Saturday, April 09, 2011

அம்ருதா கவிதைகள்



1.கிணற்றுலகு
கலங்கிய நீர் நிறைந்திருக்கும் அக்கிணற்றில்
தவளையொன்று தலையுயர்த்தி
வானில் மிதக்கும் நட்சத்திரங்களை
ஒவ்வொன்றாய் கிணற்றுக்குள் இழுத்துச் சென்று
ஒளித்து வைக்கிறது.
தொலைந்த நட்சத்திரங்களை
இரண்டு காகங்கள் தேடத்துவங்குகின்றன.

சிறு சிறு கற்களால் அவை
கிணற்றை நிரப்புகின்றன.
மெல்ல மேலெழும்பும் நீரில்
நட்சத்திரக் குழந்தைகள் ஒவ்வொருவராக
வெளியேறுகின்றனர்.
அவர்களது உள்ளங்கைகளுக்குள்
ஒடுங்கியிருக்கின்றன
முதிர்ந்த தவளைகள்.

2.போதி மரத்தின் ஒடிந்த கிளை

பூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்
வழி உள் புகுந்தனர் ஆதிகள்.
மொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.
ஒவ்வொருவரின் கைகளிலும் ஆயுதமிருந்தது.
முதலாவதாக என்னுடலில்
தன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்
சிலிர்ப்பூட்டியது.
வரிசையாக..
ஒவ்வொருவராக..

கடைசியாக
குருதி வெள்ளத்தில்
என்னை சிதைத்தவனின் பெயர்
ஆச்சர்யமூட்டியது.
வெளியேறினார்கள்.
அறையெங்கும் பெயர்களை விட்டுச்சென்றார்கள்.
முதலாவது ஆயுதத்தை செலுத்தியவன்
கைகளில்
போதி மரத்தின் ஒடிந்த கிளையும்
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் இருந்தன.


- நிலாரசிகன்


[ஏப்ரல் 2011 அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்]

7 comments:

said...

முதல் கவிதை அழகு. அற்புதம்.

இரண்டாவது அருமை. அழுத்தம்.

வாழ்த்துக்கள்.

said...

"கிணற்றுலகு" பிரமாதம்

said...

vaazhthukal nila....

said...

உங்கள் ‘வெய்யில் தின்ற மழை’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்

said...

இரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்தது நண்பரே வாழ்த்துக்கள்

said...

முதிர்ந்த தவளைகள்!

கவித இயல்பாய் உணர்வை சொல்லிப் போகிறது!

said...

both are very super