1.
கடல் குடிக்கும் பறவைகள்
புதர் மண்டிய ஆரஞ்சு தோட்டத்தை
கடக்கின்றன.
பறந்துகொண்டே புணர்கின்றன
உதிர நிறத்தாலான வண்ணத்துப்பூச்சிகள்.
கற்பாறைகளில் நடுவே
நெளிந்துகொண்டிருக்கும் சாலையில்
நிழல் உதிர்த்து பறக்கிறாள்
ஒரு தேவதை.
முள் தைத்த வலியுடன்
நொண்டிச்செல்கிறான் சிறுவனொருவன்,
கனத்த மெளனத்தில் கரைந்தழுதபடி
இரவுக்குள்
நுழைகிறது இவ்வோவியம்
2.
தோட்டத்தில் சிறு நாற்காலியில்
அமர்ந்திருக்கும் அவளழகை
வியப்புடன் ரசித்தபடி நடனமாடுகிறது
மழை.
அற்புதங்களால் உருப்பெற்ற
அவளது விரல்களில் ஒவ்வோர்
துளிகளாய் விழுந்து கவிதையாகின்றன.
சிறகுகள் முளைக்கப்பெற்ற
மழை
இப்பொழுது பட்டாம்பூச்சியாகியிருந்தது.
சின்னஞ்சிறு உலகில் ஓயாத
மழையுடன் நீண்டதொரு உரையாடலை
துவங்குகிறாள்
நட்சத்திரா.
3.
மூன்று முறை என்னை நான்
வரைந்து பார்த்தேன்.
முதல் முறை இருள் கவிந்திருக்கும்
அறையொன்றினுள்ளிருந்தும்
இரண்டாம் முறை நிலவொளியிலும்
மூன்றாம் முறை
முலைகளின் வெம்மையில்
சுகித்திருந்தபோதும்
வரைந்து பார்த்தேன்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு உருவம் எனதாகியிருந்தது.
மகிழ்வுக்கும் துயருக்கும்
இடையே மிதந்துகொண்டிருக்கும்
என் பிம்பத்தினை காலம்
தன் இடக்கையால்
வரைந்துகொண்டிருக்கிறது.
4.
இளம்பனிக்காலமொன்றில் சந்தித்துக்கொண்டன
நிறமற்ற இரு பட்சிகள்.
இருத்தல் மீதான மோதல்
உக்கிரமான தருணத்தில் அவை
சூரியனை தழுவின.
வெளிச்சம் புணர்ந்த களைப்பில்
வீழ்ந்து மரித்தன.
கொடுங்கனவின் உள்ளிருந்து
துளிர்விடுகிறது
ஓர் இளமஞ்சள் இறகு.
5.
உயரம் சென்று திரும்பும் தருணத்தில்
அறுபடும் ஊஞ்சல் எனலாம்.
வெகு நாட்கள் கழித்து தட்டப்படும்
கதவின் ஓசை எனலாம்.
மரிக்கும் முன்னர் சிரித்த
சிசுவெனலாம்.
இரக்கமின்றி எனை
புசிக்கும் இந்த
பெளர்ணமி இரவை
துயரத்தின் உச்சம்
என்றும் உரைக்கலாம்.
-நிலாரசிகன்.
10 comments:
எல்லாமே சிறப்பாக உள்ளன!
Kavithaikal ananiththum ARUMAI.
ஆகா.. அத்தனையும் அருமை நிலா.
நன்றி எஸ்.கே.
4 & 5 அருமை !!!
நன்றி குமார்,உழவன்,கீதா :)
nandrag iruuku nila valththukkal
கவிதைகள் அனைத்தும் அருமை
தன் நிலைப்பாட்டை மறக்கச்செய்யும் ஒவ்வொரு கவிதைக்கும் நன்றி.
yenakku 3rd one pidichchurukku...!
Post a Comment