Wednesday, October 24, 2007

ரோஜாப்பூக்கள் கவிதைகள்...




1. ரோஜாப்பூக்கள்
உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..

ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..

உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..

வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.

2. உன் கண்பொத்தி
பால்கனி அழைத்துச்செல்கிறேன்
மெதுவாய் என் விரல்நகர்த்தி
பார்க்கிறாய்..

நீ வளர்த்த ரோஜாசெடியில்
சின்னதாய் ஒரு மொட்டைக்
கண்டு சிலிர்க்கிறாய்...

மொட்டைக் கண்டு
மலர்கின்ற ரோஜா
நீயென்று உன்னை
அள்ளிக்கொள்கிறேன்
நான்.

3. பனித்துளிகள்
சுமந்து நிற்கும் ஒரு
ரோஜாவை உனக்கென
கொய்து வந்து
பனித்துளிக்குள் உன்
முகம் காண்பிக்கிறேன்...

குழந்தையென அதில்
உன்னைக் காண்கிறாய்

குழந்தையாகிறோம்
நாம்.

4.

அழகிய புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன் என்கிறாய்
நீ.

உன் கூந்தலில் ஒரு
ஒற்றை ரோஜாவை சூடி
விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா மலர்ந்திருக்கிறது
என்கிறேன்
நான்.

பவித்திரமானதொரு புன்னகையை
சிந்துகிறாய் தரையெங்கும்
மல்லிகைபூக்கள் சிதறுகின்றன...

5. நீ ஆசையாய்
வளர்த்த சிறுரோஜாசெடி
வாடிப்போனது..

துடித்துப்போனாய்
நீ.

உனக்கென புதிதாய்
ஒரு செடி வாங்கி வந்தேன்

சட்டென்று பூத்து
சிரிக்கிறாய்
செடி கண்டவுடன்.

உன் மெல்லிய மனம்
கண்டு,

நீ பெண்ணா இல்லை
பூவா
என்று புரியாமல்
தவிக்க ஆரம்பிக்கிறேன்
நான்.

3 comments:

Anonymous said...

அம்மம்மா!!! என் கண்களுக்குள் ஊற்றெடுக்கிறது கண்ணீர், அருவியாய் பொழிய.
இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காதா என ஏங்க வைத்துவிட்டீர்கள் போங்கள்.

said...

ரோஜாக்கள் அத்தனையும்
கொள்ளைகொண்டுபோய்விட்டன
மனதை....

எதையென குறிப்பிட்டு சொல்லுவது?
ஒன்றை சொன்னால் மற்றொன்று
வாடிவிடுமே ?? எப்படி விழிப்பேன் பின்
அதன் முகத்தில் ??

அழகோ அழகு நிலாரசிகன்..... :))))

said...

..!!..:)