Sunday, January 24, 2010

ரசித்த கவிதைகள் மூன்று


எல்லை வேலிகள்
எங்களுக்கிடையில்
இந்துமகா சமுத்திரம் இருந்தது
வழிநடையில் முகில் குவியல்கள்
வண்ணங்களின் குகைகள்…
அடுக்குகளாய் தீயெரியும் ஒளிக்காடு…
சூரியன் ஆட்சி முற்றிய வானம்
சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப்பாதைகள்
வல்லரசுகளின் படையணிகள்
எல்லாம் இருந்தன
மலைகளை எல்லை வேலிகளாக
நாட்டியுள்ளனர்
காடுகள் நகர்ந்தபடி
எங்களைச் சுற்றி வளைத்து வழிமறிக்கின்றன
ஆனபோதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்
-    அனார். “உடல் பச்சை வானம்” தொகுப்பு – காலச்சுவடு வெளியீடு

------------o0o-------------

மஞ்சள் மலைகள்

பழுப்புநிற புல்வெளியின் பரப்பில்
ஆட்டுமந்தையின்
ஒழுங்குமாறாது நடத்திச்செல்லும் சிறுவன்
சாலையோரம் குவித்த தானியங்களை
கோணிகளில் நிரப்பியபடி
புழுதியப்பிய பெண்கள்
மெதுவாய் இயங்கும்
அருகாமை ஊர்தியினுள்ளிருந்து
பின் நகரும்
கையசைத்தபடி நகைக்கும் சிறுமி
அடர் மற்றும் வெளிர்நீல இறக்கைகளோடு
காற்றைப் பின் தள்ளி
பறைவையின் பயணிப்பு
பேருந்தில் அமர்ந்த இருக்கையின்
ஜன்னல்வெளியில்
கடந்தும் தொடர்ந்தும்
மஞ்சள் மலைகள்
-ஸ்ரீஷங்கர் – தொலைவற்ற கடலின் குரல் – அனன்யா வெளியீடு
 ------------o0o-------------
பார்வை
என்னை
எதுவாகவோ இருக்கச் சொல்லி
எல்லோரும் வற்புறுத்துகிறார்கள்,
நான் என்னை
நட்சத்திரங்களில் காணாது போக
முயன்றுகொண்டிருக்கையில்
-சே.பிருந்தா – வீடு முழுக்க வானம் தொகுப்பு – காலச்சுவடு வெளியீடு


------------o0o-------------
நேற்றிரவு வாசித்த இந்த மூன்று தொகுப்புகளிலும் என்னை அதிகம் கவர்ந்த கவிதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். மூன்று கவிதைகளின் கடைசி இருவரிகள் தருகின்ற அனுபவம் அலாதியானது. இத்தொகுப்புகள் கிடைத்தால் வாசித்து பாருங்கள் நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும். 
- நிலாரசிகன்.



8 comments:

said...

கவிதை மூன்றும் நன்று..

said...

Good ones Nila.

said...

மூன்று கவிதைகளுமே மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

said...

நல்ல பகிரல்.நன்றி நிலா.

said...

//மூன்று கவிதைகளின் கடைசி இருவரிகள் தருகின்ற அனுபவம் அலாதியானது//

மிகச் சரி.. பகிர்தலுக்கு மிக்க நன்றி..

said...

நன்றி சங்கவி,செல்வராஜ்,சரவணக்குமார்,பா.ரா,ப்ரியா.

said...

கவிதைகள் அருமை. பகிர்வுக்கு நன்றி தம்பி!

said...

m...nallaayirukku.