Tuesday, March 27, 2012

இரண்டு கவிதைகள்

கடலாடும் தாழி
நீல நிறம் படர்ந்திருக்கும்
ஆழ்கடலில்
காற்றிலாடியபடி 
காற்றில்லா இடத்தில்
நாம் அமர்ந்திருக்கிறோம்.
ஒரு முத்தத்தில் மலர்ந்து
ஒரு முத்தத்தில் மரணித்த
நம் உறவின் நடுவே.
மீன்குஞ்சுகள் நம்மை மொய்க்கின்றன.
கற்பாறைகள் நிறைந்த
தனித்தீவொன்றில் ஒதுங்கிற்று
நம் தாழி.
தாழியுடைத்து
உயிரற்ற உனதுடலை இழுத்துக்கொண்டு
தீவில் நடக்கிறேன்.
உடன் வருகிறது கடல்
மாபெரும் முத்தமாகி.

உள் ஒலி
கரையொதுங்கிய பெட்டிக்குள்
டம் டம் டம்ம் டம்ம்ம்
என்று எழும்பிக்கொண்டிருக்கும்
கொட்டுச்சத்தம்
ஆற்று மணலை அதிர செய்தபடி இருக்கிறது.
தன் பத்து வயது
சினேகிதியுடன் ஆற்றங்கரையோரம்
நடந்து வருபவன் திடுக்கிட்டு
ஒலி வரும் திசையறியாமல்
தடுமாறுகிறான்.
சினேகிதியின் நெஞ்சில் அணைந்திருக்கும்
பொம்மையின் கண்கள் விழித்து
விறைத்திருக்கின்றன.
விரல்கோர்த்து கால் பெருவிரலால் ஆற்று மணலை
நிமிண்டியபடி வரும் சினேகிதியின்
தோள்களை அழுத்த துவங்குகிறான்.
பெட்டியின் கொட்டுச்சத்தம்
இடம் மாறி தடம் மாறி
லப் டப் லப் டப் லப் டப்.....

-நிலாரசிகன்.
[361 டிகிரி சிற்றிதழில் வெளியான கவிதைகள்]

0 comments: