Thursday, August 27, 2009

வெயில் தின்ற மழை




1.

அனல் நிறைந்த கோடையில்
ஜனித்தவனுக்கு மழை
என்று பெயரிடுகிறீர்கள்.
அவனது மென் உணர்வுகளை
உங்களது அகோரச்சிரிப்பில்
மரிக்கச் செய்கிறீர்கள்.
அவனறியா பொழுதில்
வன்மத்தை அவனுள்
விதைத்து மறைகிறீர்கள்.
அரவம் தொலைந்த
நிசியில்
உணர்ச்சிகளின் வெளியில்
நடனமாடிச் சரிகிறானவன்.
இப்போது அவனுக்கு
வெயில் தின்ற மழை
என்று பெயரிடுகிறீர்கள்.

2.

எப்போதும் பிரிதலை பற்றிய
கனவுகளுடனே அவனிடம்
நீள்கிறது உங்களது உரையாடல்கள்.
அவனது வெள்ளை ப்ரியங்கள்
அனைத்திலும் இருளை
பூசுகின்றன உங்களது சொற்கள்.
கரம் பற்றி
உடல் தழுவி
இதழ் மலர்த்திய தருணங்களின்
தகிப்பில் அமிழ்ந்திருக்கும் அவனை
தேகம் தேடுபவன் என்கிறீர்கள்.
பழுப்பேறிய உங்கள் வார்த்தைகளில்
தன் சுயமழித்து திரிய
துவங்கிவிடுகிறான் அவன்.
சில்லென்ற மழைவீட்டினுள்
நிகழ்ந்தேறுகிறது அந்நியனொருவனுடனான
உங்களது பேரானந்த புணர்ச்சி.

3.

பூக்கள் ஒவ்வொன்றாய்
உதிர்வதை கனத்த மெளனத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தன அவனது
சிவந்த விழிகள்.
வீழ்கின்ற பூக்களுக்காய் சிறியதாய்
அழுதான்.
விழுந்த மலரொன்றை
கைகளுக்குள் மறைத்துக்கொண்டு
வனத்தில் புகுந்து மறைந்தான்.
அவனது உருவம்
புள்ளியென சிறுத்தபோது
உங்களது புருவம் விரிந்து மலர்ந்தது.
சிறு சிறு பிணத்துளியாய்
விழுந்து தெறிக்கிறது
மழை.

-நிலாரசிகன்.

7 comments:

said...

சாரல் தெறிக்கிறது.

said...

ஒருமுறை சிலிர்த்து கொண்ட
உடலெங்கும் - உன் கவிதை
மயிலிறகு வருடிய
வர்ண ரேகைகள்!

வெளிப்படுத்த முடியா
பேரானந்தத்தில்
நெஞ்சம் நனைய
சுவாசமெங்கும்
நிறைகின்ற வாசமாய்
நின் கவிதை!

எதிர்பாரா தருணத்தில்
சட்டென நனைத்து போன
கோடை மழையாய்
உன் கவிதை!

ஓயாத உன் கவிதை தூறலுக்கு -
வாழ்த்துக்கள்!

சரோ!

said...

சூழ்நிலைகளின் வலை சிக்கல்கள் நிறைந்தது. அங்கே அனைவரின் தராசிலும் முள் அவர்கள் சார்பாகவே நிற்கும்.

said...

Nice poems..

Kalaivani said...

//அவனறியா பொழுதில்
வன்மத்தை அவனுள்
விதைத்து மறைகிறீர்கள்.//

//அவனது வெள்ளை ப்ரியங்கள்
அனைத்திலும் இருளை
பூசுகின்றன உங்களது சொற்கள்.//

//பூக்கள் ஒவ்வொன்றாய்
உதிர்வதை கனத்த மெளனத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தன அவனது
சிவந்த விழிகள்.
வீழ்கின்ற பூக்களுக்காய் சிறியதாய்
அழுதான்.
விழுந்த மலரொன்றை
கைகளுக்குள் மறைத்துக்கொண்டு
வனத்தில் புகுந்து மறைந்தான்.//

Nalla Irukku...
manathai valikka seigirathu....
vera enna solrathunu theriyala...

said...

puriyala....

said...

Nice Poems!
Great Work Nila!

- Vicky