Monday, January 25, 2010

தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்



சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார்
“கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..”
“இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “  இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில் நனைந்த ரோஜா இதழ்களின் செளந்தர்யத்தில் தொலைய ஆரம்பித்தபோது தர்ஷிணியின் ஞாபகம் வந்தது.
-----o0o------
ஆழ் மனதின் வெடிப்பில் சிதறிய துகள்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டு ஏதேதோ கனவுகளில் வசித்துக்கொண்டு மிகத்தீவரமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த போது முதுகலை படிப்பதற்கு சென்னைக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. கல்லூரி விடுதியில் கிடைத்த நேரம் முழுவதும் கவிதைக்குள் மூழ்கிக்கிடந்தான். கேலியும் கிண்டலும் கலந்திருக்கும் கல்லூரி வாழ்வை தவிர்த்துவிட்டு எப்போதும் கவிதை நூல்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலுமே விருப்பமுற்று கிடந்ததால் சக மாணவர்கள் மத்தியில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனாக அறியப்பட்டான். பேண்ட் சட்டை போட்ட புலவன் வருகிறான் என்கிற பரிகாசத்தின் நடுவிலும் கவிதையும் அவளும் மட்டுமே வாழ்க்கை மீதான நம்பிக்கையை அர்த்தப்படுத்திபடி இருந்தார்கள். அவள் தர்ஷிணி.  வகுப்புத்தோழி. ஒவ்வொரு கவிதையின் பிரசவத்தின் போதும் குழந்தையாக மாறி குதூகலத்துடன் கவிதைகளின் கரம் பிடித்து நடப்பவள்.
கவிதை என்றால் காததூரம் ஓடும் நண்பர்கள் கூட காதல்கடிதமெழுத இவன் அறைக்கு வரும்போதெல்லாம் மனதெங்கும் உற்சாகமும் பெருமையும் ஒன்றுசேர்ந்து ஆனந்த தாண்டவமாடும். யாரோ ஒருத்திக்கென எழுதப்படும் காதல்கடிதங்களாக இருப்பினும் எழுதும்போதே தனக்குள் இழுத்துக்கொள்ளும் கவிதைக்காதலியின் மடியில் முகம்புதைப்பது பேரானந்த அனுபவமாக தோன்றும்.
நண்பர்களுக்காக எழுதுகின்ற காதல்கடிதங்களையும் அதை எழுதுகின்றபோது அருகில் பயபக்தியுடன் காத்திருக்கும் நண்பர்களின் முகபாவங்களை பற்றியும் தர்ஷிணி ரசித்துக் கேட்பாள். தனக்கு வந்த காதல் கடிதங்கள் எதுவும் இதைப்போலில்லை என்றும் எழுத்துப்பிழைகள் தாங்கி வருகின்ற அபத்தக் கடிதங்களே அதிகம் என்றும் அவள் சொல்லும்போது சிரித்துக்கொள்வான். தர்ஷிணி போன்ற எட்டாவது அதிசயங்களுக்கெல்லாம் கடிதமெதற்கு? கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா? காதல் கடிதங்கள் வெறும் உணர்ச்சிக்குப்பைகள்.போலித்தனங்களும் பொய்களும் கொட்டிக்கிடக்கும் கடிதங்களைவிட தீர்க்கமான பார்வை மட்டுமே நேசத்தை பகிர்ந்துகொள்ள உன்னத வழி. யதார்த்தங்களை மீறுபவர்களே பக்கம் பக்கமாக கடிதமெழுதி காத்திருக்கிறார்கள். தன் காதலிக்கு கடிதம் எழுத மற்றொருவனை தேடும் காதலனை சிரச்சேதம் செய்துவிடும் சட்டம் ஏதுமில்லையா? இந்தக் கேள்விகளையெல்லாம்  தர்ஷிணியிடம் இவன் சொன்னபோது “ உனக்கு முத்திப்போச்சு ரொம்ப அதிகமா யோசிக்கிறடா” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
-----o0o------

சில நூறு கவிதைகள் சேர்ந்தவுடன் தர்ஷிணிதான் முதலில் அந்த யோசனையை இவனிடம் பகிர்ந்தாள். வகுப்புக்கு வெளியே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி  “நீ ஏன் ஒரு கவிதை புத்தகம் வெளியிடக்கூடாது?” அவள் கேட்டபோது மனதெங்கும் பரவசநிலை படர்வது போலிருந்தது. அந்தக் கேள்வியே இவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. சட்டென்று மலர்ந்த மொட்டுபோல் உடன் மலர்ந்து புன்னகைத்தான்.
“என் கவிதைகளை யாரு வெளியிடுவா?”
“நீ ட்ரை பண்ணி பாரேன் டா. கண்டிப்பா வெளியிடுவாங்க” அவள் நம்பிக்கையை கலைக்க விரும்பாமல் சரியென்று தலையாட்டிவிட்டு விடுதிக்கு வந்து மொட்டை மாடியில் வானம் பார்த்து கிடந்தான். நட்சத்திரங்களின் காதுகளில் கவிதை நூலை தான் வெளியிடப்போகும் செய்தியை  சொன்னபோது இவனுடல் சிலிர்த்தடங்கியது. சத்தமிட்டு கத்தவேண்டும் போலிருந்தது.பொங்கி வழிகின்ற சந்தோஷத்துடன் அறைக்கு திரும்பியவன் எழுதியதில் சிறந்த ஐம்பது கவிதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினான். பின்னிரவில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்த நிம்மதியில் கவிதை நோட்டை நெஞ்சில் கவிழ்த்தபடி உறங்கிப்  போனான்.
-----o0o------
தொலைபேசி அழைப்பிலிருந்து மீண்டவர் இவனது கவிதை நோட்டை புரட்டினார்.நான்கு நிமிட இடைவெளியில் கவிதை நோட்டிலிருந்து நிமிர்ந்தவரின் கண்களை உற்றுப் பார்த்தபடி இருந்தவனுக்கு மிச்சமிருந்த நம்பிக்கையும் அறுந்து விழுந்தது. உதடு பிதுக்கலுடன் கவிதை நோட்டை திருப்பித் தந்தவர் கேட்டு கேட்டுப் புளித்துப்போன அதே வார்த்தைகளை உச்சரித்தார்
“யாரு தம்பி கவிதை புக் வாங்குறா.. ஐம்பது பிரதி வித்தாலே பெரிய விசயம்..ஏதாவது நாவல் கீவல் இருந்தா கொண்டாப்பா” இவனது பதிலை எதிர்பாராமல் மீண்டும் தொலைபேச ஆரம்பித்துவிட்டார்.  
வலித்தது.சத்தமிட்டு அழவேண்டும் போலிருந்தது.முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நியோன் விளக்கின் வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த அத்தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தான். நான்கு நிமிடத்தில் எப்படி நாற்பது பக்க கவிதைகளை இவர் வாசித்திருக்க முடியும்? கொடும் இரவுகளில் கசிகின்ற மெளனத்தின் துணையுடன் தானெழுதிய உயிர்க்கவிதைகள் நான்கு நிமிடத்தில் மறுதலிக்கப்பட்டது தீயென சுட்டது. பச்சை நிற குப்பைத்தொட்டியொன்றின் அருகில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேகமாக வீடு திரும்பினான்.

 -----o0o------
தர்ஷிணி எம்.எஸ் படிப்பதற்கு அமெரிக்கா போய் விட்டிருந்தாள். வேலை தேடுதல் ஒன்றே இலக்காக இவன் திரிந்தபோதும் எந்தவொரு வேலையும் கிடைத்துவிடவில்லை. வேலையின்மையின் வலியிலும் நண்பர்களற்ற தனிமையிலும் கவிதை மட்டுமே வலிமிகுந்த பொழுதுகளில் உடனிருந்தது.
துயரத்தின் கரங்கள் இவனை இறுக்கிய ஓர் இரவில் உக்கிரத்துடன் கவிதை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. அறைக்குள் நுழைந்த அப்பா இவன் கவிதை எழுதிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அம்மாவிடம் கத்த ஆரம்பித்தார் “எப்ப பாரு கவிதை கிறுக்கிட்டு கிடக்கானே உம் பையன் இத வெச்சு நாக்கு வழிக்க கூட முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லுடி. ஒரு வேலை வாங்க துப்பில்ல இவனெல்லாம் கவிதை எழுதி என்னத்த கிழிக்க போறான்?” முதன் முதலாய் இதயம் கிழிபட்டது அன்றுதான். நாக்கு வழிக்கக்கூட லாயக்கற்ற கவிதைநோட்டை சுவற்றில் எறிந்துவிட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். அதென்ன கவிதை எழுதுபவன் என்றால் இத்தனை கேவலம்? ஏனிந்த அவலம்? கோபத்தில் எங்கு போவதென்று தெரியவில்லை. வீட்டிற்கு அருகிலிருந்த தியேட்டருக்குள் நுழைய எத்தனித்தபோது அலைபேசி சிணுங்கியது. அமெரிக்காவிலிருந்து தர்ஷிணி அழைத்திருந்தாள். கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாய் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் விரைவில் வேலை கிடைத்துவிடுமென்றும் சொல்லிக்கொண்டிருந்தான். பேசிமுடிந்தவுடன் மனம் லேசாக ஆனது போலிருந்தது.என் நிரந்தர தோழிகள் கவிதையும்,தர்ஷிணியும் மட்டும்தானென்று முணுமுணுத்தன  உதடுகள். வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். காலை அம்மா கதவை திறந்தபோது மேசை மீது தலைகவிழ்ந்த நிலையில் படுத்திருந்தான். மேசையில் கிடந்த கவிதைநோட்டின் தாள்கள் ஜன்னல் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. அருகில் சென்ற அம்மா கவிதை நோட்டில் சிகப்பு எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்தாள். தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள் என்றிருந்தது. இரத்தம் தோய்ந்த அவனது விரல்களை கண்டு அலற ஆரம்பித்தாள் அம்மா.
-நிலாரசிகன்.

நன்றி: நவீன விருட்சம்

18 comments:

said...

:((

said...

:((

said...

:))

said...

//கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. //
வேதனையானாலும் அதை ரசிக்கும், ரசிக்க வைக்கும் திறமை கவிஞருக்கே
உரித்தான அழகு. கதை இயல்பாக உள்ளது.

said...

நிலா,
இந்தக் கதை 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியிருந்தால் மட்டுமே ரசிக்க முடியும். இப்போது அப்படியில்லை. உங்களிடமிருந்து இப்படியொரு கதை எதிர்பார்க்கவில்லை.
கதையை மின்னஞ்சலில் ஏற்கனவே படித்தேன். எனக்கு முழுவதுமாக பிடிக்கவில்லை. சமீபத்தில் நான் படித்த மோசமான கதை. நீங்கள் எழுதியிருப்பதால் நம்பிக்கையோடு வாசித்தேன். ஏமாற்றம்தான். செயற்கைத்தனம், கதையோடு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கதைகளை தவிர்த்து விடுங்கள்.

said...

no words......as usual..

said...

//நிலா,
இந்தக் கதை 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியிருந்தால் மட்டுமே ரசிக்க முடியும்.//

மனதில் பட்டதை சொன்னதற்கு நன்றி வாசு. இது 10 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றின் கோர்வை.ஏமாற்றமளித்தமைக்கு வருந்துகிறேன்.அடுத்த படைப்பில் சந்திக்கிறேன்.

said...

நன்றி நதியானவள்.

said...

nice story..

Title is making something in me to read that story...

so i just try to know about
தெரு நாயின் சாயல் கொண்டவன்..

who is that????????

but finally i have known about the person who is writing the poem..

very sad..

but like to feel...

i am fearing about me..

i have no time to write..

but i am doing...

said...

nice story nila
kathai eyalbaga ullathu ananal
mudivu migavum varuthamalikirathu
avanai nambi irukkum avalin kathai enna nila?
matrum enna nila en kelvikalluku pathil illiya thangalai patri ???

said...

நன்றி ஜீவன்..

said...

நன்றி ராம்..
அவன் இறந்துவிட்டானென்று நான் எழுதவில்லை.ஒரு கையறு நிலை.அவ்வளவே.

said...

kaiyaru nilai endral
udivil avan mazai meethu ratham sotta paduthitukirathanga avan amma kangiral endru eluthi irrukireerkal appadiyendral avan kathi enna nila???

said...

1. கவிதை எழுதுபவன் கேவலமானவன் இல்லை. அவனால் படைக்கப்பட்ட பல உயிர்கள் அவன் கவிதைகளில் சாகா வரம் பெற்று உலவுகின்றன.
2. "கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா?" - முற்றிலும் உண்மை. காதலின் இனிமையையும் வலியையும் நமக்கு நாமே உணரவே கவிதைகள். காதலியிடம் பேச கண்களும் ஒற்றை வரியும் போதுமே.
3. ஒரு அன்பான வேண்டுகோள்: கொஞ்சம் சந்தோஷமாகதான் கதையை முடிங்களேன். ஒவ்வொரு கதை படிக்கும் போதும் வலிக்கிறது...

said...

//3. ஒரு அன்பான வேண்டுகோள்: கொஞ்சம் சந்தோஷமாகதான் கதையை முடிங்களேன். ஒவ்வொரு கதை படிக்கும் போதும் வலிக்கிறது... //

அன்புள்ள நண்பா,
கதையை நான் முடிப்பதில்லை. கதை என்னை எழுத வைக்கிறது. இந்தக் கதையின் முடிவு நானே எதிர்பாராதது. சந்தோஷமான முடிவு ஏன் ஏற்படவில்லை என்பது எனக்கே தெரியவில்லை என்பதே உண்மை.
உங்களது பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.

said...

//சந்தோஷமான முடிவு ஏன் ஏற்படவில்லை என்பது எனக்கே தெரியவில்லை என்பதே உண்மை//

உண்மை...

said...

//ஒரு அன்பான வேண்டுகோள்: கொஞ்சம் சந்தோஷமாகதான் கதையை முடிங்களேன். ஒவ்வொரு கதை படிக்கும் போதும் வலிக்கிறது..//

Yes Nila...
The same request from me too....

said...

ok...

avanathu kavithaikalaiyum idaiyidaiye solliyirukkalaam....