Sunday, June 17, 2012

கவிதைகள் மூன்று

யாருமற்ற தெருவில்
திரியும் நாய்க்குட்டிகள்



ஒவ்வொரு வீட்டின் வாசலையும்
முகர்ந்து பார்த்து நகர்கிறது.
தெருவில் புரளும் சருகுகளும்
நீரற்ற பாட்டில்களும்
நாய்க்குட்டியுடன் நடக்கின்றன.
தன் மிருதுவான
உடலால் சருகுகளை உரசிக்கொண்டே
உரையாடிச்செல்கிறது.
வினோத ஒலி எழுப்பியபடி
பாட்டில்கள் புரள்கின்றன.
யாருமற்ற தெருவில்
பாடலொன்றை பாடியபடி
ஓடி வருகிறாள் சிறுமியொருத்தி.
நாய்க்குட்டியும் சருகுகளும்
அவளுடன் துள்ளி ஓடுகின்றன.
நீண்டு செல்லும் இரவுத்தெரு
நாய்க்குட்டிகளால் நிரம்பத்துவங்குகிறது.

கனாக்கால ஜூலி


தன்னுடலெங்கும் செடிகள் முளைத்து
அதில் ஒரே ஒரு
நீலநிற மலர் மலர்ந்திருப்பதை நேற்றைய
கனவில் காண்கிறாள் ஜூலி.
நடுநிசியில் பயந்து எழுந்தவளின்
படுக்கை நீலநிறமாக
மாறியிருக்கிறது.
தன் அருகே உறங்கும் தங்கையை
அணைத்துக்கொள்கிறாள்.
உடலெங்கும் செடிகளுடன் புரளும்
தங்கை 
ஜூலியின் உடலை மலைப்பாம்பை
போல் சுற்றி இறுக்குகிறாள்.
செடிகள் அறையெங்கும் வளர்ந்து
நிறைக்கின்றன.
நீல நிற மலரை சுற்றுகிறது
சர்ப்பம்.
ஜூலியும் அவளது தங்கையும்
விடியலில் அறையை விட்டு வெளியேறுகிறார்கள்
நாக கன்னிகளாக
மலரொன்றை சுவைத்தபடி.
திடுக்கிட்டு எழுகிறேன் அறையெங்கும்
கனவுகள்,சர்ப்பங்கள்,
ஜூலிகள்..
ஜூலிகள்..

மெளன இசையில்
மெளனிக்கும் பொழுதுகளிலெல்லாம்
இசையால் நிரப்பப்படுகிறேன்.
மரம் நீங்கும் இலை
மெதுவாய் அசைந்தசைந்து கீழ் இறங்குகிறது.
பரந்து விரிந்த பூமியின் கரங்களில்
தன்னை ஒப்புக்கொடுக்கிறது.
இசையிலிருந்து எழும் மெளனத்தில்
இலையாகி காற்றில் மிதக்கிறேன்.
பிரபஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில்
யாரோ ஒருவன் ஆற்றில் வலை வீசுகிறான்.
சிறுமியொருத்தி தன் ஆட்டுக்குட்டிக்கு
முத்தம் தருகிறாள்.
வெகுதொலைவில் ஆடைகள் காற்றிலாட
தளர்ந்த பாதங்களுடன் கடற்கரையில்
நடக்கிறான் கிழவனொருவன்.
குளிர்கால இருளில்
ஒரு மெழுகுவர்த்திரி தனியே எரிந்துகொண்டிருக்கிறது.
மெளனிக்கும் பொழுதுகளில்
பிரபஞ்சம் எனும் இசையால்
நிரம்பி நிரம்பி வழிகிறதென்
யாக்கை.

-நிலாரசிகன்.