Monday, June 15, 2009

நட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்



இந்த வார(ஜூன் 15 - 21) நட்சத்திர பதிவராக திரட்டி.காம்(http://www.thiratti.com/) என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வாரம் என்ன எழுதப்போகிறேன் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. வழக்கம்போல் கவிதைகளை பதிந்துவிட்டு
நகர்ந்துவிட விரும்பவில்லை. அதனால் இந்த வாரம் சிறுகதை/கவிதை/கட்டுரை என கலந்து பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.

நிலா(ரசிகன்)வை நட்சத்திரம் ஆக்கியதால் இன்றைய பதிவை எனக்கு பிடித்த, என்னை கவர்ந்த சில நட்சத்திரங்களுடன் துவங்குகிறேன்.

நட்சத்திர நவீனகவிதை:


நவீன கவிதை என்றவுடன் நினைவுகளில் மலர்கின்ற கவிஞர்களில் மிக முக்கியமானவர் தேவதச்சன்.
அவரது யாருமற்ற நிழல் கவிதை தொகுப்பு தந்த அனுபவம் மறக்க முடியாதது. நவீன கவிதைகள் புரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு "யாருமற்ற நிழல்".

அவரது இரு கவிதைகள்:

அன்பின் சிப்பி:


என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்.

பரிசு:


என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்


நட்சத்திர புதுக்கவிதை:


புதுக்கவிதை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் சந்தேகமில்லாமல் மனதிற்குள் வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று மு.மேத்தா.
கண்ணீர் பூக்களை படிக்காதவர்களே அல்லது கடக்காதவர்களே இல்லை எனலாம்.
சொல்ல முடியாத துக்கத்தை நான்குவரியில் சொல்லிவிடும் அற்புத கவிதையொன்று:

"விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ
வெறும் ஜன்னல் கம்பிகளோடுதான்"

- மு.மேத்தா, கண்ணீர் பூக்கள் கவிதை நூல்.


நட்சத்திர சிறுகதை:


சிறுகதையாளரும்,கவிஞருமான உமா மகேஸ்வரியின் சிறுகதைகளில் ஒவ்வொரு வரியிலும் கவித்துவம் நிரம்பி வழிந்தபடியே இருப்பதை உணரலாம். "மரப்பாச்சி" சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளிவர இருநாட்கள் ஆனது. சமீபத்தில் வார்த்தை இதழில் அவரது "அனல் தினம்"
சிறுகதை படித்தேன்.அதிலுள்ள வரிகள் சில

"வெளியே மரங்களின் முணுமுணுப்பு கேட்டது. இலைகளின் அசைவில் ஒரு இனிய லயம்.
நாளை புலரவிருக்கும் மலர்களை நினைவால் தீண்டினாள். காற்றில் மரக்கிளைகள் அசைந்தன.
என்னதான் முயன்றாலும் இருளால் அவற்றை முழுவதுமாகக் கருமையாக்க முடியவில்லை"

இவரது சிறந்த சிறுகதை தொகுதிகளாக நான் பரிந்துரைப்பது 1.மரப்பாச்சி 2.தொலைகடல் 3.அரளிவனம்

நட்சத்திர நாவல்:


சிறுவர் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக கருதப்படும் நாவல்களில் ஒன்று கி.ராவின் "பிஞ்சுகள்". கடந்த வருடம்தான் அந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையிலிருந்து சேலம் செல்லும்போது பயணித்துக்கொண்டே வாசித்த அனுபவம் மறக்க இயலாதது. சிறுவர்களின் விளையாட்டை விவரிக்கும் விதமும் சிறுவனாகவே வாசகனை மாற்றிவிடும் தன்மையும்
நிறைந்த மிகச்சிறப்பான நாவல். நூற்றி சொச்ச பக்கங்களே இருப்பதால் இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்துவிடமுடியும் என்பது
மற்றுமொரு வசதி :)

நட்சத்திர சிற்றிதழ்:


இருமாத இதழாக கோவையிலிருந்து வெளிவரும் "புன்னகை". கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் சிற்றிதழ்களில் மிக முக்கியமான இதழாக கருத்தப்படுவது. மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.

http://www.keetru.com/punnagai/index.php


நட்சத்திர இசை:


இசைக்கு ராஜன் இளையராஜாவின் எத்தனையோ பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டாலும் வார்த்தைகளற்ற
இந்த இசைக்குள் ஒரு மெளன பூகம்பமே ஒளிந்திருக்கிறது.

http://www.youtube.com/watch?v=qd2UJKA-iJc


நட்சத்திர ஆங்கில பாடல்:


http://www.youtube.com/watch?v=zcigPwiCgx8


தினமும் ஒருமுறையாவது நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மனதை ஏதோ செய்துவிடுகிறது.


நட்சத்திர ஆவணப்படம்:


எவரஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஒருவரை பற்றிய ஆவணப்படம்.
மலையேற்றத்தின் கடுமையான பக்கங்களை விளக்கிச்சொல்கிறது.

http://www.youtube.com/watch?v=anBHeyLDD4A



*****************************************************

நட்சத்திரங்கள் பற்றி சொல்லியாகிவிட்டது. இப்பதிவின் இறுதியாக என்னுடைய கவிதையொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


ஏதேன் தோட்டம்
வரைந்திருக்கிறேன் என்றது
குழந்தை.
ஆதாமும் ஏவாளும் எங்கே
என்றேன்.
அந்த ஆப்பிள் மரத்திற்கு
பின்னால் நிற்கிறார்கள்
இதுகூட தெரியாதா உனக்கு
என்றபடி சிரித்தது.
மரத்திற்கு பின்னாலிருந்தும்
கேட்டுக்கொண்டே இருந்தது
சிரிப்புச்சத்தம்.

-நிலாரசிகன்.

17 comments:

said...

வாழ்த்துகள்

said...

வாழ்த்துக்கள் மற்றும் சிறந்த கவிதைப்பகிர்வுகளுக்கும் நன்றிகள் :)

உங்கள் கவிதையும் அழகு!!

said...

வாழ்த்துகள்!

கதையும் கட்டுரையுமா

சந்தோஷம்!

said...

மரத்திற்கு பின்னாலிருந்தும்
கேட்டுக்கொண்டே இருந்தது
சிரிப்புச்சத்தம்.\\

அருமை.

said...

வாழ்த்துகள்!!

said...

உங்களுடைய அந்தக் கவிதை பிடித்திருக்கிறது.

said...

நன்றி

திகழ்மிளிர்,
சென்ஷி,
ஜமால்,
ஜமால்,
திரட்டி.காம்,
சுந்தர்!!(முதல்முறை வருகை தந்தமைக்கு ஸ்பெசல் நன்றி :)

said...

நிலா நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். அருமையான பகிர்வுகள். தோழி உமா மகேஸ்வரியின் தொகுப்பில் அரளிவனம் எனக்கு மிகவும் பிடிக்கும். தொலைகடல் மரப்பாச்சியும் அருமையான தொகுப்புகள். ரசனையும் தேடலும் உங்கள் எழுத்தை மேலும் செம்மைபடுத்த வாழ்த்துக்கள்.

said...

என் நல் வாழ்த்துகள்.

said...

மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய வாழ்த்துகள் அண்ணா. நல்ல நூல்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

said...

Nice one pa
enaku naraya books name theriyathu
ethu nala helpa eruku .. to read ..Thanks

said...

வாழ்த்துக்கள் அண்ணா

ஏதேன் தோட்டம்
வரைந்திருக்கிறேன் என்றது
குழந்தை.
ஆதாமும் ஏவாளும் எங்கே
என்றேன்.
அந்த ஆப்பிள் மரத்திற்கு
பின்னால் நிற்கிறார்கள்
இதுகூட தெரியாதா உனக்கு
என்றபடி சிரித்தது.
மரத்திற்கு பின்னாலிருந்தும்
கேட்டுக்கொண்டே இருந்தது
சிரிப்புச்சத்தம்.

கவிதை அருமை

Anonymous said...

தேவதச்சனின் கவிதைகள் அருமை நண்பா அவரின் கடைசி டைனசர் தொகுப்பும் படிக்க வேண்டிய ஒன்று இணைய எழுத்துதில் பிறர் எழுத்துக்களையும் அறிமுக படுத்திய உங்களுக்கு என் மண மார்ந்த நன்றிகள்

said...

வாசித்து வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றிகள்...

said...

வாழ்த்துக்கள்
நல்ல தொகுப்பு.
நட்சத்திர வாரத்தில் இன்னும் பல நற்பதிவுகளை தந்து திறப்புற என் வாழ்த்துக்கள். நிலா

said...

Ungalai nitchathiramaga akiyadharku neengalum niraya perai natchathiram akkineergal.... Enaku theriyatha niraya vishayangalai sonnergal... nandri... :-)

said...

ungalai "NATCHATHTHIRAM"nu sonnathukkaaga...
naan mattumalla innum ithathanai per irukkaanganu perunthanmaiyaa pala natchaththirangalai arimugap paduththiya ungal perunthanmaikku..vazhthukal..NILA!!


appuram..
antha kadaisik kavithai meenndum "nilaavagave" ungalai mun niruththukirathu..:)