Tuesday, October 20, 2009

அப்பா சொன்ன நரிக்கதை




அப்பா சொன்ன நரிக்கதை
("சிறு"கதை)

1.

இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக
அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை. அம்மா எப்பொழுதும் வேலை வேலை என்று அலைபவள். காலை ஏழே முக்கால் ரயிலுக்கு
சென்றால் இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வருவதற்குள் நான் உறங்கிவிடுவேன். காலையில் எனக்கு
தலைசீவி விடும் நேரம் மட்டும் பேசுவாள். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்.
அப்பாதான் என்னை தூங்கவைப்பார். என் அருகில் அமர்ந்து கதை சொல்வார். காட்டில் நடக்கும் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்
ஒவ்வொரு கதையின் முடிவிலும் என் நெற்றியில் முத்தமிடுவார். நான் உறங்கியிருப்பேன்.
எங்கள் வீட்டில் அம்மா,அப்பா நான் மூன்று பேர் மட்டும்தான்.
அம்மா கொஞ்சநாளாக சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

2.

"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா"

ஜன்னலோர இருக்கையில் நாவலுக்குள் மூழ்கியிருந்தவள் தலை உயர்த்தி பார்த்தேன். அவன் நின்றுகொண்டிருந்தான்.ரயில் சினேகன்.

"யெஸ்"

"உங்களுக்கு சம்மதம்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்"

இதை எதிர்பார்க்கவில்லை நான்.உடைந்த கண்ணாடி சில்லுகளாய் சிதறிப்போன வாழ்க்கையிலிருந்து மெல்ல இயல்புக்கு
திரும்பும் தருணத்தில் அவனது இந்தக்கேள்வி எனக்குள் பல கேள்விகளை கேட்டுப்போனது. விரக்தியான புன்னகையில்
அவனை கடந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்தேன். அவனது உருவம் செவி வழியே இதயம் புக முயற்சித்துக்கொண்டிருந்தது.
நாளை சம்மதம் சொல்ல மனசு விரும்பியது. சொல்வேன்.

3.

அப்பா நான் கேட்கும் எதையும் மறுத்ததில்லை. உடனே வாங்கி தந்துவிடுவார். தினமும் அப்பா சொல்லும் கதை கேட்பதற்காகவே
இரவுக்காக காத்திருப்பேன். இன்றும் அப்படித்தான் காத்திருந்தபோது,அருகில் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.இன்று நரிக்கதை.
சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ அரவம் கேட்டது.
அப்பாவின் சட்டையை கிழித்துக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பாவிடம்
சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.நான் தூங்கிக்கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கண்கள் கசக்கி பார்த்தேன். எதற்காக அப்பாவை திட்டுகிறாள் என்று புரியவே இல்லை.

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார் என் இரண்டாவது அப்பா. கலைந்திருந்த என் ட்ரஸ்ஸை சரி செய்துகொண்டே எழ முயன்றேன்.முடியவில்லை.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

Saturday, October 17, 2009

1 நிமிடம் 10 குழந்தைகள் :(




1 நிமிடத்தில் பசியால் உலகெங்கும் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

காணொளி:




உதவ விரும்பும் அன்பர்கள்
இங்கே சொடுக்குங்கள்:

https://www.wfp.org/donate/1billion

Thursday, October 15, 2009

கழுவில் ஏற்றிய நீர்த்துளிகள்





காரணம் சொல்ல முடியாத துயரத்தில் உன் கண்கள் சிதறிக் கிடக்கும் கடற்கரையை வெறித்துக்கொண்டிருந்தன.
ஆர்ப்பரித்த அலைகள் உனது நீள் மெளனத்தின் அடர்த்தியை புரிந்துகொள்ளமுடியாமல் துடிதுடித்து அடங்கிய பின்னர் என் முகம் பார்த்தாய் நீ.
இருள் கவிந்த அந்த கருக்கலில் என்னை நோக்கி மிதந்து வரும் உன் பார்வை பரிதவிப்புடன் கூடிய இயலாமையின் கலவையாயிருந்தது.

உன்னை பரிகசித்த சொற்களின் கூர்மை கண்களோரம் கசியும் கண்ணீரில் மினுமினுத்தது.
ஆம்..நீ அழ துவங்கி இருந்தாய்.
மேகங்களினூடே பயணித்து பொல்லாத வானத்துடன் சண்டையிட்டு உனக்கென நான்
பறித்து வந்த நிலவுபொம்மை மீது விழுந்த உன் முதல் துளி கண்ணீரில் சட்டென்று நிமிர்ந்தது
நிலவு.
கண்ணீர் துடைக்க விரைந்த என் கைகளை பற்றிக்கொண்டு உள்ளங்கையில் முகம் புதைத்தழுதாய்.

தேவதைகளின் தேவதை உன் கண்ணிரின் மென்சூட்டில் வெந்துபோனது என் உள்ளம்(ங்)கை.
பதறிய நெஞ்சுடன் உன்னை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிடுகிறேன்.
நெஞ்சில் சாய்ந்தபடி மெல்ல விம்முகிறாய்.உன் விழியின் விசும்பல் சப்தத்தில் துடிக்கும்
என் இதயம் விசும்ப ஆரம்பித்துவிடுகிறது.
நெஞ்சம் நனைக்கும் உன் கண்ணீர் கண்ணாடி யன்னலில் மழை வரையும் ஓவியமென என்னில் படர்கிறது.
சொட்டு சொட்டாய் உன்னிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தீர்கிறது கனத்த இதயத்தின் வலிகள்.

ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே நாம் அமர்ந்திருக்கிறோம்.
உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை.
நாய்க்குட்டியின் தலையை வாஞ்சையுடன் தடவுவது போலுன் தலையை தடவிக்கொடுக்கிறேன்.
கன்னத்தில் நீர்க்கோடுகள் வரைந்த கண்ணீரை துடைக்கிறதென் கைகள்.

பட்டாம்பூச்சி பின்னோடும் பாவாடைச் சிறுமியின் குழந்தைமை நிரம்பிய மனதை ஒத்திருக்கிறது கடற்கரை மணலில் அழுதுகொண்டே நீ வரைந்த பூனைச் சித்திரம்.
அதிகரிக்கும் இருளின் காரணமாய் கலைந்து செல்கின்றனர் கடற்கரை மக்கள். நாம் மெல்ல நடக்க துவங்குகிறோம்.ரயில் நிலையம் வரை விரல்கோர்த்து ஏதும் பேசாமல் நடந்து வருகிறாய் நீ.

இருளை கிழித்தபடி வந்து நிற்கிறது ரயில். ரயிலேறும் வரை மெளனித்தவள், ரயிலேறிய பின்
நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய். கிளம்பிச் சென்றது ரயில்.

கைகள் நனைத்த உன் கண்ணீரின் ஈரம் என்னுயிரில் படிந்திருக்க கனத்த நெஞ்சுடன்
வீடு திரும்புகிறேன் நான்.
யாருமற்ற நிசப்த இரவில் பொழியத் தொடங்குகிறது வெள்ளை மழை.

Wednesday, October 14, 2009

கடைசியாக...




நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்

நான்+நான் = சுயமழித்து திரிதல்.

கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்

கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்

நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்

ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு

கடைசியாக,

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்

Monday, October 12, 2009

அகநாழிகை முதல் இதழ் விமர்சனம்





சிற்றிதழ் நடத்துவது பற்றி ஒரு இதழாளர் சொன்ன வாக்கியம் "சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது". வேடிக்கையாக
தோன்றினாலும் இதன் பின்னாலிருக்கும் வலி சிற்றிதழ் நடத்துபவர்களாலும் அதை சார்ந்து இயங்கும் எழுத்தாளர்களாலும் மட்டுமே உணரப்படுவது. மிக முக்கிய காரணம் வெகுஜன இதழ்கள் போல் பல வகையான செய்திகளை சிற்றிதழ்கள் தாங்கி வருவதில்லை.
இதன் காரணமாகவே சிற்றிதழாளர்களின் வருமானம் அசலை விட எப்போதும் குறைவாகவே இருக்கிறது(ஒரே வார்த்தை "நஷ்டம்")
அதையும் மீறி பல சிற்றிதழ்கள் இன்று வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்படுவதற்கான மிக முக்கிய காரணம் இலக்கியம் மீதான
தீராத காதலும் தாகமும் எனலாம். நவீன விருட்சம் இதழ் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக வருவதற்கு காரணம் அதன் ஆசிரியர் அழகிய சிங்கர்
இலக்கியம் மீது கொண்ட தணியாத தேடல் மட்டுமே.

இம்மாதம் வெளியாகி இருக்கும் அகநாழிகை இதழின் உள்ளடக்கம் மிக நேர்த்தியானதாக இருப்பதை கண்ட போது இது முதல் இதழா அல்லது முப்பதாவது இதழா என்கிற சந்தேகமே என்னுள் எழுந்தது. இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் மற்றும் அவரது ஆசிரியர் குழுவின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

சிறுகதைகள்:

1.பூனைக்குட்டி - பாவண்ணனின் இந்த சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க இன்னும் இருநாளாகலாம். எங்கெல்லாம் பூனைக்குட்டியை
பார்க்கிறேனோ அங்கெல்லாம் "வைதேகி"யின் முகம் நிழலாடி மறைகிறது. அதீதமான ரோமங்கள் உடலெங்கும் வளர்ந்து,நோய் பீடிக்கப்பட்டு பூனைக்குட்டி பொம்மைகளுடன் மட்டுமே தன்னுலகை சிருஷ்டித்துக்கொள்ளும் அந்தச் சிறுமியின் உணர்வுகள் ஒவ்வொரு வரியிலும் நம்முடன் உரையாடி செல்கின்றன. (உமா மகேஷ்வரியின் மரப்பாச்சி சிறுகதையின் முடிவை ஒத்ததாக இக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது)

2.கிறக்கம் - யுவன் சந்திரசேகர். இம்மாதம் உயிர்மை,காலச்சுவடு,அகநாழிகை அனைத்திலும் யுவனின் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு கதைக்கும் மறுகதைக்கும் சம்பந்தமே இல்லை (நடையில்). வழக்கம்போலவே அசத்தலான புனைவு.

3.ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்- வெகு சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர் சுந்தர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படைப்பிது. உதாரணமாக இவ்வரிகளை குறிப்பிடலாம் "ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறைவிட்டான் என்று வாசித்துக்கொள்ளவும்).
பின்நவீனத்துவ கதை என்பதற்கான எல்லா அறிகுறியும் இக்கதையை நிறைத்திருக்கின்றன. சிறுகதைக்கு "தொடரும்" போட்டு முடித்திருக்கிறார்.

மேலும் நான்கு கதைகள்:

நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
மழை புயல் சின்னம் - விஜய் மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா(லக்கிலுக்)
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்

(இக்கதைகளுக்கான குறிப்பை அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி படித்து விடுங்கள் :)

கவிதைகள்:


இணையத்தில் பரவலாக எழுதும் கவிஞர்களின் படைப்பும் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கும் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

என்னை அதிகம் கவர்ந்த குறுங்கவிதை:

தன்னிரக்கம்:

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்.

-சேரல்

கட்டுரைகள்:


1.தமிழ்சினிமாவும் தமிழனும் சில மசால் வடைகளும் - அஜயன்பாலா சித்தார்த்:

2.ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - வே.அலெக்ஸ்

3.பரமார்த்த குருவும்
சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் - வளர்மதி

4.அலகிலா சாத்தியங்களினூடே... - வெ.சித்தார்த்

முதல் கட்டுரையில் தமிழ்சினிமா 80 முதல் 1990 வரை அலசி ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை தொகுத்திருக்கிறார் அஜயன்பாலா. To be honest மற்ற கட்டுரைகள் இன்னும் வாசிக்கவில்லை :)

பிற:

1.கேபிள் சங்கர் இயக்கிய 'விபத்து' குறும்பட அறிமுகம்
2.உரையாடல் சிறுகதை பட்டறை குறித்த தனதனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் ஆதிமூலக்கிருஷ்ணன்
3.டச்சு மொழி திரைப்பட விமர்சனம் - நதியலை

ஒரே குறை:

தலையங்கம் எங்கே? சரி வேண்டாம் முதல் இதழ் பற்றிய குறிப்பாவது ஆசிரியர் கொடுத்திருக்கலாம். படைப்பாளிகளுக்கு
மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் இதழ் நடத்தும் நான் பார்வையாளனாக இருந்துகொள்கிறேன் என்று நினைத்திருப்பாரோ?
பொன்.வாசுதேவனின் கவிதைகளும் இடம் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய +:

1.சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய இலக்கிய இதழ்கள் இரண்டு
உயிரெழுத்து(ஐந்து அல்லது ஆறு கதைகள்), யுகமாயினி(நான்கு கதைகள்).
அகநாழிகை முதல் இதழிலேயே ஏழு சிறுகதைகளுக்கு இடமளித்திருப்பது சிறுகதை இலக்கியம் மீதான வாசக ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.

2.சிறுகதைகளுக்கும்,கவிதைகளுக்கும் ஏற்ற புகைப்படங்கள்.

சந்தா மற்றும் மேலதிக விபரங்களுக்கு
இங்கே சுட்டுங்கள்

Sunday, October 11, 2009

முகம் விற்பவளின் இரவு



1. முகம் விற்பவளின் இரவு


பல ஆண்கள்
மூன்று பெண்கள்
ஒளிக்கண்களையுடைய
வெண்ணிற நாய்க்குட்டிகள்
ஆறு அல்லது ஏழு
இரண்டு துர்மரணம்
மற்றும்
நிறைவேறாக் காதலின்
கடைசிக் கண்ணீர்துளி
இவைகள் நிரம்பிய
நீண்டதொரு பயணத்தின்
முடிவில் அவள் தன் முகத்தை
வயதுமறைக்கும்
கண்ணாடியில் ரசித்துக்கொண்டிருக்கிறாள்
பக்கத்து அறையின்
கதவிடுக்கில் வழிந்துக்கொண்டிருக்கிறது
அவள்
ரத்தத்தின் கண்ணீர்.


2. கடலடியில் நகரும் இருள்*


என்னை நீங்கியவர்கள்
ஒன்று சேர்ந்து
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்
எனக்கெதிரான அம்புகள்
தயாரிக்கவும்
என் சவக்குழிப் பூக்கள்
வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது
மாதங்கள் சில கழிந்தபின்
சாம்பல்களுக்கு நடுவில்
மயங்கிக்கிடந்தது என் பீனிக்ஸ்.
இனி,
எவ்விதத்தடையுமின்றி
அவர்கள்
சத்தமிட்டு சிரிக்கலாம்.



3. காற்றில் அலையும் இறகு*


எவர் கண்ணிலும் புலப்படாத
பறவை
நான்கு சமுத்திரங்களை
கடந்து வந்திருந்தது
கரிசல் நிறத்திலான அல‌கும்
செவ்வான்நிற உடலும்
கொண்டிருந்த அப்பறவை
வேம்பின் உச்சிக்கிளையில்
களைப்பாறி முடிந்தபின்
மேலேழும்பி பறக்க துவங்கியபொழுது
அதன் உடல் பிரிந்த இறகொன்று
காற்றில் கலந்தது
அக்கணத்தில்
சமுத்திரங்கள் உருமாற்றங்கொண்டு
மழைத்துளிகளாய் மண்ணில்
விழுந்து சிலிர்த்தன.

* இந்த இரு கவிதைகளும் இம்மாத அகநாழிகை இதழில் வெளியானவை.

Friday, October 09, 2009

நெஞ்சில் நிற்கும் சிறுகதைகள்



முன்குறிப்பு:


இந்தப் பதிவு சிறுகதைகள் மீது ஆர்வம் கொண்டு வாசிக்க ஆரம்பித்திருக்கும் ஆரம்பநிலை வாசக/எழுத்தாளர்களுக்கு மட்டுமே. சிறுகதைகளில் ஊறித் திளைத்த ஜாம்பவான்கள் Just close this window :)


உரையாடல் சிறுகதை போட்டி நடந்த பின்பு பலரது கவனம் சிறுகதைகளின் மீது திரும்பி இருக்கிறது.சிறுகதைகளை தேடி படிக்கும்
வலைப்பதிவு நண்பர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சிறுகதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில் தேடித்தேடி படித்த பல கதைகள் எப்போதும்
மனதுக்கு மிக நெருக்கமாய் இருக்கின்றன. ஏதேனும் ஒரு பொழுதில் அவை என்னுடன் உரையாடுகின்றன.சமயங்களில் சிறுகதையில் வாழும்
கதாபாத்திரங்களுடன் நாமும் பேசுகிறோம்/சிரிக்கிறோம்/அழுகிறோம்...இன்னும் பல "றோம்".

நான் வாசித்து நேசித்த சிறுகதைகளின் பட்டியல் இது.சிறுகதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். (சுட்டி கொடுக்க வில்லை,கதையின் தலைப்பை மட்டும் வைத்து சிறுகதைகளை தேடிப்பிடித்து வாசிக்கும் அனுபவம் அலாதியானது என்பதால்,மன்னிக்க!)

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
காகங்கள் - சுந்தர ராமசாமி
எண்ணப்படும்(வார்த்தை இதழில் வெளியானது) - நாஞ்சில் நாடன்
செப்டிக் - சிவசங்கரி
பத்மவியூகம் - ஜெயமோகன்
புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்
யாருமற்ற இரவு(உயிரோசை இணைய இதழில் வெளியானது) - உமா ஷக்தி
நூற்றி சொச்ச நண்பர்கள் - யுவன் சந்திரசேகர்
ஊர்வாய் (மயில் ராவணன் சிறுகதை தொகுப்பு) - மு.ஷரிகிருஷ்ணன்
சாட்டை(மணல்வீடு இதழில் வெளியானது) - கண்மணி குணசேகரன்
ஆண்கள் விடுதி அறை எண் 12 - திருச்செந்தாழை
கோடம்பாக்கம் - சாரு நிவேதிதா
காதுகள் - எழுதியவர் பெயர் நினைவில் இல்லை - ஆனந்தவிகடனில் வெளியானது
வெள்ளி மீன் - பெருமாள் முருகன்
ஆண்கள் படித்துறை - ஜே.பி.சாணக்யா
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
கடிதம் - திலீப்குமார்
ஆகாயம்,நகரம்,ஆண்மை - சுஜாதா
கச்சை,சர்ப்ப வாசனை(புனைவின் நிழல் தொகுப்பு) - மனோஜ்
மதனிமார்கள் கதை - கோணங்கி
கன்னிமை - கி.ரா
தனுமை,தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
எஸ்தர் - வண்ணநிலவன்
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன - எஸ்.ராமகிருஷ்ணன்
புலிக்கலைஞன் - அசோகமித்ரன்
அக்னி பிரவேசம் - ஜெயகாந்தன்
மாடுகள் - இமையம்
கடல் - பாவண்ணன்
அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
மரப்பாச்சி,அரளிவனம் - உமா மகேஸ்வரி
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
சைக்கிள்,அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
நடன விநாயகர் - சூடாமணி
சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்
வெயிலோடு போய் - தமிழ்செல்வன்
காடு - பா.செயப்பிரகாசம்
உயிரிடம் - அழகிய பெரியவன்
அமெரிக்காக்காரி - அ.முத்துலிங்கம்
வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
அழுவாச்சி வருதுங் சாமி - வாமு.கோமு



Extras:


மேலே பட்டியலில் உள்ளவை என் நினைவில் நிற்பவை மட்டுமே. மேலும் பிடித்த பல சிறுகதைகளின் ஆசிரியர் பெயர்கள் நினைவில் இருக்கின்றன.கதையின் தலைப்பு மறந்துவிட்டது.

இப்பதிவு எழுத அ.மு.செய்யதுவின் இந்தப் பதிவு மிக முக்கியகாரணம். அவருக்கு நன்றி.

சில சிறுகதை தொகுப்புகள் பற்றி நான் எழுதிய பழைய பதிவு இங்கே

தண்டம் - பூங்காற்று தனசேகர் எழுதிய சிறுகதை தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பல மாதங்களாக தேடுகிறேன்.

உங்களுக்கு பிடித்த கதைகளை பின்னூட்டமிடுங்கள்.

நன்றிகள் பல :)

Thursday, October 08, 2009

வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனம்



பழுத்த மஞ்சள் இலைகளை
ஒடித்துப்போடுகிறாள் வனத்தை
சுத்தம் செய்வதாக திரியும்
பாவனைப்பெண்.
பச்சை இலைகள் துயர்மிகுந்த
தலையசைப்புடன்
விடைகொடுக்கின்றன.
இளைப்பாற இலைதேடும்
வண்ணத்துப்பூச்சிகள்
வீழ்ந்து மரித்த மஞ்சள்
இலைகள் மீது வந்தமர்கின்றன.
பாவனைப்பெண்ணின் உடல்
கணப்பொழுதில்
நிறமிழந்து மண்ணில்
சரிகிறது.
அவள் உடலுக்குள்ளிருந்து
வெளியேறுகின்றன
அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்.

Thursday, October 01, 2009

வார்த்தை இதழில் கவிதை

நண்பர்களுக்கு,
இம்மாத(அக்டோபர் 2009) வார்த்தை இலக்கிய இதழில் என்னுடைய கவிதை பிரசுரமாகி இருக்கிறது. இத்துடன் அதனை இணைத்திருக்கிறேன்.


Wednesday, September 30, 2009

பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்




சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:

www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com

http://groups.google.com/group/palsuvai

http://groups.google.co.in/group/clapboard

http://groups.google.com/group/kamathenu



கடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.

தற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.

இந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.

இம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000,நூல்வெளியீடு,அரங்கவாடகை - மீதமாகும் தொகை தாயுமானவனின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும்) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்னெடுப்போர்:

"யுகமாயினி" சித்தன்: 9382708030
கவிஞர்.அன்பாதவன்: 9500102765
கவிஞர்.அரங்க மல்லிகா: 9842979756

[பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள்]


Account Holder - J P Anbusivam
A/C - 2169010000848
Bank of Baroda,
Chennai - 1


பணம் செலுத்திய விபரங்களை chithankalai@yahoo.co.in எனும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

Monday, September 28, 2009

சொல்லடியில் மரணித்தவனின் குறிப்புகள்




ஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது. மனதின் விளிம்புச்சுவரில் அமர்ந்திருக்கும் சொற்கள் ஒவ்வொன்றாய் நமக்குள் குதித்தோடுகின்றன.எங்கிருந்து முளைத்தன இச்சொற்கள்? எதன் பரிணாமம் சொற்களாயின?
விடைகளற்ற இக்கேள்விகளுக்குள்ளும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தவொரு சொல்லும் நினைவில் மலராமல் ஒரு பொழுதேனும் வசிக்க முடிவதில்லை.

சொற்கள் அழகானவை. சொற்கள் ஆனந்தம் தருபவை. சொற்கள் அழவைப்பவை. நேற்றைய சொல் இன்று புதிதாகி வேறோர் அர்த்தம் தருகிறது.இன்றைய சொல் நேற்றைய நீட்சியாக முகிழ்கிறது. சொல்லப்படாத சொற்களும்,பழுதான சொற்களும்,உடைந்த சொற்களும் காற்றில் மிதந்தபடியே இருக்கின்றன. நமக்கு தேவையான கணத்தில் அவை
நம்மில் வந்து விழுகின்றன.சொற்களுக்கு முகமூடிகள் உண்டு.சொற்களுக்கு சுயமுண்டு. ஒரு சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அதன் உயிர்ப்பு நிலைபெறுகிறது.எழுதப்பட்டவுடன் சொற்கள் சரித்திரங்களாக மாறிவிடுகின்றன.


இலையில் ஊர்ந்து செல்லும் எறும்பின் படிமத்தை சொற்களே தீர்மானிக்கின்றன. சொற்களும் மரணமடைவதுண்டு.சொற்களுக்கும் உயிர்த்தெழுதல் சாத்தியப்படும்.கடவுளின் செவிக்குள் எண்ணற்ற சொற்கள் அனுப்பப்படுகின்றன.
அவை காற்றுப்படகில் கடவுள் நோக்கி விரைகின்றன.வெற்றுச்சொற்களால் சில நேரங்களில் புதிய கடவுளை மனிதனே படைத்தும்விடுகிறான்.

சொல்லின் பரிணாமம் எண்ணங்களாய் உருப்பெருகின்றன.பட்டாம்பூச்சி எனும் சொல் பிறந்தவுடன் மனத்திரையில் படபடக்கிறது உயிருள்ள பட்டாம்பூச்சி.

எதனால் இன்று என்னுள் ஊசலாடுகிறது ஒராயிரம் சொற்கள்?

சொன்னவள் நீ என்பதாலா?

மரணத்தை தொட்டுத்திரும்பியதே என்னுயிர் அந்த ஒருசொல் கேட்டு.
நிலவுக்கும் குளிரும் இவ்விரவில் உன்னை விட்டு நெடுந்தொலைவில் தனியனாய் சாலையில் நடந்துபோகிறேன். இத்தனை கனமா உன் மீதான
என் நேசம்? பெரும்சுமை கொண்ட கைவண்டியை தள்ளாடியபடி இழுத்துச் செல்லும் கிழவனின் தளர்ந்த நடையை ஒத்திருக்கிறது என் நடை.
என் ஹார்மோன் நதியில் நீந்தும் ஒற்றை மீன் உன் நினைவுகளின் கனம் தாளாமல் நடைபாதையோர மரமொன்றின் கீழ் அமர்கிறேன்.

உதிர்ந்துகிடக்கும் சருகுகளின் நடுவே மெளனித்திருக்கிறது ஓர் இலை. பச்சை நிறம் பழுப்பு நிறங்களின் நடுவே வீழ்ந்து கிடக்கிறது கவனிப்பாரற்று.
வீழ்ந்த அந்த ஓர் இலைக்காக வருந்துமா இம்மரம்? இலையும் என் நிலையில்தான் இருக்கிறதா? கனவொன்று மெல்ல என்முன் நிழலாடுகிறது.

கனவுவெளியில் கைகோர்த்து சிறுமி ஒருத்தியுடன் திரிகிறேன். அவளின் பாதங்கள் என் நெஞ்சில் தடம்பதித்தபோது சிறகு முளைத்த அவள் என்னை விட்டு தொலைதூரம் பறந்து செல்கிறாள். அவள் பிரிந்த நொடியில் என் கனவு தேசம் இருளடைந்து சூனியவெளியாக மாறி உடைந்த கண்ணாடி சில்லுகளாய் உதிர்ந்துவிடுகிறது.

உன்னிதழ் சிந்திய சொல் பேருருவம் பெற்று வளர்ந்துகொண்டே விண்ணோக்கி செல்கிறது.
பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறும் அச்சொல் மழைத்துளிகளாய் உருப்பெற்று என் தேகம் துளைக்கிறது. நான் வீழ்கிறேன்.
ஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.....

இவை எதுவும் அறியப்பெறாமல் அருந்ததி பார்க்க தயாராகிக்கொண்டிருக்கிறாய் நீ.

Saturday, September 26, 2009

இசை உதிரும் இரவுகள்



1.
உடலின் அதிர்வுகளில்
நிரம்பி வழிகிறது
உனக்கென நான் எழுதிய
பாடல்.
என்னுள்ளிருந்து வெளியேறும்
வெப்பம் சலசலத்தோடும்
நீரோடையின் சாயலை கொண்டிருக்கிறது.
தீரா இசையின் கண்ணீரில்
நிறைகிறது யாக்கை.
அடர்குளிரடிக்கும்
கனத்த இரவில்
தனித்தனியே அழுது பிரிகின்றன
உதிர்ந்த நம் கனவுகள்.

2.

என்னை சுற்றிய
வெற்றிடமெங்கும்
சிறு சிறு பிம்பங்களாய்
நீ
உருமாறியிருக்கிறாய்.
ஒவ்வொரு பிம்பமும் உனது
வெவ்வேறு முகங்களை
அணிந்திருக்கிறது.
பைத்தியநிலை முற்றிய
ஒரு முகமும்
வெளிறிய புன்னகையோடு
ஒரு முகமும்
மர்மம் சூழ்ந்த
கறுப்புக்காடுகளை நினைவூட்டுகின்றன.
எதற்கென்று அறியாமல்
அழுதுகொண்டே இருக்கும்
ஒரு முகத்தில் மட்டும்
சிதறிக்கிடக்கின்றன
ஒராயிரம் ரோஜாக்கள்.

3.
தனிமையின் இசையில்
பிறக்கின்றன
சிறகுகளற்ற பறவைகள் சில.
அவை எழுப்பும்
ஒலிக்குள்ளிருந்து வெளியேறுகின்றன
வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள்.
பழுப்பு நிறத்தில்
கடக்கும் மேகங்கள்
நட்சத்திரங்களை சுமந்துபோகின்றன.
ஒவ்வொரு தாளத்திற்கும்
தலையசைக்கின்றன
இரவுச்செடிகள்.
துயர்மிகுந்த இரவின் பாடலை
உட்கொண்டு அருகருகே
மரணிக்கின்றன
நமது நாளைகள்.

-நிலாரசிகன்.

ப்ரியம்வதா!




சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்.அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்
முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.

எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் வாசகியாய் முதல் விமர்சகியாய் மாறிப்போனாய். தொலைபேசியில் தொடர்ந்த நம் நட்பு சந்தித்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தோம். மழை ஓய்ந்த மாலையொன்றில் பறக்கும் ரயிலேறி உன் அலுவலகம் வந்தேன்.
கவிதை பேசிக்கொண்டே கடற்கரை சென்றோம் நாம். ஐந்தடி சிகரம் நீயென்று புரியவைத்தது
உன் ஆழ்ந்த இலக்கியவாசம். டால்ஸ்டாயும்,நெருதாவும் வந்துபோனார்கள் நம் நட்புக்குள்.
உலக திரைப்படம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாய். உன் கனவுகளையும் என் கனவுகளையும்
நாம் பகிர்ந்துகொண்ட நவம்பர் மாத மழைநாள் உனக்கு நினைவிருக்கிறதா தோழி?

நட்பின் மற்றொரு பரிமாணத்தை உன்னில் கண்டேன்.என் வீடுதேடி வந்து என் அறையெங்கும்
சிதறிக்கிடக்கும் கவிதைபுத்தகங்களை ஒழுங்காய் அடுக்கி வைத்துவிட்டு தலையில் கொட்டிச் செல்லும் அற்புத தோழி நீ. உன் மடியில் முகம் புதைத்து என் கனவுகளை எல்லாம் உன்னில் கொட்டிவிட துடித்த மனதை கட்டுப்படுத்தி உன்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி வீடு திரும்பினேன்.

வெயில் சுடுகின்ற மார்ச் மாத நாளொன்றில் ப்ரியம்வதாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் எனத் தெரிந்து துடித்துப் போனேன். வதா என்னை நெருப்புக் குழியில் தள்ளிய துரோகி என்று தெரிந்தும் அதை நீ செய்தாய், எனக்கு பகை என்றால் உனக்கும் இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் அவளைப் பற்றி உனக்குத் தெரியாது அவள் அனல் காற்றைப் போன்றவள், நீயோ தென்றல். உன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து பின்னொரு நாளில் தூக்கி எறிந்துவிடுவாள். நீ மென்மனதுக்காரி உன்னால் தாங்க முடியாது என்றுதான் உன்னை நான் தாங்கப் பார்க்கிறேன். ஆனால் இப்போது சில நாள்களாய் என்னை உன் கரங்கள் தள்ளி விடுகின்றன.

நானும் வதாவும் கடற்கரை காற்றின் ஈரமான சுவாசத்துடன் மென்மையாக கை கோர்த்து கதைத்த காலங்களைப் பற்றியெல்லாம் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கு அப்போது நானும் என் அருகாமையும் காதலைப் போன்ற ஒன்றும் தேவையானதாக இருந்தது. அவளது வெறுமையான மாலைகளை என் கவிதைகள் இட்டு நிரப்பியது, தளும்பத் தளும்ப. அக்கறையான வார்த்தைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் வேஷமாய் போனது காலம் எனக்களித்த துயரான பரிசு.

அவள் மாறிப்போவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. மாற்றம் காணாதது ஏது சொல் காவ்யா? நீயும் தான் சில பொழுதுகளில் மாறிப்போகிறாய். விஷம் தீட்டிய வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்துப்போட்டு வடிந்த குருதியைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாய்.
அதன்பின் காயங்களுக்கு மருந்தாகவும் மாறியிருக்கிறாய்.
பெண் என்பவள் பெரும் மாயவலை. சிக்க வைத்து சிக்க வைத்து சிரிப்பவள். தானும் சிக்கிக் கொள்பவளாய் பாவனை செய்பவள். கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டு தன் வானில் தன் சிறகையே கதகதப்பாக்கிக் கொண்டு பறந்துவிடுபவள். வதாவும் அப்படித்தான் செய்தாள். காதலை சொல்லப் போகும் நாளிற்காக நான் காத்துக் கிடந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தேன். அவளிடம் சொல்லியும் சொல்லாத என் காதலை பிரகடனப்படுத்த முற்றிலும் தயாரானேன்.

அன்று என்னை எக்மோர் மியூசத்திற்கு அழைத்திருந்தாள். கடைசியில் நானே அருங்காட்சியகத்தில் வைக்கப்படப்போகும் பொருள் போலாவேன் என்று நினைத்திருக்கவில்லை. அவள் புது உடை அணிந்திருந்தாள். தலையில் எனக்கு பிடித்த மல்லிகைச் சரம். உதட்டில் புன்னகையுடன் என்னை வரவேற்றாள். என் பையினுள் அவளுக்கான வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை துடித்துக் கொண்டிருந்தது.

என்னடா ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கிறாய் என்று தண்ணீர் பாட்டிலை தந்தாள். நான் பெருகி வழிந்தோடும் வேர்வையை துடைத்து ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன். அது அவளின் தினம் போலும், விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். இடையில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சொல்லிவிடலாம் என்று பொறுமை காத்தேன். அவளின் அத்தனை உளறல் பேச்சுக்களையும் உலகின் தலைசிறந்த கவிதைகளைப் போலெண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில் அவளிடம் என் காதலை சொல்ல முனைந்த போது “சிவா,உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள்.
ஆர்வமும்,பதைபதைப்பும் என்னை தொற்றிக்கொண்டன.
அவள் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.
“உங்க ரூம்மேட் குமாரை நான்.. ” அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று திரும்பி விறுவிறுவென்று வெளியேறி விட்டேன் காவ்யா. என் அறைத்தோழன் குமாரையா அவள் காதலிப்பது. என்னைக் காதலிப்பதாய் அல்லவா அவள் ஒவ்வொரு செயல்கள் இருந்தன, எப்படி எங்கே இவர்கள் காதலை வளர்த்தார்கள், அதென்ன செடியா வளர்ப்பதற்கு என்று இந்த நேரத்திலும் அபத்தமாய் என் புத்தி இடித்துரைத்தது.

காதலை பெரிதும் மதிக்கும் உணர்வினன் நானென்று தெரியும்தானே காவ்யா? என் காலின் கீழ் பூமி உருண்டு கொண்டிருந்தது. சொற்களற்ற சொல் என் தொண்டைக் குழிக்குள் அமர்ந்து கொண்டு என்னை திக்க வைத்தது. ஒருவழியாய் அவளிடமிருந்து தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது.
குமாரும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காண்பித்திருந்தேன். அவனைப் பற்றி சில சமயம் சொல்லியிருக்கிறேன். எதேச்சையாக ஒரு நாள் அவள் என்னை சந்திக்க வந்திருந்த போது நான் அங்கிருந்திருக்கவில்லை. குமாரும் அவளும் பேசியிருக்கிறார்கள். அதன்பின் அவர்களின் பேச்சுக்கள் நிற்கவேயில்லை...இன்று என் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட மித்ர துரோகிகளிடம் நான் எப்படி முன்பு போல் பழகுவது. அவளுக்கு என் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமிருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் புலம்பியிருக்கமாட்டேன். என்னைத்தான் முதலில் அவள் காதலித்தாள், என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் தள்ளிப்போடும் குணம் என்னை குழியில் தள்ளிவிட்டது.

ஆனால் என் காதலை நான் சொல்லியிருந்தாலும் இவர்களின் காதல் நடந்தேறியிருக்கும். என்னை ஒதுக்கித்தள்ளியிருப்பாள், தூக்கி எறிந்திருப்பாள் அந்த மாயக்காரி. ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று பொருளைப் போல காதலை நிலைப்படுத்திவிட்டாள். நல்ல வேளை நான் தேர்ந்தெடுக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டேன். அது வரையிலும் காயம் அதிகமேற்படாமல் தப்பினேன். ஆனால் இது ஆறா வடுவாய் என்னிதயத்தில் ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.

நீ அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பது எதன் பொருட்டு என்றெனக்குத் தெரியவில்லை. நேசம் கொண்ட நெஞ்சில் நீ நெருஞ்சி முள்ளை ஏன் சொருகுகிறாய். காதல் இருக்கும் திசையை விட்டு விலகி நட்பு தேசத்தில் வந்திறங்கினால் இங்கும் அதே கொடுமை. என் மீது குறைப்பாடா அல்லது பெண்கள் என்றாலே இப்படித்தானா? புரியவில்லை இனிய தோழி. உருகிக் கரைந்து மடிந்து கொண்டிருக்கும் நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். காதல்தான் என்னை கசக்கி பிழிந்து ரத்தமும் சதையுமாய் கிழிந்தெறிந்துவிட்டது நட்பாவது என்னிடம் நிரந்தரமாய் இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு என் மனக்குமறலையெல்லாம் கொட்டி ஒரு மின்னஞ்சல் உனக்கு அனுப்பினேன்.

என் வாழ்வின் மொத்த அதிர்ச்சியும் உன் பதிலில் உறைந்திருந்தது.

டியர் சிவா,
மிகச்சுருக்கமாக உன்னிடம் ஓர் நிஜம் சொல்கிறேன்.
குமார் என் காதலன். ப்ரியம்வதா என் தோழி. எங்களை சேர்த்துவைக்க முயன்றவர்களில் மிக முக்கியமானவள்.
ப்ரியம்வதாவைத்தான் நீ நேசித்தாய் என்பது இவ்வளவு நாளாய் எனக்கு தெரியாது.
-காவ்யா.

என் தேவதையை இக்கணமே பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என் அன்பின் தோழியே உனக்கு என் திருமண வாழ்த்துக்கள்.இப்போது நிதானம் கலந்த அவசரத்துடன் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.அலைபேசி சிணுங்கியது."ஹலோ சிவா" ப்ரியம்வதாவின் குரலை கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் "வதா,நானே உன்னை பார்க்க வரலாம்னு" நான் முடிப்பதற்குள் இடைமறித்தவள் "சிவா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்றாள்.

-நிலாரசிகன்.

Friday, September 25, 2009

கிகுஜிரோ - திரைவிமர்சனம்



----------------------------
இயக்குனர்: டகேசி கிட்டானோ
வெளியான ஆண்டு: 1999
நாடு : ஜப்பான்
----------------------------

யாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில
மணித்துளிகளேனும் கழிக்க வேண்டுமா? கிகுஜிரோ திரைப்படம் பாருங்கள்.

பாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்
வீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.

பாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.
உன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.

அண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்கி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.
கிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.
அதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்
மாசோ திரும்பி நின்று அழுகிறான்.

அவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து "நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.

இருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்
அனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.

பெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.
அதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

எதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். சிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்லிய சோகமாய் மனதில் நிலைக்கிறது.
பெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)

படம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!

-நிலாரசிகன்.

Thursday, September 24, 2009

தொலைகடல்



விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ.

Wednesday, September 23, 2009

கண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்

------------------------------------------
புத்தகம்:அஞ்சலை
பகுப்பு: நாவல்
ஆசிரியர்:கண்மணி குணசேகரன்
வெளியீடு:தமிழினி பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு வெளியான ஆண்டு:2005
விலை:ரூ 160
--------------------------------------------
முதல் மரியாதை திரைப்படத்தின் முழுக்கதையை 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டிதேரு' என்கிற ஒற்றை வரியில் சொல்லியிருப்பார் வைரமுத்து.
அதேபோல் 'அஞ்சலை' எனும் இந்நாவலின் கதையை கண்மணி குணசேகரன் இப்படி சொல்கிறார்.
"வேண்டும் என வந்து, வேண்டாம் எனப் போய், திரும்பவும் வேண்டும் என நீளும் நடை"

ஏழைப்பெண் அஞ்சலையின் திருமண வயதிலிருந்து துவங்குகின்ற நாவல் அவளை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் எடுத்துச்செல்கிறது.
கதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.
கதை நடக்கும் களம் தான் என்னை அதிகம் கவர்ந்தது.
கார்குடல்,மணக்கொல்லை,தொளார் இந்த மூன்று கிராமத்தில்தான் அஞ்சலையில் வாழ்வு அல்லல்படுகிறது.
நெல்வயல் நிறைந்த கார்குடல்,முந்திரி தோப்புகள் நிறைந்த மணக்கொல்லை,சிறுதொழில் ஊரான தொளார் நம் கண்முன்னே விரிகிறது குணசேகரனின் வரிகளால்.

வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிய/தெரியாத அபலையாக அஞ்சலையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அலுக்காத உழைப்பை கொண்டிருக்கிறாள் அஞ்சலை என்பதை மிக அழகாக சிருஷ்டித்திருக்கிறார்.

அஞ்சலையின் சுகதுக்கங்களை புரிந்துகொண்டு பரிவாக உடனிருக்கும் தோழி வள்ளியும், தங்கச்சிக்காக ஓடோடிவரும் இளைய அக்காள் தங்கமணியும்,ஒருபுறம் மகளின் போக்கு பிடிக்காவிட்டாலும் "சனியன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்" எனும் மனோபாவத்தில் தள்ளாடும் தாய் பாக்கியமும்,ஊரே தவறாக சொன்னாலும் அம்மாவை தவறாக எப்போதும் நினைத்திடாத வெண்ணிலாவும் என்றும் மறக்கமுடியாத பாத்திர படைப்பு.

நாவல் முழுவதும் இழையோடும் வெயிலும் வெயில் சார்ந்த பகுதிகளும் வாசகனையும் வெக்கை நிறைந்த பூமிக்கு இழுத்துச்செல்கின்றன. அதிகம் வருணனைகள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும்
உரையாடல்கள் மூலமாகவே நகர்கிறது. சேரி மக்களின் அன்றாட வாழ்வில் வெகு இயல்பாக கலந்திருக்கும் சண்டைகளும்,சிறு சச்சரவுகளும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சோற்றுப்பானையில் விழுந்த இடியாய் வாழ்க்கை தொலைத்து நிற்கும் அஞ்சலை மீது எப்போதும் கேலிகளும்,குத்தல் பேச்சுகளும் எவ்வித குற்றவுணர்வுமின்றி வீசப்படுகின்றன. அந்த குரூர சந்தோஷத்தில் கழிகிறது அவர்களது காலம்.

மூத்த அக்காள் கல்யாணியின் ஈவு இரக்கமற்ற வசவுகளும்,செயல்களும் எழுத்தில் காணும் வெற்றுச்சொற்களாக படவில்லை. அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்
வன்மத்தையும்,வக்கிரத்தையும் உணர்த்துபவையாக உள்ளன.

நாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வட்டார வழக்கு. நவீன புனைக்கதைகளில் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரங்களில் அஞ்சலையே வலுவான படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

-நிலாரசிகன்.

Tuesday, September 22, 2009

இரண்டாம் கருவறை





வார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்
சிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்
எப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.

கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.

முத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்
உன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

என் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள்? நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.

நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.
உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.

இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.

Saturday, September 19, 2009

இரண்டாம் தவறில் ஜனித்தவன்





கனவுகளில்
இறப்பை கொண்டாடுகிறான்
அவன்.
சிதை அல்லது கல்லறை
ஏதோவொன்றில் அவனது வாழ்க்கை
முற்றுப்புள்ளியென மாறுவதில்
பெருமகிழ்ச்சி கொள்கிறான்.
தன் காலடியில்
மருண்ட விழிகளுடன் வானமும்,
தலைமயிர் கற்றைக்குள்
கதறி அழுகின்ற
பச்சைக் கடலும் அவனுக்கு
மிகுந்த உவப்பளிக்கிறது.
ஆதாம் ஏவாள் இருவரும்
அவனது குற்றவாளிக்கூண்டில்
தலைகுனிந்து நிற்கின்றனர்.
முதல் மனிதனின் இரண்டாம் தவறில்
ஜனித்தவன் நான் என்கிறான்.
கன்னத்தில் வழிந்தோடும்
கர்த்தனின் கண்ணீர் பிசுபிசுத்தபோது
கனவு கலைந்தவன்
இப்போது
தன் பிறப்பை கொண்டாடுகிறான்.

Wednesday, September 16, 2009

வீதியெங்கும் உலவும் ப்ரியங்கள்




1.

ஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்

ப்ரியங்களை வெகு இயல்பாய்

மறுதலித்து செல்கிறாய்.

வலிகொண்ட அதன் ப்ரியங்கள்

உன்னை பின் தொடர்ந்து

அன்பை யாசிக்கிறது.

ஒரு குவளையில் பாலூற்றி

அதற்கு அளிக்கிறாய்.

கடமை முடிந்துவிட்ட

திருப்தியில் உறக்கத்தில் ஆழ்ந்துபோகிறாய்.

அன்றிலிருந்து மிருகமானது

ப்ரியங்கள் அறுந்த

நாய்க்குட்டி.

2.

மழைத்துளிகளை சுமந்து வந்த

நாய்க்குட்டி

கண்ணாடியில் லயித்திருக்கும்

உன்னருகில் உடலை சிலிர்த்துக்கொண்டது.

இடம்பெயர்ந்த மழைத்துளிகள்

உன்

கன்னத்தில் பருக்களாயின.

சிவந்த விழிகளுடன்

நாய்க்குட்டியை துரத்துகிறாய் நீ.

உன்னிலிருந்து உதிர்கின்றன

உலர்ந்த மழைத்துளிகள்.

-நிலாரசிகன்.
_______________

Monday, September 14, 2009

இரு கவிதைகள்




மின்னல் தாண்டவம்


இருளின் கற்பை மின்னலொன்று
இரு துண்டுகளாய் வெட்டி எறிய
முயன்று கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரும் துளி
அலையின்றி மெளனித்துக் கிடக்கிறது.
சுவாசம் தொலைந்த காற்று
வீதியெங்கும் புலம்பித் திரிகிறது.
முறிந்து விழுகின்றன விருட்சங்கள்.
அங்குமிங்கும் பரிதவித்த
இருள்
யாருமற்ற மணல்வெளியில்
பொத்தென்று விழுந்தபிறகு
ஒளிக்கண்களை தீரத்துடன்
திறந்தேன்.

நட்சத்திராவின் பொம்மைகள்


கருமை நிற சிறகும்
அடர்வன இருளும்
தன்னுடலில் கொண்டிருந்த
பறவைபொம்மையிடம் அதன்
பெயரை கேட்டுக்கொண்டிருந்தாள்
நட்சத்திரா.
பதிலேதும் பேசாத பொம்மை
கண்களை மட்டும் சிமிட்டியது.
பதிலுக்கு இவளும்
கண்களை சிமிட்டினாள்.
அலகு திறந்து காகா என்றது
பொம்மை.
அதன் ஒரு காலை
உடைத்தவள் இப்போ உன்
பெயர் "கா" தானே என்கிறாள்.

Friday, September 11, 2009

பெண்களுக்கான தளம்:

சமையல் முதல் சமகால அரசியல் வரை மிகச்சிறந்த கருத்தாடல் தளமாக விளங்குகிறது
Indusladies.com

பெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கிய தளம் என்பதால் பல வித உரையாடல்களை
காண முடிகிறது. சிறந்த உபயோகமான தளம்.

Thursday, September 10, 2009

நட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:



1.
சடசடவென்று மழை பெய்தாலோ
அல்லது
பலத்த வேகத்தில் காற்று வீசும்போதோ
நட்சத்திரா தன் தலையை சாய்த்துக்கொண்டும்
உதடுகளை குவித்துக்கொண்டும்
ஏதேதோ செய்தபடியே இருக்கிறாள்.
மூளை வளர்ச்சியற்ற குழந்தைக்கான
எவ்வித அறிகுறியும் இல்லாமலிருந்தும்
அவளை சுற்றிய உலகம்
அருகில் வர எத்தனிக்கவில்லை.
இன்று,
வகுப்பு முடிந்தவுடன் ஓடிச்சென்று
ஜன்னலோரம் விழுந்திருந்த
அணில்குட்டியை எடுத்துக்கொண்டு
கொஞ்ச ஆரம்பிக்கிறாள்.
மெதுவாய் மிக மெதுவாய்
அவளுக்கு தேவதையின் சிறகுகள்
முளைக்கத்துவங்கியதை
அணில் தவிர
வேறெவரும் கவனிக்கவேயில்லை.

2.

மின்னல்கள் நர்த்தனமிடும் கண்களை
பெற்றிருக்கிறாள் நட்சத்திரா.
அம்மா என்றழைக்கும் போதும்
உறக்கத்திலிருந்து விழிக்கும்
அதிகாலையிலும் அவளது
கண்களில் மின்னல்களின் நர்த்தனம்
நடந்தேறும்.
பட்டுப்பாவாடையுடன் கோவில்
திருவிழாவிற்கு செல்லும் வழியில்
கால்தடுக்கி கீழே விழுந்தபோது
மின்னல்களை தொலைத்துவிட்டாள்.
அழுதுகொண்டே எழுந்து
நடந்தவள்,
மிட்டாய் கிடைத்து
அழுகை நின்றவுடன்
தொலைந்த மின்னல்கள்
ஓடோடி வந்து,
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
பரிசளித்து அவளுடன் சிரித்தன.

-நிலாரசிகன்

Wednesday, September 09, 2009

சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு:



குறும்படம்:

நானும் என் விக்கியும்:-

சுட்டி
: http://www.cultureunplugged.com/play/1127/Naanum-En-Vickyum---/TUE9PStP

நம் அனைவருக்கும் பால்யகால நண்பர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சைக்கிளாகத்தான் இருக்கும். புது சைக்கிள் வாங்கிய புதிதில் நாற்பது முறை விழுந்திருக்கிறேன்.கையிலும் முட்டியிலும் அடிபடாத நாட்களே கிடையாது. ஆனாலும் சைக்கிள் மீதான என் காதல் என்றும் குறைந்ததே இல்லை.பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தபோது மோட்டார் சைக்கிளுக்கு மனம் தாவியபோதும் என் பழைய சைக்கிளை பத்திரமாகவே வெகுகாலம் வைத்திருந்தேன்.

நானும் என் விக்கியும் ஒரு சைக்கிளின் பார்வையில் எடுக்கப்பட்ட குறும்படம்.இதற்கு விமர்சனம் எழுதும் மனநிலை இப்போதில்லை.காரணம் என் சைக்கிளின் ஞாபகங்களோடு மனம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.இப்படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

*********************************************************************************


புத்தகம்:

காவலன் காவான் எனின்:நாஞ்சில் நாடன்
(கட்டுரை தொகுப்பு/தமிழினி வெளியீடு/விலை ரூ.90)


கட்டுரை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா? அடடே நீங்களும் கட்டுரையாளர்தான்!!:)

நாஞ்சில் நாடன் சமீபத்தில் எழுதிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.
இருபத்தி இரண்டு முத்துகள் எனலாம்.அதில் இரண்டை வைரம் என்றும் விளிக்கலாம்.
(குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்/கற்பனெப் படுவது)
நாஞ்சில் நாடனுக்கே உரித்தான எள்ளலும், ஆழ்ந்த இலக்கியச்செறிவும்,கற்றுத்தேர்ந்த மரபும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.

என் புத்தக சேமிப்பில் யாருக்கும் தர விரும்பாத/பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய நூல்களில் இதுவுமொன்று :)

*********************************************************************************

புத்தகம்:
மரம் பூக்கும் ஒளி
(நவீன கவிதைகள்/கோகுலக்கண்ணன்/காலச்சுவடு பதிப்பகம்/விலை:ரூ.75)


புத்தக கடையினுள் ஒவ்வொரு புத்தகமாக கடந்து வந்துகொண்டே இருந்தபோது எதுவுமே "என்னை வாங்கிக்கொள்,உன்னோடு வாழவிரும்புகிறேன்" என்றுரைக்கவில்லை. எந்த புத்தகத்திற்கும் என்னை பிடிக்கவில்லையா அல்லது எனக்கு எந்த புத்தகத்தையும் பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்தோடு புத்தகமுகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கண்ணில் பட்டது "மரம் பூக்கும் ஒளி" தலைப்பின் வசீகரத்தில் கையிலெடுத்து
ஏதோவொரு பக்கத்தை பிரித்தேன்.கீழுள்ள கவிதை இருந்தது

"ஒரு அணில்
உடைந்த முட்டை ஓட்டுக்குள்
முகத்தைப் புதைத்து அழுகிறது"


சட்டென்று ஓர் உலகம் என் முன் தோன்றி அதில் அழகிய தோட்டமொன்று உருவாகி அங்கே தேன் சிந்தும் பூக்களும்,இசைபாடும் குயில்களும் நிறைந்திருக்க,சாய்வான நாற்காலியில் வானம் பார்த்து நான் கிடக்க,அங்கே வந்த ஒரு அணில் தன்னை யாரும் கவனிக்க வில்லையே என்கிற ஏக்கத்தில் அருகிலிருந்த உடைந்த முட்டை ஓட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுவதாக கற்பனை விரிந்தது.

உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மற்ற கவிதைகளும் மிக அற்புதமாகவே இருக்கிறது.
நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும்.

*********************************************************************************

விளையாட்டு:

இலங்கை Vs நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெகுகாலம் கழித்து
ஷேன் பாண்ட் விளையாடினார்.முன்புபோல் வேகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் துல்லியமான பந்துவீச்சால் சில விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நியுசிலாந்து வெற்றி பெறும் என்கிற எண்ணத்தை மலிங்காவும்,துஷாராவும் மாற்றினர்.இந்தியா இந்த கோப்பையை வென்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம். மலிங்காவிடம் வீழ்வார்கள் என்றே எண்ணுகிறேன்.(அதெப்படி மலிங்கா மட்டும் "மாங்கா" எறிவதுபோல் பவுலிங் செய்கிறார்??)

"தல" சச்சின் விளையாட்டை காணும் ஆவலில் காத்திருக்கும் ரசிககோடிகளில்
நானுமொருவன் :)

-நிலாரசிகன்

Tuesday, September 08, 2009

நிலா உதிரும் இரவு

Monday, September 07, 2009

பூக்கள் தேடியலைதல்



நேற்று சந்தித்த வினோத்
தன் மரத்தில் பூக்கள் பூத்திருப்பதாக
சொன்னதிலிருந்து உறங்கவில்லை
கண்கள்.
எனக்குள் வளர்ந்திருக்கும் மரங்களில்
இலைகள் மட்டுமே இருந்தன.
இன்று காலை செளமியாவை
சந்தித்தேன்,
அவளது மரத்தில்
பூத்த ஒவ்வொரு பூவும்
சிறுகுழந்தையின் முகத்தை கொண்டிருப்பதாக
சொன்னபோது கண்கள் பனித்தது.
என் மரத்தில் எதனால் பூக்களில்லை
என்று யாருக்கும் தெரியவில்லை.
அழுது ஓய்ந்துவிட்ட விழிகளுடன்
திரிந்துகொண்டிருந்தேன்.
அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.

Sunday, September 06, 2009

படித்ததில் பிடித்தது:

கிழிந்துபோன பழைய புத்தகம் அது..
அட்டையின் வசீகரத்தால்
வாசிக்கும் வெறியில் நீ..
விடைத்தாள் திருத்தும்
ஆசிரியரின் வேகத்தோடு
புரட்டுகிறாய் அதன் பக்கங்களை..
வேகத்தின் உக்கிரத்தில்
சாயம் இழந்து கொண்டிருந்தது
அதன் வண்ணங்கள்.
இறுதியாய்..
முடித்துவிட்டாய் நீ.
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்.
இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை.

[மின்னஞ்சலில் வந்த கவிதை,அனுப்பியவர் தன் பெயரை வெளியிடவிரும்பவில்லை]

Friday, September 04, 2009

இவை போலவே..



போதிமரத்தடியில்
நாய்கள் கூடலாம்.
மகாத்மாவின் கல்லறைமேல்
பறவைகள் எச்சமிடலாம்.
மயிலிறகு விற்பவனிடம்
மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம்.
..................
..................
..................

இவை போலவே,

புனித மலர்கள் நிறைந்த
நமது நேசத்தை
வெறும் காகிதப்பூக்கள் எனலாம்
நீ.

Wednesday, September 02, 2009

மனுஷ்யபுத்திரன் கவிதை

இம்மாத உயிர்மை இதழில் வெளியான கவிஞர்.மனுஷ்யபுத்திரன் கவிதையொன்று வெகுவாய் என்னை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் கடைசி வரி.சொல்ல முடியாத துக்கம் கண்களுக்கு புலப்படாமல் மெல்லிய நீரோடையாய் இக்கவிதையின் பின் ஓடுவதாய் தோன்றுகிறது.இதோ அக்கவிதை...

பரிசுத்தத்தின் பயன்பாடு

அவளைப்போல் யாரும்
எல்லாவற்றையும்
அவ்வளவு
சுத்தமாக வைத்திருக்க முடியாது

அவ்வளவு நேர்த்தி
அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு கவனம்
அவ்வளவு அழகுணர்ச்சி
அவ்வளவு திட்டமிடல்
அவ்வளவு பரிசுத்தம்

நாம் யாருக்கும்
ஒருபோதும்
ஒன்றையும் பயன்படுத்தவே
தோன்றாது

ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவோ
ஒரு சோபா நுனியில் அமரவோ
ஒரு முத்தமிடவோ.


நன்றி: உயிர்மை.

Tuesday, September 01, 2009

பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்




பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான் : சிறுகதை


1.
புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும்
நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி
வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை
அழைப்பது போலிருந்தது அவளுக்கு.
ரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த
நிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ நிகழ்வுகளாக
தோன்றியது. எறும்பு ஊர்கின்ற தண்டவாளம்,யாருமற்ற தண்ணீர்க்குழாயில் நீர்
அருந்தும் காகம்,கடந்து செல்லும் மின்சார
இரயிலின் சப்தம்,இந்த மஞ்சள் மாலைவெயில் கூடவே அவனது வருகையை
எதிர்நோக்கும் மனம். அவனுக்கு பிடித்த கறுப்பு
நிற புடவையில் வந்திருந்தாள். எப்படி இவனுக்குள் தொலைந்தேன்? என்கிற
கேள்வி மனதுள் எழுந்தபோது ஆதவன் அவள்
முன் வந்து நின்றான். சாம்பல் நிற சிமெண்ட் பெஞ்சில் அவளுக்கு அருகில்
அமர்ந்தவன் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான்.
அரைமணி நேரம் கழித்து இருவரும் பிரியும் தருவாயில் அவள் காதோரம் ஏதோ
சொன்னான். வெட்கத்தில் சிலிர்த்துப்போனாள் அவள்.
வேகமாய் கடந்து போனது ஓர் இரயில்.

2.

குழந்தைக்கு சின்னதாய் ஒரு கரடிபொம்மை வாங்கி வந்திருந்தான். அம்மு அதை
வாங்கிக்கொண்டு புரியாத ஒலியை எழுப்பியபடி பக்கத்து அறைக்குள் ஓடிப்போனது. எனக்கென்ன வாங்கி வந்திருக்கிறாய் என்பதுபோல் அவனை பார்த்தாள் அவள்.
அருகில் வா தருகிறேன் என்றவனிடம் இவள் நெருங்கியபோது சட்டென்று
இழுத்தணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஒரு
நீண்ட முத்தமிட்டான். முதலில் மறுத்தவள் அவனது கரங்களின்
இரும்புப்பிடியில் மழையில் நனைந்த கிளிக்குஞ்சுபோல்
மருகி நின்றாள். கண்களை இறுக மூடிக்கொண்டவளின் உடல் வெப்பமேற துவங்கி
இருந்தது. இதழ் பிரித்தவன் ஒன்றுமே நடவாத பாவனையில் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு சிரித்தான். சிறிது நேரம்
அசைவற்று நின்றவளின் கண்கள் சிவந்திருந்தது.
அவன் அருகில் வந்து அமர்ந்தவள் நொடிப்பொழுதில் அவன் மடிக்கு தாவி அவனது
முகத்தை இழுத்து தீராப்பசியுடன்
இதழ்களை சுவைக்க ஆரம்பித்தாள். இருபத்தி நான்கு மாத அவளது தவம் கலைந்து
சிதறிய தருணம் அவன் போய்விட்டிருந்தான்.

3.

வழிந்தோடிய கண்ணீரின் தடம் சன்னலோர வெயிலில் மினுமினுத்தது. சன்னல்
கம்பிகளை இறுக பற்றியபடி தூரத்தில்
விரைகின்ற வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எரிந்து
தணிந்திருந்த வனமாக தன்னை நினைத்துக்கொண்டாள்.
ஓவென்று அழத்தோன்றியது.உதடுகளை கடித்து அழுகையை தடுத்துக்கொண்டாள். தன்
இருவயது பெண்குழந்தையின் முகம்
மனதின் அடியாழத்திலிருந்து மெல்ல மேலெழுந்து மிதந்து வருவது போலிருந்தது.
ஓடிச்சென்று அடுத்த அறையினுள்
எட்டிப்பார்த்தாள். படுக்கையில் உறங்கும் அம்முகுட்டி தூக்கத்தில் லேசாக
சிரித்தது. தன்னை பார்த்து அம்மு சிரிப்பது
போலொரு எண்ணம் மனதை அறுத்தது. பூஜை அறைக்குள் சென்று கண்கள் மூடி ஒரு
நிமிடம் தியானித்து திருநீறு
பூசிக்கொண்டாள். மனதெங்கும் நிறைந்திருந்த பதற்றம் சற்றே
குறைந்திருப்பதாய் பட்டது. இனியொரு முறை இது
நிகழ்ந்துவிடக்கூடாதென்றும்,நிகழ்கின்ற சூழ்நிலைக்குள் தான்
தள்ளப்பட்டுவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொண்டாள்.
பால்கனி கதவை திறந்து மனதின் வலியை பார்வை வழியே தூரத்து பச்சை
மரங்களிடம் கடத்திக்கொண்டிருந்தபோது
வாசல் திறந்து வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தான் அவன். அவனைக்
கண்டவுடன் தன்னிலை மறந்து வேகமாய்
படிக்கட்டில் இறங்கி வாசல் நோக்கி சென்றாள்.இப்போது அவனை இறுக
கட்டிக்கொண்டு முத்தமிடவேண்டும் போலிருந்தது.

-நிலாரசிகன்.

Sunday, August 30, 2009

உபன்டு ஹோரி (1935 - 2009 ) - எதிர்ப்பின் குரல்



இந்த பிரபஞ்சம் எத்தனையோ சர்வாதிகாரிகளை கடந்துவந்திருக்கிறது. ஒரு தனி மனிதனின் சுயவிருப்பங்களுக்காக
பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறது இந்த பூமி. மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தின் வெறியாட்டங்களுக்கு
இரையான அப்பாவி உயிர்களை சரித்திரம் வலியோடு பதிவு செய்திருக்கிறது. சர்வாதிகாரம் என்னும் சொல்

உச்சரிக்கப்பட்டவுடன் எப்படி ஹிட்லரும் முசோலினியும் மனதில் தோன்றுவார்களோ அதுபோலவே உகாண்டா எனும் தேசத்தின் பெயரை கேட்கும்போதெல்லாம் வெறுப்போடு மனதில் தோன்றி மறையும் பெயர் இடி அமீன்.

இடிஅமீனின் வெறித்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இரையானவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம்.தன் தேச மக்களையே கொன்று குவித்த இடிஅமீனை தட்டிக்கேட்க மேலை நாடுகளே தயங்கியபோது உகாண்டா தேசத்தில் இருந்து முதல் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உகாண்டா மக்களால் பின்னாளில் அன்போடு "பெண்சிங்கம்" என்றழைக்கப்பட்ட கவிஞர்.உபன்டு ஹோரி. சர்வாதிகாரி இடிஅமீனின் கொடூர கண்கள் பயத்தில் நடுங்கியது ஹோரியின் கவிதைகளை படித்தபோதுதான்.

வடக்கு உகாண்டாவின் "டோகோலோ" மாநிலத்தில் ஒரு ஏழை விவசாயிக்கு மகளாக 1935ம் வருடம் ஆகஸ்டு 30ம் தேதி பிறந்தார் உபன்டு ஒடாயு ஹோரி. இளம் வயது முதலே ஹோரிக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்தது அவரது மாமாவின் நூலகம்(அவரது மாமா ஒடாயி மொபுட்டுவும் ஒரு கவிஞர்). வீட்டிற்கு அருகிலிருந்த
நூலகத்தில்தான் உலக இலக்கியங்களும் கவிதைகளும் ஹோரிக்கு அறிமுகமானது. தன்னுடைய பதிநான்காவது வயதில் கவிதை எழுத துவங்கியவர்
தன்னுடைய எழுபதாவது வயதுவரை எழுதிக்கொண்டே இருந்தார். இடிஅமீன் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட படுகொலைகளை பற்றி இவர் எழுதிய "A Man,who is a wolf' எனும் கவிதையை படித்தவுடன் இளைஞர்கள் புத்துணர்ச்சி பெற்று இடிஅமீனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சற்றும் தாமதிக்காமல் ஹோரியை கொல்ல உத்தரவிட்டான் அந்த கறுப்பின சர்வாதிகாரி.ஹோரி கவிஞர்களுக்கே உரித்தான மென்மனம் கொண்டவர் எனினும் அடக்குமுறைகளுக்கும் சர்வாதிகாரத்திற்கும் என்றும் தலைவணங்காதவர்.தன் வீட்டிற்குள் நுழைந்த இரு கூலி இராணுவத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு சூடானுக்கு தப்பிவிட்டார்.

அமெரிக்காவுக்கு பிடல்காஸ்ட்ரோவைபோல இடிஅமீனுக்கு ஹோரி சிம்மசொப்பனமாக விளங்கினார் எனலாம் சூடானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதும் இடிஅமீன் அவரை கொல்லும் முயற்சியை கைவிடவில்லை. இதுபற்றி பின்னாளில் இப்படி
விவரிக்கிறார் ஹோரி "கடவுளின் பிள்ளை என்றே என்னை எண்ணிக்கொள்வேன். ஒவ்வொரு முறை அமீன் என்னை கொல்ல ஆட்கள் அனுப்பும்போதும் ஏதாவது ஒருவகையில் தப்பிவிடுவேன். ஒருமுறை தப்பும்போது அருகிலிருந்த
ஆற்றிப்பாலத்திலிருந்து குதிக்க நேர்ந்தது. நீச்சல் அறியாதபோதும் நான் பிழைத்தது கடவுளின் செயலன்றி வேறென்ன?"

உகாண்டாவில் புரட்சி ஏற்பட்டு சவுதி அரேபியாக்கு இடிஅமீன் தஞ்சம் புகுந்த பின்னரே நாடு திரும்பினார் ஹோரி. கடந்த மாதம் இயற்கை எய்திய இந்த புரட்சிக்கவிஞரின் பெயர் இப்பூமி உள்ளவரை சரித்திர ஏடுகளில் நிமிர்ந்து நிற்கும் என உறுதியாய் சொல்லலாம்.

ஹோரியின் கவிதை "A Man,who is a wolf" ன் தமிழாக்கம்:

"கவுச்சி நாற்றமெடுக்கும்
நீ
ஓநாயை போன்றவன்.
ஓநாயை கண்டவுடன்
கதறி அழும் குழந்தை போன்றவர்கள்
என் தேச மக்கள்.
நான்
பயமென்பதை சற்றும் அறியாதவள்
உன் பிணத்தை கழுகுகள்
குதறும் நாளில்
பூக்கள் நிறைந்த தடாகமொன்றில்
ஆனந்த நீராடுவேன்.
பரிசுகளால் என் நண்பர்களை
வியப்பட செய்திடுவேன்.
மான்கள் நிறைந்திருக்கும் இக்காடுகளில்
சத்தமிட்டு ஓடி மகிழ்வேன்.
இரத்தம் குடிக்கும்
கறுப்பு ஓநாயே!
என் தேச இளைஞர்களின்
கைகளால் நிகழப்போகும்
உன் மரணத்தின்
திருநாளுக்காக காத்திரு"


"சார் நீங்க சொன்னமாதிரியே கற்பனையா ஒரு கவிஞரை பற்றி கட்டுரை எழுதி இருக்கேன் இந்தாங்க"
அந்த பிரபல வார இதழின் ஆசிரியரின் கைகளில் தான் எழுதிய கட்டுரைத்தாளை கொடுத்துவிட்டு எப்படியாவது இந்த
பத்திரிகையில் வேலைகிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டான் சக்தி.

-நிலாரசிகன்

Friday, August 28, 2009

பசுமை புரட்சி:

[மின்னஞ்சலில் வந்தது]

Thursday, August 27, 2009

வெயில் தின்ற மழை




1.

அனல் நிறைந்த கோடையில்
ஜனித்தவனுக்கு மழை
என்று பெயரிடுகிறீர்கள்.
அவனது மென் உணர்வுகளை
உங்களது அகோரச்சிரிப்பில்
மரிக்கச் செய்கிறீர்கள்.
அவனறியா பொழுதில்
வன்மத்தை அவனுள்
விதைத்து மறைகிறீர்கள்.
அரவம் தொலைந்த
நிசியில்
உணர்ச்சிகளின் வெளியில்
நடனமாடிச் சரிகிறானவன்.
இப்போது அவனுக்கு
வெயில் தின்ற மழை
என்று பெயரிடுகிறீர்கள்.

2.

எப்போதும் பிரிதலை பற்றிய
கனவுகளுடனே அவனிடம்
நீள்கிறது உங்களது உரையாடல்கள்.
அவனது வெள்ளை ப்ரியங்கள்
அனைத்திலும் இருளை
பூசுகின்றன உங்களது சொற்கள்.
கரம் பற்றி
உடல் தழுவி
இதழ் மலர்த்திய தருணங்களின்
தகிப்பில் அமிழ்ந்திருக்கும் அவனை
தேகம் தேடுபவன் என்கிறீர்கள்.
பழுப்பேறிய உங்கள் வார்த்தைகளில்
தன் சுயமழித்து திரிய
துவங்கிவிடுகிறான் அவன்.
சில்லென்ற மழைவீட்டினுள்
நிகழ்ந்தேறுகிறது அந்நியனொருவனுடனான
உங்களது பேரானந்த புணர்ச்சி.

3.

பூக்கள் ஒவ்வொன்றாய்
உதிர்வதை கனத்த மெளனத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தன அவனது
சிவந்த விழிகள்.
வீழ்கின்ற பூக்களுக்காய் சிறியதாய்
அழுதான்.
விழுந்த மலரொன்றை
கைகளுக்குள் மறைத்துக்கொண்டு
வனத்தில் புகுந்து மறைந்தான்.
அவனது உருவம்
புள்ளியென சிறுத்தபோது
உங்களது புருவம் விரிந்து மலர்ந்தது.
சிறு சிறு பிணத்துளியாய்
விழுந்து தெறிக்கிறது
மழை.

-நிலாரசிகன்.

Monday, August 24, 2009

என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்





1.

நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள்
நம் காதலை நிரப்பாதே!

2.

சப்தங்கள் தொலைந்த
ஓர் இரவில்
முத்தங்களால் என்னுயிர்
நிரப்பினாய்.
இப்போது,
அனல் நிரம்பிய அதிகாலைகள்
உயிர்வாங்குகின்றன
உன்
ஞாபக முத்தங்களால்!

3.

கடற்கரை மணலெங்கும்
விரவிக்கிடக்கும்
கால்தட கிறுக்கல்களில்
இன்னமும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்.

4.
மனதெங்கும் நுழைந்துவிட்டபின்
புணர்வது ஒன்றும்
பாவமில்லை என்றவள்
நீ.
வெந்நீர்பொழுதொன்றில்
என் நிழலையும்
நிராகரித்துச் சென்றவளும்
நீ.
உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்.

5.
நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

-நிலாரசிகன்.

Tuesday, August 18, 2009

Platinum Package கடவுள்!




1.
நேற்று:


நெல்லிக்காய்களும் கொல்லாம் பழங்களும் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் தினசரியில்.
ஐந்து பைசா,பத்து பைசா "சீட்டு" கிழிக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
சர்பத்,பழரச கடைகளில் பாதி கழுவப்பட்ட கண்ணாடி தம்ளரில் சர்பத்தை உறிந்துகொண்டே கடைக்கண் பரிமாற்றங்கள்
நடந்தேறும்.
சுற்றிலும் மினுக்கும் சீரியல் பல்புகளின் பிரகாசத்தில் சாமி படங்களும், எம்.ஜீ.ஆர்,காந்தி,காமராசர் படங்களும் அணிவகுத்திருக்கும்.
சைடுவாக்கில் பலூனை இழுத்துபிடித்து சட்டென்று ஊதி சிரிக்கும் பலூன் விற்பவன் குழந்தைகளின் கணகளுக்கு ஹீரோவாக
தெரிவான்.
வார்த்தை பரிமாற்றங்களுக்கு வழியில்லாத தாவணிகள் அம்மனை கும்பிட்டுக்கொண்டே "அவுகளை" ஓரக்கண்ணால் பார்த்து/பேசி
பரவசமடையும்.
முழுக்கை சட்டையும் புதுச்செருப்பும் வெடிச்சிரிப்புமாய் தூள் கிளப்பும் இளைஞர்படை.
மேலத்தெரு,கீழத்தெரு,வடக்குத்தெரு,தெக்குத்தெரு எங்கும் நிறைந்திருக்கும் "குழாய்" ஸ்பீக்கர்.
தென்னந் தட்டியால் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டகையினுள் அம்மன் பவனி வருவதற்காக தயார் செய்யப்படும் "சப்பரம்".
கரகாட்டத்தை சுற்றிலும் கூட்டம் குவிந்திருக்கும். கும்பக்காரியின் கால்களில் மையல் கொண்டிருக்கும் ஊர் கண்கள்.
பாயும் போர்வையும் விரித்து வில்லுப்பாட்டு கேட்பதற்கு மக்கள் திரண்டிருப்பார்கள்.

2.
இன்று:


"அம்மன்கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் - Fighter Team"
ப்ளக்ஸ் போர்டில் செல்போன் பேசியபடி நான்கு முகங்கள் கோவில் வாசலை மறைத்துக்கொண்டு இருந்தன.
நெல்லிக்காய் விற்ற இடத்தில் இப்போது கோர்நட்டா ஐஸ்கீரிம் விற்கிறார்கள்.
பட்டுத்தாவணிகளை காண மீண்டும் எண்பதுக்கு பயணிக்க வேண்டும். சுடிதார்புரியாகி இருந்தது கோவில்.
பலூனை ஊதுவதற்கு பதில் சிலிண்டரில் கேஸ் பிடித்து தருகிறார்கள்.சிறுவர்கள் பலூனை துறந்துவிட்டு வீடியோ கேம்ஸ் சிடி கடைகளில்
மொய்க்கிறார்கள்.
வில்லுப்பாட்டு பாட்டையும், "சிங்சாங்"கும் ரசிப்பதற்கு பூசாரியும் கடவுளும் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள்.
ஒன்பதிலிருந்து பத்து கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதற்கு "கோலங்களும்,செல்வியும்" காரணம் என்கிறார்கள்!!


3.
நாளை:


Platinum package பக்தர்களுக்கு வீடுதேடி வந்து கடவுள் தரிசனம் தருகிறார் எனலாம்.

Sunday, August 16, 2009

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை





நவம்பர்:

அவளது கண்களை எனக்கு பிடிக்கவேயில்லை. இரையை கண்டவுடன் பதுங்கும் பூனையொன்றின் குரூர பார்வையை அவளது கண்கள் கொண்டிருந்தன.ஜீவனற்ற அந்த விழிகளுக்கு சொந்தக்காரிதான் என்னிடம் அந்த தகவலை பகிர்ந்தவள். எதிர்பார்த்து சென்றவன் என்றபோதிலும் அந்த தகவலுக்கு அவள் சொன்ன காரணங்கள் மிகுந்த எரிச்சலையும்,கோபத்தையும் கடைசியாக இயலாமையையும் என்னுள் திணித்து சென்றன.

கழுத்தில் தொங்குகின்ற ஐ.டி கார்டை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். இப்போது அவளது
இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது. இன்றே கடைசி நாள் என்பதை புத்திக்குள் அந்த புன்னகை உணர்த்தியபோதும் இதயம் மட்டும் இடைவெளி விடாமல் துடிப்பது செவிகளில் ஒலித்தது.

குளிர்ந்த அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். லேசான தூறலுக்கிடையே வெயிலடித்தது. அலைபேசி சிணுங்கியது. அம்மா. "என்னய்யா ஆச்சு?" ஒரு நிமிட மெளனத்தை பதிலாக்க முயன்று தோற்று
மெல்லிய குரலில் சொன்னேன் "வேலை போயிடுச்சும்மா". மழை வலுக்க துவங்கியிருந்தது.

டிசம்பர்:

இறுக மூடிய அறைக்குள் என் உடலை சுமப்பது சற்று சிரமத்தை தந்திருக்கிறது. நவம்பர் மாதத்தின் இறுதியில் "அய்யோ பாவம்" என்று ஒயாமல் அலறிய நண்பர்கூட்டத்தை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
கூட்டைவிட்டு முதல் முறையாக வெளியேறும் சிறுபறவையென என்னறை விட்டு வெளியேறிய தினத்தில்
வீட்டுக்கார அம்மா வந்தார்கள். சவரம் செய்யப்படாத தாடியும்,இஸ்திரி செய்யப்படாத சட்டையும் அவருக்கு கலக்கத்தை தந்திருக்கவேண்டும். ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக இம்மாத வாடகை என்று இழுத்தவரிடம் இரு நாட்களை கடனாக பெற்றுவிட்டு திருவான்மியூர் கடற்கரை நோக்கி பைக்கில் விரைந்தேன்.

வாழ்க்கையில் சில தருணங்கள் மிக அழகானவை. மழையில் நனையும் காதலி, ரயில்நிலையங்களில் பாசம் ததும்ப அம்மாவை பிரியும் திருமணமான மகள்,எதிர்பாரா நேரத்தில் மடியில் அமர்ந்துகொண்டு "எங்க அப்பாதான் சூப்பர் அப்பா" என்றபடி கன்னத்தில் முத்தமிடும் குழந்தைகள்,மாலை மிதவெயிலில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டே மெதுவாய் செல்லும் இந்த பைக் பயணம்.

கடற்கரையில் அமர்ந்தவுடன் அலைபேசி அலையடித்தது. வினோத். "என்னடா ஏதாவது இன் டர்வியூ?"
"....................." "சரி விடு, உன் அக்கவுண்ட்க்கு மூவாயிரம் அனுப்பி இருக்கேன் செலவுக்கு வச்சுக்க"
முதல் முறையாக கண்கள் நிரம்பி வழிந்தது அன்றுதான். "இல்ல நான் சமாளிச்சுக்கறேன் வினோத்"
"அசிங்கமா திட்டிபுடுவேன் பேசாம இரு அப்புறம் சம்பாதிச்சு கொடுபோதும்,மீட்டிங் இருக்கு இராத்திரி கூப்பிடுறேன்" வைத்துவிட்டான்.

என் சிறிது நேர மெளனத்தை அழித்தபடி உள்நுழைந்தது மற்றொரு அழைப்பு. ***** அழைத்திருந்தான்.
"என்னடா வேலை போயிடுச்சாமே?" என்றவன் "உன்னால தாங்க முடியாதேன்னுதான் இவ்ளோ நாளா கால் பண்ணல ஒண்ணும் கவல படாத மச்சி வாழ்க்கைன்னா" தொடர்பை துண்டித்தேன். வேலைதானே போயிருக்கிறது. உயிரா போனது? போடா ம..

ஜனவரி:

நீண்ட பகலை கெளவிப்பிடித்திருக்கிறது
இருளின் பற்கள்.
பின்னிரவில் ஊளையிடும்
நாய்களின் சப்தம் பகலின்
கீற்றுகளாய் அறையெங்கும்
நிறைந்திருக்கிறது.
சன்னல் கம்பிகள் உயிர்பெற்று
தாண்டவமாடி வீழ்ந்து மரிக்கின்றன.
மிகுதியாகும் வெப்பத்தில்
நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்.
நான்..நான்..நான்..

பிப்ரவரி:

அமெரிக்காவிற்கு செல்வது இது இரண்டாம் முறை என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் ஆச்சர்யங்களும் என்னை சூழ்ந்துகொள்ளவில்லை. வழியனுப்ப வந்த நண்பன் காதோரம் கிசுகிசுத்தான். "ஆல் த பெஸ்ட் டா,நல்ல வேலைக்கும் பக்கத்துசீட்டுக்கு பாவனா மாதிரி ஒருத்தி வருவதற்கும்"

கத்தார் ஏர்லைன்ஸின் பணிப்பெண் போல செயற்கையாக சிரித்துவிட்டு உள்நுழைந்தேன். 27D சீட்டை தேடி அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் பக்கத்து சீட்டை பார்த்தேன். மனசுக்குள் அந்த பாடல் திரும்ப திரும்ப ஒலித்தது. விமானம் மேலேழும்பி மேகத்திற்குள் நுழைந்தபின்பு பக்கத்துசீட்டும் நானும் பேச ஆரம்பித்தோம்.
வாஷிங்டன் விமானநிலைய அதிகாரி தன் முதல் முத்தம் பற்றி நினைத்திருக்கலாம் அல்லது முதல் மனைவி பற்றி நினைத்திருக்கலாம். வழமையாக மூன்று மாதம் மட்டுமே வழங்கப்படும் விசாவை ஆறுமாதம் தந்துவிட்டு Have a pleasant trip என்றார். ட்ராலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன்.

மனசுக்குள் ஒலித்த அந்த பாடல்: பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி.

பின்குறிப்பு: நீங்க சொன்னது புரியல பாட்டி * 3 [நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் என்று அவர் சொன்னதை புரிந்துகொள்ள இப்படித்தான் மூன்று முறை கேட்கவேண்டியதாயிற்று.அவர் ஒரு சீனக்கிழவி]

மார்ச்,ஏப்ரல்,மே:

* வாசிங்டன்னிலிருந்து மூன்று மணிநேர பயணத்தொலைவில் இருக்கிறது பிலடெல்பியா.
* அலைபேசியில் இன்கம்மிங் காலுக்கும் காசு - எந்த காலத்துலடா இருக்கீங்க - Come to our beloved India!
* அன்பை நீங்கள் பகிர்வதே இல்லை - என் மீது அக்கறையே இல்லை - கிளிப்பிள்ளை மாதிரி இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாள் - பகிரப்படும் அன்பென்பது வார்த்தைகளில் இல்லை புரிதலில் இருக்கிறது என்பதை என்று புரியவைப்பது?
* அறைத்தோழன் ஜே.பி தீவிர அஜித் ரசிகர். மிகச்சிறந்த நண்பனாகி இருக்கிறான். அவனுக்கு கடன்பட்டிருக்கிறேன்.
* Dance Club செல்வதாக இருந்தால் ஏதேனும் ஐ.டி கார்டுடன் செல்ல வேண்டும். வாரநாட்களின் களைப்பு தீர
வார இறுதியில் வெள்ளைக்காரன் ஆடிப்பாடும் இடமிது.[கண்கள் நிறைந்த போதையில் ஒரு சிகப்பு நிற கூந்தல்காரி என்னிடம் ஏதோ சொன்னாள் அது என்னவெனில்...]
* சிறுகதை போட்டிக்கு முதல்சிறுகதையை எழுதி இருக்கிறேன். அறிவித்தவுடன் எழுதிவிட்டேன். வந்து குவிகின்ற சிறுகதைகளை பார்க்கும்போது மற்றொரு கதை எழுதியாகவேண்டும் என்றே தோன்றுகிறது.
* பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலில் அவரை சந்தித்தேன். கோவிலில் அரை மணிநேரமும்,மாலில் அரை மணிநேரமும் கதைத்தோம். என்னை சந்திக்க ஐந்து மணிநேரம் காரோட்டி வந்திருந்தார் அந்த அறுபது வயது இளைஞர்.அமெரிக்காவில் மழை பெய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று.
* இன்னைக்கு வந்திடும் நாளைக்கு வந்திடும் என்றார்கள் இன்றுவரை வரவேயில்லை - Project.
* சில ஆயிரம் டாலர்களை தொட்டு நிற்கிறது கடன். நாளைக்காவது வருமா அந்த புராஜக்ட்?
* என் சுயத்தில் கல்லெறிந்து விளையாடுவது ஒருவரின் பொழுதுபோக்காகி இருக்கிறது.கற்களை சேகரித்துக்கொண்டே வருகிறேன். சிலைவடிக்கலாம் அல்லது......

பின்குறிப்பு: சிகப்புநிற கூந்தல்காரி என்னிடம் சொன்னது பற்றி எழுத ஒன்றுமில்லை.

ஜூன்:

1.புளோரிடாவில் புராஜக்ட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை எல்லோரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
2.சொல்லிக்கொண்டு வருவதில்லை இடியும்,மழையும். Recession என்பதால் எட்டு வார புளோரிடா பயணம்
இரு நாட்களில் முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் வலித்தது. Its okay!
3.கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் சிறுகதை புளோரிடாவுக்கும் பிலடெல்பியாவுக்கும் இடையேயான விமான பயணத்தில் தோன்றியது. மடிக்கணினியை திறந்து எழுத ஆரம்பித்தேன். தோள்சாய எழுத்து மட்டுமே எப்போதும் உடனிருக்கிறது.
4.அமெரிக்க நண்பர் ஸ்டீவ் டின்னருக்கு அழைத்து சென்றிருந்தார்.அவர் மனைவி பார்பராவிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டேன். எனக்கு ஒரு மகன், ஸ்டீவுக்கு இரு மகள்கள் என்றார். முதலில் புரியவில்லை. புரிந்தபோது புரியாமல் இருந்து தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது.
5.பழையயார்க் என்று பெயர் வைத்திருக்கவேண்டும். ஏன் நியூயார்க் என்றார்கள் இன்னும் புரியவே இல்லை.
அமெரிக்காவில் குப்பைகளும் தொப்பைகளும் அதிகம் தென்படுவது நியூயார்காகத்தான் இருக்கவேண்டும்.
6.வாழ்வில் மிக முக்கியமானதொரு நபரை சந்தித்தேன் - ரிஷி - வாழ்க்கையின் ரகசியங்களை எனக்குள் ஏற்றி
எப்போதும் புன்னகைக்கும் வரத்தை தந்தவர்.He is a Gem.
7.ஐந்து வருட கனடிய தோழியை இம்முறையும் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஈழத்தின் வலி வார்த்தைகளிலும்,வாழ்க்கையிலும் தெரிகிறது அவளுக்கு. அவள் நலம் பெறல் வேண்டும்.
8.நட்பை பிரவாகமென சினேகத்துடன் பகிர்ந்தளிக்கும் மற்றோர் தோழியை சந்தித்து திரும்பினேன்.

ஜூலை:

பாப் மன்னனின் மரணத்தை மெக்டொனால்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டபடி "Iam shocked" என சொல்லிச் சென்றாள் ஆப்ரிக்க-அமெரிக்க குண்டுப்பெண்ணொருத்தி.

பிலடெல்பியா - வாசிங்டன் - தோகா - சென்னை - தூத்துக்குடி
அமெரிக்க பயணம் = Disaster
குற்றாலம் - மணிமுத்தாறு - பெங்களூர் - நெல்லை - மதுரை --> நண்பர்கள், நண்பர்கள்
2500 ரூபாய் - மீண்டும் வினோத்
அலறும் அலைபேசி - வேலை இல்லையா மச்சான்.வாழ்க்கைன்னா... - புன்னகை பதிலால் எதிர்முனை மெளனிக்கிறது இப்போது.
ஜீவன் முக்தி வாசிக்கிறேன்.
இரு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒருவரின் தவமாக ,மற்றொருவரின் வரமாக உருமாறியிருக்கிறேன்.

ஆகஸ்ட்:

#அன்பை பகிராதவன் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது அவ்வப்போது வேலை கிடைத்துவிடும் சீக்கிரம் என்கிற வாழ்த்துக்கு நடுவே. கல்லை நம்புகிறவர்கள் மனதை நம்புவதில்லை.
ஒன்றை துறந்தால்தான் மற்றொன்று நிலைபெறும். எல்லோரும் வேண்டுமெனில், சுயத்தில் கல்லெறிந்தவரை துறக்க வேண்டும்.

# "அம்மா நான் ஜெயிச்சுட்டேன்மா"

# வெயில் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்றும் இன்றும் பெய்யாத மழை நாளை பொழியும்.

-நிலாரசிகன்.

Thursday, August 13, 2009

அமிலம் நிறைந்திருக்கும் ஓடை




1.
கண்ணாடியை உடைப்பதற்கு
முந்தைய கணம் எனலாம்
நீர் வற்றிய குளத்தில்
எறியப்பட்ட கல் எனலாம்
கவனிப்பாரற்று மிதிபடும்
ரோஜா இதழ்கள் எனலாம்
மலநாற்றமெடுக்கும்
படுக்கை கிழவி எனலாம்
முரண்களால் நிறைந்த
நம் ப்ரியங்களை
சாக்கடைநிலவு என்றும்
வர்ணிக்கலாம்.
எதுவாயினும் புணர்ச்சிக்கு
பின்பு சொல்.

2.
திசைக்கொன்றாய் சிதறிக்கிடக்கும்
தலையணைகளின் நடுவில்
அல்லது
வியர்வைவாசத்தின் நீட்சியில்
உனக்கொரு
கதை சொல்ல துவங்குகிறேன்
அரவமற்ற கடற்கரையில்
கருப்புக் குதிரை மீது
காற்றின் வேகத்தில் பயணிக்கும்
அரசகுமாரனை பற்றிய கதையது.
அவனது நீண்ட பயணம்
முடியும் முன்னர்
துவங்கிவிட்டது......

3.
கரம் பற்றி
கவிதை கேட்டு
கனவின் மீதேறி பயணிக்கிறது
முத்தங்களால் நிறைந்திருக்கும்
நம் அறை.
களைத்து வீழ்ந்த பின்பொழுதிலும்
தலைகோதியபடியே இருக்கின்றன
நம் ப்ரியங்கள்.
காதோர கெட்ட வார்த்தைகளிலும்
சன்னல் கம்பிகளில் ஊர்ந்துசெல்லும்
எறும்பு வரிசையிலும்
நிலைக்கிறது
நம் மனம்.
வா மீண்டுமொரு முறை
குளிக்கலாம் என்கிறாய்
நீ.

இதயம் காக்க உதவிடுங்கள்..




சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.


பண உதவி செய்ய வேண்டிய முகவரி:

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Tuesday, August 11, 2009

ஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது



1.
பாசிகள் படர்ந்த குளக்கரையில்
மீனுடலை ருசித்துக்கொண்டிருக்கும்
காகங்களை வெறிக்கிறதுன் கண்கள்.
தளர்ந்த உனது கால் வழியே
ஊர்ந்துசெல்கின்றன எறும்புகள்.
நாய்கள் நிறைந்திருக்கும் அந்திம‌
காலத்தில் நீரூற்றிய
தொட்டிச்செடியில் வண்ணம்
உதிர்த்து பறக்கிறது பட்டாம்பூச்சி.
குழந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையை பரிசளித்து
சிரிக்கிறது காலம்.
மென்காற்றில் சிதறும் சாரலில்
நனைந்தபடி தனித்தழுகிறாய்
நீ.

2.
உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்.

3.
யாரோ ஒளிந்துகொண்டு உன்னையே
பார்ப்பதாக அடிக்கடி தோன்றுகிறது.
அதிர்வுகளால் நிரம்பி வழிகிறது
உன் தேநீர் கோப்பை.
இருளுக்குள்ளிருந்து எப்போதும்
கேட்கிறது ஏதோவொரு சப்தம்.
நீ நகர்ந்த பின்னும்
பிம்பங்களை காண்பிக்கிறது
கண்ணாடி.
மின்விசிறி அல்லது கூரை
இரண்டிலொன்று உன் சிரத்தை
விரட்டுகிறது.
கொக்குகளும் குருவிகளும்
உன் தலைமீதே எச்சமிட்டு
பறக்கின்றன
மழை கண்டால் மட்டும்
சிலிர்க்கிறது உன்னுடல்.
இனி,
நிம்மதியாய் சாகலாம்
நீ.

-நிலாரசிகன்.

Saturday, August 08, 2009

உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்
இன்று வெளியாகி இருக்கிறது.

சுட்டி:

http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

என்னுடைய "கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்" சிறுகதை
தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளில் ஒன்றாக வந்திருப்பது மிகுந்த‌ ம‌கிழ்ச்சியை
தருகிறது.

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி சிறுகதை எழுத தூண்டிய‌
சிவராம்/ஜ்வோவ்ராம் சுந்தர் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் வென்ற/கலந்துகொண்ட அனைத்து சிறுகதையாளர்களுக்கும்
வாழ்த்துகள்.

Monday, August 03, 2009

அவளது கடவுளர்கள்



மனதை வெல்வதான
அவளது வேஷத்தில்
இறந்துகிடக்கின்றன சில
ரோஜாக்கள்..
வேரில் மலர்ந்த மோகத்தீயில்
பிணக்குவியலானது
நிசப்தம் நிறைந்த பழைய
சொற்கள்..
பகிரத்தெரியாத நேசத்தின்
எல்லையில்
அவனது இருத்தல்
புள்ளியென மறைந்தழிந்தபோது
பழிவாங்குதலில் வென்றுவிட்டதாய்
இழிபுன்னகையில் ஒளிர்கின்றனர்
அவளது
கடவுளர்களும் கந்தர்வர்களும்.

Sunday, August 02, 2009

நண்பர்கள்....நண்பர்கள்...நண்பர்கள்...



1
2
3
4
5
ஆறாப்பு வரையில்
ஒன்றாய் ஒண்ணுக்கு போய்
சிலேட்டு குச்சி விழுங்கி
ஓணான் அடித்து
பொன்வண்டு சேகரித்து
மூக்கொழுகி திரிந்த
நண்பர்களுக்கும்
7,8,9,10 வரை
"போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில்"
நகசதையாய் திரிந்து
மாங்காயும்,நெல்லிக்காயும் திருடி
"சில்க்" நூலில் பட்டம்விட்டு
ஸைன்ஸில் முட்டை எடுத்து
வாத்தியார் நாற்காலியில் முள்வைத்து
முட்டி கிழிய கபடி விளையாடிய
நண்பர்களுக்கும்

11 12ல்
முளைக்காத மீசையை முறுக்கி
பெண்கள் பள்ளி பேரழகிகளின்
கடைக்கண்ணில் கெமிஸ்ட்ரி
தேடியலைந்து
பிஸிக்ஸில் பெயிலாகி
திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்
என் பால்ய
நண்பர்களுக்கு...


நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Saturday, August 01, 2009

உலகின் மிக மோசமான பெண்கள்




உலகின் மிக மோசமான பெண் - 1

உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை,
அவளது தேவை,
ஓர் ஓநாயை ஒத்திருந்தது.
அவளது கறுத்த இதழ்களில்
வழிந்தபடி இருந்தது முந்தைய தினத்தின்
எச்சில்கள்.
குழந்தையொன்றின் விரல்களை
கொறித்துக்கொண்டிருந்தன
அவளது கூரிய பற்கள்.
துடிதுடித்த குழந்தையின்
கதறலை அலைபேசிக்குள்
முகம் மறைத்து கடந்தனர்
சிலர்.
கவிதைக்குள் மறைந்துகொண்டேன்
நான்.
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை...

உலகின் மிக மோசமான பெண் - 2

நவீனத்தின் நீட்சியே நான்கு
காதல் என்றிடுவாள்.
புணர்ச்சியே பின்நவீனத்தின்
கோட்பாடு என்பாள்.
புரியாக்கவிதை எழுதும் ஐவரின்
கலியுக திரெளபதி
நான் என்றும் சொல்வாள்.
புரட்சிப்பெண் அவளின்
கண்களில் வழிகின்ற நஞ்சில்
நான்கு துர்மரணங்கள் நிகழ்ந்திருக்கும்.
அவள் உலகம்
அவள் வாழ்வு
அவள் அவள் அவள்
அவள் உலகில் தான்
அமைதியாக இருக்கிறான் அவன்.


உலகின் மிக மோசமான பெண்/ஆண் - 3

உலகின் மோசமான பெண்ணும்
மிக மோசமான பெண்ணும்
உலகின் மிக அற்புதமான
பெண்ணை சந்தித்தார்கள்.
ஆண்களில்லா உலகம்
உருவாக்குவது பற்றிய
தீர்மானம் நிறைவேறியது.
பிழைத்துக்கொண்டேன் என்றான்
உலகின் மிகச்சிறந்த
ஆண்.
பிழைகண்டேன் என்றான்
உலகின் மிக மோசமான
ஆண்.
சுற்றித்தொலைக்கிறது வெட்கம்தீரா
உலகம்.

Tuesday, July 28, 2009

ஒரு மெளனம் ஒரு மரணம்



பெயரிடப்படாத மெளனத்தின்
எல்லையில் அந்தக்
கண்கள் நிலைத்திருந்தன.
அடர்குளிரில் நடுங்கும்
ஊமைக்குருவிகளின் மொழி
அந்த விழிகளுக்கு மட்டுமே
புரிவதாய் இருந்தது.
யாருமற்ற
மூன்றாம் ஜாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது
நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத்துவங்கின.
மெளனத்தின் மரணமும்
அநாதையாய் வீதியில் கிடந்தது.

Friday, July 24, 2009

இரண்டாம் இயேசு



சிலுவைகள் சுமந்து திரிந்தவன்
தன்னை இரண்டாம் இயேசு என்றபோது
நீங்கள் கைதட்டி வரவேற்றீர்கள்.
நீண்ட தாடியும் காவி நிற பற்களுமாய்
அவன் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.
அவனது பலவர்ண சிலுவைகளில் கவரப்பட்ட
குழந்தைகள் பலூன்விற்பவனை தொடர்வதுபோல்
பின் தொடர்ந்து சென்றனர்.
பசும்பாலும் நெய்யும் அவனுக்களித்து
மகிழ்ந்தார்கள் உங்கள் இல்லத்தரசிகள்.
எல்லோருக்கும் சொர்க்கத்தில் இடமிருக்கிறது
என்றபடி சிரித்தான் அவன்.
உடன்சேர்ந்து கோணல் உதடுகளுடன்
அப்போதும் கைதட்டி சிரித்தீர்கள் நீங்கள்.