Sunday, April 14, 2013

மீன்கள் துள்ளும் நிசி - ராணிதிலக் விமர்சனம்


யதார்த்தம் என்கிற புனைகதை கவிதைகள்

ராணிதிலக்


2000க்குப்பிறகான தமிழ்க்கவிதை, முன்பு இருந்த நான் என்கிற, சாதி என்கிற, அடையாளம் என்கிற தன்மையிலிருந்து கொஞ்சம் விலகி இச்சமூகத்தின் மீதான எள்ளலையும், அகத்தின் அசிங்கத்தையும், புனைவையும் முன்வைக்கின்றன.  பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற சொற்கள் இப்போதைய நவீன கவிஞர்களிடம் இல்லாதது சந்தோஷமளிக்கும் ஒன்று. 

கவிதையின் வழியாக அபூர்வ மனச் சலனங்களை உருவாக்குவதும், கவித்வம் மற்றும் அழகியலுக்கு மாற்றாகப் புனைவையும் எதிர் அழகியலை உருவாக்குவதும் இன்றைய தலைமுறையிடம் இருக்கும் வெற்றி.  இன்றைய காலகட்டத்தில், நவீன மரபைக் கேள்விக்குறியாக்கும் கவிதைகளை நாம் இசை, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சபரிநாதன், ஸ்ரீசங்கர் மற்றும் பலரிடம் காண்கிறோம்.

இன்றைய நவீன கவிஞர்கள் வளர்த்திருக்கும் நவீன கவிதை மரபை ஒட்டியும் வேறுபட்டும் தற்பொழுது குறைந்தபட்சம் 20 கவிதைத்தொகுதிகளாவது, இந்த வருடம் வந்திருக்கலாம் என்பது என் அனுமானம். இதில் குறைந்தபட்சம் பெரும்பான்மை கவிதைகளை நான் வாசித்துவிட்டேன் என்பதைவிட, மற்றதை எப்போது வாசிக்கப்போகிறேன் என்பது கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வெவ்வேறு உலகத்தைச் சொல்பதாக இருப்பதால்தான்.

வெவ்வேறு விதமாகச் சொல்வது என்பதைவிட, வெவ்வேறு வித உலகத்தை மொழிந்து, வெவ்வேறு விதமான வகைமைகளை உருவாக்கிவிடுகின்றன இத்தொகுதிகள்.  இந்த வகைமையில் புதிய தொகுப்புகளில், தீம் பொயம்ஸ் என்கிற அடிப்படையில் வா.மணிகண்டன் மற்றும் நிலாரசிகன் தொகுப்புகள் வேறுபட்டு அமைந்திருக்கின்றன.  இந்த இரண்டு தொகுப்பும் ஓரே தன்மையில் உருவாகியன என்பதை வாசிப்பின் பிறகு அறிந்துகொண்டேன். இவற்றில் மீன்கள் துள்ளும் நிசி  எனும் நிலாரசிகன் தொகுப்பைப் பற்றி இப்போது பேசலாம்.

கனவு, கற்பனை, புனைவு என்கிற தளத்தில் இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.  வெறுமையாகக் கனவும் கற்பனையும் புனைவும் அமையாமல், அவை உருவாகும் பின்னணி சொல்லப்பட்டிருக்கிறது. மழைவழிப்பயணம், இலை, திமிர்நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், கடலாடும் தாழி, ஒளிவடிவ துயரம், நகரம் ஆகிய கவிதைகளை வாசித்தவர்கள் இதை உணர்ந்துவிடலாம்.  அன்பும், துயரமும், வாலிபமும், கொல்லுதலும் முத்த உறவும் இக்கவிதை கற்பனைத் தளத்திலிருந்து உரையாடும் தளத்திற்கு அழைத்துவிடுகின்றன. இத்தொகுதியின் பெரும்பான்மை கவிதைகள் கற்பனை என்னும் கோட்டையால், அதன் பின்னணியில் உருவானவை.  அதில் சில கோட்டைகள்  நன்றாக எழுந்தும், சிலது சிதிலமாகவும், சிலது எழாமலும் அமைந்திடுவது இயல்பான ஒன்றே. 

      அங்குமிங்கும் அலைவுறும்
      இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித் தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையைத் தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள். 
அசைவற்று நின்றது இலை.     (இலை, ப.2)

என்ற  இக்கவிதையில், அசைவற்று நின்றது இலை என்கிற கற்பனை, ருதுவாகும் போது அவள் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து விடுபடுவதால், இலை அவளிடம் இருந்து விடுபடுகிறது நிற்கிறது என்பதும், இன்னொரு பார்வையில் இலையானது ருதுவானவளிடம் விளையாட முடியாது என்பதும் இக்கவிதையில் தெரிகிறது. ஏற்கெனவே நான் சொன்ன கவிதைகளும் இந்த உலகத்தில் அமையும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு கற்பனை என்பதை வெறும் கற்பனையாக அமையாமல், ஒன்றிலிருந்து விடுபட்டு மற்றொன்றில் மாறி அமரும் ஆசுவாசமாகப்படுகிறது.  இல்லையேல் தனியாக இல்லாமல் ஒவ்வொன்றும் தானாக மாறும் மனோநிலையும் இருப்பில் வாழ்கிறது. இத்தகைய மனோநிலையை உடைய கவிதையை வாசிப்போம்.

      தென்னை  மரத்தடியில் இதுவரை
நான்கு நாய்க்குட்டிகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.
அவை எதனால் இறந்தன
என்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்
பின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.
நோய்மை முற்றிய நிலையிலும்,
சர்ப்பம் தீண்டியும்,
வாகனமொன்றின் அடியில்
தலை நசுங்கியும் 
இறந்துபோயின முதல் மூன்றும். 
துடிக்க துடிக்க  வளர்ப்பு அணிலை
கொன்றதால் நான்காவது
நாய்க்குட்டியை கொன்று வீசியது
இயற்கை. 
நான் அணில்.
நான் நாய்க்குட்டி.
நான் இயற்கை.
                              (திமிர் நாய்க்குட்டிகள், ப.4)
இந்த கவிதையில் கொல்வது சாத்வீகமானது அல்ல என்றானபோது, கொல்லப்படுவதும் கொல்வதும் ஒரே மனமாக, மாறும் மனமாக மாறிவிடுவதை நாம் உணர்கிறோம்.  இதுபோன்று ஒன்றிலிருந்து ஒன்று பிரியும் (மழையில் நனையும் வயலின், இசைதல்) கவிதைகளும், ஒன்றிலிருந்து ஒன்று பிரியாமல் அமையும் (அசைவு, தருணம், வதை, சொற்பறவை, நட்சத்திராவின் வானம்) கவிதைகளும் இவற்றிடைக்கிடையே வாழ்கின்றன.

இத்தன்மையான கவிதைகளைத் தவிர்த்து ஜூலி பற்றிய கவிதைகளும், நட்சத்திரா பற்றிய கவிதைகளும் ஒரு தனி அனுபவச் சித்திரமாக உருவாகியுள்ளன. கலாப்ரியாவின் சசி, கண்டராதித்தனின் நித்யா, வா.மணிகண்டனின் ப்ரணிதா என்பதுபோல, அவர் ஜூலியையும் நட்சத்திராவையும் உருவாக்கியிருக்கலாம். ஜூலி காமத்தையும் காதலையும் பொழிபவளாகவும், நட்சத்திரா தனக்குள் வானத்தைப் பெற்றவளாகவும் விளங்குகிறார்கள்.  ஜூலியின் உடலும் முத்தமும் பல்வேறு கவிதைகளில் தொடர்ந்து பேசுகின்றன. 

மரவண்டுகளிட்ட துளைக்குள்   
தன் மார்புகளை பொருத்திக் கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத் துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுகப் பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச் சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.   (ஜூலி என்ற முடிவிலி, ப.52)

முத்தங்கள் பற்றிய கவிதைகளில் முத்தமானது உப்புக் கடலாகவும், சிறுபருவத்தை எய்த உதவும் காரணியாகவும், உடலைப் புசித்துப் பசியாறும் தேளாகவும், பேரன்புடையதாகவும், முத்தமாக மாறிவிடுவதும், சர்ப்ப குட்டிகளாகவும், முடிவிலியாகவும், குருதி சுவைப்பதாகவும் வாழ்கின்றது. இம்முத்தங்கள் ஒரே குரலில் அமையாமல், காமமாகவும், பரிதவிப்பாகவும், ஏமாற்றமாகவும் உணர்வுநிலையில் பேசப்படுகின்றன.  முத்தக் கவிதைகளில் கடலாடும் தாழி என்னும் கவிதை மிக முக்கியமானது. 

முத்தம் என்கிற பொதுவகைப்பாடில் கடந்து  மனித வாழ்வைக்குறித்த கவிதைகளும் இதில் உண்டு. நகரம் என்ற கவிதையும், அசைவு என்ற கவிதையும் இருப்பு குறித்த வெவ்வேறு பார்வை கொண்டவை. நகரத்தில் வாழ்பவன் இறந்த பூனையை வாசனைத்திரவியம் தடவி, அதைக் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டியில் போடுவது என்பதும், மிதக்கும் மேகங்களையும் நீரில் நடனமிடும் இலைகளையும், புழுவை உண்டு துடிக்கும் மீன்களையும் ஒரு சேர பார்க்கும் துறவிகள் வெவ்வேறு திசையை நோக்கி அசைவும் அசைவின்மையுடனும் செல்வது என்பதும் வெவ்வேறு பார்வைதானே. மற்றும்,


நிலாரசிகனின் கவிதைசொல்முறைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துவிடுகின்றன. மிகத் தெளிவான, விளக்கமான உரையாடலை நிகழ்த்துகிறார். மொழி என்னும்பட்சத்தில், ஒரு கவிதையை எடுத்துரைப்பதற்குத் தேவையான சொற்களை அவர் எழுதியிருக்கிறார்.அபூர்வமான மொழியோ (ஞாளி என்ற சொல் மட்டும் விதிவிலக்கு), சிக்கலான படிமங்களோ இத்தொகுதியில் இல்லை என்பது வெளிப்படை.  ஒரு கவிதை வாசகனைச் சென்று அடைவதற்கான வழியை அவர் தெளிவாக உருவாக்கியுள்ளார் என்பதை நாம் மறுக்கமுடியாது.

என்றாலும், எல்லா கவிஞர்களுக்கும் தெரியாமல் அமையும் நடை இதில் உள்ளது. அதாவது, அவர் கவிதைகயில் இடையே என்னும் சொல் அதிகமாகப் பயில்வது என்பது  கவனமாக ஒரு பிரதியை உருவாக்குதல் என்கிற உத்தியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.  அல்லது இந்தப் போலச் செய்தல் என்கிற செயல் அதில் தெரிந்த அடையாளமாகிறது.  யுவதியிலிருந்து பேரிளம்பெண்ணுக்கும் இடையே, ஒருசொல்லுக்கும் மறு சொல்லுக்கும் இடையே, நம் உறவின் நடுவே, முதுமைக்கும் பால்யத்திற்கும் இடையே, சொர்க்கம் நரகம் இரண்டிற்கும் இடையே, இறந்தகாலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே, அழகின்மையும் அழகிற்கும் நடுவே, அசைவுக்கும் அசைவின்மைக்கும் இடையே என்று பல கவிதைகளில் சொல்முறையாக வருவது தவிர்க்கமுடியாது என்றாலும், தவிர்ப்பது நலம்.

இந்தத் தொகுதி கீழ்க்கண்ட விடயங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவை-

1.       கவிதை என்பது தனிமனிதனின் அகத்தையோ, அவனின் சுயபுலம்பல்களையோ, இழந்தவற்றையோ சொல்லத் தேவையில்லை.

2.       பழைய மற்றும் புதிய தத்துவத்தை உருவாக்கவேண்டிய அவசியம் அதில் இல்லை.

3.       கவிதை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் அதிகாரத்தைக் கேள்விக்கேட்பதற்காகவும் இல்லை.

4.       தன்னை சாதி, இன, மத, நாடு என்கிற அடையாளப்படுத்தவும் அமையாது.

5.       எழுதுதல் என்ற செயல்பாட்டில், அதாவது தூரிகை தானாகவே வரைகிறது என்பதுபோல், ஒரு கற்பனை அல்லது கனவைக் கொண்டு கவிதையை வரைந்துவிடலாம்.

இந்த விடயங்களைக் கடந்து,  அவர் கவிதைகள் எதை முன்னிறுத்துகின்றன என்று கேட்கலாம்.  அவர் கவிதைகள் கற்பனை அனுபவத்தின் வழியாக அந்தரங்களைக் கூறுகிறது.  கற்பனை வழியாக இன்னொரு உலகத்தை கற்பனை செய்து மகிழ்கிறது.  யதார்த்தம் என்ற பதத்தில் உள்ள கற்பனை என்கிற மாபெரும் வித்தையை வரவேற்கிறது. இத்தொகுதியின் ஓரே எண்ணம் கற்பனை..கனவு...கற்பனை..கனவு என்பதுதான். அதன் உரையாடல் என்பதும் கற்பனைக்குள்,  கனவுக்குள் வாழும் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள நகரம் என்கிற கவிதை நமக்குப் போதுமானது. 

ஒருவித கற்பனைக் குரலில் மட்டும் கவிதைகளை அமைத்து எழுதுவது (அதாவது புனைவு) என்பது, இன்னொரு தளத்திற்குக் கவிதை செல்லமுடியாத நிலை ஏற்படும் என்பதை  நிலாரசிகன் புரிந்துகொள்ளவேண்டும். இந்த தன்மை தீம் பொயம்களுக்கு அமைந்துவிடுகிறது என்பதால் அவ்வளவு நல்லதல்ல.

நிலாரசிகன் கவிதைகளை வாசிப்பவர்கள் ஒரு கட்டத்தில் அதில் துய்த்தாலும், (அவர் கனவும் கற்பனையும் அபாரமானது என்பது வேறு), அக்கவிதைகளில் எவ்வளவு காலத்திற்குச் சலனங்களைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதைச் சொல்லமுடியுமா? என்றால் சொல்லமுடியாது. கற்பனைவாத, கனவுவாத இயக்கமும் எழுத்தும் கலையும் காலமாகி நூற்றாண்டு ஆகிவிட்டதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். திரும்பத திரும்ப கூறுதல் என்கிற தொனி கவிதையின் நவீனத்தைக் குறைத்துவிடும் என்பது என் நம்பிக்கை.

இத்தொகுதியில் உள்ள இலை, திமிர் நாய்க்குட்டிகள், நிழல்களுடன் பேசுபவன், தருணம், நகரம், அழகன் கழுதை சரித்திரம், இசைதல், நடசத்திராவின் வானம், மழையில் நனையும் வயலின், அனைத்தும் நின்றுவிட்ட நாளில் ஆகிய கவிதைகளைப்போன்று, அவரால் மிகச் சிறந்த கவிதைகளை எதிர்காலத்தில் எழுதிவிடமுடியும். 
இனிமேல் அவர் பயணப்படவேண்டிய திசை என்பது, தீம் பொயம்களில் இருந்து விலகி, வாழ்வின் சாரம்சத்தை நோக்குவதுதான்.  புனைவுதான் கவிதை, வாழ்வின் சாராம்சமும் அனுபவமும் கவிதையாகாது என்று சொன்னால், நகரம் என்ற  கவிதையை ஏன் எழுதினார்? என்பதை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும்.  நகரம் என்கிற கவிதையைத் தயவுசெய்து வாசித்துப்பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளில் சுற்றுவதற்கு
முன் பழைய தினசரிகளில்
ஒரு சுற்று சுற்றிடவேண்டும்.
பிறகு பிளாஸ்டிக்.
அதன் பிறகு உபயோகப்படுத்தாத
அல்லது மிச்சமிருக்கும்
சில துளி வாசனைத் திரவியத்தை
தெளிக்கலாம்.
வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து
குடியிருப்புவாசிகள் அறிந்திடாமல்
தெருவில் இறங்கி நடக்கவேண்டும். 
பச்சை நிறத்தில் வாய்பிளந்து நிற்கும்
குப்பைத் தொட்டியில் ஒன்றும்
நடந்துவிடாத பாவனையில் எறிந்துவிட்டு
நகர்ந்துவிட வேண்டும்.
செல்லப் பூனை என்றாலும். (நகரம், ப.17)

கற்பனைதான் கவிதை என்று இந்தக் கவிதையை நம்மால் நீக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த அனுபவம் நம்மில் இருப்பது. இந்த வாழ்வு நம்மில் இருப்பது. இந்த யதார்த்தம் நம்மால் ஆனது.  நீக்கமுடியுமா? சொல்லுங்கள்.

யதார்த்தத்தை பெரும்பான்மையாக மறுத்து கற்பனையையும் கனவையும் ஆதாரமாகக் கொண்ட இத்தொகுதி, முழுக்க முழுக்க ஒரு சுகத்தைத் தருவதை என்னால் மறுக்க இயலாது. இது ஒரு வாசிப்பு அல்லது ஆழ்ந்த கற்பனை அனுபவம். இவ்வனுபவத்தை இத்தொகுதியில் மட்டுமே பெறமுடியும் என்பதும் நிஜம். அது கற்பனையல்ல. 


(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து – மு.ப.2012 - ரூ.60)

Thursday, April 11, 2013

குடுவையிலிருந்து வெளி கிளம்பி நிசி முழுக்க துள்ளி நிறையும் மீன்கள்


Thanks :  http://thenpakirvukal.blogspot.in/2013/04/blog-post.html

நவீனம், புதுமை இந்த இரண்டு வார்த்தைக்கும் ஏறக்குறைய வித்தியாசம் அதிகம் இல்லையென்றாலும் உபயோகப்படுத்தும் இடம் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கிறது இன்றளவும். புதுமை என்பது ஒரு சாத்தியமாதலுக்கான உருவமாகவும், நவீனம் என்பது ஒரு நிகழ்ச்சி சாத்தியமாதல் சாத்தியமா என்றதான ஒரு விளிம்பில் நிற்கும் உருவமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீன்கள் துள்ளும் நிசி முழுதும் இவ்விரண்டு வகையின் உருவத்திற்கான விதைகள் கவிதைகள் வழி நிறைய தூவப்பட்டிருக்கின்றன.


எப்பொழுதானாலும் நம்மில் இரண்டில் ஒருவருக்கு கனவுருப்புனைவு எனும் ஒற்றை சொல்லை ஒவ்வொரு உருவத்திலும் தேடும் நிலை நிரந்தரமாக மனதில் உச்சியேறி அமர்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையில்லை. அத்தகையான தனி உலகங்களுக்கு கனவுருப்புனைவு மூலம் நம்மை விரல் பிடித்து அழைத்துச் சென்று நம்மையே வாழ் வைத்து ரசிக்க விடுகிறார் நிலாரசிகன். புதுமை, நவீனம் என்னும் இவ்விரு சொற்களின் கொக்கியை மிக நீண்ட வளையமாக நமக்கு வளைத்துத் தரும், நாம் காணும் நவீன கவிஞர்களுள் சமீப காலமாக நிலாரசிகன் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறார். இந்த 'மீன்கள் துள்ளும் நிசி' தொகுப்பு அவரின் நவீன கவிதை வரிசையில் 'வெயில் தின்ற மழை' தொகுப்புக்கு அடுத்தபடி வெளிவந்துள்ள இரண்டாமது தொகுப்பு.

சமீபமாக நவீன கவிதைகள் வரிசையில், கவிதை புத்தகங்களின் எண்ணிக்கை சற்று கூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக மனதில் படிந்து விட்டது. ஒவ்வொரு கவிதை நூலும் ஒவ்வொரு விதமான உலகை நமக்கு அறிமுகம் செய்து விடுகிறது. இந்த தொகுப்பிலும் அப்படியான ஒரு உலகின் கூறுகளையும், உலகின் மையத்தில் புனைபாத்திரங்களையும் உலவ விட்டு உலகின் விளிம்பில் நம் ரசனையை சிறகடித்து பறக்க விடுகிறார் நிலாரசிகன். காலங்களை நிற்க செய்வதும், காலங்களூடே பின்னோக்கி பயணிப்பதும், காலத்தையே கொஞ்சம் முன்னோக்கி உருள விடுவதும் மிக இலகுவாக வாய்த்து விடுகிறது இவருக்கு. உதாரணமாக, இத்தொகுதியின் முதற்கவிதையே சற்று நம்மைக் காலத்தோடு விளையாட வைக்கிறது.

மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.

ஒரு நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு நூற்றாண்டிற்கு மழையின் வழி ஒரு சிறுமி, ஒரு நாய்க்குட்டி, ஒரு குடுவை மீன் பயணித்து வருவதாய் சொல்லி, அதுவும் அவர்கள் அழுக்கற்ற அன்பைத் தேடி பயணிப்பதாயும் சொல்லி இறுதியில் நம்மையும் நம் ஒரு வகையில் தவற விட வைத்து விடுகிறது காலம். காலங்கள் மட்டுமா விளையாட அழைக்கிறது!! நிலமும் பருவமும் கூட நம்மை விளையாட அழைக்கத்தான் செய்கின்றன. ஒரு பாலை நிலத்தில் உருவாகும் மழைக்குப் பின்னுள்ள ஒரு சிறிய கதை புனைந்த ஆளுமையைக் காண பிரமிப்பாக உள்ளது.

முதல் துளி

சைக்கிளின் முன் இருக்கையிலிருந்து
கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
வருகிறாள் சிறுமி.
மரங்களின் மொழியை அவளுடன்
பயணிக்கும் தட்டான்களுக்கு கற்றுத்தருகிறாள்.
அவளிடம் கற்ற மொழியுடன்
மரத்தின் இலையில் அமர்கின்ற
தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
நகரும் வெயில் மரமொழியை
கற்றுக்கொண்டு மறைந்து போகிறது.
கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
முளைக்கும் மரக்கன்று
சிறுமியின் மொழியில் தலையசைத்து
தலையசைத்து பேசத் துவங்குகிறது
பாலையின் முதல் துளியிடம்.

சிறுமி - மரங்கள் - தட்டான் - வெயில் - பாலை - துளி, இச்சொற்களுக்குள் பயணிக்கும் பொழுது யதார்த்தமான ஒரு நிகழ்கால தேவை புரிகிறது. நிச்சயமாக நிதர்சனமான உண்மைதான். ஆனால் அதை புனைந்த விதம் சிறுமியின் மொழி கொண்டு அதைக் கோர்த்த புதுமைதான் அக்கவிதையின் சாராம்சத்தை வெகு நேரமாய் நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு உட்படுத்துகிறது. இந்த கவிதையில் தெள்ளத்தெளிவாகத் தெரியும், இத்தொகுதிக் கவிதைகளின் புனைவுகளின் மறைவில் கொஞ்சம் யதார்த்தமான சுற்றுப் புரிதலும் இருக்குமென்பது. அதற்கு இன்னுமொரு உதாரணம் - நகரம் என்னும் பதினேழாவது கவிதை, அக்கவிதையைப் பற்றி ஏதும் கூறாது அவரவர் மனதிற்குள் அதைச் செலுத்திப் பார்த்தல் நல்லதென்பதாக உணர்கிறேன் நான்.

இன்னுமொரு கோணத்திற்குச் செல்வோம், கீழே குறிக்க பெற்றிருக்கும் கவிதையில், இப்படியொரு புனைவை இத்தகையானதொரு தருணத்திற்கு ஈடாகச் சொல்ல முடியுமாவென மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து முடியும் நொடிகளில், அந்த பெண் என்ன அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை மிக ஆழமாக நம்மால் உணர முடிந்தால் இக்கவிதை அதன் பாதையில் தெளிவாக முன்னேறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்

உடலுக்குள் பயணிக்கும் கப்பல்

மடித்துக்கட்டியிருக்கும் காவி நிற
உடையில் வியர்வை பூக்க ஆரம்பித்தபோது
கைகளில் வைத்திருந்த கிளி பொம்மையை
இறுக பற்றிக்கொள்கிறாள்.
இறுக்கம் தாளாத கிளி
தன் தலையை விடுவிக்க முயன்று
அங்குமிங்கும் அசைக்கிறது.
கிளியின் கழுத்திலாடும் சிறுமணியில்
ஒன்று சப்தமின்றி விழுந்து சிதறிய
கணம்
அவளுடலை திறந்து உள்நுழைகிறது
கருமை நிற கடல்.
அங்கே,
நீரைக் கிழித்து பயணிக்கும் கப்பலின்
நிழலில் மிதந்துகொண்டிருக்கிறது
கிளியின் சடலம்.

முக்கியமாக ஜூலி கவிதைகளைப் பற்றி நினைப்பதானால், கொஞ்சம் ஆழ்ந்த மனமும் ஆரத்தழுவும் விழிகளும் நிச்சயம் தேவையாகின்றன. ஒவ்வொரு ஜூலி கவிதையும் நம்மை ஒவ்வொரு உலகுக்கு ஒசை படாமல் துரத்தி மெல்ல தனிமையில் விட்டு சிரிக்கிறது பின்புறம் நின்று. ஓர் ஆழ்ந்த தருணத்தில் சொற்கள் மிகுந்திருக்கும் நாளில் மெலிதாய் விரல்களோடலாம் ஜூலி கவிதைகளில். நட்சத்திரா வண்ணவண்ணமாய் மனம் முழுக்க நிறைந்து விடுகிறாள், ஜுலியுடன் கைகோர்க்கும் நம் விரல் பிடித்து அவளுன் நடக்கத் துவங்கி விடுகிறாள், அவள் கடந்து வந்த பாதையை மிக மெலிதான குரலில் நம் காதுகளில் வெகு இயல்பாக பாட ஆரம்பித்து விடுகிறாள்.

நட்சத்திராவின் வானம்

கைகள் நிறைய பூக்களுடன் நின்றிருந்தாள்
நட்சத்திரா.
கதவு திறந்து உள் அழைத்தேன்.
சிறு சிறு பூக்களால் அறை நிரப்பினாள்.
பின்,
விரல்கோர்த்துக்கொண்டு
மடியிலமர்ந்து கதைகள் ரசித்தாள்.
அனைத்து கதைகளிலும் பறவைகளே
அவளை அதிகம் கவர்ந்தன.
விடைபெறும் தருணம்
அவளிடம் வானமும்
என்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன.

பொம்மையாதல் கவிதையை விட தெளிவாக ஒரு குழந்தையின் வனப்பு மிகுந்த வாழ்வை எப்படி சொல்லி விட முடியும்? அச்சு அசல் நம் கண் முன் வந்து போகின்றனர் தெய்வங்கள் சில நொடிகள், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை அப்படியே நிலைத்து விடுகிறது நம் கண்களில். இன்னும் பல கவிதைகள் - மார்புக்காலம், கதை சொல்லி, முத்தவடிவினள், சாவுக்குருவி, நதிக்கரையில் நீந்தும் சிறுமீன், அழகன் கழுதை சரித்திரம் என பல கவிதைகள், மனம் முழுக்க நம் எண்ணச்சிறகுகளை வெகு உயரத்தில் படபடக்க வைக்கின்றன.

புத்தகத்தில் சில தவறுகளையும் காண நேர்ந்தது, ஒன்று நடுநிலைத்திணை என்னும் கவிதை இரு முறை ஆறாவதாக ஒரு முறையும் இருபத்தி ஐந்தாக ஒரு முறையும் பதிவாகி இருக்கிறது. அடுத்து இருபத்தி ஆறாம் கவிதைக்கும் இருபத்தி ஏழாம் கவிதைக்கும் தொடர்ச்சி விடும்படியாக அமைந்துள்ளது. இது எனக்கு மட்டும் வந்த ஒரு புத்தகத்திலா? இல்லை முதல் பதிப்பு அனைத்து புத்தகங்களும் இப்படியா என நான் அறியேன்.

படித்து முடித்த தருணத்தில் யதார்த்தத்தை மீறிய ஒரு சுகம் முழுக்க முழுக்க நனைத்திருப்பதை உணராமல் இருக்க முடிவதில்லை. மிக அருமையான தொகுதியை படித்த ஒரு திருப்தியுடன் மூடி வைக்கலாம் புத்தகத்தை. இலகுவாய் பிரிந்து விட இயலாது புனையப்பட்ட உலகங்கள். மெல்ல மெல்ல அந்த உலகங்களுக்குள் சிறிது காலம் இருக்க வேண்டி வரும், இருப்பின் சுகம் உணர அவ்வுலகங்களில் படபடக்கத் துவங்கி விடும் கற்பனை சிறகுகள்.

(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து பதிப்பகம் – முதல் பதிப்பு டிசம்பர் 2012 - ரூ.60)

[தேனு [ thenuthen@gmail.com]]

Thursday, April 04, 2013

கவிதைகள் ஐந்து

1.தனியனின் உலகம்

திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே
வருகையில் அவன் அழுததை
யாரும் கவனிக்கவில்லை.
கொஞ்சமாய் அவனுக்கு அந்த
புதுமுக நடிகையை பிடித்திருந்தது.
அவளுடன் பேசவும் தோன்றியிருக்கலாம்.
எதிரே இருந்த பெட்டிக்கடையில்
தொங்குகின்ற வாரயிதழின் அட்டையில்
சிரித்துக்கொண்டிருப்பவளை கண்டான்.
கண்கள் உருட்டி தலைசாய்த்து
அவள் தோன்றும் காட்சி மீண்டும் மீண்டும்
மனதின் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கம் வரை
ஓடிக்கொண்டே இருந்தது.
பிடித்த பாடலொன்றை முணுமுணுத்தபடி
அறை நோக்கி நடக்க துவங்கினான்.
கடந்து செல்லும் வாகனங்கள்
அனைத்திலிருந்தும் அவள் எட்டிப்பார்ப்பதாய்
எண்ணிக்கொண்டு பேரானந்தத்துடன்
அறைக்குள் நுழைந்து உடை மாற்றினான்.
அவள் யாரைப்போலுமில்லை என்பது
ஆசுவாசம் தந்தது.
அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துப்பார்த்தான்.
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
மீண்டும் ஒரு முத்தம்.
விடியலில் அறையெங்கும் சிதறிக்கிடக்கும்
முத்தத்தின் மேல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்
அந்த நாற்பத்தி ஏழு வயது தனியன்.


2.அப்புக்குட்டன் துபாய்க்கு போகிறான்

தேரிக்காட்டில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்
பதின்ம வயது சிறுவர்கள்.
பட்டத்திலொன்று அறுந்து காற்றின் வேகத்தில்
மிக வேகமாய் திசைதப்பியது.
அறுந்த பட்டத்தை பிடிக்க நான்கு கால்கள்
ஓடிய கணத்தில் மேலும் இரண்டு கால்கள்
அந்த ஓட்டத்தை முந்திச்சென்றன.
ஆம் அப்புக்குட்டனின் அறிமுகம்
இப்படித்தான் ஆரம்பம்.
பனை மரத்தில் சிக்கிய பட்டத்தை கிழிந்துவிடாமல்
மெதுவாய் எடுத்து வெற்றிச்சிரிப்புடன்
இறங்க துவங்கியபொழுதுதான் முதன்முதலாய்
அந்த விமானத்தை பார்த்தான் அப்புக்குட்டன்.
அன்றிலிருந்து மூன்று நாட்களாய்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
அலைந்தவனை அவனது
நாய்க்குட்டிகள் பயத்துடன் பார்த்தன.
தன் பத்தொன்பதாவது வயதின்
இரவொன்றில்
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
பயணித்தவர்களில் இவனும் ஒருவன்.
மீனம்பாக்கத்தில் இரண்டு நாட்கள்
சட்டை கிழிந்த பைத்தியக்காரனுடனும்
மஞ்சள் கறை பற்களுடன் சிரிக்கும்
பிச்சைக்காரனுடனும் சுற்றிக்கொண்டு
தலைமீது கடக்கும் உலோக பறவைகளை
ரசித்து லயித்து திரிந்தான்.
கிழவியின் பாம்படம் முதல் கிழவரின்
வெள்ளி அரைக்கொடி வரை விற்ற பணத்தில்
துபாய்க்கு போகும் டிக்கெட்டை இவன்
கைகளில் திணித்தார்கள்.
மந்திரித்து விட்டவனாய் மின்சார ரயிலில்
சுற்றியவன் கடவுச்சீட்டை
தொலைத்ததும்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
புலம்பித்திரிந்ததும் அப்புக்குட்டனின்
கறுப்புச் சரித்திரத்தின் தரித்திரபக்கங்கள்
என்பதால் இத்துடன் அப்புக்குட்டனின்
விமானக்கனவு முற்றுப்பெறுகிறது


3.முகநூல் காதல் அல்லது கருமம்

எதையோ அவனது கண்கள்
மிக வேகமாய் தேடுகின்றன.
குழந்தையொன்றின் புகைப்படத்தை கடந்து
அன்று வெளியான திரைப்படத்திற்கான
விமர்சனத்தை விரைவாக வாசித்து
நகர்கின்றன.
சிறுபெட்டியில் முகமன் சொல்லும்
சினேகிதனை மறுதலித்து மேலிருந்து
கீழ்நோக்கி நகருமவன் எதைத் தேடுகிறோம்
என்பதை அறியாதவனாய் இருக்கிறான்.
பின்னிரவு வரை தேடி ஒன்றும் கிடைக்காத
விரக்தியில் மீண்டும் மேலிருந்து துவங்குகிறான்.
ஒரு புன்னகையுடன் எட்டாயிரம் மைலுக்கு
அப்பால் அவனது பதற்றத்தை உணர்ந்துகொள்ளுமவள்
வேறு ஒருவனின் காதல் குறித்த
நிலைத்தகவலுக்கு விருப்பம் தெரிவிக்கிறாள்.
முகமற்றவளை முகநூலில் அதீதமாய்
நேசித்தவன் உடைந்தழுகிறான்.
இரவு தன் கணித்திரையின் கண்களால்
அவனை உற்று நோக்குகிறது.
யாருமற்ற அந்த அறையில் அவனது
கைகள் எதையோ
மிக வேகமாய் தேடத் துவங்குகின்றன.


4.ஒரு நகரவாசியின் ஞாயிற்றுக்கிழமை மதியப்பொழுது

திடீரென்று கதவு தட்டப்படும்
ஓசை கேட்டவுடன் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உச்சிவெய்யிலிலும் தேநீர் தயாரித்தும்
முறுக்கு அல்லது சிப்ஸ் கொஞ்சமும்
எடுத்துவைக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதாம் கால செய்தி முதல்
அடுத்த தெரு பசு, கன்று ஈனியது வரையிலான
உரையாடல்களை புன்னகையுடன் கவனிக்கவும் வேண்டும்.
மதிய தூக்கத்திற்கான கொட்டாவியை
கெட்ட ஆவிகளென துரத்திவிடல் நன்று.
திருட்டுத்தனமாக கடிகாரத்தை இரண்டு
நிமிடங்களுக்கு ஒருமுறை பார்க்கவும்
பயின்றிருத்தல் அவசியம்.
நான்கு அல்லது ஐந்து மணியைக் கடந்தும்
வெளியேறவில்லையெனில்
உங்களது இருசக்கர வாகனத்தை
எடுத்துக்கொண்டு கடற்கரை அல்லது
பூங்காவிற்கு சென்று விடல் உத்தமம்.
காய்ந்த ரோஜாவொன்றை கையில்வைத்துக்கொண்டு
புதிய காதலையோ அல்லது
தொலைந்து போன இருபத்தி ஏழாவது
காதலையோ தேடி அலையலாம்.
எதுவும் அமையாத துக்கத்தில்
இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புகையில்
வாசற்படியில் செருப்புகள் கிடப்பின்
அதிலொன்றை எடுத்து
தலையில் அடித்துக் கொண்டு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
உங்களது விருந்தினருக்கு ஒரு
ஏக்கப் புன்னகையை பரிசளிக்கவும்
தெரிந்திருந்தால் உங்களுக்கு
நகரவாசி என்று பெயர்.


5.அங்காடிக் கண்கள்

கண்ணாடிக்கதவை திறந்தவுடன் உடல்தொடும்
குளிர்காற்றை ஒரு கணம் கண்கள் மூடி
ரசித்து உள்ளே ஓடுகிறது குழந்தை.
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்
ஒவ்வொன்றையும் எடுத்துவிடும் வேகத்துடன்
கை நீட்டுகிறது.
குழந்தைக்கு பின் ஓடும் இளம் தாய்
அழகான கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருக்கிறாள்.
அவள் உடையிலிருக்கும் சின்னஞ்சிறு
பூக்கள் குழந்தையையும் அந்த பெரிய
அங்காடியின் பொருட்களையும் ஆச்சர்யத்துடன்
பார்த்துக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன.
நான்
குழந்தையின் கண்கள் வழியே
பொருட்களையும்
பொருட்களின் கண்கள் வழியே
பூக்களையும்
பூக்களின் கண்கள் வழியே
அந்தப் பெரும் அங்காடியையும்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
இளம் தாயின் கண்கள்
யாரும் இல்லா மூலையொன்றில்
படபடத்த கணம்
என் டிஜிட்டல் கண்களில் மிக
அழகாய் நிரந்தர பதிவானாள்.
 



  -நிலாரசிகன்.

Monday, March 11, 2013

கவிதைகள் ஆறு

1.பதினெட்டாவது தளத்திலிருந்து குதிப்பவன்

வானில் தன் தலையை உரசியபடி நிற்கும்
இந்த பெரும் கட்டிடத்தில் நேற்று அதிகாலை
நான்கு முப்பதுக்கு அவன் நுழைந்தபோது
ஆழ்ந்த அமைதி நிலவியது.
ஏழாவது தளத்தில் என்பது மட்டுமே
அவன் அறிந்திருந்தான்.
அந்த அதிகாலை குறுஞ்செய்தியில்
வேறெதுவுமில்லை.
ஒவ்வொரு அறையின் முன்பும்
இரண்டு நொடிகள் நின்று, நகர்ந்தான்.
சட்டை நனைத்திருக்கும் வியர்வையில்
மெல்லியதாய் நடுங்கிய உடலை
திடப்படுத்திக்கொண்டான்.
ஏழாவது தளத்தின் எந்தவொரு அறையும்
திறக்கப்படவில்லை.
ஐந்து நாற்பதுக்கு அறை எண்
ஏழுநூற்றி இருபதிலிருந்து வெளிப்பட்டவள்
கறுப்பு நிற உடை அணிந்திருந்தாள்.
ஆறு மணிக்கு சிவப்பு நிறமான
உடை அருகே அமர்ந்திருந்தான்.
ஆறு முப்பதுக்கு பதினெட்டாவது தளத்திற்கு
வந்தவன் இப்பெரு நகரத்தின் மீது
மூன்று முறை உமிழ்ந்துவிட்டு
தடுப்பைத் தாண்டி குதித்தான்.
ஏழாவது தளத்தை கடக்கும் கணத்தில்
அவன் இறந்திருக்கக்கூடும் என்ற
குறுஞ்செய்தியை ஆசுவாசத்துடன்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.


2.முத்துநகர் எக்ஸ்பிரஸ் - எஸ்.நான்காவது மற்றும் மூன்றாவது பெட்டிகள்
இரவின் நடுவே விரையும் முத்துநகர்
எக்ஸ்பிரஸ்ஸின் எஸ்.நான்காவது பெட்டியில்
தன்னுடைய மடிக்கணினியை திறக்கிறான்
பச்சை நிற சட்டைக்காரன்.
கணித்திரையில் புன்னகைக்கும் அவனது
எதிர்கால மனைவியை தன்
செல்பேசியில் புகைப்படமெடுக்கிறான்.
பின்
ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு
எஸ் மூன்றாவது பெட்டியின்
கதவருகே நிற்கிறான்.
சட்டைப்பைக்குள்ளிருந்து
செல்பேசியை வெளியே எடுத்து
ஆங்கில முதல் எழுத்தின் வரிசையில்
அவளைத் தேடுகிறான்.
அனுவின் அறையில் ஒலிக்கிறது
செல்பேசி.
அனுவின் கண்ணீரை கொஞ்சமாய்
பருகியபின் பாதி குடித்த சிகரெட்டை
தூர எறிகிறான்.
அது ரயில் கடக்கும் பாலத்தின்
அடியில் விழுகிறது.
நாயொன்று ஓடிச்சென்று முகர்ந்து பார்த்துவிட்டு
நகர்ந்து செல்கிறது.
அப்பர் பெர்த்தில் நிம்மதியாய்
உறங்கத் துவங்குகிறான்.
செல்திரையில் நாற்பது மிஸ்டுகால்களாய்
உருமாறிக்கிடந்தாள் அனு.


3.தீராகனவில் உலவும் விஷக்கன்னி
கைகளில் சர்ப்பக்குட்டியை சுற்றிக்கொண்டு
ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு
தாவிக்கொண்டிருந்தாள் தோட்டத்தில்
துயிலும் யுவதி.
நிர்வாணத்தில் மிளிரும் வெயிலை பொருட்படுத்தாமல்
வானம் பார்த்து அருகில் கிடந்தான்
உலகின் முதலாமவன்.
கடக்கும் பட்சிகளுக்கும் விலங்குகளுக்கும்
பெயர்களை சூட்டிக்கொண்டிருந்தவனின்
பார்வை அருகிலிருக்கும் யுவதியின் பக்கம் திரும்பியது.
அவனிலிருந்து உருவாக்கப்பட்டவள்
கண்விழித்து சர்ப்ப வார்த்தைகளை
உதிர்க்கத்துவங்கினாள்.
அவனது கனவுகளில் நுழைந்து
பெருகின சர்ப்பக்குட்டிகள்.
அவளது செவிகளில் நிசப்தத்துடன்
அந்த மூன்று வார்த்தைகளை இட்டான்.
ஓடிச்சென்று இலைகளுக்குள் மறைந்துகொண்டாள்.
நெளிந்து நெளிந்து வெளியேறியவளை
சேர்ந்தான் ஆதி மனிதன்.
யுகங்கள் பல கடந்த ஓர் இரவில்
ஒரு புணர்வில்
ஒரு குழந்தை பிறக்கிறது.
சிறிது நேரம் அழுதுவிட்டு கண்கள் மிளிர‌
"ஸ்ஸ்ஸ்" என்று சப்தமிடுகிறது.
ஜூலி பிறந்தாள்.


4.ஜூலி - ஒன்பது குறிப்புகள் - சர்ப்பம் முதல் காகம் வரை
முதலாவது:
ஜூலிக்கு சர்ப்பம் என்பது
தத்திரமுள்ளது என்று தெரிந்திருக்கவில்லை.
சர்ப்பத்தை அதீதமாய் நேசித்த காரணம்
அவள் மட்டுமே அறிந்தது.
மூன்றாவது:
பதின்பருவத்தில் ஜூலி ஒரு மாபெரும்
தவறை வாஞ்சையுடன் செய்திருக்கிறாள்.
சர்ப்பத்தின் முத்தம் அவ்வளவு
தித்திப்பானது. ஒருமுறை தன் தோழியிடம்
ஜூலி சொன்ன வார்த்தைகள் இவை.
ஐந்தாவது:
கழுத்தின் கீழிருந்து தன்னுடல்
சர்ப்பத்தின் உடலைப்போலிருக்கிறது
என்பதை ஓர் இரவில் உணர்ந்துகொண்டாள்.
கைகளில் அடர்திருக்கும் ரோமக்கற்றைக்குள்
அங்குமிங்கும் பறந்து சலித்தது
தட்டானொன்று.
ஏழாவது:
ஜூலி தானொரு காகத்தின்
மனித உருவம் என்று புலம்பிய காலம்.
மரங்கள் அடர்ந்த அவளது வனத்தில்
ஒரு மறி மரித்துக்கிடந்தது.
ஒன்பதாவது:
தன்னைப் பற்றிய குறிப்புகளை
சுமந்துகொண்டு யாரிடமேனும்
சொல்லிவிட துடித்து அறைக்குள் அங்குமிங்கும்
அலைந்துகொண்டிருக்கிறது
ஜூலி என்னும் காகம்.


5.சயனித்தல் - மன்னித்தல் - மறத்தல்
முன்பொரு காலத்தின் கடும் பனிக்கால இரவில்
நெருங்கி அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகளாய்
இருந்தோம்.
முத்தங்களால் உறவாடிக்கொண்டும்
உமிழ்நீரின் பாக்டீரியாக்களில் சொற்கள்
பரிமாறிக்கொண்டும் சயனித்துக்கிடந்தோம்.
அது முடிந்த கதையாயிற்று.
நீண்ட தொரு பயணித்தில் திறந்துகொண்டன‌
கண்கள்.
ஆதியில் வார்த்தை இருந்தது.
அது மூடிய கண்களை திறந்துவிடும்
வார்த்தையாக இருந்தது.
அது தொடர் கதையாயிற்று.
குதிரையின் கடிவாளத்தை
பற்றியிருந்தது வலக்கை.
பத்துவிரல்களையும்
ஒரு சொட்டு கண்ணீரையும்
ஏந்தியிருந்தது இடக்கை.
பின்பொரு காலத்தில் கவிதையொன்றில்
வேனிற்காலம் குறித்து எழுதப்பட்டது.
அது மறத்தலின் கதையாயிற்று.


6.நட்சத்திராவும் மூன்று எறும்புகளும் அல்லது
பாவத்தின் உதாரணங்கள்


தெரியாமல் செய்து விட்ட தவறொன்றிற்காக‌
அழுதுகொண்டிருந்தாள் நான்காம் வகுப்பு
ஏ பிரிவில் படிக்கும் நட்சத்திரா.
எவ்வளவு சமாதானம் செய்தும்
அழுகை நிறுத்த முடியாமல் திணறினர்
அம்மாவும் அப்பாவும்.
பின் அப்பா சொன்னார்
"உயிர்களை கொல்வது பாவமா இல்லையா
நட்சத்திரா?"
பாவம் தான் என்றாள் சிவந்த விழிகளுடன்.
தன்னருகில் அழைத்தார்.
நடந்து வந்த நட்சத்திரா மூன்று எறும்புகளை
தெரியாமல் மிதித்துக் கொன்றிருந்தாள்.
"உனக்குத் தெரியாமல் மூன்று
உயிர்கள் மரித்துவிட்டன ஆயினும்
இது பாவமில்லை" சொல்லிவிட்டு
உறங்கச்சென்றார் அப்பா.
தன் இருபத்தி இரண்டாவது வயதில்
நட்சத்திரா தெரிந்தே ஒரு தவறு
செய்தாள்.
தெரிந்து செய்த தவறுக்கு
மரித்த மூன்று எறும்புகளை
உதாரணமாக்கிவிட்டு
தவறுடன் சேர்ந்து சிரிக்க‌த்துவங்கினாள்.

-நிலாரசிகன்.

Sunday, February 24, 2013

கற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’ பாவண்ணன்



புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தவெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி.
காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான்ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.
ஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோஉரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை.  அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும்  குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகுஅவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள்கூடவே அசைந்து அசைந்து,  தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.  ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணரதரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.
நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பதுநிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாகஅக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.
ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போலதவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.
ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.
சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காகயுகக்கணக்காகஅந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில்காலம்காலமாகஎங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.
இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மைஅவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மாஅந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்து,ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பாஅப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனைஉயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.
61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.
(மீன்கள் துள்ளும் நிசி. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. காவேரிப்பட்டினம்)

Thursday, January 31, 2013

ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்



1.ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்


இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்
நான்காவது மகளாக ஜூலி
பிறந்த செய்தி கேட்டவுடன் வேகமாய்
மருத்துவமனை விட்டு வெளியேறினார் 
ஜூலின் அப்பா.
அதன் பின்னர் எப்பொழுதும் அவர்
தன் முதல் மூன்று பெண்களையும்
எண்களை வைத்தே அழைக்க ஆரம்பித்தார்.
ஒன்று 
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறது.
இரண்டு
பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறது.
மூன்று
படிப்பில் ஆர்வமில்லை அதனால் தையல்
வகுப்பு போய் வருகிறது
இப்படித்தான் எல்லோரிடமும் 
தன் பெண்களின் மகிமை பேசுவார்.
நான்காவது எண்ணுடைய ஜூலியை
அவர் விரும்பியதே இல்லை.
ஒன்றிலிருந்து மூன்றுவரை திருமணம்
முடிந்து மறுவீடு சென்றபின்னரும்
நான்கை பற்றிய அக்கறையின்றி
திரிந்ததால்
தன் முப்பதாவது வயதில்
ஜூலி காதல் மணம் புரிந்து வெளியேறினாள்.
யாருமற்ற வீட்டின் அடுக்களையில்
நைந்த கறுப்புவெள்ளை புகைப்படமொன்றை
கைகளில் ஏந்தியபடி
ஜூலியின் அம்மா ஒருநாள் 
முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்
"அவர் பூஜ்ஜியம் அவர் பூஜ்ஜியம்" என்று.

2.மிஸ்டர் எம் மற்றும் எக்ஸ்ஸின் காதலி : எஸ் என்கிற எஸ்

கடற்கரையில்தான் எஸ் தன் குழந்தைமையிலிருந்து
குமரியாக மாறினாள். 
மருத்துவமனையில்தான் எஸ் ஒரு காதலை கொன்று
வீசினாள்.
காதல்மாதத்தில்தான் எஸ் தன் மூத்தகாதலான
"எம்"மை கைப்பிடித்தாள்.
முகநூலில்தான் எஸ் தன் புகைப்பட முகத்தை
முதன்முதலாய் காண்பித்தாள்.
மயில்கள் திரியும் தோட்டத்தில்தான் எஸ்ஸின் மீதான‌
காதலை கண்ணீர்மல்க எக்ஸ் புலம்பினான்.
யாருமற்ற இரவில்தான் எக்ஸ் ஒரு திருமணத்திற்கு
சம்மதித்தான்.
உலக அழிவை பேராவலோடு எக்ஸ் எதிர்நோக்கிய‌
கணத்தில்தான் எம்மும் எஸ்ஸும் குற்றாலம் போவது
பற்றிய முடிவெடுத்தனர்.
எக்ஸ் வேறு வழியின்றி தூக்கில் தொங்க நினைத்தபோது
அறுந்து விழுந்து சிரித்தது வாழ்க்கைவடிவ‌
தூக்குக் கயிறு.
காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்று
எக்ஸ்க்கு அறிவுரை வழங்கி எஸ்
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.
எக்ஸை சேரும்போது அந்த எஸ்.எம்.எஸ்ஸில்
வார்த்தைகளே இல்லை.
எஸ்ஸின் பேரன்பின் முத்தங்களின் கனம் தாளாமல்
ஒரு நாள் எக்ஸ் மரித்துப்போனான்.
அப்போது எம்மும் எஸ்ஸும் நயாகராவில்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தனர்.

-நிலாரசிகன்.

Friday, January 11, 2013

மீன்கள் துள்ளும் நிசி

நண்பர்களின் கவனத்திற்கு: புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண் 43/44 ல் எனது கவிதை தொகுப்பான "மீன்கள் துள்ளும் நிசி" கிடைக்கும்...
அனைவருக்கும் "புத்தககண்காட்சி வாழ்த்துகள்" :)