1.
உலகின் மிக கனமான
பொருளை நான் சுமந்து வந்தேன்.
மார்பில் ஊர்ந்து உடலெங்கும்
பரவி உயிரின் வேரில்
அமர்ந்துகொண்டது அப்பொருள்.
பின்,
அதனுடன் ஓர் உரையாடல்
ஆரம்பமானது.
இலை பிரியும் தருணம் பற்றியும்
நீள் கனவொன்றின் உதிரம் பற்றியும்
உரையாடி சலித்தபோது
அதன் எடை குறைய துவங்கியிருந்தது.
நீராலான அதன் பெயரை
கண்ணீரென்று நீங்கள் உணரும்போது
விலங்கின் உருவிலிருந்து
பறவையாக
மாறியிருக்கும் என் தேகம்.
2.
பெயரில்லா இந்த உலர்ந்த
இரவை முத்தங்களால்
நிரப்பிக்கொண்டிருக்கிறது மழை.
பல நாட்கள் பத்திரப்படுத்திய கனவுகள்
ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிப்பது
பற்றிய கவலையேதுமின்றி
முத்தமிடுகிறது மழை.
மெளனம் கிழித்து வார்த்தைகள்
வெளிக்குதித்தோடி மறைகின்றன.
தியானவெளியில் வெண்ணிற
உடையுடன் அலைகிறாள் அவள்.
தன் நிர்வாணம் கண்டு வெட்கி
மறைகிறது மழை.
இரவின் சருகுகள் உதிர்கின்ற
மூன்றாம் சாமத்தில்
உனக்கொரு கடிதம் எழுத
அமர்கிறேன் நான்.
3.
பூக்களால் நீ அலங்கரிக்கப்பட்டிருக்கிறாய்
இறுகத் தழுவிக்கொண்டு நெற்றியில்
ஓர் ஒற்றை முத்தமிட நினைத்து
தோற்கிறேன்.
நம்மிடையே காலம்
அழுகிய புன்னகையுடன் நிற்கிறது.
உயிருடன் நம் வண்ணத்துப்பூச்சி
புதைக்கப்படுகிறது.
நாம் செல்லவேண்டிய
பாதைகள் நம் அனுமதியின்றி
அடைக்கப்படுகின்றன.
வெவ்வேறு திசையில் ஆரம்பமாகும்
பயணத்தில்
நீ
மழையின் நடுவே நடந்து செல்கிறாய்.
நான்
மழையாதலின் சாத்தியக்கூறுகள் பற்றிய
சிந்தனையில் ஆழ்ந்து மறைகிறேன்.
-நிலாரசிகன்.









