Thursday, July 01, 2010

நிச்சலன கவிதைகள்




1.
தீராத பெரும்துயர் கரைந்துருகி
நதியென ஓடுகிறது.
கண்ணீரால் சூழந்திருக்கிறது
என் இரவுத்தீவு.
வார்த்தைகள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்து ஊமையாகும் தருணத்தில்
ஒர் உன்னதமான பாடலை
இவ்விரவு இசைக்க ஆரம்பிக்கிறது.
பவித்திரம் வழியும் இந்த இரவுக்குள்
வந்தமர்கின்றன சில ஊனப் பறவைகள்.
2.
இதென்ன பெரிய விஷயமா
என்கிறீர்கள்.
இதிலென்ன அற்புதமிருக்கிறது
என்று பரிகசிக்கிறீர்கள்.
இவ்வளவு முட்டாள்த்தனங்கள்
ஏனென்று வினவுகிறீர்கள்.
என் சின்னஞ்சிறு உலகிற்குள்
சத்தமின்றி பறந்துகொண்டிருக்கின்ற
பட்டாம்பூச்சிகளின் பின்னால் ஓடுகிறேன்
நான்.

3.
இளவேனில் பூக்களால் பின்னப்பட்ட
என் கனவுகளை உனக்கு பரிசளிக்கிறேன்.
மழையின் குதூகலத்துடன் பெற்றுக்கொள்வாய்
என்றிருந்தேன்.
கோடரியுடன் வருகின்ற உன்னைக் கண்டு
மரித்து விழுகின்றன பூக்கள்.
கவிதைகளின் மரணமும்
இப்படித்தான் நிகழ்ந்தது.
மழையை தின்னத்துவங்குகிறது
செங்குருதி வெயில்.
4.
புத்தனுக்கும் உனக்குமிடையே
யுத்தமொன்று நிகழ்கிறது.
முடிவில்
வீழ்கிறது போதிமரம்.
நிச்சலன குளத்தில் கற்களை
எறிந்தபடி அமர்ந்திருக்கிறாய்
உனது வாக்குவாதங்கள் ஒவ்வொன்றாய்
கற்களாக உரு மாறுகிறது.
கொஞ்சம் அழுதுவிட்டு
சிலுவை சுமந்தபடி நடக்கிறாய்
நீ.
5.
கூரிய பற்களின் ஓரங்களில்
என் குருதி படிந்திருக்கிறது.
புசித்த களைப்பில் நிஜம்
உதிர்க்கிறாய்.
காமத்தின் துவக்கப்புள்ளி
பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
சாம்பலென உதிர்கிறேன்.
சர்ப்பவாசம் அறைக்குள் ஊடுருவும்
தருணம்
நேசத்தின் முகமூடி அணிந்து
வெளியேறுகிறாய்,
விஷம் தோய்ந்த வார்த்தைகளை
வீதியெங்கும் சிதறவிட்டபடி.
-நிலாரசிகன்.

12 comments:

said...

மிக மிக அழகான கவிதைகள். வாழ்த்துக்கள் கவிஞரே!

said...

நன்றாக இருந்தது நிலாரசிகன். வாழ்த்துக்கள்!!

Anonymous said...

parkindra poo ellam azhagalla..
irunthum sila koonthalil
eri vital athavum azhakuthan...
athupola
en manthoda uravadum sila
ninaivugal solkirathu...
um kavithaiyum azhaguthan...
unnodu uravada pogum sila ninaivu
ennodum uravadi irupathaal than...

said...

இரண்டாம் கவிதை மிக அழகு

//என் சின்னஞ்சிறு உலகிற்குள்
சத்தமின்றி பறந்துகொண்டிருக்கின்ற
பட்டாம்பூச்சிகளின் பின்னால் ஓடுகிறேன்
நான்//

:)

said...

இப்போதைய நிலாவின் கவிதைகளில் பெரும் மாற்றம் தெரிகிறது. வேறு தளத்தை நோக்கிய பயணமா இது?

said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே..

said...

உங்களது கவிதைகள் அனைத்தும் படித்தேன். அனைத்தும் அருமை.

said...

கொஞ்சம் அழுதுவிட்டுசிலுவை சுமந்தபடி நடக்கிறாய் நீ.

Romba nalla iruku Nila. . .

said...

நிலாவின் வரிகள் மென்மேலும் மெருகேறியிருக்கின்றன..வாழ்த்துகள்.கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை

Anonymous said...

அழகான வரிகள்..அருமை நண்பரே...

said...

//என் சின்னஞ்சிறு உலகிற்குள் சத்தமின்றி பறந்துகொண்டிருக்கின்ற பட்டாம்பூச்சிகளின் பின்னால் ஓடுகிறேன் நான்.
//
:)

//புசித்த களைப்பில் நிஜம் உதிர்க்கிறாய்.//
Nice..

said...

அருமையான கவிதைகள்

ரசித்தேன்