Friday, May 29, 2009

உதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு

மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....

புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?

விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!

Monday, May 25, 2009

உன் மெளனங்கள்



காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூக‌லத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த‌
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன‌
என் கல்லறைக்கான
செங்கல்கள்.

Sunday, May 24, 2009

மணல் வீடு சிற்றிதழ்

சிற்றிதழ் பரப்பில் சிறந்து விளங்கும் மணல்வீடு சிற்றிதழ் இணைய உலகிலும் தடம்
பதிக்கிறது.


மு.ஹரிகிருஷ்ணனின் சொல்கதைகள் தனித்துவமானவை.குறிப்பாக அவரது மயில்ராவணன் சிறுகதை தொகுப்பு தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகச்சிறந்த படைப்புகளுடன் வலம் வரும் மணல்வீடு இலக்கிய ஆர்வலர்களின் தமிழ்ப்பசிக்கு
விருந்தாக இருக்கிறது. படித்து மகிழ இங்கே சொடுக்குங்கள்.

http://manalveedu.blogspot.com/

Thursday, May 21, 2009

ஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]



1.
வருடம்: 1929

பாரதியின் அறைக்குள் சோகம் அப்பிய முகத்துடன் நுழைந்தான் இளங்கோ.ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பாரதியை எழுப்ப மனமில்லாமல் அருகிலிருந்த நாற்காலியில் சோர்வுடன் விழுந்தான். கண்களிலிருந்து நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது கண்ணீர்.பாரதியிடம் தான் அழுகின்ற காரணத்தை சொன்னால் எப்படி தாங்குவான் என்று நினைக்க நினைக்க மெளனக்கண்ணீர் பெரும் விசும்பலாய் உருவெடுத்தது. உறக்கம் கலைந்த பாரதி தன் அறையில் அழுதுகொண்டிருக்கும் இளங்கோவை ஆச்சர்யத்துடனும் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

"இளங்கோ,என்னுயிர்த் தோழனே ஏனிந்த கண்ணீர்?"

"பாரதி,செவ்வாயில் இருந்து வந்திருக்கும் இந்த செய்தியை பார்" கையடக்க கணிப்பொறியில் சிகப்பு நிற எழுத்தில் மின்னிக்கொண்டிருந்த வரிகளை படிக்க ஆரம்பித்தான் பாரதி.

"இன்னும் எண்பது ஆண்டுகளில் எம்.ஆர்.வி எனும் படுபயங்கர கிருமியால் பூமி பேரழிவை சந்திக்கும்.முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள்"

பாரதியின் மீசை துடிதுடித்தது.கண்கள் கோபத்தில் ரத்தச்சிவப்பாக மாறியது.

"இளங்கோ,இந்தக்கிருமியை எப்படி அழிப்பது? இந்தக் கிருமியின் நதிமூலம் என்னவென்று உடனே கண்டுபிடிக்க வேண்டும்,செவ்வாய்க்கு போய் வரலாமா?"

"உன் கோவம் எனக்கு புரிகிறது பாரதி.இந்தக் கிருமியை தயாரிக்கப்போகும் நபர்களை நாம் கண்டுபிடித்துவிட்டால் முடிந்தது வேலை.செவ்வாய்க்கு போவதற்கு என் இயந்திரத்தில் எரிபொருள் இல்லை.நேற்றுதானே நாம் ஜூப்பிட்டரிலிருந்து வந்தோம்? இப்பொழுதெல்லாம் எரிபொருளின் விலையை நினைத்தாலே தலைசுற்றுகிறது. உன்னிடம் பணம் இருக்கிறதா?"

"உனக்குத்தான் என்னைப் பற்றி தெரியுமே கிடைக்கின்ற பணத்திலெல்லாம் மின்புத்தகம் வாங்கிவிடுவேன்.நேற்று இருபது புத்தக‌ங்கள் வாங்கிவிட்டேன்.பணம் ஒரு பெரியவிஷயமல்ல கடன் வாங்கியாவது எரிபொருள் வாங்கிவிட முடியும்.ஆனால் அந்தக்கிருமியை தயாரிப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது இளங்?"

"வா இணையத்தில் தேடுவோம்" இருவரும் கணிப்பொறி முன் அமர்ந்தார்கள். ச‌ற்று தூர‌த்தில் க‌ட‌ற்க‌ரையில் சிறுவ‌ர்க‌ள் கால்ப‌ந்து விளையாடிக்கொண்டிருக்கும் ச‌த்த‌ம் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே கேட்ட‌து.

2.

க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில் கால்க‌ள் புதைய‌ ந‌ட‌ப்ப‌து ச‌ம‌ராவிற்கு மிக‌வும் பிடிக்கும். அதுவும் ஆல்வினுடைய‌ தோள்க‌ளில் சாய்ந்து கொண்டே க‌ட‌ல் ர‌சிப்ப‌தில் த‌ன்னை ம‌ற‌ந்துபோவாள் ச‌ம‌ரா. விர‌ல்கோர்த்து ந‌ட‌ந்த‌ப‌டியே மெதுவாய் ச‌ம‌ராவிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்தான் ஆல்வின்.

"ச‌மரா,உன்னை போன்ற அற்புதமான‌ மனைவியும் அதோ மணலில் விளையாடும் நம்மிரு குழந்தைகளும்தான் என் உலகம்"

"இப்போது இப்ப‌டி சொல்வீர்க‌ள் வீட்டை விட்டு வெளியே போய்விட்டால் என் தேச‌ம் என் ம‌க்க‌ள் என்று பேச‌ ஆர‌ம்பித்துவிடுவீர்க‌ள்" செல்ல‌மாக‌ கோபித்தாள்.

"ச‌ரி அதைவிடு. இப்போது உன‌க்கு ஏதாவ‌து ப‌ரிச‌ளிக்க‌ விரும்புகிறேன். என்ன‌ வேண்டும் சொல் க‌ண்ம‌ணி" காத‌லுட‌ன் கேட்டான் ஆல்வின்.

"எப்போதும் என்னை காத‌லித்துக்கொண்டே இருங்க‌ள் அதுபோதும்" அலையென‌ சிரித்தாள் ச‌ம‌ரா.

"உன‌க்கு காத‌ல்ப‌ரிசை இன்றிர‌வு த‌ருகிறேன்" க‌ண்ண‌டித்தான் ஆல்வின்.வெட்க‌த்தில் சிவ‌ந்தார்க‌ள் ச‌மராவும் அந்திவான‌மும்.

3.

இர‌வு இர‌ண்டு ம‌ணிக்கு க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் கேட்ட‌து. அழைப்புமணியை அழுத்தாம‌ல் க‌த‌வை த‌ட்டினால் அது பார‌தியாக‌ ம‌ட்டும்தான் இருக்குமென்று இள‌ங்கோவிற்கு தெரியும். ஓடிச்சென்று க‌த‌வை திற‌ந்தான்.
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இடியென‌ சிரித்தான் பார‌தி. இள‌ங்கோவை இறுக‌ க‌ட்டிப்பிடித்துக்கொண்டான்.

"என்ன‌ பார‌தி இந்த‌ நேர‌த்தில்? என்ன‌ விஷ‌ய‌ம்? ஏனிந்த‌ ச‌ந்தோஷ‌ம்?"

"இள‌ங்கோ இருப‌து நாட்க‌ள் க‌டுமையாக‌ உழைத்த‌ ந‌ம‌க்கு இன்று ந‌ல்ல ப‌ல‌ன் கிடைத்திருக்கிற‌து.அந்த‌ கிருமியை உற்ப‌த்தி செய்யும் ந‌ப‌ர்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டேன்.வா உட‌னே புற‌ப்ப‌டுவோம்"

"எப்ப‌டி க‌ண்டுபிடித்தாய் பார‌தி? நேற்று இர‌வுகூட‌ ந‌ம்மால் க‌ண்டுபிடிக்க‌ இய‌ல‌வில்லையே?"

"அத‌ற்கும் ஒரு நிர‌லை ஈகிள் தேட‌லில் க‌ண்டுகொண்டேன்.அதாவ‌து பேர‌ழிவை உருவாக்கும் ச‌க்திக‌ளை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்கான‌ நிர‌ல்.எவ்வ‌ள‌வு முன்னேறி இருக்கிறோம் பார்த்தாயா இள‌ங்கோ? இந்த விஞ்ஞான‌ நூற்றாண்டில் பிற‌ந்த‌த‌ற்காக‌ பெருமை கொள் ந‌ண்பா"

"க‌ண்டிப்பாக‌ பெருமை கொள்கிறேன் பார‌தி.இந்த‌ விஞ்ஞான‌ யுக‌த்திலும் பிற‌மொழி க‌ல‌ப்பில்லாம‌ல் கற்றுத்த‌ருகின்ற‌ ந‌ம் க‌ல்விமுறையும்..இய‌ந்திர‌ ம‌னித‌ர்க‌ள் ந‌ம்மீது காண்பிக்கும் அன்பும் என்னை ஆச்ச‌ர்ய‌த்தில் ஆழ்த்துகிற‌து"

"ச‌ரி இள‌ங்கோ விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம். ந‌ம் நாட்டிற்கு தெற்கே வ‌சித்துவ‌ருகிறார்க‌ள் அந்த‌க்கிருமியை உருவாக்க‌ இருப்ப‌வ‌ர்க‌ள்.அதாவ‌து அவ‌ர்களின் மூளைக்குள் இன்னும் 16 ஆண்டு க‌ழித்துதான் அந்த‌ குரூர‌ திட்ட‌ம் உருவாகும். உன் கால‌ய‌ந்திர‌த்தை உட‌னே தயார் செய். நாம் நாளை 1945ம் ஆண்டிற்குள் நுழைய‌ப்போகிறோம்"

"அப்ப‌டியெனில் ஏன் இன்னும் எண்ப‌து ஆண்டுக‌ள் க‌ழித்து அந்த‌க்கிருமியை ப‌ர‌வ‌ விட‌வேண்டும்? என‌க்கு புரிய‌வில்லையே பார‌தி. செவ்வாயிலிருந்து வ‌ந்த‌ செய்தி80 ஆண்டுக‌ள் க‌ழித்துதானே உல‌க‌ம் பேர‌ழிவை ச‌ந்திக்க போகிற‌து என்ற‌து?" குழ‌ப்ப‌த்துட‌ன் கேட்டான் இள‌ங்கோ.

"சில‌ கிருமிக‌ள் உட‌னே ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்துவிடாது ந‌ண்பா.சில‌ கால‌ம் எடுக்கும்.கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌ர‌வி பின்ன‌ரே அத‌ன் உக்கிர‌ம் உல‌கை உலுக்கும்,நாம் முந்திக்கொள்ள‌ வேண்டும்.ம‌ற்ற‌வை நாளை பேச‌லாம்.நிம்ம‌தியாய் உற‌ங்கு" க‌ட‌க‌ட‌வென்று பேசிவிட்டு போய்விட்டான் பார‌தி. தூர‌த்தில் கூகையொன்றின் கொடூர‌ ச‌ப்த‌ம் கேட்ட‌து.

4.

அலுவ‌ல‌க‌ம் முடிந்து வீடு திரும்பிய‌ ஆல்வினை ஓடிவ‌ந்து க‌ட்டிக்கொண்டாள் ச‌ம‌ரா.

"என்ன‌ ச‌ம‌ரா என்ன‌ விஷ‌ய‌ம் ஏனிந்த‌ ஆன‌ந்த‌க்க‌ளிப்பு?" ஆர்வ‌முட‌ன் கேட்டான் ஆல்வின்.

"நீங்க‌ள் மூன்றாவது முறையாக‌ அப்பாவாக‌ போகிறீர்க‌ள்"

"க‌ண்ம‌ணி! ந‌ல்ல‌தொரு விஷ‌ய‌த்தை ப‌கிர்ந்தாய்"

இருவ‌ரும் ம‌கிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது வீட்டுக் க‌ண்ணாடி ஜ‌ன்ன‌லில் இரு க‌ண்க‌ள் அசையாம‌ல்
இவ‌ர்க‌ளையே பார்த்துக்கொண்டிருந்த‌து.

"ச‌ம‌ரா இந்த‌ ந‌ல்ல‌ செய்தியை நாம் கொண்டாட‌ வேண்டும்.பிற‌க்க‌போகும் ந‌ம்பிள்ளைக்கு என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம்"

"உங்க‌ள் காதில்தான் அந்த‌ பெய‌ரை சொல்வேன்" காத‌லோடு அவ‌ன் செவிக‌ளில் உச்ச‌ரிக்கும்போதுதான் ஜ‌ன்ன‌லில் யாரோ நிற்ப‌து தெரிந்து அல‌றி ம‌ய‌ங்கி விழுந்தாள்.

அவ‌ள் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டு ஆல்வின் வீட்டு காவ‌லாளிக‌ள் ஓடிவ‌ந்த‌ன‌ர்.ஜ‌ன்ன‌லை நோக்கி கைகாட்டிவிட்டு ச‌ம‌ராவை எழுப்ப‌ முய‌ற்சித்தான் ஆல்வின்.

5.

இள‌ங்கோவிற்கு இட‌து காலில் ப‌லத்த‌ அடி. நொண்டிக்கொண்டே கால‌ய‌ந்திர‌ம் வ‌ந்துசேர்ந்தான்.பார‌திக்கு புரிந்துவிட்ட‌து.இள‌ங்கோவை ய‌ந்திர‌த்தின் ர‌க‌சிய‌ அறையில் ஓய்வெடுக்க‌ செய்துவிட்டு சினத்துடன் வெளியேறினான்.விறுவிறுவென்று அந்த மாளிகையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
கட‌ற்க‌ரையோர‌ அந்த‌ பெரும் மாளிகையை விட்டு பார‌தி வெளியேறும்போது அந்த இடமே மயான அமைதி கொண்டிருந்தது.கால‌ய‌ந்திர‌த்தில் அரைம‌ய‌க்க‌ நிலையிலிருந்தான் இள‌ங்கோ. பார‌தியைக்க‌ண்ட‌வுட‌ன் ச‌ந்தோஷ‌த்தில் மெல்லிய‌தாய் கேட்டான் "முடிந்த‌தா பார‌தி?"

"எம‌னை ச‌ந்தித்திருப்பார்க‌ள் இந்நேர‌ம்" சொல்லிவிட்டு சத்த‌மிட்டு சிரித்தான் பார‌தி.கால‌ய‌ந்திர‌ம் அவ‌ர்க‌ள‌து கால‌த்திற்குள் நுழைந்துகொண்டிருந்த‌து.

6.

ச‌ம‌ராவிற்கு ம‌ய‌க்க‌ம் தெளிந்த‌போது கையிலிருந்து ர‌த்த‌ம் வ‌ழிந்துகொண்டிருந்த‌து. அருகே காவலாளிகளின் பிணக்குவியல். சற்று தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிட‌ந்தான் ஆல்வின். மெல்ல‌ த‌வ‌ழ்ந்து அவ‌ன‌ருகே சென்றாள். அவ‌ன் நெஞ்சில் விழுந்து அழுதாள். அவ‌ன் இதயம் துடிக்கும் சப்தம் கேட்டு வியந்து அவனை உலுப்பினாள். முனகலுடன் கண்களைத் திறந்தான் ஆல்வின்.

7.
பத்து மாத‌ம் க‌ழித்து,

தொட்டிலில் கால்க‌ளை ஆட்டிக்கொண்டு ப‌டுத்திருந்த‌து அந்த‌க்குழ‌ந்தை.
ஆல்வினும்,ச‌ம‌ராவும் குழ‌ந்தையின் செவியில் ஒருசேர‌ அந்த‌ப்பெய‌ரை உச்ச‌ரித்தார்க‌ள்

"ம‌ஹிந்தா ராஜ‌ப‌க்ஷே"

‍‍-முற்றும்-

[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]

- நிலாரசிகன்.

படித்ததில் பிடித்தது

http://lovelythoughtz.blogspot.com/2009/05/quotes-on-sachin-tendulkar.html

Monday, May 18, 2009

இட்சி த கில்லர்



வன்மமும் குரூரமும் நிறைந்தது மனித மனம். பிற உயிர்களை வதைத்து மகிழ்கின்ற மனமில்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை.தட்டானின் சிறகுகளை பிய்த்து ஆனந்தப்படாத பால்யத்தை நாம் கண்டதில்லையா? டிரெயின் பூச்சிகளை தேடித்தேடி மண்ணோடு மண்ணாக மிதித்து கொன்றதில்லையா? ஓணானை பார்த்த‌வுட‌ன் க‌ல்லெறிய‌த்தானே தோன்றுகிற‌து இன்ன‌மும்? பிற‌ உயிர்க‌ளை வ‌தைப்ப‌தை பாவ‌ம் என்று உண‌ரும் முன்ன‌ரே நாம் வ‌தைப‌டுதலின் ஆன‌ந்த‌த்தை அனுப‌வித்திருக்கிறோம். ஓராயிரம் ஹிட்ல‌ர்களும்,இடி அமீன்களும் திரிந்துகொண்டிருக்கும் இட‌ம் ந‌ம் ம‌ன‌ம். காலத்தின் மாற்றத்திலும்,படித்து தெளிந்த பண்பாலும் நமக்குள்ளிருக்கும் மிருகபுத்தி உறங்கிவிடுகிறது. சிலருக்கு அது உறங்கமறுப்பதில்லை.ராவணன் வாழ்ந்த பூமியில் இப்போது ஒருவனுக்கு அந்த மிருகபுத்தி தாண்டவமாடிக்கொண்டிருப்பதை போல்.

இட்சி த கில்லர் எனும் இந்த ஜப்பானிய திரைப்படத்தை பற்றி இருவரிகள் மட்டும் சொல்லத்தோன்றுகிறது.

1.குரூர மனதின் வெளிப்பாடு
2.வன்மத்தின் உச்சம்

உறைய வைத்த காட்சி:

ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தி புணர்ச்சியில் ஈடுபடுகிறான் ஒருவன். முகமெல்லாம் வீங்கி இரத்தம் வழிய‌
மற்றொருவனிடம் புலம்புகிறாள் அவள். கவலைப்படாதே அவனை நான் கொல்கிறேன் என்கிறான் இவன்(இட்சி). சொன்னதைப்போலவே அவனைக் கொன்றும் விடுகிறான். நன்றியோடு பார்க்கிறாள் அவள். "இனி உன்னை நான் அடிக்கலாம்" என்கிறான் இட்சி. மனதெங்கும் நிறைந்திருக்கும் குரூரத்திற்கு இந்த ஒரு காட்சி போதும்.


இளகிய மனம் கொண்டவர்கள் இந்தப்படத்தை தவிர்த்தல் நலம். "என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோம்" எனும் தைரியசாலிகள் பார்த்துவிடல் நலம். :)


சுட்டி:

http://www.youtube.com/watch?feature=related&v=wgrvIVSHhI8

Wednesday, May 13, 2009

அரூபவதனி






யாருமற்ற பின்னிரவில்
கசிகின்ற விழியுடன்
என்னிட‌ம் சரணடைவாள்.
மடியில் முகம்புதைத்து
விசும்புகின்ற
அவளின்
கருங்கூந்தல் இருண்ட‌
முகிலை ஒத்திருக்கும்.
வெண்ணிறத்தில் மெல்லியதொரு
ஆடை
அவள் மேனியெங்கும்
நதியென தவழ்ந்தோடும்.
தளர்ந்த விரல்களால்
என் தலைகோதி,
தகிக்குமவள் முலைகளில்
எனை மூழ்கிடச் செய்திடுவாள்.
கண்ணீரின் காரணத்தை
கடைசிவரை சொல்லாமல்
காற்றோடு கரைந்து
ம‌றைந்திடுவாள்.
விடியலில் மனமெங்கும்
வியாபித்திருப்பாள்
முகம்மட்டும் மறைத்தபடி.

Monday, May 11, 2009

மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.





புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் "மை லிட்டில் ஏலியன் பிரண்ட்". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய
"Sleeping with an alien"
ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளிவருகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.
நேற்று மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டது. இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்ததால் பதிவு எண்ணை சொல்லி நான்கு முப்பதுக்கு வாங்கிவிட்டேன். மொத்தம் 400 பக்கங்கள். அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து முதல் பத்து பக்கங்கள் வாசித்திருப்பேன். அதற்கு மேலும் தொடர்ந்து வாசித்தால் இரவு முழுவதும் பூங்காவில்தான் இருக்கவேண்டும் என்பதால் உடனே வீட்டிற்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். இன்று காலை ஏழு மணிக்கு வாசித்து முடிக்கும்போது மனதெங்கும் வியாபித்திருந்தார்கள் "கேனோ"வும் "ஜூலி"யும்.

ஏழுவயது சிறுமி ஜூலியின் தாய் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். ஜூலியின் அப்பா வில்லியம்ஸ் ஒரு கிராமத்தில் தன் மகளுடன் வசித்து வருகிறார். அது ஒரு பண்ணை வீடு. வீட்டைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி. அதில் மேய்ந்துகொண்டிருக்கும் சில குதிரைகள். பெரிய வீட்டில் தன் அப்பாவுடன் வசிக்கும் ஜூலிக்கு சிறுவயது முதலே எதிலும் பயம் கிடையாது. வில்லியம்ஸ் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க தூரத்திலிருக்கும் சந்தைக்கு சென்றுவிடும் போதெல்லாம் தனியாக இருப்பாள் ஜூலி. அவர்கள் வளர்க்கும் குதிரைகளும்,பசுமாடுகளும் மெல்லியதாய் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும். ஜூலியின் வீட்டின் அருகில் வேறு வீடுகள் கிடையாது.ஜூலியுடன் விளையாட ஒரு லேப்ரடார் நாய்க்குட்டியை வாங்கித் தருகிறார் வில்லியம்ஸ். தங்க நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மென்மையான அந்த குட்டியைக் கண்டவுடன் ஜூலிக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதற்கு மைலோ என்று பெயரிடுகிறாள். தன் படுக்கை அறையில் அதற்கென்று ஒரு இடம் ஒதுக்கித்தருகிறாள்.அவளது உலகமே அந்த சிறுநாய்க்குட்டியுடன் என்றாகிறது. சில மாதங்களில் மைலோ நன்றாக வளர்ந்து,ஜூலி சொல்கிறபடியெல்லாம் கேட்கிறது. ஜூலி மைலோவை தன் தம்பியாகவே நினைத்துருகுகிறாள்.

இந்த நிலையில் ஒரு நாள் நள்ளிரவு மைலோவைக் காணாமல் ஜூலியும் வில்லியம்ஸும் தேடுகிறார்கள். எங்கு தேடியும் மைலோவைக் காணவில்லை. அழுது அழுது ஜூலியின் கண்கள் வீங்கி,கன்னம் சிவந்துவிடுகிறது.அழுதுகொண்டே உறங்கி விடுகிறாள். அதிகாலையில் மைலோவின் சத்தம் சன்னமாக கேட்கிறது. ஜன்னல் வழியே பார்க்கிறாள் ஜூலி. தோட்டத்தில் மைலோ மயங்கிய நிலையில் கிடக்கிறது. மைலோவின் தலையிலிருந்து வழிந்து கொண்டிருக்கிறது ரத்தம். ஓடிச்சென்று மைலோவை தூக்க முயற்சிக்கிறாள்,வளர்ந்துவிட்டதால் மைலோவை தூக்க முடியவில்லை.அப்போது ஒரு கரம் மைலோவை தூக்க நீள்கிறது. ஜூலியின் வயதை ஒத்த சிறுவனொருவன் நிற்கிறான். இந்த நேரத்தில் எங்கிருந்து இவன் வந்தான் என்று ஜூலிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நீயாரென்று கேட்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் மைலோவை வெகு சுலபமாக தூக்கி கொண்டு ஜூலியின் அறைக்கு வருகிறான்.

மைலோவிற்கு முதலுதவி செய்துவிட்டு அந்த சிறுவனிடம் வந்து பேசுகிறாள் ஜூலி. எந்தவொரு கேள்விக்கும்
அவன் பதிலிடவில்லை.ஜூலியின் படுக்கையில் படுத்துறங்கிவிடுகிறான்.மறுநாள் தன் அப்பாவின் அறைக்கு சென்று அந்த சிறுவன் பற்றி சொல்கிறாள். வில்லியம்ஸ் ஜூலியின் அறைக்குள் வந்து பார்க்கும்போது அவனைக் காணவில்லை. அவன் ஜூலியின் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்து சிரிக்கிறான். அப்போதுதான் ஜூலிக்கு புரிகிறது அவன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறானென்று. நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் போய் விளையாடு என்று சொல்லிவிட்டு வில்லியம்ஸ் சந்தைக்கு போய்விடுகிறார். இரண்டு நாட்கள் கழித்துதான் வருவதாகவும் சொல்கிறார்.

அந்த சிறுவனுக்கு தான் உண்ணும் ரொட்டியும் பாலும் கொடுக்கிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உண்டுமுடிக்கிறான்.சைகையால் இன்னும் உணவு வேண்டும் என்கிறான். தன் அப்பாவின் உணவை போல் நான்கு மடங்கு சாப்பிடுகின்ற அவனை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவனுக்கு கேனோ என்று பெயரிடுகிறாள்.
மைலோ அவனைக் காணும்போதெல்லாம் குரைக்கிறது. கேனோவும் ஜூலியும் விளையாடுகிறார்கள். கேனோவைக் கண்டு குரைத்தபடியே இருக்கிறது மைலோ.

இரண்டாவது அத்தியாயம் ஜூலியின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறது.ஜூலி பதினெட்டு வயது யுவதியாக மாறி இருக்கிறாள்.தங்க நிறத்தில் கூந்தலும்,நீல நிறக் கண்களும் அவளது அழகை மேலும் அழகாக்கி இருக்கிறது. செர்ரி பழ நிறத்தில் அவள் இதழ்களை கண்டு கல்லூரியே கிறங்கிக் கிடக்கிறது.ஜூலியின் வகுப்புத்தோழன் கெவின் அவளிடம் தன் காதலை சொல்கிறான். ஜூலிக்கும் அவனை பிடித்துப்போகிறது. அடுத்த வருடத்திலிருந்து இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என்றும் அதுவரை காதலர்களாக பழகலாமென்றும் முடிவெடுக்கிறார்கள். தன் வீட்டிற்கு செமஸ்டர் விடுமுறைக்காக செல்கிறாள் ஜூலி. விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வழியனுப்புகிறான் கெவின். விடுமுறைக்காக சென்றவளிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லாத காரணத்தால் அவள் கிராமத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறான் கெவின்.

வீட்டின் கேட்டை திறந்துகொண்டு கெவின் உள்நுழைகிறான்.அங்கே அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெரிய வீட்டில் தனியாக பேசிக்கொண்டிருக்கிறாள் ஜூலி. யாரிடம் பேசுகிறாள் என்று மறைந்திருந்து பார்க்கிறான் கெவின். யாருமில்லை அங்கே. ஆனால் ஜூலி ஒரு குழந்தைபோல் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஏதோ மனதில் தோன்ற தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த கேமராவால் ரகசியமாக அவளை படம் பிடித்துவிடுகிறான். அந்த படத்தில் ஜூலிக்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் வந்து அமர்கிறான். மனம் படபடத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறுவன் ஏலியன் என்பதை உணர்ந்துகொள்கிறான். ஏலியனை அரசாங்கத்திடம் பிடித்துக்கொடுத்தால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்று தோன்ற,அந்த சிறுவனை பிடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். ஜூலியின் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு வீட்டை நோக்கி ஓடுகிறான். அங்கே என்ன நடக்கிறது என்பதை நாவலின் கடைசி இருபது பக்கங்களில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிண்டலி ப்ராஸ்டரின் எழுத்தும்,விவரணைகளும் நாவலுக்கு மிகப்பெரிய பலம்.ஜுலியின் அம்மா கார் விபத்தில் இறந்து போயிருக்கிறாள் என்பதை கார் சத்தம் கேட்கும்போதெல்லாம் தன்னையும் அறியாமல் ஜூலி காதைப்பொத்திக்கொள்வதாக காட்சிப்படுத்தி இருப்பார். இதுபோன்ற மிகவும் நுட்பமான வெளிப்பாடு நாவலுக்கு மிகப்பெரிய பலம். கேனோவும் ஜூலியும் அப்பா சந்தைக்கு போன இருநாட்களும் விளையாடுவதை நாற்பது பக்கங்கள் விவரித்திருக்கிறார்.வாசிக்கும் வாசகனுக்கு சிறிதும் சலிப்பைத்தராமல்,வாசகனை குழந்தை பருவத்திற்கே இழுத்து செல்லும் வித்தை இவரின் எழுத்துக்களில் மிளிர்கிறது. சிறுமி ஜூலி கேனோவிற்கு உணவு பரிமாறும் சமயத்தில் சுவற்றில் தொங்குகின்ற அவளது அம்மாவின் புகைப்படம் மெல்லியதாய் புன்னகை செய்தது போலிருந்தது என்கிற வரியின் கவித்துவம் மனதை அள்ளிப்போகிறது.

எதற்காக கேனோ பூமிக்கு வந்தான்,ஜூலிக்கு என்னவாயிற்று,மைலோவின் தலையில் ஏன் அடிபட்டது,அப்பா வில்லியம்ஸ் என்ன ஆனார் என்பதை கடைசி இருபது பக்கங்களில் வாசிக்கும்போது நம்மை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டுபோய்விடுகிறார் சிண்ட்லி. சலிப்புத்தட்டாத விவரணைகளும்,சொற்களினூடாக காட்சிப்படுத்துதலிலும் தனித்து நிற்கிறது இந்நாவல்.கேனோ சிரித்தால் வாசகனுக்கும் சிரிப்பு வருகிறது. ஜூலி அழுதால் வாசகனும் சேர்ந்து அழுகிறான்.நாவலின் கடைசி இருவரி இப்படி முடிகிறது.
"Julie's eyes were filled with tears. Her lips were whispering something which he can only understand"

விலை: 11.99$
வெளியீடு: Harper Kollins Publications

நூல் விமர்சனத்தை எழுதி முடித்தவுடன் சந்தோசத்தில் துள்ளினேன். இன்னும் ஐம்பது வருடம் கழித்து வரவிருக்கும் ஒரு நாவலை,நாவல் ஆசிரியர் பிறப்பதற்கு முன்பே நாவலுக்கு விமர்சனம் எழுதிய முதல்
மனிதன் என்கிற பெயரும் புகழும் கிடைக்கப்போவதை நினைத்து சத்தமிட்டு சிரித்தேன். அருகிலிருந்த என்
கால இயந்திரம் சிவப்பு கண்களால் என்னைப் பார்த்து கண்ணடித்தது.

-நிலாரசிகன்.

Friday, May 08, 2009

இரு கவிதைகள்



அவ‌ர்க‌ள்


என் அறைக்குள்ளிருந்து
வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்
அவ‌ர்க‌ள்.

த‌லைகுனிந்து த‌ள்ளாடி
ந‌ட‌க்கின்ற‌ அவ‌ர்க‌ளின்
நிழ‌லிலும் தோல்வியின்
காய‌ங்க‌ள் மின்னி ம‌றைகின்ற‌ன‌.
வெற்றிக்க‌ளிப்பில் ச‌த்த‌மிட்டு
சிரிக்க‌ ஆர‌ம்பிக்கிறேன்.
பல்லிடுக்கில் வழிகின்ற‌
க‌ருமைநிற‌ ர‌த்த‌ம்
தோற்றுச்சென்ற‌வ‌ர்க‌ளை
சாத்தான்க‌ள் என்றபோது
எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்.


இறக்க முடியாத சிலுவை


எல்லோரும் அம‌ர்ந்திருக்கும்
அந்த‌க்கூட்ட‌த்தில்
என்னை ம‌ட்டும்
பார்த்துக்கொண்டிருந்த‌ன‌
அந்த‌ இருவிழிக‌ள்.

த‌ன‌க்கான‌ பார்வையை
என்னிட‌மிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த‌ விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இய‌ல்பாய்
த‌விர்த்தேன்.

எல்லோரும் க‌லைந்து
சென்ற‌ன‌ர்.
வ‌ருட‌ங்க‌ள் ப‌ல
க‌ழிந்த‌பின்ன‌ரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
த‌விர்த்த அந்த‌விழிக‌ளை.


நன்றி: அதிகாலை.காம்

Monday, May 04, 2009

Life of Birds - ஆவணப்படம்



பறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.
கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம்.

பறவைகளின் வாழ்வியல் முறை குறித்த ஆவணப்படங்களில் மிகச் சிறந்ததாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது Life of Birds
இதை தயாரித்து இயக்கியவர் டேவிட் ஆட்டன்பரோ.
பத்து பகுதிகளாக BBC தொலைக்காட்சியில் 90களில் இறுதியில் ஒளிபரப்பானது.
பறவை ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌டின‌ உழைப்பால் உல‌க‌மெங்கும் சுற்றித்திரிந்து இத‌னை ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.

விதவிதமான பறவைகள் மனதை அள்ளிப்போகிறது.குறிப்பாக பலகுரலில் ஒலிஎழுப்பும் பறவை(கேமரா லென்ஸ் போன்று சத்தம் எழுப்புவதும்,கார் சைரன் ஒலியும் வியக்க வைக்கிறது )

இர‌வில் ம‌ட்டுமே உண‌வு தேடும் நியுசிலாந்தின் கிவி ப‌ற‌வை என‌ ப‌ல‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள்.


இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/show?p=S3vPSi1o5nM

-நிலாரசிகன்

Friday, May 01, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

வால் பாண்டி சரித்திரம் - நாவல் - இரண்டாம் அத்தியாயம்

http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram_1.php