Sunday, November 28, 2010

யன்னல் கசியும் சிறுவெளிச்சம்



சில கடிதங்களின் முதல் வரியை எழுதுவதற்குள் காலம் நம்மை முழுமையாய் தின்றுவிடும். இந்தக் கடிதத்தின் முதல் வரியை பின்னிரவின் தனிமைக்குள்ளிருந்து கண்டெடுத்துவிட முயல்கிறேன். இது ஒரு வன்மத்தின் கறை துடைக்க முயன்றிடும் கடிதம் எனலாம். தண்டிக்கப்படுதல் தெரியாமல் புன்னகைக்கும் உதடுகளின் மீதொரு போர்தொடுத்தல் எனலாம்.  தீராவன்மையின் காரணத்தால் என் மீது தொடுக்கப்பட்ட மெளனப் போர் மெளனம் கலைந்து வெளியேறிய தினத்தில் தீக்குளத்தில் கருகிய மீனாய் கரையில் கிடந்தேன். துயரத்தாலும் கோபத்தாலும் ஒரு சதுரத்திற்குள் நடந்துகொண்டேயிருந்தேன். அமில மழை நின்றுவிட்டபின் வடிந்த நீர்த்துளிகளாய் அனைத்தும் மறைந்திருந்தது விடியலில். அன்று நானொரு துறவியின் நிலையிலிருந்தேன்.முழுவதுமாய் நிரம்பியிருந்தது மனக்கோப்பை. உன்னதமானதொரு நட்பை தவமிருந்து தவணை முறையில் காயப்படுத்த உன்னால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. சூன்யத்தின் பிடியில் நீ தவித்திருந்த காலத்தில் யன்னல் கசியும் சிறு வெளிச்சமாய் என் வார்த்தைகள் உன்னோடிருந்தன.

அப்போது உன் வானம் கருமையின் நிறத்தை கொண்டிருந்தது. தூரம் பற்றிய பிரக்ஞையின்றி ஒட எத்தனித்து ஊனம் உணர்ந்து திகைத்து நின்றாய். மெதுவாய் உன்னை அழைத்துச்செல்லும் நடைவண்டியாய் மாறியிருந்தது என் சுயம். கையில் எப்போதும் கொடுவாளுடன் வலம் வந்த காலநீலி நம்மை பிரித்துச்சென்றாள். நம்மிடையே வீழ்தல் என்றும் இருந்ததில்லை. வீழும் நிலையின் போதெல்லாம் நாம் நிழலாய் மாறியிருக்கிறோம். நிழலுக்குள்ளிருந்து உருவம் பெற்று வீழ்தலை தடுத்திருக்கிறோம். வருடங்கள் கரைந்துவிட்ட பின்னும் நம்மிடையே ஒன்று மட்டும் நிலைத்திருந்தது நேற்றுவரை.

இன்றென்பது இல்லாதிருந்தால் நானொரு ஞானமரத்தில் இளைப்பாறியிருக்க மாட்டேன். இன்றென்பது உறைந்து போயிருந்தால் என் முன் ஒரு ரகசியம் உடைபடாமல் போயிருக்கும்.இன்றென்பது நேற்றைப்போல் இல்லை. இன்றென்பது நாளைக்குள் நுழைய மறுத்தது. இன்றென்பது இதயத்தின் நான்கு சுவர்களையும் நெருப்பால் நிரம்பி சிரித்தது. இன்றென்பது துரோகத்தின் உச்சத்தை நினைவூட்டியது. இன்றென்பது ஒரு ஒநாயின் குருதி கசியும் பற்களை காண்பித்தது. இன்றென்பது தவிர்த்தலின் பொருளை ஒவ்வோர் இறகாய் பிய்த்து எறிந்து உணர்த்தியது. இன்றென்பது இல்லாத நானொரு குழந்தையின் குதூகலத்தை சுமந்திருந்தேன்.இன்றென்பது இருளின் கொடுங்கனவில் என்னை ஆழ்த்தி மகிழ்ந்தது. இன்றென்பது நீ அல்ல. இன்றென்பது உன் நண்பனின் சுய ரூபத்தையும் ஒரு பிம்பமாக்கி என்னில் விட்டுச்சென்றது. இன்றென்பது நீ என்பது ஒன்றல்ல இரண்டு என்றுணர்த்தியது. இன்றென்பது.....

தவிர்த்தலின் காரணம் அறியாத ஓர் ஆத்மா உன் காயத்தில் பங்கேற்க வந்தபோது நீயொரு வேட்டைநாயாக நின்றிருந்திருக்கிறாய். வேட்டையாடப்படுதலை விட எதற்காக இவ்வேட்டை என்கிற புரிதலற்ற இந்த உயிர்  உதிர்ந்த மலருக்கு சமம். துரோகிக்கும் பூச்செண்டு கொண்டு செல்லும் நீ எனக்கொரு சிறு வாழ்த்தும் தர விரும்பவில்லை. ரணத்தில் வந்தமர்கிறது ஓர் இறகு. யாருமற்ற வனத்தில் நானொரு புள்ளியாய் மறைந்துகொண்டிருக்கிறேன்.

வா! உயிர் புசிக்கும் உன் பேருன்னதமான நண்பனின் சடங்கில் கலந்துகொள். மூன்றுமுறை பிடிமண்ணை வீசி எறிந்துவிட்டு ரயிலேறிச்செல். பாலையொன்றில் நடனமிடும் பெண்ணொருத்தியின் அழகை யன்னல் வழியே ரசித்துக்கொண்டே நீ செல்லும் வழியெங்கும் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும் விசும்பின் ஓரத்தில் விசும்பிக்கொண்டிருப்பேன் நிலவாக.

-நிலாரசிகன்.

12 comments:

Anonymous said...

அருமை நிலா... ரொம்பவும் அழகாக உணர்வை வெளி படுத்தி இருக்கே

said...

//
வா! உயிர் புசிக்கும் உன் பேருன்னதமான நண்பனின் சடங்கில் கலந்துகொள். மூன்றுமுறை பிடிமண்ணை வீசி எறிந்துவிட்டு ரயிலேறிச்செல். பாலையொன்றில் நடனமிடும் பெண்ணொருத்தியின் அழகை யன்னல் வழியே ரசித்துக்கொண்டே நீ செல்லும் வழியெங்கும் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும் விசும்பின் ஓரத்தில் விசும்பிக்கொண்டிருப்பேன் நிலவாக.
//
ம்ம்!
நட்பின் உன்னதம் தெரியாதவன் கையேந்தும் திருவோடுகளில் முழுதும் நட்பை நிறைத்து செல்கிறது உங்கள் வரிகள்....
நேர்மையற்றவனின் வன்மத்தின் மீது இளகின மனதோடு அடிகோடிட்டு ஜெயித்து நிற்கிறீர்கள் நிலா!
மனவோட்டத்தோடு உங்கள் வரிகள் ஏனோ இன்று நிரம்பப் பொருந்துகிறது! கொஞ்சம் கீறலும் சில துளி அவஸ்தையும் நிறைந்த துரோகத்தின் பொழுதுகள் நினைவில் பட்டு மீள்கின்றன.

said...

உணர்வை வெளிப்படுத்தும் பதிவு! அருமை!

said...

உணர்வுகளின் அருமையான வெளிப்பாடு...

said...

ரொம்பவும் அழகாக உணர்வை வெளி படுத்தி இருக்கே...

said...

நன்றி மேடி.

said...

நன்றி கயல்.

said...

நன்றி எஸ்.கே.

said...

நன்றி வெ.ப,சே.குமார்.

said...

அருமை அண்ணே..உணர்வுகள் சிலிக்கவைக்கின்றன உணர்வுகள். மீண்டும் வந்துவிட்டேன். தொடர்வேன். நன்றிகள்

said...

நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

தவிர்த்தலின் காரணம் அறியாத ஓர் ஆத்மா உன் காயத்தில் பங்கேற்க வந்தபோது நீயொரு வேட்டைநாயாக நின்றிருந்திருக்கிறாய். வேட்டையாடப்படுதலை விட எதற்காக இவ்வேட்டை என்கிற புரிதலற்ற இந்த உயிர் உதிர்ந்த மலருக்கு சமம்.
-- These lines are awesome Nila,