Saturday, July 25, 2015

கவிதைகள் மூன்று:

1.குறுநகை

மென்னிறகொன்று மெல்ல படிக்கட்டில்
இறங்குகிறது. அக்கணம் நிகழ்ந்தவை:
ஆழ்ந்த மெளனத்தினுள் இசைக்க துவங்குகிறது
விரலுரசிச் செல்லும் மென்னிறகு.
உடல் மீட்டிய இறகு அசைந்தாடி
இதயத்தின் மேற்பரப்பில் வந்தமர்கிறது.
நீண்ட பாலைவெளியில் தனித்திருக்கும் இறகு
செல்லுமிடமறியாமல் தவித்து இதயத்தின்
கதவருகே பறந்து செல்கிறது.
இதயத்தின் நான்கு அறைக்கதவுகளும்
திறந்துகொண்டு இறகை உள்ளிழுத்துக்கொள்கிறது.
இதயத்தின் மடியில் தலைசாய்த்து வழியும்
விழிநீர் மறந்து பேரானந்தமாய் உறங்குகிறது மென்னிறகு.
மென்னிறகின் விரல்கோர்த்தபடி குறுநகையொன்றை
தவழ்த்தி
யாருக்கோ சொந்தமான அவ்விறகின்
கண்களுக்குள் விழுந்து தொலைகிறது
சிறு இதயம்.
அணைக்க இயலாத வெம்மையில்
தனித்து ஒளிர்கிறது குறுநகையொன்றில்
தன்னை இழந்த ஓர் இதயவத்தி.

2,எதுவுமற்ற கணம்
ஒவ்வொரு பூவாய் நழுவவிட்டபடி
நடந்துகொண்டிருந்தாள் அச்சிறுமி.
பிஞ்சுவிரல்களிலிருந்து நழுவுகின்ற பூக்கள்
காற்றில் தவழ்ந்து தரையில் வீழ்ந்தபடி இருந்தன.
ஊர்ந்து சென்ற ஜோடி எறும்புகள்
அதீத வாசத்தில் திளைத்து பூக்களை
இழுத்துக்கொண்டு சிறுமியின் பின்னால் ஓடின.
கோவிலின் சுற்றுச்சுவரின் அருகே மலர்ந்திருந்த‌
கள்ளிப்பூக்களை எட்டிக்குதித்து பறித்துச் சிலிர்த்தாளவள்.
எறும்புகளும் பூக்கள் தொட‌
யத்தனித்து துள்ளிக்குதித்தன.
மெதுவாய் பொழிந்த மழையில் வானம் பார்த்து
ஆடத்துவங்கினாள் சிறுமி.
மழைத்துளிகளினூடாக பயணித்து வெளியேறி
விளையாடின எறும்புகள்.
வதனத்தில் வழிகின்ற நீரை துடைத்தபடி
வீடு சென்றவளுக்கு பிரியாவிடைகொடுத்து
திரும்பின அந்தச் சிற்றெறும்புகள்.
இக்கவிதையிலிருந்து ஒவ்வொரு சொல்லாய் இக்கணம்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
முழுமைபெறாத சிதைந்ததொரு ஓவியத்தைப்போல்
எறும்புகளாய்
பூக்களாய்
எதுவுமில்லாமல் எதுவுமில்லாமல்.

3.பிரிவென்பதும் ஓர் இலைதான்.
உடலோடு ஒட்டியிருக்கும் அட்டையொன்றை
பிய்த்தெடுக்கும் வலியுடன் செளந்தர்ய நினைவுகளை
பெயர்த்தெடுக்கிறேன்.
கடலைக்கூட கைகட்டி நிற்கவைத்த
தைரியத்திமிர் இக்கணம் நதியொன்றின்
சிற்றலைக்கும் சிலிர்த்தடங்குகிறது.
ஒற்றைச்சிறகுடன் ஓர் பறவை
வானம் நீங்கிச்செல்வதை காண்கிறேன்.
காலத்தின் காலடியில் நாய்க்குட்டியென‌
ஒடுங்குகிறது அற்புத ஆழ்நினைவு.
முத்தமிட்டு சலித்த அறைகளின்
யன்னல்களெங்கும் முளைத்துநிற்கின்றன‌
ஊசிச்செடிகள்.
யாரோ ஒருவனின் கனவுகளில்
எப்போதும் திரிகின்றன ஓடுகளற்ற ஆமைகள்.
செல்லுமிடம் அறியாமல்
மிதந்து மிதந்து கீழ் இறங்குகிறது
பிரிவென்னும் வெதும்ப நிற
உடலற்ற ஓர் இலை.

-நிலாரசிகன்

0 comments: