Tuesday, June 16, 2009

பட்டாணி - சிறுகதை





பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மொத்த கிராமமும் கூடியிருந்தது. அரச மரத்தில் கட்டி வைத்திருந்தார்கள் பட்டாணியை. கன்னத்துச் சதை பிய்ந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. சட்டை கிழித்து,முடி கலைந்து இடப்பக்கம் தலை தொங்கியிருக்க, வலியால் முனகிக்கொண்டிருந்தான். அந்த ஊரின் "பெரியவர்" என்று அழைக்கப்படும் கோவில் தர்மகர்த்தா பேச ஆரம்பித்தார்.



"எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருக்கப்பா. எதுக்காக இந்த பஞ்சாயத்த கூட்டியிருக்கோம்னா , பட்டாணி நேத்து ராத்திரி என் வீட்டுக்குள்ள புகுந்து களவாட பாத்திருக்கான். நல்லவேளையா எம் பொஞ்சாதி பாத்து சத்தம்போட்டா. அதனாலதான் அவன புடிச்சி கட்டி வெச்சிருக்கோம். ஊர் வழக்குன்னா நாந்தான் தீர்ப்பு சொல்லுவேன்,ஆனா இது என் வீட்டு வழக்கு. ஊர் மக்க நீங்க என்ன சொல்லுதியளோ அதுதான் தீர்ப்பு" சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார் தர்மகர்த்தா. கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரே முடிவாக பக்கத்து டவுணிலுள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு ஆள் அனுப்பி ஏட்டை வரச்செய்து பட்டாணியை ஒப்படைத்துவிட்டார்கள்.



போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கின்ற வழியெல்லாம் பட்டாணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. பட்டாணியின் இயற்பெயர் முருகேசன். அப்பா அம்மா இல்லாத அனாதை. கொஞ்சம் திக்குவாய். கஷ்டப்பட்டுத்தான் பேசுவான்.ஏதாவது எடுபிடி வேலை செய்துகொண்டு ஒரு சிறுகுடிசையில் வாழ்ந்து வந்தான். ஊரில் ஏதாவது திருமணமென்றால் பந்தி வைக்க பட்டாணியைத்தான் கூப்பிடுவார்கள். பம்பரமாய் சுற்றித் திரிந்து வேலை பார்ப்பதில் இவனுக்கு நிகர் யாருமில்லை. பந்தி ஆரம்பித்தவுடன் பட்டாணிக்கூட்டு வாளியை முதல் ஆளாய் எடுப்பது இவனாகத்தானிருக்கும். அதனால் ஊர் இவனை பட்டாணி என்று கூப்பிட ஆரம்பித்தது.




பட்டாணிக்கு வயது இருபதை தாண்டியபின்னரும் சிறுவர்களுடன் விளையாடுவதே பொழுதுபோக்கு. சிறுவர்களை அழைத்துக்கொண்டு உடைமரங்களில் தட்டான் பூச்சிகளை பிடிப்பதும், கோலிக்காய் விளையாடுவதுமாய் திரிவான். தன்னைவிட வயதில் சிறுவர்கள் "பட்டாணி" என்று அழைத்துவிட்டால் "முருகேசுன்னு கூப்பிடுல,இல்ல மண்டைய பொ பொ பொளந்துருவேன்" கடும்கோபம் வந்து அடிக்க வருவான்.



வெள்ளந்தியாக சுற்றிக்கொண்டிருந்தவனை "களவாணி" ஆக்கியது நேற்று இரவுதான். நண்பர்களுடன் "எறி பந்து" விளையாடிக்கொண்டிருந்தான் பட்டாணி. அப்போது இவன் எறிந்த பந்து கோவில் தர்மகர்த்தா வீட்டிற்குள் சென்று விழுந்துவிட்டது. ஓடிச் சென்று எடுத்துவிட்டு திரும்பும்போது மாட்டுக்காடியில் குவித்து வைத்திருக்கும் வைக்கோல் போரில் ஏதோ சத்தம்கேட்டது. மெதுவாக சென்று பார்த்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான். தர்மகர்த்தாவின் மனைவி முத்துலெட்சுமி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் கருப்பனுடன் நெருக்கமாக இருந்தாள். இவனைக்கண்டதும் பதறி எழுந்து ஓடிவிட்டான் கருப்பன். செய்வதறியாது நின்ற பட்டாணியை ஓங்கி அறைந்துவிட்டு "திருடன் திருடன்" என்று கத்த ஆரம்பித்தாள் முத்துலெட்சுமி.



தர்மகர்த்தாவின் முதல் மனைவி இறந்தபின்னர் தன்னைவிட இருபது வய்து குறைந்த முத்துலெட்சுமியை இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டார். முத்துலெட்சுமிக்கு முன்பு அதிர்ந்துகூட பேசுவதில்லை காரணம், அவள் கோபக்காரி. முத்துலெட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து பட்டாணியை நையப்புடைத்தார்கள். "நான் தி தி திருடல" என்று பட்டாணி கதறிக்கொண்டே இருந்தான்.



மூன்று மாதம் கழித்து போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஊர் திரும்பினான் பட்டாணி. "வர்றான் பாரு களவாணிப்பய மூஞ்சும் மொகரையும், இவன்கூட சேர்ந்தே கையக்கால ஒடச்சி அடுப்புல வெச்சிருவேன்" பட்டாணியுடன் சேரக்கூடாது என்று எழுதப்படாத தீர்மானம் நிறைவேறியது நண்பர்கள் வீட்டில்.



பட்டாணி என்கிற பெயர் மெல்ல மறைந்து "களவாணி" என்றானது.

சிறுவர்கள்கூட "ஏய் களவாணி வாராம்ல" என்று ஓடிஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்நேரமும் குடிசையிலேயே கிடையாய் கிடந்தான் பட்டாணி. எப்போதும் எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். தனியே உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருப்பான். அவனது உலகில் சொற்களுக்கு இடமில்லாமல் போனது.



ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் திடீரென்று ஒருநாள் அதிகாலை பத்திரகாளி அம்மன் கோவில் மணிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பொதுவாக ஏதேனும் விபரீதம் என்றால் இப்படி அடிப்பார்கள். சாய்வு நாற்காலியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தர்மகர்த்தா துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேக வேகமாக கோவில்நோக்கி நடக்க ஆரம்பித்தார். குடிச கிடுச பத்திக்கிச்சோ? இல்ல எவனும் தூக்குல தொங்குறானா? ஒண்ணும் புரியலையே என்றவாறு வேகமாக கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.



அங்கே, கோவில் மணிக்கயிற்றை பிடித்து மூர்க்கமாக விடாமல் மணி அடித்துக்கொண்டிருந்தான் பட்டாணி. மொத்த ஊரும் கோவில் முன் திரண்டது.

கோழிகளுக்கு குருணை போட்டுக்கொண்டிருந்த முத்துலெட்சுமி அடித்துப்பிடித்து ஓடி வந்திருந்தாள். மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவதற்காக தர்மகர்த்தா வீட்டிற்கு வரும் வழியில் மணிச்சத்தம் கேட்டு கோவிலுக்கு கூட்டத்தோடு கூட்டமாக ஓடிவந்தான் கருப்பன்.



"ஏலே உனக்கு கிறுக்கு முத்திப்போச்சா ஏன்ல மணிய இப்படி போட்டு அடிக்கிற?" அதட்டலான குரலில் கேட்டார் தர்மகர்த்தா. மணி அடிப்பதை நிறுத்திவிட்டு விறுவிறுவென்று அவர் முன் வந்து நின்றான் பட்டாணி. அவனது கண்களில் அதுவரை கண்டிராத கோபமும் மூர்க்கமும் தெரிந்தது. சட்டென்று தர்மகர்த்தாவின் அருகில் நின்ற முத்துலெட்சுமியை பிடித்து இழுத்து இறுக கட்டிக்கொண்டு வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தான். பதறியடித்து நான்கைந்துபேர் சென்று அவனை விலக்க முயற்சித்தனர். தர்மகர்த்தா ஓங்கி ஓங்கி அவன் முதுகில் அறைந்தார். என்ன செய்தும் அவனது பிடியிலிருந்து முத்துலெட்சுமியை பிரிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அவளை கீழே தள்ளிவிட்டு மொத்த ஊர் மக்களையும் பார்த்து " இப்படி செஞ்சா அது திரு த்திரு திருட்டா? இதுக்கு பே பேர்தான் களவாணித்தனமா? அன்னிக்கு கருப்பன் இப்படித்தான் செஞ்சான்,போயி சோலிய பாருங்கலே" சத்தம்போட்டு சொல்லிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பாராமல் நடையை கட்டினான் பட்டாணி. விக்கித்து நின்றார் தர்மகர்த்தா. தலைகுனிந்தபடி அழுதுகொண்டிருந்தாள் முத்துலெட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஊருக்குள் திருட்டு நடப்பது குறைந்துபோனது.

-நிலாரசிகன்.

8 comments:

Siva said...

hi

its nice feeling after reading this story..

siva

said...

nice story nila.

said...

கதை நல்லா இருக்கு அண்ணா

said...

நல்லாயிருக்குங்க நிலா...இந்தக் கதையையும் போட்டிக்கு அனுப்பலாமே...

said...

வணக்கம். வாழ்த்துகள். உங்களின் பட்டாணி சிறுகதையினைப் படித்தேன்.பட்டாணியை நினைத்து வேதனை அடைந்தேன். பட்டாணி,இறுதியில்... தண்டனை அனுபவித்தப் பிறகு, உண்மையை வெளிப்படுத்தியதை ஆரம்பத்திலேயே கூறியிருக்கலாம்.பாவம் பட்டாணி.

Anonymous said...

வணக்கம் நிலா. உங்களின் பட்டாணி சிறுகதையினைப் படித்தேன். பட்டாணியை நினைத்து வருந்தினேன். ஆனால்,தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதனைக் கூறியிருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் கதை,கவிதை, சிறுகதைகள்.

என்றும் அன்புடன்,
-ரெ.இலதை...

said...

வந்து வாசித்து வாழ்த்தியவர்களுக்கு என் நன்றிகள்...

//என்றும் அன்புடன்,
-ரெ.இலதை...
//

முதல் முறையாய் இப்படி ஒரு பெயரை கேள்வி படுகிறேன் நண்பரே. நீங்கள் எந்த ஊர்?

said...

அந்த கடைசி வரியான திருட்டு குறைந்து போனது என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்த பொது கதையின் மொத்த சுவையும் அந்த வரியில் வந்ததாக எனக்கு தெரிகிறது , மற்றபடி இந்த கதை சாதரண கதைகளுள் ஒன்றுதான் , நன்றி