Sunday, November 22, 2009

சச்சின்,அ.முத்துலிங்கம்,திருச்செந்தாழை

சி மாதங்களுக்கு முன்பு பிலெடெல்பியாவில் இந்திய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது இரு அமெரிக்கர்கள் இது என்ன விளையாட்டு என்று கேட்டார்கள்.அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்துவிட்டு அவர்களையும் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கொண்டோம். பேஸ்பால் பந்தை எறிவதுபோல் அவர்கள் பவுலிங் செய்தது நகைப்பாக இருந்தது. விளையாடி முடித்த பின்னர் புல்தரையில் ஓய்வெடுக்க அமர்ந்திருந்தபோது ஒரு மூதாட்டி தன் செல்ல நாயுடன் அருகில் வந்தார். எல்லோரும் கிரிக்கெட் சிறப்பாக விளையாடினீர்கள் நான் தூரத்திலிருந்து ரசித்தேன் என்றார். எங்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

அவர்
ஒரு அமெரிக்க மூதாட்டி. அவருக்கு எப்படி கிரிக்கெட் தெரிந்தது? விசாரித்தவுடன் அவர் சொன்னவிஷயம் கேட்டு எங்ளுடன் விளையாடிய மற்ற இரு அமெரிக்கர்களே வியந்துபோனார்கள். அந்த மூதாட்டியின் பேரன் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். அவனுக்கு கிரிக்கெட் அறிமுகமானது அங்கேதான். அது மட்டுமின்றி சச்சினின் தீவிர ரசிகன் அவன். விடுமுறைக்கு அமெரிக்கா வந்தபோது சச்சின் விளையாடிய போட்டி ஒன்றின் டிவிடியை கொண்டு வந்திருக்கிறான். தன் பாட்டிக்கு கிரிக்கெட் பற்றியும் சச்சின் பற்றியும் சொல்லி இருக்கிறான். அந்த மூதாட்டி விடைபெறும் போது சொன்னார் "இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறேன் - சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் பார்க்க".

கிரிக்கெட்
வாசமே இல்லாத அமெரிக்காவில் சச்சின் பற்றி தெரிந்திருக்கிறதென்றால்,இதற்கு மேல் சச்சின் பற்றி என்ன சொல்ல? 30,000 சர்வதேச ரன்கள். டபிள்யூ.ஜி.கிரேஸ்,ஜேக் ஹாப்ஸ்,பிராட்மேன்,பாய்க்காட்,க்ரகாம் கூச் இவர்களெல்லாம் முதல்தர போட்டிகளில் பல ஆயிரம் ரன்களை கடந்தது நூற்றிற்கும் மேற்பட்ட சதங்களை அடித்தவர்கள். 16 வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்துவிட்டதால் அதிக முதல்தர போட்டிகளில் சச்சின் விளையாடியதில்லை. ஆனால் முப்பதாயிரம் ரன்கள் சர்வதேச அணிகளுக்கு எதிராக எடுத்திருக்கிறார் எனில் சந்தேகமின்றி பிராட்மேனுக்கு அடுத்த மிகச்சிறந்த வீரர் சச்சின் தான்.சச்சினுக்கு வாழ்த்துகள்.
-------------------------------------------------------------------------

ந்த வார ஆனந்த விகடனில் எழுத்தாளர் .முத்துலிங்கம் சிறுகதை "புதுப் பெண் சாதி" வெளியாகி இருக்கிறது. ஒரு நாவலை சிறுகதையாக எழுதி இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையில் ஒரு மளிகை கடை வைத்திருப்பவனின் மனைவியை பற்றிய கதை. கதையினூடாக இலங்கையின் அன்றைய நிலவரத்தை(1989) சுட்டிக்காட்டிய விதம் அருமை. கதையின் முடிவும் ரசிக்கும்படி இருந்தது. கச்சிதமாக சிறுகதை எழுத இந்தக்கதையை உதாரணமாக சொல்லலாம்.

ஆனந்த
விகடனுக்கு ஒரு கேள்வி. நட்சத்திர எழுத்தாளர்கள் ஏற்கனவே பெயர் பெற்றவர்கள். அவர்களது படைப்புகளை கேட்டு வாங்கி வெளியிடுவதில் என்ன பயன்? இளம் எழுத்தாளர்களுக்கு .வி ஒரு களமாக செயல்படலாமே?
---------------------------------------------------------------------------

பா.திருச்செந்தாழையின் "வெயில் நண்பன்,பிராத்தனை ஒரு பிரதேசம்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இவரது மொழி வசீகரிக்கிறது. ஒவ்வொரு வரியும் கவனமாக செதுக்கப்பட்ட சிற்பமாகவே தோன்றுகிறது.உமா மகேஷ்வரியின் சிறுகதைகளுக்கு பின் தனக்கென தனிமொழியை கையாளும் சிறுகதையாளராக பா.திருச்செந்தாழையை சொல்ல முடியும். பதிவர் மண்குதிரை இந்த நூலை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.பிடித்த வரிகள் சில:

"நினைவுகளின் குப்பைக்கூடையாய் நான் இருப்பதாக உணர்வதற்குச் சில காரணங்களிருக்கின்றன. எந்த வேலையையும் ஆயுளுடன் பிணைத்துக் கனவு காணாமல் அனுபவங்களின் வெவ்வேறு பக்கமாய் மாற்ற முயன்று ஊடுநரைகள் எழத்துவங்கிய இந்த வயதிலும் நிலையற்ற வாழ்வுடனும், திருப்தியுறா மனநிலையுடனும் நகரின் வெவ்வேறு சந்திப்புகளில் சாலையைக் கடப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். சில நிகழ்வுகளின் மெளனசாட்சியாகவும், இன்னும் சிலவற்றின் மையப்புள்ளியாகவும் ஆனவிதம் நிறைகின்றது நாட்களின் பல கணங்கள். "

"""காலம் ஒரு திருடனைப் போல அவளது வனப்புகளைக் களவாடிச் சென்றுவிட்டிருந்தது"


இன்று திருச்செந்தாழையின் திருமணம். வாழ்த்துகள் பல :) --------------------------------------------------------------------------------

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை என்றொரு பதிவு இரு மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். தகிக்கும் கோடை பாலையாக உருப்பெற்றிருக்கிறது.

உடல்
மனம்
இருத்தல்
இயல்பு
எதுவுமற்று
நான்...

-
நிலாரசிகன்.

Friday, November 20, 2009

வேறோர் உலகம்

1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன்
நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.

2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.

-நிலாரசிகன்.

Thursday, November 19, 2009

ஆலம்



பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
“ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
"நான் எதுக்கு போகணும்" ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
“அப்பாவ இன்னுங் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க சரவணா” பேச்சியக்காவின் குரல் தழுதழுத்தது.
“அப்பா தூங்கிட்டு கெடக்காவ அம்மாகிட்ட சொன்னா கேட்காம அழுவுறாவ” சொல்லிவிட்டு மரத்திலிருந்து இறங்கி என் வீட்டிற்கு ஓடினேன். கலைந்த தலையுடன் அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இரண்டு அக்காவும் அப்பாவின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார்கள்.அண்ணன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அவன் அழுவதை பார்த்தபிறகு எனக்கும் அழவேண்டும் போலிருந்தது.

திருச்சியில் பெரும் மளிகை கடைக்கு சொந்தக்காரர் அப்பா. சேர்க்கை சரியில்லாமல் எப்போதும் வேட்டைக்கும் சாராயகடைக்கும் திரிந்ததால் வியாபாரம் முடங்கிப்போனது. அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அப்பா மிகவும் உடைந்துபோயிருந்தார். பணம் கொழித்தபோது உடனிருந்த நண்பர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.கிராமத்திற்கு திரும்பிய பின்னர் குடிப்பழக்கம் அதிகரித்து சாவில் முடிந்தபோது என் மூத்த அக்கா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இரண்டாவது அக்கா பதினோராம் வகுப்பிலும் அண்ணன் ஏழாவதும் படித்துக்கொண்டிருந்தனர்.ஆறு வயது சிறுவனாக வலம் வந்துகொண்டிருந்தேன் நான்.அம்மா அதிகம் படித்ததில்லை. இருந்த சொத்தையெல்லாம் கரைத்துவிட்டு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.

சொந்தங்கள் அப்பாவின் இறுதி சடங்கிற்கும் பதினாறாவது நாள் விஷேசத்திற்கும் மறக்காமல் வந்து சென்றனர். “எப்படியெல்லாம் வாழ்ந்த குடும்பம் இப்படியாகிருச்சே” இடியைக்கூட தாங்கும் மனதில் இவைபோன்ற சொற்களின் தாக்கம் தாங்கமுடியாத வலியை அம்மாவுக்கு தந்திருந்தது. மூத்த அக்கா எங்கள் ஊர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தது கொஞ்சம் ஆறுதலை தந்தாலும் பணம் புழங்கிய வீட்டில் சில்லறைக்காசுகளின் சத்தம் மட்டுமே ஒலித்தபடி இருந்தது.

ப்பாவின் மறைவுக்கு பின் தினமும் அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டே உறங்குவேன்.சில இரவுகள் அம்மா உறங்கியதேயில்லை. கண்கள் மூடி இருந்தாலும் கண்களோரம் வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். மின்சாரம் இல்லாத நாட்களில் எல்லோரும் வீட்டின் முன்னறையில் ஒன்றுகூடுவோம்.அம்மா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.மடியில் தலைவைத்து நால்வரும் படுத்திருப்போம்.தனது பால்ய காலம் பற்றியும் குடியாலும் தகாத நட்பாலும் தடம் மாறிய அப்பாவை பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பாள் அம்மா.
மூத்த அக்கா திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற நாளில் ரயில் நிலையத்தில் வழியனுப்ப நின்றிருந்தோம். ஜன்னல்கம்பிகளோடு அக்காவின் விரல்களை பற்றிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள் அம்மா. உயிர்த்தோழியை பிரியும் வேதனையை ஒத்திருந்தது அந்த பிரிவு.

நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சக்திவேல் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன்.சக்திவேல் பத்தாவது படிப்பவன். அவன் வீட்டிற்கு பின்புறமுள்ள சிறிய மைதானம்தானத்தில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் விளையாட்டு மாலை ஆறு வரை தொடரும்.அவனது நண்பர்கள் முரடர்கள்.சிகரெட்டும் பாக்குமாக திரிபவர்கள். அங்கே விளையாட போகாதே என்று அம்மா தடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிவிடுவேன். அம்மாவின் வார்த்தைகளை மறுதலிப்பதற்கு அவளது பாசம் ஒரு காரணமா?

ஒரு நாள் விளையாட்டிற்கு பின் சக்திவேலும் அவனது நண்பர்களும் குடித்தார்கள்.அந்த அடர்கருப்பு நிற திரவத்தை தம்ளரில் ஊற்றி என்னிடம் நீட்டினான் சக்தி. வீட்டிற்கு வரும் வழியில் அப்பாவின் போட்டோ நினைவுக்கு வந்தது.வீட்டிற்கு ஓடி வந்து அழுதேன்.அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். தலையை கோதிக்கொண்டே "இனி அங்க வெளயாட போகாத தம்பி" என்றாள். தவறிழைக்கும் போதெல்லாம் அம்மா அதட்டியதே இல்லை.அவளது தீர்க்கமான மெளனத்தில் தவறுகள் அனைத்தும் சரியாக்கப்பட்டுவிடும். என் முதல் தோழி அவள்தான்.


ரண்டாவது அக்காவுக்கும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டாள். அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது.கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன் நான். அம்மாவிடமிருந்து வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள தான் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டதையும் சிறிய கதை வடிவில் எழுதி இருப்பாள். எதிர்பார்ப்புகளின்றி வாழ்வதை அம்மாதான் கற்றுக்கொடுத்தாள். பல மாதம் கழித்து ஊருக்கு அம்மாவை பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் நடந்தபோது சிறு வயதில் கோலிக்காய் விளையாடிய ஞாபகமும் பிள்ளையார் பந்து விளையாடிய ஞாபகமும் என்னை ஆட்கொண்டது.

வீட்டை நெருங்கி கதவை திறந்தேன்.வீட்டிற்குள் அம்மாவை காணவில்லை.
வீட்டுக்கு பின்னாலிருக்கும் சிறிய தோட்டத்தில் அம்மா தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு செடிகள் என்றால் உயிர். செவ்வந்தி,நந்தியாவட்டை,இருவாச்சி,ஜினியா,வாடாமல்லி,ரோஜா என்று தோட்டமெங்கும் பூஞ்செடிகள் நிறைந்திருக்கும். தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் நேரங்களிலெல்லாம் அம்மாவின் முகம் பூரிப்புடன் இருக்கும்.

நான் வருவதை கவனிக்காமல் மொட்டு விட்டிருக்கும் செவ்வந்தி செடியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்தது செவ்வந்தி.

-நிலாரசிகன்.

Monday, November 16, 2009

கூடல்திணை - இணைய இதழ்




துவங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இயங்கிக் கொண்டிருக்கும் யுகமாயினி குழுவிலிருந்து புதிய வரவாக கூடல்திணை இணைய இதழ் வெளிவர உள்ளது. இதன் சிறப்பு அம்சங்களாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது என்னவென்றால்

1.
வலையுலகிற்கு வெளியே கணினி பரிச்சயமற்ற ஏராளமான படைப்பாளிகள் மத்தியிலிருந்து
தேர்வு செய்த படைப்புகளை கூடல் திணை மூலம் வலையுலகில் பதிவு செய்வது,இதன் காரணமாக இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் வகையில் மூத்த படைப்பாளிகளது பங்களிப்பு அமையும்.உதாரணமாக முப்பது வருடங்களுக்கு முன்பாக தமிழ் கவிதையுலகை புரட்டி போட்ட ”சனங்களின் கதை” கவிதை தொகுப்பினைப் படைத்த பேராசிரியர் பழமலய்,ஈழத்து மூத்த படைப்பாளி எஸ்பொ,எழுபதுகளிலேயே நவீன எழுத்தை தொட்டு படைப்புலகில் சலனத்தை உண்டாக்கிய இந்திரா பார்த்தசாரதி,தமிழின் முதல் சிற்றிதழான “எழுத்து” துவக்கம் இன்றைய யுகமாயினி வரை,சிற்றிதழ் சேகரிப்போடு சிறந்த விமர்சகராகவும் விளங்கும் வே.சபாநாயகம்,அறிவியற் புனைக்கதையில் விருதுபெற்ற ஏராளமான ஆர்த்தர் சி.க்ளார்க் படைப்புகளை மொழிபெயர்த்த உலோ.செந்தமிழ்க்கோதை இன்னும் பலர் இடம்பெறுவர்.மட்டுமல்லாது இணைய இதழ்களில் தனது எழுத்தால் கவர்ந்த இரா.முருகன் தன்னுடைய மூன்றாவது விரல் புதினத்தின் இரண்டாது பாகத்தை இதில் துவங்குகிறார்.இரா.முருகனை போன்றே இணையயுலகில் பரிச்சயமான ஏராளமானோர் இதில் இடம் பெறுவர்.

2.
யுகமாயினின் கட்டமைப்பை போன்றே கூடல் திணையிலும் மூத்த படைப்பாளிகளுடன் இன்றைய இளம் படைப்பாளிகளும் இடம்பெறுவதோடு அவர்களில் குறிப்பிட்ட சிலர் தேர்வுசெய்யப்பட்டு அச்சு இதழ் யுகமாயினியில் இடம்பெறுவர்.

3.
ஒருங்குறித் தமிழ் எழுத்துருக்களில் இதுவரை எந்த இணைய இதழிலும் பயன்படுத்தாத pdsoftware.in& higopi.com வடிவமைத்துள்ள அலங்கார சிறப்பு ஒருங்குறி எழுத்துருக்களை கூடல்திணை பயன்படுத்தி இருக்கிறது.

4.
இணைய இதழ்களின் வரலாற்றில் கூடல்திணை அடுத்த இலக்கை நோக்கி பயன்படுகிறதென்று இதழ் ஆசிரியர் சித்தன் தெரிவித்தார்.அவருடன் செயலாற்ற அணிற்பிள்ளையாக நானும் இணைந்துள்ளேன்.

தற்போது சோதனை ஓட்டமாக டிசம்பர் 31,2009 வரை செயல்படும் கூடல்திணையின் தற்காலிக முகவரி:

http://viruba.com/chiththan/index.aspx

Saturday, November 14, 2009

குழந்தைக் கவிதைகள் பத்து :)



அ)
அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

ஆ)
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

இ)

கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

ஈ)
அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

உ)
மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

ஊ)
இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

எ)
இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

ஏ)

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

ஐ)

எப்போதும் கண்டிராத
ஓவியங்கள் சிலவற்றை
விற்றுக்கொண்டிருந்தாள்
அந்தச் சிறுமி.
சருகு நிறத்தாலான
அவளது பாவாடையை
நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
ஒவ்வொரு ஓவியம்
விற்றவுடன்
தன் பாவாடை முயல்களிடம்
ஏதோ பேசுகிறாளவள்.
இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
சூரியக்கரங்கள்.
நிலவில் உருப்பெறுகிறது
ஓர் முயலோவியம்.

ஒ)
யாருமற்ற அறைக்குள்
தன் பொம்மைகளுடன்
நுழைகிறாள் நட்சத்திரா.
அவளது மழலையை
உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
அவள் கேட்கும்
கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
கதவு திறக்கும் சத்தம்
கேட்டவுடன் ஊமையாகி
அசையாமல் நிற்கின்றன.
வேலை முடித்து
வீட்டிற்குள் வருகின்ற
அம்மா பொம்மையிடம்
பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

***********************************************************************

குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)

-நிலாரசிகன்.

Thursday, November 12, 2009

பிடித்த பதிவர்!!

பதிவர் முத்துக்குமார் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். இதன் விதிமுறைகளை நான் பின்பற்ற வில்லை.(Break the rules!!,
தமிழகத்தில் உள்ளவர்களை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற விதிமுறையை மட்டும் ஏற்றுக்கொண்டேன்))

பிடித்தவைகளை மட்டுமே பதிவிடுகிறேன்.


எழுத்தாளர்


பிடித்தவர்:
கண்மணி குணசேகரன்,உமா மகேஷ்வரி

அதிகம் பிடித்தவர்:சுஜாதா,வண்ணநிலவன்

ஓவியர்

பிடித்தவர் : மருது

மிகவும் பிடித்தவர்: கவிஞர்.வைதீஸ்வரன்



*

கவிஞர்


பிடித்தவர்: வைரமுத்து

மிகவும் பிடித்தவர்:கல்யாண்ஜி

*

இயக்குனர்


பிடித்தவர்:ஸ்ரீதர்


மிகவும் பிடித்தவர்: மணிரத்னம்

*

நடிகர்


பிடித்தவர்:ரஜினி


மிகவும் பிடித்தவர்: ரகுவரன்,எம்.என்.நம்பியார்

*

நகைச்சுவை நடிகர்:


பிடித்தவர்: அசோகன்,டி.எஸ்.பாலையா,நாகேஷ்

மிகவும் பிடித்தவர்: கவுண்டமணி

நடிகை


பிடித்தவர்: மீனா

மிகவும் பிடித்தவர்:ஜோதிகா

*

இசையமைப்பாளர்


பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்

மிகவும் பிடித்தவர்: இசைராஜா

*

பாடகர்


பிடித்தவர் : ஜேசுதாஸ்

மிகவும் பிடித்தவர்: ஜெயசந்திரன்

*


பதிவர்


பிடித்தவர்: கேபிள் சங்கர்(வெரைட்டியாக தினமும் எழுதுவதால்,போரடிக்காத எழுத்துக்காகவும்)

மிகவும் பிடித்தவர்: கண்ணாடியில் தெரிபவர்(எனக்கே என்னை பிடிக்கவில்லையெனில் வேறு யாருக்கு
என்னை பிடிக்கும்? :)

*

நான் அழைப்பவர்கள்:

இந்த இடுகைக்கு பின்னூட்டமிடும் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று உங்களுக்கு
பிடித்தவைகளை பதிவிடலாம்.

உன் மெளனங்கள்



காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள்.

(மீள்பதிவு)

Tuesday, November 10, 2009

சச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1







ஆஸ்திரேலியா = சச்சின்


ஒருநாள் கிரிக்கெட்உலககோப்பை தொடங்கப்பட்ட எழுபத்தி ஐந்தாம் ஆண்டிலிருந்து 90ம் ஆண்டு வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் கொடி
கட்டி பறந்த அணி மேற்கு இந்திய தீவுகள் அணி. விவ் ரிச்சர்ட்ஸ்,க்ளவ் லாயிட்,"பிக்பேர்ட்"கார்னர்,மால்கம் மார்ஷல்,மைக்கேல் ஹோல்டிங்
டெஸ்மான் ஹெயின்ஸ்,கிரினிட்ஜ் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி எதிரணியை அடித்து துவைத்து காயபோட்டுவிடும் சூரர்கள்
நிறைந்த மிக பலம் வாய்ந்த அணியாக மே.இ.தீவுகள் விளங்கியது.இரண்டு உலககோப்பை வெற்றி,மூன்றாவது உலககோப்பை பைனல் என்று அவர்களின் கை ஓங்கியே இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வீரராக ஓய்வு பெற்றதாலும் பணம் கொழிக்கும் கூடைபந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பலர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியதாலும் மே.இ.தீவுகளின் வீழ்ச்சி துவங்கியது. லாரா,ஹீப்பர்,சந்தர்பால் என்று ஒன்றிரண்டு சிறந்தவீரர்கள் "சோதா" டீமை வைத்துக்கொண்டு சில காலம் போராடி பார்த்தபோதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்தாளர் இல்லாத காரணத்தால் மே.இ.தீவுகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து ஜிப்பாப்வே,கென்யா போன்ற நாடுகளை மட்டும் அவ்வப்போது வெல்லும் சுண்டெலி அணியாக மாறிப்போனது.

இதற்கிடையே 87ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான உலககோப்பை இறுதிபோட்டியில் மைக் கேட்டிங் செய்த தவறால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா தன் வெற்றிப்பயணத்தை துவங்கியது. ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்த உலககோப்பையில்(92ல்) தோல்வியை தழுவியது. ஆனால் தொண்ணுறுகளில் துவக்கத்தில் பல மிகச்சிறந்த வீரர்களை ஆஸி உருவாக்கியது மார்க்வா,மெக்ரா,ஷேன் வார்ன் அதன்பிறகு பாண்டிங்,மைக்கேல் பெவன்,ப்ர்ட் லீ.

இதற்கு காரணம் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்தவரும் பதினோராயிரம் ரன்களை தாண்டியவருமான ஆலன் பார்டர்.மற்றும் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியே ஆஸி அணியை பலவெற்றிகளை பின்னாட்களில் குவிக்க காரணமாக இருந்த ஸ்டீவ் வாக்.

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை பார்த்து எந்தவொரு இளம் வீரனும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டீவ் வாக் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.சுயீங்கம் மென்று கொண்டே விளையாடுவார். ஆனால் ஆட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பிட்ச்சில் அவரது கால் ஒட்டிக்கொண்டதோ என எண்ணும் அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.(99ம் ஆண்டு உலககோப்பை - தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி சிறந்த உதாரணம்)


96ம் ஆண்டு இறுதிபோட்டியில் இலங்கையிடம் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ஆஸி அணியினர். பல வெற்றிகளும் சில தோல்விகளுமாக திரிந்த ஆஸி அணி 99ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்
வீழ்த்த முடியாத வலுவான அணியாக உருப்பெற்றது. பந்தைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கில்கிறிஸ்ட்,ஆஸி அணியில் இடம்பிடிக்க போராடி பல தடைகளை தாண்டி தானொரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்த ஹெய்டன்,கல்கத்தாவில் ஒர் இரவு விடுதி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக முன்பு குற்றம்சாட்டபட்டு விளையாட்டு பையனாக திரிந்து பின் விஸ்வரூபமெடுத்த பாண்டிங்,மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் மார்க்வா,ஒன் டே ஸ்பெசல் மைக்கேல் பெவன்,சுழல் சூறாவளி வார்னே,துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மூர்ச்சையாக்கும் மெக்ரா,கில்லெஸ்பி இவர்களை அனைவரையும் சத்தமின்றி வழிநடத்தும் ஸ்டீவ் வாக். இத்தனை சிறந்த வீரர்களை கொண்டு சென்ற இடமெல்லாம் பெரும் வெற்றிகள்(5 போட்டிகளில் எனில் 5-0 என்று எதிரணியை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்) குவித்து வீறு நடை போட துவங்கியது ஆஸ்திரேலிய அணி.

அதன்பிறகு தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி,2003,2007 உலககோப்பை வெற்றிகள் என ஆஸியின் பலம் ஓங்கியபடியே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தேர்வும் கிரிக்கெட்டில் Professional Approach ம் எனலாம். சிக்ஸ்ர்களாக தூள் பரத்தும் சிமெண்ட்ஸ் கூட அணியின் கட்டுப்பாட்டை மீறியதால் அணியிலிருந்தே தூக்கப்பட்டார். வி.பி தொடரில் பைனலுக்கு செல்ல முடியாமல் ஆஸி தோற்றதால் அணியின் கேப்டன் பதவியும் அணியில் இடமும் பறிபோனது ஸ்டீவ் வாக்கிற்கு.ஒரு போட்டியில் சரியாக விளையாடாவிட்டாலும் அணியில் நீடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியையும் தங்களது கடைசி போட்டியாக எண்ணி முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள் ஆஸி அணியினர். அதனால் எந்த கட்டத்திலும் போராடும் குணம் அவர்களுக்கு உண்டு. பிட்புல் நாய் போல் சாகும் வரை வெறியும் கோபமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் வெற்றி ஆஸிக்கே என்னும் நிலை. தங்களது சொந்த மண்ணில் கேட்கவும் வேண்டுமா? இருவருடங்களுக்கு ஒருமுறை ஆஸிக்கு சென்று நாயடி பேயடி வாங்கி திரும்புவார்கள் இங்கிலாந்து அணியினர். ஆஸ்திரேலிய பிட்ச் வேகபந்து வீச்சுக்கு சாதகமானது. அங்கே சதமடித்தால் இந்தியாவில் 300 அடிப்பதற்கு சமம்.




ப்பேர்பட்ட ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை அடித்த சதங்களில் டாப் டென் என்று வரிசை படுத்தினால்
அதில் பந்தொன்பது வயது அமுல்பேபி ஒருவரின் சதமும் அடங்கும். அவர் நம் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய வீரர்கள் கவாஸ்கர் உட்பட ஆஸி மண்ணில் திணறியதாக சரித்திரம் சொல்கிறது. எண்பதுகளின் துவக்கத்தில் சந்தீப் பட்டேல் அடித்த 174 ரன்களுக்கு பின் Spectacular Innings என்று எதுவுமில்லை. உடம்பில் அடிவாங்கி தட்டுத்தடுமாறி நூறு ரன்கள் எடுப்பதற்கு பதில் கிரிக்கெட்டை விட்டே ஓடிவிடலாம் என்று நினைக்க தோன்றும்.காரணம் மெக்டமர்ட் போன்ற மிக வேக பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள்.

உலகின் வேகமான பிட்ச் என்றழைக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆஸியின் வேக பந்துவீச்சாளர்களை தடுத்து,அடித்து ஆடிய சச்சின் எடுத்த சதம் கண்டபின் உலகமே "Boy Wonder" என்று சச்சினை புகழ ஆரம்பித்தது.

ஆறு ரன்களும் நான்கு ரன்களும் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை எப்படி அடிப்பது என்பதில்தான் சச்சின் தனித்து நிற்கிறார்.ஆங்கில அகராதி தொலைந்துவிட்டால் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை கொண்டே மீண்டும் உருவாக்கிவிடலாம் என்பார்கள். அதுபோல் கிரிக்கெட் பற்றிய விளக்க நூல் தொலைந்துவிட்டால் சச்சினின் ஆட்டத்தை கொண்டே மீண்டும் உருவாக்க முடியும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். ஸ்கொயர் கட் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்,கவர் ட்ரைவ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை போன்று ஒவ்வொரு ஷாட்டிலும் Sachin is a perfectionist!

அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் சதம் அடித்திருக்கிறார்.
குறிப்பாக சிட்னி மைதானம் பலமுறை சச்சினின் சதத்தை கண்டது. 2004ல் ஆஸி சுற்றுப்பயணத்தின்போது தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுவனிடம் பெயர் கேட்கிறார் சச்சின். அதற்கு அவன் தன் பெயரும் சச்சின் என்கிறான். சச்சின் என்பது இந்திய பெயராயிற்றே இது எப்படி ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை இன சிறுவனுக்கு சூட்டப்பட்டது? ஆர்வத்தோடு அவனது அப்பாவை கேட்கிறார். 92ல் சச்சின் சிட்னில் அடித்த 145 ரன்களை கண்ட பரவசத்தில் தனக்கு பிறந்த மகனுக்கு சச்சினென்று பெயரிட்டிருக்கிறார் அவர்!

சச்சின் சுள்ளான் அணிகளிடம் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் தட்டையான பிட்ச்சில்தான் சதமடிப்பார் என்று பரவலான கருத்தை சிலர் கொண்டிருக்கலாம். அது தவறு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள்,ஒன்பது சதம் எண்ணற்ற அரை சதம். இதைவிட வேறென்ன வேண்டும்? சச்சினால் இந்தியா ஜெயித்ததா என்கிற கேள்வி எழலாம்.

டைகர் உட்ஸ் கோல்பில் சிங்கம். ஸூமேக்கர் கார் ரேஸில் சிங்கம்.ரோஜர் பெடரர் டென்னிஸில் சிங்கம். காரணம்? இவை அனைத்தும் தனிநபர் விளையாட்டு. ஒருவேளை கிரிக்கெட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் சச்சினை சிங்கம் என்று வர்ணித்திருக்கலாம். பத்து சுண்டெலிகள் அதில் சில குள்ளநரிகள்(அசாரூதீன்,ஜடேஜா,மனோஜ் பிரபாகர்) இவர்களோடு போருக்கு ஒரு சிங்கமும் சென்றால் வெற்றி எப்படி கிடைக்கும்?

எப்போதும் 100% தருபவர் சச்சின்.அதனால்தான் ஆஸியோடு சச்சினை ஒப்பிட முடிகிறது.
கடைசி வரை போராடும் குணம்,எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வெற்றியை உடனே மறந்துவிட்டு அடுத்த போட்டியில் மீண்டும் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம்,தொடர்ந்து கிரிக்கெட் மீதான தீராக்காதல் இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் சச்சினுக்குமான மிக முக்கிய ஒற்றுமை. இந்த வெறி,இந்த ஈடுபாடு தொடர்ந்து இருப்பதால்தான் இருபது வருடங்களாக சிம்மசொப்பனமாக சச்சின் விளங்குகிறார்.

சச்சினுக்கும் அவரது பள்ளித்தோழர் காம்ளிக்கும் குரு ஒருவர்தான்.அவர் சமீபத்தில் மறைந்த அச்ரேக்கர். அவரிடம் இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேள்வி எழுப்பியபோது சச்சின் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவன் காம்ளி என்றார். அப்பேற்பட்ட காம்ளி காணாமல் போனது எதனால்? அவர் மைதானத்தை விட தன்னிடம் சிறப்பாக விளையாடுவார் என்றார் ஒரு மாடல் நடிகை. அதுமட்டுமின்றி ஹோட்டலில் அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில் சத்தமாக ஸ்பீக்கர் அலற ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பார் காம்ளி.அதனால் கிரிக்கெட் மீதான கவனம் குலைந்து காம்ளியின் ஆட்டம் மோசமடைந்தது. தொடர்ந்த ஈடுபாட்டினாலும் ஒழுக்கத்தினாலும் சச்சின் சிறந்த வீரர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக நம் முன் திகழ்கிறார்.கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் டான் பிராட்மேன் தனது கனவு அணியை வெளியிட்டபோது உலகமே வியந்துபோனது.காரணம் அந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர் மட்டுமே இருந்தது. அது சச்சின்.


மீண்டுமொரு சச்சின் வாசகத்தோடு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:

Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives.

- BBC Sports, on Sachin Tendulkar

-நிலாரசிகன்

Sunday, November 08, 2009

மழைப்பெண்





1.
வனப்பு தொலைந்த
மழைநாளில்தான் நிகழ்ந்தேறியது
நம் மரணம்.
குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்
கதறல்களை நீ
கேட்கவில்லை.
கிளை முறிந்து ஊனமாகும்
மரங்களின் மெளனம் நான்
உணரவில்லை.
ஒரு பறவை
உதிர்த்து சென்ற இறகை
நனைத்துக்கொண்டே இருக்கிறாள்
மழைப்பெண்.

2.
சப்தம் மரணிக்கும் இரவுகளில்
மயானத்தின் நடுவில்
நடனமாட துவங்குகிறாள்
அவள்.
ஈரம் படிந்த
சாம்பல் மீது ஓயாமல்
தொடர்கிறது அவளது
நடனம்.
கலைந்த கூந்தல்
தோகையென காற்றில்
மிதக்கிறது.
கொன்றைகள் இருநிலவுகளாய்
ஒளிர்கிறது.
கண்களில் நீர்வர ஆடிய பின்
வதங்கிய பூவாய்
தரையில் வீழ்ந்து மரிக்கிறாள்.
மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்.

Saturday, November 07, 2009

ராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்



ராஜ ராஜ சோழன் பற்றி எடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஆவணப்படமிது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கிரானைட் கற்களால் கட்டப்பட்ட
தஞ்சை பெரியகோவில் பற்றியும் அதற்கான கல்லை அக்காலத்தில் எப்படி அவர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என்பது பற்றியும் சிறப்பாக விவரித்திருக்கிறார்கள்.

முகலாய படையெடுப்பின் போது அழிவில் இருந்து தப்பிக்க ஏராளமான சிலைகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சியின்போது
1965ல்தான் அவை கண்டெடுக்கப்பட்டன போன்ற முக்கிய செய்திகளையும் தொகுத்திருக்கிறார்கள்.

இந்தியாவை ஆண்ட மிகச்சிறந்த மன்னன் ராஜ ராஜ சோழன் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது இந்த ஆவணப்படம்.
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இங்கே பார்க்கலாம்:


http://www.youtube.com/watch?v=SnANjdReAlY


http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU&NR=1

http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns

http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw

http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8

Friday, November 06, 2009

சச்சின் எனும் மாவீரன்!!




ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார் "It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"


2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."


-நிலாரசிகன்.

Wednesday, November 04, 2009

புன்னகை சிற்றிதழில் கவிதைகள்

இம்மாத "புன்னகை" சிற்றிதழில் வெளியான என் கவிதைகள்:






இதழ் முகவரி:


புன்னகை,
68,பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642104
04253 - 283017

புன்னகை ஆசிரியரின் வலைப்பூ:


http://amsapriyapunnagai.blogspot.com/

Tuesday, November 03, 2009

நீங்குதல்...



ஒரு புன்னகையை
கொல்வது போல்
ஒரு தவிர்த்தலை
எதிர்கொள்வது போல்
ஒரு உறவை
முறிப்பதுபோல்
கொடூரமானதும்
துயரமானதும்
வேதனையானதும்
தான்
இந்த வலியை
வார்த்தைப்படுத்துவதும்.

Monday, November 02, 2009

யட்சி



வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது.
காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.
நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.

Saturday, October 31, 2009

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:



சம்யுக்தை மற்றும் ஓர் மரணம் - சிறுகதை


துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த
அவசர தொனியில் அம்மா தொலைபேசியபோதே உணர்ந்துகொண்டேன் அவனை பற்றியே சோகச்செய்தியை பகிரப்போகிறாளென்று.
வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது இதயத்துடிப்பு. முக்கியத்துவம் இழந்துவிட்ட அவனது மரணம் எவ்வித திடுக்கிடலையும் உண்டாக்கவில்லை என்றபோதும் கால்சட்டை பருவகால நண்பனின் இழப்பின் வலி மனதெங்கும் வியாபித்திருந்தது. கல்லூரிக்காலத்தில்
முறுக்கேறிய உடம்புடன் வலம் வந்த ஒருவனை மரணம் துரத்தும் கடைசி காலத்தில் இற்றுப்போன உடலாய் மங்கிய கண்களுடன் பார்க்க
எப்படி முடிந்தது அவனது அம்மாவால்? கடைசி நாட்களிலும் சம்யுக்தையின் நினைவுக்காட்டில் வழிதவறிய சிறுவனாகவே அவனை மாற்றியது எது? சாபம் தந்த தேவமகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளது வாழ்க்கையில் இவனைப்பற்றி கணநேரம் சிந்திக்க நேரமிருக்குமா? சம்யுக்தா! சாபங்களின் தேவதையின் முகம் எனக்குள் உருப்பெற ஆரம்பித்தது.

சம்யுக்தையின் வருகை:


வறண்டு விரிசல் விழுந்த விளைநிலத்தில் சருகான பயிர்களாய் நின்றிருந்த எங்களது கல்லூரிக்குள் முதல்மழையாய் நுழைந்தவள் சம்யுக்தா.
வெட்டாத முடியும் சவரம் செய்யப்படாத தலையுமாக நூலகத்தில் அடைந்துகிடக்கும் அவனை அவள் கண்டநாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் புதைந்துகிடப்பவன் அவன். தூசி படர்ந்த பழைய புத்தகமாய் நூலகமே கதியென்று கிடந்தவனை நிமிரச்செய்த முதல் பெண் சம்யுக்தா.

மொட்டுகள் மலர்வதை போன்று இதழ்பிரித்து அவள் சிரிக்கும் லயத்தில் கல்லூரியின் ஒவ்வொரு கதாநாயகர்களும் வீழ்ந்தபோது எதற்கும் செவிகொடுக்காமல் கவிதைகிறுக்கனை நோக்கி சென்றவள்.கல்லூரிகளுக்கு பின்னாலிருக்கும் மரத்தடிகளில் அவனும் அவளும் கவிதைபேசி சிரித்தபோது வெந்து தணிவார்கள் நண்பர்கள். உலகின் மிகச்சிறந்த கவிஞனாக நாளை மிளிரப்போகும் அவனை பின்னாளில் உடைத்தெறிவாள்
என்று யாருமே எண்ணியதில்லை.

அவன்,அவள்,அவர்கள்:


தந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலேயே ஏழ்மையின் கொடிய கரங்களில் சிக்கி கடைகளில் சிறுசிறு வேலைபார்த்து அம்மாவையும் தங்கையையும் கவனித்த மிகச்சிறந்த உழைப்பாளி அவன். வீட்டுச்சுழல் மனதை நெருக்கும்போதெல்லாம் சம்யுக்தையுடனான பொழுதுகளே அவனை மீட்டெடுத்தன.

மில்லுக்கு சொந்தகார அப்பா,வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்கள் வறுமை என்ற வார்த்தைகூட கேட்டிராத அவளுக்கு அவனது ஏழ்மை மீதான கரிசனமும் அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமும் எப்போதும் இருந்தன.

அவர்களது உரையாடல்களை கடந்துசெல்லும் எவரேனும் கேட்கநேரிட்டால் ஐம்பது வருடங்கள் கழித்து பேசவேண்டிய விஷயங்கள் ஏன் இப்போது விவாதிக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றும். அவர்கள் பேசாத விஷயங்களில்லை காதலை மட்டும் கழித்துவிட்டால்.

அவனது மெழுகுவர்த்திரி:

காலம் எப்போதும் ஒரு முகத்துடன் நம்மிடம் பழகுவதில்லை. நேற்றொரு முகம் இன்றொரு முகம். இலக்கியம் பேசிய இடைவெளிகளில் சிறுக சிறுக நுழைந்த நேசம் பெரும்விருட்சமென வளர்ந்து நின்றபோது அவனக்கு அவனே அந்நியமாகியிருந்தான். காவியங்கள் மொழிந்த உதடுகள் இப்போது சொல்லுக்கும் மெளனத்திற்கும் இடையே அலைபாய்ந்து அடங்கின. அவளும் வார்த்தை தொலைந்த மெளனியாக கண்களுக்குள் ஏதோ தேடும் பார்வையுடன் வலம்வந்தாள்.

அவர்களிடையே கம்பீரமாய் நின்றிருந்த நட்புச்சுவர் இடிந்து துகள்களாகி காற்றில் கரைந்தபோது காதலென்னும் புது உலகிற்குள் நுழைந்தார்கள்.
என் நண்பனை நான் இழந்தது அப்போதுதான். அது எனக்கு அப்போது புரியவில்லை. மயக்கத்தில் திரிபவனிடம் எனது நட்புவார்த்தைகள் தொலைந்து போயிற்று.கரைமீண்ட அலையாய் அவனை உள்ளிழுத்துக்கொண்டாள் சம்யுக்தை.


சம்யுக்தையின் நீங்குதல்:


பட்டாம்பூச்சிகளுடனும் பூஞ்சிட்டுகளிடமும் பேசித்திரிந்தவன் அவளது பிறந்தநாளுக்கான பரிசுத்தேடலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்த நாளில்தான் சம்யுக்தை பற்றிய செய்தியொன்றி காற்றில் கசிந்து கல்லூரியை உலுக்கியது.

அவள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை எனும் செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்.சம்யுக்தையின் திருமண அழைப்பிதழ்களை நண்பனொருவன் கொண்டுவந்தபோது முற்றும் துறந்த ஞானிகளின் தீட்சண்யம் அவனது பார்வையில் உணரமுடிந்தது.சொட்டுக்கண்ணீரோ அல்லது பிதற்றலோ இல்லாமல் மெளனியாக கல்லூரியைவிட்டு அவன் வெளியேறி சென்றது நண்பர்களுக்கு பெரும் துக்கத்தை பரிசளித்தது.

அவன்,நான்,மரணம்:

நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது சப்தங்களால் நிறைந்த அவனது வீட்டு முற்றம். வீட்டிற்குள் நுழைந்து நார்க்கட்டிலில் பூமாலைகளுக்கு நடுவே முகம் மட்டும் தெரிய கிடத்தப்பட்டிருக்கிறான் அவன்.இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது.

அவனும் நானும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பழைய கணங்களின் ஞாபகங்களோடு அந்த உடலை பார்க்கிறேன். சம்யுக்தையால் எனை பிரிந்த அவனை இறுக கட்டிக்கொண்டு அவனுள் நுழைகிறேன். யாருமே உணர்ந்து கொள்ளாத என் ஆத்மா அந்த உடலுக்குள் சங்கமித்து கண்ணயர்கிறது. என் இருத்தல் தொலைந்த வலியில் துடித்தழுது கொண்டிருக்கிறாள் அம்மா.

துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்..

-நிலாரசிகன்.

Thursday, October 29, 2009

முதிர்ந்த உயிர்




தொலைபேசி அலறும்
போதெல்லாம் நடுங்கும் கைகள்.

வீட்டு ஆண்களின் சத்தம்
உயரும் கணம் ஏதோ
முனகி அடங்கும் உதடுகள்.

பின்னிரவில் வீறிட்டு அழுகின்ற
குழந்தைகளுக்காய்
பிராத்தனைகளில் மூழ்கும் மனம்.

அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்.

வாழ்வின் அந்தியில்
நாட்கள் நகர்த்தும்
வீட்டின் முதிர்ந்த உயிரை
மூத்திரவாடை பாட்டி
என்கிறோம் நாம்.

Tuesday, October 27, 2009

நிசப்த பொழுதுகள்




1.
உலர்ந்த உதடுகள்
ஜன்னல் கம்பிகளில் பதிய
மழை வெறிக்கிறேன்.
சத்தமின்றி பெய்கின்ற
அடர் நீர்த்துளிகள்
சிறு சிறு குமிழ்களாகி
மெளனமாய் உடைகின்றன.
சப்தங்கள் மரணித்த
மழை
ஊனப் பறவையாய்
துடிதுடித்து அடங்கும்
தருணம்
எனக்கு மட்டும் கேட்கிறது
நிசப்தத்தின் சிரிப்பொலி.


2.
உச்சத்தின் முனகல்களை
அவள் வெளிப்படுத்த
எத்தனித்தபோது
உருவம் பெற்ற நிசப்தம்
அவளது சப்தங்களை
தின்று
என்னை நோக்கி வெறித்தது.
நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின்
கரம் பற்றி இழுத்துப்போனது.
இருளடைந்த அறைக்குள்
நுழைந்து
என்னை புணர் என்றது.
மறுப்பேதும் உரைக்காமல்
உடல் உதறி
நிசப்தத்திற்குள் நுழைந்துகொண்டேன்
நான்.


3.
அறைக்குள் மெல்ல
நுழைகிறது நிசப்தம்.
அரூப அலையாய்
என்னை சூழ்ந்துகொள்கிறது.
பின்,
பேரானந்தம் தரும்
கரங்களால்
என்னுயிரை திருகி எறிந்து
வெற்றுடல் மேல்
உமிழ்ந்து
ஒன்றும் அறியாத
பாவனையுடன் வெளியேறியது.
இப்போது,
ஓயாத பெரும் இரைச்சல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நிசப்த கணங்களில்.

நன்றி: தடாகம்.காம்

Monday, October 26, 2009

பதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்





நண்பர்களுக்கு,

என் நண்பர் ஒருவரின் சகோதரர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார்.அவரது இருதய அறுவை சிகிச்சைக்கு 150000 ரூபாய் தேவைப்படுகிறது. உதவ நினைக்கும் நண்பர்கள்
உதவலாம்.


மேலதிக விபரங்கள்:



Bank Accountno -> 12681
Account Name -> Saroja Rajagopalan
Bank & Branch -> IOB, West CIT Nagar Branch.
Chennai 600035.



நண்பரின் தாயார் அனுப்பியுள்ள மடல்:


05.10.2009

From
Saroja Rajagopalan,
Flno.13, Mohan Apartments,
107, South West Boag Road,
T.Nagar,
Chennai 600 017.
044-24311992
9445113326
mr.venkatesaprasath@gmail.com

Dear Sirs,

I introduce myself as mother of R.Vijayaraghavan who is a mentally retarded boy. He is suffering from Heart Disease (Hole in the Heart). The cost of Surgery is about Rs.150000/- (Rupees One Lakh and Fifty thousand only).

I request you all to help me financially to carry out the surgery at the earliest.


Thanking you,
Saroja Rajagopalan,

Saturday, October 24, 2009

படித்ததில் பிடித்தது:

எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS - 'A Life in Music' ,T.J.S George ] குறித்த ஜெயமோகனின் கட்டுரை.

சுட்டி:

http://jeyamohan.in/?p=4607

Tuesday, October 20, 2009

அப்பா சொன்ன நரிக்கதை




அப்பா சொன்ன நரிக்கதை
("சிறு"கதை)

1.

இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக
அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை. அம்மா எப்பொழுதும் வேலை வேலை என்று அலைபவள். காலை ஏழே முக்கால் ரயிலுக்கு
சென்றால் இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வருவதற்குள் நான் உறங்கிவிடுவேன். காலையில் எனக்கு
தலைசீவி விடும் நேரம் மட்டும் பேசுவாள். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்.
அப்பாதான் என்னை தூங்கவைப்பார். என் அருகில் அமர்ந்து கதை சொல்வார். காட்டில் நடக்கும் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்
ஒவ்வொரு கதையின் முடிவிலும் என் நெற்றியில் முத்தமிடுவார். நான் உறங்கியிருப்பேன்.
எங்கள் வீட்டில் அம்மா,அப்பா நான் மூன்று பேர் மட்டும்தான்.
அம்மா கொஞ்சநாளாக சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

2.

"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா"

ஜன்னலோர இருக்கையில் நாவலுக்குள் மூழ்கியிருந்தவள் தலை உயர்த்தி பார்த்தேன். அவன் நின்றுகொண்டிருந்தான்.ரயில் சினேகன்.

"யெஸ்"

"உங்களுக்கு சம்மதம்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்"

இதை எதிர்பார்க்கவில்லை நான்.உடைந்த கண்ணாடி சில்லுகளாய் சிதறிப்போன வாழ்க்கையிலிருந்து மெல்ல இயல்புக்கு
திரும்பும் தருணத்தில் அவனது இந்தக்கேள்வி எனக்குள் பல கேள்விகளை கேட்டுப்போனது. விரக்தியான புன்னகையில்
அவனை கடந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்தேன். அவனது உருவம் செவி வழியே இதயம் புக முயற்சித்துக்கொண்டிருந்தது.
நாளை சம்மதம் சொல்ல மனசு விரும்பியது. சொல்வேன்.

3.

அப்பா நான் கேட்கும் எதையும் மறுத்ததில்லை. உடனே வாங்கி தந்துவிடுவார். தினமும் அப்பா சொல்லும் கதை கேட்பதற்காகவே
இரவுக்காக காத்திருப்பேன். இன்றும் அப்படித்தான் காத்திருந்தபோது,அருகில் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.இன்று நரிக்கதை.
சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ அரவம் கேட்டது.
அப்பாவின் சட்டையை கிழித்துக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பாவிடம்
சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.நான் தூங்கிக்கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கண்கள் கசக்கி பார்த்தேன். எதற்காக அப்பாவை திட்டுகிறாள் என்று புரியவே இல்லை.

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார் என் இரண்டாவது அப்பா. கலைந்திருந்த என் ட்ரஸ்ஸை சரி செய்துகொண்டே எழ முயன்றேன்.முடியவில்லை.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

Saturday, October 17, 2009

1 நிமிடம் 10 குழந்தைகள் :(




1 நிமிடத்தில் பசியால் உலகெங்கும் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

காணொளி:




உதவ விரும்பும் அன்பர்கள்
இங்கே சொடுக்குங்கள்:

https://www.wfp.org/donate/1billion

Thursday, October 15, 2009

கழுவில் ஏற்றிய நீர்த்துளிகள்





காரணம் சொல்ல முடியாத துயரத்தில் உன் கண்கள் சிதறிக் கிடக்கும் கடற்கரையை வெறித்துக்கொண்டிருந்தன.
ஆர்ப்பரித்த அலைகள் உனது நீள் மெளனத்தின் அடர்த்தியை புரிந்துகொள்ளமுடியாமல் துடிதுடித்து அடங்கிய பின்னர் என் முகம் பார்த்தாய் நீ.
இருள் கவிந்த அந்த கருக்கலில் என்னை நோக்கி மிதந்து வரும் உன் பார்வை பரிதவிப்புடன் கூடிய இயலாமையின் கலவையாயிருந்தது.

உன்னை பரிகசித்த சொற்களின் கூர்மை கண்களோரம் கசியும் கண்ணீரில் மினுமினுத்தது.
ஆம்..நீ அழ துவங்கி இருந்தாய்.
மேகங்களினூடே பயணித்து பொல்லாத வானத்துடன் சண்டையிட்டு உனக்கென நான்
பறித்து வந்த நிலவுபொம்மை மீது விழுந்த உன் முதல் துளி கண்ணீரில் சட்டென்று நிமிர்ந்தது
நிலவு.
கண்ணீர் துடைக்க விரைந்த என் கைகளை பற்றிக்கொண்டு உள்ளங்கையில் முகம் புதைத்தழுதாய்.

தேவதைகளின் தேவதை உன் கண்ணிரின் மென்சூட்டில் வெந்துபோனது என் உள்ளம்(ங்)கை.
பதறிய நெஞ்சுடன் உன்னை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிடுகிறேன்.
நெஞ்சில் சாய்ந்தபடி மெல்ல விம்முகிறாய்.உன் விழியின் விசும்பல் சப்தத்தில் துடிக்கும்
என் இதயம் விசும்ப ஆரம்பித்துவிடுகிறது.
நெஞ்சம் நனைக்கும் உன் கண்ணீர் கண்ணாடி யன்னலில் மழை வரையும் ஓவியமென என்னில் படர்கிறது.
சொட்டு சொட்டாய் உன்னிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தீர்கிறது கனத்த இதயத்தின் வலிகள்.

ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே நாம் அமர்ந்திருக்கிறோம்.
உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை.
நாய்க்குட்டியின் தலையை வாஞ்சையுடன் தடவுவது போலுன் தலையை தடவிக்கொடுக்கிறேன்.
கன்னத்தில் நீர்க்கோடுகள் வரைந்த கண்ணீரை துடைக்கிறதென் கைகள்.

பட்டாம்பூச்சி பின்னோடும் பாவாடைச் சிறுமியின் குழந்தைமை நிரம்பிய மனதை ஒத்திருக்கிறது கடற்கரை மணலில் அழுதுகொண்டே நீ வரைந்த பூனைச் சித்திரம்.
அதிகரிக்கும் இருளின் காரணமாய் கலைந்து செல்கின்றனர் கடற்கரை மக்கள். நாம் மெல்ல நடக்க துவங்குகிறோம்.ரயில் நிலையம் வரை விரல்கோர்த்து ஏதும் பேசாமல் நடந்து வருகிறாய் நீ.

இருளை கிழித்தபடி வந்து நிற்கிறது ரயில். ரயிலேறும் வரை மெளனித்தவள், ரயிலேறிய பின்
நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய். கிளம்பிச் சென்றது ரயில்.

கைகள் நனைத்த உன் கண்ணீரின் ஈரம் என்னுயிரில் படிந்திருக்க கனத்த நெஞ்சுடன்
வீடு திரும்புகிறேன் நான்.
யாருமற்ற நிசப்த இரவில் பொழியத் தொடங்குகிறது வெள்ளை மழை.

Wednesday, October 14, 2009

கடைசியாக...




நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்

நான்+நான் = சுயமழித்து திரிதல்.

கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்

கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்

நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்

ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு

கடைசியாக,

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்

Monday, October 12, 2009

அகநாழிகை முதல் இதழ் விமர்சனம்





சிற்றிதழ் நடத்துவது பற்றி ஒரு இதழாளர் சொன்ன வாக்கியம் "சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது". வேடிக்கையாக
தோன்றினாலும் இதன் பின்னாலிருக்கும் வலி சிற்றிதழ் நடத்துபவர்களாலும் அதை சார்ந்து இயங்கும் எழுத்தாளர்களாலும் மட்டுமே உணரப்படுவது. மிக முக்கிய காரணம் வெகுஜன இதழ்கள் போல் பல வகையான செய்திகளை சிற்றிதழ்கள் தாங்கி வருவதில்லை.
இதன் காரணமாகவே சிற்றிதழாளர்களின் வருமானம் அசலை விட எப்போதும் குறைவாகவே இருக்கிறது(ஒரே வார்த்தை "நஷ்டம்")
அதையும் மீறி பல சிற்றிதழ்கள் இன்று வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்படுவதற்கான மிக முக்கிய காரணம் இலக்கியம் மீதான
தீராத காதலும் தாகமும் எனலாம். நவீன விருட்சம் இதழ் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக வருவதற்கு காரணம் அதன் ஆசிரியர் அழகிய சிங்கர்
இலக்கியம் மீது கொண்ட தணியாத தேடல் மட்டுமே.

இம்மாதம் வெளியாகி இருக்கும் அகநாழிகை இதழின் உள்ளடக்கம் மிக நேர்த்தியானதாக இருப்பதை கண்ட போது இது முதல் இதழா அல்லது முப்பதாவது இதழா என்கிற சந்தேகமே என்னுள் எழுந்தது. இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் மற்றும் அவரது ஆசிரியர் குழுவின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

சிறுகதைகள்:

1.பூனைக்குட்டி - பாவண்ணனின் இந்த சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க இன்னும் இருநாளாகலாம். எங்கெல்லாம் பூனைக்குட்டியை
பார்க்கிறேனோ அங்கெல்லாம் "வைதேகி"யின் முகம் நிழலாடி மறைகிறது. அதீதமான ரோமங்கள் உடலெங்கும் வளர்ந்து,நோய் பீடிக்கப்பட்டு பூனைக்குட்டி பொம்மைகளுடன் மட்டுமே தன்னுலகை சிருஷ்டித்துக்கொள்ளும் அந்தச் சிறுமியின் உணர்வுகள் ஒவ்வொரு வரியிலும் நம்முடன் உரையாடி செல்கின்றன. (உமா மகேஷ்வரியின் மரப்பாச்சி சிறுகதையின் முடிவை ஒத்ததாக இக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது)

2.கிறக்கம் - யுவன் சந்திரசேகர். இம்மாதம் உயிர்மை,காலச்சுவடு,அகநாழிகை அனைத்திலும் யுவனின் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு கதைக்கும் மறுகதைக்கும் சம்பந்தமே இல்லை (நடையில்). வழக்கம்போலவே அசத்தலான புனைவு.

3.ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்- வெகு சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர் சுந்தர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படைப்பிது. உதாரணமாக இவ்வரிகளை குறிப்பிடலாம் "ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறைவிட்டான் என்று வாசித்துக்கொள்ளவும்).
பின்நவீனத்துவ கதை என்பதற்கான எல்லா அறிகுறியும் இக்கதையை நிறைத்திருக்கின்றன. சிறுகதைக்கு "தொடரும்" போட்டு முடித்திருக்கிறார்.

மேலும் நான்கு கதைகள்:

நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
மழை புயல் சின்னம் - விஜய் மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா(லக்கிலுக்)
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்

(இக்கதைகளுக்கான குறிப்பை அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி படித்து விடுங்கள் :)

கவிதைகள்:


இணையத்தில் பரவலாக எழுதும் கவிஞர்களின் படைப்பும் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கும் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

என்னை அதிகம் கவர்ந்த குறுங்கவிதை:

தன்னிரக்கம்:

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்.

-சேரல்

கட்டுரைகள்:


1.தமிழ்சினிமாவும் தமிழனும் சில மசால் வடைகளும் - அஜயன்பாலா சித்தார்த்:

2.ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - வே.அலெக்ஸ்

3.பரமார்த்த குருவும்
சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் - வளர்மதி

4.அலகிலா சாத்தியங்களினூடே... - வெ.சித்தார்த்

முதல் கட்டுரையில் தமிழ்சினிமா 80 முதல் 1990 வரை அலசி ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை தொகுத்திருக்கிறார் அஜயன்பாலா. To be honest மற்ற கட்டுரைகள் இன்னும் வாசிக்கவில்லை :)

பிற:

1.கேபிள் சங்கர் இயக்கிய 'விபத்து' குறும்பட அறிமுகம்
2.உரையாடல் சிறுகதை பட்டறை குறித்த தனதனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் ஆதிமூலக்கிருஷ்ணன்
3.டச்சு மொழி திரைப்பட விமர்சனம் - நதியலை

ஒரே குறை:

தலையங்கம் எங்கே? சரி வேண்டாம் முதல் இதழ் பற்றிய குறிப்பாவது ஆசிரியர் கொடுத்திருக்கலாம். படைப்பாளிகளுக்கு
மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் இதழ் நடத்தும் நான் பார்வையாளனாக இருந்துகொள்கிறேன் என்று நினைத்திருப்பாரோ?
பொன்.வாசுதேவனின் கவிதைகளும் இடம் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய +:

1.சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய இலக்கிய இதழ்கள் இரண்டு
உயிரெழுத்து(ஐந்து அல்லது ஆறு கதைகள்), யுகமாயினி(நான்கு கதைகள்).
அகநாழிகை முதல் இதழிலேயே ஏழு சிறுகதைகளுக்கு இடமளித்திருப்பது சிறுகதை இலக்கியம் மீதான வாசக ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.

2.சிறுகதைகளுக்கும்,கவிதைகளுக்கும் ஏற்ற புகைப்படங்கள்.

சந்தா மற்றும் மேலதிக விபரங்களுக்கு
இங்கே சுட்டுங்கள்