Saturday, October 30, 2010

தனலட்சுமி டாக்கீஸ்



உலகின் எந்த புலத்தில் என் பாதங்கள் படும்பொழுதும் ஏற்படாத அற்புத உணர்வை நான் பெறுவது ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான்.
அது என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த என் கிராமம்.  வெள்ளந்தி மனிதர்களாலும் எண்ணிலடங்கா விளையாட்டினாலும் நிறைந்தது என் பால்யம்.

பள்ளி மைதானத்தில் "ரவுண்ட் ரேஸ்" அல்லது "சில்லாங்குச்சி" விளையாடி கொண்டிருக்கும்போது நேரம் என்ன என்பதை எங்களுக்கு உணர்த்துவது எங்களூர் தனலட்சுமி டாக்கீஸ். தினம் இரண்டு காட்சிகள் மட்டுமே கொண்ட சிறிய தியேட்டர். மாலை ஐந்து மணிக்கும் இரவு எட்டு மணிக்கும் காட்சிகள் ஆரம்பமாகும். நான்கு நாற்பத்தைந்துக்கு சத்தமாக ஒலிக்க ஆரம்பிக்கும் பழைய பாடல்களை கேட்டவுடன் மணி ஐந்தாக போகிறது என்பதை அறிந்துகொள்வோம்.

"நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்","குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா" என தினம் ஒலிக்கும் பாடல்கள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்டவை. தரை டிக்கெட்,பெஞ்சு டிக்கெட்,சேர் டிக்கெட்,சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தியிருப்பார்கள். பெண்கள் பக்கத்திற்கும் ஆண்கள் பக்கத்திற்குமிடையே குட்டிச்சுவரொன்று நிற்கும். அலைபேசிகளும் இணையமும் வருவதற்கு முந்தைய காலகட்டமது. காதலர்கள் தாங்கள் நேசிப்பவரை சந்திக்கும் இடமாக விளங்கியது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். உழைத்து ஓய்ந்த ஜீவன்களின் மாலைப்பொழுதை ரம்மியமாக்குவதும்,வெளியூர் கண்டிராத கண்களுக்கு புற உலகையும் திரைப்படங்களின் வழியே காண்பிப்பதும் எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். இடைவேளையின் போது கிடைக்கும் முறுக்கும்,வடையும் வேறெங்கும் கிடைக்காத சுவை கொண்டவை.

கேபிள் டீவியின் வருகையினாலும்,சிடி,டிவிடி என்று பெருகிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் வருமானமின்றி கடுமையான பாதிப்புக்குள்ளானது எங்களூர் தியேட்டர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ்.

கால்சட்டை நிறைய கோலிக்காய்களுடன் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு தனலட்சுமி டாக்கீஸில் படம் பார்க்கும்போது கிடைத்த பரவசம் சென்னையின் மல்டிப்ளெக்ஸில் பார்க்கும்போது கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

[இவ்வார கல்கியில் "ஊர்பாசம்" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை
இந்த தியேட்டரை மையமாகக்கொண்டு நானெழுதிய சிறுகதை இங்கே வாசிக்கலாம்.
-நிலாரசிகன். 

7 comments:

said...

"சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டிற்கு ஈடாகுமா? பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?"

said...

voor ninanvugal endrum pasumaiyanavai....

said...

whats the name of your village.

is it Keelkattalai danalaksmi

said...

//சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?//

உண்மைதான்..

பழைய நினைவு அருமைங்க.

said...

சொந்த ஊர் அனுபவங்களுடன் தன லட்சுமி டாக்கீஸ் உணர்வு ,இன்று கேபிள், மற்றும் திருட்டு வீடியோ போன்றவற்றால் அழியத் துடங்கியது....மதுரையில் பல தியேட்டர்கள் முடிவுள்ளது என் நினைவிற்கு வருகிறது. வாழ்த்துக்கள்.

said...

நீயும் உழவனும் சேர்ந்து கல்கி பக்கங்களில் கலக்கி இருக்கீங்க...வாழ்த்துக்கள்.

said...

yenga oor krishna talkes-um ithey nilamaithaan.yenga appa angathaan operater-a work panninaanga.yengalukkaana ore pozhuthupokku idam athu mattumthaan.

athaiyum moodi vittarkal.

aazhamaana unarvukalaiyum ninaivukalaiyum valarntha & valarththa idangalum yaerpaduththik kondethaan irukkintrana..ungal pathivum athaiththan unarththukintrathu.

vazhthukal nila..:)