Tuesday, March 30, 2010

உயிரோசை விமர்சனம்



[இவ்வார உயிரோசையில் வெளியான விமர்சனம். எழுதியவர் கிரகம்.]

யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் நிலாரசிகனின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை வாங்கியபோது முதன்முதலில் நிலாரசிகனைச் சந்தித்தேன். நல்ல உயரம், கருப்பு நிறம், கண்ணாடி அணிந்திருந்தார். முதல்முறை பார்ப்பதால் இவரா நிலாரசிகன் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர் வலைப்பக்கத்திலிருந்த போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசமிருந்தது. மீண்டும் நேரில் சந்தித்தால் புத்தகத்தின் பின் பக்கத்திலிருக்கும் அவர் போட்டோவை மாற்றச் சொல்ல வேண்டும்.
சிறுகதை தொகுப்பானது 17 சிறுகதைகளை கொண்டது. 'ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு பிரிவு' - முதன்முதலாக நகரத்திற்கு வேலை பார்க்கவரும் இளைஞனுக்கும் அவன் வசிக்கும் வீட்டு ஓனரின் மகளுக்கும் நட்பு ஏற்படுகிறது. அவள் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி. மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு நாடகள் செல்லச்செல்ல அண்ணன் தங்கை உறவுபோல் ஆகிறது. அந்த சிறுமியின் குறும்புகளை இளைஞன் ரசிக்கிறான். சில தினங்கள் அவனின் அறையிலே தூங்கிவிடுகிறாள். அவளுக்கு ப்ராக் வாங்கித் தருகிறான். சந்தோசமடைந்தவள் அவனுக்கு முத்தம் தருகிறாள். அவன் புதிதாக வாங்கியிருந்த pulser பைக்கில் அவளை வைத்து ஊர் சுற்றிக் காட்டுகிறான். சிறுமி கேன்சர் நோயாளியென்று தெரியவருகிறது. எல்லா வித உறவுகளும் ஒருவனுக்கு சில சமயங்களில் சந்தோஷத்தையும், சில சமயங்களில் துக்கத்தையும் அளிக்கின்றன. இதையே இச்சிறுகதை சொல்கிறது.
'
வேட்கையின் நிறங்கள்' - ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இரண்டு பெண்களின் கதை. வேதா படித்துவரும் பள்ளிக்கூடத்தில் நதியா புதிதாய் சேர்கிறாள். நதியாவின் கண்கள் வேதாவை வெகுவாகக் கவர்கின்றன. நதியாவென்ற பேரைக் கேட்டாலே வேதாவின் உடலில் காமம் கிளர்ந்தெழுகிறது. இவர்கள் இருவரைத் தவிர யாரும் வகுப்பறையில் இல்லாத ஒருநாள் இருவரும் சேர்கின்றன்ர். இருவரின் சேர்க்கையானது கல்லூரிவரை தொடர்கிறது. திருமணத்தில் நாட்டமில்லாத வேதா நதியாவுடன் கோயம்புத்தூர் சென்று வாழ்கிறாள். நதியா வேதாவிற்குத் தாலி கட்டிவிடுகிறாள். நதியா வேலைக்குச் செல்கிறாள். வேதா வீட்டில் இருக்கிறாள். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்கின்றனர். ஒரு நாள் நதியா ஆணுடன் தோளில் கைபோட்டபடி வீட்டிற்குள் வருகிறாள். இந்தக் கதை எழுதப்பட்ட விதம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. பெண்-பெண் காமம் கொள்ளும் தருணங்களை விவரிக்கும் வரிகள் மிகவும் அழகானவை. நிலாரசிகன் கவிஞர் என்பதால் கதையின் வரிகளும் கவிதைபோலவே அமைந்துள்ளன.
'அப்பா சொன்ன நரிக்கதை' – ‘நச்’ சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை. இதைத் தவிர 'தனலட்சுமி டாக்கிஸ்' - கேபிள் மற்றும் திருட்டு வீடியோவின் வருகையால் அழிந்துவரும் திரையரங்குகளின் கதை. வாலிப வயதை எட்டியிருந்தாலும் சிறுவயதில் ரசித்ததை மனம் அசைபோடும் விதமாக 'சேமியா ஜஸ்', 'வால்பாண்டி சரித்திரம்', 'சைக்கிள்' போன்ற சிறுகதைகள் அமைந்துள்ளன.


வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
நூல்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
ஆசிரியர்: நிலாரசிகன்
விலை: 70 ரூபாய் - முற்றும் -
 ******************************************************
பிற விமர்சனங்கள்:


http://online-tamil-books.blogspot.com/2009/12/blog-post_29.html
http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_12.html
http://adaleru.wordpress.com/2010/01/05/book-review-yaaroo-oruthiin-diary-kuripugal/

இணையத்தில் நூலை பெற:

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79


நன்றி,
நிலாரசிகன்.

3 comments:

said...

//நிலாரசிகன் கவிஞர் என்பதால் கதையின் வரிகளும் கவிதைபோலவே அமைந்துள்ளன. //

nalla vimarsanam...!

said...

நன்றி குமார்.

said...

வாழ்த்துக‌ள் நிலார‌சிக‌ன்