Wednesday, March 17, 2010

உத்திகளின் வழியே கதையின் பயணம்

மூன்று கவிதை நூல்களின் வழியே தன்னைக் கவிஞனாக நிலை நிறுத்திக் கொண்ட இளம் படைப்பாளி நிலாரசிகன் தன் முதல் சிறுகதைத் தொகுப்பாக “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” நமக்குக் கொடுத்திருக்கிறார். பதினேழு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பிற்குள் கதை உத்திகளே மகுடம் சூட்டிக் கொள்கின்றன. சொல்லத் தயங்கும் சம்பவங்களை நழுவிச் செல்லும் வார்த்தைகளால் லாவகமாக அடையாளப்படுத்தியிருக்கும் அழகு சிறப்பு.

வெளிப்படையாக,தட்டையாக சம்பவங்களை உடைத்து சொற்களைச் செலவழிக்காமல்,பல்வேறு சம்பவங்களின் மூலம் கதையின் கடைசி வரிக்கு நகர்த்திச் சென்று,தான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிற சிறப்பு இந்தக் கதைகளில் காணக்கிடைக்கின்றன.

பதினேழு கதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் பயணிக்கிறது.தொகுப்பில் உள்ள கதைகளில் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” தலைப்புக் கதை. குழந்தைத் தொழிலை மட்டுமல்ல,பெண்களை இந்தச் சமூகம் எதிர்கொள்ளும் தன்மையை புதிய உத்திகளைக் கொண்டு நகர்த்திச் செல்கிறார். “வேட்கையின் நிறங்கள்” மென்மையான பிரியத்தின் வெளிப்பாடு பொங்கிப் பிரவகிக்கும் ஒரு பால் காமமாகி விடுகிறபோது, அதில் வெளிப்பட்டுள்ள மையக்கரு,மனிதர்களால் மனிதர் புறக்கணிக்கப்படுகிற பெரும் வலிதான்!

பதினேழு கதைகளில் வருகிற மனிதர்களை வகைப்படுத்தினால் கலவையாக விதவிதமான மனிதர்களை அவர்களின் சுயரூபங்களாக காணமுடியும்.
பெண் குழந்தைகளை ஆட்கொள்கிற வறுமையும்,அந்த வறுமை அவர்களை நகர்த்திச் செல்கிற புள்ளி,பொருளாதாரத்தில் கொழுத்த மனிதர்களின் அதீத ஆசைகளுக்குப் பலியாகிற சாதாரண மனிதர்கள்.காதலில் தன் வாழ்க்கையை தொலைக்கிற பெண்களின் பாச உணர்ச்சி,தன் கணவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிற பெண்,வேறொரு மையத்தில் வன் அதிகாரம் செலுத்தக்கூடியவளாக மாறிவிடுவதும் தொடர்நிகழ்வாக வாழ்க்கையை இழக்கிற பெண்,ஒருபால் உணர்வின் ஆதிக்கப் பெண்கள்,வன்முறைக்கு இரையாகிவிடுகிற குழந்தைப் பருவக்கனவுகள் முதன்முதலில் நகரங்களை எதிர்கொள்கிற மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்,உளச்சிக்கல்கள்,மனப்பதற்றம்,குழந்தைகளின் உலகில் நுழைய முயற்சித்து தோல்வியடைகிற மனிதர்கள்,ஐஸ்வண்டியைத் துரத்திக் கொண்டேயிருக்கிற இளம்பிராயத்து நினைவுகள்,சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றங்களைச் சுமக்கிற அப்பாவி மனிதர்கள் – இப்படியான தளத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இந்தக் கதைகள் நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கின்றன.

தொகுப்பில் ஒன்றிரண்டு ஆசிரியரின் பொறுமையின்மையால் அழுத்தத்திலிருந்து நழுவி சம்பவ விவரிப்பாக மாறிவிடுகின்ற கதைகளும் உண்டு. உண்மையில் அவைகளே மிக நல்ல கதைகளாக வந்திருக்க வேண்டியவை.குறிப்பாக “சைக்கிள்” மற்றும் “சேமியா ஐஸ்” ஆகியவை.
சொல்லப்படுவதற்கும்,கேட்பதற்குமான சம்பவங்கள் நிறைந்துள்ள உலகம் இது. உத்திகளில் கவனம் செலுத்துகிற நிலாரசிகனுக்கு சிறுகதையில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

தெளிவான அச்சமைப்பும்,அட்டைப்பட தேர்வும் தொகுப்புக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன என்கிறபோதும் கவித்துவமான தலைப்புகளையும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

- க.அம்சப்ரியா,

[வடக்குவாசல் மார்ச் 2010 இதழில் வெளியான மதிப்புரை]

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
விலை: ரூ.70
ஆசிரியர்: நிலாரசிகன்
இணையத்தில் பெற: http://ezeebookshop.com/

13 comments:

said...

நல்லதொரு விமர்சனம்.

விரைவில் காசு கொடுத்து வாங்கி படிக்கிறேன்.

said...

நன்றி மஞ்சூர் அண்ணா.

காசு கொடுத்து வாங்கும் நல்ல பழக்கம் பலருக்கு இருப்பதில்லை :(
இரவல் புத்தகங்களிலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

said...

நல்லதொரு மதிப்புரை நிலா.

சென்னையிலிருந்து தருவித்து படித்து விட்டு
என் கருத்துக்களையும் சொல்கிறேன்.

said...

நன்றிகள் பல செல்வராஜ்.உங்கள் கருத்தை கேட்க ஆவலாய் இருக்கிறேன்.
இணையம் மூலம் நூலை பெற விரும்பினால் இங்கே செல்லவும்.
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79

நன்றி.

said...

பகிர்வுக்கு நன்றி . இன்னும் புத்தகம் படிக்கவில்லை படித்துவிட்டு மீண்டும் வருவான் பனித்துளி !

said...

வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள் நிலா. புத்தக அட்டைப்படத்தைப் போட்டிருக்கலாமே.!

Anonymous said...

நேர்த்தியான விமர்சனம்,பகிர்வுக்கு நன்றி நிலா

said...

காசு கொடுத்து வாங்கியும் படிக்க முடியாமல் போய்விடுகிறது..:(

விரைவில் படித்து பகிர்கிறேன் நிலா..:)

said...

நன்றி ஷங்கர்s,அடலேறு,ஆதி,அருணா.

@ ஆதி,

அடிக்கடி அட்டைப்படம் போட்டு பயமுறுத்த வேண்டாம்னுதான்.இடப்பக்கம் நிரந்தரமாக இருக்கிறதே:)

said...

I would like to read this book today itself. Nice criticizm.

said...

நல்லதொரு மதிப்புரை நிலா.

said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.