்மாவும் அப்பாவும்.
என் கனவுகள் மட்டும்
கறுப்புவெள்ளையாகி போனதை
உணராமல்.

4.மிருக காட்சி சாலைக்கு
மட்டும் என்னை அழைத்து
சென்றுவிடாதீர்கள் அப்பா
இரும்புக் கம்பிகளுக்கு பின்
அழுகின்ற மிருகங்களுக்கு
என் கண்ணீரின் மொழி
புரிந்துவிடும்!

5.பெற்றோரை வணங்க
வேண்டும் என்றார் ஆசிரியர்.
இப்பொழுது புரிகிறது
கடவுள் போல் கண்ணுக்குத் தெரியாததால்
வணங்க சொல்கிறார் என்று.

6. அப்பா அடித்துவிட்டதற்காக
அழுகிறாள் எதிர்வீட்டு ஒவ்யா.
அடிப்பதற்குகூட அப்பா
அருகில் வருவதில்லையே
என்று அழுகிறேன் நான்.


படம் உதவி: இலக்குவண்.

Tuesday, February 12, 2008

தருணங்கள்...



உன் விரலின் ஸ்பரிசம்
உணர்த்திய பூமாலையின்
பூவாக வாசம்வீசுகிறது
பரிபூரணமாய் என்னை
உன்னிடம் தந்துவிட்ட மனசு..

என்னை உனக்கு
துணையாக்கும்
மஞ்சள்கயிற்றில் சட்டென்று
ஊஞ்சலாடி மறைகிறது
என் தாவணிப் பருவத்தின்
நினைவுகள்..

வர்ணிக்க முடியாத
ஆனந்தத்தில் திளைத்து,
வெட்கத்தில் அழகாக
நகர்கிறது
உனதாகப்போகின்ற என்
மெளனத்தருணங்கள்...


படம் உதவி: இலக்குவண்

Friday, February 08, 2008

என் கறுப்புத்தங்கம்




என் பாதையெல்லாம் முட்களாய் இருந்தபோது என்னோடு பயணித்தவளே...

இன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்
கோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....

நீ இல்லாமல் போனதால் காவியங்கள் எழுத வேண்டிய
என் பேனா கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருக்கிறது..

நம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று
தூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...

முட்டை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..

புல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்
ஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்
வலியுடன் நடமாடுகிறேன்.

கண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன
மழைத்துளிகள்..

கண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்
நினைவுத்துளிகள்..

காதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை
காலத்தால் கரைக்கமுடிவதில்லை.

சிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்
உலர்ந்துவிடுவதில்லை.

புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்
மினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை
சுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.

சுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை
நினைவூட்டுகிறது தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.

தோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக
மாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல் தவித்திருக்கிறேன்..

ஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு மறையும் உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.

பின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும் வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..

பந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்
பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன் சிரிக்க பழகிவிட்டேன்.

எனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.

காலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.
காதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.

ஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.

Thursday, January 31, 2008

மறக்கப்படுதலுக்கான உரையாடல்...

வேலைக்காரிக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தேர்ச்சி பெற்றார்
பாட்டி.

வேலைக்காரனுக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தோல்வி அடைந்தார்
தாத்தா.

அடுக்களை கிடைத்தது
பாட்டிக்கு.
திண்ணை கிடைத்தது
தாத்தாவுக்கு.

மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.

Monday, January 28, 2008

நீ,நான்,காதல்(குறுந்தொடர்) - 2. காதல்காலம்


2.காதல்காலம்:

அவன்:

அதிகாலை பனித்துளியில்
குளித்த ரோஜாவொன்றை
உனக்குத் தந்து "விரும்புகிறேன்"
என்று சொல்லிவிட்டு
வேகமாய் வந்துவிட்டேன்.
கண்மணி!
அந்த சிறுரோஜாவுக்குள் புதைந்து
இருப்பது சொல்ல முடியாமல்
தவித்த என் காதலும்,
சிதையிலிட்டாலும் மாறிவிடாத
என் நேசமும்.

அவள்:

இதயத்தின் நான்கு
அறைகளிலும் ஒலிக்கிறது
நீ சொன்ன காதல்வார்த்தை.
ஒரு தேவதையை போன்ற
மிடுக்குடன் என் வீடு செல்கிறேன்
நீ தந்த ரோஜாவுடனும்
உனக்கென நான் வாங்கி வந்த
ரோஜாவுடனும்!

அவன்:

என்னை மறந்து
வானம்பார்த்து புன்னகைத்துக்
கொண்டிருந்தேன்..
தன்னைப் பார்த்து
புன்னகை செய்வதாக
எண்ணிச் சிரிக்கிறது
அந்த வான் நிலா..
பகல்நிலவு உனக்கு மட்டும்தானடி
என் புன்னகை சொந்தம்
என்று எப்படி புரியவைப்பேன்?

அவள்:

எதிர்வீட்டு குழந்தைக்கு
அதிகமாய் இன்று
நான் முத்தமிட்டதை
சந்தேகத்துடன் பார்த்துச் செல்கிறாள்
அம்மா.
குழந்தையென உன்னை
எண்ணி நான் தருகின்ற
முத்தங்கள் உன்னைச் சேர்கின்ற
நாளுக்காக காதலுடன் காத்திருக்கிறேன்.

அவன்:

கடற்கரையில்
கடல்ரசித்து அமர்ந்திருந்தோம்.
உன் பொன்விரல்களால்
மணலில் கோலமிட்டுக்கொண்டு
தலைகவிழ்ந்திருந்தாய்..
உன் விரல்பற்றிக்கொள்ள
நினைத்து இயலாமல்
அலைரசிக்கிறேன் நான்.

அவள்:

ஏதேதோ பேசிவிட எண்ணி
எதுவும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன்.
ஊமையாக வாழவும் சம்மதம்
நாளெல்லாம் காதல்மொழி
நீ பேசினால்.

அவன்:

தினமும் சந்திக்கிறோம்.
ஒன்றாக உணவருந்துகிறோம்.
ஒரே பேருந்தில் பயணிக்கிறோம்.
இந்த பிறப்பு முழுவதும் பேசினாலும்
தீராத காதலை நெஞ்சுக்குள்
சுமந்துகொண்டு
திருக்குறளென இருவரிகள்
மட்டும் பேசுகிறோம்.

அவள்:

உன்னிடம் பேச
நினைத்ததையெல்லாம்
என் வீட்டு செவ்வந்திச் செடியிடமும்
என் ப்ரிய நாய்குட்டியிடமும்
பேசித் திரிகிறேன்.
எனக்கென்று ஒரு தனியுலமே
உருவாக்கித் தந்தவன் நீ.
மழையைத் தாங்கும் மண்ணைப் போல்
காத்திருப்பேன் வாழ்வெல்லாம்
உனக்காக.

அவன்:

உன் விரலோடு விரல்
கோர்த்து வெகுதூரம்
நடக்க வேண்டும்.
நீ களைத்தால்
கையில் உன்னை ஏந்தி
நம் பயணம் தொடர வேண்டும்.
நான் வேண்டும் வரமெல்லாம்
வண்ணமயில் நீ மட்டும்தான்.

அவள்:


நிலவாக,மலராக,தேன்சிட்டாக,
பட்டாம்பூச்சியாக
மனம் நிறைந்த கன்னியாக
ஒரே ஒரு வாழ்க்கையில்
பல முறை விதவிதமாக
வாழ்கிறேன் நீ தந்த
காதல் வரத்தால்.

3.ஊடல்காலம்:
(தொடரும்)

Thursday, January 24, 2008

இதயத்தில் ஈரம் இருந்தால் உதவுங்கள்...




தனக்கென வாழ்வதில் ஒரே ஒரு வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
பிறர்க்கென வாழ்வதில் ஓராயிரம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள காந்திஜி மறுவாழ்வு மையத்தில்
வழி தவறி வந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள்,வறுமையினால்
கைவிடப்பட்டவர்கள் என்று மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர்.(ஒரு குழந்தையால் பேச முடியாது)

திரு.வானரசு(இவருடைய தந்தையால் துவங்கப்பட்டதுதான் காந்திஜி மறுவாழ்வு மையம்)
இந்த குழந்தைகளை கவனித்து வளர்த்து வருகிறார்.

இவர் ஒரு முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர். இந்தக் குழந்தைகளுக்காக தன் வேலையை
துறந்துவிட்டு முழு நேரமும் இவர்களை கவனித்துக் கொள்கிறார்.

இவர்களுக்கு சரியான வசதியின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

கடந்த மாதம் இவர்கள் தங்கி இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு சுமார் இருபது
நாட்கள் அரசு பள்ளி வளாகத்திலும்,அரசு பொதுமருத்துவமனை வளாகத்திலும்
தங்கி இருந்தனர்.மழையால் மிகவும் துன்புற்றனர்.

தற்சமயம் பூந்தமல்லியில் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு மாத வாடகையாக ரூ 4,500 கொடுக்க வேண்டும்.

இந்தக் குழந்தைகளில் பலர் இலவச அரசு பள்ளியில் படித்தாலும் இரு குழந்தைகளை
ஆங்கில கான்வென்ட் பள்ளியில் சேர்த்துள்ளனர்.(இவர்கள் இருவருக்கும் மாதம் 500 ரூ கட்டணம் செலுத்தவேண்டும்.) அதில் ஒரு சிறுவன் 70 திருக்குறளை அழகாக
சொல்கிறான் - பெயர். கோகுல். வயது - 4



ஒவ்வொரு குழந்தைகளின் கண்களிலும் பெயர்சொல்லத் தெரியாத ஒருவித சோகம் வழிகிறது.

கோகுலத்தில் கோபியர்களில்
மடியில் விளையாடியவனை
இறைவன் என்கிறோம்.
இங்கே மழையிலும் பசியிலும்
தவிக்கும் கோகுலை
என்னவென்று சொல்வது?


நெஞ்சில் ஈரம் இருந்தால் உதவுங்கள் தோழர்களே.

பணம் அனுப்ப விரும்பும் அன்பர்கள் இந்த முகவரிக்கு அனுப்பலாம்.

Indian Bank Account Number : 450345237
Name: Gandhiji Rehabilitation Centre
Branch : Thirumazhisai

Postal Address:

Gandhiji Rehabilitation Centre.
603,Trunk Road,
poonamallee,
Chennai-56 Mobile: 9840931530


கனத்த நெஞ்சுடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 23, 2008

நீ,நான்,காதல் - குறுந்தொடர்





நீ
நான்
காதல்...

(குறுந்தொடர்)

1.பார்வைக்காலம்:

அவன்:

உன்னை முதன்முதலில்
சந்தித்தது நம் கல்லூரியின்
வேப்பமரத்தடியில்..
காற்றில் பறந்துவந்து என்
நெஞ்சில்மோதி விழுந்தது
சில வேப்பம்பூக்கள்.
நெஞ்சுக்குள் பவித்திரமாய் மலர்ந்தது
காதல்பூக்கள்.

அவள்:

தலைகவிழ்வதே வெட்கம்
என்று தவறுதலாக
எண்ணிவிட்டேன் உன்னை
சந்திக்கும் வரையில்..
இமைக்க மறப்பதே வெட்கம்
என்றுணர்ந்தேன்
உன்னை சந்தித்த முதல்நொடியில்!


அவன்:

தினம் தினம் சுமந்துவருகிறேன்
உன்னிடம் காதல் சொல்ல,
அழகழகான வார்த்தைகளை.
கண்சிமிட்டும் சிலை உன்னைக்
கண்டவுடன் மொழியற்று
ஊமையாகித் திரும்புகிறேன்.


அவள்:

இதழ் திறந்து என் செவிக்குள்
தேனூற்றிச் செல்வாய் என்று
காத்திருந்தேன்.
இதழ்பேசா உன் மெளனத்தால்
சிலையாகி நின்றுவிட்டேன்.

அவன்:

என் நீண்ட இரவுகளை
கடிதமாக்கி உன் முன்
சமர்ப்பிக்கிறேன்.
ஒரு அலட்சிய பார்வை தந்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.
முள்ளில் விழுந்த பறவையென
துடிதுடிக்கிறேன் நான்.

அவள்:

புல்லாங்குழலின் இசை கேட்கவே
உன்னிடம் வந்தேன்.
மூங்கிலை மட்டுமே எனக்கு
பரிசளிக்கிறாய் நீ.
கடிதத்தை தூர எறிந்துவிட்டு
என் காதோரம்
இதழ் திறந்து சொல்வாயா
உன் காதலை?

அவன்:

நிலவின் செளந்தர்யத்தை
உன் பூமுகத்தில் உணர்கிறேன்.
நிலவைப்போல் கடைசிவரையில்
எட்டாமல் போய்விடுவாயோ
என்றெண்ணியும் பரிதவிக்கிறேன்.

அவள்:

உன் வானில்
சிறகடித்து பறக்க விரும்பும்
சிறு பட்டாம்பூச்சி
நான்.
வானமாக
நீ மட்டுமே வேண்டும்
பெண்ணிலவும்
நான்.

அவன்:

பார்வைகளை பரிமாறிக்கொண்டே
வாழ்ந்துவிடுவேனா
காலம் முழுவதும்?
தேவதை உன் விழிக்குள்
என் முகம் பார்த்து
நாளை சொல்கிறேன் என்
காதலை.
இரவே கரைந்துவிடு
சீக்கிரம்.

அவள்:

நெஞ்சுக்குள் சுமந்து
திரியும் காதலை
நாளை உன்னிடம்
சொல்லப்போகிறேன்.
காதல் சொல்லத் தயங்கியவன்
சம்மதம் சொல்ல
தயங்கிவிடாதே!
வாடிப்போகும் இந்த
தாவணிமல்லி!

2.காதல்காலம்:

(தொடரும்)

Thursday, January 17, 2008

அன்புள்ள அம்மாவுக்கு...





(உலகில் உள்ள அத்தனை தாய்மாருக்கும் இந்தக்கவிதைகள் சமர்ப்பணம்)


1.மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.

2. எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.

3. எப்பொழுதும் திட்டாத அம்மா
அடிக்கவும் செய்தாள்
அப்பாவை நான் திட்டியதற்காக.

4.கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".

5.நான் சுற்றுலா செல்ல
தான் சிறுக சிறுக
சேமித்த பணத்தையெல்லாம்
ஒன்றுசேர்த்து என் கையில்
திணித்து வழியனுப்புகிறாள்.
அவளறியாமல்,
காயத்துப்போன அவள்
கைகளில் விழுந்து தெறிக்கிறது
என்
ஒற்றைத்துளி கண்ணீர்.

6.நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.

7. நிலவைக் காண்பித்து
நீ ஊட்டிய சோற்றின் சுவையை
எந்த உணவிலும் உணரவில்லை
உள்நாக்கு.

8. தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.

9. வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?

10.தோட்டத்து செடிகள்
எல்லாம் நீ வந்தவுடன்
இலையசைக்கின்றன...
செடிகளுக்கும் நீ
அன்னையானது எப்போது?

11. நம் வீட்டுக்குள்
மட்டுமே சிறகடித்துப் பறக்கிறாய்
நீ..
உன் சிறகடிப்பு கண்டு வளர்ந்ததால்
இவ்வுலகையே வலம்
வருகிறேன் நான்.

12. சொந்தங்கள் வார்த்தை ஆணிகளால்
உன்னை மெளனச் சிலுவையில்
அறையும் பொழுதெல்லாம்
நீ சிந்துவது ரத்தக்கண்ணீர் அல்ல.
வறுமைகண்டு மனம்தளரா
தன்னம்பிக்கை விதைகள்.

13.வீடு நிறைய செல்வம்
வந்தபின்பும் நீ
மாறிவிடவில்லை.
அதே பழையச்சோறும்
எலுமிச்சை ஊறுகாயுமே
உன் சிற்றுண்டி.

14.அன்று
கிடைக்காத வேலையும்
தொலைந்த நட்புமாய்
நான் தவித்த பொழுதெல்லாம்
ஆலமரமாய் நிழல்
தந்தவள் நீ.
இன்று விழுதாக மாறி
நிற்கிறேன் நான்.

15. கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.?

(தொடரும்)

Friday, January 11, 2008

காதல் பொங்கல்!




காதல் பொங்கல்!

1.உன் வீட்டில் பொங்கல்
கொண்டாடுவதில்லையென்று
வருந்துகிறாள் உன்
இளைய சகோதரி.
சர்க்கரைப்பொங்கலின் தங்கையடி
நீ என்று சொல்ல நினைத்து
முடியாமல் தவிக்கிறேன்
நான்.

2.கட்டிக் கரும்பு
நீ எனக்கு என்கிறேன்.
எப்படி என்று வினவுகிறாய்
விழிகளால்.
இழுத்தணைத்துக்கொள்கிறேன்.
கட்டிக் குறும்பு நீ
எனக்கு என்று காதோரோம்
முணுமுணுக்கிறாய்
நீ.

3.காளையை அடக்கியதால்
வீரன் என்று சொல்கிறது
இந்த உலகம்.
கன்னுக்குட்டி உன் அழகை
என் கண்ணுக்குள் அடக்க
தெரியாமல் விழிக்கிறேன்
நான்.

4.பொங்கலை கையில்
வைத்துக்கொண்டு கா கா என்று
காக்கைகளை அழைக்கிறாய்.
இதென்ன குயில்
கரைகிறதே என்று வியக்கின்றன
காகங்கள்.

-நிலாரசிகன்.

(அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:)

Tuesday, January 08, 2008

பூக்களில் உறங்கும் மெளனங்கள்...




உன்னிடம் மென்மை
எதிர்பார்த்து ஏமார்ந்து
முள்ளில் விழுந்த பூவென
நான் துடிக்கும் தருணங்களில்

தட்டானின் சிறகுகளை
பிய்த்தெறியும் ஒரு சிறுவனைப்போல்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
எனை ஆட்கொள்கிறாய் நீ.

ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
ஊமையாகிறது என் பெண்மை.

ஆயுதமற்ற போர்க்களத்தில்
தினம் தினம் பூக்கள் சுமந்து
வந்து சருகாகித் திரும்புகிறேன்.

கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
இயலாமல் விடியலுக்காக
காயங்களுடன் காத்திருக்கிறேன்
பூக்களில் உறங்கும் மெளனமாக.

Sunday, January 06, 2008

கவிதை நூல் வெளியீடு


அன்புள்ள நண்பர்களே,

என்னுடயை இரண்டாவது கவிதைப்புத்தகம்
"மயிலிறகாய் ஒரு காதல்" (சனவரி 5,2008) வெளியானது.

இணையத்தில் வாங்க விரும்பும் அன்பர்கள் இங்கே வாங்கலாம

சென்னை தி.நகரில்
உள்ள நியூ புக் லேண்ட்ஸ் கடையிலும் வாங்கலாம்.

முகவரி:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006


வாங்கி படித்து,பதிலிடுங்கள்...

உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் நண்பன்,
நிலாரசிகன்.