1. விசித்திரமானதொரு சத்தம்
ஜன்னல் வழியே
கசிந்துகொண்டிருந்த நடுநிசியில்
விறைத்து நடுங்குகின்ற
உடலுடன் ஜன்னல்நோக்கி
மெல்ல நகர்ந்து எட்டிப்பார்த்தேன்.
இருளின் கருமையை
உடுத்திக்கொண்டு
சோற்றுப்பானைக்குள் புரண்டுகொண்டிருந்தது
என்னை ஒத்த பூனையொன்று.
2. கனவுகள் தகர்த்தெறிந்து
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கெளவிப்பறந்தது...
விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்..
முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீச்சென்றது
அப்பறவை..
வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.
3.தெருநாய்களின் நகக்கீறல்களால்
கதறிக்கொண்டிருந்தது
தகர குப்பைத்தொட்டி...
நைந்த புடவையொன்றில்
குளிர்தவிர்க்க இயலாமல்
முனகிக்கொண்டிருந்தாள்
பிச்சைக்காரி ஒருத்தி..
மரக்கிளையில்
சிருங்கார சப்தம் எழுப்பி
புணரத் துடித்தன
தேன்சிட்டுகள்...
விதவிதமான சப்தங்களுடன்
மெளனத்தால்
உரையாடியபடி நீண்டு
செல்கிறது இரவுத்தெரு.
3 comments:
நண்பருக்கு வணக்கம்,
என் பெயர் சூர்யா. நான் நீண்ட நாட்களாக உங்கள் கவிதைகளை படித்து வருகிறேன். உங்கள் கவிதை என்றால் எனக்கு மிக பிடிக்கும். அனால் உங்களுக்கு மட்டும் எப்படி இந்த கற்பனை வளம் ? அகா என்ன நேர்த்தியான வார்த்தைகள், என்ன நளினமான கவிதைகள். நான் காதலில் தோல்வி அடைந்தவன். எனக்கு சோக கவிதைகள் என்றால் இன்னும் பிடிக்கும். அனால் உங்களிடம் இருந்து சோக கவிதைகள் குறைவே. இருபினும் குறைஇல்லை.
என்றும் ரசனையுடன் ஒரு ரசிகன்.
சூர்யாபாலா.
அழகான கவிதைகள்..
:)
அருமை நண்பரே..
Hai friend this is shivramesh from salem i am also a fan of your poets all are very nice... keep the same forever.... bz sea will not dry... and the same u will not stop writing a poets
regards,
shivramesh
Post a Comment