Sunday, August 16, 2009

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை





நவம்பர்:

அவளது கண்களை எனக்கு பிடிக்கவேயில்லை. இரையை கண்டவுடன் பதுங்கும் பூனையொன்றின் குரூர பார்வையை அவளது கண்கள் கொண்டிருந்தன.ஜீவனற்ற அந்த விழிகளுக்கு சொந்தக்காரிதான் என்னிடம் அந்த தகவலை பகிர்ந்தவள். எதிர்பார்த்து சென்றவன் என்றபோதிலும் அந்த தகவலுக்கு அவள் சொன்ன காரணங்கள் மிகுந்த எரிச்சலையும்,கோபத்தையும் கடைசியாக இயலாமையையும் என்னுள் திணித்து சென்றன.

கழுத்தில் தொங்குகின்ற ஐ.டி கார்டை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். இப்போது அவளது
இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது. இன்றே கடைசி நாள் என்பதை புத்திக்குள் அந்த புன்னகை உணர்த்தியபோதும் இதயம் மட்டும் இடைவெளி விடாமல் துடிப்பது செவிகளில் ஒலித்தது.

குளிர்ந்த அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். லேசான தூறலுக்கிடையே வெயிலடித்தது. அலைபேசி சிணுங்கியது. அம்மா. "என்னய்யா ஆச்சு?" ஒரு நிமிட மெளனத்தை பதிலாக்க முயன்று தோற்று
மெல்லிய குரலில் சொன்னேன் "வேலை போயிடுச்சும்மா". மழை வலுக்க துவங்கியிருந்தது.

டிசம்பர்:

இறுக மூடிய அறைக்குள் என் உடலை சுமப்பது சற்று சிரமத்தை தந்திருக்கிறது. நவம்பர் மாதத்தின் இறுதியில் "அய்யோ பாவம்" என்று ஒயாமல் அலறிய நண்பர்கூட்டத்தை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
கூட்டைவிட்டு முதல் முறையாக வெளியேறும் சிறுபறவையென என்னறை விட்டு வெளியேறிய தினத்தில்
வீட்டுக்கார அம்மா வந்தார்கள். சவரம் செய்யப்படாத தாடியும்,இஸ்திரி செய்யப்படாத சட்டையும் அவருக்கு கலக்கத்தை தந்திருக்கவேண்டும். ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக இம்மாத வாடகை என்று இழுத்தவரிடம் இரு நாட்களை கடனாக பெற்றுவிட்டு திருவான்மியூர் கடற்கரை நோக்கி பைக்கில் விரைந்தேன்.

வாழ்க்கையில் சில தருணங்கள் மிக அழகானவை. மழையில் நனையும் காதலி, ரயில்நிலையங்களில் பாசம் ததும்ப அம்மாவை பிரியும் திருமணமான மகள்,எதிர்பாரா நேரத்தில் மடியில் அமர்ந்துகொண்டு "எங்க அப்பாதான் சூப்பர் அப்பா" என்றபடி கன்னத்தில் முத்தமிடும் குழந்தைகள்,மாலை மிதவெயிலில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டே மெதுவாய் செல்லும் இந்த பைக் பயணம்.

கடற்கரையில் அமர்ந்தவுடன் அலைபேசி அலையடித்தது. வினோத். "என்னடா ஏதாவது இன் டர்வியூ?"
"....................." "சரி விடு, உன் அக்கவுண்ட்க்கு மூவாயிரம் அனுப்பி இருக்கேன் செலவுக்கு வச்சுக்க"
முதல் முறையாக கண்கள் நிரம்பி வழிந்தது அன்றுதான். "இல்ல நான் சமாளிச்சுக்கறேன் வினோத்"
"அசிங்கமா திட்டிபுடுவேன் பேசாம இரு அப்புறம் சம்பாதிச்சு கொடுபோதும்,மீட்டிங் இருக்கு இராத்திரி கூப்பிடுறேன்" வைத்துவிட்டான்.

என் சிறிது நேர மெளனத்தை அழித்தபடி உள்நுழைந்தது மற்றொரு அழைப்பு. ***** அழைத்திருந்தான்.
"என்னடா வேலை போயிடுச்சாமே?" என்றவன் "உன்னால தாங்க முடியாதேன்னுதான் இவ்ளோ நாளா கால் பண்ணல ஒண்ணும் கவல படாத மச்சி வாழ்க்கைன்னா" தொடர்பை துண்டித்தேன். வேலைதானே போயிருக்கிறது. உயிரா போனது? போடா ம..

ஜனவரி:

நீண்ட பகலை கெளவிப்பிடித்திருக்கிறது
இருளின் பற்கள்.
பின்னிரவில் ஊளையிடும்
நாய்களின் சப்தம் பகலின்
கீற்றுகளாய் அறையெங்கும்
நிறைந்திருக்கிறது.
சன்னல் கம்பிகள் உயிர்பெற்று
தாண்டவமாடி வீழ்ந்து மரிக்கின்றன.
மிகுதியாகும் வெப்பத்தில்
நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்.
நான்..நான்..நான்..

பிப்ரவரி:

அமெரிக்காவிற்கு செல்வது இது இரண்டாம் முறை என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் ஆச்சர்யங்களும் என்னை சூழ்ந்துகொள்ளவில்லை. வழியனுப்ப வந்த நண்பன் காதோரம் கிசுகிசுத்தான். "ஆல் த பெஸ்ட் டா,நல்ல வேலைக்கும் பக்கத்துசீட்டுக்கு பாவனா மாதிரி ஒருத்தி வருவதற்கும்"

கத்தார் ஏர்லைன்ஸின் பணிப்பெண் போல செயற்கையாக சிரித்துவிட்டு உள்நுழைந்தேன். 27D சீட்டை தேடி அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் பக்கத்து சீட்டை பார்த்தேன். மனசுக்குள் அந்த பாடல் திரும்ப திரும்ப ஒலித்தது. விமானம் மேலேழும்பி மேகத்திற்குள் நுழைந்தபின்பு பக்கத்துசீட்டும் நானும் பேச ஆரம்பித்தோம்.
வாஷிங்டன் விமானநிலைய அதிகாரி தன் முதல் முத்தம் பற்றி நினைத்திருக்கலாம் அல்லது முதல் மனைவி பற்றி நினைத்திருக்கலாம். வழமையாக மூன்று மாதம் மட்டுமே வழங்கப்படும் விசாவை ஆறுமாதம் தந்துவிட்டு Have a pleasant trip என்றார். ட்ராலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன்.

மனசுக்குள் ஒலித்த அந்த பாடல்: பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி.

பின்குறிப்பு: நீங்க சொன்னது புரியல பாட்டி * 3 [நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் என்று அவர் சொன்னதை புரிந்துகொள்ள இப்படித்தான் மூன்று முறை கேட்கவேண்டியதாயிற்று.அவர் ஒரு சீனக்கிழவி]

மார்ச்,ஏப்ரல்,மே:

* வாசிங்டன்னிலிருந்து மூன்று மணிநேர பயணத்தொலைவில் இருக்கிறது பிலடெல்பியா.
* அலைபேசியில் இன்கம்மிங் காலுக்கும் காசு - எந்த காலத்துலடா இருக்கீங்க - Come to our beloved India!
* அன்பை நீங்கள் பகிர்வதே இல்லை - என் மீது அக்கறையே இல்லை - கிளிப்பிள்ளை மாதிரி இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாள் - பகிரப்படும் அன்பென்பது வார்த்தைகளில் இல்லை புரிதலில் இருக்கிறது என்பதை என்று புரியவைப்பது?
* அறைத்தோழன் ஜே.பி தீவிர அஜித் ரசிகர். மிகச்சிறந்த நண்பனாகி இருக்கிறான். அவனுக்கு கடன்பட்டிருக்கிறேன்.
* Dance Club செல்வதாக இருந்தால் ஏதேனும் ஐ.டி கார்டுடன் செல்ல வேண்டும். வாரநாட்களின் களைப்பு தீர
வார இறுதியில் வெள்ளைக்காரன் ஆடிப்பாடும் இடமிது.[கண்கள் நிறைந்த போதையில் ஒரு சிகப்பு நிற கூந்தல்காரி என்னிடம் ஏதோ சொன்னாள் அது என்னவெனில்...]
* சிறுகதை போட்டிக்கு முதல்சிறுகதையை எழுதி இருக்கிறேன். அறிவித்தவுடன் எழுதிவிட்டேன். வந்து குவிகின்ற சிறுகதைகளை பார்க்கும்போது மற்றொரு கதை எழுதியாகவேண்டும் என்றே தோன்றுகிறது.
* பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலில் அவரை சந்தித்தேன். கோவிலில் அரை மணிநேரமும்,மாலில் அரை மணிநேரமும் கதைத்தோம். என்னை சந்திக்க ஐந்து மணிநேரம் காரோட்டி வந்திருந்தார் அந்த அறுபது வயது இளைஞர்.அமெரிக்காவில் மழை பெய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று.
* இன்னைக்கு வந்திடும் நாளைக்கு வந்திடும் என்றார்கள் இன்றுவரை வரவேயில்லை - Project.
* சில ஆயிரம் டாலர்களை தொட்டு நிற்கிறது கடன். நாளைக்காவது வருமா அந்த புராஜக்ட்?
* என் சுயத்தில் கல்லெறிந்து விளையாடுவது ஒருவரின் பொழுதுபோக்காகி இருக்கிறது.கற்களை சேகரித்துக்கொண்டே வருகிறேன். சிலைவடிக்கலாம் அல்லது......

பின்குறிப்பு: சிகப்புநிற கூந்தல்காரி என்னிடம் சொன்னது பற்றி எழுத ஒன்றுமில்லை.

ஜூன்:

1.புளோரிடாவில் புராஜக்ட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை எல்லோரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
2.சொல்லிக்கொண்டு வருவதில்லை இடியும்,மழையும். Recession என்பதால் எட்டு வார புளோரிடா பயணம்
இரு நாட்களில் முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் வலித்தது. Its okay!
3.கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் சிறுகதை புளோரிடாவுக்கும் பிலடெல்பியாவுக்கும் இடையேயான விமான பயணத்தில் தோன்றியது. மடிக்கணினியை திறந்து எழுத ஆரம்பித்தேன். தோள்சாய எழுத்து மட்டுமே எப்போதும் உடனிருக்கிறது.
4.அமெரிக்க நண்பர் ஸ்டீவ் டின்னருக்கு அழைத்து சென்றிருந்தார்.அவர் மனைவி பார்பராவிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டேன். எனக்கு ஒரு மகன், ஸ்டீவுக்கு இரு மகள்கள் என்றார். முதலில் புரியவில்லை. புரிந்தபோது புரியாமல் இருந்து தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது.
5.பழையயார்க் என்று பெயர் வைத்திருக்கவேண்டும். ஏன் நியூயார்க் என்றார்கள் இன்னும் புரியவே இல்லை.
அமெரிக்காவில் குப்பைகளும் தொப்பைகளும் அதிகம் தென்படுவது நியூயார்காகத்தான் இருக்கவேண்டும்.
6.வாழ்வில் மிக முக்கியமானதொரு நபரை சந்தித்தேன் - ரிஷி - வாழ்க்கையின் ரகசியங்களை எனக்குள் ஏற்றி
எப்போதும் புன்னகைக்கும் வரத்தை தந்தவர்.He is a Gem.
7.ஐந்து வருட கனடிய தோழியை இம்முறையும் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஈழத்தின் வலி வார்த்தைகளிலும்,வாழ்க்கையிலும் தெரிகிறது அவளுக்கு. அவள் நலம் பெறல் வேண்டும்.
8.நட்பை பிரவாகமென சினேகத்துடன் பகிர்ந்தளிக்கும் மற்றோர் தோழியை சந்தித்து திரும்பினேன்.

ஜூலை:

பாப் மன்னனின் மரணத்தை மெக்டொனால்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டபடி "Iam shocked" என சொல்லிச் சென்றாள் ஆப்ரிக்க-அமெரிக்க குண்டுப்பெண்ணொருத்தி.

பிலடெல்பியா - வாசிங்டன் - தோகா - சென்னை - தூத்துக்குடி
அமெரிக்க பயணம் = Disaster
குற்றாலம் - மணிமுத்தாறு - பெங்களூர் - நெல்லை - மதுரை --> நண்பர்கள், நண்பர்கள்
2500 ரூபாய் - மீண்டும் வினோத்
அலறும் அலைபேசி - வேலை இல்லையா மச்சான்.வாழ்க்கைன்னா... - புன்னகை பதிலால் எதிர்முனை மெளனிக்கிறது இப்போது.
ஜீவன் முக்தி வாசிக்கிறேன்.
இரு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒருவரின் தவமாக ,மற்றொருவரின் வரமாக உருமாறியிருக்கிறேன்.

ஆகஸ்ட்:

#அன்பை பகிராதவன் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது அவ்வப்போது வேலை கிடைத்துவிடும் சீக்கிரம் என்கிற வாழ்த்துக்கு நடுவே. கல்லை நம்புகிறவர்கள் மனதை நம்புவதில்லை.
ஒன்றை துறந்தால்தான் மற்றொன்று நிலைபெறும். எல்லோரும் வேண்டுமெனில், சுயத்தில் கல்லெறிந்தவரை துறக்க வேண்டும்.

# "அம்மா நான் ஜெயிச்சுட்டேன்மா"

# வெயில் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்றும் இன்றும் பெய்யாத மழை நாளை பொழியும்.

-நிலாரசிகன்.

35 comments:

said...

மனம் வலிக்கிறது நிலா...

இதற்காகத்தான் ஐ டி துறையை விட்டே ஓடிவிடலாம் போல இருக்கின்றது. சோகம் தோய்ந்த நாட்களை எழுத்துக்களால் ஆறுதல் தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

மீண்டும் நிலா பிரகாசிக்கும்

- ரசிகவ்

said...

வித்தியாசமான எழுத்துநடை

முழுதும் ரசிச்சி படித்தேன்

தொடருங்கள்

said...

:-)

said...

migavum valiyaaga irukurathu.. padipatadku..
vali taane vaalkay ?

*aangilathuku manikavum.

said...

:-( :-)

said...

Nila,
it happend for me in 01 Sep 2008 but in Chennai. urs is a inspiration for me to write my recession in a Kavithai. I will drop u a mail. But I can not write when i am upset.
Ok now u got job or not?

said...

:(
நடுநடுவே கவித்துவம் வழிகிறது. எழுத்து நடை அழகு. எழுத்தக்கள் சுமந்திருக்கும் வலி வேதனை தருகிறது.

என்ன செய்வது?

--வித்யா

Anonymous said...

very nice nila

Anonymous said...

hi nila, miga azhagana varigal, indraya vazhkayin valigalai azhagaga kanmune kondu vandhadarku vazhthukal.......adilum வாழ்க்கையில் சில தருணங்கள் மிக அழகானவை. மழையில் நனையும் காதலி, ரயில்நிலையங்களில் பாசம் ததும்ப அம்மாவை பிரியும் திருமணமான மகள்,எதிர்பாரா நேரத்தில் மடியில் அமர்ந்துகொண்டு "எங்க அப்பாதான் சூப்பர் அப்பா" என்றபடி கன்னத்தில் முத்தமிடும் குழந்தைகள்,மாலை மிதவெயிலில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டே மெதுவாய் செல்லும் இந்த பைக் பயணம் - ----wow simply superb lines nila......

said...

Hi, Nilu, I LIKE YOUR FEELINGS...........

said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள் பல.
:)

said...

சொல்ல எதுவுமே இல்லாதது போலிருக்கிறது...சொல்லாத எதுவும் பகிராத வலி போன்றது....ம்ம்ம் இதுவும் கடந்து போகும்>>>>

said...

நிஜம்தான் அருணா :)

said...

:):):)

said...

its really super nila i like it very very much it happened me tooooooo

Anonymous said...

வார்த்தைகள் ஒரு அருவியைப்போல மிக அழகாக படிப்பவரின் மனதில் விழுந்துகொண்டே இருக்கிறது.. ஆனால் இந்த வார்த்தைகள் படிப்பவரின் மனதில் பெரும் கூச்சலோடு விழாமல் மிக அமைதியாக சில வட்டங்களை ஏற்படுத்திக்கொண்டே கலந்துவிடுகிறது.....

வாழ்த்துக்கள் நண்பா!

Kalaivani said...

nadappavai ellam nanmaikae nilaraseegan.....

//வெயில் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்றும் இன்றும் பெய்யாத மழை நாளை பொழியும்.//

kandippaga...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

இதுவும் எதுவும் கடந்து போகும் நிலா. எழுத்து நடையில் அபார மாற்றம். வலி சுமக்கும் எழுத்துக்கள்.

said...

Veyil konjam kuraiya aramithu vitadhu la??? MAzhai varum,,,,, Ungalai azhagaga nanaikum.... Vetri peruveergal.... Ungaluke jeyam.... All the best....

said...

baaramaakkittu..

nalla pathivu..

yezhuththu nadai azhagu...

vazhkkaiyin valiyai appadiye yezhuththil kondundu vanthirukkeenga...

kutti kutti punnagaikalaiyum,vizhi virippukalaiyum intha pathivin vaarththaikal sambaathiththuk konnadathu...

kadavulukku yezhuthiya kaditham pola ithu irukku..

innum pala..

ippadilaam mattume solleettu poidath thonalai..
yaenna?
ithu rasippatharkkaaga mattum illainnu thonuthu!!

yenna sollurathu??

solla varuvathai..
sollath theriyalaingirathinaala....
konjam mownangaludanum
niraya praarththanaikaludanum..
rasihai:(

said...

இரசிகை,

தமிழில் நீங்கள் பின்னூட்டமிட்டால் பதிலிடுகிறேன்.

புரிந்துகொள்ள மிக கடினமாக இருக்கிறது உங்கள் தமிங்கலம்.

said...

sorry... nila..
ithai neenga 2nd time sollureenga.

enakku kanini arivu remba kammi.
ippothaan oru 3-4 months aagath computer theriyum.

so,yeppadi tamil lil comments seiyanumnulaam theriyaathu..:)

said...

ஒரு வலைப்பூவின் சொந்தக்காரர் - அதிலும் "தமிழில்" கவிதைகள் எழுதும் நபர் நீங்கள்.
உங்களது பதில் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.

said...

"கவல படாத மச்சி வாழ்க்கைன்னா...." :-)

"ஒன்றை துறந்தால்தான் மற்றொன்று நிலைபெறும்"

"நேற்றும் இன்றும் பெய்யாத மழை நாளை பொழியும்"

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை :-)

Anonymous said...

//#அன்பை பகிராதவன் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது . கல்லை நம்புகிறவர்கள் மனதை நம்புவதில்லை.
ஒன்றை துறந்தால்தான் மற்றொன்று நிலைபெறும். எல்லோரும் வேண்டுமெனில், சுயத்தில் கல்லெறிந்தவரை துறக்க வேண்டும்.//
tahks nila ur lines teach me a good lesson..............:-)

said...

it's ok.......

said...

i am back

thala nalama :)

punaivu kahdiagal ungalodahu ellam inge ennoda infy blog la podurane unga permission ialma a:) unga link s kodupane ana



thodanrdhu kalkungaa

said...

நம்புவோம் அண்ணா.

எல்லாம் நன்மைக்கே என்று...

said...

என்ன சொல்வதென தெரியவில்லை.

வலியை பகிர்ந்திடாமல்
எழுத்துக்களை மட்டும் ரசித்து விட்டு
மௌனமாய் நகரவும் மனமில்லை.

இன்றே மழை பெய்திடட்டும்..

all i can do is to pray to my Jesus for the happiness of all those hearts going through similar pain...

said...

mazhai peithu vittatha?
pozhinthaal pakirnthukolla vendukiren.......

said...

//mazhai peithu vittatha?
pozhinthaal pakirnthukolla vendukiren.......//

பொதுவில் சொல்ல இயலாது...

Anonymous said...

simply superb

said...

velai izhanthavanin naatkurippil kulirum mazhai nila.. nu oru pathivu podungal pathilaaga:)

(kindal pannala...)

"mudivu theriyaatha kathai" tharum oru yosanaiyai inthap pathivu koduththuk konde irunthathu/irukkirathu.
athanaalathaan ketten..

paravaayillai...
pathil vendaam:)

vaazhththukal nila!!

said...

அன்புள்ள இரசிகை,

உங்களது அக்கறையுள்ள பின்னூட்டம் கண்டு அகமகிழ்கிறேன். அதே சமயம் வலைப்பூ என்பது ஒரு Virtual World. இங்கே நமக்கு முகங்களில்லை. நம் வார்த்தைகளும் வாக்கியங்களுமே நம் அடையாளங்கள். இந்த பொதுவெளியில் என் சுயம் சார்ந்த விஷயங்களை அதிகம் தவிர்த்தே வந்திருக்கிறேன்.கூட்டுக்குள் தலையிழுத்துக்கொள்ளும் நத்தையும் நானும் ஒருவகையில் ஒன்றே.
தனிமடலிடுங்கள் என் வலி பகிர்கிறேன்.இங்கே வேண்டாம். இது அதற்கான தளமும் அல்ல. :)