Wednesday, January 09, 2013

மீன்கள் துள்ளும் நிசி - விமர்சனம் - கவிஞர்.இளஞ்சேரல்


நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து


நிழல் விரிகிறதென்றால்

பகல் சுடுகிறது என்று பொருள்--

நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து

 

இளஞ்சேரல்

 

         நவீன காலத்தின் பிரதிபலிப்பை பிரித்து எரியப்பட்ட கார்பன் கழிவுகளைப் போலவும் திரும்பவும் அவைகளைக் கைப்பற்றி தாள்களுக்குள் சொருகிச் சொருகி சில பொம்மைகளை வரையும் சேரியின் சிறுவர் சிறுமிகளின் சித்திரங்கள் போலவே நமது நவீன கிராமங்களின் கவிதைகள் பதிகிறது.

               எல்லாக் கிரயப்பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டபின் அந்த நிலத்தை மீண்டும் அத்தாட்சி சுத்தமாகச் சென்று பார்த்து வருகிற மாதாந்திரச் சம்பளக்காரனின் வாழ்வுதான் நவீன கவிதை

         நவீன கவிதையியல் குறித்து எழுத எழுத தீராத மணற்குமிழ்கள்.அது எல்லா இடத்திலும் இருக்கும் பால்பாயிண்ட் பேனாவின் குமிழ் போல சில சமயம் கொஞ்சம் கண்களால் அறியமுடியும். சில வற்றை அள்ளி அதில் எங்கானும் தவறிய சில சங்குப் பாசிகளை நுற் சங்குகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவைப்படும் பட்சத்தில்

              நிலாரசிகன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கப் படும் போது அடிக்கடி இருதயத்தைத் தொட்டுப்பார்த்துக் கொள்கிற ஆஸ்துமாகாரன் போலத்தான் மிளர வேண்டியிருக்கிறது. படிமங்களை மிக அதிகமாகவும் பிரழ்வு சோகையுடனும் அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. சங்கிலிக் கண்ணக

ளாக அடுக்கப்பட்டிருக்கும் காட்சி சிலாகிப்பு-எரி நட்சத்திரம் போல அடிக்கடி காணாமல் போகும் சற்று முன் விவரித்த சித்திரக் காட்சிகள் என்பதான நிறைய பிடிமானம் இல்லாத கத்திகளும் முள் உருண்டைக் கருவிகளுமாகக் கைகளில் பற்றுவதாக இருக்கிறது.

43. பொம்மையாதல்- கவிதை நாம் மேதமை கொண்டோர் என அறிந்தவர்கள் கூட சிறு அப்பியாசம் கூட அறியாதவர்களாக இருப்பர்.அல்லது

குழந்தையாக இருப்பினும் கூட கேட்டுப்பெறுபவர்க

ளாக இருப்பர் என்கிறார் இக்கவிதையில் குழந்தைகள் அறிந்ததைக் கடவுள் கூட அறியாது என்பதாகிறது. இவ்விடம் குழந்தை நவீன காலத்தின் குழந்தையாகவும் காட்டுவதுதான் நிலாரசிகனின் நுட்பம்.

 

அப்பாவும் அம்மாவும்

தராத அரவணைப்பை

பொம்மைக்குத் தந்தபடி

உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை

கனவில் தோன்றிய கடவுள்கள்

அச்சிறு குழந்தையின் அரவணைப்பை

வரமாய்க் கேட்டனர்

வரிசையில் நின்றிருந்த

கடவுளர்களுக்கு உறக்கப் புன்னகையை

தந்துவிட்டு பொம்மையை

இறுக்கி அணைத்துக் கொண்டதது.

பொம்மையாதலின் வழிமுறைகள்

அறியாமல் விழித்தபடி நின்றனர்

கடவுளர்கள்..

         மாயத்தின் தத்ரூபமான தரிசனம் இக்கவிதையில் கிடைக்கிறது. ஏற்கெனவே இந்த கவிமொழி நமக்கு குறுங்கவிதைகள் எழுதுகிற கவிஞர்கள் மூலமாக நமக்கு அனுபவமாகக் கிட்டியியிருந்தாலும் பொம்மையாதலின் வழிமுறைகளை அறியாதவர்தான் கடவுள் என்பது நல்ல புனைவும் அதியதார்த்தம் மீறிய கூட்டிணைப்பு

கடவுள் குழந்தைகளிடம் எந்த சமரையும் வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகள் புத்திசாலித்தனத்தை கடவுளிடம் கேட்டுக் கொண்டெல்லாம் காத்திருப்ப தில்லை. இங்கு குழந்தை என்பது இயற்கையின் ரூபம் என்பதாக வாசகனுக்கு அறிய நேர்கிறது.

 

வேர்களற்றவர்கள்

 

மௌனம் உருகி படர்ந்திருக்கும்

மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்

என் அணைப்பின் தகதகப்பில்

அடர்பச்சை மரக் காடுகளை

பார்வையின் வழி சென்றடைகிறாய்

மெல்ல உன் வதனம் திருப்பி

இதழ்களில் முத்தமிடுகிறேன்

வனம் சில்லிட்டு சிதற சிதற

நம்மிடையே வளர்கின்றன

ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்

இதழ்களிலிருந்து வெளியேறும்

முத்தப்பறவைகளிலொன்று உன்னை

அள்ளிச் செல்கிறது

இதழ்களிலிருந்து வெளியேறிய

கருந்தேள் என்னைத் தின்று பசியாறுகிறது

நம் தடயங்களற்ற மலையின் உச்சி

இப்பொழுதும் மௌனித்துக் கிடக்கிறது.—பக்-28

 

       நிலாரசிகன் அதிகமான படிமங்களை உருப்போட்டிருக்கும் கவிதை இந்தக் கவிதை. அவருடைய எல்லாவிதமான சாத்தியங்களும் கவிதையின் சத்தியமும் இக்கவிதையில் இருக்கிறது. நவீன காலத்தின் எல்லா உபகரணங்களையும் கைக் கொண்டிருக்கிற ஒருவன் தான் அனுபவிக்கின்ற இன்பங்களை அல்லது இழப்பீடுகளைப் பேசும் போது இப்படியான பிறழ்வுப் படிமங்கள் வரும். பிரம்மராஜன், பசுவய்யா,ஞானக் கூத்தன், அழகிய சிங்கர் ஆகியோர் இப்படி நிறையப்படிமங்களை அடுக்கியிருக்கிறார்கள்.

              காதலுறுதல் காமுறுதல் உயர்வு நவிற்சி பாடல்களில் சங்கப் பாடல்களிலும் சரி பக்தி இலக்கியக் காலங்களிலும் சரி மிகு உயர்வு நவிற்சியைப் பயண்படுத்தி கவிரசம் சொட்டச் சொட்ட பந்தியிட்டிருக்கிறார்கள் நம் பாணர்கள்.

           அந்த வகையில் நம் நெகு காலமானாலும் சரி கல் குவாரி காலமானாலும் சரி பாதாள சாக்கடையை இன்னும் நான்கு பேர் இறங்கி முங்கி சுத்தம் செய்யும் காலமானலும் சரி கவிஞனுக்கு எல்லாமே வலிமிகுந்த காலம்தான்..

 

நடுநிலைத்திணை

 

ஒவ்வோர் இதழிலும்

வெவ்வேறு நிறங்ளைக் கொண்டிருக்கும்

அம்மலருக்குள்

ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்

நிறைந்த அவ்வுலகில்

சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்

ஊர்ந்து செல்ல

காட்டாற்றின் கரையில்

மூன்று நிழல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன

பறவையின் முதல் நிழலும்

அலகுப்புழுவின் இரண்டாம் நிழலும்

சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற

மூன்றாம் நிழலில்

ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை

சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை

சுவைத்துக் கொண்டு..

           நல்லதொரு மீள் தரிசனத்தைத் தரும் இக்கவிதையில் அவர் ஆழக்கட்டும் காகிதக் கட்டிடங்களில் நாம் வசிக்கலாகாதா எனத் தோன்றுகிறது. தொகுப்பின் மொத்தக் கவிதைகளும் ஏதாவது ஒரு அழுத்தமான பிடியையும் பிம்பத்தின் ஊனையும் உறவையும் போற்றியபடியே இருக்கிறது.

           துண்டு துண்டாக வெட்டிப் பின் கலைத்து கலைத்து பின் வேறென்றாகச் சேர்க்கப் பார்த்து அது வேறொரு சித்திரமாக உருவெடுப்பதுதான் நவீன கவிதையின் கடலாழ பலம். அந்தப் பலத்தை நிலாரசிகன் ஒரு பளுதூக்கும் வீரனாக எல்லா பளு வில்லைகளை மாட்டி மாட்டி தூக்கிநிறுத்தப் பார்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.. வாசகனாக என்றும் நல்ல அனுபவம்.. இந்தத் தொகுப்பின் மூலம் கிடைத்திருக்கிறது. பிரமிள், புதுமைப்பித்தன், நகுலன், ஆத்மாநாம், சி.மணி, அப்பாஸ் போய்விட்டார்கள். நம்மையும் நம் கவிதையையும் காப்பவர்கள் யார் என்று புலம்பியிருக்கிறோம் நாம் முதல் முதலில். பிறகு அவர்களாகவே நாம் மாற யத்தனிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் பணிவிடையாகிறது. அந்த பரமாத்மாக்களின் விட்ட பணியை ஆளாளுக்குத் தூக்கிச் சுமக்க பிரியப்படும் எண்ணற்ற கவிஞர்களில் நிலாரசிகனும் ஒருவராக இருப்பது இந்தத் தொகுப்பில் தெரிகிறது.

    

         வாசிப்பின்  நுட்பமான அந்த அனுபவமே இந்த நூற்றாண்டின் தமிழ் நவீன கவிதைக்கு அவசியமாகிறது.

           கவிஞனைப் போற்றுவது நல்ல கவிதைகளின் வாசகனைப் போற்றுவதாகிறதால் நான் என்னை முதலில் இந்தத் தொகுப்பின் மூலமாக என்னைப் போற்றிக் கொள்கிறேன்.. நிலாரசினின் முயற்சிகள் கவிதைகளுக்காகத் தொடர்வது கவிதையின் ரசிகனான எனக்கு என்றும் இன்பம்தான்..

 

வாய்ப்பிருந்தால் மேலும் சில கவிதைகள் குறித்து எழுதுவேன்..

Monday, December 17, 2012

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்ச்சி நிரல்:

http://www.yaavarum.com/archives/660

அனைவரும் வருக!

இணையம் வழியே நூலை பெற:

http://tinyurl.com/cvpwnmz


Wednesday, December 05, 2012

மீன்கள் துள்ளும் நிசி - இம்மாதம் வெளியாகிறது


Sunday, December 02, 2012

துயரத்தின் முடிச்சு



அந்தரவெளியில் மிதக்கிறது.
யாருடைய முடிச்சாகவும்
இருக்கலாம்.
வாழ்வின் துயர்மிகுந்த
காட்சிகளால் நிரம்பி 
தளும்புகிறது.
இரவின் கண்களில் 
நதியாகி வளைகிறது
குருதி.
அவிழ்ந்துவிட முயன்று
முடியாமல் தோற்று
முடிச்சுக்குள் முடிச்சாகி மூழ்கிப்போகிறது
காலம்.
ஓர் உன்னத காதல் முடிச்சின்
மறுபக்கத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
எக்கணமும் அவிழ்க்க இயலாத
துயரத்தின் முடிச்சொன்று.
-நிலாரசிகன்.

Saturday, November 24, 2012

நம்மிடையே மலர்ந்திருக்கும் மலர்




அதற்கு அத்தனை வாசமில்லை.
அவ்வளவு அழகுமில்லை.
கண்ணிமைச் சாமரங்களின்
மென்காற்றில் எப்பொழுதேனும்
உதிர்த்திடும் சில சொற்களை.
கைகளில் இருபது விரல்கள்
முளைத்தபோது அவ்வளவு
அழகாய் தோன்றி
பின்
அமைதியாக நடந்து போனது.
துயரங்களில் மொத்தக்கடலாகி
அதன் இதழ்கள் தொட்டபோது
சிறியதாய் மலர்ந்து
கணங்கள் சில கடந்து
மெளனித்து மொட்டாகியது.
அதற்கும்
அப்பால் ஓர் உலகமிருக்கிறது.
என்றுமே முழுவதும் மலர்ந்துவிடுவதில்லை
நம்மிடையே மலர்ந்திருக்கும்
இம்மலர்.
-நிலாரசிகன்.

Saturday, November 10, 2012

கல்கி தீபாவளி மலர் கவிதைகள்

மலை-வனம்-குளம்- மேலும் மூன்று முத்தங்கள்

1.

தரையெங்கும் விரவிக்கிடக்கும் சொற்களை
குனிந்தபடி மேய்கின்ற குறும்பாடுகள்
என் மலைவீட்டில் வளர்கின்றன.
மிகச்சிறிய முட்டைகளை இடுகின்ற
குருவிகளும் அவ்வீட்டில் வசிக்கின்றன.
அடிவாரத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக
மலை உச்சிக்கு இழுத்துவரும் 
எறும்புகளை நாம் பின் தொடர்கிறோம்.
அவ்வளவு பேரன்புடன்
இறுகப்பற்றிய கைகளில் 
விழுந்து
தெறிக்கின்றன குளிர்மழைத்துளிகள்.
தோளில் கன்னம் சாய்த்தபடி 
மலை ஏறுகிறாய்.
சொற்கள் எதுவுமற்ற கணத்தில்
மென்மையானதொரு முத்தமிடுகிறாய்.
எறும்புகள் சேமித்த சொற்களை
மென்று விழுங்கும் குறும்பாடுகளின்
சப்தத்தில் அதிர்கிறது மலைவீடு.


2.
அடர்வனப்பாதையில் நடப்பது
உனக்குப் பிடிக்கும்.
உயர்ந்த விருட்சங்களிலிருந்து எழும்பும்
பறவைகளின் வினோத ஒலியை 
கூர்ந்து கவனித்தபடி நடக்கிறோம்.
ஒரு ஆண்பறவையை துரத்துகிறது
பெண்பறவையொன்று.
கற்கள் நிறைந்த பாதையில் வெகுதூரம்
வனத்தின் நடுவில் வந்துவிட்டோம்.
சற்றுத்தொலைவில் சலசலக்கிறது
காட்டாறு.
இப்பொழுது மழை வேண்டும் என்கிறாய்.
இழுத்தணைத்து முத்தமிட துவங்குகிறேன்
ஆண் உனது வெட்கம்
சிறுவிதைகளாய் சிதறிச் சிதறி
வனமெங்கும் புதைகிறது 
ஆழமாய்
மிக ஆழமாய்.

3.

குளம் வற்றி விட்டது.
அ முதல் ஃ வரையில் துவங்கும்
சொற்களனைத்தும் உதிர்ந்துபோன
இலைகளின் கீழே மெளனிக்கின்றன.
கடைசி மீனின் எலும்புகளை
இழுத்துச் செல்கின்றன சிற்றெறும்புகள்.
மெளனம் உடைத்த சொற்கள்
சிறு சிறு  புரவி வடிவமெடுத்து ஓடுகின்றன.
நீரற்ற குளத்தின் உயரே பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்திலிருந்து
சிற்றெறும்புகள் மீது விழுந்து தெறிக்கின்றன
எச்சங்கள்.
புரவிகளின் தடத்திலிருந்து எழும்
மஞ்சள் இலைகள் நிறைந்த பெருவிருட்சத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
நிறைவேறாக் காதலின் கடைசி முத்தம்.

-நிலாரசிகன்.

Thursday, November 01, 2012

ஏக்கப்பூனை திரியும் பெருவுடல்




உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத 
ஏக்கம் ஒரு பூனையாகி என்னருகே 
அமர்ந்திருக்கிறது.
மிருதுவான அதன் உடலும் 
மென்மையான ஈர மயிர்க்கற்றைகளும்
அதன் அழகை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது.
மழை ஓய்ந்த முன்னிரவில் 
அதன் கண்களை 
உற்றுப் பார்க்கிறேன்.
ஏக்கப்பூனை காலத்தின் மறு உருவம்.
பிரித்தெறிய முடியாத அட்டையென 
என்னில் ஒட்டிக்கொண்ட கருநிற காலம் 
தன் பற்களிடையே மெதுவாய் எனை
மென்று தின்னத்துவங்குகிறது.
பூனையொன்றின் பசிக்கு உணவாகி
சரிந்து விழுகிறது என்னுடல்.
உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத
மாபெரும் இப்பெருவுடல்!
-நிலாரசிகன்.

Thursday, October 18, 2012

மழைக்காலப் பகல்





ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
அணைப்பின் கதகதப்பில்
மெல்லியதாய் நீ உதிர்க்கும்
முனகல்கள் முகில்களாய்
தவழ்ந்து தவழ்ந்து
என் உயிர் நிரப்புகிறது.
அறையெங்கும் படர்கின்ற
செயற்கைக்குளிரின் நடுவில்
தகிக்கும் வெப்பநதியாய்
பிணைந்திருக்கிறோம்.
முதுகில் பதியும் இதழ்களின்
ஈரத்தில் உடல் சிலிர்த்து
உதடு கடிக்கிறாய்.
ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது
மழைக்குப் பின் ஒன்றுடனொன்று
உரசியபடி அமர்ந்திருக்கும்
தேன்சிட்டுக்களை போல.
-நிலாரசிகன்.

Sunday, October 07, 2012

வனப்பூ



நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறும்
விரல்களின் சிலிர்ப்பில் மின்மினிகள்
உடலெங்கும் மின்னி மறையும்.
விடியலுக்காக காத்திருக்கும் பறவைகளின்
செளந்தர்ய மெளனமென
மடியில் புரள்கின்றன உன் மோனங்கள்.
இதழ்களில் பதிந்து பிரியும்
இதழ்களில் நிரம்பித்தளும்புகிறது
காதலென்னும் பெருங்கடல்.
காட்டிடையே அமைந்திருக்கும்
சிறுகுடிலின் நடுவே
உடலெங்கும் பூக்கள் மலர
சிவந்திருக்கிறாய்.
வனப்பூக்களின் வசீகர வாசம்
நம் அறையெங்கும் படர்ந்திருக்கிறது.
நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
ஒரு
வனப்பூவின் உயிர் நிரப்பும்
அதீத மணத்தைப்போல..

-நிலாரசிகன்.

Wednesday, September 19, 2012

ஜூலி

1.ஆற்றின் கரையில் உலரும் ஜூலியின் உடல்

ஜூலி தன் மூன்றாவது உடலை
மலர்த்தியபடி கிடக்கிறாள்.
அவளுடலை அப்பியிருக்கின்றன
ஆற்றுமணலின் துகள்கள்.
காமத்தையும் துரோகத்தையும்
தன் இரண்டாவது உடலோடு
கரைத்துவிட்ட பெருநிம்மதி அவள்
முகத்தில் வழிந்துகொண்டிருக்கிறது.
விழுகின்ற மழையின்
முதல் துளியை துறவி வேடமிட்ட
நண்டுகள் பிடித்துக்கொண்டு அவளிடம்
வருகின்றன.
தீரா தாகத்துடன் அத்துளியை பருகி
மூன்றாம் உடலை களிக்கிறாள்.
சிலந்திகள் நடமாடும்
ஓர் இருண்ட அறையில்
அழுகிய முத்தமொன்றினால் அவனது உடலை
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
ஜூலியின் முதலாம் உடல்.


2.காட்டின் கதவுகளை ஜூலி திறந்தபோது


யாருமின்றி
அவளது
உமிழ் நீரில் வசிக்கும் பாக்டீரியாக்களை
முகம் திருப்பியபடி பெற்றுக்கொண்டிருந்தது
அறைக்காற்று.
சற்று நேரத்தில் ஒலித்த அழைப்புமணியின்
ஒலியில் முத்தம் நிறுத்தியவள்
கதவருகே ஓடுகிறாள்.
கதவின் மறுபக்கம் வெளிமானின்
சாயலை ஒத்தவன் நின்றுகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் ஓசையை
அறைக்காற்று முகம் உயர்த்தி
பார்த்த கணம்
புலி உருவ முத்தமொன்று
குருதி சுவைத்துக்கொண்டிருந்தது.
அவள் வீட்டின் வரவேற்பறையில்
இதழ்களை சுழற்றி சுழற்றி
முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் ஜூலி



3.ஜூலி என்றொரு முடிவிலி

மரவண்டுகளிட்ட துளைக்குள்
தன் மார்புகளை பொருத்திக்கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத்துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுக பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச்சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.


4.ஜூலி எனும் முதிர்ந்த ஆமை


முப்பது கோடைகளை
விழுங்கி மெதுவாய்
அறைக்குள் அங்குமிங்கும்
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஜூலி ஆமை.
அதன் கன்னக்கதுப்புகளில்
சில குறுமலைகளும்
சில மரணித்த பட்டாம்பூச்சிகளின்
வண்ணச் சிதறலும் தென்படுகின்றன.
படுக்கை விரிப்பில்
புரளுகையில் அது தன்
முப்பதாவது கோடைக்குள்
நுழைகிறது.
ஒரே முத்தத்தில் தன்னிடம்
வீழ்ந்தவனை சந்திக்கிறது.
உள்ளங்கைகளுக்குள் மிக பத்திரமாய்
வைத்திருக்கிறான்
ஜூலியின் முத்தத்தை.
கைபிரித்து தளர்ந்த கண்களுடன்
அம்முத்தத்தை பார்க்கிறது.
ஏதேன் சர்ப்பத்தின் குட்டியாய்
நெளியும் முத்தத்தை அவனிடமிருந்து
பறித்துக்கொண்டு
தன் அறைக்கு திரும்புகிறது
ஓட்டமும் நடையுமாய்.

[நன்றி: "சிலேட்"]

-நிலாரசிகன்.

Monday, August 20, 2012

உலர்முத்தப் பயணம்

ஒரு உலர்ந்த முத்தம் 
சருகொன்றின் கீழே 
தெருவோர கற்களிடையே
மிக அமைதியாக கிடந்தது.
உடலெங்கும் புழுதி படர்ந்த முத்தம்
தன் ஈர நினைவுகளை நினைத்தபடி
மெல்ல எழுந்து தளர்நடை நடந்தது.
சற்று தொலைவில்
சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்த 
அழுகைச்சத்தம் கேட்டு அருகே சென்றது.
உதிர்ந்த கனவொன்று மடியில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருந்தது.
உதிர்ந்த கனவின் அருகில் சென்று
அதன் தலை கோதி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டது.
யாருமற்ற தெருவில்
கனவும் முத்தமும் 
நடக்க துவங்கினார்கள்
விரிகின்ற நீள்மெளனத்தினூடாக.

-நிலாரசிகன்.

Sunday, June 17, 2012

கவிதைகள் மூன்று

யாருமற்ற தெருவில்
திரியும் நாய்க்குட்டிகள்



ஒவ்வொரு வீட்டின் வாசலையும்
முகர்ந்து பார்த்து நகர்கிறது.
தெருவில் புரளும் சருகுகளும்
நீரற்ற பாட்டில்களும்
நாய்க்குட்டியுடன் நடக்கின்றன.
தன் மிருதுவான
உடலால் சருகுகளை உரசிக்கொண்டே
உரையாடிச்செல்கிறது.
வினோத ஒலி எழுப்பியபடி
பாட்டில்கள் புரள்கின்றன.
யாருமற்ற தெருவில்
பாடலொன்றை பாடியபடி
ஓடி வருகிறாள் சிறுமியொருத்தி.
நாய்க்குட்டியும் சருகுகளும்
அவளுடன் துள்ளி ஓடுகின்றன.
நீண்டு செல்லும் இரவுத்தெரு
நாய்க்குட்டிகளால் நிரம்பத்துவங்குகிறது.

கனாக்கால ஜூலி


தன்னுடலெங்கும் செடிகள் முளைத்து
அதில் ஒரே ஒரு
நீலநிற மலர் மலர்ந்திருப்பதை நேற்றைய
கனவில் காண்கிறாள் ஜூலி.
நடுநிசியில் பயந்து எழுந்தவளின்
படுக்கை நீலநிறமாக
மாறியிருக்கிறது.
தன் அருகே உறங்கும் தங்கையை
அணைத்துக்கொள்கிறாள்.
உடலெங்கும் செடிகளுடன் புரளும்
தங்கை 
ஜூலியின் உடலை மலைப்பாம்பை
போல் சுற்றி இறுக்குகிறாள்.
செடிகள் அறையெங்கும் வளர்ந்து
நிறைக்கின்றன.
நீல நிற மலரை சுற்றுகிறது
சர்ப்பம்.
ஜூலியும் அவளது தங்கையும்
விடியலில் அறையை விட்டு வெளியேறுகிறார்கள்
நாக கன்னிகளாக
மலரொன்றை சுவைத்தபடி.
திடுக்கிட்டு எழுகிறேன் அறையெங்கும்
கனவுகள்,சர்ப்பங்கள்,
ஜூலிகள்..
ஜூலிகள்..

மெளன இசையில்
மெளனிக்கும் பொழுதுகளிலெல்லாம்
இசையால் நிரப்பப்படுகிறேன்.
மரம் நீங்கும் இலை
மெதுவாய் அசைந்தசைந்து கீழ் இறங்குகிறது.
பரந்து விரிந்த பூமியின் கரங்களில்
தன்னை ஒப்புக்கொடுக்கிறது.
இசையிலிருந்து எழும் மெளனத்தில்
இலையாகி காற்றில் மிதக்கிறேன்.
பிரபஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில்
யாரோ ஒருவன் ஆற்றில் வலை வீசுகிறான்.
சிறுமியொருத்தி தன் ஆட்டுக்குட்டிக்கு
முத்தம் தருகிறாள்.
வெகுதொலைவில் ஆடைகள் காற்றிலாட
தளர்ந்த பாதங்களுடன் கடற்கரையில்
நடக்கிறான் கிழவனொருவன்.
குளிர்கால இருளில்
ஒரு மெழுகுவர்த்திரி தனியே எரிந்துகொண்டிருக்கிறது.
மெளனிக்கும் பொழுதுகளில்
பிரபஞ்சம் எனும் இசையால்
நிரம்பி நிரம்பி வழிகிறதென்
யாக்கை.

-நிலாரசிகன்.

Tuesday, May 22, 2012

செஞ்சி புகைப்படங்கள்

http://www.flickr.com/photos/26613290@N03/

Sunday, May 06, 2012

Nilaraseegan Clicks

http://www.flickr.com/photos/26613290@N03/

Thursday, May 03, 2012

சுஜாதா விருது - 2012 புகைப்படங்கள்



Wednesday, May 02, 2012

நண்பர்கள் அனைவரும் வருக!


Sunday, April 29, 2012

நிலாரசிகன் புகைப்படங்கள் - 1






Thursday, April 19, 2012

சுஜாதா விருதுகள் - 2012


Monday, April 16, 2012

கவிதைகள் மூன்று

1.சொற்பறவை

தன் மார்புக்கூட்டிற்குள் பறவையொன்றை
மிக பத்திரமாய் வளர்க்கிறான்.
புத்தகங்களால் நிரம்பித்தளும்பும் அறையில்
தேநீர்கோப்பையுடன் தனித்திருக்கும்
தருணங்களிலெல்லாம் அப்பறவை
வெளியேறி அவன் தோள்களில்
அமர்ந்துகொள்கிறது.
வெளிக்குதிக்கும் சொற்களின் வேகத்தை
கவனமுடன் கண்காணிக்கிறது.
ஒற்றுப்பிழைகளுடன் சொற்களை அவன்
கடந்துசென்றால் ஒற்றெழுத்து ஒன்றை
சொல் நோக்கி துப்புகிறது.
நரைத்திருக்கும் சுருள் தாடியை தடவிக்கொண்டே
தடதடவென்று எழுதிக் குவிக்கிறான்.
மலையென குவிந்திருக்கும் சொற்களினூடாக
பறந்து சென்று திரும்பும்
பறவையை தொடர்ந்து
வெளியேறுகின்றன ஆயிரமாயிரம் சொற்கள்
எண்களாக,எழுத்துக்களாக,கனவுகளாக...
முடிவிலியாக.


2.கத்தரித்தல்

கத்தரிப்பது எப்படி என்பதை
அவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள்
வெள்ளைத்தாளில் பென்சிலால்
நீள்கோடு ஒன்றை வரைந்து
அதன்மேல் கத்தரியை அழுத்திக்கொண்டே
செல்கிறார்கள்.
இரண்டாய் பிளந்து கிழக்கும் மேற்குமாய்
விழுகிறது அந்தத் தாள்.
ப்ரியங்கள் இரண்டு எதிர்திசையில்
பயணிப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்.
துடிக்கும் இறக்கைகளை இழுத்துக்கொண்டு
சப்தமின்றி நடக்கிறோம்.
வெகுதூர பயணித்தின் முடிவில்
கைகளில் துருவேறிய கத்தரியுடன்
நம் குழந்தைகளை நெருங்குகிறோம்.

3.சாக்கிய முனி

கர்ப்பம் சுமக்கும்
அணிலொன்று நேற்று வீட்டிற்குள்
வந்தது.
மிகச்சரியாக நேருக்கு நேர்
என் நெற்றிக்கு முன் வந்து நின்றது.
குத்திட்டு நின்ற அதன் கண்களில்
தளும்பும் மெளனத்தில்
பச்சைப் பாசிகள் படர்ந்த
சிறுசிறு குளங்கள் விரிந்து கிடக்கின்றன.
குளக்கரையோர சால மரத்தடியில்
யுவதியொருத்தி தன் கால்களை பரப்பியபடி
நிற்கிறாள்.
வெண்ணிற யானை அவளிலிருந்து
வெளியேறுகிறது.
கண்கள் விழிக்கையில் கண்கள் திறக்காத
குட்டி அணில் நிசப்தமிடுகிறது.

-நிலாரசிகன்.

[இம்மாத உயிர்மொழி இலக்கிய இதழில் வெளியானவை]

Sunday, April 08, 2012

கவிதைகள் ஐந்து

1. இசைதல்

சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.

2. மேனியிசை

ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.

3.ஒளிவடிவ துயரம்

தீராமெளனத்தின் ஒளிவடிவ
துயரம் இருள்வானில் மிதக்கிறது.
எண்ணற்ற கேள்விகளுடன் அதனுடன்
உரையாடுகிறேன்.
ஓர் இறகை ஊதி ஊதி காற்றுச்சிறகில்
ஏற்றிவிடுகிறேன்.
இரவுப்பறவைகள் குளிரின் கதகதப்பில்
இணை சேர்கின்றன.
சப்தமின்றி தனிமைக்குள் நுழைந்த
வேடனொருவன் துயரத்தின் மீது
அம்பெய்துகிறான்.
நீண்டு விரிந்த வானமெங்கும் சிதறுகிறது
மஞ்சள் நிற துயரம்.
சாம்பல் நிற பூனைகள் அலையும்
தெருவில் வந்துவிழுகிறது துயரத்தின்
சில்லுகளிலொன்று.
பசியில் கதறும் குட்டிக்கு நிலவைக்
கெளவிக்கொண்டு
வாலுயர்த்தி ஓடுகிறேன்
பூனையாக.

4.வனப்பழிந்தவளின் இரவு

கற்பாறைகளால் நீண்டு கிடக்கும்
வெளியில் மரக்கன்றுகளுடன்
நடக்கிறாளவள்.
தோள்மீது தொங்கிய தலையுடன்
அசைகிறது பச்சைக்கிளி.
வெம்மை சுமந்து வந்தவனின் கண்களில்
முகம் பார்த்து மலர்கிறாள்.
விரல் கோர்த்து .
பாறையொன்றின் உச்சியில் நட்சத்திரம்
எண்ணத்துவங்குகிறார்கள்.
இரவைத் தின்ற பச்சைக்கிளியுடன்
தொலைவில் செல்கிறான்.
தளும்பியவளின் உடலெங்கும்
முளைக்கின்றன சிறுசிறு மரக்கன்றுகள்.

5.அந்நியள்

கதகதப்பான தேநீருடன் துவங்கிய
மழைநாளில் ஓர் அந்நியளைக் கண்டேன்.
கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு
தூறலில் மென்நடை நடந்தவளை
பின் தொடர்ந்தது மான்குட்டியொன்று.
வேப்பம்பூக்கள் மிதக்கும் மழைநீரை
துள்ளித்தாண்டியது மான்குட்டி.
மானும் மழையும்
மழையும் சிறுமயிலும் சப்தங்கள் ஒடுங்கிய
அந்த தெருவை வர்ணங்களால் நிரப்பினர்.
சட்டென்று என் வீட்டின் முன் நின்றவள்
என்னை உற்று நோக்கினாள்.
இப்போது,
அவளை பின் தொடர்கின்றன ஒரு
மான்குட்டியும் ஒரு குட்டிமானும்.

- நிலாரசிகன்.
[இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்]