Monday, September 30, 2013

வலிக்கவிதைகள் இரண்டு



1.ரகசியத்தின் அறை

அறையில் மூலையில் பார்க்கும்பொழுதே
முளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது
ரகசியத்தின் செந்நிற மரம்.
அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றன
அழுக்கடைந்த அன்பின் முட்டைகள்.
ஒவ்வொரு முட்டைக்குள்ளிருந்தும் வெவ்வேறு
உருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலிகள்.
சர்ப்பமென சுருண்டிருக்கும் அவனது
உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்
எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.
காதலிகளின் எச்சில்கள் படும் இடமெங்கும்
முளைக்கின்றன ஈச்சமரங்கள்.
அவனது உடல் வெப்பத்தில் உருகி
பாலையின் நடுவில் ஓடும் நதியாகிறது.
நதியில் மிதக்கும் முகில்கள் ஒவ்வொன்றிலும்
நடனமிட்டு சிரிக்கிறார்கள் தீராக்காதலிகள்.
ரகசியத்தின் சமுத்திரத்தை நோக்கி
மெதுவாய் நகர்கிறது நதி.
அறையின் மற்றோர் மூலையில்
காதலிகளின் மார்பில் கிறங்கிக் கிடக்கிறது
மகாசமுத்திரம்.
மகாசமுத்திரம்.

2. இம்பாலாவின் முத்தங்களும்
வனத்திடை திரியும் காடிப் பெண்ணும்

அடர்ந்து படர்ந்திருக்கும் புழுதிப்புற்கள் மீதமர்ந்து
காடியை அவள் மிகவும் ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கால் நகங்களின் பிடியில்
ஒரு இம்பாலா* துடிதுடித்துக்கொண்டிருந்தது.
குடுவைக் காடியை குடித்து முடித்தபின்பு
மிக நிதானமாய் அதனது குரல்வளையை கெளவினாள்.
உடலெங்கும் முத்தங்கள் தேக்கி வைத்திருக்கும்
அதனது ப்ரியவுடலைவிட்டு பிரிந்தது உயிர்.
வனம் அதிர சிரித்தவள் ஒவ்வொரு முத்தங்களிடமும்
தன் கூர்நகத்தினை காண்பித்தாள்.
ஒவ்வொரு முத்தமாய் கண்கள் மூடி
மரிக்க துவங்கின.
கடைசி முத்தம் அவளது நகத்திடம்
நலமா என்றது.
கூர்நகம் தலைகவிழ்ந்து தரை நோக்கியது.
சற்று நேரம் கழித்து
பாதையெங்கும் குருதி வழிய வாலாட்டி
நடந்து செல்பவளை பின் தொடர்கின்றன மரித்த முத்தங்கள்,
தங்கள் உடலெங்கும் வனத்தின் வெம்மையை
அப்பியபடி.

-நிலாரசிகன்.