Monday, September 16, 2013

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்



இந்த புத்தன்
காலை 5.40க்கு கண்ணாடி யன்னலை
இரண்டுமுறை கொத்தி எழுப்பும் காகத்தின்
முகத்தில்தான் தினமும் விழிக்கிறான்.
இரண்டு நதிகள் சேருமிடத்திற்கு
ஓட்டமும் நடையுமாய் வயிற்றை பிடித்துக்கொண்டு
ஓடி - அமர்ந்து - எழுந்த பின்பு சூரியனை
மேலெழ கட்டளையிடுகிறான்.
வீடு திரும்பும் வழியில் அவனுக்கு
பாட வேண்டும் போலிருக்கிறது.
சப்தமிட்டு பாடிக்கொண்டே குதித்தோடுகிறான்.
எருமைகள் மிரண்டு நகர்கின்றன.
ஓடிச்சென்று கிளைகளற்ற மரத்தடியில்
அமர்ந்து இமை மூடுகிறான்.
காகமொன்றின் சிறகில் பயணித்து
மஞ்சள் நதியில் "ஸ்லோ மோஷ"னில் விழுகிறான்.
நீச்சல் தெரியாமல் தத்தளிப்பவனின்
தலைமயிர் பிடித்திழுத்து கரைசேர்க்கிறாள்
யுவதியொருத்தி.
கனவுகளை மிதித்து எழுந்தவன்
தன் உடலெங்கும் ஆயிரம் மொட்டுகள்
ஒளிர்வதை பெருமிதத்தடன் தொட்டுப்பார்க்கிறான்.
யன்னல் காகம் "கோட்டிப்பயல்" என்று
நினைத்து சிரித்துக்கொண்டு பறக்கிறது.
இந்த புத்தனின் அதிகாலை
எப்போதும் இப்படித்தான் புலர்கிறது.

இந்தக் காதலன்

மலை கண்டால் லயித்து நிற்பவன்
மழையில் நனைந்துகொண்டே விசிலடிப்பவன்
காகத்தின் சாம்பல் நிறத்தில் நுழைந்து
தனியொரு உலகில் வாழ்ந்து திரும்புகிறவன்
இடக்கை சுண்டுவிரலுக்குள் காதலை இழுத்துப்பிடித்து
அதிகாலைக் கடற்கரையில் ஓடுபவன்
மிகச்சிறிய இதயத்தின் நான்கு அறைகளுக்குள்ளும்
வெவ்வேறு கண்ணாடிகளை புதைத்து வைத்திருபவன்
அழுதுகொண்டே நகரும் சரக்கு ரயில்களிடம்
புன்னகைத்து கையசைப்பவன்
பின்னிரவுக் கனவுகளிடம் மனம் நெகிழ
உரையாடி களைத்துறங்குபவன்
கவிதையின் வரிகளிடையே வளைந்து நெளிந்து
சிறுவனாகி ஓடி ஒளிபவன்
நெடுஞ்சாலையோர குட்டைகளில் இறங்கிச்சென்று
மீன்குஞ்சுகள் பிடித்து பின் விடுவிப்பவன்
அஃறிணைகளுடன் வெகுநேரம் கலந்து கரைபவன்
மங்கிய விளக்கொளியில் மிதமாய் கசிகின்ற
இசை ரசித்து ரசித்து கோலா குடிப்பவன்
தோல்விகளின் தலைகோதி வெற்றிக்கு
இதழ் முத்தம் தந்து மெளனித்துக்கிடப்பவன்
நிறைவேறாக் காதலின் நினைவுகளை
முன்னிரவில் நினைத்து நடுநிசியில் மறப்பவன்
டயனோசர் குட்டிகளை அந்திநடைக்கு
அழைத்துச் செல்பவன்
அலைபேசிக்குள் உறங்கும் எண்ணற்ற
எண்களை பார்வையால் வருடுபவன்
கரடிபொம்மைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு
வெளிக்கிளம்புகிறன்
அனைத்தையும் திளைக்க திளைக்க
காதலித்து எப்போதும் காதலில் திரிபவன்
இந்த மகாக் காதலன்!

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்

இந்தக்கவிதைக்கு இப்படியொரு தலைப்பை
கொடுத்தது நீங்கள்தான்.
உங்களுக்கான இக்கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
துணிவிலக்கி பாலினம் என்னவென்று பார்ப்பதில்
நீங்கள் காட்டும் மும்முரத்தால் நிசப்தத்தில்
அழுகிறது.
நதியோர கிராமமொன்றில் கோணவாயனுக்கும்
சிவந்திகனிக்கும் பிறந்தவனுக்கு நீங்கள்தான்
கோட்டிப்பயல் என்று பெயரிட்டீர்கள்.
அவனது உலகில் கோடரியால் உங்களது பொய்களை
எழுதிச் சிரித்தீர்கள்.
காலம் தன் குதிரைக்கால்களால் வெகுவேகமாய்
ஓடிப்போனதில் பட்டணத்தில் வந்து நின்றான்
கோட்டிப்பயல்.
பரிசுத்தமான அன்பைத்தேடி துவங்கிய அவனது
பயணத்தின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நீங்கள்
சிறுநீர் கழித்தீர்கள்.
தன் இருபத்தோராவது வயதில் கவிதையொன்றை அவன்
பிரசவித்தபோது சவத்துடன் ஒப்பிட்டு அவனது
சிறு இதயத்தில் முட்கள் விதைத்தீர்கள்.
யாருமற்ற அவனது உலகில்
பச்சைநிற காகமொன்று மட்டுமே பறந்து திரிந்தது.
குருட்டுக்காகம் அது என்று அவன் அறிந்துகொண்ட
நாளில்தான் தானொரு செவிடு என்பதை
உணர்ந்தழுதான்.
இரவொன்றின் மூன்றாம் சாமத்தில் சடசடவென்று
இறக்கைகள் முளைத்து காக்கைக்கூட்டத்துடன்
கலந்து பறக்கும் அவனது சந்தோஷத்தின் நிழலைக்கூட
உங்களால் தொடமுடியாதுதான்.
அவனுடன் சேர்ந்து பயணிக்கும் இக்கவிதையின்
எந்தவொரு சொல்லையும் உங்களால்
புரிந்துகொள்ளவே முடியாதுதான் மக்காள்!

வற்றாநதியில் மிதக்கும் ஆப்பிள்

தவழ்ந்து தவழ்ந்து தன் வயிற்றை
தரையில் இழுத்து இழுத்து
என்னிடம் வந்து சேர்ந்தது புன்னகையொன்று.
நான் அதற்கொரு ஆப்பிள் ஜூஸ்
வாங்கித்தந்தேன்.
மிக நிதானமாய் அதனை ரசித்து
அருந்திவிட்டு நகர்ந்தது.
அது மறைந்த மறுகணம் மூச்சிரைக்க
ஓடிவந்தது ஒரு துளி கண்ணீர்.
அதன் உடலெங்கும் துளிர்த்து மிளிர்கின்ற
வியர்வையை கைக்குட்டையால் துடைத்துவிட்டேன்.
கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும்
ஓடத்துவங்கியது.
மிக நிதானமாய் என்னுடலின் யன்னல் திறந்து
உள் தாழிட்டுக்கொண்டேன்.
சற்று தொலைவில் புன்னகையின் தோளில்
சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தது
கண்ணீர் எனும் வற்றாநதி.


-நிலாரசிகன்.

 

0 comments: