Monday, April 13, 2009

Winged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்






பருவகாலத்தில் இடம்பெயரும் பறவைகள் குறித்தான ஆவணப்படம் பற்றி எஸ்.ரா எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தவுடனே இணையத்தில் தேடிப்பிடித்து படத்தை பார்த்துவிட்டேன். படம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் எஸ்.ரா அவர்கள் நிறைய எழுதிவிட்டதால் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

ரம்மியமான காட்சிகள்:

1.மீனொன்றை முழுவதுமாக விழுங்க முயற்சிக்கும் பறவையின் லாவகமும்,நிதானமும் மிக அற்புதமான காட்சி.
2.அமேசான் நதியின் மீது பறக்கின்ற பஞ்சவர்ண கிளிகளும் அதன் பார்வையும்.
3.அலைகளோடு குதித்தோடும் பென்குவின் பறவைக்கூட்டம்
4.தண்ணீர் மீது நடனமாடும் பறவைகள்


ரணமான காட்சிகள்:

1.சந்தோஷமாய் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன .சில வேடர்களின் குண்டுகளுக்குப் பலியாகிறோம் என்பதை அறியாமல் வீழ்கின்ற பறவைகளைக் கவ்வி எடுத்துவர ஓடுகின்றன வேட்டை நாய்கள்.

2.ஒரு பக்க சிறகை இழந்த பறவையொன்று பறக்க இயலாமல் கடற்கரையில் அங்குமிங்கும் தத்தி தாவுகிறது.சுற்றி வளைக்கின்றன நண்டுகள்.

3.பென்குவின் பறவையின் குஞ்சை மற்றொரு பறவை கொத்தி தின்கிறது,தடுக்க இயலாத தாய்பறவை வானம் பார்த்து கதறி ஓலமிடுகிறது.(இந்தக்காட்சியின் பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது)

4.அமேசான் ந‌தியில் மித‌க்கிற‌து ஒரு ப‌ட‌கு. அதில் கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குர‌ங்கு ஒன்றும் சில‌ ப‌ற‌வைக‌ளும் இருக்கின்ற‌ன‌.ம‌னித‌ன் பிற‌ உயிரின‌ங்க‌ள் மீது காட்டுகின்ற‌ குரூர‌த்தை இந்த‌ ஒரு காட்சி சொல்லிவிடுகிற‌து.

86 நிமிட‌ம் ஓடுகின்ற‌ இந்த‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் முடிந்த‌வுட‌ன் ம‌ன‌தில் ஏற்ப‌டுகின்ற‌ வெறுமை த‌விர்க்க‌ இய‌லாத‌து. ப‌ற‌வைக‌ளை நாம் ப‌ற‌க்க‌ அனும‌திக்கிறோமா என்கிற‌ கேள்வி ம‌ன‌தில்
தோன்றியபடியே இருக்கிறது..

பிர‌மிளின் க‌விதையோடு இந்த‌ப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.

"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"

Sunday, April 12, 2009

பேசும் பறவை:

http://www.youtube.com/watch?v=OPz2MYp67ic


பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

Thursday, April 09, 2009

சிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி



1.சிலையுலகம்

உறைந்த மெளனத்தை
உகுத்துக்கொண்டிருக்கும்
அந்தச் சிலையின்
மர்ம அழகிலிருந்து
எழும்பும் இசை
மனதின் ஆழத்தில்
ஒன்றன்மீது ஒன்றாய்
படிந்துகொண்டிருந்தது.
மெளனத்தின்
மென்கரம் பற்றி
சிலையுலகினுள் நுழைந்தேன்.
சப்தங்களால் நிறைந்திருந்த
அவ்வுலகை விட்டு
வெளிக்குதிக்க என்
கரம் பற்றும்
அவசரத்தில் வரிசையில்
நின்றன சிலைகள்.

2.செந்நிற கூந்தல்காரி

அவள் முகத்தில்
பூனையொன்றின் சாயல்
படர்ந்திருந்தது.
காற்றில் அசைகின்ற
செந்நிற கூந்தலும்
உற்று நோக்குகின்ற
நீல நிற கண்களும்
அவளுக்கு வாய்த்திருந்தன.
உதிரிந்துகிடக்கும்
செர்ரிப் பழங்களை
ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
மிதித்துக்கொண்டிருந்தவள்
சட்டென்று வான்நோக்கி
பார்த்து சிரித்தாள்.
பின்,
ஏதுமறியா சிறுமியாய்
புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
பாவம் பைத்தியமென்றார்கள்
பூங்காவிலிருந்தவர்கள்.
மெல்ல மெல்ல
தங்களது முகம்
வேட்டைநாயின் முகமென
மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.

நன்றி: திண்ணை.காம்
Photo By: CVR

Tuesday, April 07, 2009

இரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]





1.
வழிந்து ஓடுகின்ற வெப்பத்தின்
அளவு உயர்ந்துகொண்டேயிருந்தது.
சொற்களால் விவரிக்க இயலாத
நிறத்தில் மலையென
குவிந்திருந்தது சாம்பல்.
கரும்புகை சூழ்ந்திருக்க
பற்றி எரிந்தது நீலக்கடல்.
வீசும் காற்றில்
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது
நெருப்பின் சுவாலைகள்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியது என்றுரைத்தான்
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி


2.
காதோரம் நடனமிடும்
செவ்விதழ்களின் ஸ்பரிசத்தில்
லயித்திருக்கும்போது
வேகமாய் தட்டப்பட்டது
அறைக்கதவு.
உள்நுழைந்த எந்திரன்
தோள்சாய்திருந்தவளைக் கண்டு
புன்னகைத்தான்.
இன்னும் நான்கு நிமிடங்களில்
மரணிக்கப்போகிறேன்
என்பதை உணர்த்தியது
மணிக்கட்டில் கட்டியிருந்த
கடிகாரத்தின் சிவப்பு விளக்கு.

3. மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.

-நிலாரசிகன்

Thursday, April 02, 2009

சுயம் பற்றி மூன்று கவிதைகள்:



1.எல்லோரும் வந்து
செல்லும்
பேருந்து நிலைய
கழிப்பிடமா
என் சுயம்?

2.வந்த நிமிடம் முதல்
பேசிக்கொண்டே இருந்தாள்
அவள்.
பேசவேண்டியதென்று அவள்
பட்டியலிருந்தவற்றை
எல்லாம் பேசி முடித்தாள்.
எல்லாம் முடித்தபின்
ஏனிந்த மெளனமென்று
வினவினாள்.
பார்வையாளனா நண்பனா
என்கிற கேள்வியின்
இடைவெளியில் நின்றுகொண்டிருந்தேன்
நான்.

3.எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-நிலாரசிகன்.

Monday, March 30, 2009

பார்த்ததில் பிடித்தது



இணையத்தில் கண்டெடுத்த புகைப்படம். தனிமையின் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் புகைப்படக்கலைஞர்.

Tuesday, March 24, 2009

எங்கே என் புன்னகை? - (கவிதையல்லாதவைகள்)




1.பனி விழும் இரவில் கைகள் நிறைய உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு எங்கேயோ நடக்கின்றன கால்கள்..
திசைகளை மறந்துவிட்டு எங்காவது பயணித்து பின் உணர்ந்து எனக்கான திசை தேர்வு செய்கையில் மலர்கின்றன
இலைகளெல்லாம் சிறு சிறு புன்னகையாய்.

2.கண்ணீரும் நிராகரித்த அந்தியொன்றில் கண்ணாடி யன்னல் வழியே நடைபாதையை வெறித்துக்கொண்டிருந்தன கண்கள்.
நாய்க்குட்டியுடன் கடந்துசென்ற சிறுமி தூரப்பார்வையில் அனுப்பினாள் சிறுபுன்னகையொன்றை. மெல்ல மெல்ல
மலர்ந்தது இதயம்.

3.மலர்கொத்து விற்கும் சீனப்பெண்ணின் புன்னகையில்தான் எப்போதும் மலர்ந்திருக்கிறதோ விற்பனைக்கு
காத்திருக்கும் பூக்கள்?

4. யாருமற்ற அறைக்குள் எழுகின்ற கேவல்சப்தங்களை நிறுத்திவிட முயன்று தோற்கிறது கவிதை.
கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.

Monday, March 23, 2009

கறுப்பு வெள்ளை கனவுகள் - மூன்று கவிதைகள்




1.உன் கரங்களுக்குள் வாழ்ந்து
பழகிய என்
கனவுகளின் விளிம்பில்
காத்திருக்கிறேன்.
காத்திருத்தலின் வலி தாளாமல்
கனவுக்குள் புதைகிறதென்
பாதங்கள்.
மெல்ல மெல்ல
என்னை சுற்றி உருக்கொள்கிறது
கல்லறையொன்று.
நீ மறைந்த திசைநோக்கி
என் சிறகுகள்
படபடக்க துவங்குகையில்
கால்களை கட்டிக்கொண்டு
அழுகிறது குழந்தை.

2.
இருள் மிகுந்த அடர்வனத்தில்
நுழைய முடியாமல்
தவித்துக்கொண்டிருந்தது
வெளிச்சம்.
மானொன்றின் கதறலில்
சிலிர்த்துக்கொண்டன
விருட்சங்களின் இலைகள்.
எதற்காகவோ அல்லது
யாருக்காகவோ
சத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன
பூச்சிகள் சில.
சற்று முன் பெய்து
ஓய்ந்திருக்கிறது
மழை.

3.
நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.
உடைக்கின்ற வலிமையற்ற
என் கரங்களில்
உடைக்கப்பட்ட வளையல்களின்
கீறல்கள்.
இசைக்க மறந்த
வெள்ளைக்குயிலின்
ராகத்திற்காக
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
உன் யாசகம்.
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
என் கண்ணீர்.

நன்றி: Youthful Vikatan

Friday, March 20, 2009

காதலின்றி வேறில்லை - சில காதல் கவிதைகள்


0

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

0

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

0

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

0

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!

0

Wednesday, March 18, 2009

பார்ட் டைம் வேலை

வீட்டிலிருந்தே இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் அன்பர்களுக்கு:


Click here



[இது Genuine தளமா என்று தெரியவில்லை,நம்பிக்கை அற்றவர்கள் தவிர்த்துவிடலாம்]

Tuesday, March 17, 2009

மிகச்சிறந்த வீடியோ:

பார்த்ததில் பிடித்தது:


http://www.youtube.com/watch?v=vZAEBUTRZPo

Sunday, March 15, 2009

படித்ததில் பிடித்தது


Walking in the moon, Counting the stars,
Beyond the world, I'm searching you.

Thinking about love, Laughing at myself,
Without any words, I'm searching you.

Crying at your absence, Swallowing my sorrows,
To make you happy, I'm searching you.

Flying high in sky, Sailing long in sea,
Mad with your thoughts, I'm searching you.

Hopeing for goodthings, Hopping towards future,
Ever to be with you, I'm searching you.

Finding happy , in Failing before you,
To show my love, I'm searching you.

Waiting for you, Biting my nails,
To make me comfort, I'm searching you.

Longing for your nearness, Throwing away my roughness,
To rest under you, I'm searching you.

Sitting in the shore, Staring at the waves,
To hear your words, I'm searching you.

Sleeping in your lap, Closing my eyes,
To leave this world, I'm searching you....
Until my last breathe...
(இணையத்தில் கண்டெடுத்தேன்,எழுதியவர் பெயர் இல்லை)

Thursday, March 12, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை

புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய நிலையில் இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து பிரித்தேன். முத்துமுத்தான கையெழுத்து அந்த டைரியை நிரப்பியிருந்தன. எழுத்துப்பிழைகள் அதிகமாய் தென்பட்டது.பத்து ரூபாய்கொடுத்து வாங்கி வந்துவிட்டேன்.

தாதர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி கிளம்ப ஆரம்பித்தவுடன் டைரியை திறந்தேன். டைரிக்கு சொந்தமானவரின் பெயர் இல்லாத நிலையில் ஐந்தாவது பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். உடனே புரிந்துபோனது இது சிறுமி ஒருத்தியின் டைரியென்று. ஏழு வருடங்களுக்கு முன்புள்ள டைரி. ஜனவரி ஆறுவரை கிழிந்துவிட்டதால், ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பித்தேன்

ஜனவரி 7:
"இன்னைக்கு என்னோட பன்னிரெண்டாவது பிறந்தநாள். ராத்திரி ரயில்ல நான் மும்பை போகனும்னு அம்மா சொன்னா. இனிமே நான் அங்கதான் வேலை பார்க்க போறேன்னும் சொன்னா. சொல்றப்போ ஏன் அழுதான்னு தெரியலை. நெத்தியில ஒரு முத்தம் கொடுத்துட்டு இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டா. ராத்திரி எட்டு மணிக்கு ஒரு அண்ணன் வந்து என்னை கூட்டிக்கிட்டு போனான். சந்தோஷமாக டாட்டா காட்டினேன் அம்மா முந்தானையில முகத்த பொத்திகிட்டு அழுதா"

ஜனவரி 9:
"மும்பை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேசன்ல இருந்து வீட்டுக்கு எங்களை கூட்டிப்போக காரை அனுப்பி இருந்தாரு முதலாளி. காருல ஏறினவுடன் சாப்பிட பச்சைக்கலர் ஆப்பிள் தந்தாரு டிரைவரு. அவ்வளவு ருசியான ஆப்பிளை நான் சாப்பிட்டதேயில்லை.
அரைமணிநேரத்துல வீட்டுக்கு போய் சேர்ந்தோம். முதலாளி செவப்பா உயரமா இருந்தாரு. அவரைத் தவிர வீட்டுல வேறு யாருமில்ல. இவ்வளவு பெரிய பங்களாவை எங்க கிராமத்தில் நான் பார்த்ததே இல்ல. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு"

ஜனவரி 10:
"இன்னைக்கு காலையில எழுந்திருச்சவுடன் குளிச்சிட்டு வீட்டை துடைச்சிட்டிருந்தேன். மேல் மாடியிலிருந்து முதலாளி கூப்பிட்டாரு. அவர் ரூமுக்கு போனவுடன் என்னை இறுக்கி கட்டிபிடிச்சுகிட்டு முத்தமிட ஆரம்பிச்சாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய முத்தம் கொடுத்துட்டு நிறைய சாக்லெட் தந்தாரு. எனக்கு ஏன் முத்தம் தந்தாருன்னு தெரியலை. சாக்லெட் நிறைய தந்த முதலாளியை ரொம்ப பிடிச்சிருக்கு"

ரயிலில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டு டைரிக்குள் ஆழ்ந்திருந்தேன் நான்.

ஜனவரி 11:

"இன்னைக்கும் அவரு ரூமுக்கு என்னை கூப்பிட்டார். நிறைய சாக்லெட் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே ஓடினேன். அவரோட இடதுகையில ஊசி குத்திக்கிட்டு ஏதோ உளறினார். என்னை இழுத்து என் ட்ரெஸ்ஸை கழற்ற சொன்னார். எதுக்கு அப்படி சொன்னாருன்னு புரியாம ட்ரெஸ்ஸை கழற்றினேன். ஏசி குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.
அவர் ரூமை விட்டு வெளியே வரும்போது உடம்பு வலி தாங்க முடியல. வலி மறக்க நிறைய சாக்லெட் சாப்பிட்டேன். ஏன் அப்படி செஞ்சாருன்னுதான் புரியலை"
டைரியை படித்துக்கொண்டிருந்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாய் அடுத்த பக்கத்தை புரட்டினேன்.

ஜனவரி 12:

"இன்னைக்கு என்னை மாதிரி நாலு சின்னப்பொண்ணுங்க வந்தாங்க. அவங்களும் என்கூடதான் இருப்பாங்கன்னு சொன்னாரு முதலாளி. எனக்கு சாக்லெட் கிடைக்கறது குறைஞ்சு போச்சு"

பிப்ரவரி 10:

"இங்க வந்து ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருவாரத்தில் வர்றேன்னு சொன்ன அம்மாவும் வரலை. எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அம்மாவோட மடியில படுக்கணும். இந்த ஒரு மாசத்துல இருவதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்கிட்டாரு முதலாளி. எனக்கு ஒரு ப்ரெண்ட் கிடைச்சிருக்கா. அவளும் கிராமத்திலிருந்துதான் வந்தாளாம். பெயர் திவ்யா. திவ்யாவிற்கு அம்மா கிடையாதாம்.
அவளோட அப்பா இங்கே வந்து விட்டுட்டு போய்ட்டாரு. இப்போ இராத்திரி அடிக்கடி தூக்கம் கெடுகிறது. தினமும் நாலு அஞ்சு பேர் வர்றாங்க. உடம்பு வலி உயிர்போகுது"

பிப்ரவரி 20:

"அம்மா நீ எப்போம்மா வருவே? உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை? எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா?"

ரயிலைவிட வேகமாய் தடதடத்தது என் இதயம். அதற்கு மேல் வாசிக்க முடியாமல் மூடிவைத்துவிட்டு, படுக்கையிலிருந்து இறங்கி அருகிலிருந்த கதவை திறந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டேன். மீண்டும் படுக்கைக்கு வந்து டைரியை திறந்தேன்.

மார்ச் 12:
"இரண்டு நாளா நான் சாப்பிடலை. திவ்யா செத்துப்போயிட்டா. பாவாடையெல்லாம் ரத்தமா இருந்துச்சு. முதலாளி கொஞ்சம் கூட கவலப்படல. இரண்டு பேரு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. முருகா முருகான்னு நூத்தியெட்டு தடவ எழுதுனப்பறம் கொஞ்சம் பயம் இல்லாம இருக்கேன்"

மார்ச் 12ம் தேதிக்கு பின்னர் டைரி வெறுமையாய் இருந்தது. எந்த ஒரு பக்கத்திலும் எதுவும்
எழுதப்படவில்லை. மும்பையில் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் டைரி சென்னையில் எனக்கு கிடைத்திருக்கிறது.
அப்படியெனில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து சென்னை சென்றிருப்பாளோ? இப்போது உயிருடன் இருப்பாளா? ரொம்ப நேரம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் உறங்கிவிட்டேன்.

மறுநாள் இரவு மும்பையை அடைந்தது ரயில். இரு நாட்கள் அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தடைந்தேன். மனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு சிதைந்துபோன அந்தச் சிறுமியின் நினைவு இரண்டு வாரங்களுக்கு என் மனசுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.
நின்றால், நடந்தால் அச்சிறுமியின் நிழல் முகம் நினைவுத் திரையிலாடிக்கொண்டேயிருந்தது.

அலுவலகத்தில் திடீரென்று என்னை ஜான்ஸியில் உள்ள க்ளையின்ட் ஆபிஸுக்கு டெபுடேஷனில் அனுப்ப முடிவெடுத்தார்கள்.அரைமனதாக சம்மதித்தேன்.
சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்திலும், தில்லியிலிருந்து ஜான்ஸிக்கு இரயிலும் செல்ல முடிவாகியது. பயணம் என்பது எனக்கு எப்போதுமே உவப்பானது, எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனைவித வாழ்க்கை முறைகள், பார்க்க பார்க்க அதிசயமாக இருக்கும் எனக்கு. பம்பாய் பயணத்தின் போது படித்த அச்சிறுமியின் ஞாபகம் இன்னும் மறக்க முடியாததாக இருந்தது.

தில்லி பனிக் காற்று மூச்சையடைத்தது. சென்னையின் டிசம்பர் குளிருக்கே நடுங்கிப் போவேன், நல்ல வேளை மப்ளர் ஜெர்கின் எல்லாம் எடுத்துவந்திருந்தேன். ரயில் நிலையத்தில் புத்தகங்கள் வாங்கி கொண்டு என் கோச்சினைத் தேடி பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு என் சீட்டில் அசதியுடன் அமர்ந்தேன். கையில் இந்தியா டுடே. அசிரத்தையாக அதை புரட்டிக் கொண்டிருந்த போது இருவது வயது மதிக்கத் தக்க இளம் பெண் என் இருக்கைக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது. லட்சணமாக இருந்தாள். தமிழ்நாட்டுப் பெண் என்று பார்த்ததும் தெரிந்தது. அவள் சீட்டில் அமர்ந்து ஜன்னலில் கணவனிடம் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் மெல்ல நகர்ந்தது.அதனுடன் அவனும் கொஞ்ச தூரம் நடந்து வந்தான். அவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டார்கள். அவன் கண் பார்வையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அந்த கம்பார்மெண்டை ஒரு நோட்டம் விட்டாள். என் முகத்தில் அவள் விழி ஒரிருரு நிமிடம் அதிகமாக நிலைபெற்று பின் மாறியது. நான் புத்தகம் வாசிப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறன் மனை நோக்காத பெரும் குணத்தான் தான் ஆயினும் அழகான ஒரு தமிழ்ப்பெண் எதிரில் இருக்க எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் சற்று நேரத்தில் கைப்பையிலிருந்து ஒரு டைரியை எடுத்தாள். ரயிலின் ஆட்டத்திற்கெல்லாம் சளைத்தவள் இல்லை போலும். கோணல் மாணலாக ஏதோ எழுத ஆரம்பித்தாள். எட்டிப் பார்ப்பது நாகரிகமற்ற செயல் என்பதால் அமைதியாக இருந்தேன்.

அவள் கைப்பையில் டைரியை வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அப்பர் பெர்த்தில் ஏறி கைப்பையை தலையணையாக வைத்து படுத்து தூங்கியே விட்டாள். எனக்கு லோயர் பெர்த். அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரயில் சட்டென்று ஒரு இடத்தில் குலுங்கி நின்றது. யாவரும் நல்ல உறக்கத்தில், இவளின் பையிலிருந்து நழுவி ஏதோ கீழே விழுந்தது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். சட்டென்று குனிந்து அதை கையில் எடுத்தேன். அவளின் டைரி! என்ன இது என் வாழ்க்கையில் டைரி அடிக்கடி குறிக்கிடுகிறதே,இது என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறதோ பேசாமல் அதை அவள் பையில் வைத்துவிடலாம என்று நினைத்தேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன நினைப்பாள், திருடன் என்று கத்துவாள். சே என்ன தர்ம சங்க்டம. எல்லாவற்றையும் மீறீய ஆர்வத்தில் டைரியை கைகள் நடுங்க அந்த மெல்லிய விளக்கொளியில் வாசிக்கத் தொடங்கினேன்.

அவள் இன்றைய தேதியில் தன் கணவர் மிஸ்ராவை பிரிந்து வேலை நிமித்தமாக போவதைப் பற்றி எழுதியிருந்தாள். முந்தைய பக்கங்கள் எல்லாவற்றிலும் அழகுத் தமிழில் அவள் கணவன் புராணம் தான். சில அந்தரங்கமானவற்றைக் கூட எழுதியிருந்தாள்.ஒரு பக்கத்தை வாசித்த போது என் இதயம் துடிப்பதை ஒரு நொடி நிறுத்திக் கொண்டது. அவள் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில்ருந்து மீட்டு எடுக்கப்பட்ட பெண்.

அவமானத்தின் கறை படிந்த தன் வாழ்வை எப்படி சமன் செய்வது எனத் தெரியாமல் சிறு வயதில் அரைகுறையாக கிறுக்கிக் கொண்டிருந்த ஓவிய முயற்சிக்கு உயிர் கொடுக்க மிஸ்ராவிடம் மாணவியாக சேர்ந்ததும், அவர் இவளின் அன்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்டு மனைவியானதையும் விரிவாக எழுதியிருந்தாள். எழுதும்போதும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.சில எழுத்துக்கள் அழிந்திருந்தது.

வாழ்க்கையெனும் ஓவியம் அவளை சிதைத்து அலங்கோலமாக்கிவிட்டு பின் அழகாக்கியும் பார்த்துவிட்டது. அழகு அலங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை.
மேலும் அந்த டைரியை என்னால் வாசிக்க முடியவில்லை. அச்சிறுமியின் டைரியும் இந்த யுவதியும் ஒருவரே தானா? அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா? இருவரும் தமிழ்ப்பெண்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குறிப்பும் என்னிடம் இல்லை.

அந்தக் குழந்தைக் கையெழுத்திற்கும் இந்த முதிர்ந்த எழுத்திற்கும் உண்டான வித்யாசங்களை கண்டறியும் திறன் எனக்கில்லை.எப்படியோ மனம் கனத்துக் கிடந்த நான் புதிதாய் எதோ ஒன்று எனக்குள் உட்புகுந்தது போன்ற ஆசுவாசத்துடன் கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தேன். கனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.
எங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.

-நிலாரசிகன்

Friday, March 06, 2009

பிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதைகள்




1.யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன்
அவளை நெருங்குகிறானவன்.

2. புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்னல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

3. சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்.

நன்றி: யூத்புல்விகடன்.காம்

Wednesday, March 04, 2009

வால் பாண்டி சரித்திரம் - சிறுகதை

சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்

Sunday, February 15, 2009

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு "ஏ" பிரிவு - சிறுகதை

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/02/blog-post.html

Saturday, February 07, 2009

துயர்மிகுந்த இரவு இதுவாகத்தானிருக்கும்

தொட்டில் குழந்தையொன்று
தவறி
விழுவதை காண நேர்கின்ற
தாயின் வலியைவிடவும்
அதிகமான வலியை இந்த இரவு
எனக்குத் தருகிறது.
ஒற்றை அறையில்
இறுக மூடிய சன்னலோரம்
கண்களில் வழிகின்ற நீருடன்
அமர்ந்திருக்கிறேன்.
துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்.

Friday, February 06, 2009

படித்ததில் பிடித்தது:

"அன்பு யார் மீதும் காட்டலாம்.ஆனால் கோபம் உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்டமுடியும்."

Wednesday, February 04, 2009

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...


1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?
6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?
7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.

Thursday, January 29, 2009

மூன்று சொட்டு கண்ணீர்

1.
நெஞ்சு நோக்கி நீள்கின்ற விரல்களின்
நடுவிலும்
பரிகசிக்கும் சிரிப்பு
சப்தங்களிலும்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
வாழ்ந்து கெட்டவனின் சுத்தமான
கண்ணீர்.

2.
என்னை ஏமாற்றுவதாய்
நீயும்
உன்னை ஏமாற்றுவதாய்
நானும் நடத்துகின்ற
நாடகத்தில்
கோமாளியாகி வெளித்தெரியா
கண்ணீரில் நனைகிறது
நம் பவித்திர நேசம்.

3.
நடுநிசியில் தெருவோர
மரத்தடியில் உறங்குகின்ற
பைத்தியக்காரி
மார்போடு அணைத்திருந்தாள்
பொம்மையொன்றை.
அவளுக்கு பிறக்க
இயலாமல் போனதற்காய்
அப்பொம்மை அழுத
கண்ணீர்தானோ
இந்த இரவுமழை?

Tuesday, January 20, 2009

இரு நிகழ்வுகள்

நிகழ்வு 1:

மணல்வீடு சிற்றிதழ் & களரி தெருக்கூத்துப்
பயிற்சிப்பட்டறை
இணைந்து நிகழ்த்தும்

மக்கள் கலை இலக்கிய விழா

நாள் : 24 சனவரி 2009,சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி.
இடம்: ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல்,மேட்டூர்
தாலுக்கா,சேலம் மாவட்டம் 636453

பஸ்ரூட் : சேலம் - டூ - மேட்டூர்
பஸ்நிறுத்த : பொட்டனேரி

தொடர்புக்கு : மு.ஹரிகிருஷ்ணன்(9894605371)

நிகழ்வு 2:

யுகமாயினி இலக்கியக்கூடல்

இடம்: I.C.U.F அரங்கம்,சத்திரம்,திருச்சி
நாள்: 26-01-2009
காலம்: பிற்பகல் 3 மணி
தலைமை : பிரபஞ்சன்
வாழ்த்து :பழமலய்
யுகமாயினி கவிதைகள் அலசல்: இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
சிறுகதைகள் அலசல்:
தஞ்சாவூர் கவிராயர்
கட்டுரைகள் அலசல்:
ஆதவன் தீட்சண்யா
சிற்றிதழ் களம் : கஜேந்திரன்
ஒருங்கிணைப்பு: அரங்கமல்லிகா/இரா.எட்வின்

Saturday, January 17, 2009

புனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்

ஒரு படைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது/சிலிர்க்க வைத்தது/வசீகரித்தது/காறி உமிழ்ந்தது/அடித்து துவைத்து போட்டது/நீ எழுதறதெல்லாம் ஒரு எழுத்தா என கேள்விகேட்டது/தூக்கம் கெடுத்தது/துக்கம் கொடுத்தது/சிரிக்க வைத்தது/சிலிர்க்க செய்தது அந்த படைப்பின்,சிறுகதை தொகுப்பின் பெயர்

"புனைவின் நிழல்" எழுதியவர் மனோஜ்.உயிர்மை ப‌திப்ப‌க‌ம்

மாந்த்ரீக யதார்த்தத்தை முன்னிருந்திய நவீன படைப்புகளில் மிகச்சிறந்தது.(இல்லை இதைவிட‌ சிற‌ந்த‌ தொகுப்பும் இருக்கிற‌து என்ப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் பெய‌ர் ம‌ட்டும் த‌ராம‌ல் ப‌திப்ப‌க‌த்தின் பெயரையும் த‌ந்து விடுங்க‌ள். )

கவிதைமீது காதலுற்று பலகாலம் கவிதைகளைவிட்டு வெளியே வராமல் இருந்தவன் என்பதால் சிறுகதை வாசிப்பு கடந்த 2007 வரை மிகக்குறைவாகவே இருந்தது. 2008ல் எனக்கென்ன ஆயிற்றோ தெரியவில்லை சிறுகதை பைத்தியமாகவே மாறிவிட்டேன். கிட்டத்தட்ட 3000 சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருப்பேன்.

புனைவின் நிழலை படிக்க எடுத்தவுடன் ஒரே மூச்சில் இதிலிருக்கும் 15 கதைகளையும் படித்துவிடவில்லை. காரணம் மற்ற எழுத்திலிருந்து மனோஜின் எழுத்து மாறுபட்டிருக்கிறது. யதார்த்தம் மீறிய கற்பனையும்,மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிய துடிக்கும் மனமும் இவருக்கு வாய்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி சிறுகதையில் வாசகனை கட்டிப்போடும் வித்தையும் பல இடங்களில் காண முடிகிறது.

குறிப்பாக நான்கு சிறுகதைகள் கச்சை,சர்ப்ப வாசனை,அட்சர ஆழி,பால்.
இந்த நான்கு சிறுகதைகளில்தான் மனோஜ் தனித்து நிற்கிறார்.

கச்சை மீது ஆவல்கொண்ட பெண்ணொருவளை கச்சை அணிய சம்மதிக்காத சமுதாயம் நிர்வாணப்படுத்தி அவமதிக்கிறது.அந்த அவமானம் தாளாமல் தூக்கில் தொங்குகிறாள்...இவை எப்போதோ நடந்ததாக சொல்லப்படுகிறது. அவள் தூக்கில் தொங்கிய புளிய மரத்தின் அருகிலிருக்கும் வீட்டில் கதையின் நாயகி வந்து தங்குகிறாள். அவள் அணியும் நவீன கச்சையை தூக்கில் தொங்கியவள் ஆர்வமோடு ஸ்பரிச்ச முயல்வதாக செல்கிறது கதை. இந்தக் கதைதான் இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கதை என்பேன்.

சர்ப்ப வாசனை கதையில் வனத்தை பற்றிய விவரணைகள் மிக நுட்பமாக அமைந்திருக்கிறது.

சரி இந்தப்பதிவின் தலைப்பிற்கு வருவோம்.

இந்த புனைவின் நிழலை எழுதிய மனோஜை இன்று புத்தக காட்சியில் உயிர்மை அரங்கில் சந்தித்தேன்.
எதிர்பாராத சந்திப்பில் நா எழவில்லை எனக்கு. அருகில் சென்று கரம்பற்றி புனைவில் நிழல் வாசித்தேன் ரொம்ப நன்றிங்க...அடுத்து எப்போ எழுதுவீங்க, என்றெல்லாம் பேசிக்கொண்டே போனேன் என் பெயரைக்கூட சொல்ல மறந்து. அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியின் ரேகைகள் படர்வதை உணர முடிந்தது. யாரோ ஒரு அந்நிய‌னின் அடிம‌ன‌திலிருந்து எழுகின்ற‌ பாராட்டை விட‌ சிற‌ந்த‌து எது?

ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ எழுத்தாளரை ச‌ந்தித்த‌ ம‌கிழ்ச்சியில் திளைத்திருந்த‌போது அருகில் வ‌ந்து நின்றார் ஒருவ‌ர்.அது சாரு நிவேதிதா.

சாருவை ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசிய‌தில்லை. ஏனெனில் அவ‌ரை ப‌ற்றி வ‌ருகின்ற‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் அவ‌ர‌து ராச‌லீலாவின் ப‌க்க‌ங்க‌ளையே மிஞ்சிவிடும்.

"அந்தாளா,அவ‌ருகிட்ட‌ எவ‌ன் டா பேசுவான்...இப்போ பேசினா நாளை என் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு கார‌ண‌ம் நேற்று என்னோடு பேசிய‌வ‌ர்னு வெப்சைட்டுல‌ எழுதுவாரு.."

"அவ‌ரு ஒரு மாதிரி"

"சீ..ஸெக்ஸை த‌விர‌ அவ‌ருக்கு என்ன‌ தெரியும்"

"போதையில‌ இருப்பாருடா...ஜாக்கிர‌தை"

இதுபோன்ற‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளை கேள்விப‌ட்ட‌தால் வ‌ழ‌க்க‌மான‌ தமிழ‌ன் போல‌ "ந‌ம‌க்கேன் வம்பு" என்று பேச நினைத்தும் பேசாம‌ல் வ‌ந்துவிடுவேன்(க‌ட‌ந்த‌ 2008ம் ஆண்டு புத்த‌க‌ க‌ண்காட்சியிலும் பார்த்துவிட்டு பேச‌மால‌ வீடு திரும்பினேன்)

சாரு எங்க‌ள் அருகில் வ‌ந்த‌தும்,கைகொடுத்து ந‌ல‌ம் விசாரித்தேன். என் பெயர் நிலார‌சிக‌ன் உங்க‌ள‌து இணைய‌த‌ள‌ம் தொட‌ர்ந்து வாசிப்ப‌வர்க‌ளில் நானும் ஒருவ‌ன் என்றேன்.ஆஸாதி புத்த‌க‌ம் வாங்க‌ வ‌ந்தேன் என்றேன்.

இத‌ற்கெல்லாம் சாரு எப்ப‌டி ம‌றுமொழி பேசியிருப்பார்?

நிலார‌சிக‌ன்: சார்,ந‌ல‌மா?

சாரு: ந‌ல்லா இல்ல‌ன்னுதான‌ பேங்க் அக்க‌வுண்ட் கொடுத்திருக்கேன் பார்க்க‌லையா?

நிலார‌சிக‌ன்: உங்க‌ 108 க‌தையும் நெட்ல‌ ப‌டிச்சேன்.

சாரு: "காம‌ரூப‌ க‌தைக‌ள்" வாங்க‌ மாட்டேன்னு இன் டைர‌க்டா சொல்றீயா?


நிலார‌சிக‌ன்: ஆசாதி புத்த‌க‌ம் அமெரிக்க‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் கேட்டிருந்தார்.வாங்கி அனுப்ப‌லாம்னு வ‌ந்தேன்.

சாரு: அப்ப‌டியே என் பேங்க் அக்க‌வுண்ட்டையும் கொடுத்துடு ராஜா.


இப்ப‌டியெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அத‌ற்கு நானும்,சாருவும் பொறுப்ப‌ல்ல‌ :)

மிக‌ மென்மையான‌ புன்முறுவ‌லுட‌ன் கேட்கின்ற‌ கேள்விக‌ளுக்கு மிக‌ நேர்த்தியான‌ ப‌திலை த‌ந்தார்.
சாருவா இது என்று ஆயிர‌ம் முறை ம‌ன‌ம் கேட்டுக்கொண்ட‌து. சாரு மீது நான் கொண்டிருந்த ‍‍நெகட்டிவ் பிம்பம் உடைந்து நொறுங்கியது.எழுத்தில் எப்ப‌டியும் இருந்துவிட்டு போக‌ட்டும்.யாரை ப‌ற்றிய‌ ப‌ய‌முமின்றி எதைவேண்டுமானாலும் எழுத‌ட்டும்.But,He is a Gem இவ்வ‌ளவு ப‌டித்தவ‌ர்,எழுத்தில் சூர‌ர்,க‌லைக‌ள் ப‌ல‌ க‌ற்ற‌வ‌ர் ஆயினும் Down to earth.
இது புக‌ழ்ச்சி என்பவ‌ர்க‌ள் சாருவுட‌ன் ப‌ழ‌கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டு தெரிந்துகொள்ளுங்க‌ள்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அசோக‌மித்திர‌ன்,சுஜாதாவிற்கு அடுத்த‌ப‌டி எதைப்ப‌ற்றியும் பேச‌/எழுத‌ முடிகிற‌ எழுத்தாள‌ர் சாரு ம‌ட்டும்தான்.

சாருவின் ப‌டைப்புக‌ள் அனைத்தையும் நான் வாசித்த‌தில்லை. ஆனால் அவ‌ர் எழுத்தின் வேக‌ம் பிர‌மிக்க‌ வைக்கிற‌து. அல‌சி ஆராய்ந்து எழுதுகின்ற திரைவிம‌ர்ச‌ன‌ங்க‌ள் விய‌க்க‌ வைக்கிற‌து(சமீபத்திய உதார‌ணம்: சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ப‌ற்றிய‌ பார்வை,உயிர்மை இத‌ழில் வெளிவ‌ந்த‌து)

So, ஒருவ‌ருடைய‌ எழுத்தை வைத்து அவ‌ரை எடைபோடாதீர்க‌ள் அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பின்ன‌ர் அவ‌ர் ப‌ற்றி பேசுங்க‌ள் என்கிற‌ ப‌ழைய‌ ப‌ஞ்சாங்க‌த்தை பாட‌விரும்பாம‌ல் இந்த‌ ப‌திவுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.Have a great week ahead guys! :)

Monday, January 12, 2009

புத்தக காட்சியில் என் புத்தகங்கள்

நண்பர்களுக்கு,

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக காட்சியில் கடை எண் 3ல்(எனி இந்தியன் பதிப்பகம்)
என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் கிடைக்கும்.

1.ஒரு பட்டாம் பூச்சியின் கனவுகள்
2.மயிலிறகாய் ஒரு காதல்

வாங்கிப்படித்தவர்கள் உங்களது விமர்சனங்களை nilaraseegan@gmail.com க்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

Friday, January 09, 2009

வாசித்து நேசித்த புத்தகங்கள்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்
என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்
போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்
நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்
10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.

சிறுகதை தொகுப்புகள்:

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
[நர்மதாவில் கிடைக்கலாம்]

மண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த
படைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த
கதைகள்

மண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]

காமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்
வா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற
படைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் "பச்சை மனிதன்" கதை
மாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

மிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல? குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி
பொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.

புனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]

மனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க
இயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை
நாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன."கச்சை" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது

உடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]

சைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]

இரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.
அறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க
வைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.

பிராந்து - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்
அதனை உணரலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]

நேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்
வலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்

இருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்
மனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]

நினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா? வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன
சொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி?]

அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]

பாஸ்கர் சக்தி "மெட்டிஒலி" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து
நிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.
வாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்
என்பதை உணர்த்துகிறது.

விசும்பு-ஜெயமோகன்[உயிர்மை?]

அறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்
சில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.

வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]

நவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்
தனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.

புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]

விளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த
தொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.

இன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)
நான் வாசித்தவை.

சிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை
படிக்க விரும்பினால் "முத்துக்கள் பத்து" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை "அம்ருதா" பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.

இதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை
தொடர்ந்து எழுதுகிறேன்.

தனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு

பகிர்ந்துகொண்டதில் மகிழ்ந்து,
-நிலாரசிகன்.

Thursday, January 08, 2009

சென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்

இன்று ஆரம்பித்தது 32வது சென்னை புத்தக
கண்காட்சி. முதல் நாள் என்பதால் பல புத்தகங்கள் இன்னும் பிரிக்கப்படாத பெரிய
பெட்டிகளில் இருந்தன. மாலை 5 மணிக்கு பிறகு கூட்டம் வர ஆரம்பித்தது.

நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் முதல் கவிதை தொகுப்பு
"அந்தரங்கம்" நான் வாங்கிய புத்தகங்களில் முதலில் வாசிக்க காத்திருக்கிறது.

அனிதாவின் "கனவு கலையாத கடற்கன்னி" கவிதை தொகுப்பு உயிர்மையில்
இன்று மாலைவரை வந்து சேரவில்லை. (இவ்வருடம் வெளிவருவதாக
உயிர்மை இதழில் படித்தேன்)

வலைப்பதிவர்கள் சார்லஸ்,லக்கிலுக்,அதிஷா மூவரையும் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது.

வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வலைஞர்கள் சந்திப்பு ஒன்று வைக்கலாமா?
வருகை தரும் நண்பர்கள் பெயர்களையும்,அலைபேசி எண்ணையும் பின்னூட்டமிடுங்கள்.
தேதி,நேரம் மாற்றி வைக்க முடிவெடுத்தாலும் அதையும் தெரிவித்துவிடுங்கள்.
ஒரு நல்ல சந்திப்புக்கு காத்திருக்கிறேன்.

ஏழு ரூபாய்க்கு விற்கும் தேநீர் மட்டும் கசக்கிறது. மற்றபடி திரும்பிய பக்கமெல்லாம்
நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே நடப்பது ரோஜாக்களுக்கு நடுவில் பறக்கும்
பட்டாம்பூச்சியின் குதூகுலத்தை தருகிறது.

[என் கவிதை நூல் "மயிலிறகாய் ஒரு காதல்" எனி இந்தியன் கடை எண் 3ல் கிடைக்கும்]

Wednesday, December 31, 2008

நிலா விருதுகள் 2008

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் நான் அதிகம்
எதிர்பார்ப்பது ஆனந்தவிகடனில் சுஜாதா அவர்களின்
விருதுகளைத்தான். இவ்வருடம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்
அந்த காந்த எழுத்தாளர். அவருக்கு அஞ்சலியுடன்
இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

[இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட Judgement]


விளையாட்டு :


சிறந்த கிரிக்கெட் அணிகள் : தென்னாப்ரிக்கா,இந்தியா

சிறந்த மட்டையாளர் : கெளதம் காம்பீர்

சிறந்த பந்துவீச்சாளர் : ஸ்டெயின்

சிறந்த பீல்டர் : ரிக்கி பாண்டிங்

சிறந்த கேப்டன் : தோனி

சிறந்த வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 103* இங்கிலாந்துக்கு எதிராக, டும்னி 166 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 117 முதல் பைனலில் - எதிரணி ஆஸ்திரேலியா

சிறந்த டி20 இன்னிங்ஸ் : கிறிஸ் கெயில் 67 ரன்கள் - எதிரணி நியுசிலாந்து

சிறந்த மைதான வாசகம்: ""Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is watching." சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் விளையாடியபோது காணப்பட்டது.

சிறந்த விக்கெட் : ரிக்கி பாண்டிங்ஐ போல்ட் ஆக்கிய இசாந் சர்மாவின் பந்துவீச்சு

சிறந்த புதுமுகம்: அஜந்தா மெண்டீஸ் - இலங்கை.


சிறப்பு விருது : அபிநவ் பிந்ரா,விஸ்வனாதன் ஆனந்த் மற்றும் சீனாவிற்கு(தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவை 2ஆம்
இடத்திற்கு தள்ளியதற்காக)

சொதப்பல் விருது: ஹர்பஜன் சிங்( ஸ்ரீசாந்தின் கன்னத்தை மைதானத்திலேயே பதம் பார்த்ததால்) மற்றும் BCCIக்கு -தொடர்ந்து
ICLஐ தடை செய்து வருவதற்கு.


இலக்கியம்:

சிறந்த கவிதை தொகுப்பு :கவிஞர்.இளங்கோ கிருஷ்ணனின் "காயசண்டிகை" [காலச்சுவடு வெளியீடு]

சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு

சிறந்த கட்டுரை தொடர் : தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்,தீராநதியில் ஜெயமோகனின் அங்கத கட்டுரை

சிறந்த சிறுகதைகள் : "சாட்டை" - கண்மணி குணசேகரன்,"இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன" -எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த சிற்றிதழ் : மணல்வீடு

சிறந்த புதிய இதழ் : வார்த்தை

சிறந்த புதுமுக கவிஞர்கள் : சகாராதென்றல்,குட்டிசெல்வன்,அனுஜன்யா,லக்ஷ்மி சகாம்பரி,செல்வராஜ் ஜெகதீசன்,ரிசான் ஷெரீப்,பாஸ்கர்

சிறந்த புதுமுக சிறுகதையாளர்கள்: தமிழ்நதி,உமாஷக்தி,அருட்பெருங்கோ

சிறப்பு விருது : சிங்கையிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கும், இலங்கை இனப்படுகொலையை கண்டித்து
எழுந்த இலக்கிய உலக எதிர்குரலுக்கும்(உண்ணாவிரதம்,ஊர்வலம்)


வலையுலகம்:

சிறந்த நகைச்சுவை பதிவு: துப்பாக்கி தேவை - செல்வேந்திரன்

சிறந்த அறிவியல் புனைக்கதை : வலைப்பதிவர் வெண்பூ எழுதிய "இரண்டாவது மூளை"

சிறந்த சினிமா பதிவுகள் : முரளிக்கண்ணன்

சிறந்த இணைய இதழ்: உயிரோசை

சிறந்த புதுமுகங்கள் : யாழிசை ஒர் இலக்கிய பயணம் மற்றும் அதிஷாஆன்லைன்

சிறந்த யோசனையாளர் : தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வு அளித்த வலைப்பதிவர் "யோசிப்பவர்"

சிறப்பு விருது: சிறில் அலெக்ஸ்(அறிவியல் புனைக்கதைகள் போட்டி நடத்தி பல வலைப்பதிவர்களின் கற்பனைக்குதிரைகளை
தட்டி விட்டதற்காக)

சொதப்பல் விருது: காணாமல் போன தேன்கூடுவிற்கு.

சினிமா:

சிறந்த திரைப்படம் : சுப்பிரமணியபுரம்

சிறந்த பிறமொழி திரைப்படம் : தாரே ஜமீன் பர்(ஹிந்தி)

சிறந்த பாடல்வரிகள் : அனல்மேல் பனித்துளி(வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம் திரைப்படங்களுக்காக)

சிறந்த இசையமைப்பாளர் : Harris ஜெயராஜ்(வா.ஆயிரம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: கதிர்

சிறந்த இயக்குனர் : சசிக்குமார்,சசி

சிறந்த நடிகர்: சூர்யா(வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை: பார்வதி(பூ)

சிறந்த வில்லன்: பிரசன்னா - அஞ்சாதே
சிறப்பு விருது: அஞ்சாதே,தசாவதாரம்,சரோஜா மற்றும் பத்துவேடங்களில் அசத்திய கமலுக்கும்.

சொதப்பல் விருது: குசேலன்(தலைவா இனிமே இந்த மாதிரி ரோல்ல எல்லாம் நடிக்காத,எங்களுக்கு தேவை பாட்சாவும்,படையப்பாவும்தான்
தல - ஒரு பாமர ரசிகனின் வேண்டுகோள்!!)


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நடந்தேறவும்,கனவுகளும்,லட்சியங்களும்
நிஜமாகவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 30, 2008

இலக்கிய சிந்தனை

நண்பர்களே யுக‌மாயினி ந‌வ‌ம்பர் 2008 இத‌ழில் வெளியான‌ என்னுடைய‌ "சேமியா ஐஸ்" எனும் சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ளில் வெளியான‌ 60 க‌தைக‌ளில் இர‌ண்டாம் இட‌த்தை அளித்திருக்கிற‌து என்ப‌தை ம‌கிழ்வுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, December 27, 2008

பாதங்களின் மொழி

1.பாதங்களின் மொழி

இதழ் உதிர்க்கும் பழகிய
வார்த்தைகளில் சலிப்புற்ற
பாதங்கள் தமக்கென தனிமொழியை
உருவாக்க ஆரம்பித்தன.
பூக்களை மிதிக்கும் தருணங்களில்
மெளனத்தை மொழியாக கொள்ளவேண்டுமெனவும்
சுவடுகளை மிதித்தால்
மன்னிப்பை மொழியாக்க வேண்டுமெனவும்
தீர்மானித்தன.
வார்த்தைகள் ஏதுமின்றி மொழியொன்று
உருவானது.
ஒவ்வோர் உதடுகளாய் ஊமையாகி
பாதங்களின் மொழி
பூமியெங்கும் பரவ ஆரம்பித்தபோது
ஊனன் எனும் சொல்
பூமியின் அடியாழத்தில்
தொலைந்துபோயிருந்தது.

2.சொல்லப்படாத சொற்கள்

பிரக்ஞையற்று உதிர்ந்துகொண்டிருந்த
அவனது கலைந்தசொற்கள்
அவளை நோக்கி
கைகள்விரித்தவாறு
காற்றில் நீந்த ஆரம்பித்தன.
ஒவ்வொரு சொற்களாய்
அள்ளியெடுத்து
சரமாக்கி கூந்தலில் சூடிக்கொண்டு
சிரித்தாள்.
அவனுக்கும் அவளுக்கும்
இடையே அலைந்துகொண்டிருந்தன
சொல்லப்படாத சொற்கள் சில.

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடலை
இங்கு பதிவிடுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)
(அன்பென்ற மழையிலே)

2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..

1.ஆனந்தவிகடன்,கல்கி,மற்றும் சிறுபத்திரிகைகளில்
வெளியான என் படைப்புகள்

2.முத்தமிழ் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா முதல் தேகிவரை குழும நண்பர்கள்
பலரின் சந்திப்பு - தித்திப்பு.

3. நன்றி மறந்த வி*ரோ.

4. சில வருடங்களாக பார்க்க நினைத்து முடியாமல் இவ்வருடம்
பார்த்து ரசித்த இரு திரைப்படங்கள் 1.City of God 2.Rabbit Proof Fence

5. சேலம் மாவட்ட இலக்கிய நண்பர்களின் சந்திப்பு

6. வெகு நாட்களாக வாசிக்க நினைத்து இவ்வருடம் வாசித்த வண்ணநிலவனின்
"கடல்புரத்தில்" நாவல்.

7. நண்பன் விழியன் திருமண நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு சந்திப்பில் நடந்த கலந்துரையாடல்

8. ஏற்காடு சுற்றுலா

9. நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.

10. மறக்க விரும்பாத ஒரு கனவு. மறக்க விரும்பும் சில நினைவுகள்.

11. ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.

12.இவ்வருடம் வெளியான என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் (மயிலிறகாய் ஒரு காதல்,ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)

Monday, December 22, 2008

வனம்

வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நிற்கிறது என் மனசு. திசைகள் மறந்துவிட்ட கால்கள்
எங்கு செல்வதென்று புரியாமல் தவிக்கின்றன. முட்கள் நிறைந்த பாதையில் பூவொன்று என்னை வழிமறித்து
என்னை எடுத்துக்கொள் என்றது. இரண்டு கரங்களிலும் அப்பூவை ஏந்தி பாதங்களில் உதிரம் சிந்த வெகுதூரம்
கடந்து வந்தேன். முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.

இலைகளை உதிர்த்து நிற்கிறது ஒரு தனிமரம். நிழல்தேடி வந்த பாதங்கள் ஏமாந்து திரும்புகின்றன.
இரவின் கூரிய பற்களில் வடிகிறது என் தனிமையின் ரத்தம். கறுப்பு வெள்ளை பட்டாம்பூச்சியொன்றின் உதிர்ந்த
சிறகுகள் காற்றில் மிதக்கும் பின்னிரவில் எங்கோ ஒருத்தியின் சன்னமான அழுகுரலை காற்று இழுத்துச்செல்கிறது.

அவளும் அவனும் பரிமாறிக்கொண்ட நேசம் உருப்பெற்று ஓலமிட்டு வீதியில் அலைகிறது. நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை. எதிலும் லயிக்காத மனம் கட்டுகளை உடைத்து வேகமாய் ஓடத்துவங்குகிறது. கூகையின்
பார்வையில் பயந்து வீடு திரும்புகிறது மனம். எனக்குள் உருவாகிறது வெப்பநீருற்று. என்னை முழுவதுமாய் இழந்து
உடலிலிருந்து பிய்த்தெடுத்து வெளிக்குதிக்கிறேன். என்னுடலை நோக்கி ஒளிர்கிறதென் கண்கள்.
ஜீவனற்ற உடல் மண்ணில் வீழ்வதை வேடிக்கை பார்க்கிறேன். உடலற்ற உயிருடன் கைவீசி நடக்கிறேன் மனம்போன
போக்கில். காவிகள் வியப்புடன் என்னை பார்க்கின்றன. தாடிக்குள் புதைந்த முகத்துடன் உற்று நோக்குகின்றன சில கண்கள்.
வேகமாய் ஓடுகின்ற நதிக்குள் மெல்ல இறங்குகிறது என் உயிர். கடும்குளிர் நீரில் அமிழ்கிறது உயிரின் கடைசி மூச்சு.

யாருமற்ற இருண்ட வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நின்றுகொண்டிருக்கிறேன் உருவமற்று.

Monday, December 15, 2008

அலைபேசி தொலைந்த தினம்..

அலைபேசிக்குள் புதைந்துகிடந்தன
தொடர்புகொள்ளப்படாத
எண்கள் பல.

விரைந்தோடும் காலநதியில்
எப்பொழுதாவது பளிச்சிட்டன
மறக்கப்பட்ட எண்கள்.

ஏதோவொரு நபருக்கான
தேடலில் ஆழ்ந்திருக்கையில்
கண்முன் தோன்றி மறைந்தன
முகம்மறந்த எண்கள்.


காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..


எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்.

(வடக்குவாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியாகிய கவிதை)

Friday, December 05, 2008

உருவமற்ற நிழல்பொழுது

1.
நான் தனித்திருக்கும் உலகில்
என்னுடன் பயணிக்கிறது
நிழலொன்று.
எங்கிருந்து வந்ததென்றும்
யாருடையதென்றும் புரியவில்லை.
நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து
தப்பித்துவிட இயலாமல்
தளர்ந்து அமர்கிறேன்.
மெதுவாய் என் நிழலிடம்
பேச ஆரம்பித்தது
அந்த அந்நிய நிழல்.
புரிந்து கொள்ள முடியாத
மொழியில் இரு நிழல்களும்
பேசுவதை ஊமையாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான்.

2. மனம்

மேகங்கள் அலையும் மலைச்சரிவு
பச்சைநிறத்தை உடுத்திக்கொண்டு
உறங்குகிறது.
மரங்களின் நடுவில் நுழைந்து
பாறையில் விழுந்து
உடைகிறது மழைத்துளி.
சாம்பல் நிற அரவம்
அசைவற்று கிடக்கிறது
பெருத்த வேர்களைக்கொண்ட
மரத்தடியில்.
ஏதோ சில பறவைகளின்
சிறகடிப்புச் சத்தம் காற்றில்
கரைந்து வழிகிறது.
மலைப்பாதை வழியே
வளைந்து நெளிந்து ஊர்ந்துகொண்டிருக்கிறது
பேருந்தும் மனதும்.
-நிலாரசிகன்.

நன்றி : திண்ணை.காம்

Monday, December 01, 2008

கவிதைகள் இரண்டு

1.கண்ணாடியில் ஓர் அந்நியன்

இரவிலும் பகலிலும்
பிம்பங்களை உள்வாங்கி
சலித்த கண்ணாடி
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பிம்பத்தை
காண்பிக்க துவங்குகிறது.
சுயம் தொலைந்த நிஜம்
தெரியாமல் நீங்கள்
யாரோ ஒருவனை
தினம் சந்திக்கிறீர்கள்.
உங்களுக்கான நிறம்கரைந்து
உருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

2.இரவுக்குள் ஒளிந்திருக்கும் பகல்

மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது
பகலின் கீற்றுகள்.
முழுவதும் பகலான
மதியவேளையில்
உக்கிரதாண்டவமாடுகிறது
சில ஞாபகங்கள்.
பிரிவின் தகிப்பில் உதிர்ந்த
இலைகளை மிதித்தழித்து
உச்சமடைந்த ஞாபகங்கள்
ஒவ்வொன்றாய்
வீழ்ந்து மரித்தன.
தாங்கமுடியாத வலியுடன்
ஓடிச்சென்று இரவுக்குள்
நுழைந்து வழிகின்ற
கண்ணீரை துடைக்கிறது
பகலின் கரம்.

நன்றி: உயிரோசை

Sunday, November 30, 2008

மழை ரசித்தவர்கள்

மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

Tuesday, November 25, 2008

தினமணி கட்டுரை

கடந்த ஞாயிறன்று (23/11/2008) வெளியான தினமணி நாளிதழின் கட்டுரையொன்றில் என் கவிதையை பற்றிய குறிப்புவந்திருக்கிறது.
இங்கு சென்று பார்க்கலாம் :
நன்றி: தினமணி.காம்.

Sunday, November 23, 2008

சிதறல்கள்

1.தனிமைதான் என்னை எழுதச்சொல்கிறது. தனிமைதான் என்னை எழுதவிடாமல் கொல்லவும் செய்கிறது. தனிமைக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சுழல்கிறது என்னுலகம். அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.

2. எறும்புகளை கொல்வது எளிது.தரையோடு தேய்த்து நசுக்கலாம்.மருந்து துகளில் அழிக்கலாம்.புத்தகத்தால் அடித்தும் கொல்லலாம். அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை.

3. தினம் தினம் எங்காவது மரித்துக்கொண்டிருக்கின்றன நட்புகள். அநாதை பிணமாய் நடமாடுகின்றன கைவிடப்பட்ட நட்புகள். தோளில் சுமக்கின்ற சிலுவைகளைவிட நெஞ்சில் சுமக்கும் சிலுவைகளில் கனம் அதிகமானதாகவே இருக்கிறது.

4.பாதங்களுக்காய் தவமிருந்தேன் பாதங்கள் கிடைத்தன.பாதைகளுக்காய் தவமிருந்தேன் பாதை கிடைத்தது. எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.

Saturday, November 22, 2008

இலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பாரி இலக்கிய நிகழ்வு

இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கவிஞர்கள் சார்பில் வருகிற டிசம்பர் 07( 07.12.2008) அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம் நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,

தொடர்புக்கு
கவிஞர் . லீனா மணிமேகலை 98410 43438
கவிஞர் . இன்பா சுப்ரமணியன் 98841 20284.

ஒப்பாரி இலக்கிய நிகழ்வு என பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஒப்பாரிக்கலைஞர்களும் பங்கெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள் தங்களை பதிவு செய்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்யுங்கள்.
மற்றைய தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித நேய சிந்தனையாளர்களுக்கும் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து பெரும் வெற்றியடைய செய்யுங்கள்.

Friday, November 21, 2008

ஆனந்த விகடன் இதழில் என் கவிதைக‌ள்


நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய இரண்டு கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன.படித்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை இடுங்கள்.

1.பறவைகளின் மொழி அறிந்தவன்

பூனைகளின் மொழி அறிந்தவனை
சந்தித்தேன்.
நாய்களின் பாஷையும்
கொஞ்சம்தெரியுமென்றான்.
விநோத ஒலியை அவன்
உருவாக்கியதில் நான்கைந்து
பூனைகள் அவன் காலை சுற்றின.
பூனைகளை
தடவிக்கொண்டே கை நீட்டினான்.
பறவைகளின் மொழியில்
புலவன் நானென்றேன்.
விரக்தியான புன்னகையொன்றை தந்தபடி
நகர்ந்து சென்றான்.

2.இனம்

இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்

-நிலாரசிகன்.

Monday, November 10, 2008

திறக்காத கதவுகள்

யாருமற்ற வீட்டின்
கதவுகளை தட்டுகிறானவன்.
பதில் குரல் ஒலிக்காதபோதும்
தட்டுவதை நிறுத்தவில்லை.
அவனுக்குத்தேவை பதில்
அல்ல.

Tuesday, November 04, 2008

குழந்தைக்கவிதைகள் இரண்டு


1.அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

2.
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

(1வது கவிதை "மல்லிகை மகள்" மாத இதழில் இம்மாதம்(நவம்பர் 2008)வெளியாகி இருக்கிறது)

Wednesday, October 29, 2008

கல்கி இதழில் என் கவிதை

நண்பர்களுக்கு வணக்கம்.

இவ்வார கல்கி இதழில் வெளியான என்னுடைய மூன்று கவிதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

கல்கியில் வெளியான கவிதைகள்

(மேலுள்ள சுட்டியின் மூலம் கவிதையை படிக்க இயலாதவர்களுக்காக,கல்கியில் வெளியான கவிதைகளை இங்கே பிரசுரிக்கிறேன்)

குழந்தைகளின் உலகம்

1. கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

2. அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

3. மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

**********************************************************************************

எப்போதும்
எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Tuesday, October 21, 2008

ருசித்துக் கொண்டிருந்த இரவு

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
நிசியில் விசித்திரமானதொரு
அரவம்கேட்டு விழித்தெழுந்தேன்.
அறை முழுவதும் நடமாடிக்கொண்டிருந்தன
புத்தகங்களைவிட்டு வெளியேறிய
சொற்கள்.
ஏதேதோ கோஷமிட்ட
அவைகளின் மொழி புரிந்துகொள்வதாயில்லை.
திடீரென்று அவைகளுக்குள்
பெரும் யுத்தமொன்று உருவாயிற்று.
செத்து வீழ்ந்தன சில.
தோற்று ஓடின சில.
வென்று திரும்பிய சொற்கள் ஓடிச்சென்று
மீண்டும்
புத்தகத்தினுள் நுழைந்துகொண்டன.
வீழ்ந்த சொற்களின் குருதியை
யாருமறியாமல்
ருசித்துக்கொண்டிருந்தது இரவு.

கனத்த மெளனம்

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லா வெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ

-நிலாரசிகன்

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Wednesday, October 15, 2008

இரு கவிதைகள்

1.

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லாவெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.

2.

உனக்கான கடைசி
கடிதத்தை நான்
எழுதிக்கொண்டிருக்கையில்
புரிந்துகொள்ளப்படாத எனதன்பில்
விழுந்திருந்த கீறல்
உடைந்திருக்ககூடும்.

அறியப்படாத பூவொன்றின்
வாசனையில் லயித்திருக்கும்
உனக்கென் பிணத்தின்
வாடை திடுக்கிடச்செய்யலாம்
அல்லது
கைதட்டவும் தோன்றலாம்.

எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.

Friday, October 10, 2008

நீங்குதல்

வெகு இயல்பாய் நிகழ்கிறது
நம்மிடையேயான
ப்ரியங்களின் நீங்குதல்.

பிரிவுகுறித்த பிரக்ஞையற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களை பதிக்கிறது
தனிமை.

எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.

Tuesday, October 07, 2008

விகடனில் என் கதை

நண்பர்களுக்கு,

விகடனின் "யூத்புல் விகடன்" பகுதியில் என்னுடைய "ஏலியன்" விஞ்ஞான புனைக்கதை பிரசுரமாகியுள்ளது.

தொடர்புக்கு: http://youthful.vikatan.com/youth/story3.asp

கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னரே பிரசுரமாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். இன்றுதான் இதனை கவனித்தேன்.

கதை படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

Monday, October 06, 2008

பொழுதுகள்...

1. இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய
நீர்சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே
ஒலித்த ஓலம்.


2. எதிர்படும் நபர்களிடம்
பூ விற்க முயன்றுகொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி.
சூரியக்கதிர்கள் மங்கிப்போன
கருக்கலில் வாடியவளாய்
கடற்கரை மணலில் கால்நீட்டி
அமர்ந்து கடல் பார்த்தாள்.
முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.

3. நாய்களின் குரைப்புச்சத்தம்
இரவின் மெளனத்தை
குலைத்துக்கொண்டிருந்த தருணத்தில்
உடலை மறைக்கவியலா
உடைகளணிந்த கன்னியொருத்தி
குப்பைத்தொட்டில் எதையோ
தேடிக்கொண்டிருந்தாள்.
இருளை சுமந்துகொண்டு
அவளை நெருங்கின
இரு நாய்கள்.

4. தனித்துவிடப்பட்ட இரவில்
நெருப்பை உமிழ்ந்து
கொண்டிருந்தது தனிமையின்
நாவுகள்.
நடுச்சாமத்தில் தட்டப்பட்டது
அறைக்கதவு.
விடியத்தொடங்கிய அதிகாலை,
தனிமையின் மீது
உமிழ்ந்துவிட்டு புரண்டு படுத்தேன்.

அக்டோபர் 2008 "வார்த்தை" இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்

Monday, September 29, 2008

இரு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்

கவிதைகளை துறந்துவிட்டு

சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.

கற்பனைகள் தூர்ந்து,

கனவுகள் தகர்ந்து,

பாதாளத்தின் வாய்பிளந்து

என்னை உள்ளிழுத்துக்கொண்டது.

இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்

தொலைந்த பேனாக்களை

தேடிக்கொண்டிருந்தனர்

எந்திரத்தனம் நிறைந்த

என்னையொத்த மனிதர்கள் சிலர்.

2. சுயத்தை எரித்தல்

மிகுந்த வெம்மையாயிருந்தது

ஒரு சொல்.

வெம்மையின் கதிர்கள் முதலில்

நுழைந்தது செவியில்.

செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்

வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது

வலியின் நீட்சியில்.

இதயம் கருகி கண்ணீராய்

வெளியேறுகையில்

மறுசொல்லுக்காய் காத்திருக்க

ஆரம்பித்தது சுயம்.

-நிலாரசிகன்

நன்றி: நவீன விருட்சம்

Thursday, September 25, 2008

இருவார்த்தைகளும் இடுகாடும்




இடுகாட்டிலிருந்து காற்றில் மிதந்து வருகிறது எனக்கான அழைப்பு. இவ்வுலகை விட்டுப்பிரிதலை சாத்தியப்படுத்துகின்றன துரோகத்தால் எரிகின்ற ஆழ்மனது. இப்பிரபஞ்சத்தில் ஒரு பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்த என் கனவுகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன மரம் உதிர்க்கும் இலையென. தனிமையின் கோரப்பற்களில் சிக்கியிருக்கிறது என் இரவு. பிரக்ஞையின்றி தடுமாறுகின்றன என் கால்கள் பாதைகளை தொலைத்துவிட்டு. தோல்வியின் ஏளனச்சிரிப்பில் சிதைகிறது என் உயிர். கூகையொன்றின் கடும்குரல் தூரத்தில் எங்கோ கேட்கிறது. பறவைகள் இனம்கண்டுவிட்டன மரணத்தின் விளிம்புக்கு நான் செல்லவிருப்பதை.

விண்ணை பொத்துக்கொண்டு வீழ்கிறது மழை. நிசப்தம் நிலவிய இருளுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு நடக்கிறேன். நெருஞ்சிகள் நிறைந்த பாதையின் ஓரங்களில் பூத்திருக்கிறது வாடாமல்லி. உயிரற்றவன் நடப்பது போலிருக்கிறது என் நடை. இதயத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது இருவார்த்தைகள். பிணமொன்றின் நாற்றம் உங்கள் நாசிக்கு எட்டும் நாளுக்காய் காத்திருங்களென்று பாதையோர பூக்களிடம் சொல்கிறதென் மனது.

அவமானங்களும்,அவஸ்தைகளும்,நிறமற்ற வாழ்கையை நிறைத்திருந்த பொழுதின் முடிவில் தோன்றிற்று ஒரு பெண்ணின் மீதான ஆர்வம். தோழமைக்கும் அப்பால் நின்றிருந்த அவளை நெருங்கியபோது அவளே உலகமென்ற நிச்சயமற்ற முடிவொன்று உருப்பெற்றது. உறைந்த பனிக்கட்டியை ஒத்திருந்தது அவள் மீதான உருக்கமான நேசம் மிகத்தூய்மையாய். காலச்சுழற்சியில் கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்த அவள் அபலை அல்லள். உக்கிரதாண்டவம் ஆடுகின்றன அவளது கடுஞ்சொற்கள். அகால மரணமடைந்த இதயத்தின் பிணம் என் நெஞ்சுக்கூட்டுக்குள் அநாதையாய் கிடக்கிறது.

இதயம் மரித்துவிடினும் மரித்தபாடில்லை அவள் மீதான நேசங்களும்,என்னை பரிகசிக்கும் ப்ரியங்களும். நண்பனென்று வெகுஇயல்பாய் உரைத்து, இதயத்தை கொன்றவளுக்கு பாடித்திரியும் இந்நேசங்களை கொல்லத்தெரியவில்லை பாவம். உடலெங்கும் பரவுகின்ற வெம்மை நடுநிசியின் குளிருக்கு ஏதுவாகத்தானிருக்கிறது.இன்னும் சற்றுதூரத்தில் எனக்கான இடம் மிக அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குள் சென்று மறைவதே மனதுக்குள் மலர்கின்ற நேசத்தின் முடிவுகளா? இந்நேரம் அவளென்ன செய்துகொண்டிருப்பாள்? மகளாய்,தோழியாய்,சகோதரியாய் பல்வேறு வேஷங்களில் அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது நண்பனென்றுரைத்த இதழ்களுக்கு சாயமிட்டுக்கொண்டிருக்கலாம் இல்லையேல் நாளைய திருமணத்திற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.

என் பிணத்தை நானே சுமந்து நடப்பது கடினமென்று உணர்ந்து மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தேன் கல்லறை நோக்கி.பழகிய நாட்களின் நிகழ்வுகளில் ஒவ்வொன்றாய் கண்முன் விரிந்துவிட்டு மறைந்துகொண்டிருந்தன. முதல் முறை பார்த்தபோது கருமைநிற சேலையொன்றில் மிளிர்ந்தாள். அது என்னை மூடப்போகும் சவத்துணி என்று அன்றே உணர்ந்திருக்கவேண்டும். பின்னொரு நாளில் என்னை பார்க்கத்தோன்றவில்லை என்றாள் வெகு நிதானத்துடன் தீர்க்கமான குரலில். பாதி இறந்த இதயம் முழுவதுமாய் மரித்தது அன்றுதான். எல்லாவற்றிக்கும் முடிவுண்டு என்பதை சற்றே தாமதமாய் உணர்ந்திருக்கிறது மனது.

இடுகாட்டுக்குள் நடுச்சாமத்தில் நுழைவது சற்று வருத்தமாய் இருக்கிறது. ஊரறிய மரித்திருந்தால் பாடைகட்டி ஊர்வலமாய் அந்தியில் நுழைந்திருக்கும் என் உடல். உயிருக்கு சொந்தமானவளே இல்லை என்றானபின் ஊரைப்பற்றி என்ன கவலை? இடுகாட்டின் நடுவில் சென்று சம்மணமிட்டு அமர்கிறேன். ஓவென்று ஒப்பாரி வைக்க யாருமில்லை. அடிவயிற்றிலிருந்து மேலெழும்புகிறது பெரும் ஓலம். நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறேன். என் ஓலம் கேட்டு உறக்கம் தொலைத்த நாய் ஓடிவந்து எதிரே நிற்கிறது. கைகளால் முடிந்தவரை ஆழமான குழியொன்றை தோண்டுகிறேன். நகம் கிழிந்து ரத்தம் சொட்டுகிறது. இரக்கமற்ற இப்பூமியில் பிறந்துவிட்டதை எண்ணி ஓங்கி ஓங்கி மண்மீது அறைகிறேன். விழுகிறேன். புரள்கிறேன். கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது இருண்ட வானம். கனத்த இருளின் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது என் உருவம்.

Monday, September 22, 2008

குழந்தைக் கவிதைகள்


1.குழந்தையின் பசுமாடு

இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.


2. கடவுளுக்கும் அப்பால்

இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

3.தனிமொழி

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Friday, September 19, 2008

மென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்

நண்பர்களே,

மென் தமிழ் புரட்டாசி மாத இதழ் இங்கே படிக்கலாம்.

http://mentamil.wordpress.com/2008/09/19/mentamil-september-09/

உங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறோம்.

நன்றி.

Wednesday, September 17, 2008

கீற்றுக்கு உதவிடுவோம்

நண்பர்களே,

கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும் கீற்று தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. ஏராளமான இலக்கியத்தகவல்களை தொடர்ந்து தந்தவண்ணம் இருக்கிறது.

தற்சமயம் நிதி பற்றாக்குறையால் கீற்று தள்ளாடுகிறது. இதைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள் http://www.keetru.com/common/donate.php

கீற்று தமிழிசை பாட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

நன்றி.

Monday, September 15, 2008

கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்




வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும்,புலிட்சர் விருதும் பெற்றது.


பலநாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் திரும்புகின்ற கிழவனுக்கு ஆறுதலாய் இருப்பது ஒரு சிறுவன்.
இன்றாவது நான் உன்னுடன் கடலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது தடுத்துவிட்டு கிழவன் மட்டும் தனித்து பயணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது. அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன்(கிழவனின் படகைவிட பெரிய மீன்) போராடி
அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த மீனை சுவைக்க வரும் சுறாக்களுடன் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும்,பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் கிழவனின் வீரத்தை பறைசாற்றுகிறது.

அவ்வப்போது "அந்தச் சிறுவன் இருந்தால் நன்றாய் இருந்திருக்குமே" என்று தனியே அரற்றுவதும்...தூண்டிலை இறுகப்பற்றியதால் இடது கை மரத்துப்போகையில் இடக்கையுடன் தனியே பேசுவதும் கிழவன் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இருநாட்களாய் கடலில் உணவின்றி சிறுமீன்களை பிடித்து பச்சையாக தின்னும்போது "நான் ஒரு முட்டாள்,அடுத்த முறை கண்டிப்பாக எலுமிச்சையும்,உப்பும் கொண்டுவரவேண்டும்" என்று புலம்புவதும்
சோர்கின்ற போதெல்லாம் "என்னால் முடியும் எத்தனை முறை வென்றிருக்கிறேன்" என்று தனக்குத்தானே தைரியமூட்டிக்கொள்வதும் கிழவனின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது.

நடுக்கடலில் மீனுடன் நடக்கும் பலமணி நேர போராட்டத்திற்கு நடுவிலும் தன் நகரத்தில் நடக்கின்ற பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், தன்னுடைய மனம் கவர்ந்த பேஸ்பால் வீரன் டிமாகியோ கால் ஆணியால் அவதிப்படுவதை பற்றி சிந்திப்பதும் கிழவனுக்கு பேஸ்பால் மீதிருந்த தணியாத ஆர்வத்தை மிக அற்புதமாய் எடுத்துரைக்கிறது.

அயல்நாட்டு இலக்கியத்தின் நடையையும்,அந்த கடலோர மீனவர்களின் வலியையும் கதை முடியும் தருவாயில் உணர முடிகிறது. இது நாவலா சிறுகதையா என்கிற குழப்பத்தை கிழவனும்,சிறுவனும்,மீனும் மறக்கடித்துவிடுகிறார்கள். மொழிபெயர்ப்பு நூல் என்கிற எண்ணம் வெகு சில இடங்களில் மட்டுமே தோன்றுகிறது. போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை என்னும் கடலில் எதிர்நீச்சலிட்டு வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கிழவன் ஒரு முன்மாதிரி.வெகு நாட்களுக்கு பின் ஒரு நல்ல புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் தருகிறது.


கிழவனும் கடலும்

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.50

காலச்சுவடு பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=15&products_id=12008

Thursday, September 11, 2008

வலி தீர வழி சொல் கண்மணி!

உன்னை என் மடியிலமர்த்தி கன்னத்துடன் கன்னம் உரசிக்கொண்டு கவிதைகள் வாசித்த பொழுதின் ஞாபகமிச்சங்கள் என்னுடைய எல்லா இரவுகளுக்கும் துணையாகின்றன..

இரு கைகளில் உன்னை அள்ளியெடுக்க முயன்று உன் எடைதாளாமல், உன் பூமுகத்தை என் கைகளில்
ஏந்தி நெற்றியில் ஒரு சிறுமுத்தமிட்ட கணத்தை சிற்பமென செதுக்கி வைத்திருக்கிறது யன்னல் வழியே நம்மை ரசித்த வெண்நிலா.

திமிர்கொண்டு நீ உதிர்க்கும் சொற்களெல்லாம் எனைச் சேரும் முன்பே, திமிர்தொலைத்து நேசம்பொங்க ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாய். கண்சிமிட்டும் நட்சத்திரங்களெல்லாம் வெட்கத்தில் இருளுக்குள் ஓடி மறையும்.

நொடிக்கொரு முறை என் விரல்பற்றிக்கொண்டு குழந்தையாகி என் கண்களை உற்று நோக்குவாய். கண்களில் வழிகின்ற ப்ரியங்களில் உன் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.

தடதடக்கும் ரயில்கள் நம்மைக் கடந்து சென்ற ஓர் அந்தியில் ரயில்நிலைத்தில் அமர்ந்திருந்தோம். சொல்லிவிட விரும்பாத காரணத்தால் அழுதாய் நீ. ரணமின்றி காதலில்லை என்றேன் நான். கனத்த நெஞ்சுடன் மேற்கில் சென்று விழுந்தது சூரியன்.

உனக்கென மலர்ந்த என் வீட்டு ரோஜா இனி யாருக்கு பூக்கும்? நீ வசித்த என் இதயவீட்டில் இனி யாருக்கு இடமிருக்கும்? பிறந்த மண்ணைப் பிரிகின்ற அகதிக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவன் தேசமில்லா அகதி. நான் நேசமில்லா அகதி.

வலிகொண்ட என் காதல்நதி உன் ஞாபகக்கடலை சுமந்துகொண்டு திசை அறியாமல் தடுமாறிச் செல்கிறது.
நீயும் நானும் மறந்துவிட்ட என்னை நாம் நடந்த சாலையோர சிறுபூக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கிறது.

உன் சிறகில் கேட்கிறது பிரிவின் சத்தம். என் சிறகில் வழிகிறது காதல்ரத்தம். வீழ்த்தப்பட்ட ஒற்றைப்பறவை என்னிடம் இனி எதுவுமில்லை மிச்சம்.


யாருக்கோ மலர்கின்ற என் புன்னகையினுள்ளே வலிமிகுந்த காதலொன்று துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. யாருக்கோ மலர்கின்ற உன் புன்னகையினுள்ளே கல்லறையாய் எழுந்து நிற்கிறது நம் உயிர்ப்புள்ளகாதல்.

Wednesday, September 10, 2008

இம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை

1.நேயா மாத(ர்) இதழில் சிறுகதை
2.யுகமாயினி இலக்கிய இதழில் கவிதை
3.கல்வெட்டு பேசுகிறது இதழில் இரு கவிதைகள்

Monday, September 01, 2008

ஊனப் பறவை

ஊனப்பறவையொன்று
நிழல்தேடி என்னிடம்
வந்தது.
எனை கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்தித் தின்று சிறகுமுளைத்து
பறந்து சென்றது.
ஊனமாகியிருந்தது என்
வேர்கள்.

Tuesday, August 26, 2008

மொழி பெயர்ப்பு

என்னுடைய கறுப்புத்தங்கம் கவிதையை நண்பர் தணிகைவேல் மொழிபெயர்த்திருக்கிறார்.

Enn karuppu thangam

It was you who was with me during my journey when the whole path was full of thorns



Now when the path is turned into roses you are far away from my vision



The unwritten and unexpressed love of us now

Lying on the ground like a art which is cluttered with dust



Like a chicken which is slowly emerging from the shackles of egg

The words from my mouth is emerging after breaking the story of silence



When I am on the thoughts of your love



The tears of my eyes hits the mirror and flows like drops of rain



The thoughts of you hits my heart and pulverizes like the pieces of glasses



Though the phase of love surrendered to the dimension of time and history

Yet can the thoughts of love be overtaken by it ?



Even when the tears fallen from eyes/heart have become wet

Still I am on the path filled with those days of Nostalgia



Like the sweat that is shining on the hands of the old man who carries a bunch of leaves

Still the first sight of love of yours is still shining in the memories of mine



The footprints of a cow on the bank of a river reminds me of

The cute face of yours which is lying deep in the transcended state of my heart



When friends turn into backstabbers.... There is none to take care of my wounded heart



Even in the present phase of my life, a time comes often where I am being carried away by the memories of those rare moments of the past love



At time during the mid of night when I am awake suddenly and until I go back to the state of sleep.......... The bridge of the above is being filled with the thoughts of our love



No matter when the nears and dears behave like a storm or cyclone.... Yet I am in the normal state of watering a plant and started learning the art of showing the glimpses of smile on the mouth.........though the heart is wounded with the phases of love...



I am wish you to be in the state of an infant in my heart



Time delivers a baby

But love in one delivery gives so many phases to life



Not knowing that I am was wounded once again this night with the agony of past love....

The Sun is slowly emerging on the East

-[Translated by Thanigaivel]

நதிக்கரையில் சில பொழுதுகள்..



ஒரு நாள் மாலைநேரம் நதிக்கரையோரம் நடந்து சென்றோம். சலசலத்தோடும் நதியில் உன் விழிமீன்கள் நீந்திக்கொண்டே வந்தன. ஓடிச் சென்று நதி நீரில் உன் உன் விரல்களால் கோலமிட்டாய். தலைகோத விரல்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளி ஓடியது அந்நதி.

என்மீது நீர் தெளித்து விளையாட ஆரம்பித்தாய். உன் பட்டுக்கைகளில் ஏந்திய நீர் விடைபெற்று என் மீது விழுகையில் மலர்களாய் மாறியிருந்தது. சட்டென்று என்னுள் வசந்தகாலம் ஒன்று உருவானது.
நதியில் உன் முகம் பார்த்து சிலிர்த்தாய். உன் முகம் பார்த்த சிலிர்ப்பில் நதியலை ஒன்று ஆனந்தமாய் கரையை முத்தமிட்டது.

தெளிந்த நதி நீரில் கூழாங்கற்கள் உருண்டுச் செல்வது சரித்திரக்கதைகளில் வருகின்ற தேர்ச்சக்கரத்தை நினைவூட்டுகிறது என்றாய் குறுநகை புரிந்துகொண்டு. உன்னை அள்ளியெடுத்து என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.

என்னிலிருந்து விலகி மீண்டும் நதி நோக்கி ஓடினாய். நதி என்னைப்பார்த்து பரிகாசபுன்னகையொன்றை சிந்தியது. நதியில் மிதந்து வந்த செவ்வந்தி பூவைக் கண்டவுடன் ஆனந்தமாய் ஏதோவொரு பாடலை பாடுகிறாய். உன் குரலைக் கேட்டவுடன் தலையசைத்துக்கொண்டே மிதந்துச்செல்கிறது அந்தப் பூ.

உறங்க செல்லும் நேரம் கடந்துவிட்ட பின்னரும் உன்னழகை ரசித்தக்கொண்டு மேற்கே நின்றது மாலைச்சூரியன்.
சற்றுநேரம் ரசித்துவிட்டு இனி கனவில் உன் பொன்முகம் காணலாம் என்று நினைத்துக்கொண்டு உறங்கிப்போனது.
இருள் படரத்தொடங்கியபின்னர் என் விரல்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாய் நீ.

நதியைவிட்டு நாம் விலகி நடக்க ஆரம்பித்தோம். உன் பிரிவெண்ணி கவலையில் மெளனமாய் அழுதபடி தன்னில் விழுகின்ற நிலவை துரத்திக்கொண்டிருந்தது நதி.

என் தோளில் உன்னை சுமந்துகொண்டு நம் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பாவாகிய நான்.


Monday, August 25, 2008

மொழிபெயர்ப்பு

என்னுடைய "கல்லெறியப்பட்ட கனவுகள்" கவிதையை நண்பர் தணிகைவேல் மொழிபெயர்த்திருக்கிறார்.


Kaalyeriyapatta Kanavugal - Stones of Nostalgia



Like a toe that has been caught between the doors : The separation of ours pours the blood on the path of love



The hugs and kisses of ours have been forgotten by the phase of history :But the humming of yours still rhymes in my ears

The same sound that has been merged with the mother of breeze



When you uttered that our love is like a ocean, could not understand the philosophy of love,

since I am a novice when it comes to the art of swimming



Watching the window while lying on the bed….The landing of drizzles on the lap of tree…..

reminds me the reality that our love that has crossed the bridge of a decade



When the soul was craving for solace…. When the hair and heart of mine had the rarest honor of being curled and hugged by your soul!!!

The result is as the history proclaims with vanity “The jewel on the crown of love has started to lit the darkness of Universe’



But the same love that has been lit by you has burnt the flesh, bone, soul, nerve, heart of mine into ashes



It is not a strange expectation that when you are on the life of normality…Should not expect that a known stranger who is taking care of wounded flowers to be noticed



Not much difference between I and the fish rather a fish whose cave is made up of castles of glasses



It is a fact of reality that you are always not in my memory but when ever the memory of mine is filled with the thought of ours…

The face of mine shrinks like the Sun when it goes to the state of dusk



When you were nearer to me, I was like a tree which had the power to give birth to flowers even when the temperature clocked 100 Degree



Now when the same mother – temperature 4 Degree – The tree rather to code is as I - without the roots !! why talk about flowers and branches?



Forget Never – Never forget - The letters of yours with these phrases makes me to giggle often…



When the enemy is religion for our Love – would not have bothered to pull the sword



When the enemy is caste for our Love – would not have cared to lay down the life



But when you wanted me to defeat you in the war of love so that I will be honored with the trophy with the wordings carved in it

“Defeater is Lover and the winner is Love”



A Question to you



Is this is the war to be fought with the weapons of sword and pistol!



No… It is the war to be won with the fragrance of Jasmine….



PS: The entire street of ours is filled with the wounds and scars and remains of my dreams and reality.

Thursday, August 21, 2008

எனை மறந்ததேன் மழையே!


இரவுகள் பல கண்விழித்து உனக்காக வரைந்த ஓவியமொன்றை இரக்கமின்றி நீ கிழித்தெறிந்தது அறியாமல்
ஓவியத்தின் வண்ணங்களாக மிளிர்கிறது என் நேசம்.

பிடித்த பொம்மையை நெஞ்சிலணைத்துக்கொண்டு சந்தோஷமாய் ஓடுகின்ற குழந்தையை போல் உன்மீது நேசம்கொண்டு எத்தனை கனவுகளை நெஞ்சில் சுமந்து திரிந்தேன்....
அத்தனையும் கனவுகளாய் கரைந்தனவே!

நீ பரிசளித்த கடிகாரம்கூட பன்னிரெண்டில் ஒன்று சேர்வதில்லை என்பது இப்போதுதான் புலப்படுகிறது..

கண்ணீரின் கனம் தாளாமல் மரித்துவிட்டதோ நம் காதல்?

உயிரில் கலந்துவிட்டு நண்பன் நீ என்று வெகு இயல்பாய் சொல்லிப் பிரிகின்ற உனக்கு இதயமிருக்கிறதா?

ஒரு கறுப்பு நிற புடவையில் உன்னை பார்த்து, வீடு திரும்பிய நாளில் தோன்றியது வண்ண வண்ணக்கனவுகள்.

இந்தப்பிரிவில் வானவில்லும் கறுப்பு வெள்ளையாகிப்போனது. பற்றி எரிகிறது என்னுலகம். நீயோ மணமேடைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாய்.

மணிக்கொரு முறை பேசாவிட்டாலும் கடிந்துகொண்டவள் இப்போது என் குரல் கேட்டபின்னரும் இயல்பில்லாத ஒரு புன்னகையை காற்றில் கரைத்துவிட்டு வெகு இயல்பாய் இணைப்பைத் துண்டிக்கிறாய்.

நீ உடைந்தபோதெல்லாம் ஒன்று சேர்த்தவன் இப்போது தவறவிட்ட கண்ணாடியாய் சிதறிக் கிடக்கின்றேன். நீயோ மணப்பெண் அலங்காரத்திற்கென கண்ணாடி முன் நிற்கிறாய்.

காதலென்னும் சிற்பம் செதுக்கினோம். உளியாய் நீ இருந்திருக்கிறாய். கல்லாய் நானிக்கிறேன்.

சிலரின் பிரிவில் ஞானம் பிறக்கும். சிலரின் பிரிவில் கானம் பிறக்கும்.
உன் பிரிவில் பிறந்திருக்கிறது வெட்கம். உன்னைப்போய் காதலித்தேனே என்கிற வெட்கம் இது.

உன்னோடு நானிருந்த நிமிடங்களை மறக்க முடியாமல் தவிக்கிறதென் இதயம். கண்ணோடு கலந்திட்ட காட்சிகளை அழிக்க முடியாமல் தவிக்கிறதென் இதயம். தவிப்புகள் நிறைந்த இதயத்தின் விசும்பல் உன் செவிட்டு இதயத்திற்கு எங்கே கேட்கப்போகிறது!

உன்னை வர்ணித்து ஆயிரம் கவிதைகள் எழுதிய விரல்கள் என்னிடம் கதறி அழுகின்றன. நேசமற்ற அவளுக்காக கவிதைகள் எழுதிய எங்களை வெட்டி எறிந்துவிடு என்று!

தீபமென்று நினைக்கவைத்தாய். தீப்பந்தமாய் எனை எரித்தாய். என்னில் பொழிந்த மழைதான் நீ. ஆனால் அமிலமழையடி!

Monday, August 18, 2008

இரவுக் கவிதைகள் மூன்று


1. விசித்திரமானதொரு சத்தம்
ஜன்னல் வழியே
கசிந்துகொண்டிருந்த நடுநிசியில்
விறைத்து நடுங்குகின்ற
உடலுடன் ஜன்னல்நோக்கி
மெல்ல நகர்ந்து எட்டிப்பார்த்தேன்.
இருளின் கருமையை
உடுத்திக்கொண்டு
சோற்றுப்பானைக்குள் புரண்டுகொண்டிருந்தது
என்னை ஒத்த பூனையொன்று.

2. கனவுகள் தகர்த்தெறிந்து
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கெளவிப்பறந்தது...

விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்..

முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீச்சென்றது
அப்பறவை..

வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.

3.தெருநாய்களின் நகக்கீறல்களால்

கதறிக்கொண்டிருந்தது

தகர குப்பைத்தொட்டி...

நைந்த புடவையொன்றில்

குளிர்தவிர்க்க இயலாமல்

முனகிக்கொண்டிருந்தாள்

பிச்சைக்காரி ஒருத்தி..

மரக்கிளையில்

சிருங்கார சப்தம் எழுப்பி

புணரத் துடித்தன

தேன்சிட்டுகள்...

விதவிதமான சப்தங்களுடன்

மெளனத்தால்

உரையாடியபடி நீண்டு

செல்கிறது இரவுத்தெரு.


Thursday, August 14, 2008

மென் தமிழ் ஆகஸ்ட் மாத இதழ்

இனிமையான தோழர்களே,

மென் தமிழ் ஆவணி 2008 இணைய இதழை கீழ்கண்ட சுட்டியில் பெற்றுக்கொள்ளலாம்.

http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/files/mentamil_August.pdf


or

www.mentamil.wordpress.com

இந்த சுட்டிமூலம் தரவிறக்கம் செய்ய இயலாதவர்கள் எனக்கு தனிமடலிடுங்கள்
(nilaraseegan@gmail.com)

நான்கு கணிப்பொறி மென் பொருளார்களின் சிறு முயற்சி இது.
இந்த சிறிய முயற்சி மேன்மேலும் வளர உங்களது ஆதரவும்,ஆசிகளும்,வாழ்த்துக்களும் தேவை.
இதழின் நிறை/குறைகளை சுட்டிக்காட்டினால் இனிவரும் இதழ்களை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.




நன்றியுடன்,
மென் தமிழ் ஆசிரியர் குழு சார்பாக,
நிலாரசிகன்.

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்

நண்பர்களே

இணையம் மூலமாக என்னுடைய கவிதை நூல் "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்" பெறலாம்.
சுட்டி --> http://www.anyindian.com/product_info.php?products_id=212002

Wednesday, August 13, 2008

இணைய வானொலியில் என் கவிதை

என்னுடைய "அத்தமக செம்பருத்தி" கவிதை இணையவானொலியான http://worldtamilnews.com/ ல் இன்று(13/09/2008) ஒலிபரப்பாகிறது. அப்துல் ஜப்பார் அவர்களின் இனிமையான குரலில்.

http://worldtamilnews.com/
சென்று KAVITHAI KELUNGAL சுட்டியை அழுத்தினால் இதனை கேட்கலாம்.

நன்றி.

Tuesday, August 12, 2008

தெருக்கூத்து கலைஞருக்கு உதவி தேவை


நண்பர்களுக்கு,

வனவாசியை சேர்ந்த மாயவன் என்கிற இந்த
தெருக்கூத்து கலைஞர் சுவாசத்தில் அடைப்பு ஏற்பட்டு
கஷ்டப்படுகிறார்.
70 வயதான இந்த கலைஞருக்கு தங்குவதற்கு வீடு இல்லை.
தனி மரமான இவரது இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 15000
தேவைப் படுகிறது.
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கணக்கிற்கு
பணம் அனுப்பலாம்.

A/c No. 611901517766
V.Shunmugapriyan,
ICICI Bank, Salem Shevapet Branch

மேலதிக தவலுக்கு:

மு.ஹரிக்கிருஷ்ணன்(9894605371)

நன்றி.
நிலாரசிகன்.

Monday, August 11, 2008

உயிரோவியம்

ஓவியம் வரைந்துகொண்டிருந்த
அந்தக் கிழவனின்
கைகளில் சிறிதேனும்
நடுக்கத்திற்கான அறிகுறி
தென்படவில்லை.

புகை கக்கி இரைச்சலுடன்
செல்கின்ற வாகனத்தினாலும்
தோள்மீது எச்சமிட்டு பறக்கின்ற
காக்கையினாலும் கலைத்துவிட
முடியவில்லை
ஓவியத்துள் கரைந்துவிட்ட
கிழமனதை.

பசித்தழும் குழந்தையின்
கண்ணீர்த்துளியில்
தெரிந்தது ஓவியத்தின்
நேர்த்தியும் கிழவனின்
ரசனையும்...

ஓவியத்தின் மீது
ஒற்றை ரூபாய் எறிகையில்
கரம் நடுங்கியதைக் கண்டு
அழுகை நிறுத்தி
ஏளனப் புன்னகை சிந்தியது
அக்குழந்தை.

Friday, August 01, 2008

க(வி)தை போட்டிக்கு தேர்வு

தோழமைகளுக்கு வணக்கம்.

உலக தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் சிறப்புக் கவியரங்கம் கவிதைப்போட்டிக்கு சில நாட்கள் முன்பு கவிதை
அனுப்பியிருந்தேன். என் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மடல் வந்திருக்கிறது. இறைவனுக்கும், தமிழுக்கும், எப்போதும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும்/என் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

மேலும்,

பெண்ணே நீ மாத(ர்) இதழ் நடத்திய சிறுகதை போட்டிக்கு என்னுடைய சிறுகதையை அனுப்பி இருந்தேன். மொத்தம் போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் 639. அதில் கடைசி கட்ட தேர்வுக்கு 23 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் என் கதையும் ஒன்று என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
(அடுத்த மாத இதழில் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டியாளர்கள் யார் என்பது தெரியும்.)