Monday, December 21, 2009

இதனால் சகலமானவர்களுக்கும்...


 

நேற்று மாலை சிறுகதை நூல்வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தேறியது. மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சில் 27 நூல்களை திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டது. இசைக்கவிஞர் ரமணன் அவர்கள் சிறப்பாக தொகுத்தளித்தார். காவல்துறை உயர் அதிகாரி திரு.இரவி என் நூலிற்கான அறிமுகத்தை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் இந்துமதி நூலை வெளியிட்டார். எழுத்துலக ஜாம்பவான்கள் நாஞ்சில் நாடன்,புஷ்பா தங்கதுரை,விக்கிரமன்,கவியோகி,பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று பலரும் 
விழாவில் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது.

விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் விழியன்,கிருஷ்ண பிரபு,முத்துசாமி,முத்தலிப்,விஷ்ணுகுமார்,சிவன்,படைப்பாளி,சுரேஷ்,சுகந்தராஜ்,அடலேறு,எவனோ ஒருவன்,லக்கிலுக்,அதிஷா,பரமேஸ்வரன்,நாவிஷ்செந்தில்குமார்,ஆனந்தகுமார்,உமாஷக்தி,யோசிப்பவர்,சுந்தர்,விஜி,ப்ரியா,ரோகினி,குமார்,பேராசிரியர் செல்வகுமார்,குகன்,கவிஞர்.அண்ணா கண்ணன்,ஐயா அப்துல் ஜப்பார்,எழுத்தாளர் சைலஜா ஆகியோருக்கும்,விழாவில் கலந்துகொள்ள நினைத்து இயலாமல் மடலிலும் அலைபேசியிலும் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் நட்பும் எப்போதும்.
சில நெகிழ்வான சம்பவங்களால் இந்நிமிடமும் மனம் பூரிப்புடன் இருக்கிறது.
சம்பத் என்றொருவர் என் க(வி)தைகள் படித்துவிட்டு மடலிடுவார். அவர் ஏதோ இருபது இருபத்தைந்து வயதுக்காரர் என்றே எண்ணியிருந்தேன். நேற்று ஒரு அறுபது வயது பெரியவர் என்னருகே வந்து கரம்பற்றி “உங்களை பார்க்கணும்னுதான் தம்பி வந்தேன்…என் பெயர் சம்பத்” என்றபோது சிலிர்த்துவிட்டது மனம். தமிழுக்கு நன்றி சொன்னோம் இருவரும்.
அதேபோல் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணணையாளரும் எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் அவர்கள் அமீரகத்தில் ஆசிப் அண்ணாச்சியுடன் இருக்கிறார் என்ற நினைப்பிலேயே அவரை விழாவிற்கு அழைக்காமல் விட்டுவிட்டேன். அவர் “குழுமங்களில் விழா குறித்தான செய்திகண்டு கலந்துகொண்டேன்” என்றபோது குற்றவுணர்வுடன் கூடிய ஆனந்த அதிர்ச்சி என்னை ஆட்கொண்டது.
விழாமுடிந்து வீட்டிற்கு வந்து இறங்கிய மறுநிமிடம் தொலைபேசிய முத்துசாமி,சிவன்,முத்தலிப் அனைவரும் அதற்குள் சிறுகதை தொகுப்பை படித்துவிட்டதாக சொல்லி சிறுகதைகள் குறித்துபேசிய போது இதயம் நெகிழ்ச்சியால் நிறைந்துபோனது.
ஈரோடு பதிவர் சந்திப்புக்கு சென்றுவிட்டதால் விழாவில் கலந்துகொள்ள முடியாத கவிஞர்.கேபிள் சங்கர் இரவு 11 மணிக்கு அழைத்து வாழ்த்தியதும்,
பின்னிரவு 3 மணிக்கு  நாவிஷ் செந்தில்குமார் தொகுப்பின் முதல் கதையின் பாதிப்பிலிருந்து மீளமுடியவில்லை என்று மடலிட்டிருந்ததும்,
வீடு வருவதற்குள்ளாகவே விழாவில் எடுத்த புகைப்படங்களை மடலிட்ட விஷ்ணுகுமாரின் அன்பிலிருந்தும்,
மும்பையிலிருந்து தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த கவிஞர்.விபாகையின் நட்பிலிருந்தும் இன்னும் மீளவேயில்லை நான்.
பெருகியோடிய மகிழ்ச்சிக்கு மத்தியிலும் எழுத்தாளர்.ஷைலஜா அவர்களின் கைக்கடிகாரம் தொலைந்துபோனதும் விழா முடிந்த மகிழ்விலும் 120 பிரதிகள் விற்ற களிப்பிலும் U turn எடுக்கக்கூடாத இடத்தில் எடுத்ததால் ஒரு “நல்ல” காவலருக்கு 200 ரூபாய் கப்பம் கட்டியதும் நண்பர்கள் ஒவ்வொருவராக விழா அரங்கினுள் நுழையும்போது இப்போது வருவாரா இப்போது வருவாரா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை வராமல் போன ஒரு நல்லவரின் நேசமும் மனதை நெருடிய விஷயங்கள்.
பின்குறிப்புகள்:
1.நன்றி நவிழ்தலில் என் மறதியால் யாருடைய பெயராவது விடுபட்டிருப்பின் மன்னித்து மறந்துவிடுங்கள் :)
2.சிறுகதை நூல் இணையம் வழியே கடன் அட்டை மூலமாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே சுட்டுங்கள்.
3.சென்னையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில் திரிசக்தி பதிப்பகத்தாரின் கடை எண் 207,208,223,224ல் சிறுகதை தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.




மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி :)
நன்றியில் நீராடும் விழிகளுடன்,
- நிலாரசிகன்.


Thursday, December 17, 2009

நகுலன் வீட்டில் யாருமில்லை,அகநாழிகை,மற்றும் சில






1.எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை" தருகின்ற உள்-அனுபவம் அலாதியானது.தும்மலோசை,புனிதப்பூனை,ந.வீ.யாருமில்லை,பெருநகரத்தவளைகள்,ரப்பர் பந்து,பகலின் முதுகு கதைகள் வாசித்து முடித்து சில நிமிடங்களுக்கு வேறெதுவும் செய்ய முடியவில்லை(அடுத்த கதைக்குள் நுழைய அவகாசம் தேவைப்பட்டது).வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டது போல தமிழுக்கு எஸ்.ரா தந்திருக்கும் கொடை இப்புத்தகம். விலை.ரூ.80,பக்கம் 135,வெளியீடு உயிர்மை பதிப்பகம்

2.அகநாழிகை இரண்டாவது இதழ் வெளிவந்துவிட்டது.கவிஞர்.மனுஷ்ய புத்திரனின் நேர்காணல் பொறி பறக்கிறது. லஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை(சற்றே பெரிய) அற்புதமானதொரு படைப்பு.ஒரு வனத்தின் காட்சிகள் கண் முன் விரிகின்றன.நதியலையின் மொழிபெயர்ப்பு கவிதையும் திலகபாமாவின் கவிதையும் அதிகம் கவர்ந்தன.இதழின் அட்டைப்படம் Superb!

3.கிரிக்கெட் உலகிற்கு இரண்டு இளம் சச்சின்கள் புயல்கள் கிடைத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் உமர் அக்மல் மற்றும் மேற்கு இந்திய தீவுகளின் பரத்.
விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்கள்.இந்தியாவுக்கு செளராஸ்ட்ராவின் புஜாராவை எதிர்பார்க்கலாம்.

4.சேத்தன் பகத்தின் 2 States நாவலில் சென்னை குறித்தான பார்வையும் சில கெட்டவார்த்தைகளும் முகச்சுழிப்பை தருகிறது(நிதர்சனம் என்றபோதும்). இவரது இரண்டாவது நாவலின் விறுவிறுப்பு மற்ற எந்த நாவலிலும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து விற்பனையில் நம்பர் 1.காரணம் இளவட்டங்கள்.:)

5.வருகின்ற ஞாயிறு(டிசம்பர் 20) என் சிறுகதை நூல் வெளியீடு.பதிவ/வாசக நண்பர்கள் அனைவரையும் நட்புடன் வரவேற்கிறேன்.

-நிலாரசிகன்

Tuesday, December 15, 2009

இரண்டாம் பரிசு..




சர்வேசன் நடத்திய "நச்" சிறுகதை போட்டியில் என் கதை(அப்பா சொன்ன நரிக்கதை) இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


முதல் பரிசு பெற்ற Sridhar Narayananக்கும், கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, December 14, 2009

சங்க மித்திரை


சங்க மித்திரை - சிறுகதை


ழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த சத்தமும் மணியின் குரைப்பும்.
வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்
தென்னந்தட்டி வேலியிலொன்றை பிரித்துவிட்டு பின்னாலிருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்தார் அப்பா.பதறியபடி பின்னால் ஒடினாள் அம்மா. என்னவென்றே தெரியாமல் தெரிந்துகொள்ளும் அவசரத்தில் அம்மாவை தொடர்ந்தேன் நான். தோட்டத்து கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் மித்திரை. கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றில் குதித்து அவளது முடியை பற்றிக்கொண்டார் அப்பா. சத்தம் கேட்டு தேங்காய் உரித்துக்கொண்டிருந்த பாண்டி அண்ணனும் இன்னும் சிலரும் ஓடி வந்தார்கள். பாண்டி அண்ணன் மோட்டார் ரூமிலிருந்து வடக்கயிற்றை கொண்டுவந்து கிணற்றுக்குள் ஒரு நுனியை வீசிவிட்டு மற்றொரு நுனியை அருகிலிருந்த வேப்பமரத்தில் கட்டினார். அதற்குள் மேலும் இருவர் கிணற்றுக்குள் குதித்து மித்திரையின் கைகளை பிடித்துக்கொண்டனர். ஏதோ முனகிக்கொண்டிருந்தாள் அவள். அவளது நீண்ட கூந்தல் கருமேகம் போல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. கட்டியிருந்த பச்சை தாவணி இறக்கைபோல் விரிந்து இருபுறமும் மிதந்தது. நார்கட்டிலை உள்ளிறக்கி அவளை மேலே கொண்டுவருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலானது.

விஷயம் கேள்விபட்டு மித்திரையின் அம்மா மூச்சிரைக்க ஓடிவந்தாள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவளை கையமர்த்தினார் அப்பா. அப்போதும் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள். உடலெங்கும் நனைந்திருக்க கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள் மித்திரை. கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறியிருந்தன.பார்வை மட்டும் விறைத்திருந்தது. கிணற்றில் ஏன் குதித்தாய் என்று ஒவ்வொருவராய் கேட்டு பதிலேதும் கிடைக்காமல் கலைந்து சென்றனர்.கடைசி ஆளாக நான் கிளம்பும்போது அவளது தோளை உலுக்கி "அந்த சண்டாளன இன்னுமாடி நெனச்சுகிட்டு கிடக்க?" மித்திரையின் அம்மா கேட்டது என் காதில் விழுந்தது. அந்தசண்டாளன் யாரென்று எனக்கும் தெரியும்.

o0o
சங்க மித்திரை எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில்தான் வசிக்கிறாள்.
அப்பா கிடையாது. ஒரே ஒரு தம்பி என்னுடன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தினக்கூலிக்கு வாழைத்தோட்டத்திற்கு செல்பவள். கறுப்பு, ஆனால் லட்சணம்.பார்த்தவுடன் எல்லோரிடமும் சிரித்து பேசுவாள்.கிண்டலும் கேலியும் கலந்த அவளது பேச்சில் லயித்து நிற்பாள் என் அம்மா. மித்திரை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அம்மாவின் காதுகளுக்கு வந்துவிடும். கருக்கலில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.அப்பா கடையை சாத்திவிட்டு வரும் வரை சலிக்காமல் தொடரும் பேச்சு. மேலத்தெரு வெள்ளைப்பாண்டியும் இவளுடன் வேலைபார்க்கும் செவ்வந்திக்கனியும் காதலிப்பதும்,செவ்வந்திக்கனியின் மார்பில் வெள்ளை என்று பச்சை குத்திகொண்டதும் மித்திரை மூலமாகவே தெரிந்துகொண்டாள் அம்மா.செவ்வந்திக்கனி அவள் அப்பாவுக்கு பயந்ததை விட நூறு மடங்கு அதிகம் மித்திரையின் குத்தலான பேச்சுக்கு பயந்தாள். "என்ன புள்ள வலமாருல வெள்ளன்னு குத்திகிட்ட இடமாரு சும்மாதான இருக்கு பாண்டின்னு குத்திகிட வேண்டியதானே?"சொல்லிவிட்டு சத்தம்போட்டு சிரிப்பாள்.

அம்மன் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் அவனை பார்த்தேன். பெல் பாட்டம் பேண்ட்டும்,நீளமான காலர் சட்டையுமாய் "ஒருதலை ராகம்" சங்கர் போலிருந்தான். அடர்த்தியான மீசையும் பளிச்சென்ற சிரிப்பும் அவனை பார்த்தவுடனே இந்த பொட்டல்காட்டில் இவன் அந்நியனாகத்தானிருக்க வேண்டும் என்று உணர்த்தியது. தர்மகர்த்தாவின் தூரத்து சொந்தம்,சென்னைக்காரன் என்கிற விஷயம் கேள்விப்பட்டவுடன் சிறுவர் பட்டாளம் அவனை சுற்ற ஆரம்பித்தது.நானும் குழாய் பேண்ட் அண்ணே குழாய் பேண்ட் அண்ணே என்று உள்ளுக்குள் பரிகசித்துக்கொண்டே பின் தொடர்ந்தேன். வாயாடித்திரிந்த மித்திரை வாய் பிளந்து ரசித்த முதல் ஆண்மகன் அவன் தான்.
வாழைத்தோட்டத்தை பார்க்க வந்தவனின் கண்களில் பூஞ்சிட்டாய் மித்திரை விழுந்ததும் அதன் பிறகு ஊர் அறியா பொழுதுகளில் இரு உயிர்கள் சந்தித்துக்கொண்டதும் தொடர்ந்தபடியே இருந்தன. என்னை கடக்கும்போதெல்லாம் பின்னந்தலையில் தட்டிவிட்டு "ஒழுங்கா படிடா இல்ல வாத்தியாருகிட்ட வத்தி வச்சுருவேன்" என்றவள் அவனது வருகைக்குப்பின் என்னை பொருட்டாகவே நினைத்ததில்லை. அவள் தம்பியை பார்க்க போகும்போதெல்லாம் ஏதாவது வம்பிழுத்தவள் இப்போது ஏதோவொன்றை இழந்தவளாய் கயிற்றுக்கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றபோது சுவற்றில் சாய்ந்துகொண்டு கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். கள்குடித்தவள் போல் கண்கள் பாதி திறந்தும் திறக்காமலும் இருந்தன. ஓடிச்சென்று அவள் மடியில் படுத்துக்கொண்டு பின் ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்று தோன்றியது எனக்கு. பின்னந்தலையில் அடிப்பவள் மூக்கை உடைத்துவிட்டால் என்னசெய்வது? பேசாமல் திரும்பி விட்டேன்.

o0o
அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு மித்திரை அமர்ந்திருந்த நேசப்பொழுதை அழுக்கு கண்களுடன் பார்த்துச்சென்ற எவனோ ஒருவன் தர்மகர்த்தாவுக்கு வாய்த்தந்தியில் செய்தியை தடதடத்தபோது திருக்கை வால் சாட்டையால் விளாசி தள்ளிவிட்டார் குழாய் அண்ணனை.
பெண்பிள்ளை என்பதால் மித்திரையை எச்சரித்து அனுப்பிவிட்டார்.மறு நாள் நொண்டிக்குதிரையாய் பஸ் ஏறிவிட்டான் அவன்.
அவன் சென்றபின் ஒருவாரம் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள் மித்திரை. கண்கள் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவளை பார்க்க பார்க்க எனக்கும் அழுகை வரும். அவள் கண்களை துடைத்துவிட்டு ,கைகளை பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நடக்க ஆசையாயிருக்கும். அவள் எனக்குள் நடக்கும் போராட்டங்களை உணர்வதில்லை என்று புரியும்போது ஏமாற்றத்துடன் விளையாட போய்விடுவேன். ஒரு மாதம் கழித்துதான் இந்த கிணற்றில் குதிக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியது. அந்த சண்டாளனை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாளே என்று கோபமும் மறுநிமிடம்
அனுதாபமும் என்னை சூழ்ந்துகொண்டது. யாரையும் திருமணம் செய்யாமல் என்னுடனே எப்போதுமிருப்பாள் என்கிற எண்ணத்தில் அவள் அம்மா
பாறாங்கல்லை தூக்கிப் போட்டாள்.

அடுத்த மாதமே தன் தம்பிக்கு கட்டி வைத்தாள். மித்திரை ஒரு வார்த்தையும் பேசாமல் எப்போதும் வாடிய முகத்துடனே இருந்தாள். திருமணம் முடிந்து இருவரும் பக்கத்து ஊருக்கு போனபோதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்னை சூழ்ந்துகொண்டது.
அவளும் புகுந்தவீடு போவதற்கு முதல்நாள் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அம்மா எதுவும் மனசுல வச்சுக்காம நல்லா குடும்பத்த நடத்தும்மா என்றவுடன் தலையை குனிந்துகொண்டாள். திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த எனக்கு அவளது தலைகுனிவை கண்டவுடன் கோபமாக வந்தது. எங்கும் எதற்கும் தலை குனியாதே மித்திரை. நீ நல்லவள். மனம் திரும்ப திரும்ப அதே வரிகளை சொன்னபோது என்னருகில் வந்து "உன்னை விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா இருக்குடா" என்றாள்.எதிர்பார்க்கா இவ்வார்த்தைகள் மனதின் உட்சுவர்களில் மோதி பலமுறை எனக்குள் ஒலித்தது. மித்திரைக்கு என்னை பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் என் பிரிவு வருத்தம் தருவதாக இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்வீட்டில் இருந்தபோது நினைத்த நேரமெல்லாம் மித்திரையை ஓடிச்சென்று பார்த்து, பேசி வளர்ந்தவன் அவளது பிரிவை தாங்கமுடியாமல் துடிதுடித்தேன்.

o0o

பள்ளிமுடிந்து கல்லூரியில் இளங்கலை பயில கோவைக்கு சென்றுவிட்டபின்பு வாழ்க்கை தடம் மாறியது. நல்லதொரு வேலை கிடைத்து திருமணம் முடிந்து என் மகள் பிறக்கும்வரை என் வாழ்விலிருந்து மித்திரை எனும் பெண் மறக்கப்பட்ட ஜீவனாகியிருந்தாள். பிரசவ வலியெடுத்து
மருத்துவமனைக்கு விரைந்து மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியிலிருந்த பெஞ்சில் அமர்ந்தபோது எதிர் பெஞ்சில்
பெண்ணொருத்தி அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்கிற வேண்டுதலில் மனம் ஓடிக்கொண்டிருந்தது.சிறிது நேர ஆசுவாசத்திற்கு பின் எதிர் பெஞ்சை பார்த்தபோது லட்சம் சில்லுகளாய் உடைந்துபோனது இதயம். என் பால்யகனவுகளில் தாவணிதேவதையாய் வலம்வந்த என் மித்திரை எனக்கு முன் அமர்ந்திருக்கிறாள்.
காலம் அவளது செளந்தர்யத்தை சலவை செய்திருந்தபோதும்
சுருக்கங்கள் இல்லாத விரல்கள் வனப்பின் கடைசி நிமிடங்களில் பூமி பார்த்துக்கொண்டிருந்தன. கருமை நிறத்தாலான மெழுகு சிலை போல் என்னெதிரில் அமர்ந்திருந்தவளின் வயது நாற்பதை கடந்திருக்கும் என்பதை நம்புவது கடினமானதாய் இருந்தது.

"மித்திரை" என் குரல்கேட்டு திடுக்கிட்டவள் யாரென்று பார்வையால் வினவியபோது,சிறுவயதில் அவள் பிரிந்த அன்று ஏற்பட்ட பிரிவின் வாசம் என் நாசிக்குள் நுழைந்து குரலை உடைத்தது. "நான்....நான்..எதிர்வீட்டு செல்வராசு". உடன் மலர்ந்த விழிகளுடன் அருகில்வந்து கண்களுக்குள் உற்றுப்பார்த்தபடி கேட்டாள் "இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கியா ராசு?". சொல்லமுடியாத உணர்வுகளால் அதுவரை கட்டிவைத்திருந்த கண்ணீர் பொத்துக்கொண்டது. "நீ இன்னும் மாறவே இல்ல" என் கண்ணீர் துடைக்க கைகள் உயர்த்தியவள் துடைக்காமல் பின்னகர்ந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தாள் கொண்டாள். அப்போதுதான் அவளது சேலையின் நிறம் வெண்மை என்பதை கவனித்தேன்.

o0o
"பறவை போல் சிறகிருந்தால் எவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கும் இந்த வாழ்க்கை" சங்கமித்திரை என்னிடம் சொன்னபோது
குளக்கரை படிக்கட்டில் உட்கார்ந்தபடி வறண்ட குளத்தை பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தேன். எவ்வித சலனமுமின்றி
படிக்கட்டில் ஊர்கின்ற கட்டெறும்புகளை கால்களால் நசுக்கிக்கொண்டிருந்தாள். என்னை விட பத்து வயது பெரியவள் எனினும் அவளை அக்கா என்று ஒருபோதும் நான் அழைத்ததில்லை. முதன் முதலில் அக்கா என்றபோதே "அக்கான்னு சொல்லாதடா பேர் சொல்லியே கூப்பிடேன்" செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு அவள் நடந்து சென்றது இருபது வருடங்கள் கழித்தும் என்னுள் அப்படியே இருக்கிறது. என்னை விட பெரியவளை அக்கா என்றழைக்காமல் பெயர் சொல்லி கூப்பிடுவது முதலில் கடினமாக தோன்றினாலும் உள்ளுக்குள் இனம் புரியாத சிலிர்ப்பு அப்போது இருந்தது.

"என்ன அப்படி புதுசா பார்க்குற?" மித்திரையின் இரண்டாவது கேள்வியில் தன்னிலை மறந்த உலகத்திலிருந்து இயல்புக்கு திரும்பினேன். "ஏன் சிறகிருந்தா உயர பறக்கலாம்னு நெனச்சியா?"என் கேள்விக்கு இரு நிமிட மெளனத்தை பதிலாக்கியவள் மெளனம் உடைத்து "இல்ல யாருமே பார்க்காத இடத்துக்கு தூரமா போயிடலாம்ல,அதான்"சொல்லி முடிக்கும்போது அந்த அழகிய கண்களில் நீர்கோர்த்திருந்தது.

"நான் இருக்கேன்ல? என்கூடவே இருப்பியா? என்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா?" துயரம் படர்ந்த வார்த்தைகளால் சன்னமாய் அவளிடம் கேட்டேன். சற்று நேர அமைதிக்குப்பின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு என் அருகில் வந்தவள் பின்னந்தலையில் தட்டி "உன்கூடதான் இருப்பேன் ராசு" என்றபடி என் விரல் பற்றிக்கொண்டு உடன் நடக்க ஆரம்பித்தாள்.என் மகளின் பிஞ்சு விரல்களை தொட்ட போது ஏற்பட்ட ஸ்பரிசத்தை நினைவூட்டியது அவளது தொடுகை.தாய்மை நிரம்பிய அந்த ஸ்பரிசத்தில் மீண்டும் சிறுவனாக உருமாற துவங்கியிருந்தேன் நான்.

-நிலாரசிகன்.

Saturday, December 12, 2009

இருள் விலகும் கதைகள்



-----------------------------------------
நூலி்ன் பெயர்: இருள் விலகும் கதைகள்

பகுப்பு: சிறுகதைகள்

புத்தகத்தின் விலை: ரூ.90

பதிப்பகம்: தோழமை

தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்

-----------------------------------------

நவீன சிறுகதைகளின் காலகட்டமான இக்காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. வெவ்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள்,தனித்து நிற்கும் கதைசொல்லல்,கற்பனைவீச்சின் உச்சத்தில் நிற்கும் கதைகள் என பல சிறுகதைகள் தமிழில் வந்த வண்ணம் உள்ளன.


இன்றைய இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து தோழமை வெளியீடாக
வெளியிட்டிருக்கிறார் சிறுகதையாளர் விஜய் மஹேந்திரன்.

வா.மு.கோமு ,சுதேசமித்திரன்,ஷாராஜ்,கே.என்.செந்தில்,ஹரன் பிரசன்னா,எஸ்.செந்தில்குமார்,பாலைநிலவன்,லஷ்மி சரவணக்குமார்,சிவக்குமார் முத்தையா,விஜய் மகேந்திரன்,புகழ் மற்றும் என்.ஸ்ரீராம்
மொத்தம் 12 சிறுகதையாளர்களின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.


ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு முகம்கொண்டவையாக இருப்பது வாசகனுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கிறது. கதை சொல்லும் உத்திகளாலும்,கதைக்களத்தின் புதுமையாலும் அனைத்து கதைகளுமே ரசிக்கும்படி இருப்பது இத்தொகுப்பின் பலம்.இந்த தொகுப்பிற்காகவே எழுதப்பட்ட கதைகள் என்பதும் கூடுதல் பலம்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளில் மூன்று கதைகளை பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.


செறவிகளின் வருகை:


சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை

செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.


நகரத்திற்கு வெளியே:


விஜய மகேந்திரன் கணையாழியில் தனது முதல் படைப்பிலேயே அதிக கவனம் பெற்றவர். நகரத்திற்கு வெளியே கதை இளம் யுவதி ஒருத்தியை பற்றியது. அவளது காதலனால் அவள் படும் தவிப்பை சொல்லியிருக்கிறார்.நகரத்தில் நடக்கும் அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் விவரிக்கிறது ஒவ்வொரு வரியும்.காதல் என்கிற பெயரில் நடக்கும் விஷம செயல்களை நகர பெண்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே இக்கதையின் மூலக்கருவாக உணரமுடிகிறது.


காலவாயனின் காடு:

திரைப்படத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர் புகழின் கதையிது. மற்ற கதைகளிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுவது இதன் மொழி. சொல்கதை என்றபோதும் இதன் நுட்பமான விவரிப்பு ஆச்சர்யமூட்டுகிறது.வட்டார வழக்கில் வாசகனும் சங்கமித்துவிடுகிறான். காலவாயன் என்கிற விவசாயியின் மனவோட்டமாக கதை நீள்கிறது.நல்லதொரு கதை.

இருள் விலகும் கதைகள் நூலின் அட்டைப்படத்தின் வசீகரிப்பில்தான் இந்நூலை வாங்கினேன். இவை போன்ற தொகுப்பு நூல்கள் பல வெளிவர வேண்டும்.பல சிறுகதையாளர்களின் கதையை ஒரே நூலில் வாசிப்பது புதுவித வாசிப்பனுபவத்தை தருகிறது.ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பின்புலத்தை கொண்டிருப்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.தொகுப்பாசிரியர் விஜய மகேந்திரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.


-நிலாரசிகன்

நீர்க்கோல வாழ்வை நச்சி





நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம்
 
-----------------------------------------------------------------------
நூலின் பெயர் : நீர்க்கோல வாழ்வை நச்சி
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : ரூ.40
பக்கம்: 64
நூலாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்
-----------------------------------------------------------------------
 

சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை
அழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது. 

நினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.

நீர்க்கோல வாழ்வை நச்சி கவிதை நூல் மூலம் இலக்கிய உலகிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் லாவண்யா. இத்தொகுப்பின் தலைப்பின் வசீகரமே இதனை உடனே படிக்க வேண்டும் என்கிற ஆவலை என்னுள் எழச் செய்தது. இணையத்திலும் சில சிற்றிதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த லாவண்யாவின் கவிதைகளை மொத்தமாக ஒரே இடத்தில் படித்த போது முதல்தொகுப்பு என்ற எண்ணமேதும் இல்லாத வகையில் சிறப்பாகவே இருந்தன பல கவிதைகள். இயல்பான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் புற உலகின் மீதான நுண்ணிய கவனித்தலை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் லாவண்யா.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை "நீர்த்துளியும் நாய்க்குட்டியும்" என்பேன்.இக்கவிதையின் கடைசி ஆறு வரிகளில் சட்டென்று மனம் இறகாகி  காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது.

"உன்னைத் தெளித்த
நீர்த்துளிப்பட்டு சிலிர்த்தது
என் நினைவென்னும் நாய்க்குட்டி

உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான்"

"கவிதை போலும்" என்றொரு கவிதையில் நிராகரிப்பின் வலியை,பிரிதலின் கடும்துயரத்தை,எச்சிலென தன்னை இகழ்ந்த உறவை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

"இறுதியில் நீ உமிழ்ந்துவிட்டு போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக"

கடைசி மூன்று வரிகளை நான்கைந்து முறை வாசித்தேன்.எதுவும்/யாரும் நிரந்தரமற்ற இவ்வுலகில் யாரும் யாருடனும் இல்லை என்கிற நிதர்சன அவலம் கண்முன் தோன்றியது.

"கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்" கவிதை மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு நவீனகவிதையாக அமைந்திருக்கிறது. அகத்தின் குமுறலாக இக்கவிதை பரிணமித்திருக்கிறது.

ஞாபகமீட்சி,மனம் பழகாத பயம்,தொடரும் பயணம்,பிரியங்களின் பிரியம்,என் இருப்பும் உன் இருப்பும் - இவை அனைத்தும் இத்தொகுப்பிற்கு வலுசேர்க்கும் கவிதைகள்.

தானியங்கி குழாய்களும் நானும்,கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள் - இவை கவிதை தொகுப்பின் அடர்த்தியை குறைக்கும் கவிதைகள்.

லாவண்யா எழுத ஆரம்பித்த நாள் முதல் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கடந்த ஓராண்டியில் இவரது மொழிவளமும்,கவிதைத்தேடலின் வளர்ச்சியும் அதீதமாகி இருப்பதை இந்தக்கவிதைகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான வாசிப்பனுபவம் மட்டுமே கவிதைகளின்
குறைகளை களைய உதவும். தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதும்,ஒரே வார்த்தையை அதிகம் உபயோகப்படுத்தாமலிருப்பதும் எழுத எழுதத்தான் கைக்கூடும்.  இனி எழுதும் கவிதைகளில் இதனை லாவண்யா நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான்
இதுவரை எழுதிய கவிதைகளை கடந்து செல்வது எளிதாகும். 

லாவண்யா மேலும் பல கவிதைகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.



-நிலாரசிகன்

Wednesday, December 09, 2009

என் சிறுகதை நூல் வெளியீடு




வலையுலக நண்பர்களுக்கு,

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) என்னுடைய சிறுகதை தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வெளியாகிறது.
திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai - 2 ]

நூல் விபரம்:

பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
பகுப்பு : சிறுகதைகள்
பக்கம் : 90
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
கிடைக்குமிடம் :
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.
இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும்,

மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் இருபதாம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது.நண்பர் விழியனின் "காலப் பயணிகள்" சிறுவர் நாவலின் வெளியீடும் இதிலடங்கும்.



விழா அழைப்பிதழ்:
 
http://annakannan.blogspot.com/2009/12/20.html

அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



நட்புடன்,
நிலாரசிகன்.





Tuesday, December 08, 2009

கரையேறாத கனவொன்று..



இறுகப் பற்றியிருந்த
சவ்வு மிட்டாய்
உருகி வழிந்துகொண்டிருக்க
அம்மாவுக்கு காண்பிக்க
பத்துக்கு பத்து வாங்கிய சிலேட்டு
நெஞ்சோடு ஒட்டியிருந்தது.
சுவைத்த மிட்டாயின்
மிச்சம் இதழோரம் வழிய
ஜன்னல்  தெறிக்கும்
மெல்லிய சாரலில்
நனைந்தபடி பயணித்தான்
அச்சிறுவன்.
கட்டுப்பாட்டை இழந்த
பள்ளி வாகனம்
நீருக்குள் பாய்வதற்கு
இரு நிமிடங்களுக்கு முன்.


Monday, December 07, 2009

சாளரம்



பெருந்துயரத்தின் வலியோடும்
நிராகரிக்கப்பட்ட சொற்களின் வெம்மையாலும்
என்னிலிருந்து முழுவதுமாய்
நீங்கிச் செல்கிறாய்.
காற்றின் தீராப்பாடலெங்கும் நிறைத்திருக்கும்
நம் ப்ரியங்களின் உடைதலை
தூசி படர்ந்த சாளரத்தின் வழியே
பார்க்கிறேன்



உயிரிலிருந்து உலர்ந்து விழும்

கடைசி முத்தத்துடன்.


Friday, December 04, 2009

படித்ததில் பிடித்தது : கவிதைக் கரையோரம்

கவிஞர். அம்சப்ரியாவின் நவீன கவிதை குறித்த மிக முக்கிய பதிவு இது. நவீன கவிதைக்குள் நுழைய விரும்பும்/நுழைந்திருக்கும் இணைய எழுத்தாளர்களுக்கு மிக உபயோகமானது.


பிடித்த வரிகள் கீழே:  -  முழுவதும்
இங்கே வாசிக்கலாம்.




இன்றைக்குத் தமிழில் முன்னணி நவீனக் கவிஞர்களாக அடையாளப்படுத்திக்
கொள்கிற ஒரு சிலருடைய தொகுப்புகளை வாசிக்கிற கவிஞன் நவீனக் கவிதையை
விட்டு வெகுதூரம் ஓடிப் போகிற நிலையிலேயே சொற்கட்டமைப்பு விளங்குகிறது.
துவக்ககால வாசகனைப் பார்த்து, அதைப் படித்தாயா…? இதைப்
படித்திருக்கிறாயா…? என்றெல்லாம் கேட்டு திணறடிப்பதும் மேலைநாட்டு
கவிஞர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்சி ஏற்படுத்துவதும் நவீனக்
கவிதைக்குள் அடியெடுத்து வைக்கிற துவக்ககால வாசகனை மிரட்சியடையவே
செய்கிறது.

Wednesday, December 02, 2009

முகம்




அவள் எப்போதுமில்லாத
பெயரொன்றை உச்சரிக்கையில்
உதடு கடித்தாள்.
யாராக இருக்கும் எதற்கந்த
உதடு கடிப்பு என்று
குழம்பித் தவித்தேன்.
இருவருக்குமிடையே பெருகிய
இடைவெளியில் கசப்பின் மணம்
தவழ்ந்தபோது
கருவுற்ற செய்தி மொழிந்தாள்.


மெளனம் உடைந்து
வித்திற்கான பெயர்த் தேடல்
துவங்கிய மறுகணம்
பெயரொன்றை உச்சரித்தாள்..

உதடு கடித்திடாத
அந்த உச்சரிப்பில்
ஏதோவொன்றை தேடி
தோற்றேன் நான்.

வலைப்பதிவு நண்பர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:

கடந்த இரு நாட்களாக என்னுடைய வலைப்பக்கத்தை Firefox அல்லது Google Chrome உலவியில்(Browser) திறக்க முடியவில்லை. www.nilaraseeganonline.com என்று முகவரியிட்டவுடன் கீழ் கண்டவாறு எச்சரிக்கை வந்தது.


 





உடனே கூகிளை தொடர்பு கொண்டு இதுகுறித்தான புகாரை அளித்தபோதும் நேற்று முழுவதும் கூகிளிடமிருந்து எந்தவொரு தகவலுமில்லை. அதே சமயம்
Stopbadware  தளத்தில் உதவி கோரியிருந்தேன். அவர்கள் உடனே அதாவது இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் என் வலைப்பூவை மீட்டுக்கொடுத்தார்கள்.


எதனால் இந்த நிலை ஏற்பட்டது?

ஒரு மால்வேர்(கிட்டதட்ட வைரஸ்) எனக்கு பின்னூட்டமாக வந்திருந்தது.
கொரிய அல்லது சீன மொழி போலிருந்த அந்த பின்னூட்டம் அநானியாக வந்திருந்ததை கண்டவுடன் அதனை Reject Comment செய்துவிட்டேன்.
இருந்தபோதும் எப்படியோ ஊடுருவி இருக்கிறது.  

எப்படி தடுப்பது?


1.அநானி கமெண்ட் போடும் வசதியை நிறுத்துங்கள்.
2. ரிஜெக்ட் செய்யும்போது கவனமாக செய்யுங்கள்.பல பின்னூட்டங்கள் இருக்கும்போது தவறுதலாக Publish செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
3. Third party விஜ்ஜெட் அல்லது Html Code உபயோகிக்கும்போது கவனமாக இருங்கள்.
4. மாதம் இருமுறை வலைப்பூவை Backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
5.உங்கள் வலைப்பூ பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய கீழே உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்: (http://example.com என்பதற்கு பதில் உங்கள் வலைப்பூவை தாருங்கள்)

http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://example.com 

5. For tips on keeping your website clean and secure, please visit: http://stopbadware.org/home/security


பதிவர் உண்மைத்தமிழன் அவர்களின் வலைப்பூ இதே காரணத்திற்காக கூகிள் நிறுத்தி வைத்திருக்கிறது. எப்பொழுது மீட்டெடுக்க முடியும் என்பது இன்னும் தெரியவில்லை.
 


கவனம் நண்பர்களே! வலைப்பூ ஒன்றும் கல்வெட்டு அல்ல!!!



Monday, November 30, 2009

ஒரு கரு நான்கு கதைகள்!





 முன்கதைச்சுருக்கம்:

[அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,
அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும்
பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.
குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின்
பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.
மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.]


வேலியோர பொம்மை மனம்
              

  ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்.அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மிருதுவான அதன் தலையில் முத்திட்டு மகிழ்ந்தாள். அப்பாவும் அம்மாவும் கண்கள் தளும்ப யாரோ உருவாக்கிய பொம்மையை ரசிக்கும் தாங்கள் உருவாக்கிய பேசாபொம்மையை ரசித்துக்கொண்டிருந்தபோது, அவள் கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

                     ஆறு வருடங்களுக்கு முன் ஜெயா பிறந்தபோது அப்பாவை விட அம்மாதான் அதிகம் சந்தோஷப்பட்டாள். போரில் காலை இழந்ததால் மகன் பிறப்பான் தன்னை விட சிறந்த வீரனாக வலம் வருவான் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. பிறந்தது மகள் என்றபோது வெளிப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மகளை ஆண்பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்றே நினைத்திருந்த அப்பாவின் எண்ணத்தில் பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்தது. காதுகேளாத, வாய்பேச முடியாத குழந்தையாக ஜெயரஞ்சனி பிறந்திருந்தாள். தவமிருந்து பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு தவமுதல்வன் மீதே வெறுப்பை உமிழ்ந்தார் அப்பா. துடிதுடித்து போனாள் அம்மா. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்தன நாட்கள்.
                     ஜெயாவின் உலகம் பொம்மைகளால் நிறைந்தது. நாய்க்குட்டிகளும், சிங்கங்களும், யானை பொம்மைகளும் மட்டுமே ஜெயாவின் மௌனமொழியைப் புரிந்துகொண்டன. அவள் இருப்பே பொம்மைகள் சூழ என்றாகிப் போனது. மனதின் மொழியை கண்களால் வெளிப்படுத்தி  பொம்மைகளுடன் அவள் உரையாடுவதை வேதனையுடன் பார்த்துவிட்டு நகர்வாள் அம்மா. ஆனால் படிப்பில் எல்லோரும் ஆச்சர்யமூட்டும் வகையில் கூர்மை மிக்கவளாக திகழ்ந்தாள் அவள். அம்மா சைகையில் கற்று கொடுக்கும் பாடங்களை உடனே புரிந்துகொள்வாள். அப்பா வாங்கி தந்திருக்கும் கரடி பொம்மையை இடது தோளில் சாய்த்தணைத்தபடியே தனக்கு  மட்டுமேயானதொரு மௌன உலகில் நடமாடுவாள்.
                     ஒலியறியா ஜெயாவின் செவிகள் அந்த துயர்மிகுந்த இரவில் விழுந்து வெடித்த வெடிகுண்டின் பெருஓசையை கேட்டுணர்ந்து கொள்ளவில்லை. அவள் உறக்கத்திலிருந்தாள். இரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் பொம்மைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த ஜெயாவை தட்டியெழுப்பியபோது, திடுக்கிட்டு எழுந்தாள். அம்மாவைக் கண்டவுடன் பயத்தில் கண்கள் மருள கரடி பொம்மையை கட்டிக்கொண்டவளின் காலடியில் விழுந்து மரணித்தாள் அம்மா.

அநாதை என்னும் வக்கிர சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது. முள்வேலிக்குள் தனக்கு மிகவும் பிடித்தமான கரடி பொம்மையை அணைத்தபடி வெளிர் மஞ்சள் நிற பாவாடையில் உணவுக்காக தட்டை ஏந்தி நின்றுகொண்டிருந்தாள். கண்ணீர் அவளது பிஞ்சு மனதின் வலிகளை மொழிந்து கொண்டிருந்தது. நேற்றுவரை உணவூட்டிய அம்மாவின் நினைவுகள் அவளது கன்னத்தில் கோடுகளை தீட்டிச் சிந்தின. சக மனிதனின் மரணத்துயரின் ஓலமும், உறவுகளின் பிரிதலினால் ஏற்பட்ட துயரமும் அவளால் உணரமுடியவில்லை எனினும், அவளது இதயம் அந்த வலியை உணர்ந்துகொண்டது.
பகலெல்லாம் வெய்யிலின் உக்கிரமும், இரவின் கடுங்குளிரும் இப்போது ஜெயாவுக்கு பழகி இருந்தன. சுற்றிலும் முள்வேலியிட்ட உடைந்த கட்டிடமொன்றில் அவளும் இன்னும் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களது பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில் ஒருவன் மிகவும் மூர்க்கமானவனாக தோன்றினான். இரக்கமற்ற அவனது கண்களை பயத்துடன் பார்ப்பாளவள். அவனது தோற்றமும் கன்னத்திலிருக்கும் வெட்டுத்தழும்பும் அவனை கதைகளில் வரும் பூச்சாண்டியை நினைவூட்டின. அவளுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்கும் அவனது மௌன மிரட்டல் மேலும் அச்சத்தைத் தந்தது. ஜெயாவின் அருகில் வந்தவன் அவளது பொம்மையை பறித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்தபோது அருகிலிருந்த கல்தூணுக்கு பின் ஒண்டிக் கொண்டாள்.
                     மறு நாள் அதிகாலை வெளியே சென்றவள், இரு பாதியாய் முள்வேலியோரம் கிடந்த பொம்மையை கண்டு அழுதுகொண்டே அந்த பிய்ந்த பொம்மையை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அப்படியே உறங்கியவளின் கனவில் கரடிபொம்மைகள் உயிர்ப்பெற்று அவளோடு ஓடியாடி விளையாடின.

அவர்கள் தருகின்ற ரொட்டிகளை வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. வரிசையை கட்டுப்படுத்தியவர்களுள் அந்த முரடனும் இருந்தான். எல்லோரும் வாங்கி சென்றபின் ஜெயா ரொட்டியை வாங்கினாள். பசியில் ரொட்டித்துண்டு இனித்தது. ரொட்டியைக் கடித்தபடி நடந்தவளின் பார்வையில் களைத்து கல்லொன்றின் மீதமர்ந்த முரட்டுச் சிப்பாய் தெரிந்தான். சோர்வாக அவன் அமர்ந்திருப்பதை கண்ட ஜெயா அவனருகில் சென்று  ரொட்டித்துண்டில் ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொன்றை அந்த முரட்டு ராணுவவீரனுக்கு கொடுக்க கைநீட்டினாள்.
                   தன்னை நோக்கி நீள்கின்ற பிஞ்சுவிரல்களும், ரொட்டித்துண்டும், அதன் வெள்ளை மனதும் கண்டவன் முதல் முறையாக மெல்லியதாய் தன்னுடல் நடுங்குவதை உணர்ந்தான். தனிச்சையாக அவனது கைகள் நீண்டன.
                   அவனுக்கு ஒரு ரொட்டியை கொடுத்துவிட்டு தன் ரொட்டித்துண்டை கடித்தபடி, இடது கையில் பிய்ந்த கரடி பொம்மையை அணைத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தாள் ஜெயா.

*******************************

அடலேறுவின் கதை படிக்க இங்கே செல்லவும்.
ஜனாவின் கதை படிக்க இங்கே செல்லவும்.
அதிபிரதாபனின் கதை படிக்க இங்கே செல்லவும்.

Saturday, November 28, 2009

கூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1






கூடல்திணை ஜனவரி முதல் இதழில் ஆரம்பமாகும் புதிய பகுதிகள்:




இ.பாவின் ”திரைகளுக்கு அப்பால்” புதினம்:


ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால்
சிவப்பு.ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் 
இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான
போராட்டத்தையே இ.பா இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு
செய்துள்ளார்.


1971ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது
ஏகப்பட்ட எதிர்ப்புகள்,கண்டனங்கள்.விளைவு? தொடர் பாதியிலேயே
நிறுத்தப்பட்டது.பின்னர் கிழக்கு,கலைஞன் பதிப்பகங்களின் வாயிலாக
புத்தகமாக வெளிவந்தது.


இன்றும் பாலியல் தொடர்பான படைப்புகளைக்குறித்து விவாதங்கள்
நடந்துகொண்டிருக்கும் வேளையில் 70களிலேயே இந்திரா
பார்த்தசாரதி பல எதிர்ப்புகளுக்கிடையே இப்படி ஒரு
நாவலை படைத்திருக்கிறார் என்பது இன்றைய தலைமுறையினருக்கு
சென்றடைதல் வேண்டும் என்கிற எண்ணத்தில் மீள்பிரசுரமாகிறது.




கவிஞர்.பழமலய் “சனங்களின் கதை” பாகம் இரண்டு:


80களில் தமிழ்க்கவிதையுலகில் புரட்சியை ஏற்படுத்தி “இப்படியும் கவிதை
எழுதலாம்” என்று இன்றைய கவிஞர்களுக்கு முன்னோடியாக அமைந்தது
சனங்களின் கதை.


கடந்த முப்பது ஆண்டுகளில் கவிஞர்.பழமலய் கண்ட சனங்களின் வாழ்வியல் 
முறை மாறிய நிலையில் இன்றைய சனங்களை கவிதைகளில் எழுதுகிறார்.


இரா.முருகன் “பெட்டி” கணினித்துறையை பின்புலமாககொண்ட புதினம்:


ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:


 ‘மூன்று விரல்’ நாவலை நான் எழுதி எட்டு வருடமாகி விட்டது. அந்த உலகம் இல்லை இன்றைக்கு இருப்பது. நானும் தான் மாறி விட்டேன். 


அனுபவங்களின் கனம், அழுத்தம், அவை மனதில் பூசிப்போன இனிப்பும் கசப்பும் துவர்ப்புமான நினைவுகள் என்று இந்த மாற்றம் ஒரு தளத்தில் 


நிகழும்போது இன்னொரு புறம் நடை, வடிவம், கலை இலக்கியத் தேடல் எனப் புதிய பாதைகளில் எழுத்துப் பயணமும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.


கணினித் துறையில் சட்டென்று ஒரு தேக்கம். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, புது ப்ராஜக்ட்கள் வரவு குறைந்து அறவே இல்லாமலும் போனது 
என்று நிலைமை மாற, கம்ப்யூட்டர் பெட்டிக்காரர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயத்தன்மை குறையத் தொடங்கியது. இன்னும் இது தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது. விரைவில் மாறும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருப்பது உண்மைதான். ஆனாலும் காத்திருப்பின் வலிகள் 
எத்தனையோ கணினி மென்பொருள் ஊழியர்களை ஆழமாக பாதித்திருக்கின்றன. 


நாகூர் ரூமி “பாட்-பூரி” பத்தி:


நாகூர் ரூமியின் எழுத்தில் வார்த்தைகளுடன் பகடியும் நையாண்டியும் கலந்து புதுசுவை விருந்தளிக்க வருகிறார்.சுவையை குறித்து


ஆசிரியரின் முன்னுரையில்,


சோற்றில் சாம்பாரோடு ரசத்தையும் சேர்த்து ஊற்றிக் கலந்து கொள்வேன். மட்டன் குழம்பில் தயிர் அல்லது மோரை ஊற்றிக் கொள்வேன். தோசை, 


இட்லி, இடியாப்பம் வகையறாக்களை டீ தொட்டு சாப்பிடுவேன்... ஒரு தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறை அது என்று சொல்லலாம்.
நான் எழுதும் முறையும் நான் சாப்பிடும் முறை போன்றதுதான். நான் எழுதிய நாவல் ஒன்று நாவல் என்ற இலக்கணத்துக்குள் வரவே இல்லை என்று 
ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கென்ன கவலை? அது நாவலாக இருந்தால் என்ன, 
இல்லாவிட்டால் என்ன? படிப்பதற்குச் சுவையாக இருக்கிறதா இல்லையா? அதுதான் கேள்வி. அதற்கு பதில் ஆம், இருக்கிறது என்று வாசகர் மனம் 
சொல்லிவிட்டால் அது பிறவிப்பயன் அடைந்துவிட்டது.


கோவை சதாசிவம் “சூழல் போராளிகளுக்கு...” சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைத்தொடர்:


மலைத்தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக இக்கட்டுரைத்தொடர் அமையும்.மலைகள்,காடுகள்,பறவைகள்,விலங்குகள்,நதிகள்,
கடற்கரைகள் என இயற்கையையும் இயற்கையின் கூறுகளையும் தாயாகவும் குலசாமியாகவும் உளமாற நம்புகிற உணர்வுப்பூர்வமான
கட்டுரைத்தொகுப்பாக இது அமையும்.வள்ளுவனும் வள்ளலாரும் பாரதியும் இராகுல்ஜியும் ஏங்கல்ஸும் சூழலியல் உணர்வோடுதான் வாழ்ந்தார்கள்,படைத்தார்கள் என்பதை இக்கட்டுரைத்தொடர் உணர்த்தும்.


------------------------------------


மேலுள்ளவை மட்டுமல்லாமல் இன்னும் பல ஆச்சர்யங்கள் ஜனவரி ஒன்றுக்காக காத்திருக்கின்றன! நீங்களும்தான்!!
கூடல்திணை இணைய இதழில் உறுப்பினராக உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள். 
பதிவு செய்தவர்களுக்கான கடவுச்சொல் டிசம்பர் 15க்கு பிறகு மின்மடல் வழியாகத் தெரிவிக்கப்படும்.


அடுத்த முன்னறிவிப்பு மேலும் பல படைப்புகளின் விவரங்களுடன் டிசம்பர் 15 அன்று வெளியிடப்படும்.



Friday, November 27, 2009

கவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.



உரையாடல் அமைப்பு மீண்டும் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இம்முறை கவிதை போட்டி :)
(20 முதல் பரிசுகள், தலா ரூ.1500)

போட்டிக்கான சுட்டி :

http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html



சத்தமின்றி மற்றொரு பதிவர் சிறுகதை போட்டியை அறிவித்திருக்கிறார். முதல் பரிசு 2000 ரூபாய்.

போட்டிக்கான சுட்டி:

http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

சர்வேசன் நடத்தும் "நச்" சிறுகதை போட்டியின் கடைசி கட்ட தேர்வு நடைபெறுகிறது.

விவரம் இங்கே :

http://surveysan.blogspot.com/2009/11/blog-post_26.html

இதுபோன்ற போட்டிகள் மொழியின் வளர்ச்சிக்கும் நல்ல எழுத்துப் பயிற்சிக்கும் வழிவகுக்கும். பதிவுலகம் கடந்த இரண்டாண்டுகளில் நல்லதொரு வளர்ச்சியை எட்டியிருப்பதாகவே தோன்றுகிறது.
கலந்து கொள்ள போகும் இணைய எழுத்தாளர்/கவிஞர்களுக்கு என் வாழ்த்துகள்.

Thursday, November 26, 2009

இலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை

நேற்று திடீரென்று நண்பர் butterfly சூர்யா விடமிருந்து தொலைபேசி அழைப்பு.. காலையில் பெரும்பாலும் அழைக்க மாட்டார். ஒரு முக்கியமான செய்தி என்றார். அப்போது வெளியில் இருந்ததால் வாகன இரைச்சலில் சரியாக கேட்கவில்லை மீண்டும் அழைப்பதாக சொல்லி போனை வைத்து விட்டர்.. கொஞ்சம் டென்ஷனாகி போனேன்.



மீண்டும் மதியம் அழைத்து இலங்கை ஷக்தி பண்பலைக்காக ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றார். அவர்களே மாலை அழைத்து ஒலிப்பதிவு செய்வார்கள் என்றும் சொன்னார்.



மாலை அழைத்து ஒலிப்பதிவும் செய்தார்கள்.. மகிழ்ச்சியாக இருந்தது.



நிகழ்ச்சி பற்றிய தகவல்:


வானொலி : "சக்தி" பண்பலை

அலைவரிசை : கொழும்பு & கிழக்கு: 105.1 கண்டி: 91.50

கிழமை : ஞாயிறு

நாள் : 29/11/2009

நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை..

நிகழ்ச்சியின் பெயர்: அன்னைக்காக




”அம்மா என்றொரு தேவதை” என்ற பெயரில் ஒரு கவிதை வாசித்து இருக்கிறேன்.


ஆனால் என் குரலை நானே இங்கு (இந்தியாவில்) கேட்க இயலாது என்று நினைக்கிறேன். இலங்கை நண்பர்கள் கேட்டுவிட்டு கருத்தை கூறுங்கள்.


ஒலி நாடா வந்ததும் பதிவில் சேர்க்கிறேன்.


என் பெயரை பரிந்துரைத்த நண்பர் சூர்யாவிற்கும் வாய்ப்பளித்த ஷக்தி பண்பலைக்கும் மிக்க நன்றி.
டிஸ்கி: இந்த ஒலிப்பதிவில் கவிஞர். வைரமுத்து, கவிஞர். பா.விஜய் அவர்களின் கவிதையுடன் என் கவிதையும் இடம் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.

Tuesday, November 24, 2009

வேட்கையின் நிறங்கள்




1.
வளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது.கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா.பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட நொடி முதல் என்னுலகில் வலம் வந்த ஆண்கள் அனைவரும் கரைந்து மறைந்துபோனார்கள்.
என் அருகில் அமர்ந்தபோது அவள் உடலிலிருந்து பரவிய வாசனைக்கு என் பெண்மையை தட்டி எழுப்பும் கரங்கள் இருந்ததோ என்றே எண்ணி வியந்தேன். வேதா என்கிற என் பெயரை வெறுக்க ஆரம்பித்து எப்போதும் நதியா என்றே முணுமுணுக்க துவங்கியது இதழ்கள்.யாராவது நதியா என்றழைத்தால் சட்டென்றொரு நிமிட சில்லிப்பு உடலை ஆக்கிரமித்துக்கொள்ளும். பேனா அல்லது ஏதோவொன்று வாங்க அவளது கைவிரல்கள்
என்னிடம் நீள்கின்றபோதெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அகத்தூண்டலில் திண்டாடினேன் நான். நதியா உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட முயன்று முயன்று நான் தோற்பதை எப்போது அறிந்துகொள்வாள் அவள்?

"என்னடி திரும்பவும் கனவுக்கு போயிட்டீயா?" நதியா என் வகுப்பில் சேர்ந்த பொழுதுகளை அசைபோட்டபடி படுக்கையில் கிடந்தவளை உசுப்பியது அந்தக் கேள்வி.படுத்துக்கொண்டே தலை திருப்பி அவளை பார்த்தேன்.நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸுமாய் நின்றிருந்தாள்.
ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. "ஒண்ணுமில்ல நதி...சரி ஆபீஸ் கிளம்பிட்டியா?" அந்த நீலநிற சட்டையை ரசித்துக்கொண்டே கேட்டேன்.

"ஆமாடி இன்னைக்கு சீக்கிரம் போகணும் ஒரு ப்ராஜக்ட் டெட்லைன்,சாயங்காலம் வர லேட்டாகும் கோவிச்சுக்காத செல்லம்" என் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.

மீண்டும் நதியா என் வாழ்க்கைக்குள் வந்த அற்புத பொழுதுகளை நினைத்தபடி படுக்கையில் விழுந்தேன்.

2.
ப்பாவின் அடிகளை அம்மாவால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். குடித்து சீட்டாடி குடும்பத்தை சீரழித்திருந்தார் அப்பா.அம்மா ஆசிரியை என்பதால் வீட்டில் அடுப்பெரிந்தது. நான் அம்மா அப்பா இதுதான் எங்கள் குடும்பம்.அப்பா என்று அழைக்க விரும்பாததால் அவன் என்றுதான் அம்மாவிடம் பேசுவேன்.
வேலைவெட்டி ஏதுமின்றி எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் அவனை அம்மா எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாள் என்பது புரியாத ஒன்றாகவே இருந்தது எனக்கு.

ஆண்களை காணும்போதெல்லாம் அவனுடைய சிகப்பேறிய கண்கள்தான் என்னை ஆட்கொள்ளும்.எந்தவொரு ஆணும் அவனை போலவே துர்நாற்றமெடுக்கும் உடலையும் வெறிநிறைந்த சிகப்புக்கண்களையும் கொண்டிருப்பதாக தோன்ற ஆரம்பித்தபோது எனக்கு பதினான்கு வயது முடிந்துவிட்டிருந்தது. பூத்து நின்ற நேரம் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வீடு நிறைத்திருந்தனர் சொந்தங்கள். அப்போதுதான் முதன் முதலாக மாதவனை பார்த்தேன். என் அத்தை மகன். அரும்பு மீசையும் பூனைமுடி தாடியுமாக திரிந்துகொண்டிருந்தவன் அவ்வப்போது ஓரக்கண்ணில் என்னை பார்த்தது உள்நெஞ்சை வருடுவது போலிருந்தது. ஆண்களே பிடிக்காத எனக்குள் மாதவன் மட்டும் வெள்ளைநிறமும் கருமைநிறமும் கொண்ட ஒளிவீசும் கண்களை கொண்டவனாக தோன்றினான். அந்தக் கண்களும் என்னை தின்றுவிடும் ஓரப்பார்வையும் ஏதேதோ புரியாத உணர்ச்சிகளை தெளித்துச்சென்றன.

மாதவன் எங்கள் வீட்டிலிருந்த ஒரு வாரமும் பல்லாயிரக் கணக்கான யுகங்களுக்கு சமமான வசீகர வாழ்க்கையை எனக்கு தந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன்.கள்ளச்சிரிப்பிலும் திருட்டுத்தனமான பார்வையிலும் மாதவன் என்னை சுற்றி வந்தான். யாருமற்ற அதிகாலையில் கால்களில் ஏதோ நெருடியபோது சட்டென்று விழித்து அதிர்ந்தேன். என் முழங்கால் நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது மாதவனின் விரல்கள். வெடுக்கென்று கால்களை பாவாடைக்குள் மறைத்துக்கொண்டேன். மாதவனின் கண்கள் ரத்த சிவப்பாக மனதெங்கும் காட்சியளித்தது.என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.மாதவன் போய்விட்டான். எங்கள் வீட்டிலிருந்தும் என்னிலிருந்தும்.

3.



மாதவனின் பிரிவுக்கு பிறகு யாரிடமும் அதிகம் பேசாத மெளனியாக இருப்பதே என் இயல்பாகிப்போனது.
ஆண்களைக் காணும்போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் என்னை சூழ்ந்துகொள்ளும். என் அம்மா வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியிலேயே படித்ததால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.படிப்பில் மட்டுமே கவனம் திசைதிரும்பிய நேரத்தில்தான் நதியாவின் வருகை நிகழ்ந்தது.

கடைசி பெஞ்சில் என்னருகில் நதியா அமர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளது தொடுதலை ரசித்துக்கொண்டே இருந்தேன். எதனால் நதியா என்னுள் வந்தாள்? என்ன உறவு இது? ஏதும் புரியும் நிலையில் அப்போது நானில்லை.அது பிடித்திருந்தது. அவளறியா பொழுதுகளில் அவளது பேனாக்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவளது வாசம் நிறைந்திருக்கும் புத்தகங்களை நுகர்வதும் விவரிக்க முடியாத பெரும் கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கியிருந்தது.

நதியா என்னைப்போன்றே மெளனத்தை நேசிப்பவளாக இருந்தாள்.ஆனால் தவறு செய்பவர்கள் அது ஆசிரியையாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காண்பிப்பாள். ஒருமுறை எங்கள் பள்ளியின் வாசலருகே நடந்த விபத்தொன்றில் தவித்த பெண்ணுக்கு உடனே இரத்தம் தர முன் வந்தவள் நதியா. இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகம் கவர்ந்தது அவளது நீலநிற கண்கள். எப்போதும் பேசும் கண்கள்.
துயர்மிகுந்த இரவுகளில் அவளது கண்களே என்னுடன் உரையாடின. காந்தம் நிறைந்த அவளது பார்வையில் மெய்மறந்து சொல்ல வந்த வார்த்தைகள் தொலைந்து நின்ற நாட்கள் ஏராளம். நீலநிற வானத்தில் நதியாவும் நானும் மேகங்களினூடாக பயணிப்பது போல் கனவு கண்டிருக்கிறேன்.அவள் வாசம்தான் என் சுவாசப்பையை எப்போதும் நிரப்பியபடி இருந்தது.நதியாவிடம் எப்படி சொல்வது என் அக தவிப்பை?

4.

ன்றொரு நாள் பள்ளி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போனபின் நானும் நதியாவும் தனித்திருந்தோம். அவள் கண்கள் நீலநிறத்தை இழந்திருந்தது அன்றுதான். இரண்டு பாடங்களில் பெயிலான வருத்தம் தாளாமல் என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். எனக்குள் ஏதோ சடக்கென்று விழித்துக்கொண்டது.ஆறுதலாய் அணைத்துக்கொண்டு அவள் நெற்றில் முத்தமிட்டேன். மின் அதிர்வுகள் உடலெங்கும் பரவி தனித்தீவில் நானும் அவளும் மட்டுமே தனித்திருப்பதாக கற்பனை விரிந்தபோது என்னை ஏறிட்டு பார்த்தாள். மெல்ல அவளது கண்களின் நீல நிறம் அடர்த்தி பெற்று விஷ நாகத்தின் கண்களைபோல் உருண்டது. கன்னம் நனைத்த கண்ணீர்க்கோடுகளில் முத்தமிட்டேன். இறுக என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். திரியின்றி எரிந்து சாம்பலாகி நாங்கள் மீண்டபோது அவள் கைகளுக்குள் நானொரு சிறுமுயலாய் கிடந்தேன்.

அடுத்த இருவருடங்கள் அருகிலிருக்கும் நகரத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தோம். விடுதியில் ஒரே அறை. என் கரம் பற்றி கனவுகளை ரசிக்கும் காதலனாய் உடல்பற்றி உயிர் மீட்கும் கணவனாய் நதியா மாறியிருந்தாள்.
என் வானமெங்கும் அவளது கண்களின் நிறம் வழிந்துகொண்டிருக்கும். உடல் பொருள் அனைத்தும் நதியாவின் சொந்தமான தருணம் கல்லூரிக்குள் நுழைந்தோம்.மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் நதியாவின் அடிமைப்பெண்ணாக வசிப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. விடுதி அறைக்குள் அவள் கணவனாக நான் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை எவ்வித கஷ்டங்களுமின்றி நகர்ந்தது.

மூன்றாம் வருடத்தின் கடைசி நாளில் அம்மா கல்லூரிக்கு வந்திருந்தாள். கன்னத்தில் புதியதொரு வடு தென்பட்டது.ரத்தக்காட்டேரியாக அவள் கணவன் மாறியிருக்கலாம். வந்தவள் சொன்ன செய்தி கேட்டு உடைந்து அழுதேன். மாதவனுக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்போவதாக அம்மா சொன்னாள். அம்மா அப்பாவிடம் மட்டும்தான் கோழை.மற்றவர்களிடம் கல்நெஞ்சுக்காரி.நினைத்ததை முடிக்காமல் விட்டதேயில்லை. விடுதிக்கு திரும்பினேன்.நதியாவின் மடியில் முகம்புதைத்து அழுதேன். என்னை விட்டு அவள் மட்டும் எங்கே போய்விடுவாள்? அவளது நீலக்கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரும் அந்த நகரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிட தீர்மானித்தோம்.

5.

கோவைக்கு ரயிலேறியதிலிருந்து அவள் மடியில் படுத்தபடியே கண்கள் மூடியிருந்தேன் நான். ஜன்னல் வழியே வெளியுலகை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நதியா. இருவரும் கோவையில் ஒரு வீடுபிடித்து வாழ துவங்கினோம்.அவளுக்கு வெள்ளை வேஷ்டியும் கதர் சட்டையும் எடுப்பாக இருந்தது.கண்மையால் சிறிய மீசையை அவள் வரைந்தபோது அது மாதவனை நினைவூட்டியது.என் மனமறிந்து உடனே அதை அழித்துவிட்டாள்.
மஞ்சள் கயிற்றிலாடிய சிறு மஞ்சள் பார்க்க மிக அழகாய் இருந்தது. ஜன்னல் வழியே மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்க என் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினாள். எப்போதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்து அணைத்துக்கொண்டாள்.மஞ்சள் வெயிலின் இதத்தை அந்த அணைப்பில் உணர்ந்தேன்.

நதியாவுக்கு ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.நான்கு மாதமாக எங்கள் வாழ்க்கை இனிப்பை மட்டுமே எங்களுக்கு தந்து மகிழ்ந்தது. மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்துக்கொண்டு மஞ்சள் நிலவை ரசித்த பொழுதுகள் ஏராளம்.சிறுசிறு கதைகளால் என்னை வெட்க செய்வாள்.என் நெற்றியில் புரளும் முடிக்கற்றையை அவளது நீண்ட அழகிய விரல்கள் ஒதுங்கச் செய்யும். இரவுகளில் உணர்வுப்பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் நதியா என்னை மாற்றியிருந்தாள்.

கதவு தட்டபடும் ஓசை கேட்டு இயல்புக்கு திரும்பினேன். நதியாவாகத்தானிருக்கும்.இன்று மல்லிகைப்பூ வாங்கி வருவதாக சொல்லி இருந்தாள். ஓடிச் சென்று கதவை திறந்தேன். அவளுடன் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.
தன்னுடன் வேலை பார்க்கிறானென்று அறிமுகப்படுத்தினாள். நதியாவின் தோளில் கைபோட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.

அதிர்ச்சியுடன் நதியாவை பார்த்தேன்.அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.

-நிலாரசிகன்.

Monday, November 23, 2009

நவம்பர் 23


புன்னகை தொலைந்து
சில மாதங்களாயிற்று.
இன்றேனும்
மலர்ந்திருக்கட்டும்
புன்னகை மறந்த இதழ்கள்.