Sunday, October 27, 2013

தனிமை என்றொரு டிராகன்


1.ஜூலியட்சி

மறியொன்றை பாழ்கிணற்றுக்குள்
புன்னகைத்தபடியே வீசிவிட ஜூலியால்
மட்டுமே முடியும்..
அவனது மறி துடிக்கின்ற கணங்களில்
மெளனத்தின் மதுவை ருசித்துக்கொண்டும்
பெருக்கெடுக்கும் குருதியில் நனைகின்ற‌
பொழுதுகளில்
தேநீர் அருந்தவும் அவளால்
மட்டுமே முடியும்.
தான் விரும்பும் நேரங்களில் அவனை
மறியாக்கி மடியில் கிடத்திடுவாள்.
தான் தன்னை விரும்பும் நேரங்களில்
கிணற்றில் தள்ளிவிட்டு நகர்ந்திடுவாள்.
காலத்தின் அசுர நாவு அவனது
உடலை தீண்டியபடியே கடந்துசெல்கிறது.
யட்சியின் முள்மனதில் அவனது
மறியின் கல்லறை எழும்புகிறது.
மெளனத்தின் மதுவை அவனது
இதழ்கள் ருசிக்க துவங்குகையில்
கரடிபொம்மையொன்றை கட்டியணைத்தபடி
நிம்மதியாய் உறங்குகிறாள்
ஜூலி-யட்-சீ.


2.முடிவுகள் மற்றும் முடிச்சுகளுடன் நிற்கும்ஓர் ஆப்பிள் மரம்.

ஓநாய்க்குட்டிகளுடன் அதன்
நிழலில் தங்குகிறாள் யுவதியொருத்தி.
நடுநிசியில் தன் கழுத்திலிருந்து நீளும்

கயிற்றின் மறுமுனையை கிளை நோக்கி வீசுகிறாள்.
முடிச்சின் இறுக்கத்தில் அதன் கிளையில்
தழும்பொன்று மலர்கிறது.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஓநாய்க்குட்டிகளின்
மேல் ஒன்றிரண்டு இலைகள் வந்தமர்கின்றன.
தன் இடமார்பில் பொறித்திருக்கும்
பச்சைப்பெயரை வருடிக்கொடுக்கிறாள்.
முடிவொன்றின் மேல் படுத்திருப்பவளின்
உடல் வெம்மையில் சிவந்திருக்கிறது.
விழிநீர் துடைத்து துடைத்து அழுகிறாள்.
அவள் காணாத விடியலில்
பழுக்க துவங்கியிருக்கும் அதன் கனிகள்
சொட்டுச் சொட்டாய் கண்ணீர் சிந்துகின்றன.
மிக நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன
ஓநாய்களும்,குட்டிகளும்.

3.தனிமை என்றொரு டிராகன்

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன்
தன் வரவேற்பறையில்
படுத்திருக்கும் டிராகனின் தலையை
தடவிக்கொடுத்துவிட்டு சட்டையை கழற்றினான்.
அந்த டிராகன் தீயை உமிழ்ந்தபடியே
மூலையில் படுத்திருந்தது.
வாங்கி வந்திருந்த ஆரஞ்சு பழத்தை
அதனிடம் நீட்டினான்.
அது முகம் திருப்பிக்கொண்டது.
அருகில் அழைத்து தன் மடியில் கிடத்திக்கொண்டான்.
அவனது கன்னங்களில் முத்தமிட்டு
ஆரஞ்சு பழத்தை சுவைத்தது.
டிராகனின் தலையை வருடிக்கொடுக்கும் பொழுது
அவள் ஞாபகம் நெஞ்சின் மீது
ஓர் உதைவிட்டது.
மழை நாளொன்றில் கடற்கரை மணலில்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
அவளது கால்களை தன் மடியிலெடுத்து
ஒவ்வொரு நகமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
வெட்கத்தில் மழை கடலை
தழுவிக்கொண்ட பொழுதில்
கடற்கரையெங்கும் சிறு பூச்செடிகள் முளைத்து
மறைந்தன.
மடியிலிருந்த டிராகன் உறங்கியிருந்தது.
கண்ணாடி தம்ளரில்
அசைகின்ற நீரைப் போல் அந்த
பின்னிரவு தெருநாய்களின்
குரைப்புச்சத்ததில் தளும்பியபடி இருந்தது.

 - நிலாரசிகன்.