ஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி -
உமா சக்தி [இம்மாத தீராநதியில் வெளியான விமர்சனம்]
உமா சக்தி [இம்மாத தீராநதியில் வெளியான விமர்சனம்]
கவிஞன் ஒருவன் சிறுகதை எழுத்தாளன் ஆவதோ அல்லது நாவலாசிரியன் ஒருவன் கட்டுரையாளன் ஆவதோ அல்லது கட்டுரையாளன் ஒருவன் மேற் கூறிய இரண்டுமாவதோ அவனுடைய விருப்பமும் ,தேர்வும் சார்ந்த விஷயங்கள். அவன் படைப்பின் உட்பொருள் அதன் வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. அதற்கான பிரத்தியேக மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றது. ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் அனுபவங்களும் , தரிசனங்களும் , நோக்குநிலையும் படைப்புக்கான வடிவத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.. கையளவு நீருக்கு பெரியதோர் அண்டா எவ்வளவு அனாவசியமோ , அதே போன்று பரந்ததோர் உலகத்தை அடைத்து விட சின்னஞ் சிறு சிமிழும் போதுமானதல்ல என்பதை திறமை வாய்ந்த ஒரு படைப்பாளி அறிந்து வைத்திருப்பான்..எழுத்தின் கரம் பற்றிய மறுகணமே ஒரு படைப்பாளியை எழுத்து என்பது வழி நடத்திச் செல்கின்றது. எழுத்து நம்மை தேர்ந்தெடுத்ததா நாம் எழுத்தை தேர்ந்தெடுத்தோமா என்பதற்கு எந்தவொரு படைப்பாளியிடமும் அறுதியான பதில் இருக்காது. ஓர் மன உந்துதலில் அவன் கவிதை ,கட்டுரை ,சிறுகதை அல்லது,நாவலினதோ மடியில் அவன் அல்லது அவள் போய் வீழ்கிறாள்.அவனைப் படைப்பும்,படைப்பை அவனும் வளர்த்தல் நிகழ்கிறது. கவிஞனாகப் பரவலாகக் கவனம் பெற்ற நிலாரசிகனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ஜூலி யட்சி வாசிக்க நேர்கையில் இது கவிதைத் தொகுப்பா கவிதை வடிவில் சிறுகதைத் தொகுப்பா என்று குழம்ப வைத்த தொகுப்பு இது.
கவித்துவமான முன்னுரையுடன் கவிதை நடையில் பத்து முத்தான கதைகள். ஒவ்வொரு கதைக் களனும் வித்யாசமானவை. பெண்ணுலகில் இத்தனை அணுக்கமாக, இத்தனை நுட்பமாக ஒரு ஆண் எழுத்தாளர் பதிவு செய்துள்ளது ஆச்சரியம். இந்த அளவு உள்வாங்கி பெண்ணாகவே உருமாறி எழுதிவிட்டாரோ என்று வியக்கும்படியான நேர்த்தியான பெண் உலகச் சித்திரப்புகள். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை மாய யதார்த்தவாத அவ்வப்போதும் யதார்த்தத்திற்கும் ஊடாடி பயணிக்கின்றன. அது எதுவாக இருப்பினும் வாசிக்கும் மனங்களை ஈர்க்கும்படியான கதையாடலும், சொற் பிரயோகங்களும், பாத்திரப் படைப்புகளும் இக்கதைகளை முற்றிலும் வேறொரு கோணத்தில் படிக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு கதைகளின் கற்பனை தீவிரத்தை நினைத்தபடி படித்துக் கொண்டிருந்த எனக்கு சட்டென்று மிதந்து கொண்டிருக்கிறேனோ எனத் தோன்ற இரு கைகள் தான் உள்ளது சிறகுகள் இல்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினேன்.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உலகம். தர்ஷணிப்பூ என்ற பெயர் எவ்வளவு அழகு இந்தச் சிறுகதையின் மையப்புள்ளி அதுவே. ஆண்களின் ஆதிக்கம் மனிதர்களின் அத்துமீறல்கள் வனங்களையும் இயற்கையையும் எப்படி எல்லாம் சிதைக்கின்றன என்ற குறியீட்டை உள்ளடிக்கிய கதை இது. அகால வேளையில் தந்தை தினமும் செல்லும் அருவிக்கரையோரம் அவரைத் தொடர்ந்து மகன் செல்ல, அங்கே அவன் காணும்காட்சி அவனை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சிறகு முளைத்த பெண்ணொருத்திக்கு தன் தந்தை வைத்தியம் பார்க்க, சோர்வுற்று வீழ்ந்திருந்த அவள் ஓரளவுக்கு குணமான பின் அவர் விடைப்பெற்றுச் செல்ல, அவள் மரத்தைப் பிளக்கச் செய்து அதனுள் மாயமாகிறாள். அடுத்த நாள் தனியே வரும் மகன் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் வனப்பூக்களின் அரசி என்றும் அவள் பெயர் தர்ஷிணிப்பூ என்றும் அறிகிறான். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியும் துயரும் நிரம்பியவை.
இத்தொகுப்பின் முக்கியமான, நிகழ் உலகில் நடக்கக் கூடியதுமான கதை மழைத் தேன். கிராமத்துப் பள்ளி சிறுமி கண்மணியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவம் தான் கதை. ஆனால் இக்கதையை எழுத்தாளர் கையாண்டிருக்கும் விதம் தான் இதை ஆழமாக்குகிறது. சின்னஞ்சிறிய மனங்களில் எதிர்ப்பார்ப்பு, சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை இக்கதை பதிவு செய்கிறது. சடங்கானதும் ஆண்களிடம் பழகவோ பேசவோ தடை விதிக்கப்பட்ட கண்மணிக்கு செல்வம் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு ஏற்பட அவனும் இவளைக் கடக்கும் போதெல்லாம் பார்வை வீசிச் செல்ல, அவர்களின் அறிவிக்கப்படாத முதல் காதல் தொடராமல் போனதன் காரணத்தை, கண்மணி அவள் சித்தி வீட்டிற்கு தங்கை இந்துவுடன் தங்கும் போது விவரிக்கிறார் கதாசிரியர். செல்வம் ஒரு நாள் நோட்டு வாங்க கண்மணியின் வீட்டுக்குச் செல்ல அங்கே கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கண்மணி தன்னையறியாமல் சிறுநீர் கழித்திருந்தாள். செல்வம் அதை கிண்டலாக கண்மணியின் வகுப்பில் படிக்கும் தன் உறவுக்காரப் பெண்ணிடம் அவள் ஒண்ணுக்குப் போனது நார்க்கட்டில்ல இருந்த அதோ அங்க பெய்யற மழை மாதிரியில்ல இருந்துச்சாம் என்று சொல்லியிருக்கிறான். அன்றிலிருந்து அவள் மனதில் செல்வம் மீதான அசூசையும் மழை மீதான வெறுப்பும் வளரத் தொடங்கியது. சித்தி மகள் இந்துவுக்கும் இதே பிரச்னை என்று தெரிந்து செய்வதறியாது திகைக்கிறாள் கண்மணி. பூப்படைந்திருந்தாலும் இன்னும் சிறுமியாகத் தான் இருக்கும் இவள் போன்ற குட்டிப் பெண்களின் மனம். அது எதிர்ப்பாராமல் கிடைக்கும் அவமதிப்புகளைத் தாங்க இயலாமல் மனதை இம்சிக்க வைக்கும். கண்மணிக்குத் தோன்றிய எதிர்பாலின ஈர்ப்பு சில நாட்களிலேயே முறிந்து போனக் காரணம், செல்வத்தின் கேலியும் அவன் அதற்குப் பின் அவளை அதே நோக்கில் பார்ப்பதும்தான். இந்தக் கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் பதின்வயதுப் பெண்களின் இதுவரை பேசப்படாத பிரச்னையை மெல்லியதாக உளவியலுடன் மிக நேர்த்தியாக பதிவு செய்கிறது.
விசித்திரன், சித்திர வதனி பெருநகர சர்ப்பம் இவை ஓரளவுக்கு சுமாரன கதைகள் தான். கதைகளுடன் இயைந்து வரும் கவிதை வரிகளை ரசிக்கலாம். வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை கதை நான் லீனியர் வகையில் பரீட்சார்த்த முயற்சியில் எழுதப்பட்டுள்ளது. அவளது இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது எனும் வரிகள் மூலம் கதையை க்ராஃபிக் கதை போல காட்சிரூபப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.இன்னும் சற்று தெளிவாக எழுதப்பட்டிருந்தால் இத்தொகுப்பில் மிக முக்கியமான கதையாக இருந்திருக்கும். சித்தர வதனி எனும் கதை நவீன பழிவாங்கும் பெண்ணின் கதையாக உள்ளது. தன்னை கலவிக்கு அழைத்த இருவரை வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக காதலிப்பது போல நடித்து பழிவாங்குகிறாள் நித்தியா எனும் பெண். அவள் கையில் எடுத்த ஆயுதம் பெண்மை என்றாலும் அவள் அதைத் தற்காப்புக்காகவும் தன் போன்ற பிற பெண்களின் பாதுகாப்புக்காகவுமே இவர்கள் போன்ற அசுரர்களை வதம் செய்யப் புறப்பட்டவள்.
பெண்களின் காதலையும், கோபத்தையும், மென்மையையும் எழுதிச் சென்ற ஆசிரியர் திடிரென்று பாதை அகன்று பெண்களின் சிலர் செய்யும் ஏமாற்று வேலைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பெருநகர் சர்ப்பம் என்ற கதையில். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் பெண் ஒருத்தி அந்த ஊரைப் பார்த்து வியந்து, தன்னை மெதுவாக அந்நகருக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறாள். கிராமத்துக் காதலனை மறந்து புதுப் புது காதலர்களின் பின் செல்லும் நவ யுகப் பெண்ணாகிப் போகிறாள். அவளுக்கு மாரல்களைப் பற்றிய கவலைகள் இல்லை. அந்த நொடி இன்பமும் அடுத்த கட்டமும் மட்டுமே முக்கியம். இன்பம் தேடுதல் ஆண் சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகையில் ஒரு பெண்ணின் வேட்கையையும் அதற்காக அவள் போடும் வேஷங்களையும் துல்லியமாகச் சித்திரத்துள்ளார் ஆசிரியர்கள். சமீபத்தில் சென்னையில் பரவி வரும் கலாச்சார மாற்றங்களை இக்கதை பதிவு செய்வதோடு இன்றி இளம் பெண்கள் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயமான ஒன் நைட் ஸ்டான்ட் போன்ற கலாச்சார சீரழிவுகளை போகிற போக்கில் இக்கதை விவரித்துச் செல்கிறது. படிப்பவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்லாமல் நடக்கும் சம்பவங்களை புனைவு அதிகமின்றி எழுதிய கதை இதுவாக இருக்கும்.
இத்தொகுப்பின் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு கதை குறளியின் டிராகன். உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்று சிறுவயதில் திருக்குறள் படித்திருப்போம். ஆனால் பலர் படித்ததை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை. அடுத்தவரின் ஏதோவொரு கீழான நிலையைத் தன்னோடு ஒப்புமைப்படுத்தி தன்னை உயர்த்திக் காட்டும் குணம் பலருக்கு உண்டு. அது சாதியாக இருக்கலாம், அழகு, படிப்பு, பொருளாதார நிலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எளியோரைக் கண்டால் நகைக்கும் கொடூர மனம் படைத்தவர்கள் பெருகிவிட்டக்காலக்கட்டம் இது. சாதாரணக் குடும்பத்தில் நான்காவது பெண்ணாகப் பிறந்த நாகாவைக் கண்டால் அவள் அப்பாவுக்குக் கூட பிடிக்காது. காரணம் கருவில் அழிக்க முடியாத அவள்அவள் குள்ளமாக குறுகிய உடலுடன் பிறந்தவள். அழகற்ற அவள் பெரும்பாலும் சக மாணவிகளால் ஒதுக்கப்படுகிறாள். தனிமை அவளுக்கு நிரந்திர துணையாகிறது.அவளுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள் இயற்கையுடன் இயைந்து இருத்தல். மலைகளை, கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பது அவளுக்கு உவப்பான விஷயம். அவ்வப்போது மலைகளுக்கு சென்று வருவாள். மனித சஞ்சாரம் இல்லாத இடங்கள் எல்லாம் அவள் மனதுக்கு நெருக்கமான்வையே. தற்போது அவள் வசிக்கும் வீடும் ஒரு கடற்கரை ஒட்டிய விலாசமான வீடு.அவளுடன் செல்லப்பிராணி ட்ராகன் அங்குள்ளது. நாகாவின் வாழ்க்கையில் நடந்த நம்ப முடியாத அதிசயம் தான் அவள் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அதன் பின் அவளை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை மாறாக பல காதல் கடிதங்கள் அவளுக்குத் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவளுக்கு எதுவும் பொருட்டல்ல, அவளுக்கு தன்னுடைய தனிமையும் டிராகனும் கடலும் மட்டும் போதுமாயிருந்தது. இருப்பதும் இல்லாமல் போவதும் அவரவர் வாங்கி வந்த வரம். நமக்குக் கிடைத்தவற்றில் திருப்தியுடன் வாழ நினைத்தாலும் சமூகம் தன் கூரிய கரங்களால் சீண்டிக் கொண்டே தான் இருக்கும். வலிமையான மாயக் கரம் கொண்டு தான் அதை அடக்க முடியும். உண்மையில் இது சாத்தியமில்லை என்றாலும் புனைவுகளீல் நிகழும் இந்த மாயங்களைப் படிக்கும் போது இப்படி எல்லாம் நிகழாதா எனத் தோன்றுகிறது. அழகிய தேவதைக்கதையொன்றைப் படித்த மகிழ்வு இக்கதை தருகிறது. கேவல் என்ற சிறுகதை மேஜிக்கல் ரியாலிசம் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தை நினைவுப்படுத்தும் கதையாக இருப்பினும் சொல்லப்பட்ட விதம் அருமை. ப்ரியம்வதாவின் பகல் எனும் கதையில் நாயகி தன் பெயரை மறந்து போகிறாள். என்னவெல்லாமோ செய்து பார்த்தும் தன் பெயரே மறக்கும் அளவிற்கு அவள் மனது மறதியில் தோய்ந்து போய்க் கிடக்கிறது. வேறு எந்த உதவியும் இன்றித் தன் பெயரை எப்படியாவது கண்டுபிடிக்க ஆசைபப்டுகிறாள்.அவளுடைய காதலன் அவளுக்கு காதல் குறுஞ்செய்திகள் அனுப்புவது அவளை அழைத்துப் பேசுவது காதலின் அத்தனை ரம்மியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுடைய தற்போதைய ஒரே பிரச்னை இப்படி பெயரற்றவளாக மாறிப் போனதுதான். சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்குத் தேவை, கட்டற்ற சுதந்திரம் அவளை என்னவெல்லாம் செய்துவிடும் என்பதை மறைபொருளாக வைத்து இக்கதையை கத்தியின் மேல் நடப்பது போன்று எழுதியுள்ளார் ஆசிரியர். அவள் எடுக்கும் சில முடிவுகளால் கதையின் முடிவில் தன் பெயரைக் கண்டு அடைகிறாள். அவளுக்கு அவள் பெயர் தெரிந்துவிட்டாலும் வாசிக்கும் வாசகருக்கு அது தெரிவதில்லை. பெயரிலியாகவே அவள் முடிந்து போகிறாள். இக்கதையைப் படிக்கும் போது கவிஞர் பழநிபாரதியின் ஒரு கவிதை தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது.
"மரம்
வானம்
கூடு
இரை
எதுவும் ஒரு பொருட்டில்லை
அதைவிடவும் முக்கியம்
தனிமையின் சுதந்திரமென
பறந்துகொண்டிருக்கிறது
ஒரு பறவை"
வானம்
கூடு
இரை
எதுவும் ஒரு பொருட்டில்லை
அதைவிடவும் முக்கியம்
தனிமையின் சுதந்திரமென
பறந்துகொண்டிருக்கிறது
ஒரு பறவை"
தலைப்பு கதையான ஜூலி யட்சி மீண்டும் ஒரு பழிவாங்கும் கதை. ஆனால் எதிர்ப்பாராத சம்பவங்கள், மாய எதார்த்தவாதக்கதைக் களனில் சொற்சிக்கனத்துடன் பூரணமான ஒரு கதை.
இத்தொகுப்பு முழுவதும் கனவுகளுடனான பயணமாகவேச் சொல்வேன். வனம், மலை, கடல், மழை, ரயில் எனக் கதைகள் மாறி மாறி வெவ்வேறு வெளிகளில் சொல்லப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. அதனினும் சிறப்பு ஐம்பூதங்களைப் பற்றிய குறிப்புடனான சிறுகதை வடிவத்திலான முன்னுரை. சில கதைகள் மின்னி மறைகின்றன. சில கதைகள் தீவிரமான யோசனைக்கு வாசகனை இட்டுச் செல்கின்றன. சில கதைகள் லேசான முறுவலை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படிக்கவும் பத்திரப்படுத்தவும் மீள வாசிக்கவுமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் ஜூலி யட்சி. இவள் அனைவருக்கும் பிரியமானவளாகவே இருப்பாள்.
0 comments:
Post a Comment